
அத்தியாயம் – 37
“ஹரி எழுந்திரி வீட்டுக்கு வா போலாம் அங்க பாட்டி தாத்தா எல்லாருமே ரொம்ப உடைஞ்சு போய் இருக்காங்க இப்போ நீயும் வீட்டுக்கு வர மாட்டேன்னு அடம் பண்றது சரியில்லை.. எழுந்துக்கோ” என விஜய் கடலை வெறித்துக் கொண்டிருந்த ஹரியை பிடித்து உலுக்கினான்.
அப்போது தான் ஹரிக்கு பெரியவர்களின் நினைப்பே வந்தது. தானே இப்படி இடிந்து போய்விட்டால் அவர்களை யார் சமாதானப்படுத்துவது என நினைத்தவனுக்கு தன்னைக் குறித்தே வெட்கமாக இருந்தது.
தனக்கிருந்த மனோபலம் எல்லாம் இப்போது எங்கே போனது என யோசித்தவனுக்கு விடையாய் ஸ்ரீயின் சிரித்த முகமே மனதில் தோன்றி மறைந்தது.
தன்னுடைய பலம் பலவீனம் இரண்டும் அவள் தான் என உணர்ந்து கொண்டவனுக்கு புது தெம்பு பிறந்தது போல் இருந்தது.
‘உன்னைத் தேடி சீக்கிரம் வந்துருவேன் லட்டு’ என கூறிக்கொண்டவன், ஒரு தெளிவுடன் அங்கிருந்து விஜயுடன் கிளம்பி வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான்.
அவன் உள்ளே நுழைந்தது தான் தாமதம் விஜயின் அம்மா அவனைக் கட்டிக் கொண்டு ,”அய்யோ என் பிள்ளைக்கா இந்த நிலமை வரணும் … என் மகளை சீக்கிரம் கூட்டி வந்துருயா..” என கூறிக்கொண்டே அழ,
ஹரி மட்டுமல்லாமல் அனைவருக்குமே அவரின் செய்கை வியப்பாக இருந்தது.
அவர் ஒரு கறார் பேர்வழி, ஆதிராவிடமே அளந்து அளந்து தான் பேசுவார். அப்படிப்பட்டவர் இன்று ஸ்ரீயை நினைத்து அழுவது மட்டுமல்லாமல் அவளை மகள் என்று கூறுவது ஆச்சரியமாக இருந்தது.
அவர் இன்று தான் உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு சென்று வீடு திரும்பியிருந்தார், அப்போது ஆதிரா கூறியதும் அழுதுகொண்டே இங்கு கிளம்பி வந்தவர் சரியாக அதே சமயம் ஹரியும் வரவும் அவனைக் கட்டிப்பிடித்து அழுது தீர்த்து விட்டார்.
அவர் பின்னாலே வந்த ஆதிராவுக்குமே இந்தக் காட்சி எட்டாவது அதிசயம் போல் இருந்தது.
அவரை பிரித்தெடுத்த ஹரி ,”கண்டிப்பா ஸ்ரீ வருவா அத்தை நீங்க அழுது உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க.. போய் ரெஸ்ட் எடுங்க ” என அவரை அனுப்ப முனைந்தான்.
அவரோ அவன் தலையில் இடியை இறக்கினார் ..
“என் புள்ளை உசுரை காப்பாத்துன தேவதைய்யா அவ..அவளுக்கு மட்டும் எதுவும் ஆகக் கூடாது ” என அவர் அழுகையில் ஸ்ரீ மறைக்க நினைத்த விஷயத்தை உளறி விட,
விஜய்க்கு பக்கென்றது, ஹரிக்கு உண்மை தெரிந்தால் தன்னிடம் ஏன் இவ்வளவு நாள் மறைத்தாய் என சாமியாடப் போகிறான் என பயந்து கொண்டு நின்றிருக்க,
ஆதிரா உட்பட அனைவருக்கும் விஜயின் அம்மா சொன்னது ஒன்னும் புரியவில்லை. ஹரி குழப்பத்துடன் ,”என்ன அத்தை சொன்னிங்க.. விஜய்யை அவ என்ன காப்பாத்துனா??” எனக் கேட்க,
அவரும் இனிமேலும் இதை மறைப்பது நல்லதல்ல என நினைத்தவர் , விஜயின் கல்யாணத்துக்கு ஒரு மாதத்திற்கு முன் நடந்ததை அவர்களிடம் சொல்ல ஆரம்பித்தார்.
ஸ்ரீ பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது , ஆதிரா முதல் வருடம் பி.சி.ஏ ,ஹரி எம்.பி.ஏ படித்த அதே கல்லூரியில் படித்தாள்.
அங்கு தான் விஜய்யும் ஹரியுடன் படித்தான். அப்போது விஜய் ஆதிரா மீது காதல் வயப்பட்டு அவளிடமும் தன் காதலை தெரிவித்துவிட, ஆதிராவுக்கும் அவனை பிடித்திருந்ததால் ஒரு ஆறு மாதம் அவனை சுற்றல்ல விட்டுவிட்டு ஓகே சொல்லி விட்டாள்.
இவர்களின் காதலைப் பற்றி ஆதிரா சொல்லியிருந்தது அவளின் ஆருயிர் தோழி ஸ்ரீயிடம் மட்டுமே. அதன் பின் சந்து காணமல் போய் அவர்கள் குடும்பமே சிதைந்து போனதில்,ஸ்ரீ தன்னுடைய குற்றவுணர்ச்சி காரணமாக ஹரியின் குடும்பத்தார் யாரிடமும் பேசவில்லை.
ஆனால் தோழியின் மீது உண்மையான அக்கறையும் பாசமும் கொண்டவளாதலால், அடிக்கடி விஜய்யிடம் மட்டும் போன் செய்து ஆதிராவின் நலனை விசாரித்துக் கொள்வாள். அது அவளுக்கு தெரியக்கூடாது என்றும் சத்தியமும் வாங்கிக் கொண்டாள்.
இப்படியே வருடங்கள் செல்ல, ஆதிரா எம்.சி.ஏ இறுதியாண்டு படிக்கும் போது விஜய்யின் அம்மா அவனுக்கு வரன் தேட, அவன் தங்களின் காதலைப் பற்றி ஹரியிடம் கூறினான்.
ஹரிக்கும் விஜய்யைப் பிடித்திருந்ததால் மேற்படி வீட்டில் பேசி விஜய்யின் அம்மா அப்பாவிடம் சென்று பேசச் சொல்ல, அவனின் அம்மாவோ ஜாதி வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு இந்த திருமணத்திற்கு மறுத்துவிட்டார்.
ஹரி, கார்த்திக் என மாறி மாறி அவரிடம் சென்று பேசிப் பார்த்தும் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.
அப்போது சந்துவிற்கும் உடல்நிலை கொஞ்சம் மோசமாக ஹரி அங்கும் இங்கும் அல்லாடிக் கொண்டிருந்தான், இதில் அவன் கம்பெனிக்கு முக்கியமான ஒரு ஃபாரின் ப்ராஜெக்ட் வேற கிடைக்கும் நிலையில் இருக்க, அவன் அதற்காக யூ.எஸ் சென்று இரு மாதம் தங்க வேண்டி இருந்தது.
அவனும் சென்றுவிட, ஆதிரா மிகவும் துவண்டு போனாள். இதை விஜய்யின் மூலம் அறிந்து கொண்ட ஸ்ரீ அவனின் அன்னையிடம் தான் சென்று பேசுவதாக கிளம்பினாள்.
ஒரு ஹோட்டலுக்கு அவர்களை கூட்டி வரச் சொன்னவள் தானும் அங்கு கிளம்பிச் சென்று விஜய்யின் அம்மாவின் மனதை மாற்ற என்னென்னவோ தில்லாலங்கடி வேலை எல்லாம் செய்து பெரிய சொற்பழிவே ஆற்றினாள்.
ஆனால் எதற்கும் மசியாமல் கல் போல் அமர்ந்திருந்தார் அவனின் அன்னை.
சரி இந்த வாரம் இது போதும் வாரா வாரம் இது மாதிரி பேசி பேசியே அவங்களை ஒத்துக்க வச்சிரனும் என நினைத்தவள் , விஜய்யிடம் கிளம்பலாம் என சைகை செய்தாள்.
முதலில் விஜய் சென்று அவனின் காரை எடுக்கப் போக, இவர்கள் அவனை பின் தொடர்ந்தனர்.
அப்போது எங்கிருந்தோ குடிபோதையில் ஒருவன் காரை படு வேகத்தில் ஓட்டிக்கொண்டு வர, கார் அவன் கைகளில் தடுமாறி சாலையை விட்டு ஹோட்டல் புறம் வர, விஜய் திரும்பியிருந்ததால் அவனுக்கு அது தெரியவில்லை.
ஆனால் ஸ்ரீ அதை கவனித்துவிட்டு பதறிப்போய் ,”அண்ணாஆஆஆஆ!!!” என அவள் கத்திக் கொண்டே ஓடி அவனை தள்ளிவிட்டு ஒதுங்கவும் சரியாக அதே சமயம் அந்த கார் அவளை அடித்து தூக்கி எறியவும் சரியாக இருந்தது.
அவனை தள்ளிவிட்டவுடன் இவளும் ஒதுங்கியிருந்தாள் இருந்தும் அவன் குடித்திருந்ததால் காரை அங்கும் இங்கும் வலைத்துக் கொண்டே ஓட்டியிருந்ததால், விஜய்யை பார்த்து அவன் வலைக்கவும் அங்கு நின்றிருந்த ஸ்ரீயின் மேல் அது மோதி தூக்கி வீசப்பட்டாள்.
“ஸ்ரீ!!!!” என மூவரும் கதறிக் கொண்டு அவளை நெருங்க, அவள் ரத்த வெள்ளத்தில் அரை மயக்க நிலையில் இருந்தாள்.
அப்போது விஜய் வேகமாக தன் காரை எடுக்கப் போக, விஜயின் அம்மாவும் அப்பாவும் அவள் கன்னத்தை தட்டி அவளை மயக்கமடையாமல் வைத்திருந்தனர்.
அவள் அப்போது திக்கித் திணறி ,” நா..ன் அண்..ணாவை கா..ப்பாத்துனதுக்கு பதிலா… ஆதுவை அவ..ருக்கு கட்டிக் குடுப்பீங்களாமா ..ப்ளீஸ்” என எதிர்பார்ப்புடன் கேட்க,
அவருக்கோ பேச்சே வரவில்லை, அவள் தன்னையே ஏக்கமாக பார்ப்பதைக் கண்டு கண்களைத் துடைத்துக் கொண்டவர் ,”ஆதிரா தான் என் மருமகள் போதுமாம்மா” என தன் சம்மதத்தைக் கூற,
தன் தோழிக்கு நல்லது செய்துவிட்ட திருப்தியில் புன்னகையுடனே அவள் மயக்கமடைந்தாள்.
அதன் பின் அவளை மருத்துமனைக்கு அழைத்துச் செல்ல, கால் எழும்புகள் உடைந்திருந்ததோடு பின்னந்தலையிலும் உட்புறம் அடிபட்டிருக்கலாம் எனக் கூறிவிட்டனர்.
அவள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒரு முறை முழித்தவள் தன் குடும்பத்தில் யாருக்கும் இது பற்றிச் சொல்லக் கூடாது என சத்தியம் வாங்கிக் கொண்டதால் பஞ்ச பாண்டவிகளைத் தவிர யாருக்கும் எதுவும் சொல்லவில்லை.
ஒருவாறு ஒன்றரை நாள் கழித்து கண்விழித்தவள் அவர்களிடம் திருமண வேலையைப் பார்க்கச் சொல்லி வற்புருத்தி அனுப்பி விட்டாள். மேலும் தனக்கு அடிபட்டுவிட்டதை தன் குடும்பத்தினர் தாங்க மாட்டார் முக்கியமாக ஹரி உடைந்து போய் விடுவான் என்று உணர்ந்தவள் எதையும் யாரிடமும் சொல்லக்கூடாது என மூவரிடமும் சத்தியம் வாங்கிக் கொண்டாள்.
ஹரியும் ஊரில் இல்லாத்தால் கார்த்திக் தான் முன் நின்று அனைத்தையும் செய்தான். இவள் இந்த நான்கு வருடமாக ஊருக்கே செல்லாததால் யாருக்கும் இவளைப் பற்றி சந்தேகம் வரவில்லை.
கல்யாணத்திற்காக இரண்டு நாள் ஹரி வந்துவிட்டு மீண்டும் கிளம்பிச் சென்று விட்டான், அப்போது அவள் கல்யாணத்திற்கு வரவில்லை என்ற ஏமாற்றம் கோபமாக மாற, அவளை எப்போதும் போல் அவளுக்குத் தெரியாமல் பார்த்துவிட்டு செல்பவன் இந்த முறை அவளைப் பற்றி சிந்திக்காமல் கிளம்பிச் சென்றுவிட்டான்.
மூன்று மாதங்கள் கழித்தே அவள் பரிபூரணமாக குணமடைந்திருந்தாலும், தலையில் இனிமேல் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுருத்தி விட்டே மருத்துவர்கள் அவளை டிஸ்சார்ஜ் செய்தனர்.
இவை அனைத்தையும் அவர் கூறி முடிக்க, அங்கு கனத்த அமைதி நிலவியது.
ஆதிராவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது, ஸ்ரீ தன்னை மறந்துவிட்டாள் என்று எத்தனை நாள் அவளை திட்டியிருப்பேன் என தன்னைக் குறித்தே அவளுக்கு அசிங்கமாக இருந்தது.
சாருமதிக்கு அவள் திருமணத்திற்கு அவள் வரமுடியாது என்று சொன்ன போது அவளை தான் திட்டிய பேச்சுக்கள் இப்போது அவரைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது.
‘என் பொண்ணு தனியா இவ்வளவு கஷ்டப்பட்டப்போ நானே அவளை வதைச்சிருக்கேனே நானெல்லாம் ஒரு அம்மாவா’ என அவர் அழுது புலம்ப,
ஹரி எதுவும் பேசாமல் தனது அறைக்குள் சென்று கதவை அரைந்து சாற்றினான்.
அவளை ஆதிரா கல்யாணத்துக்கு வரவில்லை என்று குத்திக் காண்பித்து அவளை நோகடித்தது அவன் கண்முன் வந்து போனது.
“ச்சே நான் தான் உன்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன் என பெருமையா நினைச்சுட்டு இருந்தேனே ..இப்போ என்னை நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு லட்டு.. ரொம்ப வலிச்சதா டா” என அவள் என்னவோ தன் முன்னால் இருப்பது போல் பேசிக் கொண்டவன் தன் மனதில் தோன்றிய வலியையும் வேதனையும் தாங்க முடியாமல் தவித்தவனுக்கு அவன் முன்னால் இருந்த கண்ணாடியில் தெரிந்த அவனின் உருவத்தைக் கண்டு அவன் மேலே அவனின் மொத்த கோபமும் திரும்ப, வேகமாக எழுந்தவன் கண்ணாடியில் ஓங்கி ஒரு குத்து விட, அது தூள் தூளாக சிதைந்து பல துகல்கள் அவன் கைகளைக் குத்திக் கிழித்தது.
சப்தம் கேட்டு அனைவரும் உள்ளே ஓடி வர, கார்த்திக்கும் அப்போது தான் வர்ஷூவைக் காணாமல் தேடிக்கொண்டு உள்ளே வந்தவன் ஹரி இருந்த நிலையைப் பார்த்து அவனை சாந்தப்படுத்த ,”ஹரி கால்ம் டவுன்.. நான் யாரு ஸ்ரீயை கடத்துனான்னு கண்டுபிடிச்சுட்டேன்.. வர்ஷூவை தேடிக் கொண்டிருக்க அந்த காளிதாசனோட ஆளுங்க தான்… மே பி வர்ஷூன்னு நினைச்சு ஸ்ரீயை தூக்கிருக்கலாம்.. இப்போ வர்ஷூவை வேற காணோம்.. என் கெஸ் கரெக்ட்னா அடுத்து இவளைத் தான் அவனுங்க தூக்குவானுங்க.. சோ நம்ம ஈசியா கண்டுபிடிச்சிரலாம், பிகாஸ் வர்ஷூ கழுத்துல கட்டிருக்க தாலியில ஜி.பி.எஸ் பொருத்தி வச்சிருந்தேன் அவளுக்கே தெரியாம.. வீ வில் கெட் தெம் சூன்.. வந்து கைக்கு மருந்து போடு” என அவனை வற்புருத்தி அழைத்து கைக்கு மருந்திட்டு கட்டுப் போட்டான்.
வர்ஷூவையும் காணவில்லை என கார்த்திக் சொன்னதும் அந்த வீட்டினருக்கு ‘இன்னும் என்னென்ன சோதனையை தாங்கணுமோ கடவுளே என்று இருந்தது. நல்லவேளை சந்துவை இப்போதிருக்கும் சூழலில் இங்கு வைத்திருந்தால் அவளின் மனம் மிகவும் பாதிக்கும் என நேற்றே சித்துவின் குடும்பத்துடன் அவளை விஜய் வீட்டிற்கு அனுப்பி விட்டதால் சித்துவின் பெற்றோருக்கு தங்கள் மகள் (வர்ஷூ) முட்டாள் தனமாக வீட்டை விட்டு வெளியேறியது எதுவும் தெரியவில்லை என நினைத்து கொஞ்சம் மனதை தேற்றிக் கொண்டனர்.
சரியாக அதே சமயம் ஹரிக்கு ஒரு புதிய நம்பரில் இருந்து கால் வர ,அதை எடுத்தவன் மறுபுறம் சொன்ன செய்தியில் ஆனந்தமாக அதிர்ந்தான்.
வீட்டில் இருந்து கிளம்பிய வர்ஷூவும் ஸ்ரீயைப் போலே ஹாஸ்டலுக்குச் செல்லாமல் பெரிய அறிவாளி போல் கோயம்புத்தூருக்கே சென்றுவிட நினைத்து அவள் இரயில் நிலையம் செல்ல, அவளின் கெட்ட நேரம் காளிதாசனின் பி.ஏவும் அன்று தான் மும்பை செல்ல சென்ட்ரல் வந்திருந்தான்.
அவன் கண்ணில் இவள் பட்டுவிட, கோழி அமுக்குவதைப் போல் அவளைக் கடத்திக் கொண்டு போய் தன் முதலாளியின் முன் நிறுத்தி அவரை மகிழ்விக்க திட்டம் தீட்டியவன் அவளைப் பின் தொடர்ந்து சென்றவன் அவள் தனியாக எங்கேயோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்தவன், இதுதான் சரியான சமயம் என்றுணர்ந்தவன் கைவசம் மயக்க மருந்து ஏதுமில்லாததால் பல வருடமாக துவைக்காமல் காலில் மாட்டியிருந்த சாக்ஸையே மயக்க மருந்தாக உபயோகப்படுத்தினான்.
அந்த மயக்க மருந்தை விட, இது பவர்ஃபுல்லாக இருந்ததால் அந்த நாற்றம் தாங்க முடியாமல் சற்று நேரத்திற்க்கெல்லாம் வர்ஷூ மயங்கியிருந்தாள்.
அங்கிருந்தவர்கள் யாவரும் அவரவர் வேலையில் பிசியாக இருக்க, இவளை கைத்தாங்கலாக அழைத்து வந்தவன் , தான் முன்பே வரச்சொல்லியிருந்த காரில் அவளை அள்ளி போட்டுக்கொண்டு அங்கிருந்து விரைவாக கிளம்பினான்.
நேராக தன் முதலாளி தங்கியிருக்கும் வீட்டிற்குச் சென்றவன் பின்பக்க வழியாக அவளைத் தூக்கிக் கொண்டு போய் அங்கிருந்த ஸ்டோர் ரூமை தன்னிடம் வைத்திருந்த சாவியைக் கொண்டு திறந்தவன், இவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல, அங்கே ஏற்கனவே கட்டி வைக்கப்பட்டிருந்த பெண்ணைக் கண்டு அதிர்ந்தான்.
‘என்ன டா இந்தாளு பொண்ணுங்களை கடத்துற பிசினெஸ் எதும் பண்றானா ..சரி என்ன கருமமோ பண்ணட்டும் நமக்கு காசு வந்தா போதும் ‘ என நினைத்தவன் வர்ஷூவையும் அங்கு கட்டி வைத்துவிட்டு வெளியே பூட்டி வைத்து விட்டு நேராக தன் முதலாளியைக் காணச் சென்றான்.
அங்கோ அவர் அறையில் வருண் தன் தந்தையான காளிதாசனை காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தான்.
ஆம் காளிதாசன் தான் வருண் மற்றும் சிந்தியாவின் தந்தை, இது காளிதாசனின் விசுவாசிகளான ஒரு பத்து பேரைத் தவிர யாருக்குமே தெரியாத உண்மை.
சிந்தியா இத்தனை நாளாக ஸ்ரீயை விட்டு வைத்திருந்ததற்குக் காரணம், தந்தை ஜெயிலில் இருக்கும் போது தான் ஏதாவது செய்து மாட்டிக் கொண்டால் வெளியே வருவது சிரமம் என்றே இத்தனை வருடமாக அடக்கி வாசித்தாள்.
இப்போது தந்தையும் வந்துவிட, இதுதான் சரியான சமயம் என அவளைக் கடத்திக் கொண்டு வந்தவள் , தந்தைக்கு வருணின் மீதுள்ள பாசத்தைப் பற்றி அறிந்ததால் தான் அவருக்கு கூடத் தெரியாமல் இங்கே வீட்டிலே அவளை அடைத்து வைத்திருந்தாள்.
இது ஏதும் அறியாத காளிதாசன் வருணின் கோபத்திற்கு பலிகடா ஆகினார்.
நேற்றிருந்து அவன் கண்ணில் அவர் படவில்லை, இன்று வீட்டிற்கு வந்ததும் அவரைப் பிடித்துக் கொண்டவன் ,”ஸ்ரீயை எதுக்கு கடத்துனீங்க?” என்று அவரை வைத்து செய்து கொண்டிருந்தான்.
அவரோ நான் கடத்தவில்லை என அவனுடன் போராடிக் கொண்டிருக்க, அதே சமயம் உள்ளே நுழைந்த அவரின் பி.ஏ வருண் உள்ளே இருப்பதை கவனிக்காமல் ,”பாஸ் அந்த பொண்ணை தூக்கிட்டேன் ப்ளான் சக்சஸ்” என வாயை விட,
அவருக்கோ பக்கென்று இருந்தது ,’இந்த இழவெடுத்தவன் யாரை தூக்கிட்டு வந்தான் அய்யோ அதை இவன் முன்னாடி தானா சொல்லனும் , சும்மாவே சாமியாடிகிட்டு இருக்கான் இப்போ அருவாளை எடுத்து என்னை போட்டுத் தள்ள போறான்’ என மனதிற்குள் கூறிக் கொண்டவர் , வருணைப் பார்க்க,
அவனோ ‘மாட்டிக்கிட்டிங்களா’ என்பது போல் அவரை முறைத்தவன் இப்போது அங்கிருந்த பி.ஏ மீது பாய்ந்தவன் ,” எங்கடா ஸ்ரீ ..எங்க வச்சிருக்கீங்க அவளை..என்ன பண்ணீங்க?? சொல்லுடா சொல்லு” என அவனின் குரல்வளையை நெறிக்க,
“சின்ன பாஸ் முதல்ல கழுத்தை விடுங்க அப்போ தான சொல்ல முடியும்” என திணறிக் கொண்டே பி.ஏ கூற,
தன் பிடியை லேசாக தளர்த்தியவன் ,”இப்போ சொல்லு எங்க ஸ்ரீ?” என கேட்க,
“ஸ்ரீ யாரு ?” என அவன் பதில் கேள்வி கேட்டான்.
வருண் கோபத்தில் மீண்டும் அவன் கழுத்தை நெறிக்கப் போக, அவனை தடுத்த காளிதாசன் ,”டேய் விடுடா அவன் செத்துற கித்துற போறான் நான் கேட்டுச் சொல்றேன் ” என அவனிடம் இருந்து அவனை பிரித்தெடுக்க,
கோப மூச்சுகளுடன் அவரை முறைத்த வருண் ,”நியாயமா இந்நேரத்துக்கு நான் உன்னைத் தான் போட்டு தள்ளிருக்கனும் எனக்கு இருக்க கோபத்துல அப்பன்னு கூட பார்க்க மாட்டேன் மரியாதையா இப்போ ஸ்ரீயை என் கண்ணுல காட்டலை நீ கைமா தான் டா காளி தாசா” என மிரட்ட,
“டேய் நான் உன் தகப்பன் டா!!!” என அவர் அதிர்ச்சியில் புலம்ப,
“யோவ் அசிங்கமா ஏதாச்சும் கேட்டுற போறேன்..இந்த நாலு சுவத்துக்குள்ள மட்டும் அப்பன்னு சொல்லிக்கிட்டா பத்தாது வெளியவும் சொல்லனும் அவன் தான் ஆம்பளை ..நீ இப்போ ஸ்ரீயை கூட்டிட்டு வரப்போறியா இல்லையா?” என அவன் மீண்டும் கத்த,
தன் மானத்தை காப்பாத்திக் கொள்ள நினைத்தவர் தன் பி.ஏ வை ஓங்கி அரைந்து ,”எங்க டா அந்த ஸ்ரீ புள்ளை?” எனக் கேட்க,
அவனோ கன்னத்தைப் பிடித்துக் கொண்டு ,”எவ டா அந்த ஸ்ரீ அப்பனும் மவனும் சொல்லாம இப்படி மாறி மாறி அடிக்கிறீங்க.. பேசாம அந்த வர்ஷூவை அப்படியே போய்த் தொலைன்னு விட்டுட்டு நான் மும்பைக்கு கிளம்பி போய்ருக்கனும் என் கெரகம் காசுக்காக இந்த கிறுக்குப் பய கூட்டத்துகிட்ட மாட்டிக்கிட்டேன்” என மனதிற்குள் புலம்பியவன்,
“பாஸ் எனக்கு ஸ்ரீனா எங்க ஆயா சத்தியமா யாருன்னு தெரியாது பாஸ் நான் தூக்கிட்டு வந்தது அந்த வர்ஷினியை” எனக் கன்னத்தை தேய்த்துக் கொண்டே கூற,
வருணோ ,”என்னாது வர்ஷூவுமா .. அவளை எதுக்கு டா தூக்குனிங்க அவளையும் விட்டு வைக்கலையா பாவிங்களா” என மீண்டும் அடிக்க போக, அவன் காளிதாசனின் பின் சென்று மறைந்து கொண்டான்.
காளிதாசனோ ,”இவன் என்ன வர்ஷினின்னு சொன்னதுக்கும் குதிக்கிறான்..என்னடா நடக்குது இங்க?? அவளையும் இவனுக்கு தெரியுமா”என குழம்பிப் போய் நின்றிருந்தார்.
அப்போது தான் வர்ஷூவை கட்டும் போது அந்த அறையில் இன்னொரு பெண் மயக்க நிலையில் இருந்தது நினைவு வர, ஒருவேளை அந்த ஸ்ரீயா இருக்குமோ என நினைத்த பி.ஏ தன் முதலாளியிடம் ,”பாஸ் நான் அந்த வர்ஷூ பிள்ளையை உங்க ஸ்டோர் ரூம்ல கட்டுறப்போ அங்க இன்னொரு பொண்ணும் இருந்துச்சு பாஸ் .. ஒருவேளை அதுதான் சின்ன பாஸ் தேடுற பொண்ணோ??” எனக் கூற,
வருண் அடுத்த நிமிடம் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் ஸ்டோர் ரூமை நோக்கி ஓட, அவனைப் பின் தொடர்ந்து இவர்களும் சென்றனர்.
ஸ்டோர் ரூமை அடைந்தவன் அந்த பி.ஏ விடம் சாவியை வாங்கி அதைத் திறக்கப் போக, அப்போது ஒரு கரம் அவனைத் தடுத்து நிறுத்தியது.
இங்கு ஹரி சந்தோஷத்தில் ,”கார்த்திக் ஸ்ரீ இருக்க இடம் தெரிஞ்சிடுச்சு டா ” என சந்தோஷ மிகுதியில் கத்தினான்.
மற்றவர்களும் சந்தோஷ பரபரப்புடன் “எப்படி யார் சொன்னது” என வினவினர்.
ஹரியின் நண்பன் அந்த S.P தான் அந்த கார் மாற்றம் செய்யப்பட்ட இடத்திற்கு நடுவில் உள்ள ஏரியாவிலுள்ள மக்களிடம் விசாரித்ததில் போலீஸ் என்பதால் பயந்து அவர்கள் கண்டதை சொல்லி விட்டனர்.
அங்கு சிந்தியா ஸ்ரீயை தூக்கி வேறு ஒரு வண்டியில் செல்வதை பார்த்த இருவர் முதலில் ஹரி, கார்த்திக் விசாரித்த போது நமக்கெதற்கு வம்பு என உண்மையை மறைத்தவர்கள் போலீஸ் வந்து மிரட்டவும் , சிந்தியாவின் அடையாளங்களையும், அவள் சென்ற காரின் எண்ணையும் தெரிவித்தனர்.
அதை வைத்து அவர்கள் கண்டுபிடித்ததில் கார் அந்த வீட்டிற்குச் சென்றதிலிருந்து வேறெங்கும் செல்லவில்லை என உறுதிபடுத்த, அப்போது ஸ்ரீ அந்த வீட்டில் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று நினைத்தவன் அதை ஹரியிடம் கூறியிருந்தான்.
மேலும் இப்போது முக்கியமான குற்றவாளி ஒருவன் தப்பித்து விட்டதால் அவனை தான் தேடிச் செல்வதாகவும் முதலில் அவனையும் கார்த்திக்கையும் சென்று பார்க்க சொன்னவன், சற்று நேரத்தில் தான் அங்கு வந்து விடுவதாக கூறினான்.
ஹரி அவர்களிடம் கூறிவிட்டு , கார்த்திக்குடன் கிளம்ப, கார்த்திக் வர்ஷூவின் ஜி.பி.எஸ் காட்டிய இடத்தையும் ஸ்ரீ இருக்கும் இடத்தையும் ஒப்பிட்டு பார்த்தவன் இரண்டும் ஒன்றாக இருக்க, இருவரையும் காப்பற்றி விட்டு அந்த காளிதசனுக்கு இன்றோடு கருமாதி செய்துவிடும் நோக்கோடு தான் வைத்திருக்கும் லைசன்ஸ் உள்ள துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஹரியுடன் கிளம்பினான்.
இரு ஆண்மகன்களும் தங்கள் துணையை மீட்க துணிச்சலுடன் கிளம்பிச் சென்று வெற்றியுடன் திரும்புவார்களா? இல்லை வேதனையுடன் திரும்புவார்களா??


மின்னலே என் நெஞ்சிலே - பிரியதர்ஷினி S