
சிவனேஷ் வீரபத்திரன், இளமையும் துடிப்பும் அதேசமயம் தமிழரின் பாரம்பரியம் மாறாத குணமுடையவன்.
கம்பீரம், அவன் பிறந்த மண்ணில் வீரம் இரண்டும் சேர்ந்து அவனுடன் பிறப்பெடுத்த ஒன்று தான். அதைத் தொட்டோ என்னவோ அவன் தேர்ந்தெடுத்த வேலையும் வலிமையானது.
அவன், காவலன்.
அதுவும் தன்னை சிறுவயது துவங்கி மெள்ள மெள்ளக் கூர்மையாய் பட்டைத் தீட்டி, அதற்காகத் தன்னை அத்தனை மெனக்கெட்டு உளியால் செதுக்கி, முழு சிற்பமாய், முன்னுதாரணமாய் இப்போது நிற்கிறான், சிவனேஷ் வீரபத்திரன்.
முப்பதின் துவக்கம் அவன் முகத்தில் தெரிந்தாலும் அவன் செய்யும் உடல் பயிற்சி உடலை எஃகாய் காட்டியது. நேர்த்தியான போலீஸ் கட், முறுக்கிய மீசை, கழுத்தில் சிவனின் உடுக்கை வடிவ பெண்டன்ட் உடன் கூடிய தடித்த செயின், கையில் ஷக்தி அணிவித்த வெள்ளிக் காப்பு உடன் அவன் அன்புக்குரியவர் பரிசளித்த பாஸில்(Fossil) வாட்ச்.
நடுத்தர உயரம் தான். ஆனால் அவனைப் பார்த்தாலே ‘மிஸ்டர். காவல்துறை’ என்று சொல்லாமல் சொல்லிவிடலாம்.
படித்தது பி.காம் சிஏ. விரும்பிய காவல் பணிக்கானத் தேர்வை எழுதி முதல் தடவையிலேயே எஸ்.ஐ ஆகிவிட்டான். இப்போது ஒன்பது வருட சர்வீஸ்ஸுடன் ஈரோட்டில் இன்ஸ்பெக்டராக பதவி.
இதோ, திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகின்றது. என்ன அவனுக்கோ இல்லை ஷக்திக்கோ தெரியாமலேயே திடும் என்று நடந்த நிகழ்வது.
நிகழ்வு தான் அது. ஆனால், அவர்கள் இருவருக்கும் அது நெகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கவில்லை.
இப்போது கோவையில் இருந்து குன்னூர் நோக்கி மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது சிவனேஷின் டாடா நெக்ஸ்ஸான்.
ஷக்திக்குப் பிடித்த ஆழ்ந்த ராயல் ப்ளூ கலர்!
அங்கிங்கு ஒட்டியிருந்த பிளாஸ்டிக் கவர் சொல்லியது புத்தம் புது கார் என்று. காரின் பின்பக்கம் ‘COP ON-BOARD’ என்று ஸ்டிக்கர் ஒயிலாக ஒட்டியிருக்க, நம்பர் பிளேட்டில் 8055 என்ற ஃபேன்ஸி நம்பர்.
அதை ‘BOSS’ என்று ஆங்கிலத்தில் வருவது போல் எழுதியிருந்த விதம், புருவம் உயர்த்தி ‘அட’ என்று சொல்ல வைத்தது.
குன்னூர், ஷக்தி குடும்பத்தாரின் தற்போதைய இருப்பிடம். பூர்வீகம் என்னமோ கோயமுத்தூர் தான். அவளின் வேலை கூட கொங்கு நாட்டை ஒட்டியே அமைந்திருந்தது. மாற்றல் வந்தால் கூட அவ்வாறே வரவும் செய்திருந்தனர்.
கோவையின் வானிலையை நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா? அதுவும் மாலை நேரத்தில் அருகே கணவனுடன்(!) ஒரு கார் பயணம் என்றால் எப்படி இருக்கும்.
பின்னந்தி மாலை வெயில் மென்மையாய் காய, கூதல் காற்று வண்டியின் வேகத்திற்கு ஏற்ப உடலை வருடியும் சிலிர்க்கவும் செய்த வண்ணம் இருந்தது. காரில் மெல்லிய கர்நாடக சங்கீத இசை பொழிய, இருவரிடமும் மௌனம் பேசியது.
ஷக்தி நிரம்பவே உணர்ச்சி வசப்பட்டு இருந்தால் என்பது அவள் உடல்மொழியிலேயே கண்டுகொண்டிருந்தான் சிவா. அதன் தொட்டு பேச்சிற்கும் தடா.
எப்படியும் இன்னும் ஒன்றரை மணிநேர பயணமாகும். அதைக் கணக்கிட்டு ஒரு சாலையோர பேக்கரியில் காரை நிறுத்தினான்.
“கார்லையே இரு. சாப்பிட வாங்கிட்டு வரேன்” என்றவன் இறங்க,
“ஷிவ், காஃபி அண்ட் மஷ்ரூம் பஃப்” என்றாள் சோர்வாக.
எண்ணங்கள் பல அவளைச் சூழ்ந்துகொண்டு ராஜாங்கம் செய்தன. ஆனால் அவற்றின் கலவையான தீர்ப்புகள் அவள் மனதை மேலும் மேலும் குழப்பியது என்பதே சாலச் சரி.
ஏதோ ‘தப்பு பண்ணுற நீ’ என்ற வாக்கியம் மட்டும் ரீங்கார சிணுங்கலாய் அவள் செவியை நிறைத்துக் கொண்டே இருக்க, மருத்துவரின் அறிவுரையோ அல்ல சிவாவின் பேச்சு ஜாலமோ அப்போதைக்குச் சரியாக இருந்தாலும் பின்னர் அப்படி இருக்கவில்லை.
மனது நெருடியது. தன்னின் இந்த வாழ்க்கை, முடிவு சரியானதா என்ற கேள்வி கொக்கியில் ஊஞ்சலாடியது அவள் மனம்.
என்ன முயன்றும் ‘நினைக்காதே மனமே’ என்றவள் சொல்லுக்குச் சிறிதும் அவள் மனம் அடங்கவில்லை கேரளத்துப் பெண்களின் கற்றை கூந்தலைப் போல்.
சிறகு முளைத்துத் தறிகெட்டு ஓடிய மனதை எதைக் கொண்டு தான் அவள் கட்டுப்படுத்த? கடிவாளமிட அது ஒன்றும் குதிரை இல்லையே, குரங்கு அன்றோ!
“காஃபி க்கா” என்ற குரல் அவளைக் கலைக்க, உடல் ஒரு உதறலுடன் நிமிர்ந்தாள் ஷக்தி.
கண் விழித்து சுற்றம் பார்த்தவள் கண்கள் சிவாவைத் தேடியது. சில அடி தூரத்தில் அவளைப் பார்த்தபடி கடையின் முன்புறம் நின்றவாறு டீ குடித்துக் கொண்டிருந்தான்.
“க்கா?”
“ஹான்.. தேங்க்ஸ்” என்றவள் அதை வாங்கிக்கொள்ள, அவள் நினைப்புகளுக்குத் தற்காலிக ஜாமின் கிடைத்தது.
ஒரு இலகு எல்லோ வண்ண டி- ஷர்டும், ஆழ்ந்த நீல நிற ஜீன்ஸும் அணிந்திருந்தவன் அவள் மனதை எப்போதும் போல் கவர்ந்தான், நண்பனாக!
இன்னும் அவளால் அவனைக் கணவன் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளுக்கு அவன் எப்போதும் நண்பன் தான். நண்பன் மட்டுமே தான்!
கணவன் என்ற கேட்டேகிரிக்குள் அவனை வைத்துப் பார்க்க அவள் மனது முரண்டியது. இருந்தும் வைத்துத் தானே ஆகவேண்டும்; மற்றையதை பார்த்துத் தானே ஆகவேண்டும், ம்ம்ம்?!
சுமாரான காஃபி தான் இருந்தும் அதில் இருந்த Caffeine அதனுடைய மாயத்தை அவளுள் செய்ய ஆரம்பித்தது. ஒரு இலகுவான மனநிலை அவளைச் சூழ, சூடாய் இருந்த பஃப்பை பிய்த்து சிறுக சிறுக உண்டால்.
“டம்ளர் கொடு ஷக்தி” என்று வந்த சிவாவிடம்,
“எனக்கு ஒரு கவின்ஸ் வேணும்’ங்க. தென், ம்ம்ம்.. வேற என்ன இருக்கு?”
“எறங்கி வாடீ, பேரர் மாதிரி என்கிட்ட சொல்லிட்டு” என்றவன் குரல் இறுகப் பட்டென்று சொல்லி நடக்க,
“போடாங்கு” என்று மெல்லச் சொல்லியவள் பஃப்புடன் பேக்கரிக்குள் நுழைந்தால் சிரித்தபடி.
சால்ட் பிஸ்கட், கவின்ஸ் மில்க்ஷேக், ஜாம் ரோல், இரண்டு ஜப்பனீஸ் கேக் (Japonaise Cake) வாங்கியவள் சிவாவைப் பார்க்க, அவனோ மற்றொரு டீயைக் குடித்தபடி இருந்தான்.
அதில் கோபம் வந்தவள், “பில் கொடுத்துட்டு வாங்க” என்று சொல்ல,
அவனோ, “அண்ணே, ரெண்டு டீ, ஒரு காஃபி, ஒரு மஷ்ரூம் பஃப், இதுக்கு மட்டும் சொல்லுங்க. மத்ததுக்கு மேடம் தருவாங்க” என்று சொல்லி அதற்கு மட்டும் பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றான்.
உள்ளூர அதில் கோபம் சூழ்ந்தாலும் அவள் இதழில் ஒரு சின்ன சிரிப்பு. பணத்தைக் கொடுத்து காருக்கு அவள் வர, சீறிப் பாய்ந்தது வண்டி.
அவனின் இந்த திடீர் கோபங்கள் எல்லாம் திருமணத்திற்குப் பின்பு திடீர் விஜயம் தான். முதலில் அதைப் புரிந்துகொள்ளாமல் திணறியவள் இப்போது சில நாட்களுக்கு முன்பு தான் அதற்கானக் காரணத்தைக் கண்டுகொண்டிருந்தால்.
இருந்தும் அதை வெளிப்படுத்தாது அப்படியே அவள் மேற்கொண்டு செய்யவும் சிவாவின் கோபமுகமும் சமயத்திற்குத் தக்க சிவந்து பெரிதானது.
மௌனத்திற்கு விடை கொடுத்து அவள் பேசியபடி வர, எதிரொலி அவனிடம் இல்லை.
“மெல்ல போ ஷிவ். க்ளைமேட் நல்லா இருக்கு, சீக்கிரம் போய் என்ன செய்யப் போறோம்” என்றவள் சொல்லுக்கு மெல்ல வண்டியின் வேகம் குறைந்தது.
கல்லாற்றைத் தாண்டி வண்டி செல்ல, இருளும் சூழ்ந்தது அவர்களை.
“என்ன அப்படி உனக்கு கோவம்? சும்மா பேச்சு வாக்கில சொன்னா?” என்றவள் பேச்சிலேயே அவள் தன்னின் கோபத்தைக் கண்டுகொண்டாள் என்பதை உணர்ந்தவன் திரும்பி அவளை முறைத்தான்.
“அப்புறம் எதுக்குடீ சும்மா அப்படியே கூப்பிடுற? கடுப்பாகறேன்னு தெரியுது தான?” என்றவன் எகிற,
“கூல்’ங்க” என்றாள் அவன் முகம் பார்த்துத் தலையசைத்துப் பற்கள் தெரியச் சிரித்தபடி.
“ஷக்தி” என்றவன் அதட்ட,
“நான் அப்படித் தான் கூப்பிடுவேன்”
“கூப்பிடாத”
“நோ, ஐ வில்!”
“யாரோ சொன்னாங்கன்னு அப்படி என்னைய நீ கூப்பிட வேண்டாம். ஆகாத புருஷன் தான, என்னத்துக்கு மரியாத வேண்டிக்கிடக்கு” என்றவன் கத்திவிட, அதிர்ந்தாள் பெண்ணவள்.
அவனின் ஆகாத புருஷனிலேயே அவள் மௌனமாகிவிட, காரில் திரும்பவும் நிசப்தம்.
பாடல் கூட இசைக்கவில்லை. சிவாவின் கீர் மாற்றும் சப்தங்கள் மட்டும் தான் காரினுள் கேட்டது.
நிமிடங்கள் கடக்க கார் மலை ஏறத் துவங்கியது. சுற்றிலும் இருட்டாக இருக்க, முன்னும் பின்னும் செல்லும் வாகனங்களின் ஒளியும் நிலவு வெளிச்சமே அங்கு வழிகாட்டி.
சில இடங்களில் சாலையோர கடைகளில் காய்கறிகள், காஃபி டீ போன்றவை தென்பட்டன. அக்கடையில் போடப்பட்டிருந்த விளக்கின் ஒளி அவ்வப்போது காரில் பட, அதில் அவனின் முகம் பார்த்தால் மங்கை.
க்ளீன் சேவ் செய்து இன்று மீசையைச் சற்று மேல் நோக்கி நன்றாகவே முறுக்கி இருந்தான். கன்னங்களில் குட்டி குட்டியாக சில பருக் குழிகள் அதில் மெல்ல வெளி வர துடிக்கும் அவனின் கருமை நிற தாடி முடிகள் அவற்றுடன் அவனின் கோபம்.
புருவம் சுருங்க, நேர்கொண்டு பார்த்தபடி அவன் வண்டியோட்டும் பாங்கை முதல்முறையாக ரசித்தாள் பெண்ணவள்.
‘ஆகாத புருஷன்’ அந்த வார்த்தை அவள் மனதை ஏதோ செய்தது. மதியம் மருத்துவமனையில் அவன் அணைத்த அணைப்பு உடம்பில் ஒரு மாற்றத்தைக் கொடுத்திருந்தது. இருந்தும் ஒரு தயக்கம்.
அது உடைந்தால் மட்டும் அவள் சிவஷக்தி இல்லையேல் காலத்திற்கும் அவள் ஷக்தி மட்டும் தான்.
ஆனால், இந்த ஷக்தியில்லாத சிவம் மட்டும் ஏது? அதை அவள் புரிந்து கொள்ள மறுப்பது தான் சிவாவின் ஆதங்கமும் ஆற்றாமையும்!
ஆனது ஆகிவிட்டது இனி அடுத்து என்ன என்று பார்க்காது விட்டதிலேயே அவள் பிடித்துக் கொண்டு, தன்னையும் வருத்தி சுற்றத்தாரையும் புண்படுத்துவது எவ்வகை நியாயம்?
இதில் ஒரே ஆறுதல், சிவாவை அவள் ஏதும் சொல்லாது, அவனுடன் அவள் தற்சமயம் சேர்ந்து(?) வாழ்வது மட்டுமே.
“எனக்கு சாக்லேட் டீ வேணும்” என்றால் மொட்டையாக.
அவனோ அப்போது வண்டியைக் கொண்டை ஊசி வளைவில் திரும்பிய நேரம். பதிலில்லை அவனிடம்.
“டீ வாங்கித்தா ஷிவ்” என்றாள் இப்போது அவன் முகம் பார்த்தபடி.
அழுத்தமான அழுத்தம் அவனிடம். ஒரு வார்த்தை உதிர்க்கவில்லை; ஒரு பார்வை பார்க்கவுமில்லை.
அவள் மனது வெறுமையானது. என்ன பேசுவது? என்ன செய்வது? இவனை எப்படி இப்போது கையாள்வது என்று பல சிந்தனை அவளைச் சூழ்ந்துகொண்டது.
மலை ஏற ஏற மெல்லிய மழை. அதில் குளிரும் சேர அத்தனை ரசனையாய் மாறியது வானிலை.
ஊருக்குள் செல்ல இன்னும் சில தூரங்கள் உள்ள நிலையில் ஒரு குட்டி பால் பூத்தின் முன்பு கார் நின்றது.
முகத்தைத் தூக்கி வைத்தபடி அவள் அமர்ந்திருக்க, இறங்கிப் போய் ஒரு கப் டீயை வாங்கி வந்தான்.
அந்த இடம் இருளும் இல்லாது விளக்கு வெளிச்சத்தைச் சற்று போர்த்திக் கொண்டது போல் கிட்டத்தட்ட ஒரு வியூ பாயிண்ட் ஒத்திருந்தது.
இவர்கள் வாகனத்தைப் போலவே இரண்டொரு வாகனங்களும் பைக்களும் இருந்தன. அதில் வந்த மக்கள் தங்களின் பணியில் லய்த்திருந்தனர்.
குளிருக்குத் தக்க அவன் வைத்திருந்த டீ இனி விட்டால் நிச்சயம் ஆறிவிடும் என்று நினைத்தவள் அதை வாங்க, அவன் தந்தான் இல்லை.
“ஏன்?”
“வெளிய வா”
“மழ தூறுது ஷிவ். நான் ஜெர்கின் கூடக் கொண்டு வரல”
“என்ஜாய் தி மொமண்ட். சாக்கு சொல்லாத” என்றவன் பேச்சு என்றும் இல்லாது அவளை அதன்வழி நடக்கச் செய்தது.
அங்கு அந்த சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு அவளையும் தன் அருகே நிற்க வைத்தவன் கீழே தெரிந்த மேட்டுப்பாளையத்தைக் காட்டினான்.
குன்னூரில் இருந்து பார்க்க, அந்த ஊரின் மொத்தமும் தெளிவாய் தெரிந்தது உடன் இரவு வர்ண விளக்குகளின் பிரகாச அரங்கேற்றமும்.
அவளுக்கு இக்காட்சி ஒன்றும் புதிதல்ல. ஆனால் அவனுடன் பார்ப்பது புதிது.
சன்ன சிரிப்பு இதழின் ஓரத்தில். அதைப் பார்த்தபடி அவனும் டீயை அவளிடம் நீட்டினான்.
“ஆறியிருக்கும்”
“நீ குடிக்கற சூடு தான். ஹெவ் இட்” என்றவன்,
“உன் மனசுல இருக்கறது எங்க எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தான் ஷக்தி. அத பக்கத்தில உட்கார வெச்சு பார்த்தா இப்படி தான் லூசு மாதிரி மனசு நினைக்கும். கொஞ்சம் அதவிட்டுத் தள்ளி தூரம் நின்னு பாரு, ஒரு பதில் கிடைக்கும். இல்ல தெளிவு வரும். இரண்டுல எது வந்தாலும் நம்ம வாழ்க்கைக்கு அது உதவும். ஆனா, என்ன முடிவு வந்தாலும் என்னோட ஆன உன் வாழ்க்கை மட்டும் எப்பவும் மாறாது” என்று உரைத்தவன் அவள் கண்களைப் பார்த்தபடி,
“லவ் யூ ஷக்தி, பட் நாட் அஸ் எ ஃப்ரெண்ட்” என்றான் அத்தனைக் காதலுடன்.
•••
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
11
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அருமையான நகர்வு … சிவா காதல் அழகா இருக்கு …
மிக்க நன்றி ❤️
மருத்துவமனையில் அவன் அணைப்பினில் தோன்றிய இலகுதன்மை மறைந்து மீண்டும் குழப்ப மேகங்கள்.
நடந்து முடிந்தவற்றை மறந்து கடந்து வந்து தான் ஆக வேண்டும்.
நட்பு பார்வையை காதல் பார்வையாய் மாற்ற, நட்பு எனும் வட்டத்திற்குள்ளேயே நின்று கொண்டு அதிக ஆராய்ச்சி செய்யாமல் நடப்பை ஏற்றுக்கொள்ள முயல வேண்டும்.
சுற்றத்தாரின் கட்டாயத்தினால் விளைந்த மரியாதையான விளிப்பு.
சக்தி இல்லாத சிவா இல்லை 😍
Wow 💌
அழகான பின்னூட்டம். மிக்க நன்றி ❤️