Loading

ஷக்தி கண்ணில் இருந்த தீட்சண்யமும், உடம்பில் இருந்த நிமிர்வும், வார்த்தைகளில் தெரித்த கூர்மையும் அதட்டலும், ஷண்முகத்தைப் பார்த்த பின் அவள் உடல் மொழியில் வழிந்த தெனாவட்டும் அவள் பழைய ஷக்தியாய் மாறியிருந்ததைக் கூறியது புகழிற்கு.

அதில் தானே அவன் வீழ்ந்தது!

அவன் பார்வையை அசராது எதிர்கொண்ட பெண்ணவளை அத்தனை அழுத்தமாய் பார்த்து நின்றான் புகழ். 

இருவரின் பார்வையின் அழுத்தமும் அங்கு இருந்த இன்னொரு பாவையின் மனதைக் கிழித்தது.

சடசடவென்றுக் கண்ணீர் வெளியேறிவிட்டது நீலாவின் விழியில் இருந்து. தகப்பனைப் பேசியவளை எதிர்த்து நிற்கத் தெரிந்தவளுக்கு அவள் கணவனும் அவனின் ‘முன்னாள்’ காதலியும் இப்படி ஒரு பார்வை பரிமாற்றம் செய்வதை அவளால் ஏற்ற முடியவில்லை.

அதைவிட, அவன் கதவை அத்தனை வேகமாய் தட்டியது கூட அவள் ஷக்தியைப் பேசியதால் தான் என்று புரிந்திற்று பெண்ணவளுக்கு.

“மருமகனே” என்று அதுவரை அவஸ்தையாய் நெளிந்த ஷண்முகம் புகழிடம் விரைய,

“யோவ் சிக்கல்” என்றாள் ஷக்தி.

“ஆராதனா, பேசாம இருக்கமாட்டியா” – கருணா

“இருங்க அண்ணா, அந்தாள் வாய கிழிச்சுட்டு வரேன்”

“நானும் அப்போம் பிடிச்சு பார்க்குதேன் என்ன பேச்சு பேசுத நீயி. வாழ வந்த வீட்டுல இப்படியா பஜாரி மாதிரியா நடந்துக்குவ?” என்று உண்ணாமலை பெரிய மகன் வந்த தைரியத்தில் பேச,

“அது என்ன பஜாரி மாதிரி. நான் உங்களுக்குப் பஜாரி தான். என்ன பண்ணுவீங்க நீங்க” என்று அவரிடமும் அவள் வரிந்து கட்டிப் போக,

புகழ், “ஆராதனா” என்றான் அவளையே பார்த்தவண்ணம்.

வெடுக்கென்று திரும்பியவள், “மிஸஸ். ஷக்தி ஆராதனா” என்றாள் அத்தனை அழுத்தமாய் அவனை எரித்துக்கொண்டு.

“கிவ் தி டேம் ரெஸ்பெக்ட் மிஸ்டர். புகழேந்திரன். நான் ஒன்னும் உங்க வீட்டு மெய்ட் இல்லை, காட் இட்” என்றாள் துணை ஆட்சியரின் மிடுக்கோடு. அது அவனுக்கு மட்டும் தான் என்றும் புரிந்தது.

“தென், சொல்லி வைங்க உங்க மாமனார்கிட்ட. இந்தாள் இனி ஒரு வார்த்த இந்த வீட்டுல பேசினான்னா, ஷக்தி யார்ன்னு தெரியவேண்டியிருக்கும். ஐ ஹோப் யூ நியூவ் தட்” என்றவள் உண்ணாமலையிடம்,

“மகன் இருக்கான் என்ன வேணாலும் நான் பேசுவேன்னு நீங்க நினச்சு இருந்தா, நானும் பேச வேண்டி இருக்கும். உங்க மேல இருந்த நல்ல அபிப்பிராயம் தான் போயிருச்சு ஆனா வயசுக்குனு ஒரு மரியாத இருக்கு, கெடுத்துக்காதீங்க சந்தூர் மம்மி” என்றாள்.

“இவ என்ன இத்தன பேசுதா, நீரு என்ன மருமகனே பேசாம நிக்குதீங்க. இவள நாலு அப்பு அப்புனா கழுத இழுத்துட்டு போவா தான” என்றவர் முடிக்கும் முன்பு விழுந்த அறையில் மொத்த வீடும் ஆட்டம் கண்டுவிட்டது.

“அப்பா”

“அண்ணே”

“ஏங்க” என்று குரல் கேட்டாலும் ஷண்முகத்தின், “ஏய்” என்ற குரல் அத்தனை உச்சத்தில் கேட்டது.

“நானும் பெரிய மனுஷன்னு பார்த்தா எத்தன பேச்சு பேசுத நீயி. இனி அந்த புள்ளைய ஒத்த வார்த்த பேசு, வெட்டி கடல்ல ஆத்திபுடுவேன். இங்கிருந்து போடா மொத *** பய” என்று சாமி வந்தவரை போல் நின்றிருந்தார் நம்மாழ்வார். 

அவர் அடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதை அத்தனை நிறைவாய் நின்று பார்த்த ஆட்கள் என்னவோ ஷக்தியும் கருணாநிதியும் தான்.

நம்மாழ்வார் அடித்த அவமானம் அதனை மீறிய கோபமும் வன்மமும் ஷண்முகத்தை ஏதும் பேசாது அங்கிருந்து செல்ல வைத்தது.

நீலா, அவள் அம்மாவைத் தாங்கிக் கொண்டுக் கண்ணீர் விட்டபடி நிற்க, “என்ன மனுஷருயா நீரு. இவ நடுவீட்டுல வந்து நின்னு ஆட்டமா ஆடுறா ஏன்னு கேட்ட என் அண்ணணவே அடிப்பீரோ” என்ற உண்ணாமலையிடம்,

“பொஞ்சாதிய அடிக்ககூடாதுன்னுட்டு இருக்கேன். அடிக்க வெச்சுடாத. அந்த ஆக்கங்கெட்டவன் பேசுனதெல்லாம் சரியா படுதா உமக்கு? சொல்லுடீ” என்று கன்னத்துச் சதை ஆத்திரத்தில் ஆட மனைவியிடம் பாய்ந்தார் நம்மாழ்வார்.

“மாமா நீரு செத்த இங்க உட்காரும்” என்று அங்கிருந்த உறவின ஆண்கள் சூழலைக் கையில் எடுக்க, சற்று சூடு குறைந்த உணர்வு அவ்விடம்.

நம்மாழ்வார், “ஆத்தா இது உன் வீடு, நீ உன் இஷ்டம் போல இருத்தா. எவளாவது என்னாவது சொன்னா, மாமேன்கிட்ட சொல்லு, நான் பேசிக்கிடுதென்” என்றார்.

“என்னோட லிமிட்ல நான் இருந்துக்கறேன் அங்கிள். இங்க இருக்கறவங்க வாய மட்டும் என்ன பத்தி பேசறக்குத் தொறக்க வேண்டாம்னு சொல்லி வைங்க, அது போதும்” என்றவள் அங்கிருந்தோரைப் பார்க்க, அனைவர் கண்ணும் இவள் மேல்தான்.

ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு செய்தியைச் சொன்னது. அவர்களின் எண்ணங்களும் ஷக்திக்கு எதிராய் தான் இருக்கும் என்பதில் சிறிதளவு கூட ஐயமில்லை.

ஆனால் யார் என்ன இனி நினைத்தாலும் அது ஷக்தியைத் துளி கூட அசைக்க முடியாது.

சற்று சரிந்திருந்த அவளின் சேருக்கு இப்போது வீழ்ந்த இடத்திலேயே மீண்டிருந்தது!

“அண்ணா, தண்ணீ கொண்டுவந்து அங்கிள் கிட்ட கொடுக்க சொல்லுங்க” என்றவள் சொல்லிவிட்டு ஒரு ஓரமாய் நின்றுகொண்டாள்.

“இத்தன நடந்தும், ஆழ்வாருக்கு ஒரு வா தண்ணீ கொடுக்க இங்க எவளுக்கும் நெனப்பிருக்காதே” என்று கடிந்தபடி ஒரு ஆச்சி பித்தளை லோட்டா தழும்ப நீர் கொண்டுவந்து கொடுக்க,

“புள்ளைய எடுத்த வீட்டாளுங்கன்னு மருவாதி கூட இல்லாம இப்படி என் மனுஷன இந்த கேடுகெட்டவளுக்காக அடிச்சு அனுப்பிருக்கீறே.. நல்லா இருப்பீங்களா நீர்ளாம்” என்று அடுத்த பஞ்சாயத்தைக் கூட்ட நீலாவின் தாய் முனைய,

“இந்தாரு ஆத்தா, மறுக்கா மறுக்கா அந்த மனுஷன மலை ஏத்தாம உம்ம வீடு போய் சேருர வழியப் பாரு. நரம்பில்லாத நாக்குனுட்டு அந்த புள்ளைய எத்தன பேச்சு பேசுதீரு புருஷனும் பொஞ்சாதியும். கிளம்பு நீ மொத” என்று அந்த ஆச்சியே அவரை கிளப்பப் பார்க்க,

“பெரியாத்தா ஏ மதனிய எதுக்கு தொரத்த பார்க்கறீரு” என்று உண்ணாமலை வரிந்து கட்டி வர,

நம்மாழ்வார், “மாப்புள, உம்ம அத்தய வாப்பொட்டிய மூடிட்டு அவ பொறந்த வூட்டு ஆளுகளோடையே போக சொல்லிருடே” என்று சொன்னவர் வீட்டினுள் சென்றுவிட்டார் கோபத்தைக் கட்டுப்படுத்த இயலாது.

அவரின் பின்னோட சென்றபடி, “அம்புட்டுத்தான் இல்லயா.. இத்தன வருஷம் அருமை பெருமயா இருந்தததுக்கு எம் பொறந்த வூட்ட பார்த்து போக சொல்லுறீரு? நல்லா இருக்குய்யா உம்ம ஞாயம்” என்று உண்ணாமலை அழுகையைக் கூட்டினார்.

நம்மாழ்வார் உள்ளே சென்ற மறுநொடி கூடியிருந்தோர் ஆளுக்கு ஒன்றாய் தன் கருத்தைப் பகிர என்று சலசலக்க ஆரம்பித்திருந்தனர்.

அதையெல்லாம் தேமே என்று கையைக் கட்டிக்கொண்டு கருணாவின் அருகே நின்றபடி கண்டுக்காமல் இருந்தாள், ஷக்தி ஆராதனா.

🦋

நல்ல விஸ்தாரமான அறை. அதில் நடுநாயகமாக அந்த காலத்துச் செட்டிநாட்டு மரக்கட்டில் போட்டிருக்க, அதில் ஓய்வாய் படுத்திருந்தார், தேனாட்ச்சி.

“ஆச்சி” என்று படுத்திருந்தவரின் பக்கமாய் போய் அமர்ந்து அவரை எழுப்பி சாய்வாக உட்கார வைத்தான், சிவனேஷ். 

“நீ என்ன இந்த வயசுலையும் ஜிம்னாஸ்டிக் பண்ணுற” என்றபடி அவர் தோல் சுருங்கிய கன்னங்களை பற்றிக் கொஞ்சினான்.

“நல்லா இருக்கீயா? வலி இன்னும் இருக்கா என்ன?” என்று அவரின் புடவையைச் சரிசெய்தபடி அவன் வினவ,

“சொகமாதென் இருக்கேன் சாமி. ஏன் அய்யன் வர இம்புட்டு நாளா? ஆச்சிய பார்க்காம இத்தன மாசமா இருந்துட்டியே சாமி” என்றவர் அவன் கைகளைப் பிடித்தபடி கண்ணீர் சிந்தினார்.

பாரதி, புகழைவிட அவருக்கு சிவா ஒருபடி மேல். அதிலும் தன் கணவனை இழந்த பொழுதில் அவரை மீட்டதே இந்த சிவனேஷ் வீரபத்திரன் தான்.

“ம்ம்.. என் பொஞ்சாதியையும் நான் பார்க்க வேண்டாமா. என் ஆச்சிய பார்க்க அவள கூட்டிட்டு வரதென் இம்புட்டு நாளாச்சு” என்றவன் முகம் விகசித்துச் சிரித்தபடி சொன்னான்.

அவன் ஒளிர்ந்த முகம் அவருக்கான செய்தியை சொல்லிவிட, “ஆத்தே சக்தி வந்துருக்கா. புள்ள நல்லா இருக்காளா’ய்யா.” என்றவர் படபடக்க,

“உனக்கு காது நல்லா கேட்கும் தானே, நல்லா கூந்து கவனி.‌ உமக்கே தெரியும்” என்றவன் சொல்ல, ஷக்தியின் பேச்சுக்கள் அச்சரம் பிசகாது அங்குக் கேட்டது.

“நாச்சியா திரும்ப வந்துட்டா போல” என்றவர் சிரித்துக்கொண்டார்.

“சாப்பிடியா ய்யா நீ” 

“எல்லாம் ஆச்சு. உனக்கு என்ன கொடுத்தாங்க ஆச்சி” என்றவன் கேட்கும் போது தான் புகழின் வரவு வெளியே. 

அதன் தொட்டு நடந்த சபாஷனைகள் கேட்டவன் முகம் ஷக்தியின் பேச்சால் மென்னகை சிந்தியது.

“நீ போய் என்னனுட்டு பாருய்யா, புள்ள அத்தன காரமா பேசுறா, ஏதாவது சொல்லிபுட போறானுவா. போய்யா, புள்ள கூட நில்லு” என்று அவர் சிவாவை அனுப்பி வைத்தார்.

அறை வாயிலுக்கு வந்தவனின் பார்வையில் விழுந்தது என்னவோ அங்கு ஷக்தியைக் கண் சிமிட்டாது பார்த்த புகழ் தான் அவன் கண்ணில் விழுந்தான்.

என்னதான் செய்கிறான் என்றிவன் பார்க்க, புகழின் பார்வையின் பொருளை கண்டுகொள்ள முடிந்தது சிவாவால்

ஏக்கம். அப்பட்ட ஏக்கம் அவனது பார்வையில். மிகப்பெரும் பொக்கிஷத்தைத் தொலைத்த ஏக்கமும் அதனோடான வலியும் பிழிந்தது அவனின் பார்வை வீச்சு.

அவன் இழந்த பொக்கிஷம் இப்போது இவனின் வரமல்லவோ!

ஒரு கசந்த முறுவலுடன் முன்னறைக்கு வந்தான் சிவா.

“பாருடா உம் பொண்டாட்டியோட லட்சனத்த” என்று அழுதபடி மீண்டும் உண்ணாமலை ஆரம்பித்திருக்க,

பொறுக்க மாட்டாது கருணாவே, “அத்த நீங்க கம்மினிருங்க. இப்போதென் ஒரு பிரச்சனை ஆஞ்சு ஓஞ்சிருக்கு. திரும்பவும் ஆரம்பிக்காம இருங்க” என்றான்.

“ஆமா சாமி, நாதென் இப்போ உங்களுக்கெல்லாம் பிரச்சனை! தோ இவ வந்த நேரம் எம்ம வூட்டு வாழ்க்க அம்புட்டும் தலகீழா போச்சு. பெரியவன காதல் பண்ணுறேன்னு இவ வந்து நின்ன போதே மனசு சுருக்குனிச்சு, சீமையில் இல்லாதவ யோக்கியதை தெரியாம என் புள்ளையும் ஏமாந்து நின்னது பத்தாம என் இளையவன் வாழ்க்கையும் புடுங்கிட்டு, என் உயிர எடுக்காலே பாவி” என்று அத்தனை பேச்சு. 

நிஜத்திற்கு அது உண்ணாமலை தானா என்று இருந்தது அங்கிருந்தவர்களுக்கு. 

நான்கு வார்த்தை பேசினால் கூட அத்தனை தெளிவாய் அனுசரணையாய் பேசி, இருக்கும் இடத்தை கைக்குள் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் உண்ணாமலை தானா இவர்?

‘பேசற வார்த்தை கூட நல்ல வார்த்தையா இருக்கோனும். எண்ணம் மட்டும் சுத்தமா இருந்தா போதாது, வார்த்த சொல்லும் நம்ம மனச’ என்று பிள்ளைகளுக்குப் போதிப்பவரின் தரம் தாழ்ந்து தான் போனதுவோ என்ற எண்ணம் வராமல் இல்ல.

“இன்னும் என்னத்துக்குடீ நடுவூட்டுல ஒப்பாரி கழுதய வைக்குத. உங்கண்ணங்கூடவே போவே” என்று நம்மாழ்வார் வந்துவிட,

“அய்யா இருங்க நீங்க” – சிவா

“இன்னும் என்னத்த இருக்க, தோ நிக்கறாரே பெரிய பதவில இருக்கற ஆபிசர்” என்று புகழை நோக்கிக் கை காட்டியவர், 

“அவர் பண்ண வேலையால இந்த புள்ள இல்லடா எல்லார் வாயிக்கும் அவல நொந்து போய் நிக்குது. எத்தன வஞ்சமிருந்தா பொம்பள புள்ள ஒழுக்கத்து மேலையே பழிய போடுவாங்க.. கேட்க நாதியத்தா கெடக்கா அவ, நான் கேட்பேன் எம் மருமவளுக்காக.. ஒருத்தி இனி எம் மருமவள நோக்கி கைய நீட்டக்கூடாது. போ சொல்லுடே அவள” என்று அவர் ஆக்ரோஷமாகக் கத்த,

“என்ன வஞ்சமிருக்கேங்க. அவ ஒழுக்க அருகதை தெரியாமயா நாங்க இங்க நிக்கோம்? இவனில்லேனா அவனுல்ல இருக்கா.” 

புகழ், “அம்மா” என்று போட்ட சப்தத்தில் அவரின் சப்த நாடியும் ஆடிவிட்டது.

“ஷிவ்” என்று ஷக்தி சிவாவைப் பார்க்க,

“என்ன பேச்சு பேசுறிங்க நீங்க? அம்மாவாச்சேன்னு பார்த்தா என்ன வார்த்தையெல்லாம் வருது. அம்புட்டு அழுக்கா போச்சா உங்க மனசு” என்று சிவாவும் கேட்க,

புகழ் அவரை அதட்டலாய் அழைத்ததைத் தாங்காதவர், “ஆமாடா அழுக்காத்தென் இருக்கு. உன்ன கல்யாணம் கட்டியும் புகழ ஆட்டி வைக்கறா பாரு.. மனுஷியா இவ.. இந்த சீமச்சிருக்கிய அத்துவிடு மொத” 

“நாதான்டீ உன்ன கத்துவிடனும்.. என்ன என்ன வார்த்த கழுத பேசுற நீ” என்று அடிக்க பாய்ந்த நம்மாழ்வாரைப் பிடித்துக்கொண்டனர்.

அவரை அடக்குவதே பெரும்பாடாய் போய்விட, இன்னும் துள்ளினார் மனிதர்.

உண்ணாமலையைப் பார்த்த ஷக்திக்கு ஒன்று நன்றாய் புரிந்தது, அவரின் மனதைக் குழப்பியுள்ளனர் என்று.

அவள் பார்த்துப் பழகிய உண்ணாமலை இவரல்ல. சலமே இல்லாது இருந்தவள் மனதில் ஓடிய எண்ணங்கள் அனைத்தும் அவரின் வார்த்தைகளைச் சுற்றியே.

நம்மாழ்வார், “சிவா” என்ற அதிகாரக் குரலில் களைந்தவளை சிவனேஷ் அவன் பக்கம் நோக்கி இழுத்திருந்தான்.

சிவா, “அய்யா, நான் சொல்லுறது தான். ஷக்தி என் வைஃப், அது யார் என்ன சொன்னாலும் இந்த ஜென்மத்துக்கு மாறாது” என்றவன் ஷக்தியைத் தோளோடு அணைத்து நிற்க, அனிச்சையாய் அவள் இதழ்கள் மென்மையாய் பூத்தது அவனைப் பார்த்து.

அத்தனை பொருத்தமாய் பாந்தமாய் இருந்தனர் இருவரும்.

அவன் தோளுரசி அவளும், அவளை உரிமையாய் அணைத்தபடி அவனும் நிற்க அதைப் பார்த்த புகழிற்குத் தோன்றியது என்னவோ, அவன் காதல் கைவிட்டுச் சென்று நிறைவாய் இருப்பது தான்.

சட்டென்று அவனும் ஷக்தியும் இதேபோல் நின்றது நினைவில் வர, அவன் உடலில் ஒரு உதறல். அது வெளிப்படையாகவும் தெரிந்தது.

அவனைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாதவனாய் வீட்டில் இருந்து வெளியேறிவன் காதை நிறைத்தது, “புகழேய்” என்று குறும்பாய் அழைக்கும் ஷக்தியின் குரல் தான்.

மீண்டும் அதுவே திரும்பத் திரும்ப அவனுள் கேட்டிட, இறுதியாய் அவளுடனான அவனின் நினைவுகளுக்குள் பயணித்தான், புகழேந்திரன்.

••••

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்