Loading

அந்தாதி – 11

சிவஷக்தியின் புத்துணர்வான காலை வேளை இனிமையாய் ஆரம்பித்திருந்தது. 

ஷக்தி, அவளின் மனதை திறந்திருந்ததே சிவாவிற்கு அத்தனை நிறைவையும் ஆசுவாசத்தையும் கொடுத்திருந்தது. அதில் அவள் நிச்சயம் தன் வீட்டாரை சமாளித்துவிடுவாள் என்ற உணர்வையும் அவனுக்கு கொடுத்திருந்தது.

“ஷக்தி, நான் பின்னாடி கிணத்துல குளிக்கப் போறேன். நீ ரெடியாகிட்டு கூப்பிடு” என்றவன் துண்டை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

இங்கு ஊரில் இருந்த வரை அவனின் தினக்குளியல் அவர்களின் கிணற்றிலும் வாய்க்கால் பம்பு செட்டிலும் தான்.

அங்கு நீந்தினாலேயே மனதில் தன்னைப் போல் ஒரு உற்சாகமும் மகிழ்வும் ஊற்றேடுத்துவிடும் அவனுக்கு.

இரவு நீண்ட நேரம் சென்று தூங்கியது, விடியலில் எழுந்தது ஒருவித தலைவலியை கொடுத்திருந்தது ஷக்திக்கு. சூடாக ஒரு குழம்பியை குடித்தால் தகும் என்ற எண்ணத்தில் அங்கு இருந்த பம்பிங் ஸ்டவ்வில் அவளுக்கு பிடித்த வகையில் குழம்பியைக் கலந்து பருகினால்.

நேரம் செல்ல சிவாவும் வந்துவிட அவனிடம் பேசியபடியே ஆராவமுதனுக்கு அழைத்துப் பேசினாள்.

“என்னவாமா அவனுக்கு”

“உன் மொதோ பொண்டாட்டி அவனோட பொண்டாட்டிய பார்க்க போறானாம்” 

“ஏய் அப்படி சொல்லாதடீ, வெளிய தெரிஞ்சா உன்னத் தான் ஒரு மாதிரி பார்ப்பாங்க”

“ஊருக்கே தெரியும் நீயும் அவனும் எப்படின்னு இதில நான் சொல்லுறது தான் உனக்கு கஷ்டமா” என்றவள் நொடிக்க,

“ஆரூ” என்று அவள் பக்கம் வந்தான் சிவா.

“என்ன”

“ம்ம்ப்ச் காலேல எப்படி பேசின? இப்போ என்னடி இத்தன ரஃப்” 

“உங்க வீட்டுக்கு போறோமே அதான்” என்றுவிட்டாள் பட்டென்று.

அவன் முகம் சுருங்கிவிட்டது. நிதர்சனம் அவனை குன்ற வைத்தது.

அவர்களை பற்றி அவன் எண்ணியிருந்த எண்ணங்களும் மரியாதையும் அவன் மனதில் இருந்த மிக மதிப்பான பின்பங்கள் எல்லாம் அன்று ‘அவனின்’ திருமணத்தில் சுக்கலாகியிருந்தது!

எத்தனை கொடிய வார்த்தைகள், எத்தனை அனர்ந்த நாடகங்கள். ஒரு பெண்ணின் நிலையறியாது எத்தனை பேச்சுகள்!!

அவையெல்லாம் இப்போது நினைப்பிற்கு வந்து அவன் முகத்தின் முன்பு தாண்டவம் ஆடியது. 

முயன்று அதை புறம் தள்ள பார்த்தான். ஆனால் ஷக்தியால் எப்படி அதை ஒதுக்க முடியும்? அவள் வெடிப்பாள். நிச்சயம் ஒன்று அல்ல பல கன்னி வெடி தருணங்கள் காத்திருக்கிறது என்று அவனும் அறிவான் தான். இருந்தும் தன் ஷக்தியைக் காக்கும் காவலனாக இப்போது இருந்தது அவனின் எண்ணங்கள் முழுதும்.

ஒரு பெருமூச்சுடன், “வாட் எவர், என்ன நடந்தாலும் உன் கூல் லூஸ் பண்ணாத. நான் உன் கூடவே தான் இருப்பேன்” என்றவளுக்கு மென்புன்னகையை பதிலாக அவன் கொடுக்க, அவனை வலப்புறம் கையைப் பிடித்தபடி தோளோடு அணைத்துக்கொண்டாள்.

இயல்பாக இருந்தது அவர்களின் நிலை. மனதில் வேற எந்த ஒரு உறுத்தலும் இல்லை. அவன், அவள், அவர்களின் அழுத்தமாய் சொல்லப்படாத காதல் மட்டும் அங்க. அவர்களை நிறைத்தது முழுமைக்கும்.

🦋

சரியாக ஏழு மணி போல் மலர் காலை ஆகாரத்துடன் வீட்டிற்கு வந்துவிட்டாள்.

ஏலக்காய் டீயும் ஊத்தாப்பமும் இட்லியும் நல்லெண்ணெய் ஊற்றிய மிளகாய் சட்னியுடன் சூடாக இருந்தது. 

“சிவா மாமா, அம்மா அம்புட்டையும் சாப்பிட்டு பாத்திரத்த கழுவி எடுத்துவர சொல்லிடுச்சு பார்த்துக்கோங்க. மிச்ச மீதி வைச்சிங்க, சீவிடுவேன்” என்றவள் ரஜினி போல் செய்து காட்ட, 

“சாப்பாட்ட செஞ்சரலாம் வாங்க” என்றுபடி உணவருந்த அமர்ந்துவிட்டாள் ஷக்தி.

மலர், “மாமா அய்யேன் கடை தெரு போனாகலாம், மஸ்கோத் அல்வா வாங்கி வந்தாரு. பையில வெச்சிருக்கேன், சாப்பிடுங்க” என்றவள் ஷக்தியிடம்,

“ஆராதனா நீங்க நல்லா சாப்பிடுங்க. உங்களுக்கோசம் அம்மா காரம் கம்மியாதென் போட்டிருக்கு, பார்த்துக்கிடுங்க” 

ஷக்தி, “ரொம்ப காரமா‌ இருக்கும் போலையே. சட்னி கலரப் பார்த்தாவே பயமா இருக்கு” என்றவள் பீதியாகிவிட்டாள்.

ஷக்திக்கு காரம் துளியும் சேராது. மீறி சாப்பிட்டாளானால் வயிற்று வலியும் நெஞ்சும் எரிய ஆரம்பித்துவிடும்.

“நல்லெண்ணெய் நிறைய விட்டு தான் அத்த அரைச்சிருக்காங்க ஷக்தி, மைல்ட்டா தொட்டுக்க” என்ற சிவா தினமும் சாப்பிடும் அளவைவிட சற்று கூடுதலாகவே உண்டெழுந்தான்.

அவன் அகன்றதும் சற்று தயக்கம் கொண்டு பேசலானாள் மலர்.

“ஆராதனா தப்பா எடுத்துக்காதீங்க. அங்க சிவா மாமா வீட்டுல எல்லாம் இன்னிக்கு கூடியிருக்காங்க. ஏதாவது பேச்சு வந்தா கொஞ்சம் பொருத்துக்கங்க, ஃப்ளீஸ்” என்று கிட்டத்தட்ட கெஞ்சினாள் மலர்.

ஒரு பெருமூச்சுடன், “நீங்க பேசுறது உங்களுக்கே சரியா படுதா மலர், சொல்லுங்க?” என்க பதிலில்லை மலரிடம்.

“நீங்க என்னோட நல்லதுக்காகத் தான் சொல்லுறீங்க, புரியுது. ஆனா நான் ஒன்னும் முதுகெலும்பு இல்லாத புழு இல்லையே! யார் என்னை திட்டுனாலும் பேசுனாலும் கல்லு மண்ணாட்ட இருக்கனுமா சொல்லுங்க? என்னை பேசினா திரும்ப பேசுவேன். ஷக்தி என்ற தனி மனிஷி தாண்டி நா ஒரு டெஃப்டி கலெக்டர்! எந்த விதத்திலையும் என்னோட சுய மரியாத போகுற மாதிரி யார் நடந்தாலும் என்னோட பேச்சும் செய்கையும் வேறாதான் இருக்கும். ஹோப் யூ காட் தட்” என்றவள் எழுந்து கொண்டாள்.

பின்கட்டில் நின்ற சிவாவிடம், “அண்ணா சொல்லியே தான் என்னைய அனுப்புச்சு. இவுகளும் இப்படி பேசினா, இன்னிக்கு பிரளயம் தான் போங்க” என்றவள் சிவாவிடம் ஆற்றமாட்டாது சொல்லிச் சென்றாள்.

சற்றுப் பொருத்து உள்ளே வந்தவன் ஷக்தியைப் பார்க்க மூச்சடைத்த உணர்வு. அவள் நின்றிருந்த பாங்கும் அவளை அலங்காரம் செய்திருந்த விதமும் அவனை கிறங்கடித்தது. ஆனால் அங்கு இதுவெல்லாம் தேவையா?

முயன்று தன்னை சமாளித்தவன் ஏதும் பேசாது, “கிளம்பலாம் ஷக்தி. உனக்கு குடிக்க தண்ணீ எடுத்துக்க” என்க, 

ஒரு நக்கல் சிரிப்போடு, “தாமரபரணி ஆறே ஓடுது இங்க, உங்க வீட்டு ஒரு வாய் தண்ணீ கூடக் கொடுக்க மாட்டாங்களா என்ன” என்றவள் பேச்சு அவனைக் குத்தியது. தெரியும் தானே அவன் வீட்டினரைப் பற்றி. 

படபடத்த மனதுடன் நடந்தவன் கைகளைப் பற்றிக் கொண்டு நடந்தாள் அவன் மனைவி. அதில் மெல்லிய அழுத்தத்தைக் கொடுத்தவன் விரைந்து எட்டு வைத்து வீட்டை நோக்கி அவளை அழைத்துச் சென்றான்.

வீடும் வந்துவிட்டது. அவளை ஆரத்தி எடுத்து வரவேற்பு செய்ய வீடு கொள்ளா ஆட்கள் இருந்தாலும், அதை செய்யும் மனமுள்ளவர் தான் அங்கில்லை.

“வா ஆராதனா” என்று முன்னே வந்து வரவேற்ற கருணாவை ஒரு பார்வை பார்த்தவள், விருட்டென்று சிவாவின் கைப்பிடித்து உள்ளே நுழைந்தாள்.

கூடத்தில் அமர்ந்திருந்த உண்ணாமலையின் பிறந்தவீட்டார் ஒரு நிமிடம் அதிர்ந்து போயிருந்தனர் ஷக்தியின் வரவிலும் வேகத்திலும்!

கூடத்தைக் கடந்துப் போகப் போனவள் ஒரு நிமிடம் அழுத்தமாய் உண்ணாமலையை பார்த்தப் பார்வையில் மனிதி ஆடிப்போய் விட்டார்.

அவரைவிட, உண்ணாமலையின் அண்ணனும் அண்ணியும் அதிர்ந்து போய் பேயரைந்தார் போல் இருந்தனர் ஷக்தியைப் பார்த்த பின்னர்.

தலைய தலைய கருமை வண்ண பட்டுப்புடவை கட்டி, ஒற்றை பனானா கிளிப்’பில் தோள்வரை புறண்ட முடிய அடக்கி தலை கொள்ளா முல்லை மலர் சூடி, வகிடு நிறைக்க குங்குமம் வைத்து, பளபளத்த ஒற்றை மரகதக் கல் வைர அட்டிகை அணிந்திருந்தவளின் தோற்றம், அங்கிருந்தவர்களின் கண்ணைப் பறித்தது. 

அதைவிட அவளின் புது மஞ்சள் தாலி! அதில் நிலைத்தது அவர்களின் பார்வை.

இவை அனைத்தையும்விட, அவள் போட்டிருந்த அந்த matte சாக்லேட் பிரவுன் நிற உதட்டு சாயத்தில் வந்து நின்றது நீலவேணியின் பார்வை. 

நீலவேணி, அவ்வீட்டின் மூத்த மருமகள் என்று சொல்வது தான் சரி. அதிலும் அவளை திருமதி. நீலவேணி புகழேந்திரன் என்று சொன்னால் தான் அது பொருந்தும்!

அவளின் வெறித்த பார்வையை ஷக்தியும் உணர்ந்தாள் சிவாவும் கண்ணிட்டான்.

புடவை முந்தானையை கையில் தவழவிட்டபடி “அப்றோம், சந்தூர் மம்மி, எப்படி இருக்கீங்க?” என்று அத்தனை நக்கலாக கேட்டவளின் முகத்தில் துளி இலகுத் தனம் இல்லை.

“ஷக்தி” என்று அழுத்தமான குரலில் அழைத்த சிவாவை அவள் பொருட்படுத்துவது போல் தெரியவில்லை.

“ம்ம்ப்ச்.. என்ன இப்படி திகைச்சு போய் நிக்கறீங்க? ஓஓ.. சின்ன மகனையும் மருமகளையும் பார்த்த சந்தோஷமாக்கும்” என்று அவள் அவரின் கன்னத்தை பிடித்தவள் கிள்ள,

அதை பார்த்த கருணாவோ, ‘வந்தோனவே ஆரம்பிச்சுடுச்சே இந்த புள்ள’ என்று நினைத்தபடி நின்றிருந்தான்.

உண்ணாமலையின் பக்கமாக நின்றிருந்த அவர் அண்ணனை அப்போது தான் பார்ப்பவளைப் போல், “அட நம்ம சிக்கல் அங்கிள்” என்றபடி அவரிடம் சென்றவள், 

“நல்லா இருக்கீங்களா அங்கிள், வீட்டுல எல்லாரும் சௌக்கியமா இருக்காங்களா?” என்றவள் கேள்விக்கு பதில் தான் அங்கு யாரும் கொடுக்கவில்லை.

“ம்ம்ப்ச் பாரேன். என்ன பார்த்த அதிர்ச்சில பேச்சு நின்னுருச்சு போல” என்றவள் சன்னமாய் சிரிக்க,

சட்டென்று, “இனி இங்க நான் இருக்கற வரை சும்மா கூட உங்க வாய் திறக்காம பார்த்துக்கோங்க” என்று சொன்னவள் முகம் காட்டிய ஜூவாலையில் பொசுங்கி போயிருந்தனர் அந்த மூவரும்.

முகத்தில் அத்தனை கடினம். கண்கள் விரிந்து சிவந்தபடி நின்றிருந்தவளின் தாடை இறுகி அவளின் கோபத்தை காட்டியது.

சிம்மமாய் அவள் குரல் கர்ஜனையில் நீலவேணி அதிர்ந்து நின்றிருக்க அவள் புறம் திரும்பிய ஷக்தி சொடிக்கிட்டு அழைத்தாள்.

அதில் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவளை போல் வந்து நின்றவளை பார்த்தவள், “என்ன கேட்கனும் என்னகிட்ட?” என்க, தானாக அவள் தலை ஆடியது.

“கேட்கறேன்’ல சும்மா வெறிக்க வெறிக்க என்னையே என்ன பார்வைனு கேட்கறேன்” என்று அவள் அரட்ட, மிரண்டு விட்டாள் நீலா.

“இந்தாமா ஏய்” மகளை அவள் நடத்தும் விதம் பொறுக்காது நீலாவின் தந்தையும் உண்ணாமலையின் அண்ணனுமான ஷண்முகம் ஷக்தியை நோக்கி கத்த, அவள் திரும்பினாள் இல்லை.

நீலாவை உருத்து விழித்தபடி, “என்னன்னு கேட்டேன்” என்றால் இன்னமும் அழுத்தம் கூட்டிய குரலில்.

“எம் பொண்ணையே மிரட்டற நீ” என்று ஷக்தியின் அருகே அத்தனை வேகமாய் வந்தவரை திரும்பி ஒரு பார்வை பார்த்தவள், “இந்த ஏய், வா போ.. இந்தா மா நோந்தாமான்னு இன்னோரு வார்த்த உன் இத்துப்போன வாயில இருந்து வந்துச்சு, ஒடச்சிடுவேன். உன்ன வாயத் தொறக்கக் கூடாதுன்னு சொன்னேன்ல” என்று அவரை நோக்கி அடிமேல் அடி வைத்து அவள் ஷண்முகத்திடம் செல்ல,

“ஏங்க” என்று அவர் மனைவி ஷக்தியைத் தாண்டி ஷண்முகத்தின் அருகில் வர,

படீரென, “அடச்சீ நிறுத்து, தள்ளி போ” என்று அருவருப்பாய் முகத்தை வைத்தபடி அவரையும் அவள் விட்டு வைக்கவில்லை.

அவள் பேச்சின் பரிணாமம் தெரிந்தேவுடனே சிவா உள்ளே தேனாட்ச்சி இருந்த அறைக்குள் சென்றுவிட்டான்.

மீதம் இருந்த உறவினர்கள் ஒருத்தர் கூட வாய் திறக்கும் நிலையில் இல்லை. திறந்தால் நிச்சயம் அவர்கள் நிலை என்ன என்பது ஷண்முகத்தின் முகத்தை பார்த்தே தெரிந்துவிட்டது அவர்களுக்கு.

“‌வந்தோமா திண்ணோமா போணோமான்னு இருக்கனும். மீறி இங்க வந்து உங்கூர் நாட்டமத்தனத்தை பண்ணே..” என்று இழுத்தவள், “சொல்ல மாட்டேன், என்கிட்ட மிஸ்பெஹேவ் பண்ணேன்னு கம்பி எண்ண வெச்சிடுவேன்”

அவள் பேச்சின் விளைவால் “ஆராதனா” என்று கருணா அவள் அருகே வந்துவிட,

“த்தோ மிஸ்டர். கருணாநிதி கூட எனக்காக சாட்சி சொல்லுவார்.. அப்படித் தானே மிஸ்டர்” என்று அவனையும் உள்ளே இழுக்க,

“ஆத்தா போதும். நீ வா” என்றவளை அழைக்கப் பார்க்க,

“எங்க அப்பாகிட்ட நீங்க இப்படி எல்லாம் பேசாக்கூடாது” என்ற நீலாவின் குரல் கேட்டு திரும்பினர் அனைவரும்.

அவள் பேச்சில் அத்தனை அடர்த்தியும் கோபமும் இருந்தாலும் குரல் சிறுத்து வெளிவந்தது.

தடார் என்ற ஒரு சப்தம். வாசலில் இருந்த இரும்பு கதவின் அதீத ஒளியால் ஷக்தி திரும்பிப் பார்க்க, அங்கு அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்து நின்றிருந்தான் புகழேந்திரன்.

ஆறடி உயரத்தில், திணவெடுத்த மார்போடு, உடலை அத்தனை‌ கட்டுக்கோப்பை வைத்திருந்தவன் மீசையை முறுக்கி விட்டபடி, சிவாவிடவும் நல்ல நிறத்தில் இருந்தவன் வேஷ்டி சட்டையில் நின்றிருக்க, அவன் கையில் இருந்த தங்க காப்பு சூரிய ஒளியில் மின்னியது.

மின்னியதை ஒரு நொடி பார்த்தவள் மீண்டும் அவன் முகத்தை நோக்க, அவன் பார்வையின் பொருளறியாது புருவம் சுருங்க நின்றிருந்தாள் புகழின் முன்னாள் காதலி(?)

•••

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்