
அத்தியாயம் 4
“குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா”
என தன் தேன் குரலால் அந்த கண்ணனை மட்டுமல்லாது கேட்போர் அனைவரையும் தன் பாடாலால் கட்டிப்போட்டிருந்தார் அந்த வீட்டின் தலைவி கலைவாணி. அந்த பாடல் அந்த காலை வேளையை மேலும் ரம்மியமாக்கியது.
தன் பூஜையை முடித்து விட்டு வெளியே வந்த கலைவாணி இன்னும் கண்களை மூடி அந்தக் குரலின் இனிமையில் இருந்து வெளியே வராமல் அமர்ந்திருந்த தன் கணவனை பார்த்து புன்னகைத்துக் கொண்டே அவரைத் தொட்டு எழுப்பினார்.
அதில் கலைந்த மதிவாணன், தன் முன்னே அதிகாலையிலே குளித்து புத்தம் புது மலராக முகம் நிறைய புன்னகையோடு நின்றிருந்த தன் மனையாளை ஆசையாக பார்த்தார்.அவர் கண்களில் இந்தனை நாட்களாய் தொலைந்திருந்த மலர்ச்சி இன்று தான் மீண்டிருந்தது . அதன் காரணத்தை அறிந்த அவருக்கும் அதே அளவு மகிழ்ச்சி இருந்தும் அனைத்தும் சரியாக நடக்க வேண்டுமே என்ற கவலையும் உள்ளே ஓர் மூலையில் அரித்துக் கொண்டிருந்தது.இருந்தும் வெளியே புன்னகையை பூசிக்கொண்டு
” எப்படி கண்ணம்மா 28 வருஷத்துக்கு முன்னாடி உன்னை எப்படி பார்த்தேனோ இன்னைக்கும் அப்படியே இருக்க?? உன்னை பார்த்தா யாராச்சும் உன்னோட மகளுக்கு கல்யாணம் ஆய்ருச்சுனு நம்புவாங்களா? உன்னை நாளெல்லாம் இப்படியே பசி தூக்கம் இல்லாம பார்த்துட்டே இருக்கலாம்” என காலையிலே தன் மனையாளிடம் காதல் ரசத்தை பொழிந்து கொண்டிருந்தார்.
அதில் சிவந்த முகத்தை மறைத்துக் கொண்டு கோபமாக(?) இருப்பது போல் காட்டிக்கொண்ட கலைவாணி அவரை முறைத்துக் கொண்டு,”கொஞ்சமாச்சும் அறிவிருக்கா உங்களுக்கு காலங்காத்தால அதுவும் நட்ட நடு ஹால்ல பேசுற பேச்சா இது?? யாரச்சும் கேட்டா என்ன நினைப்பாங்க?? பிள்ளை இல்லாத வீட்ல கிழவன் கபடி விளையாண்ட கதையால இருக்கு!!!” என அங்கலாய்த்தார்.
“அப்போ உனக்கு ஹால்ல காலைல பேசுனது தான் பிரச்சனையா கண்ணம்மா ??” என நக்கல் குரலில் வினவியவர் ,தொடர்ந்து ” என்ன பார்த்து கிழவன்னு சொல்லிட்டியே கண்ணம்மா இப்போ கூட நான் ஜாக்கிங்க் போறப்போ என்ன எத்தனை பொண்ணுங்க சைட் அடிக்கிறாங்க தெரியுமா?” என கண்ணடித்துக் கூறினார்.
இதழ் கடையோரத்தில் வந்த சிரிப்பை அடக்கிய கலை ,”உங்களுக்கு அந்த நினைப்பெல்லாம் இருக்கா ?? ஆனாலும் உங்க தன்னம்பிக்கையை நான் பாரட்டியே ஆகனும்ங்க.’யாருடா இந்த தாத்தா ஜாக்கிங்க்கு போய் ராமராஜ் மாதிரி டிரஸ் போட்டுட்டு வராருனு’ கேவலமா லுக் விட்டதை வெக்கமே இல்லாம சைட் அடிக்கிறாங்கனு சொல்லுறிங்களே” என கலாய்த்தார்.
அவர் பதிலுக்கு ஏதோ சொல்ல வருவதற்குள் அங்கே பிரசன்னமான ஆதிரா ” காலையிலே உங்க படத்தை ஓட்ட ஆரம்பிச்சிட்டிங்களா ?? கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா உங்க ரெண்டு பேருக்கும். எப்ப பாரு ரொமான்ஸ் பண்ணிக்கிட்டே இருக்க வேண்டியது. எனக்கே சந்தேகமா இருக்கு எனக்கு புதுசா கல்யாணம் ஆச்சா இல்ல உங்களுக்கானு ?? இன்னைக்கு பாட்டி வீட்டுக்கு கிளம்பணும் அது கூட மறந்து போச்சா உங்களுக்கு.. நீங்க இப்படி ரொமான்ஸ் பண்ணிட்டு கிளம்புறதுக்குள்ள அண்ணன் சென்னைல இருந்து ஸ்ரீயை கூட்டிட்டே வந்துருவான்.ஒழுங்கா போய் கிளம்புங்க” என பட படவென பொரிந்தாள் அவர்களின் செல்ல மகள்.
அவள் தலையில் செல்லமாய் கொட்டிய கலைவாணி,”ஹேய் வாலு அப்பா அம்மா கிட்ட பேசுறோம்னு கொஞ்சமாச்சும் பயம் இருக்கா?? எல்லாம் உங்க அப்பாவும் அண்ணனும் கொடுக்குற செல்லம் இப்போ பத்தாததுக்கு மாப்பிள்ளை வேற இவங்க கூட சேர்ந்துட்டாரு உன்ன கையில பிடிக்க முடியுமா?? நாங்க 10 நிமிசத்துல கிளம்பிருவோம் நீ மூஞ்சிக்கு கைக்கு காலுக்குக்கு தலைக்குனு ஒவ்வொன்னா சாயம் பூசிட்டு வரதுக்குள்ள தான் விடிஞ்சிருமோனு பயமா இருக்கு” என பதிலடி கொடுத்து அவளுக்கு தான் அம்மா என்பதை நிரூபித்தார்.
அதில் சிணுங்கிய ஆதிரா, ” பாருங்க பா இந்த அம்மாவை” என தன் தந்தையின் தோளில் சலுகையாக சாய்ந்து கொண்டு செல்லம் கொஞ்சினாள்.
“விடுடா பாப்பா அவ இதெல்லாம் பண்றதுனால தான் நீ என்னென்ன போடுறனு அவளுக்கு தெரியுது. கண்ணம்மா இந்த வயசுல போடாம வேற எந்த வயசுல போடுறது? பாப்பாவ ஏதாச்சும் சொன்ன அவ்ளோ தான் அப்பறம் இன்னைக்கு உனக்கு பாப்பாவ அவ கையால பாயசம் செஞ்சு தர சொல்லிருவேன்” என பத்திரம் காட்டினார்.
அவர் என்ன சொன்னார் என்பதை சில நொடிகள் கழித்தே உணர்ந்த ஆதி ” U too அப்பா போங்க நான் கோபமா போறேன்.” என தன் அறை நோக்கி சென்றாள்.அவர்களின் சிரிப்பொலி அவளைத் தொடர்ந்தது.
பின் அவர்களிருவரும் தத்தம் வேலையை கவனிக்க சென்றனர்.
இதுதான் ஹரியின் பாசமும் அன்பும் கலந்த அழகான குடும்பம்.ஒரு நல்ல பெற்றோர்களுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மதி-கலை தம்பதி.சிறு வயதில் இருந்தே இவர்களின் அன்பை பார்த்து வளர்ந்ததால் இரு குழந்தைகளும் அனைவரிடமும் மரியாதை கலந்த பாசத்துடனே பழகுவார்கள்.
இருவரும் தங்களின் பெற்றோரின் காதலை பார்த்து வியக்காத நாளில்லை.இவர்களைப் போலவே தாங்களும் தங்களின் துணையின் மீது காதலை பொழிந்து என்றும் இவர்களைப் போல் மகிழ்ச்சியாய் வாழ வேண்டும் என்பதே இவர்களின் வாழ்க்கையின் இலட்சியம்.
ஆதிரா தன் இலட்சியத்தின் படி தன் மனம் விரும்பும் மன்னவனை கண்டுபிடித்து இப்போது கரம் பிடித்தும் விட்டாள் .ஆதிராவின் கணவன் விஜய், ஹரியின் கல்லூரி தோழன் மட்டுமல்லாது அவனுடய கம்பெனியில் விஜயும் ஒரு பார்ட்னர்.என்னதான் நண்பனாக இருந்தாலும் பல போரட்டங்களை கடந்த பின்பு தான் இவர்களின் திருமணம் நடந்தது.
இப்போ இவங்க எல்லாரும் எங்க கிளம்புறாங்கனு ரொம்ப யோசிக்காதிங்க இவங்க போறது மதிவாணனின் பிறந்த ஊரான பொள்ளாச்சி அருகே உள்ள தாமரைக்குளத்திற்கு தான்.
‘நாரயணசாமி-ரெங்கநாயகி’ தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் .மூத்தவர் தான் மதிவாணன்,இரண்டாமவர் மதியழகன், வீட்டின் கடைக்குட்டி சாருமதி. (யெஸ் நம்ம ஸ்ரீயோட தாய் மாமா பையன் தான் ஹரி).கல்யாணம் முடிந்த பின் மதிவாணன் தன்னுடைய தொழிலை விரிவுபடுத்த கோயம்புத்தூருக்கு குடி பெயர்ந்து விட்டார். சாருமதியையும் கோயம்புத்தூரிலே கட்டிக் கொடுத்ததால் மதியழகனும் அவரின் மனையாள் ‘பத்மினியும்’ தங்கள் மாமனார் மாமியாருடன் அங்கயே தங்கி விவசாயத்தை பார்த்துக்கொண்டனர். நாரயணசாமி அந்த ஊரின் பெரும்புள்ளி, ஊரில் உள்ள முக்கால்வாசி நிலம் அவருடையது தான்.இவ்வளவு நாள் கழித்து இப்போது தான் அனைவரும் ஒன்றாக கூடுகிறார்கள் ஒரு நல்ல காரியத்துக்காக.
அய்யய்யோ அவங்க கிளம்பிட்டாங்க வாங்க ஓடி போய் அவங்களை பிடிப்போம்.
“ஆதி எல்லாம் எடுத்து வச்சுட்டியா அப்பறம் அங்க வந்துட்டு அதை மறந்துட்டேன் இதை மறந்துட்டேன்னு என்னை தொல்லை பண்ணாத” என அனைத்தையும் எடுத்து காரின் பின்னால் வைத்தவாறே மகளிடம் கேட்டுக்கொண்டிருந்தார் கலைவாணி.
“எல்லாம் ஆச்சு மா செக் பண்ணிட்டேன் நாம கிளம்பலாம்” என பதிலளித்து காரின் உள்ளே சென்று அமர்ந்தாள்.
அனைவரும் அமர்ந்து சீட் பெல்ட்டை போட்டதும் காரைக் கிளப்பிய மதி ஆதியை நோக்கி “பாப்பா மாப்பிள்ளை எப்போ வராறாம்?? கேட்டியா” என சாலையில் கவனத்தை வைத்துக் கொண்டே வினவினார்.
“அவர் ஒரு 3 நாள் கழிச்சு வரேன்னு சொன்னாரு பா அண்ணாவும் வரதுனால வேலை இருக்காம் அதுனால நானும் சரினு சொல்லிட்டேன்” என பதில் கூறினாள்.
அதன்பின் தங்களுக்குள் பேசி சிரித்தவாறு தாமரைக்குளத்தை நோக்கி தங்களின் பயணத்தை தொடர்ந்தனர்.என்னதான் அவர்கள் சிரித்துப் பேசி மகிழ்வுடன் இருப்பதாக காட்டிக் கொண்டாலும் அவர்களின் மனதில் சொல்ல முடியா சோகமொன்று ஒளிந்துகொண்டு தான் இருந்தது அது அவர்களை இந்த நான்கு வருடமாக கொல்லாமல்கொன்று கொண்டிருப்பதை அனைவரும் அறிந்திருந்தாலும் வெளியே எதுவும் காட்டிக் கொள்ளாமல் அந்த பயணத்தைத் மேற்கொண்டனர்.
“நீயாஆஆஆஆ!!!!!” என ஹரி அதிர்ந்து நின்றது சில நொடிகள் தான் பின் தன் எதிரில் தன்னை விஷம புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தவனை நோக்கி,
“டேய் கர்மம் பிடிச்சவனே இங்க என்னடா பண்ற??? உன் தொல்லை இல்லாம ஒரு இரண்டு நாள் நிம்மதியா இருக்கலாம்னு உன்கிட்ட சொல்லாம கிளம்பி வந்தா எனக்கு முன்னாடி வந்து நிக்குற!!! உனக்கு மட்டும் நான் நல்லா இருந்தா மூக்கு வேர்த்துருமா எப்படி டா கண்டுபிடிச்சு என் உயிரை வாங்குறதுக்குனே வர.இவ்ளோ கேவலமா திட்டுறேனே கொஞ்சமாச்சும் வெக்கம்,மானம் ,சூடு ,சொரணை எதாச்சும் இருக்கா டா?? ” என சகட்டு மேனிக்கு திட்டி(?) கொண்டிருந்தான்.
இவ்வளவு திட்டயும் அசால்டாய் வாங்கிக்கொண்டு ஏதோ ஆஸ்கார் அவார்ட் கிடைத்தது போல் ‘ஈஈஈஈ’ என 30 பற்களையும் காட்டிக்கொண்டு நின்றிருந்தான் நம் கதையின் புன்னகை மன்னன் “கார்த்திக்”.
கார்த்திக்- இவனை பத்தி சொல்லணும்னா இவன் ஒரு ஒரிஜினல் பீஸ் இவனுக்கு ஸ்ப்ஸ்ட்யூட்டே(substitute) கிடையாது. இவர் ஒரு கலியுகக் கண்ணன். இவரை சுத்தி எப்போதும் கோபியர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.ஆனா சாருக்கு ஒரு பொண்ணு மேல தாங்க இரண்டு கண்ணும். அடடே இவருக்கும் இந்த கதைக்கும் என்ன சம்மந்தம்னு சொல்ல மறந்துட்டேனே.
மதியழகன் பத்மினியின் தவப்புதல்வன் தான் இந்த கார்த்திக்,அது மட்டும் இல்லை ஹரியோட உயிர்த்(உயிரை வாங்கும்) தோழன்.யெஸ் நம்ம ஸ்ரீ குட்டியோட இன்னொரு முறைமாமன் . இப்போ சார் ஒரு டிடெக்டிவ் ஏஜன்சி வச்சு நடத்திட்டு இருக்காரு.சரி வாங்க அங்க என்னாச்சுனு போய் பார்க்கலாம்.
“டேய் திரோகி என்னை கலட்டி விட்டுட்டு வந்ததும் இல்லாம என் அத்தை பெத்த ரத்தனத்தை வேற தள்ளிட்டு வந்துருக்க.நீ இப்படி தான் காவாலி தனமா ஏதாச்சும் பண்ணுவனு உன் மொபைல நான் ட்ராக் பண்ணேன் இப்படி வலைல வந்து வசமா மாட்டிக்கிட்டையே நண்பா”என அவனுக்கு பதிலடி கொடுத்தவன் ஸ்ரீயை பார்த்து கண்ணடித்து ” என்ன டா செல்லக்குட்டி மாமன பாக்காம ஒரு சுத்து இளைச்சுட்ட மாதிரி இருக்க” என பாசமழையை பொழிந்தான்(வழிந்தான்).
அதில் மேலும் கடுப்பான ஹரி ” ரொம்ப முக்கியம் நீ ஊருக்கு போக உன் கார்ல தான வந்திருப்ப நீ முன்னாடி போ நாங்க சாப்பிட்டு வரோம்” என அவனை எப்படியாவது அனுப்பி விட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டான்.
அவனுடைய திட்டத்தை அறிந்த கார்த்திக் ” டேய் கஞ்சப்பிசுனாரி நீ எல்லாம் தொழிலதிபருனு பீத்திக்காத காரித் துப்பிருவாங்க, தன்னோட எதிரியே வீட்டுக்கு வந்தாலும் விருந்து வைக்கிற தமிழ்நாட்டுல பிறந்துட்டு சொந்தத் தம்பிக்கு சோறு போடாம தொரத்தி விடுற நீ எல்லாம் நல்லா இருப்பியா” என நான் ஸ்டாப்பாக மேடையில் பேசுவது போல் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தான்.
ஸ்ரீ ,ஹரியை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே ” கார்த்தி மாமா சில பேர்லாம் அப்படி தான் அடுத்தவங்க வயித்தை பத்தி கவலை படுறதே இல்லை நீங்க கவலை படாதிங்க நான் உங்களுக்கு சாப்பாடு வாங்கி தரேன் வாங்க போலாம்” என்று அவன் கையை பிடித்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
‘கொல்லிவாய் பிசாசு என்னை தவிர எல்லாரையும் மாமா மண்ணாங்கட்டினு கூப்பிட வேண்டியது .இவ ஒருத்திய சமாளிக்கவே நான் டபுள் மீல்ஸ் சாப்பிடனும் இதுல இந்த பரதேசியை வேற சேர்த்து சமாளிச்சு எந்த சேதாரமும் இல்லாம ஊர் போய் சேர்ந்துட்டா பழனிக்கு பாதையாத்திரையா எங்கப்பாவ கூட்டிட்டு வந்து அவருக்கு மொட்டை போடுறேன் முருகா’ என இன்ஸ்டன்ட்டாக ஒரு வேண்டுதலை முருகனுக்கு மெயில் பண்ணிவிட்டு அவர்கள் அமர்ந்திருந்த டேபிளில் கார்த்திக்கின் அருகில் போய் அமர்ந்தான்.
இவன் அமர்ந்ததும் கார்த்திக் ” என்னடா நண்பா என் கண்ணுக்குட்டி சாப்பாடு வாங்கி தரேன்னு சொன்னதும் வெக்கமே இல்லாம வேகமா ஓடி வந்துட்ட” என ஆரம்பித்தான்.
“டேய் நிம்மதியா சாப்பிட விடுடா.ஒழுங்கா வாயை மூடிட்டு சாப்பிடலை மவனே உன்னை ஃப்ரை பண்ணி சாப்பிட்டுருவேன்.உடனே வாயை மூடிட்டு எப்படி சாப்பிடனு மொக்க போட்ட கொன்றுவேன் ஒழுங்கா சாப்பிடு” என மிரட்டி விட்டு கை கழுவ சென்றான்.
இவன் வருவதற்கும் ஆர்டர் செய்த சாப்பாடு வருவதற்கும் சரியாக இருந்தது.ஸ்ரீ தான் அவனுக்கும் சேர்த்து அவனுக்கு பிடித்ததை ஆர்டர் செய்திருந்தாள்.
அதை பார்த்து ஹரி வானில் இறக்கை இல்லாமல் பறந்து கொண்டிருந்தான்.’ச்சே இவளோட பசிய கூட நாம கவனிக்காம விட்டுட்டோம் ஆனா இவ எனக்கு பிடிச்சத பார்த்து பார்த்து ஆர்டர் பண்ணிருக்கா.என்னோட ஸ்வீட் ராட்சஷி’ என மனதில் அவளைக் கொஞ்சிக் கொண்டு முதலில் தனக்கு மிகவும் பிடித்த சிக்கன் பெப்பர் ஃப்ரையை எடுத்து வாயினில் வைத்தான்.
வைத்தவன் விழிகளில் நீரோடு அவளை நிமிர்ந்து பார்த்தான்.இது காதலால் வந்த கண்ணீர் அல்ல காரத்தால வந்த கண்ணீர் என அவனிற்கு மட்டும் தான் தெரியும்.
‘பாதகத்தி இப்படி பழி வாங்கிட்டாளே இவளை போயாடா ஹரி கொஞ்சுன ,கொஞ்சுன வாய்க்கு அடுத்த நொடியே கடவுள் தண்டனைய கொடுத்துட்டாறே’ என மனதில் புலம்பிக் கொண்டே வெளியே அவளை முறைத்தான்.
‘அய்யய்யோ நம்ம தான் காசு குடுத்து காரத்தை தூக்கி போட சொன்னோம்னு கண்டு புடிச்சுட்டானோ இப்படி முரைக்கிறான்’ என ஸ்ரீ திரு திருவென முழித்தாள்.
இருவரையும் பார்த்த கார்த்திக் ” டேய் ஸ்ரீ சாப்பாடு வாங்கி தந்ததுக்கு ஏன்டா இப்படி ஓவரா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்லாம் விடுற உனக்காக ஸ்ரீ குட்டி இன்னும் நாலு சாப்பாடு எக்ஸ்ட்ரா கூட வாங்கி தருவா.ஆம்பளை பசங்க அழ கூடாது கண்ணைத் துடை” என விசயம் தெரியாமல் உளறினான்.
அவன் சொன்னதை கேட்டு கொலைவெறியான ஹரி அவன் வாயில் சிக்கனை திணித்தான்.
காரம் உச்சந்தலைக்கு ஏற கார்த்திக் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.தன் முன்னே இருந்த ஒரு ஜக் தண்ணீரையும் ஒரே மடக்கில் காலி செய்தவனுக்கு இதற்கு காரணம் ஸ்ரீ என்று அப்போது தான் புரிந்தது.
‘படுபாவி அப்பாவி மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு ரெஸ்ட்ரூம்க்கு போறேனு இதத்தான் பண்ணிட்டு வந்தாளா நல்ல வேளை என்ன விட்டுட்டா இனிமேல் இவகிட்ட ஜாக்கிரதையா இருடா கார்த்தி உன் அம்மா அப்பாக்கு ஒத்த புள்ள வேற உசுரு தான் முக்கியம்’ என மனதில் புலம்பிக் கொண்டு ஹரியை பாவமாக பார்த்தான்.
“டேய் ஹரி இந்த சாப்பாட்ட சாப்பிட்டா உன்ன அடுத்து நான் பரலோகத்துல தான்டா மீட் பண்ண முடியும் இத வச்சிரு வேற ஆர்டர் பண்ணலாம்” என கூறினான்.
அதற்கு,”இல்லைடா நான் சாப்பாட்ட வீணாக்க மாட்டேன்னு தெரிஞ்சும் நான் கஷ்டப்படுறத பார்க்க தான ஆர்டர் பண்ணாங்க அவங்க சந்தோஷத்தை கெடுக்க விரும்பலை” என ஸ்ரீயை பார்த்துக் கொண்டே கூறினான்.
அதற்கு ஏதோ பதில் கூற வந்தவளை கையை நீட்டி தடுத்தவன் ” இதை பத்தி யாரும் இனிமேல் பேச வேண்டாம் வேகமா சாப்பிடுங்க” என தன் சாப்பாட்டை உண்ண ஆரம்பித்தான்.
ஹரியின் பிடிவாதத்தை பற்றி இருவருக்கும் அறியுமாதலால் இருவரும் எதுவும் கூறவில்லை.
அந்த சர்வர் கொடுத்த காசிற்கு அதிகமாக வேலை பார்த்திருந்தான்.வெள்ளை சாதத்தை தவிர அனைத்திலும் காரத்தை அள்ளித் தெளித்திருந்தான்.
ஒவ்வொரு வாய்க்கும் ஹரியின் கண்களில் இருந்து நயாகரா வழிந்து கொண்டிருந்தது.காரத்தில் அவன் முகமெல்லாம் சிகப்பாக மாறியது.
அவனை கஷ்டப்படுத்த வேண்டும் என செய்தவள் அவனை விட அதிகமாக கஷ்டத்தை அனுபவித்தாள்.உணவு தொண்டைக்குழியை விட்டு இறங்க மறுத்தது.இருந்தும் உணவை வீணாக்கினால் ஹரிக்கு பிடிக்காது என்பதால் கஷ்டப்பட்டு உள்ளே தள்ளிக் கொண்டுருந்தாள்.
ஹரி படும் கஷ்டத்தை கண்ட கார்த்திக் ‘எல்லாம் உன்னால தான்’ என ஸ்ரீயை நோக்கி கண்டன பார்வையை செலுத்தினான்.அதை கண்டு சாப்பிடுவது போல் தலையை தாழ்த்திக் கொண்டாள் நம் கதாநாயகி.
ஒரு வழியாக மூவரும் உண்டு விட்டு(?) உணவகத்தை விட்டு வெளியேறி காரை நோக்கி சென்றனர்( நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஹானர் பில் ஹரி தான் கட்டுனான்).
காரை நோக்கி வந்த ஹரிக்கு அடுத்த ஆப்பு காத்திருந்தது. காரின் பின் சீட்டில் கார்த்திக்கும் ஸ்ரீயும் அமர்ந்திருந்தனர்.
அதில் அதிர்ந்த ஹரி” டேய் உன் காரை என்னடா பண்ண இதுல உக்காந்துருக்க” என கார்த்திக்கை பார்த்து வினவினான்.
“டேய் எல்லாரும் ஒரே இடத்துக்கு தானடா போறோம் தனித்தனியாவா போவாங்க நான் என்னோட அசிஸ்டண்ட் கிட்ட என் காரை குடுத்து அனுப்பிட்டேன் நீ வந்து காரை எடு லேட் ஆச்சு” என அசால்டாக அவனுக்கு ஆப்படித்து விட்டு பையில் இருந்த ஆப்பிளை கொறிக்க ஆரம்பித்தான் .
‘எல்லாம் என் நேரம்’ என தலையில் அடித்துக்கொண்டே இருவரையும் சீட் பெல்ட்டை போட சொல்லிவிட்டு தானும் அணிந்து கொண்டு காரை கிளப்பினான்.
இவர்களிருவரின் அட்டகாசத்தை ஒரு வழியாக சமாளித்து சரியாக இரவு 6.45 க்கு தாமரைக்குளத்தில் உள்ள அந்த பெரிய வீட்டின் முன் தன் ஆடியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான் ஹரி.
அவனைத் தொடர்ந்து மற்ற இருவரும் இறங்கினர்.கீழே இறங்கிய ஸ்ரீ அங்கே கண்ட காட்சியில் குழப்பத்தின் உச்சிக்கு சென்றாள்.
அப்படி என்ன அங்கே இருந்தது?????
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
+1
1

