
அத்தியாயம்-46
அனைவரும் விண்ணை நோக்க, “உங்களுக்கான அத்தனை புதிர்களையும் தகர்த்துட்டீங்க. இப்ப உங்களுக்கான புதையலை நீங்க தான் கண்டுபிடிக்கனும்” என்று அசரீரீ கூறியது!
அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,
“இந்த பயணம் உங்களுக்கு உணர்த்திய உணர்வுதான் உங்களுக்கான புதையல். கண்ணை மூடி அதை உள்வாங்கி உணருங்க. அதை புரிஞ்சுக்கோங்க. உங்க புதையலான அவ்வுணர்வு உங்களுக்குள் தோன்றி உங்களை உங்க உலகத்துக்கு அனுப்பி வைக்கும்” என்று கூறிய அசரீரீ மெல்ல மறைந்தது.
அனைவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“பயணம் உணர்த்தின உணர்வா? எதை சொல்ல வராங்கனே புரியலையே?” என்று ப்ரியா கேட்க,
“ஒவ்வொருத்தருக்கும் இந்த பயணத்தின் மீதான கருத்து வேறுபடும் தானே? அப்படி உன் பார்வைல இந்த பயணம் உனக்கு எதை உணர்த்திச்சுனு கண்ண மூடி யோசி. கைஸ் வீ கேன்” என்று மதி கூறினான்.
எட்டு பேரும் தங்கள் கரங்களைக் கோர்த்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டனர்.
கண்களை மூடிக் கொண்ட அகா, அகர் இருவருக்கும் அவள் மணிவயிற்றில் உருண்டு கொண்டிருக்கும் குழந்தையின் நிழலுருவே மின்னியது!
பேச்சுவாக்கில் ‘அப்பா.. கொஞ்ச நேரம் வாய்ப்பு கிடைச்சா வாயிற்றை இறக்கி வச்சுட்டு எடுத்து மாட்டிக்கலாம் போல’ என என்றோ அவள் கூறியதுண்டு தான்!
‘ரொம்ப முடியலைனா கழட்டி வைனு சொல்லும்படி இது பேக் பேகும் இல்லடா’ என அவள் வயிற்றை வருடி அகர்ணனுமே கூறியிருக்க,
இன்று கழற்றி வைத்த பின்புதான் அதன் அருமையை உணர முடிந்தது இருவருக்கும்!
மேலும் அவளது குரல்வளம் பறிக்கப்பட்டதில், அவளது விழி பேசி தான் புரிந்துகொண்ட அழகிய மொழிகள் தற்போது பூதாகரமாய் தெரிந்ததையும், அதில் தேங்கியிருந்த தங்கள் நேசத்தையும் அகர்ணன் உணர, தம்பதியர் இருவர் இதழும் புன்னகைத்தன!
அவர்கள் தலைக்குமேல் அவர்களை அழைத்துச் செல்வதற்குத் தயாராய் ஒளிவட்டம் உருவானது!
அடுத்ததாக ப்ரியா மற்றும் விஷ்வேஷின் மனதில் தோன்றியது அவர்கள் மகன் விஜயனே!
மகனை வைத்துக் கொண்டு எங்கும் செல்ல இயலவில்லை என்ற வருத்தம் இருந்தது! அது நியாயமும் கூட! ஆயினும் அவன் இல்லாத இத்தருணத்தில் அவனுக்காக இருவர் மனமும் கொண்ட ஏக்கம் சொல்லில் வடிக்க இயலாதது!
அதுபோக, அளவிற்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சென, இருவருக்கும் கிடைத்த மாய சக்தி தெளிவுர விளக்கியிருந்தது!
இருவர் கரத்தின் பிடி மேலும் இறுகி, அவர்கள் இதழ்கள் மெல்ல “விஜய்” என முனுமுனுக்க,
அவர்கள் தலைமேல் ஒளிவட்டம் உருவானது!
மதி ஜான் இருவருக்குமே அவர்களது புரிதலே மனதில் தோன்றியது! அவள் வாய் ஓயாது பேசுகிறாள் என்றாலும் கூட, தனக்காக ஒன்றெனில் தனக்கு துணையாய் வருவது தன்னவளே என்று மதி மனதார உணர்ந்தான். மேலும் விளங்குகளுடான பந்தம் அவனுக்கு விளங்கினங்களின் மன உணர்வுகளை ஆராய சுவாரசியமாய் இருந்தது!
ஜான்விகாவிற்கு காது கேட்காத நிலையிலும் கடவுள் கொடுத்த கண் செய்த அபார உதவி, பிறவியிலேயே காது கேட்காத பிள்ளைகளின் உணர்வுகளை உணர்த்தியிருந்தது!
இருவரது கோர்த்துக்கொண்ட கரங்கள் கனிவு பெற, அவர்கள் தலைமேல் ஒளிவட்டம் உருவானது!
மற்ற ஜோடிகளைப்போல் துரு மற்றும் இளாவிற்கு பெரிதாக ஏதும் தோன்றவில்லை!
இளாவிற்கு துருவனின் காதல் உணர முடிந்தது, துருவனுக்கு அவள் தன் காதலை உணர்ந்துவிட்டாள் என்பதை உணர முடிந்திருந்தது.
அவர்கள் தலைமேலும் ஒளிவட்டம் தோன்ற, எட்டு பேரும் சுழலுக்குள் இழுபட்டு, காலம், பூமியை கடந்து தங்கள் வீட்டு மொட்டை மாடியில் வந்து பொத் பொத்தென விழுந்தனர்!
“ஆ..”
“ஆத்தாடீ..”
“அம்மே..”
என பல குரல்கள் ஒலிக்க தங்கள் இடுப்பைத் தாங்கிக் கொண்டு உருண்டனர்.
சட்டென எழுந்த அகா ஒட்டிய தன் வயிற்றை காண, மெல்ல காத்து ஊதும் பலூனைப் போல் பெரிதாகி உள்ளே தன் ஐந்து மாத கருவின் அசைவை உணர்ந்தாள்.
அதில் கண்கள் கலங்கி அவளுள் ஒரு ஆசுவாச பெருமூச்சு எழ,
கீழிருந்து குழந்தையுடன் வந்த விஷ்வேஷின் அன்னை, “குழந்தை அழுதுடா கண்ணா” என்று அவளிடம் நீட்டவும் வாரி அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தாள் பிரியா.
மருமகளை வித்தியாசமாய் பார்த்தவர் மகனைப் பார்க்க, “ஒ..ஒன்னுமில்ல மம்மீ.. பாசம்” என்று சமாளித்து அவரை அனுப்பி வைத்தான்.
தானும் மகனையும் மனைவியையும் சேர்த்து அணைத்துக் கொண்டவன் கண்கள் மெல்லிய கண்ணீர் துளியை சிந்த,
ஜான் மதியை தாவி அணைத்துக் கொண்டு “லவ் யூ புருஷா” என்றாள்.
சிரித்தபடி அவள் நெற்றி முட்டிய மதி, “ஆல்வேஸ்.. லவ் யூ டூ” என்க,
மூன்று ஜோடிகளையும், கோர்த்திருந்த தங்கள் கரத்தை இன்னும் கூட பிரித்துக் கொள்ளாத வண்ணம் அமர்ந்து பார்த்திருந்தனர், இளநகை மற்றும் துருவன்.
சில நிமிடங்களில் நிகழ்வு மீண்டு அனைவரும் பெருமூச்சு விட்டு ஆசுவாசம் அடைந்தனர்!
அனைவரும் முந்தைய நாள் இரவிற்கு திரும்பியிருப்பது அங்கிருந்த தின்பண்டங்கள், தண்ணீர் போத்தல்கள் மற்றும் அந்த மாயாஜால சீட்டின் மூலம் தெரிந்தது!
அதை எடுத்த அகநகை, “நாம காலேஜ் டூர் போயிருந்தப்ப ஒரு மேஜிக் பண்ற தாத்தாவைப் பார்த்தோம் நினைவிருக்கா? அவரா தான் என்னை கூப்பிட்டுக் குடுத்தார்” என்று கூற,
“யாரு என்ன கொடுத்தாலும் வாங்கிடுவியாடி?” என்று அகர்ணன் கேட்டான்.
அவனை முறைத்தவள், “அவர் சின்ன சின்னதா மேஜிக் பண்ணவும் அதை பார்க்க யாருமே நிக்காம நாந்தான் போய் நின்னேன். கூட இந்த பக்கிகளும் வந்ததுக.. மனம் நெகிழ்ந்து கொடுக்குறார் போல வயசான காலத்துல அவர ஏன் ஏமாத்தனும்னு வாங்கினேன்.. இப்படிலாம் நடக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்?” என்று கூற,
அதற்கு மறுமொழி ஆற்ற இயலாமல் அனைவரும் மௌனம் காத்தனர்!
சில நிமிடங்கள் கழியவும், “சரி சரி போதும்.. நடந்ததையே நினைச்சுட்டு இருக்காம அதை தலையை சுத்தி தூர போட்டுட்டு போய் எல்லாரும் தூங்குங்க” என்று மதி கூறினான்.
அனைவருக்கும் அதுவே சரியென்று பட, மெல்ல எழுந்து அவரவர் வீட்டு மாடிக்கு சென்றனர்.
அகநகையை பாந்தமாய் பிடித்துக் கொண்டு முன்னே சென்ற அகர்ணன் கதவை பூட்டும் தருவாயில் தங்களோடு இளநகை வராததை உணர்ந்து எட்டிப் பார்க்க,
துருவனின் கரத்தை இன்னமும் விடாது பிடித்திருந்தவள் அவனிடம் எதையோ பேச ஆசைப்பட்டும் பேச இயலாததைப் போல் தடுமாறி நின்றாள்.
அகர்ணனைக் கண்ட துருவனோ “இளா..” என அவளை சுயம் மீட்க,
“நா.. நான் உங்ககிட்ட பேசனும்” எனத் தடுமாறினாள்.
“அகர் வெயிட் பண்றார் போல” என்று துரு தயங்க,
“ஓ..” என்றபடி பின்னே திரும்பிப் பார்த்தவள், “நாளைக்கு பேசலாமா?” என்று கேட்டாள்.
“எங்க?” என்று அவன் கேட்க,
“பக்கத்துல பார்க்குக்கு.. காலைல பத்து மணி போல” என்றாள்.
“ஓகே..” என்று உள்ளுக்குள் குதூகலத்தை மறைத்தவனாய் கூற,
“ம்ம்..” என்றவள் “குட் நைட்” என்றுவிட்டு அப்போதே அவன் கரத்துடன் இன்னமும் தன் கரம் கோர்த்திருப்பதை ரசித்தவளாய் அதனை விடுவித்துக் கொண்டு சென்றாள்.
அவள் சென்றதை உறுதி செய்துக் கொண்டவன் “யாஹூ..” என்று காற்றில் கரத்தை குத்தி குதிக்க,
“டேய்.. வீடு இடிஞ்சு உள்ள போய்ற போறடா” என்று மதி கூறினான்.
“டேய்.. நீயின்னும் தூங்க போவலையாடா?” என்று துருவன் வினவ,
“எங்க?” என்று தன் மடியைக் காட்டினான்.
அவன் மடையில் தன் தலையை புதைத்தபடி ஜான்விகா ஆழ்ந்த நித்திரைக்கு சென்றிருக்க,
அதில் சிரித்துக் கொண்டவனாய் துருவன் “குட் நைட் டா” என்றுவிட்டுக் கீழே செல்லவும், மனையாளை மார்பில் கிடத்திக் கொண்டு மதியும் உறங்கினான்.
மறுநாள் காலை பத்து மணி எப்போதடா வரும் என்று பெரும் ஆர்வத்துடன் துயில் கொண்ட துருவனுக்கு அதிகாலையே விழிப்பு வந்திட்டது!
‘அய்யோ பெருமாளே நேக்கு வெக்க வெக்கமா வருதே!’ என்று காலை எழுந்ததும் அவள் என்ன பேசப் போகிறாளோ என்று வண்ண வண்ணமாய் கனவு கண்டவாறு குளித்து தயாரானவன், அவளுக்குப் பிடித்த இளநீல நிறத்தில் சட்டையும் கருநீல ஜீன்ஸுமென தயாரானான்.
தான் எழுப்பும் முன்பே விரைவே எழுந்து தயாராகி வந்த மகனை பதினோராம் அதிசயமாய் (ஏழு அதிசயம் ப்ளஸ் நம்ம மூன்று கதைகளில் நிகழ்ந்த ஒவ்வொரு அதிசயம்னு அல்ரெடி பத்து ஆச்சு) கண்ட அவனது அன்னை வித்தியா “என்னடா? உங்கனவுல வந்து சேவல் கெழக்கால கூவிடுச்சா என்ன? ஆபிஸ்கு போனும்னாலே நீ அவ்வளவு சீக்கிரம் எழுந்திரிக்க மாட்ட, இன்னிக்கு எந்த கோட்டைய கட்ட இம்பூட்டு வேகமா எழுந்த?” என்று கேட்டார்.
அன்னையைக் கண்டு தன் முப்பத்தியிரண்டு பற்களையும் பற்பசை விளம்பரத்துக்காரனைப் போல் காட்டியவன், சட்டென சாஷ்டாங்கமாய் அவர் காலில் விழுந்திட,
தன் அறையிலிருந்து அறைகுறை தூக்கத்தில் வெளியே வந்த அவன் தந்தை ஆதவன் இதைப் பார்த்து நெஞ்சு வலி வராத குறையாய் பதறிப் போனார்.
“என்னங்க ஆச்சு நம்ம புள்ளைக்கு” என்று வித்தியா கணவரை நோக்க,
“ம்மா.. ப்ளஸ் மீ” என்றான்.
“ஆத்தா.. அடேய்.. நல்லாருடாடேய்.. முதல்ல எழுந்திரி. காலை வாரிடுவியோனு பயமா இருக்கு” என்று அவனை எழுப்பியவர், “ஏன்டா.. வேலை எதும் போயிடுச்சா என்ன?” என்று கேட்டார்.
“ம்மா.. ஏம்மா?” என்று பல்லைக் கடித்தவன் தந்தையைக் காண, ‘ஆத்தி அடுத்து நாமதானா? வேட்டிய கீட்டிய உருவிடப்போறான்’ என்று தலைதெறிக்க உள்ளே ஓடிவிட்டார்.
தன் பெண் குழந்தை கிருத்திகாவை தோளில் தட்டியபடி வெளியே வந்த வித்வன் தம்பியைக் கண்டு, “எங்கடா போகப்போற?” என்க,
அடுத்து தடாலடியாய் அண்ணன் காலில் விழுந்தான்.
‘இவனெல்லாம் நல்ல நாள்லயே நம்ம கால்ல விழ மாட்டானே’ என்று எண்ணியபடி “தம்பியா போயிட்ட.. நல்லாருந்து தொலை” என்று வித்வன் வாழ்த்த,
புன்னகையுடன் எழுந்தவன் “ம்மா.. எல்லாரும் சும்மா சும்மா எனக்கு சாபம் விடுவீங்கள்ல.. இப்ப நானும் காதல் மன்னன்னு ஒருத்தி மனசுல இடம் பிடிக்கத்தான் போறேன்” என்று அசராமல் குண்டை வீசினான்.
“டேய் வித்வா..” என்று வித்யா நெஞ்சைப் பிடிக்க,
“டேய்.. எம்புள்ள தூங்குறா.. என்னை கடுப்பேத்தி அவளை எழுப்பிவிடாம போயிடு” என்று வித்வன் கூறினான்.
“ஹ்ம்.. உங்களுக்குலாம் பொறாமை.. வேணும்னா பாருங்க.. வரும்போது இந்த வீட்டு ரெண்டாது மருகளோடதான் வருவேன்” என்று சபதம் போல் கூறியவன், “இளா காத்து வீசுதே.. எசபோல பேசுதே..” என்று பாடிக் கொண்டே சென்றான்.
பத்து மணிக்கு ஒருமணி நேரம் முன்பே பூங்காவைச் சென்று சேர்த்தவன் அத்தனை வருட காத்திருப்பின் பொறுமையெல்லாம் இழந்தவனாய் தவித்தான்.
அவனை சொன்னதைவிட அரைமணி நேரம் காக்க வைத்த இளநகை கையில் ஒரு பரிசுப் பெட்டியோடு வர, கண்கள் பளீரிட அவளைக் கண்டான்.
புன்னகையுடன் அவன் அருகே வந்தவள், “சாரி துரு லேட்டாச்சு” என்க,
“இ..இட்ஸ் ஓகே டா” என்றவன் அவளும் இளநீலத்தில் உடை உடுத்தியிருப்பதைக் கண்டு “சேம் சுவீட் சாக்லேட்” என்றான்.
அதில் சிரித்தவளாய் பாவை பெட்டியை அவனிடம் கொடுக்க,
அதை வாங்கியவன் “எனக்கா?” என்றான்.
“இல்ல… அந்த நாயிக்கு” என்று அருகே சென்ற நாயைக் காட்டிக் கூறியவள் முறைக்க,
“ஓகே ஓகே கூல்..” என்றவனாய் அதைப் பிரித்தான்.
அழகாய் சிவப்பு நிறத்தில் இதய வடிவில் ருசிமிகுந்த குச்சி மிட்டாயும் இருதய வடிவ தேன்மிட்டாயும், கடலை மிட்டாயும், இளந்த வடையும் இருந்தன!
அனைத்துமே ‘நைன்டீஸ் கிட்ஸ்’இன் விரும்பத்தகுந்த இனிப்புகள். அதுவும் இதய வடிவில்!
அவள் அவனது முக பாவத்திற்காக ஆசையாய் காத்திருக்க, “ஏ இளா..” என்று ஆச்சரியமுற்றவன் “சேம் சுவீட் போட்டு அதுக்குள்ள சாக்லேட்டா?” என்றபடி தேன்மிட்டாயை எடுத்து அந்த இதயத்தைக் கடித்து பிய்த்து ருசித்தான்!
அவ்வளவே! அவள் முகம் காத்து போன பலூனாய் ஆனது!
“செம்மயா இருக்கு” என்று கண்கள் மூடி அவன் ரசனையோடு கூற,
“பார்க்க எப்படி இருக்கு?” என்று மீண்டும் அவன் கவனத்தை அதன் வடிவமைப்பின் புறம் திருப்பினாள்.
“ரொம்ப அழகாருக்குடி.. டேஸ்ட் செம்ம” என்று அதைப் பார்த்துவிட்டு அவன் கூற, அவள் முகமே தொங்கிவிட்டது!
அதைக் கண்டு எதையோ தான் கோட்டை விட்டது புரியவும் அதை மீண்டும் பார்த்தவன் அப்போதே அதன் இதய வடிவங்களை கண்டான்!
“ஏ..” என்று அவன் கூவ,
‘இப்ப என்னவாம்?’ என்று சோர்வாகவே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் அந்தக் குச்சிமிட்டாயை எடுத்து அதன் வடிவத்தை திருப்பிப் பார்க்க, அவள் கண்களும் பிரகாசம் அடைந்தது!
“எல்லாமே.. ஹா..ஹார்டின் ஷேப்?” என்று அவன் திணறலாய் வினவ,
‘இந்த மண்டைகிட்ட இனி சுத்தி வளைச்சு பேசுறதெல்லாம் சரி வராது’ என்று நினைத்தவளாய், “நீங்க லவ் பண்ற பொண்ணு நாந்தானே?” என்று கேட்டாள்.
சட்டென அவள் கேட்டதில் அதிர்ந்து போனவன், “இ..இளா..” என்று தடுமாற,
“சொல்லுங்க துரு” என்று ஆசையாய் கேட்டாள்.
ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டவன், “உன்னதான்.. உன்னை மட்டுமேதான்.. இன்னிக்கு நேத்திக்கு இல்ல.. எப்போமே உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. என்னோட இருபதாவது வயசுல அந்த பிடித்தத்துக்கு காதல்னு பெயர் சூட்டி என் மனசுக்குள்ளயே அந்த காதலுக்கு கோயில் காட்டி வாழ்ந்துட்டு இருக்கேன்.. எனக்கு நீன்னா உயிருக்கும் மேலடா” என்று அவள் விழிகளைப் பார்த்தபடி கூறினான்.
அவன் காதல் அவள் எதிர்ப்பார்த்தது தான்.. ஆனால் இத்தனை வருட தவம் அவள் அறிந்திடாத ஒன்றாயிற்றே! உள்ளம் உவகையில் துள்ளியது! காதல் என்றாலே சுரப்பிகளின் சதிராட்டம் மட்டுமே என்று படித்து வந்தவளுக்கு மனரீதியாய் அவை நடத்தும் அர்த்தமுள்ள போராட்டங்களை விளக்கியிருந்தான் அவன்.
கைகள் அவனை கட்டியணைக்க பரபரக்க, “எனக்கு நீங்க என்னதான் லவ் பண்றீங்கனு அ..அந்த மாயாஜால உலகத்துலயே புரிஞ்சுது.. ஆ..ஆனா இத்தனை வருஷம் எதிர்ப்பார்க்கலை துரு” என்று கூற,
“தெரியலைடி.. முதல்ல தப்புனு தோனுச்சு.. எல்லாருமே உன்னை அவங்க தங்கச்சியா பார்த்த இடத்தில் நான்.. காதலியா பார்த்தேன்.. அது தப்போனு தோனுச்சு.. ஆனா.. அந்த உணர்வின் ஆழம் என்னை மத்ததை யோசிக்க விடலை” என்றான்.
அவனை காதலாய் பார்த்து, “நான் காதலிப்பேன், ஒருத்தர் மேல காதல்ல தலைகுப்புற விழுவேன்னு ஒரு ஒரு வாரம் முன்ன சொல்லிருந்தா கூட கண்டிப்பா சிரிச்சிருப்பேன்” என்றவள் அவன் கண்களில் ஊடுறுவி, “ஆனா இப்ப..” என்று அவனைத் தாவி அணைத்துக் கொண்டு, “காதல் பித்து எப்படி இருக்கும்னு கத்துத் தந்துட்டீங்க துரு” என்றாள்.
அவள் அணைப்பில் உள்ளம் குளிர்ந்தவன் அவள் தலைகோதி, “லவ் யூ இளா” என்க,
“லவ் யூ டூ துரு” என்று உணர்வுப் பூர்வமாய் கூறினாள்.
எபிலாக்:
அந்த கடற்கறை மணலில் எட்டு பேரும் அமர்ந்திருந்தனர்.
விஷ்வேஷ் மற்றும் அமிர்தா தங்கள் இரண்டு வயது மகன் விஜயனையும், அகா மற்றும் அகர் தங்கள் ஒரு வயது மகள் அபூர்வாவையும் வீட்டில் விட்டுவிட்டு தோழமைக்கூட்டத்துடன் கடற்கறையில் நேரம் செலவிட வந்திருந்தனர்.
திருமணம் என்ற சுப நிகழ்வும், திருமாங்கல்யம் என்ற ஆதாரமும் கொண்டு இளநகையை தன்னவளாய் அங்கீகரித்திருந்த துருவன் இந்த ஒரு மாதமாய் அவளைக் காதலில் திக்கு முக்காட வைத்திருந்தான்.
“எப்படி இவ்ளோ காதலோட இத்தனை வருஷம் காத்திருந்தீங்க துரு?” என்று அவள் வாடிக்கையாய் கேட்கும் கேள்விக்கு,
“காதலுக்குக் காத்திருக்கத் தெரியும்டா பட்டு” என்று தன் வாடிக்கையான பதிலைக் கொடுத்து அவளைப் பூரிக்கச் செய்வான்!
தன்னவளை தோள் அணைத்தபடி அமர்ந்திருந்த துரு கடல் அலைகளை ரசித்துக் கொண்டிருக்க,
“யோ.. போய் பஜ்ஜி வாங்கிட்டு வாயா” என்று ஜான் மதியை வேலை ஏவினாள்.
“இப்பதானடி ரெண்டு சாப்ட?” என்று அவன் கேட்க,
“அதெல்லாம் என் கோட்டா.. நான் தனியா வந்தாளே நாலு பஜ்ஜி முழுங்குவேன்.. உள்ள என் ஜுனியர் வேற.. எனக்கு மேல அவளும் இப்பவே பயங்கரமா சாப்பிடுறா போல” என்று தன் ஆறுமாத சூழ் தாங்கிய வயிற்றைக் காட்டியபடி கூறினாள்.
“போதும் ஜான்.. வீட்டுக்குப்போய் ஜுஸ் தரேன்.. எண்ணை ரொம்ப சாப்பிடாத.. எதுக்களிக்கப்போவுது” என்று சிறு கண்டிப்புடன் மதி கூற,
நல்ல பிள்ளையாய் உடனே ஏற்றுக் கொண்டாள், தன் பிள்ளைக்காக.
“ரொம்ப அமைதியா இருக்குல?” என்று இளநகை கூற,
“அமைதியெல்லாம் இருக்கட்டும்.. முதல்ல இதுக்கு பதில் சொல்லு” என்று அகநகை அந்த மாயாஜால சீட்டுகட்டினை அவள் முன் காட்டினாள்.
அதை கண்டு அதிர்ந்த இளா, “ஏ.. இது எங்க உனக்குக் கிடைச்சுது?” என்று தடுமாற்றமாய் வினவ,
“வேற எங்க? நீ பதுக்கி வச்சிருந்த உன் ரூம்ல தான்” என்று அகா கூறியதில் அத்தனை பேரும் அவளை அதிர்ந்து பார்த்தனர்.
“ஏ.. அன்னிக்கே தூக்கிப்போட்டதா தான சொன்னீங்க?” என்று மதி பீதியோடு கேட்க,
மெல்ல தலைகுனிந்த இளா, “எனக்கு அதை தூக்கிப்போட மனசு வரலை” என்றாள்.
“அடியே.. என்னடி விபரீதமா பேசுற” என்று துருவன் கேட்க,
“உங்க எல்லாருக்கும் அந்த சீட்டினால் உருவான மாயாஜாலம் அத்தனை விரும்பத்தகாததா இருக்கலாம்.. ஆனா எனக்கு அப்படி இல்லையே” என்றவள் துருவனை நோக்கினாள்.
அவன் கண்களைப் பார்த்தபடி, “எனக்கே தெரியாம என்மேல நேசம் வச்சிருக்குறவரோட நேசத்தை அணு அணுவா உணர்த்தி புதையலா கொடுத்த மாயாஜாலம் அது. அதனால எனக்கு அது ஸ்பெஷலா ஃபீல் ஆச்சு” என்று கூற,
“ஆனா எனக்கு அப்படியில்லமா.. நானே இந்த சீட்டால தான் செத்து பொழைச்சு வந்தேன்.. அடிக்கடி நான் பேய்னே மறந்து இதுகள பாத்து பயந்ததெல்லாம் எவ்ளோ கொடுமையான பக்கங்கள் தெரியுமா?” என்று அழாத குறையாய் மதி கூறினான்.
“எனக்கும் கூட இந்த மாயாஜாலம் பிடிக்கலை.. விஜய் இல்லாம இருந்த அந்த கொஞ்ச நாட்கள்.. இப்ப நினைச்சாலும் பதறும்” என்று ப்ரியா கூற,
இளநகையின் முகம் லேசாய் வாடியது!
“எல்லாருக்கும் எல்லாமே பிடிக்கனும்னு இல்லையே” என்று அகர் தன் மச்சினிக்கு ஆதரவாய் பேச,
“நிஜமா உன் நேசம் உன்கூடவே இருக்கும்போது நிழலா ஒரு மாயம் எதுக்கு?” என்று துருவன் கேட்டான்.
“பிட்டப்போட்டுட்டான்யா” என்று விஷ்வேஷ் கூற,
நாக்கை மடித்து அவனைக் குத்துவதைப் போல் பாவனை செய்தான்.
அதில் யாவரும் சிரிக்க,
“திரும்ப இதை நாம பக்கத்துல வச்சுட்டு எதையாது பேச, அது வினையா முடியும்படி ஆயிட கூடாது இளா” என்று தமக்கையாய் தங்கையை திருத்திட அகா செப்பினாள்.
“ம்ம்.. புரியுது அகா.. தூக்கி போட்டுடலாம்” என்று மனமே இல்லாதபோதும் அகா கூறியதன் நியாயம் புரிவதால் இளா கூற,
“வாங்க.. எல்லாருமா சேந்து கடல்ல போட்டுட்டு அப்படியே காலை நனைச்சுட்டு வருவோம்” என்று ஜான் கூறினாள்.
அனைவரும் எழுந்து கடல் அலைகள் அருகே செல்ல, அலைகள் அவர்கள் பாதத்தை மென்மையாய் வருடி முத்தமிட்டது.
“சே வன்.. டூ.. த்ரீ..” என்று கத்திய விஷ் அதனை தூக்கி எறிய,
கடலின் ஏதோ ஒரு பகுதியில் தொப்பென்று விழுந்து மெல்ல மெல்ல உள்ளே மூழ்கியது!
சில நிமிடங்களில் பேசி சிரித்தபடி அனைவரும் திரும்பிச் செல்ல,
கடலில் அம்மாயாஜால சீட்டுகள் விழப்பட்ட இடத்தில் நீர் சுழல் உருவாகி அதிலிருந்து மேலே வந்த அந்த சீட்டுகள் காற்றில் மிதக்க ‘THE END’ என அவற்றில் தங்க நிற எழுத்துக்கள் மிளிர்ந்து மீண்டும் டப்பாவிற்குள் அடைபட்டு, தன்னை உயிர்ப்பிக்கும் மற்றொரு கூட்டத்திற்காக காத்திருப்பதாய் கடலோடு மிதந்து கரைசேர பயணித்தது!
-சுபம்…
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Super story da… Enaku intha mathri story romba pidikum… Romba jolly ah pochu… Antha future la nadakurathu ellam nadakave kudathu nu thonnuchu…. Ellame ai robotics irunthaa humanity ye illama poidum….
Mathiyoda scene ellam kastama irunthathu…
And laast puthayal thedi porathu jolly ah irunthathu….
Total ah super story…
Very super story sis.. sila epi read pannum pothu sirichikite read pannen.. nalla comedy & thrilling ka kondu poirunthinga sis…
Very nice story writing sis…