
அத்தியாயம் 41
இடிந்து போய் அமர்ந்திருந்த செவ்வந்தியை தேற்றும் விதமாக “அம்மா! நீங்க எத பத்தியும் யோசிக்காதீங்க.. அண்ணாக்கு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்…” என்று அஸ்வந் சொல்ல
ஆவேசமாக எழுந்த செவ்வந்தி அபர்ஜித்தை நெருங்கி “தேவையாடா உனக்கு இது.. அப்படி என்னடா காதல்.. இப்போ உன் வாழ்க்கையே போச்சே.. அவள் உன்ன விரும்புறாளான்னு கூட தெரியாம உன் வாழ்க்கைய நீயே அழிச்சுக்கிட்டயே..எதுக்கு டா உனக்கு இப்படி புத்தி போச்சு…” என்று அபர்ஜித்தை அடிக்க, அஸ்வந் ஓடிவந்து செவ்வந்தியைப் பிடித்துக் கொண்டான்.
“அம்மா பொறுமையா இருங்க.. பாவம் அண்ணா.. அவன் என்ன பண்ணுவான்?…”
“என்னத்தடா பொறுமையா இருக்க சொல்ற.. இப்படி ஊர கூட்டி அவன் தலையில அவனே மண்ணள்ளி போட்டுக்கிட்டானே.. இனி எந்த பொண்ணு கண்டிப்பா இவன…” என்று செவ்வந்தி கேட்க
பார்கவி “என் தங்கச்சி கல்யாணம் பண்ணிப்பா அத்தை…” என்று சொல்ல, அனைவரும் அவளை திகைத்துப் பார்க்க, அபர்ஜித் கூட திகைத்து தான் பார்த்தான்.
அவனோ கார்த்திகேயனை வைத்து தான், அந்த திட்டத்தை கூற வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். ஆனால் அதற்கு முன்னமே பார்கவி சொன்னது அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் தான் இருந்தது.
பர்விதாவோ போலியாக என்றாலும் அபர்ஜித் அறிவழகியிடம் கெஞ்சியது மனதில் அத்தனை வேதனையும் வலியையும் ஏற்படுத்தியது.
அது எல்லாமே அவளுக்காக மட்டும் தானே, இதோ அவனைப் பற்றி அவதூறாக எத்தனை பேசுகிறார்கள், இதுவும் அவளுக்காகத்தானே,
அப்படி என்ன அவளிடம் இருக்கின்றது எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று. அவன் உணர்வுகளோடு அவள் கலந்தது ஒற்றை முத்தத்தில் மட்டுமா? அவளுக்கே விடை தெரியாத கேள்வி.
உள்ளம் துடிக்க அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள், பார்கவியின் வார்த்தைகளில் பனிமழைச் சாரலில் நனைந்தது போன்று குளிர்ந்து போனாள்.
பார்கவியோ தாய் தந்தையரை நெருங்கி “அப்பா அபர்ஜித் மாமா இன்னொரு பொண்ண காதலிக்கிறேன்னு என்ன வேணான்னு சொன்னத தவிர்த்து அவருக்கு பொண்ணு கொடுக்கறதுல உங்களுக்கு என்ன ஆட்சேபனையும் இல்லையே…” என்று கேட்க
பார்கவியின் தலையை தடவிய வசந்தராஜன் “உன்ன புடிக்கலைன்னு சொன்னப்போ அவர் மேல கோவம் இருந்துச்சிடா.. ஆனா அவ்ளவு மன துயர்ல இருந்த உன்ன எமோஷனல் பிளாக் மெயில் பண்ணி அஸ்வந் மாப்பிள்ளைக்கு உன்ன நான் கல்யாணம் பண்ணி வைக்க காரணமே அபர்ஜித் மாப்பிள்ளை தான்..
…அன்னைக்கு ராத்திரியே என்ன சந்திக்க வேணும்னு சொல்லி பார்க்குக்கு வர சொல்லி, என் குடும்பத்து மேல இருக்குற கோபத்தாலயோ இல்ல நான் வேணான்னு சொன்ன வீம்புனாலயோ அஸ்வந்துக்கு பார்கவிய கல்யாணம் பண்ணி கொடுக்க யோசிக்காதீங்க..
…அஸ்வந்தயும் எங்க வீட்டையும் தவிர வேற எங்கேயுமே பார்கவி நிம்மதியா வாழ முடியாது.. இப்படியே விட்டுட்டீங்க இல்ல வேற ஒரு இடம் பார்க்கலாம்னு நினைச்சிங்கனா கண்டிப்பா பார்கவி வாழ்க்கை கேள்விக்குறியா தான் இருக்கும்.. தயவு பண்ணி என்ன மன்னிச்சு, எங்க வீட்டுக்கு பார்கவிய மருமகளா அனுப்புங்கன்னு கையெடுத்து கும்பிட்டு கேட்டார்..
… எனக்கும் சரின்னு தோணுச்சு.. ஏற்கனவே உனக்கு அதிர்ஷ்டம் இல்ல அதனால தான் கல்யாணம் நின்னு போச்சுன்னு பேசிட்டு இருந்தாங்க.. ரெண்டாவது தடவையும் கல்யாணம் நின்னா உன்ன நிம்மதியா வாழ விடுமா இந்த ஊர் உலகம்..
…அதே நேரம் விரக்தியில நீ எங்க வேற வாழ்க்கையே வேணாம்னு சொல்லிடுவியோன்னு பயமா இருந்துச்சு..அப்போ உனக்கு கல்யாணம் பண்ணி வச்சா போதும்னு தான், நானுமே உன் மனச பத்தி யோசிக்காம அவர் சொன்னதை கேட்டு கல்யாணத்த பண்ணி வச்சேன்.. அதுக்கப்புறம் நீ உன்னையே இழந்து, விரக்தியா சுத்தி வந்தப்போ நான் உடைஞ்சே போயிட்டேன்மா..
…ஆனா இப்போ உன் முகத்துல இருக்கிற இந்த சந்தோஷமும் பொலிவும் நீ எவ்ளோ மகிழ்ச்சியாக உன்னோட வாழ்க்கைய வாழ்றன்னு புரியுது.. உன்ன அப்படியே விடாம உன்ன பத்தி யோசிச்ச அவர் வாழ்க்கை கேள்விக்குறியா இருக்கும்போது.. அத சரி பண்ண என்னால முடியும்னா கண்டிப்பா அதை பண்ணுவேன்ம்மா…” என்று வசந்தராஜன் சொல்ல
பார்கவி தாயின் முகத்தை சம்மதத்திற்காக பார்க்க “உனக்கு கல்யாணம் பேசினப்பவே.. உங்க ரெண்டு பேரையும் சம்பந்தியம்மா வீட்டுக்கு அனுப்பனும் என்றது தான் எங்க ஆசையே.. அது எந்த மாப்பிள்ளைக்கா இருந்தா என்ன.. எனக்கும் சம்மதம்…” என்று சொல்ல
செவ்வந்தி அவர்கள் அருகில் வந்தவர், கையெடுத்து கும்பிட்டு “ரொம்ப நன்றிங்க.. இவங்க சொல்ற மாதிரி…” என்று ஊரார் வதந்திக்கு அவர் விளக்கம் சொல்ல எடுக்க
“உண்மை நிலவரம் என்னன்னு எங்கள விட வேற யாருக்கு தெரியப்போகுது சம்பந்திமா.. நீங்க நன்றி சொல்லவே வேணாம்.. சின்ன குழப்பம் நடந்துருச்சு அவ்வளவுதான்.. நம்ம பேசின மாதிரி நம்ம ரெண்டு பசங்களும் ஒன்னா சேர்ந்து வாழ போறாங்க அவ்வளவுதான்…”
பார்கவி பர்விதாவை ஆழ்ந்து பார்த்து “என்னடி அபர்ஜித் மாமாவ கல்யாணம் பண்ணிக்க சம்மதமா…?” என்று கேட்க
என்ன சொல்வாள் அவள். பார்கவியின் கண்களை பார்க்கவே தயக்கமாக இருந்தது. தலையை தாழ்த்தி சம்மதமாக ஆட்டிக்கொண்டாள்.
உடனே ஐயரோ “முகூர்த்ததுக்கு நேரமாச்சு பொண்ணு மாப்பிள்ளைய அழைச்சிட்டு வாங்கோ…” என்று சொல்ல
“அலங்காரம் பண்ணலாம் நேரம் இல்ல வாங்க…” என்ற பார்கவி பர்விதாவை அழைத்துக் கொண்டு மணையில் அமர வைத்தாள்.
அபர்ஜித் நடித்தாக வேண்டுமே உள்ளுக்குள் ஆனந்தமாக இதயம் துள்ளி குதித்தாலும், செவ்வந்தியை பரிதவிப்பாக பார்ப்பது போல் பார்த்தவன்,
“அம்மா! எப்படிம்மா…” என்று கேட்க
இதுவரை நடந்தவற்றை ப்ளூடூத் கால் மூலம் கேட்டுக் கொண்டிருந்த அறிவழகி, பக் என்று சிரித்து விட்டாள்.
: “சீனியர் ரொம்ப பண்ணாதீங்க.. எல்லாம் ஸ்மூத்தா போகுது…” என்று அவள் சொல்ல
: “அறிவு கெட்ட அறிவே.. லவ் ஃபெயிலியர்ல இருக்கேன்.. உடனே இன்னொரு பொண்ணு கழுத்துல தாலி கட்டுன்னா எப்படி கட்ட முடியும்…”
: “உங்க டெடிகேஷன தூக்கி குப்பைல போட்டுட்டு தாலிய கட்டுற வழிய பாருங்க சீனியர்.. வேற யாராவது குட்டையை குழப்பி இந்த கல்யாணத்த நிறுத்திட்டாங்கன்னு வைங்க.. இந்த ஜென்மத்துல உங்களுக்கு கல்யாணம் நடக்காது…” என்று அவள் சொல்ல
செவ்வந்தியோ “எதுவும் பேசாம போய் மணையில உட்காரு.. நான் ஆசைப்பட்ட பொண்ணுங்க தான் என் வீட்டுக்கு மருமகளா வரணும்.. பர்விதா கழுத்துல தாலிய கட்டு…” என்று சொல்ல
தாய்க்கு கட்டுப்பட்ட மகன் போன்று அபர்ஜித்தும் மணையில் அமரந்து கொண்டான்.
அவன் வேஷ்டி சட்டையிலும், பர்விதா பச்சை நிற லெஹங்காவிலும் அமர்ந்திருக்க,
மந்திரங்கள் ஓதி, மாங்கல்யம் ஆசிர்வாதம் வாங்கப்பட்டு, மணமகன் கையில் கொடுக்க,
மன நிறைவோடு மலர்விழியாளின் கழுத்தில் அணிந்து, மனைவியாக்கிக் கொண்டான் மாய கண்ணன் அபர்ஜித்.
பெற்றவர்கள் மனது குளிர, அர்ச்சனை தூவி ஆசீர்வாதம் வழங்க, இனிதே திருமணம் முடிந்தது,
இரண்டு ஜோடிகளும் ரிசெப்ஷனுக்காக தயாராகி மேடையில் நிற்க, உறவினர்கள் அபர்ஜித், பர்விதா ஜோடியை பற்றி புரளி பேசினாலும், அதை யாரும் கண்டு கொள்ளவில்லை.
புன்னகை முகமாக வந்தவர்களுக்கு வணக்கம் கூறி, வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.
*****
இங்கோ மொட்டை மாடி வந்த அறிவழகி, தலைக்கு மேலாக பறந்த ஃபளைட்டை நிமிர்ந்து பார்த்து, சிறுபிள்ளை போல் குதுக்களித்தவள் “என்ன தான் நேர்ல பாத்தாலும், இப்படி வானத்துல பறந்து போகும் போது அண்ணாந்து பார்க்கிறது ஒரு தனி சந்தோஷம் தான் இல்ல…” என்று தனக்கு தானே சொல்லிக் கொள்ள
அவள் அருகிலோ “ஆமா, 90ஸ் கிட்ஸ்க்கு இது ரொம்ப பிடிக்கும்.. ஆனா உங்களுக்கு ஏன் பிடிக்குது…” என்று கார்த்திகேயன் கேட்க
கண்களை விரித்து, ஸ்லோ மோஷன்லில் அவனை திரும்பிப் பார்த்தவள் ‘அடியாத்தி தனியா காலகேயன்கிட்ட சிக்கிட்டோமே…’ என்று மனதில் அலறியவாறு
“ஹிஹி.. நான் கொஞ்சம் வித்தியாசம் தான்…” என்றவள் அவனிடமிருந்து நழுவ பார்க்க
“அறிவு, உங்க சீனியர் கல்யாணத்துக்கு ஒரு ஹெல்ப் பண்ண மாதிரி எனக்கும் ஒரு ஹெல்ப் பண்ணனும்…” என்று கேட்க
‘என்ன சைத்தான் சைக்கிள் ஏறுது.. சரியில்லையே…’ என்று மனதில் நினைத்தவள்
“என்ன ஹெல்ப்?…” என்று கேட்க
“அது ஒன்னும் இல்ல.. இன்னைக்கு எனக்கும் கல்யாணம்.. நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுக்கு தாலி செயின் வாங்கணும்.. நீங்க வந்து செலக்ட் பண்ண ஹெல்ப் பண்ணுனா.. உங்கள பழி வாங்குற முடிவ நான் கைவிடுறேன்…” என்று சொல்ல
“முடியாதுன்னு சொன்னா…” என்று அவள் கேட்க
மொட்டை மாடியில் இருந்து கீழே எட்டிப் பார்த்தவன் “இங்க இருந்து உங்கள தள்ளி விட்டுட்டு.. உங்கள கேட்காம கல்யாண ஏற்பாடு பண்ணி ஏமாத்த பாத்தாங்க.. நீங்க முடியாதுன்னு சொல்லி உங்க சீனியர அவமானப்படுத்தின சோகத்துல.. இங்க இருந்து தற்கொலை பண்ணிக்கிட்டேங்கனு சொல்லிடுவேன்…” என்று அவன் சொல்ல
நெஞ்சில் கையை வைத்து அதிர்ந்தவள் “நாலு வார்த்தை நாக்க புடுங்குற மாதிரி கேட்டேன்.. அதுக்கு என் உயிரை புடுங்குறேன் என்றீங்களே…”
“அது தான் சமரசமா போயிடுவோம்.. நீங்க எனக்கு சின்ன ஹெல்ப் பண்ணுனா போதும்…”
“சரி, சரி.. வேஷ்டி சட்டையில மாப்பிள்ளை மாதிரி தயாராகி வந்துட்டீங்க.. உங்க கல்யாணம் என்னால எதுக்கு நிக்கணும்.. இப்படி அடுத்தவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.. என் கல்யாணம் எப்படி எல்லாம் நடக்க போகுதோ.. வாங்க…” என்றவள் அவனுடன் செல்ல
நகை கடைக்கு அழைத்து வந்தவன் “தாலி செயின் காட்டுங்க…” என்று சொல்ல, அங்கிருந்த பணிப் பெண்களும் எடுத்துக்காட்ட,
“அறிவு இதுல ஒன்ன செலக்ட் பண்ணுங்க…” என்று சொல்ல
அவளும் ஆர்வமாக அதிலிருந்த எல்லாவற்றை பார்த்து, “ம்ம் இது நல்லா இருக்கு…” என்று ஒன்றை தெரிவு செய்து அவனிடம் கொடுக்க,
கார்த்திகேயன் தன் ஷர்ட் பாக்கெட்டில் இருந்த தாலியை எடுத்து அந்த செயினோடு கோர்த்துக் கொண்டான்.
“சிஸ்டர் இதுக்கு வேற என்னல்லாம் சேர்ப்பாங்களோ அது எல்லாமே சேர்த்து குடுங்க…” என்று அந்த தாலி செயினை கொடுக்க
மேற்கொண்டு அதில் சேர்க்கும் மணி, பதக்கம் சேத்து கொடுக்க, அதை வாங்கி கொண்டவன்
“அறிவு இது நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுக்கு கரெக்டா இருக்குமான்னு தெரியல…” என்று சொல்ல
“அதுக்கு..” என்று அவள் கேட்க
“இல்ல.. அவள் உங்கள மாதிரி தான் இருப்பாள்.. உங்களுக்கு போட்டு பாத்து கரெக்டா இருந்துச்சுன்னா அவளுக்கும் கரெக்டா இருக்கும்.. போட்டு பாக்கவா…” என்று அவன் கேட்க
“அதுவும் சரிதான் காசு கொடுத்து வாங்குறோம் கரெக்டா எடுத்துட்டு போகணும்ல.. சரி போட்டு பாருங்க…” என்று அவளும் சொல்ல
அவளை அந்த கடையில் இருந்த பிள்ளையார் சிலை முன்பு கொண்டு வந்தவன், அவனது கையால் அவள் கழுத்தில் தாலியை போட்டு விட,
அவள் கண்களுக்கு தெரிந்தது என்னவோ அங்கு இருந்த கண்ணாடி தான். அவன் தாலியை போட்டு விட்டதும் கண்ணாடியை திரும்பி பார்த்தவாறு “கரெக்டா தான் இருக்கு…” என்று சொல்ல
“ஆமா கரெக்டா இருக்கு…” என்றான் அவன் அழுத்தி, அந்த கடை ஊழியர்கள் அனைவரும் கைதட்ட
“எதுக்கு கை தட்டுறாங்க…?” என்று அவள் கேட்க
“நம்ம கல்யாணத்துக்கு விஷ் பண்றாங்க…” என்று அவன் சொல்ல
“கல்யாணமா?…” என்றவள் விழிகள் விரித்து, அவனை பார்க்க,
அவளையும் அவனையும் ஒற்றை கையால் காட்டியவன் தாலி போடுவது போல் சைகை செய்ய,
அப்போதுதான் அந்த மட சாம்பிராணிக்கு புரிந்தது, அவனது கையால், அவள் கழுத்தில், அவன் தாலியை அணிவித்து விட்டது.
“அய்யய்யோ!…” என்றவள் தாலியில் கையை வைக்க
“ஏய் தாலியில கைய வச்சீங்க உங்க தலை இருக்காது…” என்று அவன் மிரட்ட
“இத நான் ஒத்துக்க மாட்டேன்.. என்ன ஏமாத்தி கல்யாணம் பண்ணி இருக்கீங்க…”
“யாரு ஏமாத்துனா.. தாலிய போடட்டுமான்னு உங்ககிட்ட கேட்டேன்.. நீங்களும் சம்மதம் சொன்னீங்க.. அதுக்கு இங்க இருக்கிற எல்லாருமே சாட்சி…” என்று சொல்ல
“போச்சு போ.. பழி வாங்குறேன், பழிவாங்குறேன்னு இப்படி பண்ணிட்டீங்க இல்ல.. ரிவெஞ்ச் எடுக்கிறதுக்கு கல்யாணம் பண்றது எல்லாம் தப்பு…”
“ஏங்க யாரு ரிவெஞ்ச் எடுக்க கல்யாணம் பண்ணா.. உங்ககிட்ட ரெண்டு தடவை லவ் சொல்லியாச்சு.. உங்களுக்கு தான் புரியல.. இல்ல, இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீங்க.. இதுக்கு மேல உங்கள விட்டு வெச்சா இந்த ஜென்மத்துல உங்களுக்கும் எனக்கும் கல்யாணமாகாது.. அதான் இப்படி.. வாங்க சண்டை போட்டுக்கிட்டே காதலிக்கலாம்…” என்ற கார்த்திகேயன் உறைந்து நின்றவளை அழைத்துக் கொண்டு வெளியே வர,
“முடியாது, முடியாது.. இந்த கல்யாணம் செல்லுபடி ஆகாதுன்னு நான் என் சீனியர் கிட்ட சொல்லி கேஸ் போட்டுறேன்…”
“நீங்க கேஸ் போட்டு.. உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு தீர்ப்பு வாற வரைக்கும் நீங்க என் பொண்டாட்டி தான்.. வாங்க, வந்து ஜீப்ல ஏறுங்க…” என்று கூப்பிட
“நானெல்லாம் உங்க வீட்டுக்கு வர முடியாது.. வலுக்கட்டாயமா தாலி கட்டினது நீங்க தானே.. வாழணும்னா எனக்கும் வீடு இருக்கு, வாசல் இருக்கு பாலோ மீ…” என்றவள் அந்த வழியே வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி, ஏறிக்கொள்ள, தலையாட்டி சிரித்துக்கொண்டவன் அவளை பின்தொடர்ந்தான்.

