
அத்தியாயம் 1
பனி தூவும் அந்த காலை வேளையில் கதிரவன் தனது செங்கதிர்களை அனைத்து திசைகளிலும் பரப்பி தனது வரவை உலகிற்கு அறிவித்துக் கொண்டிருந்தான். சென்னை, தனக்கே உரிய பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் என அனைவரும் பேருந்திற்கும், மின்சார இரயிலுக்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.
ஆனால், சென்னை மாநகரின் மத்தியில் உள்ள அந்த புகழ் பெற்ற பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியின் 112ம் அறையிலோ இந்த பரபரப்பு ஏதும் இன்றி அந்த மூன்று மங்கைகளும் நிம்மதியான நித்திரையில் ஆழ்ந்து இருந்தனர்.
அப்போது அலாரம் தனது இருப்பை அவர்களுக்கு தெரிவிப்பதற்கு, விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது.
அந்த சத்தத்தில் கடுப்பான நந்தினி, “ஹே ஸ்ரீ உன் பக்கத்துல தான அலாரம் அடிக்கிது!! ஆப் பண்ணுடி எருமை” என்று அலாரம் ஒலிக்கு சற்றும் குறையாமல் இவளும் கத்திக் கொண்டிருந்தாள். ஆனால் இவளது எந்த கத்தலுக்கும் ஸ்ரீயிடம் எந்த ஒரு எதிரொலிப்புமில்லை, அவள் நிம்மதியாக போர்வையை தலை முதல் பாதம் வரை போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தாள்.
அதில் மேலும் கடுப்பான நந்தினி அலாரமை அணைத்து விட்டு அவளிடம் வந்து அவள் போர்வையை விலக்கி, “ஹே கும்பகர்ணி!! நான் அவ்ளோ கத்துறேன் கண்டுக்காம நிம்மதியா தூங்கிட்டு இருக்க.. அலாரம் வைக்கிறது நீ தான?? அப்போ அதை ஆஃப் பண்ண மாட்டியாடி குரங்கு” என்று அவளை அடித்து எழுப்பினாள்.
ஸ்ரீயோ, “ஹேய் நந்து செல்லம், எனக்கு தினமும் காலையில உன் முகத்தை பார்த்தா தான் அந்த நாளே அழகாகும் டார்லிங்” என்று அவளை அணைத்து அவள் கன்னத்தில் முத்தத்தை பதித்து அவளை கொஞ்சி சமாளிக்க, நந்தினி சிரித்துக் கொண்டே, “இப்படி ஐஸ் வச்சே என்னை உருக்கிராதடி.. போ போய் குளிச்சுட்டு கிளம்பு.. அந்த ராட்சஷி லேட்டா போனா நம்மளை வச்சு செஞ்சிரும்” என்று சொல்லிக் கொண்டே குளியல் அறைக்கு சென்றாள்.
இங்கே இவ்வளவு கலவரம் நடந்தும் இது எதையும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் வர்ஷு என்கிற ப்ரியவர்ஷினி. அதை கண்ட ஸ்ரீ ‘நான் மட்டும் தூங்காம அதிகாலை(?) 8.15க்கு எழுந்துட்டேன்.. இவ மட்டும் எப்படி நிம்மதியா தூங்கலாம்?? இரு உன்ன தூங்க விடாம பண்றேன்’ தன்னுடைய சிறிய மூளையை கசக்கி திட்டம் ஒன்றை தீட்டி அதை நிறைவேற்றி விட்டு வெற்றி புன்னகையோடு அறைக்கு வெளியே காத்திருந்தாள்.
“ஹய்யோ அம்மா பல்லி!!! பல்லி!! என்னை யாரச்சும் காப்பாத்துங்க, ஹேய் நந்து!! ஸ்ரீ!! எல்லாரும் எங்க டி போய் தொலைஞ்சிங்க?? என்னை வந்து காப்பாத்துங்க ” என்று ஹய்(high) டெசிபெலில் கத்திக் கொண்டிருந்தது வேற யாரும் இல்லை சாட்சாத் நம்ம வர்ஷு தாங்க. இவள் கத்தியதில் குளியல் அறையில் இருந்து வேகமாக வந்த நந்து, “ஹேய் வர்ஷு என்னாச்சுடி?? எதுக்கு இப்படி கத்துன?? நான் பயந்தே போய்ட்டேன்” என்று கேட்டுக் கொண்டிருந்தாள். வர்ஷுவின் கண்களுக்கோ நந்து தன்னைக் காக்க வந்த ரட்சகியாகவே தோன்ற வேகமாகச் சென்று அவளைக் கட்டிக்கொண்டவள் ” நந்து.. நந்து…” என்று அதையே பிதற்றிக்கொண்டு கிட்ட தட்ட அழுது விடும் நிலையில் இருந்தாள்.
அப்பொழுது ஒன்றும் அறியா பிள்ளை போல வந்த ஸ்ரீ, “வர்ஷு குட்டி என்னாச்சு ஏன் அப்படி கத்துன??” என்று அவளைக் கேட்டாள். நந்துவோ “வர்ஷு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கேக்குறோம்ல என்னாச்சுனு சொல்லு டி. நீ சொன்னா தான எங்களுக்கு தெரியும்” என்று கேட்டுக்கொண்டே அவளின் முதுகை தடவிக் குடுத்து அவளை சமாதானம் செய்ய, கொஞ்ச நேரத்தில் தெளிந்த வர்ஷு, “நந்து என் போர்வைக்குள்ள பல்லி வந்திருச்சு டி” என்று பாவமாகக் கூறினாள்.
நந்து, “வாட்ட்ட்?? சான்சே இல்லை.. உனக்கு பல்லினா எவ்வளவு பயம்னு தெரிஞ்சு தான நம்ம ரூம் அஹ் அவ்வளவு சுத்தம் பண்ணி நாப்தலின் பால்ஸ் கூட போட்டு வெச்சிருக்கோம். நம்ம ரூம்ல பல்லியே இல்லை டி. நீ வேற எதாச்சும் பார்த்து பயந்துருப்ப” என உறுதியாக அவள் கூற்றை மறுத்தாள்.
உடனே ஸ்ரீயும், “அதான நம்ம ரூம்ல எப்படி பல்லி வரும் நீ கனவு எதாச்சும் கண்டிருப்ப பேபி” என்றாள் சிரிப்பை உள்ளடக்கிய குரலில்.
“இல்லை ஸ்ரீ.. நிஜமாவே பல்லி தான்.. ப்ளீஸ் ஸ்ரீ அதை கண்டுபிடிச்சு வெளிய தூக்கி போடு டி ” என்று கெஞ்சினாள் வர்ஷு.
ஸ்ரீ யோ ‘கஷ்டப்பட்டு பல்லிய தேடிக் கொண்டு வந்து உன்னோட போர்வைக்குள்ள போட்டதே நான் தான் மறுபடியும் என்னையே தேட சொல்லுறயே டார்லிங்’ என்று தன் மனதோடு பேசிக் கொண்டு, “நீ கேட்டால் நான் உயிரை கூட குடுப்பேன் கேவலம் இந்த பல்லிய பிடிக்க மாட்டேனா செல்லக்குட்டி? ” என்று கூறிக் கொண்டே அந்த பல்லியை தேடி எடுத்து வெளியில் போட்டு விட்டு வந்தாள்.
நந்துவோ ஸ்ரீயை சந்தேகமாக பார்த்துக் கொண்டே, “ஸ்ரீ உண்மையை சொல்லு நீ தான இப்படி பண்ண , பொய் சொல்ல ட்ரை பண்ணாத உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும் நீ சிரிச்சத நான் பார்த்தேன்” என்று அவள் காதைப் பிடித்து கிள்ளினாள்.
“அய்யோ வலிக்குது நந்து காதை விடு , ஆனாலும் நந்து நீ இவ்வளவு அறிவாளிய இருக்க கூடாது உனக்கு வரப்போறவன் ரொம்ப்பப பாவம்” என்று அவளை கிண்டல் செய்து அதற்கும் சேர்த்து நந்துவிடமும் வர்ஷுவிடமும் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டாள்.
“ஹேய் 8.30 ஆச்சு டி இன்னும் 3 பேரும் கிளம்பாம விளையாடிட்டு இருக்கிங்க , ஃபர்ஸ்ட் பீரியட் ராட்சஷியோடது டி. நான் கிளம்பி 10 நிமிசம் ஆச்சு சீக்கிரம் கிளம்பி வாங்கடி” என்று வாசலில் நின்று கத்திக் கொண்டிருந்தாள் நிஷா.
வர்ஷுவோ அசால்டாக “அட சின்சியர் சிகாமணி 9 மணி க்ளாஸ்க்கு 8.20 க்கே போனா உனக்கு சிலை வைக்க போறாங்களா.. உன்னோட பொறுப்புணர்ச்சிக்கு அளவே இல்லாமல் போய்க்கிட்டு இருக்கு. சரி உள்ள வந்து எங்க 3 பேரு நோட்ஸ்லாம் எடுத்து வை நாங்க கிளம்புறோம்” என்று கூறிவிட்டு குளிக்க சென்றாள். நிஷா முணகிக் கொண்டே வர்ஷு சொன்னதை செய்து முடித்தாள்.
அவர்கள் குளித்து விட்டு வருவதற்க்குள் நம்முடைய கதாநாயகியை பற்றி பார்த்து விடலாமா?? ஸ்ரீ எங்கிற தன்யஸ்ரீ!! ‘நல்லசிவம்-சாருமதி’ தம்பதியரின் செல்ல புதல்வி. சராசரி உயரம், கோதுமை நிறம், மாசு மறுவற்ற தேகம், சுறுக்கமா சொல்லணும்னா ’50 கிலோ தாஜ்மஹால்’. ஒரே தம்பி ‘அஷ்வின்’ தற்போது +2 படித்துக் கொண்டிருக்கிறான்.
அப்பா கோயம்புத்தூரில் சொந்தமாக ‘மதி டெக்ஸ்டைல்ஸ்’ என்று பெரிய ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். அம்மா இல்லத்தரசி. ஸ்ரீ சென்னையில் உள்ள பிரபலமான பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு ‘ computer sceience and engineering ‘ படித்துக் கொண்டு இருக்கிறாள். நந்து, வர்ஷு, நிஷா, மது இவளின் ஆருயிர் தோழிகள். நந்துவும் ஸ்ரீயும் சிறு வயது முதல் ஒன்றாக வளர்ந்ததால், ஸ்ரீயைப் பற்றி நந்துவிற்கு தெரியாதது ஏதுமில்லை.
அய்யோ அதுக்குள்ள அவங்க கிளம்பிட்டாங்களே ஹீரோயின் பற்றி இனிமேல் கதையில பார்த்து தெரிஞ்சுக்கலாம். இப்போ அவங்க கூட போகலாம் வாங்க .
நால்வரும் விடுதியில் இருந்து கிளம்பி கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கையில், “உங்களை கிளப்பி கூட்டிக்கிட்டு வரதுக்கு பதிலா நான் 4 எருமை மாடு மேய்ச்சுரலாம்.. முடியலடா சாமி” என்று நிஷா புலம்பிக் கொண்டே வந்தாள்.
வர்ஷுவோ, “இன்னைக்கு தான் டி உண்மையை பேசிருக்க” என்றாள்.
நந்து புரியாமல் “என்ன டி உண்மை?” என்று கேட்க,
“அதான் டி இவ எருமை மாடு மேய்க்க தான் லாயக்குனு ஒத்துக்கிட்டாளே, அத சொன்னேன்” என்றாள் வர்ஷு. அதை கேட்டு கடுப்பான நிஷா அவளை அடிக்க துரத்திக் கொண்டு ஓடினாள்.
இது எதிலும் பங்கு கொள்ளாமல் ஸ்ரீ அமைதியாக நடந்து வர, அதை கவனித்த நந்து, “என் ஸ்ரீ குட்டிக்கு என்னாச்சு இவ்வளவு அமைதியா இருக்க மாட்டாளே” என்று வினவினாள். சட்டென்று சுதாரித்த ஸ்ரீ முகத்தில் புன்னகையை பூசிக்கொண்டு “அதெல்லாம் ஒன்னும் இல்லை நந்து!! அம்மா நேத்துல இருந்து ஃபோன் பண்ணவே இல்லை நான் பண்ணாலும் எடுக்கலை அது தான் என்னாச்சுனு யோசிச்சுட்டு இருந்தேன் ” என்று சமாளித்தாள்.
அவளை நம்பாத பார்வை பார்த்த நந்து, “எனக்கு உன்னை 20 வருஷமா தெரியும் ஸ்ரீ. நீ எதை நினைச்சு கஷ்டப்படுறனு எனக்கு புரியுது , எல்லாம் சரி ஆகிடும் , எல்லார் முன்னாடியும் இப்படியே இருக்காத ஸ்ரீ முகத்த சந்தோஷமா வச்சுக்கோ ” என்றாள். பேசிக்கொண்டே அவர்கள் இருவரையும் அடைந்தார்கள். அப்போது அவர்களை நோக்கி மது வந்து கொண்டிருந்தாள்.
“ஹேய் எருமைங்களா எவ்ளோ நேரம் டி காத்திருக்கது ஃபோன் பண்ணா ஒருத்தி ஆச்சும் எடுக்குறிங்களா உங்களுக்கெல்லாம் எதுக்கு ஃபோன்” என்று மது பொரிந்து கொண்டிருக்க, அதை எதையும் கண்டு கொள்ளாத நிஷா, “மது!! அம்மா இன்னைக்கு பிரியாணி செஞ்சு குடுத்துருக்காங்க போல, வாசனை ஹாஸ்டல் வரைக்கும் தூக்குது” என்று சாப்பாடை மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தாள்.
அவள் செய்கையில் மேலும் கடுப்பான மது ” ஹேய் பூசணி!! சோத்து மூட்டை!! எப்போ பாரு சாப்பாடு சாப்பாடு!! இனிமேல் சாப்பாடை பத்தி பேசுன வாய் இருக்காது ” என்று அவளை எச்சரித்தாள்.
அதை கேட்டு அனைவரும் சிரிக்க நிஷாவோ அதை சட்டை செய்யாது, “நீ என்ன திட்டுனாலும் இன்னைக்கு பிரியாணி கண்டிப்பா எனக்கு தான். சரி என்னை கிண்டல் பண்ணாம ஒழுங்கா க்ளாஸ்க்கு போகலாம் வாங்க” என்று அவர்களை அழைத்துக்கொண்டு வகுப்பறை நோக்கிச் சென்றாள். அவளை தொடர்ந்து மற்ற நால்வரும் சென்றனர்.
“மே ஐ கம் இன் மேம்?” என்று கோரசாக ஐந்து குரல்கள் வகுப்பறை வாயிலில் கேட்டன. அவர்களை திரும்பி தனது நெற்றிக்கண்ணை கொண்டு முறைத்தார் துணை பேராசிரியர் மஹா (அதாங்க நம்ம ராட்சசி).
“வாட் இஸ் தி டைம் நவ்?” என்று அவர்களை பார்த்து மஹா கோபமாக கேட்க, ஸ்ரீயோ “இவ்ளோ வயசாகுது இன்னும் மணி பார்க்க கூட தெரியதா சோ பிட்டி” என்று அவர்களுக்கு மட்டும் கேட்கும் குரலில் ரன்னிங் கமெண்ட் குடுத்துக் கொண்டிருந்தாள்.
அதை கேட்டு அவர்கள் சிரிப்பை அடக்கிக் கொண்டு நிற்க, அதை கண்டு மேலும் கோபமான ஆசிரியர், “வந்ததே லேட் இதுல சிரிப்பு வேற இர்ரிடேட்டிங் இடியட்ஸ்!! செகென்ட் யூனிட் ஃபுல்லா நீங்க 5 பேரும் தான் நெக்ஸ்ட் வீக் செமினார் எடுக்கணும். இது தான் உங்களுக்கு தண்டனை நவ் கெட் இன் அண்ட் லிஸ்டன் கேர்ஃபுல்லி” என்று உள்ளே வர அனுமதி தந்தார். நந்து “நம்ம செமினார் எடுக்குறது அவங்களுக்கு தான் தண்டனை!! இது புரியாம லூசு மாதிரி தண்டனை குடுத்துருச்சே” என்று கமெண்ட் குடுத்துக் கொண்டிருந்தாள். ஐவரும் சென்று தங்களின் ஆஸ்தான இடமான கடைசி பென்ச்சில் அமர்ந்தனர்.
ஆசிரியர் மெசின் லேர்னிங் பற்றி தீவிரமாக விளக்கிக் கொண்டிருக்க ஸ்ரீ நந்துவின் காலை சுரண்டினாள். நந்து, “என்னடி ?” என கரும்பலகையில் கண்ணை வைத்துக் கொண்டே வினவ,
ஸ்ரீ, “நானும் ரொம்ப நாளா பாக்குறேன் இந்த சுமார் மூஞ்சி குமாரு உன்னையே வெறிக்க வெறிக்க பார்க்குறான் என்ன டி மேட்டர்?” என மிகவும் சுவாரசியமாக கேட்டாள். நந்து குழப்பத்துடன் “சுமார் மூஞ்சி குமாரா ? யாரு டி அது ?” என அவளிடமே பதில் கேள்வி கேட்க, அவளைக் கண்டு கேலியாக புன்னகைத்த ஸ்ரீ “உனக்கு தெரியாதுனு நான் நம்பிட்டேன் டி . அதான் அந்த அருண்” என்று பதிலளிக்க, நந்து கடுப்புடன் “ஹேய் லூசு அவன் ஒன்னும் என்னை பார்க்கலை வேற எங்கயாச்சும் பார்த்திருப்பான்” என்று மலுப்பினாள். ஸ்ரீ சிரித்துக் கொண்டே “நம்பிட்டேன் டி நடத்து நடத்து” என்று அவளை கிண்டல் செய்து சிரித்து கொண்டிருந்தாள்.
” தன்யஸ்ரீ அண்ட் நந்தினி கெட் அப் ” என்று மஹா பத்ரகாளிபோல் கத்தினார்.
“நீங்க எல்லாம் எதுக்கு க்ளாஸ்க்கு வரீங்க?? படிக்க பிடிக்கலைனா வராதீங்க. வந்து மத்த பசங்க படிக்கிறதயும் தொல்லை செய்யாதீங்க கெட் அவுட் ஆஃப் மை க்ளாஸ்” என்று சொல்லிவிட்டு பாடத்தை தொடரப் போனார். “சாரி மேம் இனிமேல் இப்படி நடக்காது” என இருவரும் மன்னிப்பு கேட்டனர்.
அவரோ கடுப்புடன், “நீங்க இப்போ போகலைனா நான் பாடம் நடத்த மாட்டேன் “என்று கூறி புத்தகத்தை மூடி வைத்து விட்டார். ‘நீ நடத்துனாலும் ஒன்னும் புரியாது’ என்று மனதுக்குள் பேசிக்கொண்டு வெளியே “சாரி மேம் ” என்று சொல்லி விட்டு இருவரும் வெளியேறினார்கள்.
“நந்து செல்லம் இப்படி முறைக்காத பாரு வெளிய எவ்ளோ காத்தோட்டமா இருக்கு.. மழை வர போற மாதிரி ஜில்லுனு இருக்கு.. வா நம்ம கேன்டீன்ல போய் சூடா ஒரு டீ சாப்ட்டு பொறுமையா அடுத்த பீரியட் வரலாம்” என நந்துவை சமாதானம் செய்து கேன்டீனுக்கு அழைத்து சென்றாள் ஶ்ரீ.
“நந்து நான் டீ வாங்கிட்டு வரேன் இங்கயே நில்லு” என்று சொல்லிவிட்டு ஸ்ரீ உள்ளே சென்றாள். டீ கப்களோடு வெளியே நந்துவின் அருகே நடந்து வந்தவள் தூரத்தில் தங்களை நோக்கி வந்து கொண்டிருந்த ‘அவனைப்’ பார்த்து அப்படியே உறைந்து நின்றாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இனிய ஆரம்பம் ♥️
அதிகாலை 8.15 🤣🤣
நந்து புருஷன் பாவம் தான். இப்படி அவள ஆளாளுக்கு கட்டிபிடிச்சு கொஞ்சறீங்களே அவனுக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க.
காலேஜ் friendship happy தான், அதிலும் hostel friendship இன்னும் ஜாலியா இருக்கும்.
Friends counter அடிக்கிறது நல்லா இருக்கு.
வாழ்த்துகள் 👏🏼
Haha thank you so much sis❤️❤️poga poga innum galatava pogum.. college days epayum golden days than.. ilaya sis.. thank u so much for your comment sis❤️😀 happy reading