
அத்தியாயம்-41
சில அடிகள் கடந்த பின் அந்த ஒற்றைப் பாதை ஐந்தாகப் பிரிந்தது.
“இந்த அஞ்சுல ஒன்னு தான் நமக்கானது. இதுல எந்தப் பாதைல எக்கோ அடிக்குதுனு பாருங்க” என்று ஜான்விகா கூற,
அகநகை ஒரு பாதைக்குள் சென்று கைதட்டி ஏதும் ஒலி எதிரொலிக்கின்றதா என்று கவனித்தாள்.
அடுத்தடுத்த பாதைகளில் விஷ்வேஷ், அகர்ணன், மதி மற்றும் ப்ரியா சென்று பரிசோதிக்க, அனைவருக்கும் பெரிதும் எந்த எதிரொலியும் கிடைக்கவில்லை.
சற்றே முன்னேறிய விஷ்வேஷ் தனது காதுகளைக் கூர் தீட்டிக் கவனிக்க, அவனால் அந்த எதிர்வலையை உணர முடிந்தது.
“ஓ எஸ்..” என்ற துள்ளலுடன் வந்தவன் “காய்ஸ்.. இந்தப் பாதைதான்” என்று கூற,
“எதிரொலி கேட்டுச்சா?” என்று இளா கேட்டாள்.
“ஆமாடா.. ரொம்ப மைனியூட்டா இருக்கு. எனக்கிருக்குற பவரால தான் அதைக் கேட்க முடிஞ்சுது” என்று அவன் கூற,
“அந்த அசரீரீ மண்டையனுக்குதான் நன்றி சொல்லனும்” என்று மதி கூறினான்.
வழி கிடைத்த சந்தோஷத்துடன் அனைவரும் விரைந்து செல்ல, மெல்ல வெளிச்சம் பரவியது.
அந்தப் பாதையின் முடிவு வரவே, அங்கு குகையின் ஒருபக்க சுவரில் ஓட்டைகள் பல இருந்தன. அதிலிருந்து வந்த ஒளி எதிர்ப்புறம் பட்டு அவ்விடத்தை வெளிச்சமூட்ட,
“இந்த வெளிச்சத்தோட உதவியாலதான் நாம அடுத்த க்ளூவ கண்டுபிடிக்கனும் போல. வாங்க எதாவது இருக்கானு தேடுவோம்” என்று ப்ரியா கூறினாள்.
சில நிமிடங்கள் அந்த இடத்தை மேலோட்டமாகத் தேடிய அனைவரும் வெருங்கையோடே ஒன்றுகூட,
“இல்ல.. நாம இன்னும் கொஞ்சம் டீப்பா தேடனும் போல..இந்த க்ளூ கண்டுபிடிக்க ஈசியா இருந்தளவு அதோட செயல்முறை ஈசியா இல்ல” என்று மதி கூறினான்.
மீண்டும் அவர்கள் தேடல் துவங்க, ஒரு கட்டத்தில் சோர்ந்துபோன அகநகை, அங்குள்ள ஒரு பாறையில் அமர்ந்துவிட்டாள். தற்செயலாய் அவள் பின்னே வந்த ஜான்விகா அவள் முதுகுப்புறத்தைக் கவனிக்க, அவள் கண்கள் பிரகாசித்தன.
ஓட்டைகள் வழியே வெளிச்சம் படும் சுவற்றை கண்டவள், “யாஹு” என்று கத்த,
பாறையில் அமர்ந்திருந்தவள் பதறி எழுந்தாள்.
“மலக்குரங்கே.. ஏன்டி கத்துற?” என்று விஷ்வேஷ் கேட்க,
அவன் முகபாவத்தில் சிரித்துக் கொண்டவள், “இளா.. பேப்பர் பேனாவை எடுத்துட்டு வா” என்றாள்.
அனைவரும் ஜான்விகா அருகே வர, “என்ன ஜான்? க்ளூவ கண்டுபிடிச்சுட்டியா?” என்று இளநகை கேட்டாள்.
அவளைப் பார்த்துத் தன் காலரை தூக்கி விட்டுக் கொண்டவள், அந்தச் சுவற்றை கைகாட்ட, திருந்தமாய் செதுக்கப்பட்ட அந்த ஓட்டைகள் வழியே வந்த ஒளி, எழுத்து வடிவங்களைப் பிரதிபலித்தது.
“சூரியனோட பொஸிஷன் இதே இடத்தில் இருக்கும்வரை தான் இந்த எழுத்துக்கள் தெரியும். சீக்கிரம் ஆளுக்கொரு லைனா நோட் பண்ணுங்க” என்று ஜான்விகா அறிவுறுத்த,
அவள் புத்தகத்திலிருந்து காதிகங்களை பெற்றுக் கொண்டு, அகநகை, துருவன், இளநகை மற்றும் மதி எழுதினர்.
எழுதி முடித்ததும் அனைவரும் வந்த வழியே திரும்பி வந்திட, மெல்ல இருட்டத் துவங்கியிருந்தது.
சில்லென்று காற்று வீசவும், குகைக்கு அருகே சென்ற பாதையின் வழியே செல்ல, அருவி ஒன்று இருப்பது தெரிந்தது.
“சத்தியமா என்னால இதுக்கு மேல முடியாது. கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போமா? அதான் வந்ததுலருந்து நாலு க்ளூ கண்டுபிடிச்சுட்டோமே. இந்த நைட் மட்டும் அந்த அருவிகிட்ட ரெஸ்ட் எடுத்துட்டு போவோமா?” என்று ப்ரியா கேட்க,
மற்றவர்களுக்கும் உடற்சோர்வு அதை ஏற்கவே வைத்தது.
சரியென்று அருவியின் அருகே செல்ல, நீரோடு உறவாடிய மெல்லிய தென்றல், அதன் குளிரினை களவாடிக் கொண்டு அவர்கள் அனைவரின் முகத்திலும் மோதியது.
வியர்த்திருந்த முகத்தில் சில்லென்று காற்று படவும் உருவான இதம், அவர்களை நிம்மதியாய் உணரச்செய்ய, சென்று அதில் முகம் கைகால் கழுவிக் கொண்டு ஓரமாகப் பாறையில் அமர்ந்தனர்.
“எனக்கொரு டவுட்டுடா” என்று ஜான்விகா துவங்க,
அனைவரும் அவளை நோக்கினர்.
“இல்ல.. நாம இங்க வந்து எத்தனை நாள் ஆச்சோ தெரியலை.. ஆனா நமக்கு இங்க வந்ததுலருந்து பசிக்கவே இல்லையே ஏன்?” என்று அவள் கேட்க,
“அதி முக்கியமான கேள்வி ஜான்” என்று விஷ்வேஷ் அவளுக்குக் கைகொடுத்து பாராட்டினான்.
அவன் கைபற்றிக் குலுக்கியவள், “ஆஹா புகழ்ச்சி வேண்டாமே” என்க,
“த்தூ” என்று துப்பியவன் தன் தலையில் அடித்துக் கொள்ளவும் யாவரும் கலகலவென்று சிரித்தனர்.
“ஹ்ம்.. ஏதோ வெகேஷன் வந்த மாதிரி இருக்கு” என்று அகர்ணன் கூற,
“ம்க்கும்.. என் புள்ளைய வச்சுட்டு எங்கேயும் போகமுடியலையேனு இருந்தது.. இப்ப என்னவோ மனசு அவனைதான் ரொம்ப தேடுது” என்று வருத்தம் நிறைந்த குரலில் ப்ரியா கூறினாள்.
அகநகையும் தன் ஒட்டிய மணிவயிற்றை தடவிப் பார்க்க, தாய்மை கொடுத்த அளப்பறியா உணர்வு அந்த இரு பெண்களையும் கலங்க வைத்தது புரிந்தது.
விஷ்வேஷ் தன்னவள் தோளைச் சுற்றி கரம் போட, அவன் மார்பில் சாய்ந்து, “அவன் பாவம்ல மாமா.. நம்மள தேட மாட்டான்ல? எ..ஏக்கத்துல பிள்ளைக்குக் காச்சல் வந்துடுமே” என்று கூறினாள்.
மனையாளின் குரலில் தன் மனக்கண்களில் வந்துபோன மகனை எண்ணி கலங்கிய விஷ்வேஷ், “அப்படிலாம் இல்லடி.. இ..இதுலாம் அவனுக்குத் தெரியாது..” என்று கூற,
அவனை அணைத்துக் கொண்டு, “ம்ம்..” என்றாள்.
இங்கு வெகுநேரமாய் தன் மனையாள் தன் மணிவயிற்றை பார்த்தவண்ணம் அமர்ந்திருப்பதைக் கண்ட அகர்ணனுக்கு, அவளால் தன் சோகத்தை வாய்விட்டுக் கூறக்கூட இயலாத இயலாமை இன்னும் வருத்தம் கொடுத்தது.
அவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்ட அகர்ணன் கண்கள் மூடித்திறந்து சமன் செய்ய, மெல்லிய புன்னகையை அவன் முயற்சிக்குப் பரிசாய் கொடுத்து அவன் தோள் சாய்ந்தாள்.
ஜான்விகா ஆசையாய் மதியைப் பார்த்துப் பல்லைகாட்ட, “என்ன நானும் அப்படி சாய்ச்சுக்கனுமா?” என்று மதி கேட்டான்.
அவன் கேட்டது காதில் விழாதபோதும் அவன் கேட்டதை அவன் முகபாவம் கொண்டு யூகித்து, அவள் தலையாட்ட அதில் பக்கென்று சிரித்தவன் அவளை இறுக்கி கட்டிக் கொண்டான்.
அதில் புன்னகைத்த இளநகை துருவனை நோக்க, அவன் பார்வை அவளிலேயே இருந்தது.
அதில் புன்னகை மறந்து உறைந்து நின்றவள், அவனைப் புரியாத பார்வை பார்க்க, அவனது பார்வை அவள் கன்னங்களில் உஷ்ணம் ஏற்றியது.
அதில் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டவள் சில நிமிடங்களில் மீண்டும் நிமிர, அவன் அவ்விடத்தில் இல்லை.
‘எங்க?’ என்றபடி பாவைச் சுற்றி முற்றி பார்க்க, அருவிக்கு அருகே உள்ள பாறையில் கைகளை மார்பிற்கு குறுக்கே கட்டிக் கொண்டு நின்றிருந்தான்.
மூன்று ஜோடிகளும் அவரவர் காதலருடன் ஐக்கியமாகி படுத்துவிட, உறக்கத்தின் பிடிக்குள் சென்று கொண்டிருந்தனர்.
அனைவரும் உறங்கிடவும் மெல்ல எழுந்த இளா அவனிடம் வர, அவள் அடிச்சுவடின் ஓசையில் உடல் சிலிர்த்து நின்றவன் தன் தலையை மட்டும் திருப்பி அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
அதில் தானும் புன்னகைத்தவள் அவனிடம் வர, சில நொடி மௌனத்திற்கு பின் இருவருமே, “தூங்கலையா?” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர்.
அதில் மீண்டும் இருவரும் சிரித்துக் கொள்ள,
“தூக்கம் வரலை” என்ற பதிலும் ஒன்றுபோல வந்து மேலும் சிரிக்க வைத்தது.
“ரொம்ப அழகா இருக்குல்ல இந்த ப்ளேஸ்?” என்று அவள் வினவ,
கைகளைப் பரபரவென்று தேய்த்துக் கொண்டபடி, “ம்ம்..” என்றான்.
வானில் வெள்ளி நிலவு உச்சியைத் தொட்ட நேரம்வரை இருவரும் மௌனமாய் அருகருகே அமர்ந்திருந்தனர்.
அந்த அமைதியான சூழல் அவளை அவன் தோள் சாய்ந்து உறங்க வைக்க, அவளைத் தன் மடியில் வாகாய் படுக்க வைத்தவன், அந்த ரம்மியமான சூழலை ரசித்தபடி அவளையும் ரசித்தான்.
“இந்த மாதிரி இடத்துல வச்சுதான்டி உன்கிட்ட என் லவ்வை சொல்லனும். ச்ச எவ்ளோ அழகு பாரு.. அதோட நீயும்” என்று உஷ்ண பெருமூச்சு விட்டவன்,
“உன்னை எப்புடிடி எனக்குப் புடிச்சுது? இவனுங்களோடதான் நானும் சுத்துனேன்.. எல்லாரும் தங்கையா பாத்த உன்னை என்னால மட்டும் அப்படி பாக்கவே முடியலையே..
சீ(see).. ஹெட் ஓவர் தி ஹீல்ஸ்னு சொல்வாங்களே.. அதுதான்.. பாருடி.. நீ என்னமோ உன்னை யாருமே லவ் பண்ண மாட்டாங்க அவ்வளவு வர்த்தில்லைனு அசால்டா சொல்லுவ.. ஆனா உன்னோட குழந்தை பருவம் கூட மாறும் முன்ன வந்ததுடி என் காதல்.. அப்ப இந்த வர்த்தெல்லாம் எதை வச்சுனு கூடச் சொல்ல வராது.
அழகுனு சொல்றியா? ஜெயகாந்தனோட ஒரு கவிதைல சொல்லுவாரு.. நமக்கு எதை நினைச்சா சந்தோஷம் வருதோ அதுதான் அழகுனு.. எனக்கு நீ தான் எல்லாமே.. அப்ப அழகும் நீதான? உன்னைவிட அழகிகள் இருக்கலாம்.. ஆனா நான் காதலிக்கும் நீதானடி எனக்குப் பேரழகி.. அள்ளிக் கொஞ்சனும் போல இருக்கு பாப்பா.. ஆனா பாரு.. நீ நல்லா தூங்கிட்டு என் தூக்கத்தை கெடுத்துட்டு இருக்க” என்று பெருமூச்சு விட்டான்.
அவள் உறங்கிவிட்ட அந்த அழகான பொழுதில், அவன் ஆழ்மன தாபங்களும் காதலும் வார்த்தைகளின் வடிவம் பெற்று அவள் மனதில் இறங்கிட, ‘கனவோ? நினைவோ?’ என்று பிரித்தறிய இயலாத மயக்க நிலையில் அவன் வரிகளை உள்வாங்கிப் படுத்திருந்தாள் பாவை.
மறுநாள் காலைச் சூரியனின் ஒளி அருவியில் பட்டுத் தெரித்து மினுமினுக்க, அதன் மெல்லிய ஒளி முகத்தில் மோதிப் பாவை மெல்ல துயில் கலைந்தாள்.
முதலில் தன் தூக்கம் கலைந்து எழுந்த இளநகை, தான் துருவனின் மடியில் படுத்து உறங்கிவிட்டதை கண்டு, அவனை நோக்கினாள்.
பின்னே இருந்த பாறையில் சாய்ந்து அமர்ந்தபடியே அவன் உறங்கிவிட்டதை கண்டவள், ‘அச்சுச்சோ..’ என்று நினைக்க, மனம் அவன் இரவு பேசியதை பிசிரோடு நினைவு செய்தது.
‘உண்மையில் அவன் கூறிய சொற்களா? இல்லை தன் கனவா?’ என்ற அவள் யோசிக்கையிலேயே அவனிடம் அசைவு தெரிய, அவனைக் கண்டாள்.
குழந்தைபோல முகத்தை வைத்துக் கொண்டு ஒரு கையைத் தலைக்கு மேலே வைத்துக் கொண்டு அவன் உறங்கிக் கொண்டிருக்க, ட்ரிம் செய்த தாடியும், அளவான மீசையும் அவளை வா வா என்றது!
சுற்றி முற்றி பார்த்தவள் அவன் மீசையருகே தன் கரத்தைக் கொண்டு செல்ல, மேலே கிரீச்சென்ற சத்தத்துடன் பறந்த பறவை அவனைத் துயில் கலைத்தது.
சட்டென்று தன் கரத்தை எடுத்துக் கொண்டவள் முகமெல்லாம் சூடாகி சிவந்துவிட, அவளைப் புரியாது பார்த்தபடி தன் முகத்தை தேய்த்துக் கொண்டவன், “குட் மார்னிங்” என்றான்.
“கு..குட் மார்னிங்” என்றவள் எழ,
தானும் எழுந்தவன் சென்று முகம் கழுவி வந்தான்.
இருவரும் சேர்த்து மற்றவர்களை எழுப்ப, அனைவரும் துயில் கலைந்து அருவி நீரில் புத்துணர்ச்சி பெற்றனர்.
“சரி இளா.. அந்த க்ளூல என்ன இருக்கு?” என்று அகர்ணன் வினவ,
“இதோ பாக்குறேன் மாமா” என்றபடி சென்று அதனை எடுத்து வந்தாள்.
“விருட்சங்கள் வழிகாட்ட
மணிநேர பயணம்,
பட்சிகள் கதை சொல்ல
பயணத்தின் அந்தம்.
மேதினியின் உள்ளத்தில் ஊடுறுவி செல்ல,
புதிர்கள் பல
அர்த்தம் கூறி தொடர,
அவற்றின் முடிவுவர
மறைகை கிட்டிடுமே!” என்று இளநகை வாசிக்க அனைவரும் திருதிருத்து நின்றனர்.

