
அத்தியாயம் 15
ஒரு வழியாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என வரவேற்பு முடிந்து அனைவரும் வீடு திரும்ப இரவு 11 மணி ஆகி விட்டது.
வீட்டில் அவர்கள் நுழையும் போது வீட்டின் உள்ளிருந்து அவர்களின் குடும்ப மருத்துவர் மாதவன் வெளியேறிக் கொண்டிருந்தார்.
அவரைக் கண்டு அனைவரும் குழப்பம் கொள்ள, மதியழகன் அவரிடம் சென்று விசாரித்தார்.
“ஹேய் மாதவா!! இந்நேரத்துக்கு நீ இங்க வந்துருக்க என்னாச்சு??” என மதி யாருக்கும் உடம்பு சரியில்லையோ என பதட்டத்தோடு வினவினார்.
“ஹாய் மதி ரிசப்ஷன்லாம் நல்ல படியா முடிஞ்சுச்சா?? என்ன கார்த்திக் சொல்லாம கொல்லாம கல்யாணம் பண்ணிட்ட?? உங்க அப்பாக்கு கல்யாண செலவை மிச்சம் பண்ண நல்ல வேலை பார்த்திருக்க ..பொழைக்க தெரிஞ்ச பிள்ளை” என்று கூறி விட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை கேட்டது போல் இடி சிரிப்பு சிரிக்க ஆரம்பித்தார்.
அனைவரும் ‘இந்தாளு என்ன லூசா’ என்கிற திணுசில் அவரை பார்த்திருக்க ,’டேய் சொட்டை மண்டை எதுக்கு வந்தன்னு கேட்டா நீ என்னையா கோர்த்து விடுற இவங்களே இப்ப தான் ஏதோ கொஞ்சம் மலை இறங்கிருக்காங்க நீ வந்து ஏன்யா மறுபடியும் மலை ஏத்தி விடுற மவனே உன் புள்ளை கல்யாணத்து வந்து உனக்கு பேய் ஓட்றேன் பாரு’ என மனதில் அவரை கறுவிக் கொண்ட கார்த்திக் வெளியே சிரித்து மழுப்பினான்.
இந்தாளு இப்போதைக்கு சிரிக்கிறது நிறுத்த மாட்டான் என்று புரிந்த ஹரி,”டாக்டர் பார்த்து பார்த்து இந்த நேரத்துக்கு இப்படி சிரிச்சு தூங்கிட்டு இருக்கவங்களாம் பயந்து இங்க வந்துறப் போறங்க..இந்நேரத்துக்கு இங்க என்ன பண்ணுறீங்க ??” என கடுப்பாக கேட்டான்.
“ஆனாலும் ஹரி உனக்கு ரொம்ப குசும்பு…கோயம்புத்தூர்காரன்னு நிரூபிக்கிறயாக்கும்” என சொல்லிவிட்டு அதற்கும் சிரிக்க ஆரம்பித்தார்.
‘பைத்தியக்கார குடும்பத்துக்கு ஏத்த டாக்டரா தான் புடுச்சுருக்காங்க’ என விஜய் முனுமுனுக்க அருகில் இருந்த ஆதிரா “என்ன சொன்னீங்க” என முறைத்தாள்.
“ஹிஹி இந்த மாதிரி ரொம்ப நல்ல குடும்பத்துல வந்து வாக்கப்பட்டதுக்கு வடபழனி கோவிலுக்கு வாக்கிங்க்லயே வர்றதா வேண்டிக்கிட்டேன்” என மழுப்பினான்.
“அந்த பயம் இருக்கட்டும்” என கெத்தாக அவனிடம் கூறியவள் இந்த டாக்டர் இப்போதைக்கு ஒன்னும் சொல்ல மாட்டார் என புரிந்து கொண்டு அவள் கொட்டாவி விட்ட படியே வீட்டிற்குள் நுழைந்தாள்.
அப்போது அங்கே ஓடி வந்த காத்தாயி ,”அம்மாக்கு(பாட்டி) தான் மேலுக்கு முடியலையாம் எல்லாரும் ஓடியாங்க” என செய்தி வாசித்து விட்டு அங்கிருந்து சிட்டாகப் பறந்தார்.
பாட்டி என்ற சொல்லிலே வர்ஷூவை கூட வாசலில் விட்டு விட்டு வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் விரைவாக ஓடினான் கார்த்திக்.
அவனைத் தொடர்ந்து அனைவரும் பதட்டத்துடன் ஓட,
“Actually நான் வந்ததே பாட்டிக்கு ” என ஒருவழியாக சிரிப்பை நிறுத்து விட்டு பதில் சொல்ல நிமிர்ந்தவர் தன் முன் யாருமே இல்லாததைக் கண்டு திகைத்து,
பின் சமாளித்து கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதைதைப் போல் பந்தா பண்ணிக்கொண்டு தன் காரை நோக்கி சென்றார்.
பாட்டியின் அறையில், பாட்டி கட்டிலில் சோர்வாக கண்மூடி படுத்திருக்க அவர் அருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அவரையே பார்த்தபடி தாத்தா அமர்ந்திருந்தார்.
வேகமாக பாட்டியின் அறையில் நுழைந்த கார்த்திக்,பாட்டியின் அருகில் போய் அவர் கைகளை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டு,”பாட்டி என்னாச்சு உனக்கு எழுந்திரி என் கூட பேசு நான் பண்ணது தப்பு தான் வேணுனா நாலு அறை கூட விட்ரு ஆனால் பேசாம மட்டும் இருக்காத” என பற்றியிருந்த அவர் கரங்களால் தன் கன்னத்தில் அடித்துக் கொண்டான்(மெதுவாகத்தான்!!!).
அவன் கரங்களில் இருந்து தன்னுடயதை விடுவித்துக் கொண்ட பாட்டி முகத்தை திருப்பிக் கொண்டார்.
அதற்குள் குடும்பத்தார் அனைவரும் அறையில் குழுமி விட , பாட்டிக்கு என்னானது என அனைவரின் பதற்றக் குரல்களும் ஒரே சமயத்தில் வந்து விழுந்தது.
மெதுவாக தன் கண்களை பாட்டியின் மீதிருந்து விலக்கி அவர்களை நோக்கிய தாத்தா,”ஒன்னும் ஆகலை கல்யாண பரபரப்புல இரத்தக் கொதிப்பு மாத்திரை இரண்டு நாளா போடாததுனால லேசா மயக்கம் வந்திருச்சு அவ்ளோ தான் இப்போ மாதவன் வந்து ஊசி போட்டுட்டு போய்ருக்கான் ஒன்னும் பிரச்சனை இல்லை எதும் கவலைப்படாம எல்லாரும் போய் படுங்க” என பொதுவாக அனைவருக்கும் கூறினார்.
‘கார்த்திக்கோட கல்யாணம்தான் காரணம்னு டைரக்டா சொல்லாம இந்த தாத்தா நல்லா மழுப்புறாரு ..ஆனாலும் நீ கொடுத்து வச்சவன்டா நான் மட்டும் உன் தங்கச்சியை இப்படி கல்யாணம் பண்ணிட்டு வந்துருந்தா அன்னைக்கே எனக்கு சமாதி கட்டிருப்பானுங்க..உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு மச்சி ..நல்லா அனுபவி ராஜா அனுபவி’ என மனதிற்குள் புலம்பி தள்ளினான் விஜய்.
“என்னப்பா இது மண்டபத்துல இருந்து நீங்க முன்னாடி கிளம்புனப்பவே எனக்கு சந்தேகமா இருந்துச்சு அப்போவே சொல்லிருக்கலாம்ல நானும் வந்திருப்பேன்” என மதிவாணன் ஆற்றாமையோடு தன் தந்தையிடம் வினவினார்.
“ச்சு விடு மதி பெருசா ஒன்னும் இல்லை அதான் உங்க சந்தோஷத்தை கெடுக்க வேண்டாம்னு எதுவும் சொல்லலை..சரி 12 மணி ஆக போகுது எல்லாரும் போய் படுங்க” என விரட்டினார் தாத்தா.
பாட்டியிடம் நலம் விசாரித்துவிட்டு அனைவரும் தத்தம் அறைக்கு செல்ல ,ஹரியும் கார்த்திக்கும் மட்டும் அங்கேயே தேங்கினர்.
“உங்க ரெண்டு பேருக்கும் தனியா சொல்லனுமா போங்க போய் தூங்குங்க” என அவர்களிடம் காட்டமாக கூறினார் தாத்தா.
“இல்லை தாத்தா கொஞ்சம் பேசனும் கார்த்திக் ஏன் இந்த கல்யா..” என பாட்டியை கார்த்திக்குடன் பேச வைத்திடும் நோக்கில் ஹரி கூற வர கை நீட்டி அவனை தடுத்த தாத்தா ,”எந்தவொரு விளக்கமும் கொடுக்க வேண்டாம்னு அன்னைக்கே சொன்னதா ஞாபகம்..அவன் மேல யாருக்கும் கோவம் இல்லை வருத்தம் தான்..காலப்போக்குல அதுவே சரி ஆய்ரும் ..அதுனால எங்களை சமாதானப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காம உங்க வாழ்க்கையை அழகா வாழ பாருங்க..பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணா மட்டும் போதாது கடைசி வரை ஒத்துமையா வாழ்ந்து அவளை சந்தோஷமா வச்சுக்கணும்..போய் அதை பண்ணுங்க” என இருவரிடமும் கூறியவர் மீண்டும் தன் மனையாளின் அருகில் அமர்ந்து அவரின் மதிமுகத்தை பார்க்க ஆரம்பித்தார்.
வேறேதும் கூறாமல் இருவரும் பாட்டியை கவலையாக பார்த்துக் கொண்டே வெளியேறினர்.
அவர்கள் அகன்றதும் கண்களை திறந்து தன் கண்வனை நோக்கிய ரெங்கநாயகி,”நம்ம கார்த்திக் இப்படி பண்ணுவான்னு நான் கனவுல கூட நினைச்சு பார்க்கலைங்க..அவன் என் கிட்ட இவளை தான் கட்டிக்க போறேன்னு சொல்லிருந்தா ஊரையே கூட்டி திருவிழா மாதிரி ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வச்சிருப்பேனேங்க…இப்படி என் கிட்ட கூட சொல்லலைனா நான் அவனுக்கு தேவையில்லைனு தான அர்த்தம் ..அப்போ அவனுக்கு நான் வேணாமா” என தன் வயதை மறந்து சிறு குழந்தை போல் பாவமாக தன்னிடம் வினவிய மனைவியின் செய்கையில் கரைந்தவர் அதை மறைத்துக் கொண்டு,”நாயகி நீயா எதாச்சும் கற்பனை பண்ணிக்காத!! அவன் பிறந்ததுல இருந்து அவன் அம்மா கூட இருந்ததைவிட உன் கூட தான் அதிகம் இருந்திருக்கான் அப்படிபட்டவன் உன் கிட்ட கூட சொல்லாம இப்படி பண்ணிருக்கான்னா அது ஏதோ பெரிய விசயமா இருக்கலாம் நீ வருத்தப்படக் கூடாதுனு கூட சொல்லாம இருந்துருக்கலாம்..அதுக்காக உன் மேல அவனுக்கு பாசம் இல்லைன்னு ஆய்ருமா இப்போ கூட பாசமில்லாம தான் உனக்கு ஒன்னுனதும் பதறியடிச்சு ஓடி வந்தானா?..நீயா எதாச்சும் போட்டு மனசை குழப்பிகிட்டு உன் நிம்மதியையும் கெடுத்து அவன் கிட்ட பேசாமா அவன் நிம்மதியையும் கெடுக்காத..எல்லாத்தையும் மறந்துட்டு தூங்கு மா..நமக்கு உண்மை தெரிய வர்றப்போ தெரியட்டும்..எதையும் யோசிக்காம தூங்கு” என போர்வையை அவருக்கு போர்த்தி விட்டு விளக்கை அணைத்து விட்டு அவரும் கட்டிலின் மறுபக்கம் வந்து படுத்தார்.
தன் கணவன் சொன்னதை சிந்தித்த பாட்டி,’ஒருவேளை இவர் சொன்ன மாதிரி ஏதும் பெரிய பிரச்சனை இருக்குமோ..அய்யோ கடவுளே அவனுக்கு எதும் கஷ்டத்தை குடுத்துறாத எதுவாக இருந்தாலும் எங்களுக்கு கொடு தாங்கிக்கிறோம் அவன் பாவம் சின்னப்பிள்ளை(?)’ என கடவுளிடம் வேண்டிக்கொண்டே மருந்தின் வீரியத்தால் மெதுவாக உறங்க ஆரம்பித்தார்.
வெளியே வந்த கார்த்திக் ஹரியை பார்த்து ,”டேய் எருமை பாட்டிக்கிட்ட ஏன் டா உண்மையை சொல்ல போன அவங்க அதெல்லாம் தாங்கிக்க மாட்டாங்க.அதுனால தான நானே சொல்லலை” என வினவினான்.
“அட லூசுப்பயலே நான் எதுக்கு டா அத சொல்றேன் வேற ஒரு அழகான கதை ரெடி பண்ணி வச்சிருந்தேன் அதுக்குள்ள தாத்தா அணையை போட்டு ஸ்டாப் பண்ணிட்டாரு” என வருத்தமாக கூறினான்.
“டேய் என்னடா ஏதோ ப்ரொடுயூசர் கிட்ட டைரக்டர் கதை சொல்ல போற மாதிரி சொல்ற..என் வாழ்க்கைடா அது!! நீ கதை சொல்லி விளையாட என் வாழ்க்கை தான் கிடைச்சுச்சா” என பாவமாக கேட்டான்.
“அட தம்பிப்பையா நான் பாட்டியை உன் கூட சேர்த்து வைக்க தான் ப்ளான் போட்டேன். ஆனா ஜஸ்ட் மிஸ் தாத்தா மட்டும் தடுக்கலைனா இந்நேரம் பாட்டி நான் சொன்ன கதைல உன்ன ஓடி வந்து கட்டிப் பிடிச்சிருக்கும்” என அந்தக் காட்சியை தன் மனக்கண்ணில் நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டே கூறினான்.
“கிழிச்சிருக்கும்” என வாய்க்குள்ளே முனுமுனுத்த கார்த்திக் ,”ஆமா அண்ணி உன் ரூம்லயா தூங்குறாங்க” என பேச்சை திசை திருப்பினான்.
“அண்ணியாஆஆஆஆ!!!! எவ அவ?????” என அதிர்ச்சியோடு வினவினான்.
“வேற யாரு உன் பொண்டாட்டி தான் ..அண்ணன் பொண்டாட்டி அண்ணி தான..இது தானடா உலக வழக்கம்..நீயென்ன சின்னப்பிள்ளை மாதிரி யாரு என்னன்னு கேட்டுட்டு இருக்க” என கூலாக பதிலளித்தான் கார்த்திக்.
“எதை செஞ்சாலும் சொல்லிட்டு பண்ணுடா ஹார்ட் லைட்டா வலிக்கிது..அவ உனக்கு அண்ணியா??? ஆமா என்ன கேட்ட அவ என் கூட இருக்காளாவா?? ஏன் உனக்கு தெரியாதா உனக்கும் எனக்கும் சேர்த்து தான அந்த அய்யர் நாளைக்கு டைம் குறிச்சி குடுத்துட்டு போனாரு.எனக்கு தெரியாம வர்ஷூ ரூம்குள்ள எதும் பாய்ஞ்சுட்டியாடா பாவி” என அதிர்ச்சியோடு வினவினான்.
“பாய்ஞ்சுட்டாலும் அப்படியே பத்திக்கும் பாரு.பக்கி அவ என்ன பார்த்தாலே ஏதோ அவங்க அப்பன் சொத்தை ஆட்டைய போட்ட வில்லன் மாதிரி அந்த மொரை மொரைக்குறா இதுல சாந்தி முகூர்த்தம் ஒன்னு தான் கொரச்சல்..கடுப்பைக் கிளப்பாம போய் தூங்கு டா” என சலித்துக் கொண்டான்.
“அப்பாடி நான் கூட உனக்கு நடந்துருச்சோன்னு பயந்துட்டேன் இப்பதான் நிம்மதியா இருக்கு( என்ன ஒரு நல்ல எண்ணம்!!) இப்ப நிம்மதியா போய் தூங்குவேன் பாய் டா தம்பிப்பையா போய் தலைகாணிய கட்டிப்பிடிச்சுட்டு தூங்கு” என கிண்டல் செய்து விட்டு தன் அறையை நோக்கி சென்றான்.
“ஆமா நான் தலைகாணிய கட்டிப்பிடிச்சு தூங்க போறேன் இவர்க்கு மட்டும் ரூம்ல தமன்னா காத்துகிட்டு இருக்கா பாரு..உனக்கும் அதே நிலைமை தாண்டா என் டொமேடோ” என பதிலளித்து விட்டு அவனும் தன்னறைக்கு சென்று கட்டிலில் விழுந்தான்.
மறுநாள் பொழுது அழகாக புலர்ந்தது.
தன் அறையில் இருந்து உடல்பயிற்சி செய்வதற்காக வெளியே வந்த விஜய் , அங்கே சோபாவில் அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்த பாட்டியின் அருகில் போய் அமர்ந்து கொண்டு ,”ஹேய் பாட்டி அதுக்குள்ள உடம்பு சரி ஆய்ருச்சா இவ்ளோ காலைல எழுந்துட்டீங்க ரெஸ்ட் எடுக்க வேண்டி தான” என அக்கறையாக கேட்டான்.
“வாங்க மாப்பிள்ளை..என் உடம்புக்கு என்ன நல்லா தான் இருக்கு..இதுக்கு மேல கோடி ரூபாய் கொடுத்தா கூட என்னால தூங்க முடியாது” என சலிப்பாக பாட்டி கூற,
“இப்படிப்பட்ட பாட்டிக்கு அப்படி ஒரு பேத்தி..ஏன் பாட்டி இந்த பழக்கத்தை உங்க பேத்திக்குலாம் சொல்லி குடுக்க மாட்டீங்களா நல்லா செனமாடு மாதிரி ‘ஆஆஆ’ன்னு வாயை பொலந்துட்டு தூங்கிட்டே இருக்கா” என சொல்லிவிட்டு நிமிர்ந்தவன் தன் முன் பத்ரகாளியாக அவதாரம் எடுத்து நின்ற தன் மனைவியைப் பார்த்து வாயை கப்சிப் என மூடிக் கொண்டான்.
‘இவ நான் வரும்போது கூட தூங்கிட்டு தான இருந்தா அதுக்குள்ள இங்க வந்து நிக்குறா ஒரு வேலை சொன்னதை கேட்ருப்பாளோ’ என பயந்து கொண்டே “என்ன செல்லம் தூங்கலயா பாரு கண்ணெல்லாம் சிவந்து போய்ருக்கு போ போய் படுத்து தூங்குடா” என வழிந்தான்.
அவன் காதை பிடித்து திருகிய ஆதி ,”நானாடா செனமாடு ..நீ தான் எருமைமாடு ,குரங்கு பன்னி ,நீர்யானை எல்லாம்” என கோவமாக கூறினாள்.
“எதுக்கு பேபி உன் சொந்தகாரங்க பேரெல்லாம் சொல்லிட்டு இருக்க நான் கேக்கவே இல்லையே” என வான்டடாக வலையில் சிக்கினான் விஜய்.
“இன்னைக்கு உனக்கு இருக்கு..ஆமா என்ன சொன்ன நான் ‘ஆஆஆ’ன்னு வாய பொலந்துட்டு தூங்கிட்டு இருக்கேனா..இதே வாய் தான கல்யாணம் ஆன புதுசுல நீ தூங்குற அழகை இரவெல்லாம் தூங்காம இரசிச்சுட்டே இருக்கனும் போல இருக்குனு சொல்லுச்சு..அதுக்குள்ள உனக்கு நான் செனமாடு ஆய்ட்டேன்ல …இருடா நான் என் அப்பா வீட்லயே இருந்து நல்லா தூங்கிக்கிறேன் நீ மட்டும் ஊருக்கு போ” என முறுக்கிக் கொண்டாள்.
“கவிதைக்கு பொய் அழகுனு சொல்லிருக்காங்கடா செல்லம் ..நம்ம வாழ்க்கையே ஒரு கவிதை தான் சோ சின்னதா அப்போ அப்போ நாலு பொய் சொன்னா இரசிக்கனும் அத விட்டுட்டு ரகளை பண்ணக்கூடாது சரியா..ஆமா நீ எப்படி டா செல்லம் அதுக்குள்ள எழுந்து வந்த” என ரொம்ப நேரமாக மண்டையைக் குடைந்து கொண்டிருந்த கேள்வியை கேட்டே விட்டான்.
“எல்லாம் உன்னால தான்…எருமை மொபைலை ரூம்லையே வச்சுட்டு வந்துட்ட ..அது காதுக்குள்ளையே ‘மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா’னு கத்துது..ஏண்டா நீயெல்லாம் ஒரு பிஸினெஸ்மேன்னு சொன்னா எவனாச்சும் நம்புவானா உனக்கு வேற ரிங்க் டோனே கிடைக்கலையா ..இதை கேக்குறப்போலாம் ஏதோ ஆடி மாசம் கூழ் ஊத்துற திருவிழாக்கு போய்ட்டு வர்ற மாதிரி ஃபீல் ஆகுது” என அவன் மண்டையில் நங்கென்று கொட்டி விட்டு அவன் கைகளில் போனை திணித்தாள்.
‘மத்த நேரம்லாம் விஜி விஜினு கொஞ்ச வேண்டியது கோவம் வந்தா மட்டும் மரியாதைலாம் மலேசியா ஃப்ளைட் மாதிரி காணாம போய்ரும் என்ன கொடுமை சரவணன் இது’ என நினைத்துக் கொண்டே யார் தனக்கு கால் செய்தார் என மொபைலை எடுத்துக் கொண்டு வெளியே செல்லப்போனான்.
அப்போது வாசலில் வர்ஷூவின் பெற்றோர்களான வசந்தகோபாலன் இராஜலெக்ஷ்மி தம்பதியரின் காரைத் தொடர்ந்து ஒரு பெரிய லாரி நிறைய கட்டில் ,மெத்தை,சோபா என வீட்டிற்குத் தேவையான அனைத்து ஜாமான்களும் வந்து இறங்கியது.
‘என்ன குடும்பமா பெட்டி படுக்கையை தூக்கிட்டு வந்து சம்மந்தி கூட செட்டில் ஆக போறாங்களோ’ என மனதிற்குள் கமென்ட் அடித்த விஜய் வெளியே இன்முகமாக,
“வாங்க சித்தப்பா சித்தி” என வாயெல்லாம் பல்லாக வரவேற்றான்.
இவன் சப்தத்தில் திரும்பி பார்த்த பாட்டி இவர்களைக் கண்டு ,”வாங்க தம்பி வாம்மா வந்து உட்காருங்க” என வரவேற்றவர் சமயலறையை பக்கம் திரும்பி ,”காத்தாயி ரெண்டு காபி கொண்டு வா” என சப்தம் போட்டார்.
“அய்யோ அதெல்லாம் வேண்டாம் மா..நாங்க உங்க கிட்ட பேச தான் வந்தோம்” என தாழ்மையோடு கூறினார் கோபால்.
“பரவாயில்லை தம்பி காபி குடிச்சுகிட்டே பேசலாம்.ஆமா நேத்து ஏன் இங்க இவங்க கூட வராம கிளம்பி போய்ட்டீங்க..இங்க எதும் சவுகரியம் பத்தலையா..என்னனு சொல்லுங்க செஞ்சு குடுத்துருவோம்” என வினவினார் பாட்டி.
“அப்படிலாம் இல்ல மா ..வீட்டுல நிறைய வேலை இருந்துச்சு அதான் அப்படியே போய்ட்டோம்.வந்து..இவங்க கல்யாணம் எப்படி நடந்திருந்தாலும் பொண்ணுக்கு சீர் செய்ய வேண்டியது எங்க கடமை ..அதான் அதெல்லாம் குடுத்துட்டு போலாம்னு வந்தோம்” என தயங்கிக் கொண்டே கூறினார் அவர்.
“அட என்ன தம்பி நீங்க..எங்க குடும்பத்துல இந்த பழக்கம்லாம் இல்லை என் வீட்டுக்காரர் வயலுக்கு போய்ருக்கரு அவர் வந்து பார்த்தாலும் இதே தான் சொல்லுவாரு..அவ இனிமேல் எங்க பொண்ணு அவளுக்கு தேவையானதை அவ புருஷனே பண்ணி கொடுப்பான். உங்க மகளுக்கு நீங்க பண்ணனும் நினைக்கிறது உங்க விருப்பம் இதுல நாங்க தலையிட முடியாது.ஆனால் எங்க குடும்ப வழக்கப்படி இதெல்லாம் வாங்க மாட்டோம் வேணும்னா இவங்க ரெண்டு பேரும் இனிமேல் வாழப் போற வீட்டுக்கு இதெல்லாம் கொண்டு போய் வச்சிருங்க” என தன்மையாக பதிலளித்தார் பாட்டி.
‘இந்த பாட்டி படு விவரமான பாட்டியா தான் இருக்கு..ஆதிராக்கு மட்டும் வண்டி வண்டியா சீர் அனுப்புனாங்க..இப்போ இவங்க கிட்ட அப்படியே எப்படி சீன் ஓட்டுது பாரு..உனக்குலாம் அந்த கார்த்திக் தான் சரியான ஆளு பாட்டி ‘ என மனதிற்குள் பாட்டியை பாராட்டிக் கொண்டிருந்தான் விஜய்.
அவர்களும் அதை புரிந்து கொண்டு மற்ற விஷயங்களைப் பற்றி பொதுவாக பேச ஆரம்பித்தனர்.
பின் ஒவ்வொருவராக கீழிறங்கி வர அங்கே கேலி கிண்டல் என ஒரே மகிழ்ச்சியாக நேரம் கழிந்தது.பாட்டியின் உடல்நிலை காரணமாக கோவிலுக்கு செல்வதை ஒத்தி வைத்து விட்டதால் அன்று முழுவதும் வீட்டிலே சொந்த பந்தங்களின் வருகையோடு பகல் பொழுது கடந்தது.
ஸ்ரீயும் ,வர்ஷுவும் இன்று இரவு நடக்கவிருக்கும் சாந்தி முகூர்த்தத்தை பற்றி நினைத்து, ஒருத்தி நாணத்திலும் ஒருத்தி கோவத்திலும் தங்கள் நாயகர்களின் கண்களில் படாமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தனர்.
ஹரியும், கார்த்திக்கும் இருவரின் கண்ணாமூச்சி ஆட்டத்தை பார்த்து மனதில் சிரித்துக் கொண்டு ,’எப்படியும் நைட் வந்து தான ஆகனும்’ என நினைத்துக் கொண்டு, வெவ்வேறு மனநிலையில் அந்த இரவை சந்திக்க தங்களை தயார்படுத்திக் கொண்டனர்.
“நிலவாக நீயும்
ஒளியாக நானும்
ஒன்றாக இணைய
காதல் வந்து
வரம் கொடுக்க
தவமிருக்கிறேன் கண்மனியே”
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
+1
1


மின்னலே என் நெஞ்சிலே - பிரியதர்ஷினி S