
அத்தியாயம்-44
இருவருக்கும் ஒன்றுமே விளங்கவில்லை. ஒருவரையொருவர் பீதியோடு பார்த்தனர்.
‘கை இல்லானாலும் பிடிக்க முடியுமா? அதென்னது? கையில்லாம எதைப் பிடிக்க முடியும்?’ என்று இளா யோசிக்க,
‘நைட்டு வரும்.. காலைல மறையும்.. அப்ப நிலாவாதான் இருக்கும்.. மினுமினுப்பேன்.. ஆனா மினுமினுக்க மாட்டேன்னா? நிலா ஜொளிக்கும் ஆனா மினுமினுக்காதுனு தானே அர்த்தம்?’ என்று துருவன் தன்னோடு கேட்டுக் கொண்டான்.
“முதலாவது தண்ணியா?” என்று இளாவும்
“ரெண்டாவது நிலாவா?” என்று துருவனும் ஆர்ப்பாட்டமாய் கேட்க,
“தவறான பதில்” என்று கூறிய கப்பல் அதிவேகமாய் சுற்றியது!
அதில் மீண்டும் குடல் கண்முன் வந்து சென்றதைப் போன்ற உணர்வில் இருவரும் ஓய்ந்து சரிந்துவிட, மூச்சு ஏகபோகத்திற்கு வாங்கியது!
துருவன் கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டவள் கலங்கிய தன் கண்களோடு அவனை ஏறிட்டு, ‘முடியலப்பா’ என்று இதழசைத்தாள்.
பற்றிய அவள் கரத்தைச் சிறு தயக்கத்தோடு தட்டிக் கொடுத்தவன், ‘ஒன்னுமில்ல’ என்று தலையசைத்துக் கண்கள் மூடி ஆறுதல் கூற, மூச்சை இழுத்து விட்டவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது!
இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு தான் எனும் பட்சத்தில், எப்படி சரியான விடையைக் கண்டறிந்து முன்னேறுவது என்று பயந்தவள், மனதை சமன் செய்யப் போராடினாள்.
ஒருவாறு தங்களை நிலைபடுத்திக் கொண்ட இருவரும் மீண்டும் கேள்வித் திரையைப் பார்த்தபடி யோசிச்சதனர்.
‘கையில்லனாலும் பிடிக்க முடியுமா?’ என்று யோசித்தபடி துருவன் பெருமூச்சை வெளியிட, சட்டென மனதில் மின்னல் வெட்டியது!
கேள்வியை முழுதாகப் படித்துப் பார்த்தான்.
‘கையில்லாதோனும் என்னைப் பிடித்திடுவான், ஆனாலும் நீடிக்க இயலாது;
என்னில் பலவகையுண்டு, அனைத்தையும் பிடித்தாலும், சுவைக்க இயலாது. நான் யார்?’ என்று மனதோடு படித்தவன், ‘எஸ்..’ என்ற குதூகலத்தோடு எழுந்து,
“முதல் கேள்விக்கான பதில் மூச்சுக்காற்று” என்று கூற,
திரை பச்சை நிறத்தில் ஒளிர்ந்து ‘சரியான விடை’ என்றது.
அதில் உற்சாகமடைந்த இளா, ‘சூப்பர்’ என்று கூறுவர, அவள் இதழில் விரல் வைத்துத் தடுத்தான்.
அதில் சுதாரித்துக் கொண்டவள், அடுத்த கேள்விக்கான பதிலை யோசிக்க, ‘நைட்ல நிலாவைத் தவிர நட்சத்திரம் தான் வரும்’ என்று தோன்றியது!
அப்போதே என்றோ இயற்பியலில் படித்தவையெல்லாம் நினைவில் உதித்தன. நட்சத்திரங்கள் மின்னுகின்றன என்று நாம் படித்திருப்போம். ஆங்கிலத்தில் ‘ட்விங்கில் ட்விங்கில் லிட்டில் ஸ்டார்’ என்று பாடலெல்லாம் நாம் கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் நட்சத்திரங்களால் மினுமினுக்க இயலாது. பூமியின் வளிமண்டலங்களை நட்சத்திரத்தின் ஒளி கடந்து வருகையில் அவ்வொளி சிதறப்படுவதன் விளைவாகவே அது மினுமினுப்பதைப் போன்று நமக்குத் தெரிகிறது. இதை ஆங்கிலத்தில் ‘refraction of light’ என்று கூறுவர்.
இதுபற்றிப் படித்தது நினைவு வரவும், “ஸ்டார்ஸ்.. ரெண்டாவது கேள்விக்கான பதில் நட்சத்திரம்” என்று இளா குதுகளமாய் கூறினாள்.
சரியான விடையென்று கூறிய கப்பல் நகரத் துவங்க,
இருவருக்கும் அப்போதே பெருமூச்சு எழுந்தது.
“ஏ எப்படிடி ஸ்டார்ஸ்?” என்று கேட்டவன், “அ..அது” எனத் தொண்டையைச் செருமி, “எப்படி ஸ்டார்ஸ்னு கண்டுபிடிச்ச?” என்று கேட்க,
லேசான சிரிப்போடு, “பிஸிக்ஸ்ல படிச்சுருக்கேன்பா.. ஸ்டார்ஸால டிவிங்கில் பண்ண முடியாது. சன் ரைஸஸ் இன் தி ஈஸ்ட்ல இருந்து டிவிங்கில் டிவிங்கில் லிட்டல் ஸ்டார்ஸ் வரை எல்லாமே தப்பா தான் சொல்லித் தந்திருக்காங்கனு எனக்கு எடுத்த டீச்சர் சொன்னாங்க. சூரியன் நகரவே நகராது. ஆனா அது உதயமாகுது, அஸ்தமனமாகுதுனு நாம சொல்றோம் இல்லையா? அதேபோல இந்த டிவிங்கிலும் தப்புதான். நட்சத்திரத்தோட ஒளி வளிமண்டலத்தைக் கடந்துவரும்போது ஏற்படும் ஒளிச்சிதறலால தான் அது அப்படி தெரியுது. அந்த மின்னும் ஆனா மினுமினுக்காதுக்கு இதுதான் அர்த்தம்” என்று கூறினாள்.
“ப்பா! சரியான அறிவாளிதான் நீயி” என்று அவன் கூற,
கண்களைச் சிமிட்டு தோள்களைக் குலுக்கிக் கொண்டாள்.
அதில் சிரித்துக் கொண்டவன் அப்படியே அயர்ந்து அமர,
தானும் அவனருகே சென்று அமர்ந்தாள்.
சில நிமிடங்கள் பொறுத்துப் பார்த்தவன், அவளிடம் ஏதோ பேச விளைவதும், தயங்குவதுமாய் இருந்தான்.
அவனது இந்த இன்ப அவஸ்தையை ரசித்தபோதும் அவனாகவே பேசட்டுமே என்று அவள் ரகசியச் சிரிப்போடு காத்திருக்க,
“இளா..” என்று மென்மையாய் அழைத்தான்.
கண்களில் எதிரொளிக்கும் பிரகாசத்தை மறைத்தவண்ணம், “சொ.. சொல்லுங்க துரு” என்றாள்.
“ஒன்னு கேட்கவா?” என்று அவன் தயங்க,
‘அய்யோ.. சொல்லப்போறாருனு பாத்தேன்.. கேட்கப் போறாரா? என்ன கேட்பாரு? அவரைப் பிடிக்குமானு கேட்பாரோ? கேட்டா என்ன சொல்ல?’ என்று மனதோடு பலவாறு யோசித்தவள், தந்தியடிக்கும் குரலில், “எ..என்ன?” என்றாள்.
“தப்பா எடுத்துக்க மாட்டியே?” என்று அவன் கேட்க,
‘போச்சு.. அப்ப அதான் கேட்கப் போறாரா? நான் என்ன சொல்ல? பிடிக்கும்னு சொன்னா அதை எப்படி ஏத்துப்பார்? எந்தப் பிடித்தமா எடுத்துப்பார்? நான் எந்தப் பிடித்தத்தை மீன் பண்ணி சொல்றது?” என்று மனதோடு அவள் யோசித்துக் கொண்டே போனாள்.
“இளா..” என்று மீண்டும் அவன் அழைக்க,
“அ..ஆங்.. சொல்லுங்க.. ச்ச.. கேளுங்க துரு” என்றாள்.
மெல்ல மூச்சை இழுத்துவிட்டவன், “நாம மட்டுந்தான் இருக்கோம்..” என்று கூற, இவளுக்கு இங்கு நெஞ்சே வெடித்துவிடும் போலானது!
‘ஆத்தீ.. இது வெவகாரமான கேள்வியா இருக்கும் போலயே’ என்று அவள் அதிர்ந்து நோக்க,
அவனோ அவளை ஏறேடுத்தும் பாராது, “பொழுது போகக்கூட ஒன்னுமே இல்லை” என்று கூறினான்.
“அ..அதுக்கு?” என்று அவள் இன்னும் பதட்டமாக, “உனக்கு ஓகேன்னா…” என்று இழுத்தவன் அவளை இன்னும் துடிக்கவிட்டு, “சண்டே மண்டே விளையாடலாமா?” என்றானே பார்க்கலாம்!
காற்று போன பலூனாய் போன அவள், ‘ஞ!?’ என விழிக்க,
“விளையாட ஒரு பந்துகூட இந்த மேஜிக் இங்க வைக்கலை. ரொம்ப போரிங்கா இருக்கு. அதான்.. ஜனவரி பிப்ரவரி, சண்டே மண்டே, ஓ மேரி இதுமாதிரி எதாவது விளையாடலாமானு கேட்டேன்” என்று தயங்கித் தயங்கிக் கேட்டான்.
‘அடப்பாவி.. நீயெல்லாம் நைட்டீஸ் கிட்லயே ரொம்ப மோசமான கிட்டா இருப்பப் போலயே’ என்றவள் மனசாட்சியில் அவனை மரியாதையின்றி தீட்டிக்கொண்டிருக்க,
அப்போதே அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“இளா..” என்று அவன் அழைக்கவும் அவன் முகம் பார்த்தவள், அந்த அப்பாவி முகத்திலேயே மொத்தமாய் ஆஃப் ஆகிப் போனாள்.
அவனைக் கண்டு அடக்கமாட்டாது சிரித்து வைத்தவள், “சின்னக் குழந்தைபோலப் பேசுறீங்க துரு” என்க, அவன் முகம் ஏனோ வாடிவிட்டது!
அது ஏனென்று தெரியாதபோதும், தான் உதிர்த்தவை அவனுக்கு விரும்பத்தக்கதாயில்ல யெனப் புரிந்தவளாய் தன் சிரிப்பை நிறுத்தி, “சரி எனக்கும் போரடிக்குது வாங்க” என்றாள்.
அவனும் அவளுடன் இணைந்துக் கொண்டு, கைகளை மடிகளில் வைத்துக் கொண்டு தட்டித்தட்டி விளையாடத் துவங்கினார்.
ஜனவரி பிப்ரவி அலுத்துப்போகவும், சண்டே மண்டே, அது அலுத்துப் போகவும், ஓ மேரி, அதுவும் அலுத்துப் போக ஸ்டோன் பேப்பர் ஸிஸ்ஸர் என்று விளையாடிக் கொண்டே போயினர்.
இது அத்தனையும் அலுத்துப்போக, “என்ன இன்னும் அடுத்த கேள்விகள் வரவேயில்லை. எல்லாம் விளையாடிமுடிச்சு போரடிக்குது” என்று இளா கூறினாள்.
“ஹ்ம்..” என்று யோசித்தவன், “நீ தான் நல்லா பாடுவியே? பாடிட்டே ஆடேன்” என்றான்.
“ஏதே?” என்று அதிர்ந்தவள், “சரியாப்போச்சு.. பாடுறதே ட்ச் விட்டுபோச்சாம். இதுல பாடிட்டே ஆடனுமாமே” என்று கூற,
“சரி ட்ரூத் ஆர் டேர் விளையாடலாமா?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி நக்கலாய் வினவினான்.
அவன் எதற்கு அடிப்போடுகின்றான் என்பது புரிந்தது! அவளால் நிச்சயம் ‘ட்ரூத்’ எடுத்திட இயலாது. காரணம் அவனே! அவன் கேட்கும் எந்தக் கேள்விக்கும் நிலையாகப் பதில் சொல்லும் மனநிலையில் அவளில்லை. எனில் ‘டேர்’ எடுத்தாலும் இதைத்தானே கூறப்போகிறான்!
‘ஊ… ப்ராடு ப்ராடு..’ எனப் பல்லைக் கடித்தவள், “நான் பாடுவேன்.. நீங்க ஆடுங்க” என்றாள். ருக்மணி பாட, பாமா ஆட.. என்பது போல் இளா பாட, துரு ஆட.. அடடா என எண்ணி விதியே வியந்து விரக்தியில் விழுந்தது.
“உனக்குப் பாட வரும் நான் பாட சொன்னேன்” என்று அவன் கூற,
“பொய்யெல்லாம் வேணாம்.. நீங்கக் காலேஜ் கல்சுரல்ஸ்ல ஆடினதெல்லாம் நான் பாத்துருக்கேன்” என்று கூறினாள்.
‘அடியே நான் ஆடி எத்தனை வருஷமாச்சு.. அதுவும் மிடில் ரோவ்ல தத்தா பித்தானு ஆடி ஓஞ்சு போங்கடானு வந்தேன்..இப்ப இதைச் சொன்னா நான் பாடியும்தான் பல மாசமாச்சுனு வருவா’ என்று நொந்துக் கொண்டவன்,
“சரி.. இந்தக் கொடுமையெல்லாம் நீ பாக்கனும்னு உன் தலையில எழுதியிருந்தா நான் என்ன செய்ய? ஆடுறதுக்கு ஏத்த பாட்டா பாடு” என்றான்.
“ஆடுறதுக்கு ஏத்த பாட்டா?” என்று யோசித்தவள், “குத்துபாட்டா?” என்க,
“நீ லவ் பாட்டுலாம் பாடினா நான் அதுக்கு எப்படி பின்ன ஆடுவேன்?” என்றான்.
‘ம்ம்.. வேறெப்படி என்கூட தான்’ என்று மனதோடு நினைத்துக் கொண்டவள், “என்னமும் ஆடுங்க. நான் எனக்கு வர்றத பாடுவேன்” என்றுவிட்டாள்.
“இதழின் ஒரு ஓரம்.. சிரித்தாய் அன்பே!
நிஜமாய் இது போதும்.. சிரிப்பாய் அன்பே” என்று அவள் பாட, அவன் அவளையே உறை நிலையில் ஏறிட்டான்.
“ம்ம்..” என்று அவனை ஆடக் கூறி அவள் கண்ணசைக்க, சிரித்தபடி எழுந்து நின்றவனும் அவள் அடுத்த வரி பாடவேண்டி தயாராய் இருந்தான்.
“என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்
சொல்லு நீ I love you
நீ தான் என் குறிஞ்சிப் பூ
என் காதல் என்றும் true
Will make sure you never feel go” என்று அவள் பாட, கால்களை லாவகமாய் மாற்றி மாற்றி அவன் ஆடிய அழகில் லயித்துப் பாவையும் எழுந்து நின்று விட்டாள்.
தற்போது ஆடுவதை நிறுத்தியவன், அவளைப் பார்த்து “ம்ம்..” என்று பாடக்கூறி கண்களால் சைகை காட்ட,
“ஓ..எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன்
நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன்
உன் நிழல் தரைப் படும் தூரம் நடந்தேன்
அந்த நொடியைத் தான் கவிதையாய் வரைந்தேன்
ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்..” என்று பாடினாள்.
அவள் பாடல் வரிக்கேற்ப தானும் ஆடியவனோ, அவள் பாடி முடிக்கும் தருவாயில் அவள் கரம்பற்றி அவளைச் சுழற்றி விட்டபடி, “சொல்லு நீ ஐ லவ் யூ..” என்க,
அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.
“நீ தான் என் குறிஞ்சிபூ. என் காதல் என்றும் ட்ரூ..Will make sure you never feel go” என்றபடி சுழற்றி அவளைப் பிடித்து நிறுத்த, அந்நொடி இருவரின் மூச்சுக்காற்றின் ஓசை மட்டுமே கப்பலை நிறைத்தது!
இருவரும் தத்தமது உறை நிலையிலிருந்து வெளிவர முடியாது நின்றிருக்க, தன் பயணத்தை நிறுத்திய கப்பலின் குலுங்களில் தொம் தொம்மென விழுந்த இருவரும் நினைவு மீண்டனர்.
“ஆ..” என்று வலியில் முகம் சுறுக்கி இருவரும் திரும்ப, திரையில் அவர்களுக்கான மூன்று கேள்விகள் ஒளிர்ந்தன!
‘உலகை ஆளும் மூவெழுத்துச் சொல்..
முதலெழுத்து நேத்திர அணியாய்,
கடையிரண்டு தொழில் விகுதியாய்..’
என்ற முதலாம் கேள்வியும்,
‘பலர் கேட்டதுண்டு,
எவரும் பார்த்ததில்லை!
சொல்வதையே சொல்லிடும்,
ஆனால் கிளிப்பிள்ளையுமில்லை!
அது என்ன?’
என்ற இரண்டாம் கேள்வியும்,
‘உருவென்று ஏதுமில்லை,
ஆனாலும் கற்பனை வடிவம் உண்டு!
அதுவன்றி யாக்கையில்லை என்பர்,
ஆனால் அம்மாயையன்றி உயிரில்லை!
உண்மையை உரக்கச் சொல்லியும் அது நீதிமன்றமில்லை,
உணர்ச்சிகளை எடுத்துச் சொல்லியும்
அது மருத்துவரில்லை!
அது என்ன?
என்ற மூன்றாம் கேள்வியும் ஒளிர்ந்தது!’

