
அத்தியாயம் – 31
“வருண் கொஞ்ச நாளா உன் போக்கே சரியில்லைன்னு கேள்விப்பட்டேன்” என தந்தையின் அழுத்தமான குரல் தன் காதில் வந்து விழுக,
வருணோ சற்றும் அவரைக் கண்டு கொள்ளாமல் தன் அன்னையிடம் திரும்பி ,”என்ன மா உன் புருஷனுக்கு திடீர்னு என் மேல அக்கறை .. நாம இருக்கோமா செத்தோமான்னு கூட நினைப்பில்லாதவருக்கு நான் என்ன பண்ணா அவருக்கு என்ன??” என அவன் கடுப்புடன் கேட்டான்.
“டேய் என்ன டா இது அப்பாவை மரியாதை இல்லாம பேசிகிட்டு..அதெல்லாம் அப்பாவுக்கு நம்ம மேல நிறைய அக்கறை இருக்கு ..லூசு மாதிரி உளறாம அப்பா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு” என அவனின் அன்னை அவனைக் கடிந்து கொள்ள,
தன் அன்னையை இயலாமையோடு பார்த்தவன் ,”உங்களோட இந்த அன்பு தான் இந்தாளோட பலம்..இப்படியே நாலு சுவத்துக்குள்ளையே உங்களை சிறையெடுத்து உங்க வாழ்க்கையும் இல்லாம என் வாழ்க்கையையும் இந்த ஆள் நாசம் பண்ணிருக்கது உனக்கு புரியலையா மா?? இன்னும் எவ்ளோ நாளைக்குத் தான் இந்தாளோட நாடகத்தை நம்பிட்டு இருக்க போறியோ” என வருண் எரிச்சலுடன் மொழிய,
சரியாக அதே நேரம் வீட்டுக்குள் வந்து சேர்ந்தாள் வருணின் இரட்டை சகோதரி மினி.
அவளைப் பார்த்ததும் ,”வந்துட்டாடா மேனாமினுக்கி” என அவன் வாய்க்குள்ளேயே முனுமுனுக்க,
அவள் அவனை நோக்கி ஒரு சுட்டெரிக்கும் பார்வையை வீசிவிட்டு அங்கு ஹாலில் நடுநாயகமாக வீற்றிருந்த தன் தந்தையின் கழுத்தைக் கட்டிக் கொண்டு ,”ஐ மிஸ்ட் யூ சோ மச் டாட்” என செல்லம் கொஞ்ச,
அவரும் மகளின் கன்னத்தை வாஞ்சையாக வருடிக் கொண்டே ,”ஐ மிஸ்ட் யூ டூ பேபி” என பதிலுக்கு இவரும் செல்லம் கொஞ்ச,
இவர்களின் அன்னை இவர்களின் கொஞ்சலில் சற்று நேரத்திற்கு முன் மகன் கூறியதையெல்லாம் டீலில் விட்டுவிட்டு அவர்களை ஆதுரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
மினி வருணுடன் பிறந்திருந்தாலும், உருவத்திலும் சரி குணத்திலும் சரி இருவரும் இரு வேறு துருவங்கள்.
மினி தன் தந்தையைக் கொண்டு பிறந்திருக்க, வருண் தன் அன்னையைக் கொண்டு பிறந்திருந்தான்.
இவர்கள் மூவரையும் பார்த்து வருணின் இரத்த அழுத்தம் ஏகத்திற்கும் ஏற, அங்கிருந்து கிளம்ப போக, அவன் நடையை தடை செய்தது தன் தந்தையிடம் இருந்து வந்த கேள்வி.
“தன்ய ஸ்ரீ யாரு??” என்று அதிகாரமாக வந்து விழுந்த அவர் கேள்வியில் அவனின் நடை சட்டென்று நிற்க, அடுத்த நிமிடமே சிறிதும் தாமதிக்காமல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ,” அவ என்னோட உயிர்..உங்களுக்கு புரியும் பாஷையில சொல்லனும்னா என்னோட மனைவியாகப் போறவ” என மனைவி என்ற வார்த்தையில் சற்று அழுத்தம் கொடுத்தே சொன்னான்.
அவன் அப்படிச் சொல்வதற்குக் காரணம் அவரின் அன்னை தன் தந்தைக்கு முறையான பொண்டாட்டி அல்ல.. அவரின் முதல் மனைவிக்கு குழந்தையில்லாமல் போக, வீட்டிற்கு வேலை பார்க்க வந்த தூரத்து உறவான வருணின் அன்னையின் அழகில் மயங்கியவர், அவரிடம் காதல் வார்த்தைகளும்,தனக்கு குழந்தை இல்லை என்ற வருத்தத்தையும் பற்றி சாமர்த்தியமாக பேசி தன் வலையில் வீழ்த்தினார்.
அவர் எப்படி இருந்தாலும் வருணின் அன்னை அவரை உண்மையாக காதலித்ததால் அவரின் குறைகளைப் பற்றியோ இன்னொரு பெண்ணுக்கு நாம் திரோகம் செய்து கொண்டிருக்கிறோம் என்றோ அவர் உணரவில்லை என்று சொல்வதை விட, அவர் உணரவிடவில்லை.
அந்த அளவிற்கு அவரை மயக்கி வைத்திருந்தார். ஒரு வருடத்திலே வருணும் மினியும் பிறக்க, தனியாக அவர்களை ஒரு வீட்டில் தங்க வைத்தவர் உலகத்திலிருந்தே இப்படி தனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை மறைத்து இந்நாள் வரையிலும் அதை கடைபிடித்து வருகிறார்.
முதலில் வருணுக்கு இது தெரியவில்லை, ஆனால் அவனுக்கு விவரம் தெரிய வந்த போதோ அவன் தந்தையிடம் தங்களை வெளி உலகிற்கு உங்களின் பிள்ளைகள் என அறிவிக்க வேண்டும் என சண்டை போட, அவர் முடியவே முடியாது என மறுத்து விட்டார்.
எனவே அவன் இனிமேல் அங்கு இருக்க மாட்டேன் என குன்னூர் கான்வென்டில் சேர்ந்து படிக்க தொடங்க, மினி மட்டுமே தன் அன்னையுடன் வளர்ந்தாள்.
என்னதான் அன்னையுடன் வளர்ந்தாலும் அவளுக்கு தன் தந்தையின் குணநலன்களே அதிகம் இருந்தது. அதனால் வருணுக்கு அவளையும் சுத்தமாக பிடிக்காது.
அவளும் அதை பெரிதாக கண்டு கொள்ள மாட்டாள்.
இப்படியே நாட்கள் நகர, இப்போது கல்லூரி இறுதியாண்டு படிக்கும் போது தான் அன்னையின் புலம்பலைத் தாங்காது அவருக்கு சென்னையில் வீடுபார்த்து அன்னை மற்றும் மினியுடன் தங்கியிருக்கிறான்.
இங்கு வந்ததிலிருந்தே அவனின் மாற்றத்தைக் கண்டு கொண்ட அன்னை அவனை நோட்டமிட, அப்போது அவனின் பையில் சிக்கியது தான் ஸ்ரீயின் புகைப்படமும் , ஒரு நோட் முழுக்க ஸ்ரீயைப் பற்றிய கவிதைத் தொகுப்பும்.
அதைக் கண்டு அதிர்ந்தவர், நான்கு வருடங்கள் கழித்து இன்று தான் வீட்டிற்கு வந்துள்ள கணவனிடம் முதல் வேலையாய் இதை ஒப்பித்து விட்டு அந்த புகைப்படத்தையும் அவரிடம் கொடுத்திருந்தார்.
அவனின் மனைவி என்ற கூற்றில் அவன் அன்னைக்கு குற்றவுணர்ச்சியில் உடல் கூசிப் போக, அவர் தந்தையோ அதை சட்டை செய்யாமல் ,” படிக்கிற வயசுல படிக்கிறதை மட்டும் பாரு தேவையில்லாத வேலையெல்லாம் வேண்டாம்” எனக் கூற,
“அதை நீங்க ஒன்னும் சொல்ல அவசியம் இல்லை.. நான் படிச்சு முடிச்சு வேலைக்கு போய் என் ஸ்ரீயை கண்ணுக்குள்ள வச்சு தாங்குவேன் உங்களை மாதிரி தண்ணி தெளிச்சு விட்டுற மாட்டேன்..நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க” என அவன் எரிச்சலுடன் கூறிவிட்டு இன்னும் அங்கு நின்றால் அன்னையையும் காயப்படுத்தி விடுவோம் என அங்கிருந்து வேகமாக கிளம்பிச் சென்று விட்டான்.
அவன் கூறியதைக் கேட்டு சுவாரசியமான மினி ,”யாருடா இந்த சாமியாரையே மயக்கிய அந்த மேனகா” என யோசித்தவள் தன் தந்தையிடம் திரும்பி ,”டாட் உங்க சீமந்த புத்திரன் இப்படி உருகி உருகி லவ் பண்ற அந்த அழகியை நான் பார்த்தே ஆகனுமே அவ போட்டோ இருக்கா” என ஆர்வமாக கேட்க,
மகளின் மேல் கொள்ளை பிரியம் வைத்துள்ள அவரும் சிரித்துக் கொண்டே அவளின் அன்னை அவரிடம் கொடுத்த போட்டோவை மகளிடம் நீட்டினார்.
அதை ஆர்வமாக வாங்கிப் பார்த்த மினி ,அதில் சிரித்த முகத்துடன் இருந்த ஸ்ரீயைக் கண்டு இவளின் முகம் விகாரமாக மாறியது.
அவளின் சிரித்த முகம் அவள் மறக்க நினைக்கும் விஷயங்களை கண்முன் தோற்றுவிக்க, அந்த கசப்பான சம்பவங்களை வன்மத்துடன் நினைத்துப் பார்த்தாள் அவள் ..மினி எனும் சிந்தியா.
நான்கு வருடங்களுக்கு முன்பு,
அன்று சந்துவிடம் மிரட்டிவிட்டு அவர்கள் வீட்டில் என்ன நடக்கிறது எனப் பார்க்க, அங்கேயே நோட்டமிட்டுக் கொண்டிருந்த சிந்தியா, ஹரியும் சந்துவும் அவர்கள் வீட்டிற்குப் பின் இருக்கும் தோட்டத்திற்கு போவதைக் கண்டு இவளும் அவர்களை பின் தொடர்ந்து ஒரு மறைவில் நின்று கொண்டாள்.
சந்து ஹரியிடம் பேசியது அதன் பின் ஹரி எதுவும் கூறாமல் அங்கிருந்து கிளம்பியதைக் கண்ட சிந்தியா மகிழ்ச்சியில் குதியாட்டம் போட்டாள்.
அவளை பொருத்தவரை அவனுக்கு ஸ்ரீயின் மீது காதலில்லை அதனால் தான் சந்து கூறியதற்கு எதுவும் மறுத்துப் பேசவில்லை என நினைத்தவள் இனி அவனை தன் வலையில் வீழ்த்துவது சுலபம் என நினைத்துக் கொண்டாள்.
சந்துவும் ஹரியும் சென்று விட, தன் கைப்பேசியை எடுத்து தனக்கு இருக்கும் ஒரே தோழியான ரம்யாவிற்கு அழைத்தாள்.
ரம்யாவிற்கும் இவளிற்கும் இரண்டு வருட வயது வித்தியாசம் இருந்தாலும், இருவரின் குணநலன்கள், அதாவது தான் தான் இந்த உலகத்திலே பெரியவர், மற்றவரெல்லாம் தனக்கு அடிமை என்னும் எண்ணத்தைக் கொண்டிருந்ததால் இருவரும் நெருங்கிய தோழிகளாயினர்.
அவளுக்கு அழைத்தவள் உற்சாகக் குரலில் ,”ப்ளான் சக்சஸ் ரம்ஸ், இன்னைக்கு அந்த பயந்தாங்கொள்ளி நான் சாகுறேன்னு ட்ராமா போட்டதை நம்பி ஹரிகிட்ட வந்து எனக்காக எப்படி கெஞ்சுனா தெரியுமா?? அவனும் தங்கச்சி மேல இருக்க பாசத்துல எதுவும் சொல்லாம போன்னு சொல்லிட்டு கிளம்பிட்டான்” என கூற,
“என்னடி அவன் ஓகே சொல்லலையா அப்போ..இதுக்கா நீ இவ்ளோ கஷ்டப்பட்டு நடிச்ச” என மறுபுறம் இருந்து ரம்யா கேட்க,
“ஹேய் கூல் கூல் டி..இதுவே பெரிய வெற்றி தான் எனக்கு ஹரி கிடைச்சா போதும் ..நான் அவனை அடைஞ்சு காட்டுவேன்” என தீவிரமான குரலில் சிந்தியா மொழிய,
“அப்படி என்ன தான் டி அவன் கிட்ட இருக்கு ஏன் இப்படி கஷ்டப்படுற நீ..உன் அழகுக்கு எத்தனை பேர் வரிசைல நிக்கிறாங்க நீ என்னடான்னா எவனோ ஒருத்தனுக்காக பைத்தியம் மாதிரி சுத்திகிட்டு இருக்க?” என ரம்யா சலித்துக் கொண்டாள்.
“எனக்கும் தெரியும் அவன் கிட்ட ஒன்னும் ஸ்பெஷல்லாம் இல்லை..பட் நான் அவனை அடைஞ்சே ஆகனும் இல்லைனா அந்த ஸ்ரீகிட்ட நான் தோத்துப் போயிருவேன்.. இந்த சிந்தியா யார்கிட்டயும் தோற்க பிறந்தவ இல்லை ரம்ஸ்” என சிந்தியா குரலில் வெறியுடன் கூற,
“இதென்னடி புதுக்கதை?? ஸ்ரீ எங்க இங்க வந்தா??இவ்ளோ நாளா என் கிட்ட ஹரியை லவ் பண்றேன்னு தான சொன்ன” என ரம்யா புரியாமல் குழம்ப,
“உனக்கு எல்லாத்தையும் முதல்ல இருந்து சொல்லனும் ரம்ஸ்..எனக்கு முதன்முதலா ஹரியை பார்த்ததும் ஒரு ஸ்பார்க்..அதான் ஸ்ரீகிட்ட சொல்லி லவ்லெட்டர் கொடுத்தேன்..ஆனா அவன் பேசாததும் எனக்குள்ள இருந்த ஈகோ அந்த ஸ்பார்க்கை லவ்வா மாத்துச்சு.. அப்பறம் ஸ்கூல் ஓப்பனானதும் ஸ்ரீகிட்ட கேட்டா அவ எவ்ளோ தைரியமா என்னையே திட்டினதும் இல்லாம அவனுக்கு நான் தான் பொண்டாட்டி உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோன்னு சவால் விடுவா..என் முன்னாடி சுண்டு விரலை நீட்டுனா கூட கையைவே எடுத்துருவேன்..என் கிட்டையே சவால் விட்ட அவ நிம்மதியா இருக்க கூடாதுன்னு அன்னைக்கு முடிவு பண்ணேன்.. அவ நிம்மதியை கெடுக்குற ஒரே விஷயம், அவளோட வீக் பாயின்ட் ஹரி மட்டும் தான்..அதான் அவனை வச்சு அவளை அணு அணுவா சித்ரவதை பண்ண போறேன்” என கூறிவிட்டு அவள் வெறிகொண்டவள் போல் சிரிக்க
ரம்யாவிற்கே அவள் சிரிப்பு நடுக்கத்தைக் கொடுத்தது ..”என்ன டி சொல்ற ?? அப்போ அந்த ஹரியை நீ லவ் பண்ணலையா??” என அவள் கேட்க,
“என் அழகுக்கு நான் அவனை லவ் வேற பண்ணுவேன்னு நினைக்கிறயா?? குட் ஜோக்..என்னோட டார்கெட் ஸ்ரீ மட்டும் தான்..ஹரியை லவ் பண்ண வச்சு அவனை கல்யாணம் பண்ணி தினமும் அவனை நான் பண்ற சித்ரவதையில இவ ரத்தக் கண்ணீர் வடிக்கனும்..அதுக்காக தான் அந்த நொண்டி சந்துகிட்ட ரெண்டு வருஷமா நல்லவ மாதிரி வேஷம் போட்டு அவளோட சொந்தக்கதை சோகக் கதையெல்லாம் கேட்டு சகிச்சுக்கிட்டு கேவலம் அவளுக்கெல்லாம் என் கையால ஊட்டி விட்டேன்..அன்னைக்கு போய் என் கையை எவ்ளோ நேரம் டெட்டால் ஊத்தி கழுவுனேன் தெரியுமா??” என அருவெறுப்புடன் சிந்தியா கூற,
ரம்யாவே ஒரு நிமிடம் இவளின் இந்த பலியுணர்ச்சியைக் கண்டு ஆடித் தான் போனாள்,
மீண்டும் சிந்தியாவே தொடர்ந்தாள்,”இது எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு பொறுமையா போனதுக்கு காரணம் ஸ்ரீ..அவளை கதற வைக்கனும் அது மட்டும் தான் என் மனசுல இருந்துச்சு..ஆனா இந்த ஸ்ரீ இந்த சந்து கூட பேசலைனாலும் சும்மா சொல்லக்கூடாது உள்ள அவ மேல அம்புட்டு அக்கறை தான்..நான் அவ கூட பேசுறேன்னு தெரிஞ்சவுடனேயே என்னைக் கூப்பிட்டு பல முறை திட்டுனவ, நான் மாறலைனதும் சந்துவையே கூப்பிட்டு அட்வைஸ் பண்றா..நான் சும்மா இருப்பேனா இதை பயன்படுத்தி அந்த ஸ்ரீயைப் பத்தி அந்த லூசுகிட்ட தப்புத் தப்பா சொன்னா அதுவும் நம்புது.. இதுல கொடுமை என்னான்னா அந்த ஸ்ரீ அவ கூட பேசலைனாலும் அவளுக்கு ஒன்னுனா துடிதுடிச்சு போயிருறா..ஒரு நாள் அந்த சந்துவை ஒரு பையன் கிண்டல் பண்ணிட்டான்னு அவனை ஸ்ரீ அவங்க கேங்கோட போய் அடிச்சு பிரின்சிபல் வரைக்கும்லாம் போனா..ஆனா இந்த சந்து லூசுக்கு இது எதுவுமே புரியாம போனது எனக்கு வசதியா போச்சு.. நான் சொன்னதை நம்பி அந்த ஸ்ரீயை வில்லியா பார்க்குறவ என்னை அண்ணியா பார்க்குறா… கடைசில இன்னைக்கு எனக்காக அவங்க அண்ணன்கிட்டயும் பேசிட்டா இனிமேல் தான் என்னோட மெய்ன் ஆட்டமே இருக்கு ” எனக் கூறியவளின் குரலில் இருந்த பேதத்தை உணர்ந்து கொண்ட ரம்யாவிற்கு கிலி பிடித்துக் கொண்டது..
“அதான் உனக்காக அவ பேசிட்டாலே இனி என்ன செய்யப் போற?” என அவள் பயத்துடன் கேட்க,
“இனிமேல் தான் எல்லாமே பண்ண போறேன் .. ஸ்ரீயோட வீக்னெஸ் ஹரி, ஹரியோட வீக்னெஸ் சந்து..சோ முதல்ல சந்துவை போட்டுத் தள்ளிட்டு அந்த பழியை தூக்கி ஸ்ரீ மேல போட்டா கண்டிப்பா ஹரி அவளை வெறுத்துருவான், அதுலயே ஸ்ரீ பாதி செத்துருவா.. அடுத்து ஹரியை நான் லவ் பண்ணி தினமும் நான் படுத்துற கொடுமையை பார்த்து மீதி செத்துப்போன ஸ்ரீக்கு கடைசி தண்டனையா அந்த ஹரியையும் அவ கண்ணு முன்னாடியே கொன்னு அவ கதறுததை ஆசை தீர கேட்டா தான் ரெண்டு வருஷமா எனக்குள்ள எரிஞ்சுகிட்டு இருக்க வெறி அடங்கும்” என அவள் கூற,
ரம்யாவிற்கு உதறல் எடுத்தது, ஒரு பதினெட்டு வயது பெண்ணிற்குள் இவ்வளவு வெறியா?? என பயந்து போனவள் ,”அ..அப்பா கூப்பி..டுறாரு பாய்” என போனை படக்கென்று கட் செய்து விட்டாள்.
ஹரி பதில் கூறாமல் சென்றதில் அழுது கரைந்த ஸ்ரீ, பின் தன்னை தேற்றிக் கொண்டு ,’அதான் அவன் அப்பறம் பேசுறேன்னு சொல்லிருக்கான்ல அப்போ சொல்லுவான்’ என மனதை தேற்றிக் கொண்டவள் எழுந்து வீட்டிற்கு நடை போட, அப்போது மோட்டார் ரூமிற்கு பின்னாலிருந்து வந்த பேச்சுக் குரலில் அங்கேயே தேங்கினாள்.
யாரென்று எட்டிப்பார்க்க அங்கு நின்ற சிந்தியாவைக் கண்டு அதிர்ந்தாள் என்றால் , அடுத்து அவள் கூறிய விஷயங்களைக் கேட்டு கோபத்தின் உச்சிக்கிச் சென்றாள்.
சிந்தியா பேசி முடித்துவிட்டுத் திரும்ப , அங்கு காளி அவதாரம் எடுத்த நின்ற ஸ்ரீயைக் கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் மறுநிமிடமே தன்னை சரிபடுத்திக் கொண்டு அவளை நோக்கி எள்ளல் புன்னகையை சிந்த,
ஸ்ரீயின் கோபம் கரையை உடைத்துக் கொண்டு வெளியே வர, அதன் விளைவாக அவள் கன்னத்தில் பளார் என ஓங்கி ஒரு அரை விட்டிருந்தாள்.
அவள் அடிப்பாள் என எதிர்பார்க்காத சிந்தியா, தடுமாறி அப்படியே கீழே சரிய அங்கிருந்த கல் அவள் நெற்றியை பதம் பார்த்தது.
அவளை எரித்து விடும் பார்வை பார்த்த ஸ்ரீ ,”த்தூ நீயெல்லாம் ஒரு மனுஷியா?? உன்னை நம்பி பாசத்தை காட்டின பொண்ணையே கொல்லுவேன்னு சொல்றதுக்கு வெட்கமா இல்லை… எவ்ளோ தைரியம் இருந்தா என் ஹரியை கொல்லுவேன்னு சொல்லுவ?? அப்படி நினைச்சா கூட நான் யாரையும் சும்மா விட மாட்டேன்… அவனை என்ன உன் வீட்டு வேலைக்காரன்னு நினைச்சியா?? நீ லவ் பண்ணுன்னு சொன்னா அவன் பண்ணிருவானா??? அவன் என் உயிர் டி.. என்னை விட்டு வேற பொண்ணை கனவுல கூட நினைக்க மாட்டான்.. இன்னொரு முறை எங்க சந்துவையோ இல்லை என் ஹரியையோ ஏதாவது பண்ணனும்னு நினைச்சா கூட உன்னை கொன்னுட்டு ஜெயிலுக்கு போய்ருவேன்.. ஜாக்கிரதை ” என எச்சரித்தவள் ,
இன்னும் கோபம் அடங்காமல் போக, அங்கு மாட்டிற்கு வைத்திருக்கும் கழனி தண்ணீரை எடுத்து அவள் மண்டையில் மொத்தமாக கவிழ்த்துவிட்டு ,
“இப்படியே எந்திரிச்சு உங்க வீட்டுக்கு போ..இந்த அழகை வச்சுகிட்டு தான ஓவரா ஆடுற..உன் அம்மா உன்னோட இந்த அழகை பார்த்து திருஷ்டி சுத்தி போடட்டும்” என கூறியவள் மீண்டும் ஒரு முறை எச்சரித்து விட்டே அங்கிருந்து கிளம்பினாள்.
ஸ்ரீ அவளை திட்டிவிட்டு உச்சக்கட்ட கோபத்துடன் வீட்டிற்குள் நுழைய, அதே சமயம் சந்து புத்தகத்திற்குள் மறைத்து வைத்த சிந்தியாவின் ஓவியத்தைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தாள்.
இதைக் கண்ட ஸ்ரீயின் கோபம் வெடித்துச் சிதற, இவளின் அறியாமையை பயன்படுத்தி அங்கு ஒருத்தி இவளின் உயிரையும் அவளின் உயிரையும்(ஹரி) பறிக்க திட்டம் போட, இவளோ அவளைப் போய் ரசித்துக் கொண்டிருக்கிறாளே என்ற கோபத்தில் தான் என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோம் எனத் தெரியாமலே வார்த்தைகளை சிதற விட்டிருந்தாள் ஸ்ரீ.
அன்று மனதில் ஸ்ரீயை பலி வாங்க வேண்டும் என்ற வெறி பல்மடங்கு பெருக, சிந்தியா அன்று முடிவெடுத்தாள் என்று இருந்தாலும் ஸ்ரீயின் முடிவு அவள் கையில் தான் என..
அதன் பின் சில குடும்ப பிரச்சனைகளால் சென்னைக்கு அவள் இடம் மாறி வந்து விட, அதன் பின்னும் தந்தைக்கு பல பிரச்சனைகள் வந்துவிட்டதால் ஸ்ரீயைப் பழிவாங்கும் திட்டத்தை இத்தனை வருடமாக ஒத்திப் போட்டிருந்தவள், இப்போது மீன் தானாக தன் வலையில் வந்து விழுந்தது போல் அவள் கண்ணில் வந்து விழுந்தது ஸ்ரீயின் புகைப்படம்.
இத்தனை வருடங்களாக மனதில் அடக்கி வைத்த வெறி இப்போது வெளியே வர, கண்களில் பளபளப்புடன் ,” டாட் எனக்கு இவ இப்போவே வேணும்” என்றவளின் குரலில் இருந்த வெறியைக் கண்டு அவளின் தந்தையே ஒரு நிமிடம் ஆடிப் போனார்.
இருந்தும் மகள் கேட்டு வாங்கித் தராமல் இருக்க முடியுமா?? உடனே தன் ஆட்களை அனுப்பி ஸ்ரீயை கடத்தி வர உத்தரவிட்டபின் மகளின் முகத்தில் தோன்றிய புன்னகையைக் கண்டே அவர் மனம் அமைதியடைந்தது…
இவர்கள் கையில் மாட்டினால் இனி ஸ்ரீயின் நிலை????
அன்றே வருணிடம் ஸ்ரீ திருமணம் ஆனவள் என்ற உண்மையைக் கூறியிருந்தால், அவன் வீட்டாரிடம் அவளைப் பற்றி கூறியிருக்க மாட்டான், வருணின் மீது அக்கறையில்லாத சிந்தியாவும் அவளைக் காணும் ஆர்வத்தில் புகைப்படத்தைப் பார்த்திருக்க மாட்டாள்.. இந்த கடத்தல் திட்டமும் நிகழ்ந்திருக்காது… இது தான் நடக்க வேண்டும் என விதி தீர்மாணித்து விட்ட பின் மதி கொண்ட மனிதனால் மட்டும் அதை மாற்ற முடியுமா???


மின்னலே என் நெஞ்சிலே - பிரியதர்ஷினி S