
அத்தியாயம் – 39
ஹரி ஹரி என்னை விட்டுப் போய்றாத ஹரி!!!!” என திடீரென அர்த்த ராத்திரியில் கத்திய ஸ்ரீயைக் கண்டு தூங்கிக் கொண்டிருந்த ஹரி அடித்து பிடித்து எழுந்தான்.
அங்கு ஸ்ரீ தூக்கத்திலே பயத்தில் அரற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு அவளைத் தொட்டு எழுப்பியவன் ,”லட்டு லட்டு இங்க பாரு நான் நல்லா தான் இருக்கேன்” என அவளை சாந்தப்படுத்த,
கண்விழித்த ஸ்ரீ அங்கு தன்னைக் கண்டு ஆதரவாக புன்னகைத்த ஹரியின் தலையிலிருந்து கால் வரை ஆராய்ந்தவள் பின் அவன் மார்பில் சாய்ந்து கொண்டு ,” உனக்கும் ஒன்னும் இல்லை தானே ஹரி நல்லா தான இருக்க…எனக்கு மறுபடியும் அந்த சிந்தியா தான் கனவுல வந்து மிரட்டுனா” என அவள் பாவமாக கூற,
அவள் தலையை வருடிக் கொடுத்தவன் ,”அதான் சிந்தியா தான் இந்த பூமிக்கே டாட்டா சொல்லிட்டு அவங்க அப்பா கூட மேலோகத்துக்கு குடிபெயர்ந்து இரண்டு வாரம் ஆயிருச்சே லட்டு.. இன்னும் ஏன் அவளையே நினைச்சு உன்னையை வருத்திக்கிற.. உன்னையும் உன் வாயையும் மீறி அந்த எமன் என் கிட்ட கூட வர முடியாது.. யப்பா என்னா வாய்” என அவன் சாதரணமாகக் கூற,
வெகுநேரம் கழித்தே அவன் தன்னைக் கிண்டல் செய்கிறான் என உணர்ந்த ஸ்ரீ ,”எருமை எருமை உனக்கு போய் பாவம் பார்த்தேன் பாரு.. என்னையே கிண்டல் பண்றியா போடா போடா டோமர் தலையா என் கூட பேசாத” என முறுக்கிக் கொண்டவள் அவனிடமிருந்து விலகி அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.
அவளின் இந்த சிறுபிள்ளைத் தனமான கோபத்தை ரசித்தவன் அவளுடன் படுத்துக் கொண்டு அவளை பின்னாலிருந்து அணைத்தான்.
முதலில் திமிறியவள், பின் சற்று நேரத்திற்கெல்லாம் அவன் அணைப்பில் அடங்கிப் போய் அவனின் காயத்தில் அழுந்தாதவாறு சற்று இடைவெளி விட்டு படுத்தவள் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டே அவன் அருகாமை தந்த நிம்மதியில் அப்படியே உறங்கிப் போனாள்.
அவனும் அவளை அணைத்துக் கொண்டே மெல்ல நித்திரையைத் தழுவினான்.
அன்று மூவரையும் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல, முதிர்ச்சி காரணமாகவும், சிந்தியாவின் முழுபலமும் சேர்த்து குத்தியதில் காளிதாசன் கொண்டு செல்லும் வழியிலே இறந்துவிட, சிந்தியாவையும் ஹரியையும் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.
ஸ்ரீயின் உடல்நிலையும் கொஞ்சம் மோசமாக இருக்க அவளுக்கும் ஒரு அறையில் சிகிச்சை நடந்தது.
இவர்களின் செய்தி அறிந்து மொத்த குடும்பமும் கண்ணீருடன் மருத்துவமனையில் ஆஜராகி விட்டனர். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் தான் ஒரு மினி ஊரே வந்திருப்பதைக் கண்டு அரண்டு போயினர்.
ஹரி தினமும் உடற்பயிற்சி, யோகா என செய்து உடலை சரியாக பராமரித்து வந்ததால் , இந்த காயம் அவனிற்கு பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை, மறுநாளே கண்விழித்துவிட, அவன் கண்கள் முதலில் தேடியது அவனின் மனையாளைத் தான்.
ஆனால் அவளோ இந்த நான்கு வருடங்களாக உடலை சரியாக பேணாமல் அதோடு அந்த விபத்தும் அவள் உடலை மிகவும் பலவீனமாக்கியிருந்தது. எனவே அவள் இன்னும் மயக்கத்தில் தான் இருந்தாள். அதை அறிந்து கொண்டவன் அவளுக்கு என்னானதோ ஏதானதோ என பதறியடித்து எழப்போக, மருத்துவர்கள் அவனை அடக்குவதற்குள் பெரும் பாடாய் போய்விட்டது.
பின் அவர்களே அவன் தொல்லை தாங்காமல் ஸ்டெரெட்ச்சரில் வைத்து அவனைத் தள்ளிக் கொண்டு போய் அவன் மனைவியிடம் சேர்த்து விட்டனர்.
அந்த அறையிலே அவன் தங்கிக் கொள்கிறேன் எனக் கூறிவிட, அவனை வெட்டவா குத்தவா என்பது போல் மருத்துவர்கள் முறைத்து வேறு வழியில்லாமல் இருவரையும் ஒரே ரூமிற்கு ஷிவ்ட் செய்தனர்.
சிந்தியா குடி ,போதை என உடலை மிகவும் கெடுத்து வைத்திருந்ததால் மறுநாளே சிகிச்சை பலனின்றி இந்த உலகை விட்டுப் பறந்தாள்.
வருணிற்கு இருவரின் இழப்பும் வருத்தத்தை அழித்தாலும் அவர்கள் செய்த பாவத்திற்கு தண்டனை என மனதைத் தேற்றிக் கொண்டான்.
ஆனால் சிந்தியாவால் ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்த அவன் தாய்க்கு கணவரின் மரணச் செய்தி பேரிடியாய் வந்து விழ, கணவனின் மேல் இன்றளவும் உண்மையான காதலை சுமந்து கொண்டிருந்த அவரின் இதயம் அதோடு தன் துடிப்பை நிறுத்திக் கொண்டது.
மற்ற இருவரின் இழப்பை ஏற்த்துக் கொண்ட வருணின் மனம் தன் தாயின் இழப்பை ஏற்க முடியாமல் கதறித் துடித்தது. அந்த நேரத்தில் அவனுக்கு தோள் கொடுத்து அவனை தேற்றியது ஹரியின் குடும்பமே.
அவர்களே முன் நின்று சிந்தியாவிற்கும், வருணின் தாயாருக்கும் காரியங்களைச் செய்தனர்.
காளிதாசன் இறந்த பின் தான் அவனின் பிள்ளை எனச் சொல்லிக் கொள்ள வருணிற்கு விருப்பம் இல்லாததால் அவரின் உடல் அன்றே மும்பையில் இருக்கின்ற அவரின் முதல் மனைவி வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்தது.
சிந்தியாவின் சொத்துக்களை காளிதாசன் மிரட்டி எழுதி வாங்க முயன்ற போது வாக்குவாதம் முற்றி அடித்துக் கொண்டு இறந்து விட்டனர் என்று அந்த போலிஸ் கேஸை மூடிவிட்டார்.
ஒன்றரை நாள் கழித்தே கண்விழித்த ஸ்ரீ , தன் கண்முன் இருந்த கணவனைக் கண்டே போன உயிர் திரும்ப வந்தது.
எழ முடியாமல் எழுந்தவள் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டு கதறி அழ, அவனும் சற்று நேரம் மனதில் உள்ள பாரம் குறையும் வரை அழவிட்டவன் பின் அவளின் முதுகை வருடி சமாதானம் செய்தான்.
அதன் பின் வந்த நாட்களில் இருவரும் காதலில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என மாறி மாறி அன்பைப் பொழிய, அதன் பலனாக இரண்டு வாரத்திலே அவனை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தனர்.
சிந்தியா என்ன தான் தனக்கும் தன் குடும்பத்திற்கும் கெடுதல் செய்திருந்தாலும் , வாழ வேண்டிய வயதில் அவள் இப்படிச் சென்றது அங்கிருந்த அனைவருக்குமே வருத்தத்தை அளித்தது.
வீட்டிற்கு வந்த ஸ்ரீயையும் வர்ஷூவையும் ,’இனிமேல் வீட்டை விட்டு போனிங்க என் பேரங்களுக்கு வேற பொண்ணை பிடிச்சு கட்டி வச்சுருவேன்’ என மிரட்டிவிட்டே அவர்களிருவரையும் வீட்டிற்குள் அனுமதித்தார் தெய்வநாயகி.
என்ன தான் சிந்தியா இறந்துவிட்டது மூளைக்கு உரைத்தாலும் ஸ்ரீயால் அன்று ஹரியை அவள் குத்திய காட்சியை இன்னும் மறக்க முடியவில்லை, இன்று செய்தது போல் தான் அடிக்கடி பயந்து அலறுபவள் அவனைப் பார்த்துக் கொண்டே பலநாள் இரவை தூங்காமல் கழித்துக் கொண்டிருக்கிறாள்.
வருணிற்கு ஒரு மாற்றம் தேவைப்பட, கல்லூரி முடிந்ததும் ஹரியின் குடும்பத்திடம் சொல்லிக்கொண்டு அவன் யூ.எஸ் சென்று விட்டான்.என்னதான் அவன் ஸ்ரீயை மறந்திருந்தாலும், அவள் மேல் வைத்திருந்த உண்மையான காதல் அவனை வாட்டி வதைத்தது. அதனால் தான் எல்லாவற்றையும் மறக்க இந்த நாட்டை விட்டே பறந்திருந்தான்.
அனைத்து பிரச்சனைகளும் ஓரளவிற்கு முடிந்திருந்தாலும் இன்னும் வர்ஷூவும் கார்த்திக்கும் எலியும் பூனைகளுமாகத் தான் சுற்றிக் கொண்டு இருந்தனர்.வாங்க அவங்க என்ன கூத்து பண்றாங்கன்னு போய் பார்ப்போம்..
“டார்லிங்க் டம்பக்கு டார்லிங்க் டம்பக்கு டார்லிங்க் டம்பக்கு டா ” என பாடிக் கொண்டே கண்ணாடியைப் பார்த்து தலை வாரிக் கொண்டிருந்தான் கார்த்திக்.
அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு வர்ஷூவிடம் அவன் வம்பிழுப்பதில்லை, கேட்டால் கேட்ட கேள்விக்கு பதில் என்றதோடு நிறுத்திக் கொண்டான்.
அவனின் அமைதி அவளை மிகவும் பாதித்தது , நாளாக நாளாக எப்போது சீண்டி விளையாடுவான் என அவனையே ஏக்கமாக பார்க்குமளவிற்கு அவள் மாறிப் போயிருந்தாள்.
தெய்வநாயகி தான் பேரனிடம் ‘பொன்னுங்க கெஞ்சுனா மிஞ்சுவாங்க மிஞ்சுனா கொஞ்சுவாங்க அதுனால அவளை கண்டுக்காத அவளே உன்னைத் தேடி வருவா’ என இலவசமாக ஐடியா வழங்கியிருந்தார்.
அவர் கொடுத்த ஐடியா வொர்க் அவுட் ஆக, அவளை நன்றாக சுத்தல்ல விட்டான்.
அன்று ஒரு நாள் தன் மாமியாருடன் சேர்ந்து அவனுடைய பொருட்கள் எல்லாம் சுத்தப்படுத்தி கொண்டிருக்கையில் அவன் ஒரு சிறிய பெட்டியை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தான்.
அப்படி என்ன அதற்குள் இருக்கிறது என அவளுக்கு மண்டை வெடித்தது, ஆனால் தன் மாமியாரின் முன் அதை காட்டிக் கொள்ளாமல் சாதரணமாக இருப்பது போல் நடித்தவள் அவர் சென்றதும் அந்த பெட்டியை வேகமாக திறக்க, கேவலமான ஒரு நாற்றம் அவள் முகத்தை வந்து அறைந்தது.
அவளுக்கு உமட்டிக் கொண்டு வர “ச்சீ” என அந்த பெட்டியை தூக்கி எரிய, அதற்குள் இருந்து வெளிவந்து தரையில் விழுந்ததைக் கண்டு அதிர்ந்து போனாள்.
அதிலிருந்தது அன்று அவளிடம் இருந்து அவன் திருடிய ஐடி கார்டும் அதற்குள் அவள் தந்த நூறு ரூபாயும், இதோடு சேர்த்து அன்று அவனுக்கு அடிபட்டபோது அவன் காலில் கட்டிவிட்ட தன்னுடைய இரத்தக்கரை படிந்த துப்பட்டாவும் வெளிவந்து விழுந்தது.
அதைக் கண்டு அவள் என்ன உணர்கிறாள் என்றே அவளுக்குப் புரியவில்லை, தான் இத்தனை நாளாய் குழம்பித் தவித்ததற்கான விடை இன்று கிடைத்து விட்டது என மனம் கூக்குரலிட்டது. சந்தோஷ மிகுதியில் அவள் கண்களில் இருந்து ஆனந்தக் கண்னீர் வழிந்து அவள் கன்னத்தை நனைத்தது.
வேகமாக சென்றவள் அந்த இரண்டையும் கைகளில் அள்ளிக் கொண்டு கட்டிலில் வைத்துவிட்டு இத்தனை வருடமாக பொக்கிஷமாக பாதுகாத்து வந்த அவனின் கூலிங்க் கிளாஸையும் எடுத்து வந்து அதோடு சேர்த்து வைத்து அழகு பார்த்தாள்.
அவளுக்காக அவன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய போது புரியாத அவனின் காதல், நான்கு வருடமாக அவள் பின்னால் நாய்க்குட்டி போல் சுற்றி சுற்றி வந்த போது புரியாத காதல், முதலிரவன்று அவன் வாயாலே தன் காதலை உணர்த்திய போது புரியாத காதல் இன்று வார்த்தைகள் ஏதுமின்றி செய்கைகள் ஏதுமின்றி அந்த பேதைக்கு புரிந்தது.
வர்ஷூ, ஸ்ரீ அவளின் குடும்பத்தைப் பற்றிச் சொல்லும் போதே கார்த்திக்கின் குறும்புத்தனத்தைக் கண்டு அவனைப் பார்ப்பதற்கு முன்பே அவன் பால் ஈர்க்கப்பட்டாள்.
அன்று காரில் அவனைப் பார்த்ததும் அவளையும் அறியாமல் அவள் மனம் துள்ளியதினால் முகம் முழுக்க மலர்ச்சியோடு அவனைப் பார்க்க, அவனோ எப்போதும் போல் அவன் வாயாலே செல்ஃப் ஆப்பு வைத்துக் கொண்டான்.
அன்னை தந்தையை இழந்த பின் அவள் மனம் மிகவும் பலவீனமாகிப் போனதன் காரணமாக அவனின் கிண்டலை அவளால் சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
எனவே அவன் மேல் உள்ள ஈர்ப்பை கோபம் வந்து மறைத்தது, இருந்தும் அவனிடம் இருந்து எடுத்து வந்த கூலர்ஸை தினமும் இரவு அணிந்து பார்க்காமல் அவளுக்கு தூக்கமே வராது , அதை ஏதோ பொக்கிஷம் போல் யாரையும் தொட விடாமல் பாதுகாத்தாள்.
இரண்டு வருடம் கழித்து அவனை மீண்டும் பார்த்ததும் மனம் துள்ள, மீண்டும் அவனின் கிண்டல் அவளை சீண்டி விட்டது. அதன் பலனாக விழுந்து வாரிக்கொள்ள, அவனை விட இவள் துடித்துப் போனாள்.
அவன் காயத்தை நினைத்து இவள் பலநாள் இரவு தூங்காமல் அழுது கரைந்தாள்.இதற்கெல்லாம் காரணத்தை அவள் யோசிக்க அவகாசம் இல்லாமல் அடுத்தடுத்து பிரச்சனைகள் அவளை சூழ்ந்து கொண்டது.
அடுத்து அவன் அவளை மும்பையில் காக்க அவள் முன் சென்று நின்ற தருணம் அவள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று.அவன் மேல் உள்ள ஈர்ப்பு ஆழமான காதலாய் மாறிய தருணம் அது. ஆனால் அதை சிந்திக்கும் தருணம் அப்போதும் அவளுக்கு அமையவில்லை.
அதன் பின் உடனடியாக கல்யாணம் அப்போது அவன் தன் சம்மதத்தை கேட்கவில்லையே என்ற கோபம் அவன் மனைவியாகிதால் வந்த நிம்மதியை மறைத்தது.
அதற்கடுத்த நான்கு வருடமும் அவன் தன் பின்னே சுற்றிய போதும் ஏதாவது சீண்டி அவள் கோபத்தை தூண்டிவிட்டு அவன் மேல் உள்ள காதலை அவளை உணரவிடாமலே செய்துவிடுவான் அவளின் கணவன்.
அவன் அதன்பின்னும் தன்னை திருமணம் செய்து காதலிப்பதாக கூறிய போதும் பரிதாபத்தில் தான் இப்படி சொல்கிறான் என நினைத்து தன்னையே ஏமாற்றிக் கொண்டாள் அவனின் மனைவி.
ஒருவழியாக இன்று அவர்கள் பாதுகாத்து வந்த பொக்கிஷத்தை கண்ட பின்பு தான் அவனுடைய காதலோடு சேர்த்து தனக்கும் அவன் மீது எப்போதோ உண்டான காதலையும் அறிந்து கொண்டாள் அந்த அறிவாளி.
தன்னைப்போல் அவனும் இந்தப் பிரச்சனைகளுக்கு முன்பிருந்தே தன்னைக் காதலித்திருக்க வேண்டும் என்பதைத் தான் அவள் மனம் இத்தனை நாளாய் அவனிடம் எதிர்பார்த்தது என அவளே இப்போது தான் புரிந்து கொண்டாள்.
தன் காதலை உணர்ந்த நொடி அவனுடன் அதைப் பகிர்ந்து காதலில் திளைக்க மனம் ஆர்ப்பரித்தாலும் அவனின் பாராமுகம் அதை அடக்கியது.
தானே சென்று அவனிடம் தன் காதலைச் சொல்லவும் வெட்கம் தடுக்க, அவன் மாறுவதற்காக காத்திருந்தாள் அவனின் மனையாள்.


மின்னலே என் நெஞ்சிலே - பிரியதர்ஷினி S