
அத்தியாயம் 2
“க்ரிஷ்” என ஸ்ரீயின் அதரங்கள் தானாக முணுமுணுக்க, கண்ணீர் கண்களில் இருந்து வெளியேற தயாராக இருந்தது. தன்னை சுதாரித்துக் கொண்ட ஸ்ரீ, முயன்று தன் கண்ணீரை கட்டுப்படுத்தினாள்.
பாவம் கண்ணீரை கட்டுப்படுத்த முடிந்த அந்த பேதையால் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னே அவள் காண்பது அவள் உயிரின் சரிபாதியை அல்லவா!!! அவளை கேட்காமலே அவள் மனது பழைய நாட்களை தேடி பயணித்தது.
“ஸ்ரீ ஹேய் எருமை!! டீயை கொண்டு வராம கையில வச்சு நின்னுக்கிட்டே கனா கண்டுட்டு இருக்க” என நந்து அவளை உலுக்கினாள். அவள் உலுக்கியதில் தன் சிந்தனையில் இருந்து கலைந்த ஸ்ரீ அவளை பாவமாக நோக்க,
அதற்குள் அவர்கள் அருகில் வந்திருந்தான் அவன்.
வந்தவன் ஸ்ரீயை திரும்பியும் பாராமல் நந்துவிடம் திரும்பி, “ஹாய் நந்து மா !! எப்படி இருக்க? வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க? படிப்புலாம் எப்படி போகுது?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்க,
ஏற்கனவே தன்னை அவன் கண்டுகொள்ளவில்லை என்று கடுப்பில் இருந்த ஸ்ரீயோ, நந்துவை முந்திகொண்டு “நந்து முதல்ல அவங்க எதுக்கு நம்ம காலேஜுக்கு வந்தாங்கன்னு கேளுடி” என எகிறினாள்.
அவளை அடக்கிய நந்து, “ஹாய் ஹரி அண்ணா!! எல்லாரும் நல்லா இருக்கோம். படிப்பு அது ஒரு சைட்ல ஓடிட்டு இருக்குண்ணா. நீங்க, அம்மா, அப்பா, ஆதிக்கா எல்லாரும் எப்படி இருக்கீங்கணா?” என்று உண்மையான பாசத்துடன் வினவினாள்.
அவள் கேட்டதற்கு உதட்டில் நிறைந்த சிறு புன்னகையுடன், “அனைவரும் நலம் தங்கச்சி” என்று கூறினான்.
அவன் சிரித்த முகத்தையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள் ஸ்ரீ. பின்னே முழுதாக நான்கு வருடம் கழித்து அவனை பார்க்கிறாள். கடைசியாக அவனை பார்த்தபோது அவனுடைய கோப முகத்தை தான் கண்டாள்.
ஒரு சிலருக்கு மட்டுமே அவர்கள் சிரிக்கும் போது கண்களும் சேர்ந்து சிரிக்கும். ஹரியின் சிரிப்பும் அதே வகையை சேர்ந்தது. அவனுடைய சிரிப்புக்கு மயங்காத ஆட்களே கிடையாது.
மயக்கும் மாயக்கண்ணணின் சிரிப்பிற்கு சொந்தக்காரன் அவன். அவன் சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழியில் விழுந்து தங்களின் மனதை தொலைத்த மங்கைகள் ஏராளம்.
அவள் தன்னை சைட் அடிப்பதை ஓரக்கண்ணால் கண்ட ஹரி மனதிற்குள் சிரித்துக்கொண்டே, “நந்து இது கவர்மென்ட் காலேஜ் அரசாங்க சொத்து மா யார் வேணாலும் வர உரிமை இருக்கு, ஆனா என் முகம் என் உரிமை சில பேர் பார்த்து பார்த்தே என் முகத்தை கரைச்சிருவாங்க போலயே மா!!” என படு நக்கலாக கூறினான்.
தன்னை கண்டுகொண்டானே என்று அசட்டு சிரிப்பை உதிர்த்த ஸ்ரீ, வேறு புறம் திரும்பி கொண்டாள். மனதிற்குள் ‘கேடி பார்க்காத மாதிரி நடிச்சிட்டு கடைசில நான் சைட் அடிச்சதை கண்டு பிடிச்சுட்டானே’ என்று கமெண்ட் கொடுத்துக்கொண்டிருந்தாள் .
அதற்கு, “நீ வாய்ல கொசு போறது கூட தெரியாம பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி ஆஆஆன்னு அவனை பார்த்தா அப்பறம் அவனுக்கு தெரியாதா” என கரெக்ட் டைமில் ஆஜரானது வேற யாருமில்லை சாட்சாத் அவளது மனசாட்சியே தான். ’உன்னை யாராச்சும் இப்போ கூப்பிட்டாங்களா ஒழுங்கா போய் உன் வேலைய போய் பாரு’ என அதன் மண்டையில் ஒரு போடு போட்டு அடக்கினாள் ஸ்ரீ. மண்டையை தேய்த்துக்கொண்டு ‘நல்லதுக்கே காலமில்லை பா’ என புலம்பிக்கொண்டே மனசாட்சி தன்னுடைய வேலையை பார்க்க சென்றது(அதாங்க தூங்குறது).
இவள் தனக்குள்ளே பேசிக்கொண்ட நேரத்தில் ஹரியும் நந்துவும் பொதுவாக சில விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர். ‘அய்யோ நம்ம மனசு கூட பேசிட்டு இருந்த கேப்ல இதுங்க என்ன பேசுச்சுங்கன்னு நோட் பண்ணாம விட்டுட்டோமே ‘ என நொந்து கொண்டு அவர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தாள்.
‘பாடத்தை இப்படி ஒரு நாளாச்சும் கவனிச்சா உறுப்பட்டிருப்ப டி தங்கம்’ என மீண்டும் மனசாட்சி தனது வேலையை செவ்வனே செய்தது.
அதற்கு கமெண்ட் குடுக்க போகும் போது, “என்ன அண்ணா இவ்ளோ தூரம் காலேஜூக்குலாம் வந்திருக்கிங்க ஏதாச்சும் முக்கியமான விசயமா அண்ணா?” என நந்து ஹரியிடம் வினவினாள்.
‘அப்பாடி இப்பவாச்சும் உனக்கு கேட்கணும்னு தோணுச்சே என் ராசாத்தி’ என மனதிற்குள் நந்துவை வாழ்த்தி(வறுத்துக்) கொண்டிருந்தாள் ஸ்ரீ.
“உன்னோட ப்ரண்டை ஊருக்கு கூட்டிட்டு போக வந்தேன்.. அவங்களை போய் போறதுக்கு தேவையான எல்லாத்தையும் எடுத்திட்டு ஒரு வாரம் லீவ் சொல்லிட்டு சீக்கிரம் வர சொல்லுமா” என நந்துவிடம் கூறினான்.
அவனோடு செல்ல போகிறோம் என்று ஒரு பக்கம் மகிழ்ச்சியில் திளைத்தாலும் மறு நிமிடமே அவன் வந்ததிலிருந்து தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனும் உண்மை மனதை சுட்டது.
மேலும் அவன் தன்னை யாரோ மூன்றாம் மனிதரைப் போல் மரியாதையாய் விழிப்பதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவனுடைய “லட்டுக்குட்டி” என்னும் அழைப்பிற்காக மனது மிகவும் ஏங்கியது.
தன் மனதை மறைத்துக்கொண்டு பழைய ஸ்ரீயாக மாறி அவனை வம்பிழுக்கும் நோக்கத்தோடு, “நீங்க சொல்றதை உண்மைனு நம்பி நான் எப்படி உங்க கூட வர்றது? நீங்க என்னை எங்கயாச்சும் கடத்திட்டு போக கூட இப்படி சொல்லிருக்கலாம்ல” என வழக்கம் போல் வாயை விட்டாள் .
அவள் சொன்னதை கேட்டு நந்து அவளை முறைத்து ஏதோ சொல்ல வருவதற்குள் அவளை தடுத்த ஹரி கசப்பான முறுவலுடன், “அவங்க என்னைக்கு என்ன நம்பியிருக்காங்க இப்போ நம்ப” என்று வலியோடு மொழிந்தவன், அவள் மறுப்பதற்குள் ஸ்ரீயின் அன்னைக்கு அழைத்திருந்தான். மறுபக்கம் அழைப்பை எடுத்தவுடன்,
“ஹலோ அத்தை நான் வந்துட்டேன்…..”
“ம் பார்த்துட்டேன் அத்தை..”
“பக்கத்துல தான் இருக்காங்க நீங்களே சொல்லுங்க” என கூறி அழைபேசியை அவளிடம் கொடுத்தான்.
தயங்கி கொண்டே வாங்கிய ஸ்ரீ, “ஹலோ அம்மா”
“உடனே ஹரி கூட கிளம்பி ஊருக்கு வா இங்க வந்த பின்னாடி பேசிக்கலாம்” என அவள் பேச வாய்ப்பளிக்காமல் போனை கட் செய்திருந்தார் சாருமதி.
போனையே பார்த்து கொண்டிருந்த ஸ்ரீ அவனுடைய கைபேசி என்ற நினைப்பு வந்ததும் அவனிடம் அதை குடுத்தாள். அதை வாங்கியவன் ‘இப்போ நம்பிக்கை வந்திருச்சா’ என வலியோடு ஆழமாக ஒரு பார்வை பார்த்தான்.
அந்த பார்வை அவள் உயிரை ஊடுறிவிச் செல்ல, அவன் கண்களில் தெரிந்த வலி அவளை உயிரோடு கொன்றது. இவை அனைத்திற்கும் தான் தான் காரணம் என்ற கசப்பான உண்மை முகத்தில் அரைந்தது.
அவள் சிந்தனையை தடை செய்யும் வகையில், “நந்து சீக்கிரம் உன் ப்ரண்டை கிளம்பி வர சொல்லு.. இப்போ கிளம்புனா தான் நைட்க்குள்ள போக முடியும் நான் வெளிய கார்ல வெய்ட் பண்றேன்” என்று நந்துவிடம் கூறிவிட்டு அவளின் பதிலை எதிர்பாராமல் சென்று விட்டான்.
அவன் சென்றதும் ஸ்ரீயிடம் திரும்பிய நந்து, “ஹே அரைலூசு!! உன் மூளைய என்ன முனியாண்டி விலாஸ்ல பிரியாணிக்கு அடகு வச்சுட்டியா? எருமை அண்ணாவ ஏன்டி நம்பலைன்னு சொன்ன?? அவர் எவ்ளோ ஃபீல் பண்ணுவாரு!! அவரே நாலு வருசம் கழிச்சு இப்போ தான் கொஞ்சமாச்சும் மலை இறங்கி வந்தாரு. ஆனா இப்படி கெடுத்துட்டயே டி” என ஆற்றாமையில் பொரிந்து தள்ளினாள்.
ஏற்கனவே அவன் தன்னிடம் பேசாமல் அவளிடம் மட்டும் பேசியதில் கடுப்பில் இருந்த ஸ்ரீ, நந்து தன்னையே திட்டவும் கொலைவெறி ஆனாள். “வாயை மூடுடி என்ன ஓவரா உங்க நொண்ணனுக்கு சப்போர்ட் பண்ற . நான் பேசினது மட்டும் தான் உனக்கு தெரியும் இல்ல உங்க அண்ணன் பண்ணது எதுவுமே தெரியாதுல அவன் வந்ததுல இருந்து ஒரு தடவையாச்சும் என்னை பார்க்க மாட்டானா என்கிட்ட திட்ட ஆச்சும் பேச மாட்டானானு அவனையே வெட்கம் கெட்டு பார்த்துட்டே இருந்தேன்ல நான் லூசு தான். நான் பிறந்ததுல இருந்து என் கூடவே இருக்கது நீங்க ரெண்டு பேரும் தான். ஆனால் உங்களுக்கே என்னைப் புரியலைல. அவனுக்கு தான் நான் வேண்டாதவளா போய்ட்டேன் இப்போ உனக்கும் நான் முக்கியமில்லைல” என்று கோபத்தில் தொடங்கி அழுகையில் முடித்தாள்.
அவள் அழுததும் பதறிய நந்து அவளை அணைத்து “ஹேய் ஸ்ரீ குட்டி அழாதடா செல்லம். எனக்கு என்னைக்குமே நீ தான்டா முக்கியம். அண்ணாவும் நீயும் இப்படி பிரிஞ்சு இருக்கிங்கன்ற ஆதங்கத்துல பேசிட்டேன் டா. சாரிடா செல்லம். இனிமேல் உன்ன எதுவும் சொல்ல மாட்டேன்டா. அழாம வா நம்ம போய் கிளம்பலாம்” என கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்தாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் தன்னை நிலை படுத்திக் கொண்ட ஸ்ரீ , நந்துவை பார்த்து கண்ணடித்து, “நீ என்னை இப்படி கட்டிப்பிடிச்சுட்டு கொஞ்சுனதை மட்டும் அருண் பார்த்திருந்தான் என்னை முறைச்சுப் பார்த்தே கொன்றுப்பான்” என சீண்டினாள்.
அவள் தனக்காக வேதனையை மறைத்து பேச்சை மாற்றுகிறாள் என புரிந்து கொண்ட நந்து, “போடி எருமை உனக்கு போய் பாவம் பார்த்தேன் பாரு என் புத்திய போன வாரம் வாங்குன பாட்டா செருப்பால தான் அடிக்கணும். சரி வா போய் எடுத்து வச்சு கிளம்பலாம் அப்பறம் அண்ணா வச்சு செஞ்சுருவாங்க” என பேசிக்கொண்டே இருவரும் தங்கள் அறைக்கு சென்றனர்.
அவர்களிடம் கெத்தாக விடைபெற்று சென்ற ஹரி, கொஞ்ச தூரம் சென்று ஓர் மரத்தின் பின் ஒளிந்து கொண்டு இவளின் ஒவ்வொரு அசைவை தான் ரசித்துக் கொண்டிருந்தான்.
அவள் அழுததை பார்த்ததும் எல்லாம் தன்னால் தான் என தன்னையே நொந்து கொண்டவன், அவள் அழுகையை காண சகிக்காதவனாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்து தன் Audiஐ நோக்கி சென்றான்.
நம்ம ஹீரோயின் ஆடி அசைஞ்சு வரதுக்குள்ள ஹீரோவ பற்றி தெரிஞ்சுக்கலாமா.
நம்ம ஹீரோவோட முழு பெயர் “ஹரிஷ் கிருஷ்ணா”. 6 அடி உயரம். தினமும் உடற்பயிற்சி செய்கின்றவன் என்பதை காட்டும் கட்டுக்கோப்பான உடலமைப்பு, மாநிறம், கன்னக்குழி சிரிப்பு இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
சென்னைல SD solutionsனு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியை நான்கு வருடமாக திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் வல்லவன். “மதிவாணன்-கலைவாணி” தம்பதியின் சீமந்த புத்திரன். ஆதிராவின் பாசத்திற்குரிய அண்ணன். தன்னை சுற்றி இருப்பவர்களை சந்தோஷமாக வைத்திருக்கும் திறமை கொண்டவன்.
அவனின் அழகு, திறமை, பேச்சு, சிரிப்பால் பல பெண்களின் தூக்கத்தை திருடிய கள்வன். மொத்தத்தில் தன் பேரை போலவே குணத்தையும் கொண்ட மாயக்கண்ணன்.
தன்னுடைய அறையில் யோசனையில் அமர்ந்திருந்த ஸ்ரீயை உலுக்கிய நந்து “பக்கி உனக்காக எல்லாத்தையும் நானே எடுத்து வச்சு லீவ் கூட சொல்லிட்டேன்.. நீ என்னடானா வந்ததுல இருந்து விட்டத்தை பார்த்து யோசிச்சுட்டே இருக்க?? என்ன புதுசா சூரியன்ல உக்கார்ந்து எப்படி கூல் டிரிங்க்ஸ் குடிக்கலாம்னு ஆராய்ச்சி பண்றியா???” என அவள் மண்டையில் கொட்டினாள்.
மண்டையை தேய்த்துக்கொண்டே அவளை முறைத்த ஸ்ரீ, ” மங்கி ஏண்டி கொட்டுன ? நான் அவனை பார்த்த சந்தோஷத்துல எதுக்கு ஊருக்கு போறோம்னு கேக்கவே இல்லை அம்மா கூட எதுவுமே சொல்லலை அதான் என்னவா இருக்கும்னு மூளையை கசக்கி யோசிச்சிட்டு இருக்கேன்” என்று கூறினாள்.
“செல்லம் மண்டைல ஏதாச்சும் மசாலா இருக்கவங்க தான் அதெல்லாம் பண்ணுவாங்க.. நீ ஏன்டா அதெல்லாம் பண்ற” என அவளை கலாய்த்தாள் நந்து.
அவளை அடிக்க துரத்திய ஸ்ரீயை தடுத்து நிறுத்தியவள், “நம்ம பஞ்சாயத்தை அப்பறம் வச்சுக்கலாம் நீ கிளம்பு அண்ணா வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க” என அவளை கிளப்பிக் கொண்டு வெளியே வந்தாள் நந்து.
தங்களுக்குள் பேசிக்கொண்டே கல்லூரி வாயில் அருகே சென்று கொண்டிருந்தவர்களை வழி மறித்து வந்து நின்றான் அந்த கல்லூரியின் கனவுக்கண்ணன் “வருண்”(நம்ம ஸ்ரீயோட கேங்குக்கு மட்டும் காமெடி பீஸ்).
வருணுக்கு ஸ்ரீ மேல லவ்வுன்னா லவ்வு உங்க வீட்டு லவ்வு, எங்க வீட்டு லவ்வு இல்ல ங்கொக்கா மக்கா கன்னாபின்னா லவ்வுங்க. அவனும் இந்த நாலு வருசமா எப்படி எப்படியோ சொல்லி பார்த்துட்டான்.
பாவம் ஒன்னுமே செட் ஆகலை. படம் எடுக்குறவங்க கூட இவன் அளவுக்கு திங்க் பண்ணிருக்க மாட்டாங்கபா. இன்னைக்கு என்ன ப்ளானோட வந்திருக்கானோ !!! வாங்க போய் பார்ப்போம்.
“ஹாய் ஸ்ரீ எப்படி இருக்க என்னமா இப்படி இளைச்சுப்போய்ட்ட ?? நந்து எல்லா சாப்பாடையும் நீயே சாப்பிடாம இவளுக்கும் கொடு” என அப்பட்டமாக வழிந்தான். அவள் முறைப்பதை கூட காதலாக பார்ப்பது போல் எண்ணிக் கொண்ட வருண் வானத்தில் பறந்து கொண்டிருந்தான்.
அவனை பார்த்து கடுப்பான ஸ்ரீ, ‘பார்க்க வேண்டியவனோட கடைக்கண் பார்வை கூட கிடைக்கலை.. இவன் விட்டா பார்த்தே என்ன முழுங்கி ஏப்பம் விட்ருவான் போல கண்ணுல கொள்ளிக்கட்டைய வைக்க. ஏழுமலையனே இப்படி என்ன கோர்த்து விட்டுட்டு வேடிக்கை பார்க்குறயே இது நியாயமா!!’ என மனதிற்குள் குமுறிக்கொண்டு வெளியே, “என்ன வேணும் வருண்?? நான் வெளிய போய்ட்டு இருக்கேன் வழிய விடு” என கடுப்பாக கூறினாள்.
அதுக்கெல்லாம் அசந்துட்டா அது வருண் இல்லையே . “எங்க போற ஸ்ரீ நான் வேணா டிராப் பண்ணவா??” என வெக்கமே இல்லாமல் வழிந்தான். “ஒன்னும் தேவையில்லை நாங்க போய்க்கிறோம் நீ எதுக்கு வந்தியோ அதை சொல்லிட்டு கிளம்பு ” என நந்து சிடுசிடுத்தாள்.
அவளை முறைத்துக்கொண்டே ஸ்ரீயிடம், “உனக்கு கவிதை பிடிக்கும்னு நைட் எல்லாம் நானே யோசிச்சி கவிதை எழுதினேன் கேட்டுட்டு போ ஸ்ரீ!! பிளீஸ்” என கூறி தன்னுடைய காதல் கவிதையை(கன்றாவி கவிதை) எடுத்து விட்டான்
‘அன்பே ஆருயிரே,
உன் விழிகள் எனும் கடலில்
மீள முடியாது என தெரிந்தும்
விருப்பத்தோடே விழுந்தேன்!!
என்னை உன்னில் தொலைத்த எனக்கு
என்றும் நிலைத்த முகவரி நீ!!
என் மனதை கொள்ளை கொண்ட தேவதையே
மனதை திருடிய குற்றத்திற்காக என் இதயத்தில்
சிறையெடுக்க காத்திருக்கிறேன்
நெஞ்சத்தில் தஞ்சம் கொள்ள
ஓடோடி வா என் வெண்ணிலவே!!!!’
எப்படி இருக்கு ஸ்ரீ??” என ஆவலாக அவளை பார்த்து கேட்டான்.
முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், “இப்போ நான் போகலாமா வருண் எனக்கு டைம் ஆச்சு ” எனக் கேட்டாள். உள்ளே வருத்தமாக இருந்தாலும் வெளியே புன்னகையோடு ” பார்த்து போ ஸ்ரீ பத்திரம்” என்று கூறி அவள் செல்வதற்கு வழி விட்டான் அந்த காதல் மன்னன்.
அவனை தாண்டி வந்ததும் நீண்ட பெருமூச்சை விட்ட ஸ்ரீ நந்துவை பார்த்து புன்னகைத்தாள். அதற்குள் அவர்கள் வருவதை தூரத்திலே கண்ட ஹரி காரை அவர்கள் அருகில் கொண்டு வந்து நிறுத்தினான்.
“ஹேய் நந்து எல்லார்கிட்டயும் சொல்லிரு அங்க போய்ட்டு அவளுங்க கிட்ட பேசுறேன்னு சொல்லிரு பாய் செல்லம் பார்த்துக்கோ” எனக் கூறி அவளை அணைத்தாள். நந்து அவளிடம் ஆயிரம் அறிவுரைகளை வழங்கி அவளிடமும் ஹரியிடமும் விடைபெற்றாள்.
இருவரின் இந்த பயணம் அவர்கள் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வருமா??? விதி அவர்களுக்கு என்ன வைத்திருக்கிறது ??? பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
1
+1

