
அத்தியாயம் 14
” எங்களையும் ஆசிர்வாதம் பண்ணுங்க தாத்தா பாட்டி எனக்கும் கல்யாணம் ஆய்ருச்சு ” என்று கார்த்திக் கூறியதில் ஸ்ரீயை தவிர அங்கிருந்த அனைவரும் மின்சாரம் தாக்கியதை போல் அதிர்ந்து நின்றனர். ஸ்ரீ மட்டும் ‘இதை நான் முன்னமே எதிர் பார்த்தேன்’ என்ற நோக்கில் அவர்களை பார்த்திருந்தாள்.
அதை கவனித்த ஹரிக்கு அவ்வளவு நேரம் இருந்த காதல் பின்னுக்குப் போய் கோபம் முன்னால் வந்தது..’இராட்சஷி அப்போ இவளுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு ஆனா என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை ‘ என மனதிற்குள் அவள் தனக்கு முன்னுரிமை தரவில்லை என்று குமுறினான்.(அதுக்குள்ள ஊடலா!!!முடியலைடா சாமி)
விஜயோ ,’டேய் படுபாவி அந்தப்பிள்ளை மெஹந்தி அன்னக்கு உன்ன உள்ள தள்ளிட்டு போனப்போ கூட லவ்வர்ஸ்ன்னு தான டா நினைச்சேன், ஹரி கல்யாணத்தன்னைக்கு உங்க கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு பெருசா ப்ளான் எல்லாம் போட்டேனேடா!!!ஆனா நீ இப்படி பெரிய ஆப்பா கொடுத்துட்டியே…சண்டை சண்டைனு சொல்லிட்டு கல்யாணம் பண்றவனை கூட நம்பிரலாம் ஆனா சிங்கிள் சிங்கிள்னு இவ்ளோ நாளா ஊர ஏமாத்திட்டு உன்ன மாதிரி சுத்துறவன நம்பவே கூடாது டா சாமி’ என மனதிற்குள் அவனை வறுத்தெடுத்தான்.
கீழே விழுந்த நால்வரையும் வேறி வழி இல்லாமல் நல்லா இருங்க என்று மட்டும் கூறிய நாராயணசாமி எதுவும் பேசாமல் அங்கிருந்து அறைக்கு சென்றுவிட்டார்.
பாட்டி அங்கேயே இடிந்து போய் அமர்ந்து விட்டார், என்னதான் கார்த்தியை எப்போதும் வம்பிழுத்தாலும் அவரின் செல்ல பேரன் கார்த்திக் தான்.சிறு வயதிலிருந்து அவர் கூடவே இருந்தவன் அவன் தான்,எனவே அவன் மீது அலாதி பிரியம் அவருக்கு.பாட்டி எனபதை தாண்டி அவனுக்கு ஒரு நல்ல தோழியாய் தான் பழகினார்.அவன் கல்யாணத்தைப் பற்றி ஆயிரம் கனவு கண்டு வைத்திருந்தவரின் மனக்கோட்டையை ஓரே நிமிடத்தில் தகர்த்தெரிந்தான் கார்த்திக். அங்கிருந்த அனைவருக்குமே அவன் காதலித்தது வருத்தமில்லை இப்படி யாருக்குமே தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டதைத்தான் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஹரியும் பாட்டியின் நிலமையில் தான் இருந்தான்.ஸ்ரீயிடம் கூட சொல்ல முடியாத பல விஷயங்களை கார்த்தியிடம் அவன் பகிர்ந்திருந்தான்.அந்தளவிற்கு கார்த்திக்கை தன் வாழ்வில் முக்கியமான இடத்தில் வைத்திருக்க அவன் தன்னை ஒரு நண்பனாக கூட எண்ணவில்லை என்று நினைத்து ஹரியின் மனம் வேதனை அடைந்தது.
பத்மினி இவர்களைப் போல் அல்லாமல் அழுகவே ஆரம்பித்து விட்டார்.அவரை சமாதானப் படுத்திய கலைவாணி அவரை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்று விட்டார்.
மதியழகனுக்கு கார்த்திக்கின் செயலால் கோபம் இருந்தாலும் அதைக் காட்டும் நேரம் இதுவல்ல எனப் புரிந்து ,வந்திருந்த விருந்தினர்களின் முன் தங்கள் குடும்ப கௌரவம் குறையக் கூடாதென்றென்னி அங்கிருந்த அனைவரையும் சாப்பிட அழைத்து செல்ல சொல்லி நெருங்கிய உறவினர்களிடம் பணித்து விட்டு மேடையில் இருந்த குடும்ப நபர்கள் அனைவரையும் தாத்தாவின் அறைக்கு வருமாறு கூறிவிட்டு சென்றார்.
வர்ஷுவிற்கு அனைவரின் முகத்தைப் பார்க்கவே அவமானமாக இருந்தது.கார்த்திக் இப்படி எல்லாரும் கூடியிருக்கும் சபையில் பட்டென்று உண்மையை போட்டு உடைப்பான் என கனவிலும் அவள் எதிர்பார்க்கவில்லை.’என்ன தான் நினைச்சுகிட்டு இருக்கான் இவன்..என்னைக் கேட்காமயே தாலி கட்டுனான் இன்னைக்கும் அவன் இஷ்டத்துக்கு உண்மையை உடைச்சுட்டான்.இந்த வீட்ல எல்லாரும் என்னை எவ்ளோ நம்பி என்ன அவங்க வீட்டு பொண்ணா நினைச்சு அவ்ளோ பாசமா இருந்தாங்க இப்போ எந்த முகத்தை வச்சுகிட்டு அவங்களை பார்ப்பேன்.என் ப்ரெண்ட்ஸ் கூட இப்போ என்னை வில்லி மாதிரி பார்க்குறாங்க எல்லாத்துக்கும் இந்த தடிமாடு தான் காரணம் ‘ என மனதில் கார்த்திக்கின் மீதுள்ள கோவத்தை கூட்டிக் கொண்டே போனாள்.(உரிமை உள்ள இடத்தில் தான் கோவம் கட்டுக்கடங்காம வரும்.. கூடிய சீக்கிரம் நீயும் அதை புரிஞ்சுப்ப பேபி)
தாத்தாவின் அறையில் கூடியிருந்த அனைவருக்கும் கேட்க ஆயிரம் கேள்வி வரிசையாக நின்றாலும் யாரும் எதும் பேசாமல் மௌனமாக கார்த்திக்கை குற்றம் சாட்டும் பார்வை வீசிக் கொண்டு நின்றனர்.கார்த்திக்கோ ‘நான் சொல்லாமல் செய்தது தவறு தான் ஆனால் நான் கல்யாணம் செய்தது தவறல்ல தேர்ந்தெடுத்த பெண்ணும் தவறல்ல ..என்ன பிரச்சனை வந்தாலும் அவளை விட மாட்டேன் அவளுடன் சேர்ந்து போராடுவேன்’ என்ற நோக்குடன் கேள்விகளை எதிர்கொள்ள தயாராக இருந்தான்.
நந்து,மது,நிஷா மூவரும் வர்ஷூவை ‘எங்க கிட்ட கூட சொல்லவே இல்லை ..இதான் எங்களை நீ ப்ரெண்டா நினைச்ச லட்சணமா??’ என்று பார்வையாலே அவளிடம் வினவினர்.ஆனால் அவளுக்குத்தான் யாருடைய கண்களையும் சந்திக்கும் அளவு தைரியம் இல்லை.எனவே குனிந்த தலை நிமிராமல் கார்த்திக்கின் கைகளில் இருந்து தன் கரங்களை விடுவிக்க போராடிக் கொண்டிருந்தாள். அவனோ இன்னும் கெட்டியாக பிடித்து அவள் கைகளை அழுத்திக் கொடுத்தான் .அந்த ஒரு செய்கையே ,’உனக்கு நானிருக்கிறேன் பயப்படாதே’ என்று சொல்லாமல் சொல்லி தைரியமூட்டியது இருந்தும் அவன் மேல் உள்ள கோபத்தால் இதை அவள் உணர்ந்தும் உணராதது போல் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டாள்.
அங்கிருந்த அனைவர் முகத்திலும் பார்வையை சுழலவிட்ட தாத்தாவின் கண்கள் வர்ஷூவின் பெற்றோர்களான வசந்தகோபாலன்-இராஜலெக்ஷ்மி தம்பதியரின் முகத்தில் நிலைபெற்றது. அவர்கள் முகத்தில் கோபமோ,அதிர்ச்சியோ இல்லாமல் மாறாக குற்றவுணர்ச்சியே குடி கொண்டு இருப்பதை குறித்துக் கொண்டவர், மெதுவாக எழுந்து அவர்கள் முன் போய் நின்றார்.
அவர் தங்களருகில் வந்ததும் தலையை நிமிர்த்தி அவர் கண்களைப் பார்த்தவர்களின் விழிகளில் ‘எங்களை மன்னித்து விடுங்கள் ,இந்த கோபத்தினால் எங்கள் மகளின் வாழ்க்கையை ஏதும் செய்து விடாதீர்கள்’ என்ற மன்றாடல் இருந்தது.
அதை புரிந்து கொண்ட தாத்தா “க்கும் க்கும்” என செருமி விட்டு,” இந்த கல்யாணம் யாருக்கும் தெரியாம நடந்தாலும் இவங்க ரெண்டு பேரும் புருஷன்,பொஞ்சாதின்றதை யாரும் மாத்த முடியாது இவங்களுக்கு வேணும்னா நம்ம முக்கியம் இல்லாம இருக்கலாம்” என்று கூறியவரை தடுத்து ஏதோ சொல்ல வந்த கார்த்திக்கை கைநீட்டி தடுத்தவர்,”நான் இன்னும் முடிக்கலை..இவங்க நம்ம கிட்ட மறைச்சது மறைச்சதாவே இருக்கட்டும் ..எங்களுக்கு ஏன் மறைச்சீங்க எதுக்கு மறைச்சீங்க எதுவும் தெரிய வேண்டாம். ஆனா எங்க கடமையை நாங்க செய்யனும்..அத்தனை பேர் முன்னாடி எங்க மானம் போனது போனதாகவே இருக்கட்டும்..இப்போ தாலி கட்டிருந்தாலும் எல்லார் முன்னாடியும் மாலை மாத்திக்க சொல்லுங்க ஹரி ஸ்ரீக்கு என்ன சடங்கு நடக்குதோ அது எல்லாமே இவங்களுக்கும் நடக்கும். நாளைக்கு இவங்களுக்கும் வரவேற்பு நடக்கும்னு எல்லார்கிட்டயும் சொல்லிரு மதி” என தன் மூத்த மகனிடம் கூறிவிட்டு அவ்வளவு தான் என்பது போல் அறையை விட்டு வெளியேறினார்.
என்ன தான் தாத்தா எப்படி கல்யாணம் ஆனது என்று தெரிந்து கொள்ள வேண்டாம் என்று கூறினாலும் அவரைத் தவிர அனைவருக்கும் தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தாலும் அவரின் சொல்லை மீற முடியாமல் கார்த்திக்கை முறைத்துக் கொண்டு பெரியவர்கள் அனைவரும் வெளியேறினர்.
அவர்கள் அகன்றதும் கார்த்திக்கின் அருகில் வந்த விஜய் அவன் எதிர்பாராவண்ணம் அவன் வயிற்றில் ஒரு கும்மாங்குத்து விட்டான்.என்னதான் வர்ஷூ கோவமாக இருந்தாலும் அவன் அடி வாங்கியதும் “அய்யோ செம அடி போலயே பாவம் ரொம்ப வலிச்சிருக்குமோ”என மனம் அவனுக்காக பதறியது.
“டேய் கேடி நாயே கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்காடா?? நீ கொடுத்த ஷாக்ல நான் யாருக்கும் ஹார்ட் அட்டாக் வந்துருமோனு பயந்துட்டே இருந்தேன்..நல்ல வேளை நம்ம வீட்ல எல்லாரும் ஸ்ட்ராங்க் பாடிங்க!!! இல்லைனா கொலை கேசுல உள்ள போய்ருப்ப..வேற எதாச்சும் இருந்தா இப்பவே சொல்லிரு டா நாளைக்கு ரிசப்ஷன்ல வந்து எங்க பிள்ளை ஸ்கூல்ல படிக்கிதுனு எதும் ஆப்படிச்சுராத எனக்கு நீ கொடுத்த ஷாக்லயே இதயம் பலவீனமா போய்ருச்சு, இன்னும் ஒரு ஷாக்கை என் பிஞ்சு இதயம் தாங்காது” என பொரிந்து தள்ளினான்.
“விஜி நீங்க வாங்க அவனுக்கு நாமெல்லாம் கண்ணுக்கு தெரிய மாட்டோம் ..நம்மளை மனுஷங்களாவே மதிக்கலை அவன் ..அவன் கிட்ட போய் பேசிகிட்டு இருக்கீங்க வாங்க போலாம்” என ஆதிரா அவனை இழுத்துக் கொண்டு போனாள்.
நந்து,மது,நிஷா மூவரும் எதுவும் பேசாமல் வர்ஷுவை முறைத்துக் கொண்டு வெளியேறினர்.
இப்போது அறையில் ஹரி,ஸ்ரீ,கார்த்திக் ,வர்ஷு நால்வர் மட்டுமே தேங்கியிருக்க ஹரி எதுவும் பேசாமல் சுவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
விஜய் அடித்தது போல் நாலு அறையாவது விட மாட்டானா என ஹரியை பார்த்த கார்த்திக்கிற்கு கிடைத்ததோ பெரிய பல்பு தான்.
‘இவன் என்ன சுவத்துல ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கான்’ என நினைத்த ஸ்ரீ அவன் கையை சுரண்டினாள்.
ஏற்கனவே அவள் மீது கோபமாக இருந்தவன் அவள் அழைத்ததும்,”இப்போ உனக்கு என்ன பிரச்னை எதுக்கு கையை சுரண்டிகிட்டு இருக்க?” என எரிந்து விழுந்தான்.
‘தாலி கட்ற வரைக்கும் நல்லா தான இருந்தான் இப்போ என்ன மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிருச்சா? ஆண்டவா இவனை மரத்துல இருந்து கீழ இறக்கி இறக்கியே என் இடுப்பு ஒடிஞ்சிரும் போலேயே ‘ என மனதில் புலம்பிக் கொண்டே அவனிடம்,”ஹிஹி ஒன்னும் இல்லை ராசா இன்னும் பக்கத்துல வேணும்னா போய் நின்னு நல்லா சைட் அடினு சொல்ல கூப்டேன்” என கலாய்த்தாள்.
“என்னது!!!!” என அவன் உறுமவும், “ஒன்னும் இல்லை தெய்வமே” என கையெடுத்துக் கும்பிட்டவள், கார்த்திக்கிடம் திரும்பி ,”என்னடா திடீர் மாப்பிள்ளை எப்போ ட்ரீட் தர போற ?” என நேரம் காலம் புரியாமல் வம்பிழுத்தாள்.
‘என்னையே உன் புருஷன் தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்ருவானோனு பயந்துட்டு இருந்தா உனக்கு ட்ரீட் வேணுமாம்ல முதல இங்க இருந்து எஸ்கேப் ஆகணும்டா ரெடி ஜூட்’ என நினைத்துக் கொண்டிருக்கையில் உள்ளே வந்த கலைவாணி வர்ஷுவின் அருகில் வந்து ,”என்ன மா மருமகளே இப்படியே இவன் கூடவே நின்னுட்டு இருக்கப் போறியா ?? இன்னும் நிறையா வேலை இருக்கு முதல்ல இந்த புடவையை போய் மாத்திட்டு வாடா” என சகஜமாக கூறினார்.
அவர் தன்னிடம் பேசியதில் நம்ப முடியாமல் கண்களில் நீரோடு அவரை ஏறிட்ட வர்ஷூவின் தலையை பரிவாக வருடி கொடுத்தவர்,” இங்க பாருடா இப்படி எல்லாம் அழுக கூடாது.எல்லாருக்கும் நீங்க இப்படி சொல்லாம கொல்லாம கல்யாணம் பண்ணிட்டு வந்தது தான் வருத்தமே தவிர உன் மேல தனிப்பட்ட முறைல யாருக்கும் கோவம் கிடையாது சரியா டா.இந்த நிலமை சரியாக கொஞ்ச நாள் ஆகும்.அது வரைக்கும் நீங்க தான் பொறுமையா காத்திருக்கணும்.உன்னை இங்க எல்லாருக்குமே பிடிக்கும் சரியாடா குட்டி ..மனச போட்டு குழப்பிக்காம கல்யாணப் பொண்ணா அழகா கிளம்பி வா பார்க்கலாம்” என அன்பொழுக கூறினார்.
என்ன கூறுவது என்றே தெரியாமல் வர்ஷு அவரை கட்டிக் கொள்ள ,இன்னொரு புரம் கார்த்திக் வந்து கட்டிக்கொண்டு அவர் கன்னத்தில் முத்தம் பதித்து ,”ரொம்ப தேங்க்ஸ் பெரியம்மா” என கரகரப்பான குரலில் கூறினான்.
அவனை தள்ளி விட்ட கலைவாணி ,”எனக்கு உன் மேல இன்னும் கோவம் தான்.என் கிட்ட யாரும் பேச வேண்டாம்னு சொல்லு வர்ஷு” என செல்லமாய் முகத்தை மோவாயில் இடித்து திருப்பிக் கொண்டார்.
அவர் செய்கையில் வர்ஷு சிரித்து விட , தன் மனையாளின் சிரிப்பை இரசித்துக் கொண்டே , மீண்டும் கலைவாணியை கட்டிப்பிடிக்கும் சாக்கில் வர்ஷூவை உரசிக் கொண்டே ,” நீங்க கோச்சுக்கோங்க எனக்கு உங்க மேல கோவம்லாம் இல்லை சோ நான் இப்படி தான் பண்ணுவேன்” என மீண்டும் அவரின் இன்னொரு கன்னத்தில் முத்தம் பதித்தான்.
இருவரையும் தள்ளி நிறுத்திய கலை,”போடா படவா ஒழுங்கா போய் அம்மாவை சமாதானப்படுத்து வர்ஷு நீ போய் புடவை மாத்திட்டு வா மா” என்று நகரப் போனவர்,
அந்த அறையில் தன் மகனும் மருமகளும் இருப்பதை அப்போது தான் கவனித்தார், அதிலும் தன் சீமந்த புத்திரன் ருத்ரமூர்த்தியாக மாறி தன்னை முறைத்துக் கொண்டிருப்பதை கவனித்தவர்,’எதுக்கு வம்பு’ என நினைத்துக் கொண்டு பொதுவாக இருவரிடமும்,”நீங்க ரெண்டு பேரும் சீக்கிரம் வாங்க” என கூறிவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியே ஓடி விட்டார்.
அவரை தொடர்ந்து வர்ஷூவும் புடவை மாத்த சென்று விட, ‘பொண்டாட்டி போன பின்னாடி புருஷனுக்கு மட்டும் அங்க என்ன வேலை ‘ என்று நினைத்த கார்த்திக்கும் வெளியேறி விட்டான்.
இப்போது இவர்களிருவர் மட்டும் தனித்திருக்க , எப்படி அவளிடம் ஆரம்பிப்பது என தெரியாமல் ஹரி குழம்பிக் கொண்டிருக்க , ஆடு தானாக வந்து என்னை வெட்டு என்னை வெட்டு என கழுத்தை நீட்டுவது போல் ஸ்ரீயே,” எதுக்கு இப்போ என் மேல கோவமா இருக்க ??? நான் உன்னை என்ன பண்ணேன்?? உன்னை பார்த்தா எவனாச்சும் இப்போ தான் நம்மளுக்கு கல்யாணம் ஆச்சுந்னு சொல்லுவானா ? புது புருஷன் மாதிரியா நீ நடந்துக்குற” என வாயை விட்டாள்.
இதுதான் சாக்கு என ஹரி அதை பிடித்துக்கொண்டு,”என்ன பண்ணியா ?? என்ன ஒரு மனுஷனா கூட நீ மதிக்கலை இதுல எங்க புருஷனா மதிக்கப் போற?? எதுலயாச்சும் எனக்கு முக்கியத்துவம் குடுத்துறுக்கியா உனக்கு எல்லாரும் முக்கியம் நான் இல்லை அப்படித் தான?? என்னை முக்கியமா நினைச்சிருந்தா நீ இவங்க கல்யாணத்தை பத்தி உனக்கு முன்னாடியே தெரிஞ்சதை சொல்லிருப்பல? ஆனா நீ சொல்லலை அப்போ என்ன அர்த்தம் உனக்கு நான் முக்கியமில்லை அப்படிதான?” என வெடித்தான்.
‘அட இதுக்குதான் இந்த பேக்கு இவ்ளோ நேரம் மூஞ்சிய ஒன்றை முழத்துக்கு தூக்கி வச்சிருந்ததா?? சரியான பேக்கு புருஷா நீ’ என மனதில் அவனை கொஞ்சிக் கொண்டு,
“கொஞ்சம் நிப்பாட்டுறியா?? யப்பா சாமி கேப் விடாம பேசிகிட்டே போற ..எனக்கு ஒன்னும் முன்னாடியே இது தெரியாது என் கிட்டயும் அந்த ரெண்டு அமுக்குணிகளும் சொல்லலை அப்பறம் எப்படி நான் உன் கிட்ட சொல்ல ?” என அவள் பொறுமையாக வினவினாள்.
“ஹேய் நடிக்காத அவன் கல்யாணம் ஆய்ருச்சுனு சொல்றப்போ குடும்பமே ஷாக் ஆனா நீ மட்டும் கூலா ஏதோ இதை முன்னமே எதிர்பார்த்திருந்த மாதிரி நின்னதை நான் பார்த்துட்டு தான் இருந்தேன்.சமாளிக்கலாம் தேவை இல்லாம பொய் சொல்லாத எனக்கு பிடிக்காது ” என வார்த்தைகளை கடித்து துப்பினான்.
“டேய் மங்குனி மாமா” என ஆரம்பித்தவளை முறைத்தவன் ,”யாரு நான் மங்குனியா உன்ன கட்டிக்கிட்டேன்ல நான் மங்குனி தான் தாயே நீ பேசு.ஏன் பேசமாட்ட அதான் உன்ன என் தலைல கட்டிட்டாங்கல்ல அப் றம் என்ன நல்லா பேசு” என கோவமாக ஹரி கூற,
“சரி சரி கூல். நான் அப்படி பார்த்தது எல்லாம் உண்மை தான் ஆனா அவங்க என் கிட்ட எதுவும் சொல்லலை.எனக்கே ரொம்ப நாளா இந்த டவுட் இருந்துச்சு இன்னைக்கு கிளியர் ஆய்ருச்சு அதான் அப்படி பார்த்தேன்.எப்பயும் இந்த வர்ஷுக்கு ஒரு கால் வரும் ஒன்னு அவ அதை எடுக்க மாட்டா இல்லைனா தனியா போய் பேசுவா அப்போதான் ஒருநாள் அது கார்த்தி நம்பர்னு தெரிஞ்சுச்சு, அப்பறம் ஒரு நாள் அவ தூங்குறப்போ அவ கழுத்துல தாலி மாதிரி ஒன்ன பார்த்தேன் சரியா தாலி தானான்னு தெரியலை அதுக்கு அப்பறம் இவங்களை நல்லா நோட் பண்ணிருந்தா உனக்கே புரிஞ்சிருக்கும் ஷாப்பிங்க் போனப்போ கூட வர்ஷுவை வேணும்னே தான் என் மடில உக்கார வச்சு அவன வாட்ச் பண்ணேன் நான் நினைச்சது முக்கால் வாசி கன்ஃபார்ம் ஆய்ருச்சு அன்னைக்கு.அப்பறம் இவன் தான் வர்ஷுவோட அப்பா அம்மாவை நம்ம கல்யாணத்துக்கு கூட்டிட்டு வந்தான்,அவங்களுக்கு இவனை தெரியவே தெரியாது முன்னாடி ஆனா அவங்க நம்பர் இவன் கிட்ட எப்படி வந்துச்சு இவன் எப்படி அவங்களோட அவ்ளோ க்ளோஸ்சா பழகுறான் இப்படி எல்லா சந்தேகத்தையும் கனெக்ட் பண்ணா ஆன்ஸர் இவங்களுக்கு கல்யாணம் ஆய்ருக்கலாம்னு வந்துச்சு.அதான் எனக்கே கரெக்டா தெரியாததை உன்கிட்ட எதுக்கு சொல்லி குழப்பனும்னு தான் சொல்லலை..மத்தபடி நீ சொன்ன எந்த மண்ணங்கட்டியும் இல்லை ஓகே வா?? ஆமா நம்ம ஏதோ ஆதர்ஷ லவ்வர்ஸ் மாதிரி உன் கிட்ட சொல்லலைனு வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிற என் கிட்ட என்னைக்கு நீ நல்லா பேசிருக்க??” என அவன் போட்ட பந்தை அவனை நோக்கியே திருப்பினாள்.
‘பரவாயில்லயே இந்த குட்டச்சிக்கும் மூளை இருக்கு போல ..அய்யய்யோ நம்ம அவளை திட்ட வந்தா அவ ஆரம்பிச்சுருவா போலயே எஸ்கேப் டா ஹரி’ என நினைத்துக் கொண்டு ,”அம்மா வர சொல்லிட்டு போனாங்க சீக்கிரம் வா போலாம்” என கூறிவிட்டு அவன் மினனலென மறைந்து விட்டான்.
‘சரியான கேடி’ என சிரித்துக் கொண்டே அவளும் வெளியேறினாள்.
இரு தம்பதிகளும் மணமேடையில் இருக்க அங்கே வந்த தாத்தா அனைவரிடமும் வர்ஷூவை தன் வீட்டின் இரண்டாம் மருமகள் என்று அறிவித்தார்.
கூட்டத்தில் சலசலப்பு தோன்றினாலும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஆவலுடன் அனைவரும் மேடையை நோக்க , வீட்டின் பாரம்பரிய தாலியை பாட்டி எடுத்து வந்து கார்த்திக்கின் கையில் கொடுத்த பாட்டி அதை வர்ஷூவின் கழுத்தில் போட்டுவிட சொன்னார். (அது முறையாக ஸ்ரீக்கு தான் வரவேண்டும்,பாட்டி தான் கார்த்தியின் மேலுள்ள பாசத்தால் அது கார்த்திக்கின் மனைவிக்கு என்று கூறிவிட்டார்.)
அவர் சொன்ன படி தாலியை வாங்கியவன் வர்ஷூவின் கண்களை சில நொடி ஆழ்ந்து நோக்கிவிட்டு ‘உன்னை என்றும் பிரிய மாட்டேன் கண்மனியே ‘ என மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவள் கழுத்தில் அந்த பொன் தாலி சங்கிலியை அணிவித்தான்.
வர்ஷூவிற்கு ஒருமுறை தேகம் சிலிர்த்து அடங்கியது.ஏதோ இத்தனை வருடமாக மனதை அழுத்திக் கொண்டிருந்த சுமை ஒன்று இறங்கியதைப் போல் உணர்ந்தாள்.
பின் கலைவாணி இருவரையும் மாலை மாற்றிக் கொள்ளச் சொல்ல அதையும் செய்து முடித்தனர்.
அதன் பின் இரு மருமகள்களையும் அழைத்து வீட்டின் பூஜையறையில் விளக்கேற்ற சொல்லி சாமி கும்பிட்டு முடித்தனர்.
அதைத் தொடர்ந்து புதுமணத் தம்பதியருக்கு பால் பழம் கொடுக்கும் சடங்கு நடக்க, ஹரியும் ஸ்ரீயும் அதை இரசித்து செய்து கொண்டிருக்க,வர்ஷூவோ கடுப்பில் செய்து கொண்டிருந்தாள்,கார்த்திக் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவள் குடுத்த பாலை தேவாமிர்தம் போல் இரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருந்தான்.
அடுத்து புகைப்படம் எடுப்பது சொந்தங்களின் வருகை என இரவு வரை வேலை சரியாக இருந்தது.இரு ஜோடிகளும் தனிமையே கிடைக்காமல் தத்தளித்தனர்.
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல், அய்யர் இன்று நேரம் சரியில்லை இன்னும் இரண்டு நாள் கழித்து தான் நாள் நன்றாக உள்ளது என கூறிவிட சாந்தி முகூர்த்தத்தை அன்றே ஒத்தி வைத்தனர்.
வர்ஷூவை தவிர மற்ற மூவரும் அந்த அய்யரை திட்டிக்கொண்டே தத்தம் அறைக்கு சென்றனர். அன்றைய இரவு அனைவருக்கும் தூங்கா இரவாகவே விடிந்தது.
மறுநாளும் சொந்த பந்தங்கள் வந்து கொண்டே இருந்ததால் அனைவரும் ஓய்வில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தனர்.
இரவு ஏழு மணிக்கு ரிசப்ஷன் என்பதால் அனைவரும் ஐந்து மணிக்கே இங்கிருந்து கிளம்பி மண்டபத்தை அடைந்தார்கள்.
பெரிய வீட்டு சமாச்சாரம் என்பதால் நேற்றே கார்த்திக்கின் திருமணச் செய்தி காட்டுத்தீ போல கோவை எங்கும் பரவி விட்டது.
நாரயணசாமி தாத்தாவிற்கு அந்த சுற்றத்தில் பெரும் மதிப்பு மரியாதை இருந்ததால் யாரும் நேராக சென்று இதைப்பற்றி பேசி அவர்களுக்கு தர்மசங்கடமான நிலையை உருவாக்கவில்லை.
மண்டபத்திற்கு வந்ததும் மணமகள் அறையில் வர்ஷுவும் ஸ்ரீயும் தயாராக ,மணமகன் அறையில் ஹரியும் கார்த்திக்கும் கிளம்பிக் கொண்டிருந்தனர்.
ஒரே அறையில் இருந்தாலும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.பேசவில்லை என்று சொல்வதை விட ஹரி அவனை பேச அனுமதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் ,கார்த்திக் இவனிடம் பேச முயன்றாலே தன் முறைப்பால் அந்த முயற்சியை முறியடித்து விடுவான்.
அப்போது உள்ளே வந்த விஜய் இருவரின் செய்கையை பார்த்து கடுப்பாகி,’இந்த ஹரியை இப்படியே விட்டா சரியா வராது எதாச்சும் ப்ளான் பண்ணுடா விஜய் ரெண்டு மச்சானையும் ஒன்னா சேர்த்து வச்ச மாப்பிள்ளைன்னு வரலாற்றுல உன் பேர் இடம் பெறனும் அதுக்கு தீயா வேலை செய்யனும் விஜய்’ என மனதில் கூறிக்கொண்டு,
கார்த்திக்கை நோக்கி வேகமாக சென்றவன் அவன் கன்னத்தில் பளார் என அறைந்தான்.
அந்த சப்தத்தை கேட்டு திரும்பி பார்த்த ஹரி இருவரையும் பார்த்து விட்டு மீண்டும் தன் வேலையை தொடர ஆரம்பித்தான்.
‘அய்யய்யோ இவனை அடிச்சா அவன் என்னை திட்ட வருவான் ரெண்டையும் சேர்த்து வச்சிரலாம்னு ப்ளான் போட்டா அவன் என்ன சிட்டி ரோபோ மாதிரி திரும்பி பார்த்துட்டு உணர்ச்சியே இல்லாம மறுபடியும் அவன் வேலையை பார்க்குறான்.அய்யோ கார்த்திக் வேற கொலை காண்டுல இருக்கானே ..வரலாறுல உன் பேரு இடம்பிடிக்கும்னு நினைச்சு பண்ணா இப்போ இவன் என் கல்லறைல பேர் எழுதுறதுக்கு ப்ளான் பண்ணிட்டானே.கந்தா காப்பாத்து’ என வேண்டிக்கொண்டு கார்த்திக்கை பார்த்து இழித்துக் கொண்டே ,’ஹிஹி இல்லை மச்சான் உன் கன்னத்துல கொசு ஒன்னு உக்கந்து உன்னோட ரத்தத்தை குடிச்சிட்டு இருந்துச்சா அதான் அந்த கொசுவை கொல்லுற வேகத்துல அடிச்சுட்டேன்” என்று மகாமட்டமான காரணத்தை கூறினான்.
“நம்பிட்டேன் டா நல்லவனே பேசாம என் கண்முன்னாடி நிக்காம ஓடி போய்ரு இல்லை வீட்டு மாப்பிள்ளைனு கூட பார்க்க மாட்டேன் செஞ்சிருவேன் ” என்று மிரட்டிய கார்த்திக் ஜன்னல் அருகில் சென்று அமைதியாக வெளியே தெரிந்த புல்வெலியை வெறிக்க ஆரம்பித்தான்.
கார்த்திக் முகத்தில் என்றும் இல்லாமல் புதிதாக சோகம் ஒரு குடியேறியிருந்தது.எத்தனை பெரிய பிரச்சனையாய் இருந்தாலும் முகத்தில் இருந்த புன்னகை வாடாமல் அனைத்து சவால்களையும் சுலபமாய் கடக்கும் கார்த்திக் இப்போது தொலைந்து போயிருந்தான். நான்கு வருடத்திற்கு முன்னர் வீட்டையே புரட்டிபோட்ட அந்த பிரச்சனையின் போது கூட அனைவரையும் தேற்றி சகஜமாக்க முடிந்த கார்த்திக்கால், ஹரியின் மௌனத்தையும் பாட்டியின் விலகலையும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
வீட்டில் இருந்த அனைவரும் இவனை திட்டியாவது நாலு வார்த்தை பேசி தங்கள் மனத்தாங்கலை தீர்த்துக் கொண்டனர்.ஆனால் ஹரியும் ,பாட்டியும் அவன் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்காமல் மொத்தமாக அவனை தவிர்த்தனர்.
கார்த்திக்கின் சோகத்தை காண முடியாத விஜய் ஹரியிடம் சென்று, “டேய் அவன் பண்ணது பெரிய தப்பு தான் இல்லைன்னு சொல்லலை.உனக்கு கோபம் கண்டிப்பா வரணும் அதுவும் தப்பில்லை அதுக்காக அவன் பக்கத்து நியாயத்தை கூட கேக்காம அவனை இப்படி நீ தவிர்க்கிறது சுத்தமா சரியில்லை ஹரி.ஸ்ரீ மேல அவ்ளோ கோபம் இருந்தப்போ கூட அவளை நீ ஏத்துக்கலை .அப்பறம் ஏண்டா இவன் கூட மட்டும் பேசாம இப்படி பண்ற?? அவன் இதுவரைக்கும் வருத்தப்பட்டே நான் பார்த்தது இல்லை மச்சான் புரிஞ்சுக்கோ அவன் கிட்ட பேசு டா” என மன்றாடினான்.
அவனை முறைத்த ஹரி,” அவன் எனக்கு தந்த தண்டனையை விடவா நான் பெருசா அவனை கஷ்டப்படுத்துறேன்.எல்லாரும் அவன் சோகமா இருக்கதை பெருசா பார்க்குறீங்களே நான் உள்ள செத்துட்டேன் டா.இவன் கிட்ட என்னைக்காச்சும் அண்ணனா பழகிருக்கேனா சொல்லுடா சொல்லு.என் நம்பிக்கையை உடைச்சுட்டான் டா இவன்..முடியலை மச்சான்.. வலிக்குதுடா” என தன் நெஞ்சை தொட்டு காண்பித்த ஹரியின் கண்களில் அப்படி ஒரு வலி.
அவன் பேசியதை கேட்ட கார்த்திக் அவனை வேகமாக வந்து அணைத்துக் கொண்டு,”என்னை மன்னிச்சிருடா ஹரி.எனக்கு புரியுது உனக்கு இந்த விசயம் எவ்ளோ தூரம் அதிர்ச்சியையும் வலியையும் தரும்னு ஆனா உன் கிட்ட கூட நான் மறைச்சுட்டேன்ன்னா அதுல ஒரு காரணம் இருக்கும்னு உனக்கு புரியலையாடா .ப்ளீஸ் டா லாஸ்ட் சான்ஸ் குடு,என் பக்க நியாயத்தையும் கேழு அதுக்கு அப்பறமும் நான் பண்ணது தப்புனு உனக்கு தோணுனா நீ என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு நான் கட்டுப்படுறேன்” என கெஞ்சலோடு கூறிவிட்டு ஹரியின் முகத்தை பார்த்தான். அவன் முகத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை ‘நீ என்ன சொல்ல வேண்டுமோ சொல்லு ‘என்பதைப் போல கையைக் கட்டிக் கொண்டு நின்றான்.
‘இவன் கேட்க சம்மதித்ததே போதும்’ என நினைத்த கார்த்திக் தன் வாழ்க்கையும் வர்ஷுவின் வாழ்க்கையும ஒன்றாக சங்கமித்த கதையை மெதுவாக சொல்ல ஆரம்பித்தான்.
முதலில் ஏதோ சாக்கு சொல்ல போகிறான் என அசட்டையாக நினைத்த ஹரியும் விஜயும் அவன் சொல்ல சொல்ல இருவரின் கண்களும் அதிர்ச்சியில் விரிந்தன.
இருவராலும் கார்த்திக்கின் இந்த கல்யாணத்திற்கு பின் இப்படி ஒரு கதை இருக்கும் என சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.அவன் சொல்லி முடிப்பதற்குள்ளே அவனை தாவி அணைத்துக் கொண்ட ஹரி ,”ஏண்டா என் கிட்ட முன்னாடியே சொல்லலை நான் இருக்கேன் டா உனக்கு எப்பவும்” என்று கூறியவனின் கண்கள் லேசாக கலங்கியிருந்ததோ??
அங்கே மணமகள் அறையிலும் ஸ்ரீயின் வற்புருத்தலால் வர்ஷு தன் தோழிகளிடம் தன் திருமணம் தனக்கே விருப்பமில்லாமல் நடந்த கதையை கண்ணீரோடு கூறிக் கொண்டிருந்தாள்.
அனைத்தையும் கேட்ட பஞ்ச பாண்டவிகளுக்கு இவை அனைத்தையும் ஜீரனிக்கவே சில நிமிடம் தேவைப்பட்டது. ஒரு வழியாக தங்களை சமாளித்துக் கொண்டு,தங்கள் சோகங்களை மனதிலே புதைத்து வைத்து விட்டு வர்ஷூவை முதலில் சமாதானப்படுத்த எண்ணி ஸ்ரீயை கலாய்க்க ஆரம்பித்தனர்.
வர்ஷூவும் அதை புரிந்து கொண்டு மெதுவாக பழசை மறக்க முயற்சி செய்து இவர்கள் சம்பாஷனைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள்.
இரவு ஏழு மணிக்கு முன்பே உறவினர்கள் நண்பர்கள் என மண்டபமே நிறைந்து கலை கட்டியது.
முதலில் ஹரியும் கார்த்திக்கும் விஜய் மற்றும் அஷ்வினோடு மேடையேற அவர்களைத் தொடர்ந்து வர்ஷூவும் ஸ்ரீயும் தோழிகள் படை சூழ மேடையேறினர்.
மேடையேறிய ஸ்ரீ ஹரியும் கார்த்திக்கும் ஒன்றாக சிரித்துப் பேசுவதை பார்த்து ,’ஓ இராமனும் லட்சுமணனும் சேர்ந்தாச்சா..அதான பார்த்தேன் என் கிட்ட கூட நாலு வருஷம் ஆனாலும் பேசாம இருப்பான் ஆனால் இந்த கார்த்திக் எருமை கிட்ட நாலு மணி நேரம் கூட பேசாம இருக்க முடியாது. என் கிட்ட இல்லாதது இந்த கார்த்திக் கிட்ட அப்படி என்ன இருக்கு!!!!! இதென்ன உனக்கு வந்த சத்திய சோதனை ஸ்ரீ!!!’ என அவர்களைக் கலாய்த்துக் கொண்டே மேடையேறியவள் அப்போது தான் ஹரியின் தோற்றத்தை கவனித்தாள். கருப்பு நிறத்தில் கோட் சூட் அணிந்து கண்களில் பழைய குறும்பு மீண்டு ஆணழகனாக காட்சி தந்த தன்னவனை தன்னை மறந்து இரசித்துக் கொண்டிருந்தாள்.
ஹரியும் அப்போது தான் இளம் பச்சை மற்றும் பீச் கலரில் லெஹங்கா அணிந்து வானுலக தேவதை போல் தன்னருகே வந்து கொண்டிருந்த ஸ்ரீயை பார்த்து டின் கணக்கில் ஜொல்லு விட்டான்(பார்த்துப்பா மண்டபம் மூழ்கிற போகுது).
‘என்ன நம்ம இங்க பேசிட்டு இருந்தா இவன் வேற எங்கேயோ வாயை பொலந்துட்டு பார்த்துட்டு இருக்கான்’ என நினைத்த கார்த்திக் அவன் பார்த்த திசையை நோக்கி திரும்பியவன் அங்கே சிகப்பு கலர் லெஹங்காவில் அளவான ஒப்பனைகளோடு மிதமான நகையணிந்து மாடர்ன் மஹாலக்ஷ்மி போல் தன்னருகில் வந்து நின்ற தன் மனைவியை பார்த்து சொக்கித் தான் போனான்.
அவளோ ‘எருமை எருமை எப்படி காஞ்ச மாடு கமர்க்கட்டை பார்க்குற மாதிரி ஆன்னு பார்க்குறான் பாரு.வீட்ல எவ்ளோ பிரச்சனை போய்கிட்டு கிடக்கு குரங்கு அத பத்தியெல்லாம் கவலை படாம ஜாலியா சைட் அடிச்சிட்டு இருக்கு’ என அவனை நன்றாக நிமிர்ந்து பார்த்தவள் ,’பரவாயில்லை இவனும் ப்ளாக் கோட்ல பரவாயில்லாம இருக்கான் ரொம்ப மோசமில்லை என்று நினைக்க அப்போது ‘டிக் டிக்’ என கதவை தட்டி விட்டு எட்டிப்பார்த்த மனசாட்சி,’அவன் உன்னை விட நல்லா தான் இருக்கான் ரொம்ப ஓவரா நீ சீன் போடாத அவனை நீ சைட் அடிச்சதை நான் பார்த்துட்டேன் பார்த்துட்டேன்’ என போட்டுக் குடுத்தது,அதன் மண்டையில் நங்கென கொட்டியவள் ‘ச்சீ போ அவனை ஒன்னும் நான் சைட் அடிக்கலை உன் வேலையை பாரு’ என அதை அனுப்பி வைத்தாள்.
இரு ஜோடிகளையும் பார்த்த அனைவரும் இரு ஜோடிகளின் ஜோடி பொருத்தத்தையும் எண்ணி அகமகிழ்ந்து போயினர்.வந்தவர் அனைவரும் இரு ஜோடிகளிடமும் பரிசு கொடுத்து விட்டு இருவரின் பொருத்தத்தையும் பாராட்டி விட்டே சென்றனர்.
ஆனால் அதை கேட்க நால்வரும் அங்கிருந்தால் தானே.ஹரி ஸ்ரீயோ பாரிஸில் டூயட் பாடிக் கொண்டிருக்க.கார்த்திக்கோ ‘ஒட்டகத்தை கட்டிக்கோ ‘ பாடலுக்கு தான் டூயட் பாடுவேன் என தார் பாலைவனத்தில் டூயட் பாட, வர்ஷுவோ இந்த எருமையை என்ன பண்ணலாம் இப்படி பார்த்து தொலைக்குது என அவன் பார்வையில் இருந்து தப்பிக்க வழி தேடி கொண்டிருந்தாள்.
அதன் பின் இரு ஜோடிகளையும் வித விதமான கோணங்களில் போட்டோகிராபர் படம்பிடிக்க நடுவில் விஜயும் என்னையும் என் பொண்டாட்டியையும் எடுடா முதல்ல என கலாட்டா செய்து கொண்டிருந்தான்.
நேற்றும் தூங்காமல் இன்றும் ஓய்வே இல்லாமல் நின்று கொண்டே இருப்பது பெண்களுக்கு சோர்வாக இருக்க அதை கவனித்த இருவரின் கணவன்மார்களும் ஒரு பலியாட்டை(விஜய்) பிடித்து ஃப்ரெஷ் மாதுளம் பழ ஜூஸ் கொண்டு வர செய்து அவர்களை பருக வைத்தனர்.
அதன் பின் ஒரு 11 மணி அளவில் ரிசப்ஷன் நல்ல முறையில் முடிய அனைத்தையும் எடுத்து வைத்து வீட்டிற்கு வந்தவர்களுக்கு அங்கே ஓர் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது!!!!!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
9
+1
+1


மின்னலே என் நெஞ்சிலே - பிரியதர்ஷினி S