Loading

பரிதியவன் மெல்ல துளியில் கலைந்து குன்னூரில் தன் கதிரொளியைப் பரப்ப அன்று சற்று தாமதம் ஆகிவிட்டது போல.

மக்கள் தங்கள் அன்றாடப் பணியை ஆரம்பித்திருக்க, சூரியோதயம் தான் அங்கு காலதாமதம் ஆகியிருந்தது.

நேற்று பெய்த மழையும் அதன் பின்னான அளியும் (குளிர்) அங்கு இன்னும் பனி விலகாது தன் ஆதிக்கத்தை செலுத்தியவண்ணம் இருக்க, இரவியும் மெல்ல பொருத்துப் பொருத்தே தன் இளங்கதிர்களை அந்த பூமியில் இறக்கினான்.

வீடு முழுக்கத் தசாங்க மணம் சூழ்ந்திருக்க, காலையிலேயே மகனை கொஞ்ச மனைவிக்கு அழைப்பு விடுத்திருந்தான், ஆராவமுதன்.

சூரியக் குளியலில் அவன் மகனார் பிசியாக இருக்க, அதை தான் காணொளியில் காட்டியபடி நின்றிருந்தாள், மேக வர்ஷினி.

“மேகா, ரொம்ப சுடப்போகுதுடி சிம்பாவுக்கு” என்று இவன் இங்கு பதற,

“இளோம் வெயில் தான அமுதா, அதெல்லாம் ஒன்னும் பண்ணாது. பாருங்க இப்போவே எப்படி சடவெடுக்கறான்” என்று பேரனை கொஞ்சினார் மேகாவின் தாயார், யமுனா.

ஆசைத் தீர மகனைப் பார்த்திருந்தவன் அவன் மெல்ல தூக்கத்திற்கு சொக்கிய பின்னர் மனைவியின் அழகையும் பேச்சையும் பார்த்தபடி இருக்க, “ஈசா, காஃபியை குடிச்சிட்டு பேசு” என்று அவனின் டேபை பறித்தார், லாவண்யா.

“அவன் கிட்ட மட்டும் மணிக்கணக்கா பேசு, மாமியார் நானெல்லாம் உன் கண்ணுக்கத் தெரியறனா?” என்று வம்புடன் தான் மேகவர்ஷினியிடம் பேச ஆரம்பித்தார் லாவண்யா.

“ஐஸ்.. ஐஸ்.. ஐஸ்.. பொறும, பொறும. அந்த பொறும இருந்தா எருமையக் கூட மேய்க்க போகலாம்” என்றவள் சிரியாமல் சொல்ல, இங்கு புரையேறி குடித்த காஃபியைத் துப்பியிருந்தான் அவள் மணாளன்.

“ஹேய், மேகா” என்றவனால் சிரிப்பு தாள முடியவில்லை அதுவும் லாவண்யாவின் முக பாவம் வேறு அவனை அத்தனை சிரிப்பு சிரிக்க வைத்திருந்தது.

“எரும மேய்க்க சொல்லுறயா நீ என்ன?” என்று குரலில் முயன்று கோபத்தை வரவைக்க அவர் பார்க்க,

“ஐஸ், டோண்ட் ட்ரை. கோபமெல்லாம் உங்களுக்கு வராது. நான் பொதுவான கமெண்ட் தான் சொன்னேன். நீங்க ஏன் உங்களுக்காக எடுத்துக்கறீங்க?” என்று வியாக்கியானம் பேசியவளை எப்போதும் போல் ஆசையாகப் பார்த்தார்.

“எம்மாவ் அவ உன்ன கலாய்க்கிறா, நீ என்ன டன் கணக்கில பார்வையாலே பாசத்தை பொழியுற”

“உங்களுக்கு என்ன வந்துச்சு? என்‌ ஐஸ், என்னை உரிமையா பார்க்கறாங்க. உனக்கு என்ன மேன், நீங்க எப்பவாது என்னை அப்படி பார்த்திருப்பீங்களா? கோ.. கோ போய் அந்த பால் டப்பாவையும் அய்யனாரையும் எழுப்பிவிடு.. ங்க” என்றவள் பேச்சு அத்தனை இதமாய் இருந்தது அந்த காலை வேளையில் இருவருக்கும்.

“சின்னப்பா எங்க மேகா” என்று பேரனை அவர் கேட்க, “அம்மா வெயில்ல காட்டினாங்க ஐஸ்.. அப்படியே தூங்கிட்டான்” என்றாள்.

“ஆமா ரெண்டு நேரம் எல்லாம் காட்ட வேண்டாம். காலேல மட்டும் போதும்னு சொல்லு. குளிக்க வைக்கும் போது நல்ல சுருக்கெடுத்தாப்படி நீவிவிட்டு குளிக்க வைங்க. உச்சி பொடி மறக்காம தலைக்கு ஊத்தும் போது வெச்சுவிட சொல்லு மேகாமா, நான் அடுத்த வாரம் போல ஈசன் கூட வரேன்.” என்றவர்,

“நல்லா இருக்க தானே? சாப்பாடு எல்லாம் பத்தியம் இனி பார்க்காத, நல்லா சாப்பிடு. பால் கொடுக்கற எண்ணெய் பதார்த்தம், நான் வெஜ் மட்டும் கொஞ்ச நாள் சாப்பிடாத மேகா’ம்மா” என்றார்.

“நான் நல்லா இருக்கேன். நீங்க வரது இருக்கட்டும், உங்க தங்க பொண்ணையும் செம்பு கம்பியையும் சீக்கிரம் ஒட்ட வைங்க. என் பையனுக்கு பொண்ணு வேண்டாமா? இப்போவே நான் அவங்ககிட்ட புக் பண்ணாதான் இருவது வருசத்துக்கு பின்ன நான் அழையாம இவனுக்கு கல்யாணம் பண்ண முடியும்” என்றாள் முறைப்போடுப் பார்த்த கணவனைப் பொருட்படுத்தாது.

“நேத்து வண்டியோட்டிட்டு வந்தது, இன்னும் தூங்கராங்க போல” என்ற மாமியாருக்கு ஒரு நக்கல் பார்வையை பதிலாகக் கொடுத்தவள், “கதவத் தான் தட்டுறது” என்றாள் ஆராவமுதனிடம்.

“ஒத வாங்குவடி நீ என்கிட்ட” என்றபடி அவன் பேச்சை முடித்துக்கொண்டான். லாவண்யாவும் மகளின் அறையை பார்த்தவர் தன் வேலையில் ஈடுபட சென்றுவிட்டார்.

வெளியே எட்டிப்பார்த்த சூரியன் இன்னும் ஷக்தியின் அறைக்குள் பிரவேசிக்கவில்லை. அடர் திரைச்சீலை அவரின் வரவை தடுத்திருக்க, மெல்லிய மின்விசிறி சுழலும் ஓசை மட்டும் அறையெங்கும்.

தனித் தனி படுக்கை எல்லாம் கிடையாது. இருவரும் சேர்ந்து தான் இருப்பார்கள் திருமணம் ஆனதில் இருந்து. ஆனால் இயற்கையாய் பள்ளியறையில் தம்பதியிடம் ஏற்படும் கிளர்ச்சியும் தாபமும் மயக்கமும் இவர்களிடம் எள்ளளவும் இல்லை.

மாறாக ஒரு தூய அன்பும் அரவணைப்பும் அவர்களை அணைத்து சென்றது. நேற்று நள்ளிரவு தாண்டிய உறக்கம் தான் இருவருக்கும். அதன் தொட்டு மணி ஏழைக் கடந்தும் ஆழ்ந்த உறக்கம் சிவாவிடம்.

மனதில் உள்ளதை வெளிப்படுத்தியதன் தாக்கம், சிறிது உள்ளிருந்த புழுக்கம் நீங்கியது போன்ற உணர்வில் இருவரின் வதனமும் நிர்மலமாக இருந்தது.

மெல்லிய இசையில் சிவாவின் தொலைபேசி தன் இருப்பை காட்டத் துவங்கியது. சிறு சப்தத்திற்கே கண் விழிப்பவன் இன்று ஏதோ ஒரு பெரும் பாரம் தன்னிடம் இருப்பது போன்ற உணர்வு.

கண்கள் பிரிக்க முடியாது அழுந்த மூடியிருக்க, அவன் நாசி உணர்த்தியது ஒரு புதுவித மணத்தை.

ஷக்தி எப்போதும் போடும் மாய்ஸ்சுரைசரின் அடர் மணம் அவன் மீது வீசியது. சட்டென்று மூளை உணர்த்திய செய்தியில் கண்களை பிரித்தவன் பார்க்க, அவன் நெஞ்சம் அதிவேகத்தில் புல்லட் ரெயினாய் பறந்தது.

தூக்கத்திலா? அல்ல அவளின் அடுத்த அடியா? என்று தெரியாது அவனை அணைத்தபடி அவன் மார்ப்பில் தலை சாய்ந்து படுத்திருந்தாள் பெண்!

தொண்டை வளன்றுவிட்டது அவனுக்கு. தலைத் தூக்கி அவள் முகம் பார்த்தவனுக்கு உடல் சற்று உதறல் எடுத்ததுவோ?

என்ன தான் அவன் ஷக்தியை மனைவி என்று ஏற்றாலும் காதலி என்ற பதவி உயர்வு தந்தாலும் மனதில் அவள் எப்போதுமே அவன் தோழி தான்!

ஷக்தியை அத்தனை பேசுபவன் மனதில் இன்னமும் அவளைப் பார்த்தபோது இருந்த முதல் உறவான தோழி என்ற அழுத்தம் ஆழ்ந்து பதிந்துவிட்டது.

என்னதான் மஞ்சள் கயிற்றில் கட்டிய தாலியும், நெற்றி நிறைக்க அவன் இட்ட உச்சி திலகமும், அவள் பாதம் பிடித்து போட்ட மெட்டுயும் அவளை மனைவி என்று காட்சி அளவில் உலகிற்கு தெரிவித்தாலும், அவன் மனதிலும் அவள் தோழியாகத் தான் இன்று வரை இருக்கிறாள்.

அவனும் மாற நினைத்தான், இப்போது அவளை முழுமைக்கும் ஏற்க அவன் உள்ளம் தயார்.‌ ஆனாலும் ஒரு நெஞ்சோர நெருடல்.

திடீர் என்று எல்லாம் மாறிவிடாதே இந்த திடீர் கல்யாணத்தில் ஏற்பட்ட திடீர் உறவில்!

‘முதல்ல எழுப்புடா அவள, இவளா வந்தாளா இல்ல தூக்கத்தில வந்து பிடிச்சாளானேத் தெரியலை’ என்றவன் நினைத்தபடி ஷக்தியை எழுப்ப, சற்றும் அசைந்தால் இல்லை.

“ஆரு” திரும்ப மெல்ல அழைத்துப் பார்த்தான்,

“ஆரு, எழும்பு” என்று தயங்கி அவள் தோள் தட்ட, இன்னும் ஒரு ஆழ்ந்த அணைப்பு அவளிடம்.

அவன் போட்டிருந்த வேஸ்டை அவள் அழுத்த பற்றியபடி அவன் நெஞ்சில் முண்ட, அவன் வயிற்றில் ஒரு விதமான மாற்றம்.

‘மன்னீஸ்வரா’ என்று மனதில் முணங்கியவன் மனைவியைப் பார்த்தான்.

அவள் விடும் மூச்சின் வெப்பம் அவன் மார்பில் பட,

“ம்ம்ப்ச், சோதிக்கறாளே” என்று வாய்விட்டவன் புலம்ப, மெல்ல விரிந்தது அவன் மனையாளின் அதரங்கள்.

“வந்தத் துணையே..

வந்து அணையே..

அந்த முல்ல

சந்திரனை சொந்தம்

கொண்ட சுந்தரியே..”

திரும்பவும் சிவாவின் தொலைபேசி தன் இருப்பை சூழ்நிலைக்குத் தகுந்தபடி இசைத்து அழைக்க, “சிச்சுவேஷன் சாங் போல” என்று அதுவரை நீடித்த அமைதியை சிரித்தப்படிக் கலைத்தால் பெண்ணவள்.

அப்படி ஒரு நிறைந்த முகத்துடன் அவள் எழுந்து சிவாவின் முகத்தைப் பார்க்க, கிட்டத்தட்ட மின்சார அதிர்வு அவன் உடலில்.

நேற்று அங்கு மருத்துவரிடம் பேசியவளா இவள்?

எத்தனை அழுகை; எத்தனை பரிதவிப்பு; எத்தனை குற்ற உணர்வு சுமந்த முகத்துடன் இருந்த ஷக்தியா இவள்? என்று பலதும் நாம் நினைத்தாலும், சிவாவின் மூளையும் மனதும் உடலும் அதிர்வை காட்டாது இல்லை.

“பார்த்தது போதும், எழுந்து பிரஷ் ஆகு ஷிவ்” என்றவள் முடியை கொண்டைக் கட்டிக் கொண்டு, தன் வேலையில் இறங்கிவிட்டாள்.

திரும்பவும் அவன் தொலைபேசி இசைக்க, “ம்ம்ப்ச்.. இத்தோட ரெண்டு தரம் உன் போன் அடுச்சாச்சு.. எடுக்கமாட்டியா நீ?” என்றவள் முகத்தில் உதிர்ந்த சிறு கோப சுருக்கங்களில் தெளிந்தவன் பார்க்க அழைத்தது அவன் அக்கா, பாரதி!

புருவம் சுருங்க அதை பார்த்தவன், “இவ எதுக்கு இப்போ கால் பண்ணுறா” என்றபடி அதை ஏற்றான்.

“என்ன? தெளிவா அழாம சொல்லுக்கா?” என்று அதட்டியபடி எழுந்தமர்ந்தான்.

“எப்போ? யார் கூட இருக்கா?” என்றபடி அவன் எழுந்து நிற்க, அவன் உடலில் ஒரு பரபரப்பு.

அவனையே பார்த்தபடி இருந்த ஷக்திக்கோ உள்ளூர ஏற்பட்ட குறுகுறுப்புகள் எல்லாம் அடங்கி, வடிந்திருந்தது. அவனை பார்த்தால், மனதில் தோன்றிய ஒருவித வெற்றிடத்துடன்.

பேசப் பேசவே அவன் சட்டென்று ஷக்தியின் முகத்தைக் காண அதில் அவன் வரவேக் கூடாது என்று நினைத்த உணர்வுகளின் மொத்த குவியலும் அடங்கி இருந்தது.

வெறுப்பு. உட்சகட்ட வெறுப்பு அத்தோடு சேர்ந்த அருவருப்பு.

“நான் வரேன் க்கா” என்றவன் ஷக்தியைப் பார்த்தபடியே தொலைபேசியை அணைக்க, அவளோ குளியல் அறைகளுள் புகுந்தால் அதீத வெறுப்புடன்.

“ஷக்தி” என்றவன் அழைப்புகள் எல்லாம் தண்ணீர் சப்தத்துடன் கலந்து கரைந்தது.

“ஊப்ஸ்ஸ்” என்று ஒரு நிமிடம் நிதானித்தவன் அடுத்த செய்ய வேண்டியதை பார்க்கலானான்.

ஷக்தி வரும் வரை அவனிடம் பொறுமையில்லை. அறைக்கு வெளியே இருந்த மற்றொரு குளியலறையில் தன்னை சுத்தம் செய்வதன் பயணத்திற்கு தயாரானான்.

கூடம் வந்த போது லாவண்யா காலை டிபன் வேலையில் இருக்க, ஆராவமுதன் துயில் கலைந்த மகனுடன் காணொளியில் இருந்தான்.

“அமுதா” என்றபடி வந்தவனை பார்க்க, ஒரு சிறு திடுக்கிடல் அவனிடம்.

“எங்கடா கிளம்பிட்டா?” என்ற அதிர்வான குரலில் கேட்டபடி அவன் எழும்பு, “மேகா, நான் அப்புறமா கால் பண்ணுறேன்” என்று டேபை அணைத்தபடி சிவாவிடம் விரைந்தான்.

லாவண்யாவும் மகனின் சப்தம் கேட்டு வந்துவிட, “பாட்டி கீழ விழுந்து பயர அடியாம். தூத்துக்குடி வர சொல்லி அக்கா கூப்பிட்டா” என்றான் செய்தியாய்.

என்ன முயன்றும் லாவண்யாவால் தன் முக மாற்றத்தை மாற்றாமல் இருக்க முடியாது போனது.

“ஷக்தி இங்கையே இருக்கட்டும். நான் வந்து கூட்டிட்டு போறேன். இல்ல எதாவது எமர்ஜென்சி’னா நீயே போய் வீட்டுல ட்ராப் பண்ணு அமுதா, தனியா விடாத” என்றவன்,

“ஷக்திகிட்ட சொல்லிடு” என்றபடி வாசலுக்கு விரைய,

“இருங்க, நானும் வரேன்” என்று தன் டிராலியைத் தள்ளிக் கொண்டு வந்து நின்றவளை அங்கு சுத்தமாய் யாரும் எதிர்பார்க்கவில்லை.

“ஆரா” என்று தாளமாட்டாது லாவண்யா குரலை உயர்த்திவிட்டார்.

“நீ எதுக்கு ஷக்தி? நா மட்டும் போயிட்டு வரேன்” என்று தன்னின் அதிர்வை காட்டாது சிவா சொல்ல,

“என்ன இருந்தாலும் நான் அவங்க வீட்டு மருமக தான? ஒரு கஷ்டம்னு வந்தா போய் தானே ஆகனும்” என்றவள் பேச்சில் இருந்த கன்னிவெடி சிவாவிற்கு புரியாமல் இல்லை.

இருந்தும் காதல் வியாபித்த மனம் தான் கேட்குமா?

”ம்ம்ப்ச் சொன்னா கேட்க மாட்டியா நீ? என்ன பிடிவாதம் பண்ணுற ஷக்தி. அங்க சூழ்நிலை எப்படின்னு தெரியாது, எல்லாரும் வேற இருப்பாங்க. அதான் சொல்லுறேன் நான்‌ மட்டும் போறேன். ஏதாவதுனா கால் பண்ணி சொல்லுறேன்” என்றவன் பேச்சை அவள் கொஞ்சமும் சாட்டை செய்யவில்லை.

“ஈசா, எங்க கார் இங்க இருக்கட்டும். உன் தார் சாவி கொடு, பார்கிங் லாட்ல நிறுத்திட்டு வரும்போது கொண்டு வரோம்”

“தான்னா தர போறேன். எதுக்கு இத்தன விளக்கம்” என்றபடி அவன் தாரின் சாவியை சிவாவிடம் நீட்ட, அவனிடம் ஒரு உக்கிர முறைப்பு.

“அவள வரவேண்டாம்னு நான் சொல்லிட்டு இருக்கேன். நீ என்னடா பண்ணுறே” என்று ஆத்திரமாய் கத்தியவனை ஆராவமுதன் பொருட்படுத்தவே இல்லை.

“சரி கிளம்புங்க. போயிட்டு கால் பண்ணு ஆரா” என்ற மகனிடம், “என்ன ஈசா நீ, அவ எதுக்கு” என்று தாயுள்ளம் பரிதவிக்க,

“அவ போகட்டும் ம்மா. அவ பார்த்துப்பா. இல்லாட்டும் உன் மருமகன் பார்க்க மாட்டானா” என்று சிவாவை அழுந்தமாய் பார்த்தபடி அவன் கேட்க, எந்த எதிர்வினையும் அவனிடம் இல்லை.

“கிளம்பு” என்று ஷக்தியிடம் உறுமிவிட்டு அவன் செல்ல, “அம்மா, ஐ கேன் மேனேஜ். ஒன்னுமில்லை” என்றபடி ஷக்தி வெளியேறினாள்.

“ஆராம்மா, அங்க என்ன நடந்தாலும் எனக்கு சொல்லனும். எல்லாம் எனக்குத் தெரியனும், புரியுதா?” என்றான் ஆராவமுதன் அண்ணனாய்.

“என் வீட்டுக்காரரோட தான் ஈசா போறேன்” என்றாள் அவள் ஆழ்ந்த குரலில். அதில் தோனித்த செய்தியும் உட்பொருளும் ஆராவமுதனுக்கு புரியும் படி இருந்தது!

ஆராவமுதனின் மகேந்திர தார் குன்னூரின் கொண்டை ஊசி வளைவுகளில் வழுக்கியபடி சென்றது. மலை ஏறும் போது இருக்கும் சிரமத்தைவிட இறங்கும் போது சற்று எளிது. அதுவும் தேர்ந்த ஓட்டுநர்களுக்கு அனாயசமாய் இருக்கும்.

ஃபஸ்ட் கீரில் வண்டி ஒரு இடத்தில் செல்ல, மெல்ல தன் கை பையில் இருந்து இரண்டரை மாதங்களுக்கு முன்பு சிவனேஷ் அணிவித்த திருமாங்கல்யத்தை பொறுமையாக அவனை பார்க்காது எடுத்து நிதானமாக அணிந்துகொண்டாள், திருமதி. சிவனேஷ் வீரபத்திரன்.

•••

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. விறுவிறுன்னு கதை போகுது … புகுந்த வீட்டில் பிரச்சனை பார்சல் ரெடி …

  2. அழகான வர்ணனை 👏🏼

    அழகான தமிழ் வார்த்தைகளின் பயன்பாடு.

    அளி, இரவி ❤️❤️

    இரு பக்க மாமியார்களும் வெகு இயல்பாக பழகுகின்றனர்.

    நட்பு என்ற உறவும் அதனை சார்ந்த உணர்வுகளும் ஆழமாய் இருவருக்குள்ளும்.

    தம்பதிகளிடையே முகிழ்க்கும் தாபம், மயக்கம் அல்லாமல் தூய்மையான அன்பும் அரவணைப்பும் மட்டுமே.

    சக்தியின் குடும்பத்தினர் போல் இவர்களுக்கு நேரம் அளித்து பொறுத்து போவார்களா சிவா குடும்பத்தினர்.

    1. Author

      அழகான பின்னூட்டம். மிக்க நன்றி ✨