Loading

அத்தியாயம்-40

 

முழுதும் ஆலிவ் மரங்கள் மட்டுமே கொண்ட அந்த மலையை அனைவருமே சற்று ஆச்சரியமாகத்தான் பார்த்தனர்.

 

“மலைக்கு வந்தாச்சுல்ல.. இப்ப எல்லாரும் கோடு கண்டுபுடிக்கனும்” என்று ஜான்விகா கத்த, 

 

அனைவரும் விஷ்வேஷை நோக்கினர்.

 

தன் காதிலிருந்து குவியல் குவியலாய் பஞ்சை எடுத்தவன், “எம்பூட்டு அடைச்சாலும் இவ சத்தம் நல்லாவே கேட்குது” என்று அழுகுரலில் கூற, அனைவரும் அதில் வாய்விட்டு சிரித்தனர்.

 

“சரி எல்லாம் வாங்க.. மேல போனாதான் என்ன கோடு, குகை எங்க இருக்குன்னு கண்டுபிடிக்க முடியும்” என்று ப்ரியா கூற, 

 

சரியென்று யாவரும் முன்னேறினர்.

 

பின்தங்கி நின்றிருந்த இளநகையைக் கண்ட துருவன் கையசைத்து அழைக்க, தன் நினைவுகளிலிருந்து மீண்டவள் விறுவிறுவென அவனிடம் வந்தாள்.

 

அவளோடு மலைப்பாதையில் ஏறியவன், “எதை கோடுனு சொல்றாங்க?” என்று வினவ, 

 

“தெரியலை..” என்றாள். 

 

அவளுக்கு அவன் பேச்சால் உருவான தாக்கத்திலிருந்து மீள சற்று நேரம் தேவைப்பட்டது. அதை உணர்ந்தவனும் அமைதியாகவே வர, பாதை சற்றே கரடு முரடாக சென்றது.

 

முன்னே சென்று கொண்டிருந்தவர்களை நோக்க, மதியும் ஜான்விகாவும் ஒருவரை ஒருவர் தோளோடு அணைத்து பிடித்தபடி ஏறிக் கொண்டிருந்தனர்.

 

இவர்கள் இப்படியென்றால் அகநகையை கைதாங்கலாய் அகர்ணன் கூட்டிச் செல்ல, ப்ரியா விஷ்வேஷின் முதுகில் தொங்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தாள்.

 

சற்றே திரும்பிப் பார்க்க, கரடு முரடான பாதையை கடக்க இயலாது தத்தளித்தபடி அவள் வந்துக் கொண்டிருந்தாள். அவனுக்குமே அந்த பாதையில் நடப்பது சிரமமாகவே இருக்க, அவள் கைபற்ற எண்ணிய நேரம், பெண்ணவள் தடுமாறி விழப்பார்த்தாள்.

 

“ஏ..” என்று அவளைத் தாங்கிக் கொண்டவன் சட்டையை பற்றி மார்பில் சாய்ந்தவள், “அம்மாடீ..” என்று கத்தியிருக்க, 

 

முன்னே சென்ற கூட்டம் இவர்களைத் திரும்பிப் பார்த்தது.

 

அவன் மார்பில் சாய்ந்து அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவளை நிலைப்படுத்தியவன், “சில்டா.. ஒன்னுமில்ல” என்று நிற்கச் செய்து திரும்ப, 

 

நமட்டு சிரிப்புடன் தோழர் கூட்டம் நின்றிருந்தது.

 

‘டேய்.. திரும்பி தொலைங்கடா அங்குட்டு’ என்று குமட்டிலேயே குத்துவது போல் சைகை செய்து அவன் இதழசைக்க, 

 

அனைவரும் சன்னமான சிரிப்புடன் முன்னேறினர்.

 

இங்கே “ஆர் யூ ஓகே?” என்று கேட்டுக் கொண்டவன், அவள் கரம் பற்ற, 

 

அவனை அமைதியாய் நிமிர்ந்து பார்த்தவள், தன் மற்றைய கரத்தால் அவன் புஜத்தை சுற்றி பற்றிக் கொண்டு, “பாதை ர்..ரொம்ப மோசமா இருக்கு” என்றபடி நடந்தாள்.

 

அதில் லேசாய் புன்னகைத்தவன், “எல்லாமே நல்லதுக்குதான்” என்று கூற, 

 

“உன் நல்லது எனக்கு தெரியுமடி” என்று முன்னே சென்று கொண்டிருந்த அகர்ணன் முனுமுனுத்தான்.

 

சற்று தூரம் செல்லவே ஒரு மரத்தில் கோடுகள் பல போடப்பட்டிருந்தன. அதை கண்ட அகநகை, அகர்ணனைக் கூப்பிட்டு காட்ட, “ஏ காய்ஸ்” என்றபடி சென்றவன் அந்த கோடுகளைப் பார்த்தான்.

 

“இது வெறும் கோடு கோடா இருக்கு.. இது என்ன சொல்ல வருது?” என்று ப்ரியா வினவ, மதி அதை கூர்ந்து கவனித்தான்.

 

இரண்டு நேர்கோடு போடப்பட்டு அது அடிக்கப்பட்டிருந்தது. பின்பு இரண்டு வளைந்த கோடுகள் அடிக்கப்படாமலும், அதன் பின் வளைந்த கோடுகள் போடப்பட்டு அடிக்கப்பட்டிருந்தது, அதையடுத்து இரண்டு நேர் கோடுகள் போடப்பட்டிருந்தது. இறுதியாக இரண்டு வட்டங்கள். அதில் ஒரு வட்டம் வெறும் கையில் போட்டது போலவும் மற்றைய வட்டம் திட்டமாக வரையப்பட்டதுபோலவும் இருக்க, திட்டமாய் வரையப்பட்ட வட்டம் மட்டும் அடிக்கப்பட்டிருந்தது.

 

தன்னவன் தோளை சுரண்டிய ஜான்விகா, அவனுக்கு எதையோ சுட்டிக்காட்ட, 

 

“ஏ ஜானூ.. செம்மடி” என்று அவளை அணைத்து கன்னத்தில் ஒரு இச்சு வைத்தான்.

 

அதில் தன்னவனா இதுவென்று அதிர்ந்து அவள் நோக்க, 

 

“டேய்.. அவன் அவன் என்ன கடுப்புல இருக்கான்.. உங்களுக்கு ரொமான்ஸ் கேட்குதா?” என்று விஷ்வேஷ் பொறிய, 

 

அவன் என்ன கூறினானென்று கேட்காதபோதும், என்ன கூறியிருப்பானென்று யூகித்த ஜான்விகா, “உன் பக்கத்துல தான இருக்கா.. வேணுமுன்னா நீயும் குடு. என் புருஷனே எப்பவாதுதான் இப்படி லவ்வர் பாய் மாதிரி ரியாக்ட் பண்ணுவான்.. அது பொருக்கலையா உனக்கு” என்றாள்.

 

அதில் அனைவரும் வாய்விட்டு சிரிக்க, “ஒரு முத்தம் குடுத்ததுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ? அத நல்லா சிறப்பா பண்ணிட்ட” என்ற மதி, “நாங்க அந்த கோடு சொல்ல வர்றதை கண்டுபிடிச்சுட்டோம்” என்க, 

 

“ஏ வாவ்.. என்னது மதிண்ணா” என்று இளநகை கேட்டாள்.

 

“அந்த கோடையும் இங்க போற இந்த இரண்டு கிளைப் பாதையையும் நோட் பண்ணுங்க.. அதுல ஒரு பாரலெல் லைன்ஸ் அன்ட், ஒரு பாரலெல் கர்வ்ஸ் இருக்கு. இங்க ஒரு நேரான பாதையும் ஒரு வளைந்து நெளிந்த பாதையும் இருக்கு. பாரலல் லைன்ஸ் அடிச்சிருக்காங்க.. அப்படினா அந்த பாதைல நாம போகக் கூடாது.. பாரலல் கர்வ்ஸ் அதாவது இந்த வளைந்த பாதைக்கு போகனும். அடுத்து பாரலல் கர்வ்ஸ் அடிபட்டிருக்கு. அப்ப இதோட கிளைப்பாதைல நேரான ஒரு பாதையை அடுத்து தேர்வு செய்யனும். என் கெஸ் கரெக்டுனா அந்த வட்டம், கொஞ்சம் கோனலான வட்டம் ரெண்டு பக்கத்து பக்கத்துல உள்ள இரண்டு குகைகளை தான் மீன் பண்ணுதுனு நினைக்குறேன்” என்று மதி கூற,

 

“வாவ் மதி, ஜான்.. செம்மடா” என்று விஷ்வேஷ் கூறவும், அனைவரும் தன்னை புகழ்வது புரிந்து தன் காலரை ஏற்றிவிட்டுக் கொண்டாள் ஜான். 

 

“போதும் போதும்.. வாங்க போவோம்” என்று துருவன் கூற, 

 

அந்த குறிப்பையும் தனது புத்தகத்தில் எழுதிக் கொண்ட இளநகை தலையசைத்து அனைவரையும் முன்னேர பணித்தாள்.

 

மதி கூறியபடியே அடுத்து அந்த பாதை இரண்டாகப் பிரிந்தது. அதில் ஒன்று நேராகவும், இன்னொன்று வளைந்து நெழிந்துமிருக்க, அக்குறியீட்டின் படி தற்போது நேரான பாதையில் சென்றனர்.

 

அந்த பாதையின் முடிவில் அருகருகே இரண்டு குகைகள் இருந்தன. ஒரு குகை மனிதனே நவீன கருவிகள் கொண்டு திட்டமாய் வெட்டிய வட்ட வடிவமாகவும் மற்றொன்று ஆதிகால மனிதன் குடைந்தெடுத்ததைப் போன்ற பிசிரான வட்ட வடிவமாகவும் இருந்தது. 

 

குறியீட்டின்படி அந்த இரண்டாம் குகைக்குள்தான் அவர்கள் செல்ல வேண்டும். ஆனால் அந்த குகையைப் பார்ப்பதற்கே பயத்தில் கால்கள் நடுங்கியதை யாராலும் தடுக்க இயலவில்லை‌.

 

பாசி படிந்து, கொடிகள் சூழ, அதன் நடுவே, கொடியா பாம்பா என்று அடையாளம் காண இயலாத வகையில் சில பச்சை வர்ண சர்ப்பங்கள் என அச்சமூட்டும் வகையிலிருந்தது.

 

“ப்ரியா.. ஆளுக்கொரு டார்ச் வேணும்” என்று அகர்ணன் கூற, 

 

தலையில் அடித்துக் கொண்ட அகநகை இளநகையை கூப்பிட்டு ஏதோ சைகை செய்தாள்.

 

“கரெக்ட்..” என்ற இளநகை, “ப்ரியா.. நாலு நெருப்புப் பந்தம் வேணும். டார்ச் வேண்டாம்” என்று கூற, 

 

“அது எதுக்கு?” என்றாள். 

 

“இல்ல இன்னும் உள்ள என்னெல்லாம் இருக்கோ.. நெருப்புப் பந்தமா இருந்தா நாம அதுகிட்டருந்து தற்காத்துக்கவும் பயன்படுத்தலாம். அதனால அதுவே கேளு” என்று இளநகை கூற, 

 

சரியென்று நெருப்புப் பந்தங்களை வரவைத்தாள்.

 

“க்ளூபடி அடுத்து உள்ள சத்தம் வெச்சு வெளிச்சம் இருக்கும் பாதைய கண்டு பிடிக்கனும். நாம வந்ததுலருந்து இல்லாத இரவு பொழுது, இந்த க்ளூ கண்டுபிடிக்குற அன்னிக்கு உருவாகிச்சு. அப்புறம் இதோ சூரியனோட டேரக்ஷன்.. காலைல ஈஸ்ட் பக்கமிருந்தது. கொஞ்ச நேரம் முன்ன உச்சிக்கு வந்துச்சு. இப்போ கீழிறங்குது. நம்ம க்ளூல சூரியனோட ஒளி வச்சு தான் அடுத்த க்ளூனு போட்டிருக்கு. அதனால அஸ்தமனத்துக்குள்ள நாம அதை கண்டுபிடிக்கனும்” என்று துருவன் கூற,

 

“மச்சான் உனக்கெப்படா இவ்வளோ அறிவு வந்தது?” என்று விஷ்வேஷ் வாய்விட்டே கேட்டு முதுகில் நான்கு அடிகளையும் வாங்கிக் கொண்டான்.

 

ஜான், ப்ரியா, அகர்ணன் மற்றும் துருவன் ஆளுக்கொரு பந்தத்தை பிடித்துக் கொண்டனர். பயந்து பயந்து அனைவரும் உள்ளே செல்ல, ஒரே பாதையாகவே சென்றது. 

 

ஒரு பாழடைந்த குகைக்கான அத்தனை அம்சங்களோடும் இருந்த அந்த குகையில், எலிகளின் சாம்ராஜ்யமே மேலோங்கி இருந்தது.

 

கத்தியும் ரத்தமும் பார்த்து, எலிகளை வெட்டி பார்த்து பாடம் படித்த போதும் ஏனோ இளநகைக்கு எலிகள் என்றாளே பயம். காரணம் எலிகள் கடிப்பதால் வரும் நோய்களின் அணிவகுப்பே. 

 

அந்த எலிகள் தன் காலில் ஏறி ஓடவும் பயத்தில் அலறலோடு துருவனை கட்டிக் கொண்டவள் அழுதே விட, துருவன் ஒரு நிமிடம் பதறித்தான் போனான்.

 

“ஏ இளாக்கு எலினா பயம்டா” என்று அகர்ணன் கூற, 

 

“இளா.. சில்டா.. ஒன்னுமில்ல” என்று அவள் முதுகில் தட்டிக் கொடுத்தான். 

 

புலி சிங்கம் வந்தபோது கூட பள்ளி சுற்றுலா வந்திருக்கும் மாணவி போல் துள்ளித்தான் குதித்தாள். புலியை ரசிக்குமளவு தைரியசாலியெல்லாம் இல்லை.. அவளும் பயங்கள் கொண்ட சராசரி பெண்தான். இருப்பினும் மதி இருக்கின்ற தைரியத்தில், விலங்குகள் சரணாலயம் வந்த மாணவி போல் துள்ளி குதிக்கவே செய்தாள்.

 

முதலையிடம் மாட்டிக் கொண்டபோது எழுந்த பயத்தைவிட, இந்த எலிகள் அவளை அச்சுறுத்துவதில் அவளது அழுகுரல் துருவனையும் கலங்கவைத்திட்டது என்றுதான் கூற வேண்டும்.

 

“இளா.. டேய் பட்டு.. ஒன்னுமில்லடா.. அது போயிடுச்சு” என்று துருவன் கூற, 

 

“நி..நிறையா இருக்கு துருவ்.. எ..எனக்கு..எனக்கு எலினா பயம்” என்று விக்கி விக்கி அழுதாள்.

 

“துரு.. நீ அவளை கூட்டிட்டு வெளிய வேணும்னா போ.. நாங்க போய் எடுக்குறோம்” என்று விஷ்வேஷ் கூற, 

 

“இல்லடா.. க்ளூவ கடைசியா எடுக்க வேண்டியது நாங்க தான். போன க்ளூ மட்டும் தான் அந்த இடத்தோட மந்திரகட்டுப்பாட்டால மதியும் அகர்ணனும் போய் எடுத்தாங்க. இங்க அப்படி எந்த கட்டுப்பாடுமில்லாததால நாங்க தான் எடுத்தாகனும்” என்று துருவன் கூறினான்.

 

“அவ ரொம்ப பயப்படுறாடா” என்று மதி கூற, 

 

பந்தத்தை தனக்கருகே நிற்கும் அகாவிடம் கொடுத்தவன் இளாவின் முகம் நிமிர்ந்து தன் கரங்களில் தாங்கிக் கொண்டான்.

 

நெருப்பின் ஒலியில் மஞ்சள் நிறத்தில் தெரிந்த அவள் முக்ததில் மினுமினுத்த கண்ணீரை துடைத்தவன், “டேய்.. ஒன்னுமில்லடா.. அது உன்னை ஒன்னும் பண்ணாது. மதி இருக்கான்ல? அவன்கிட்ட சொல்லி அதை நாம ஓரமா அனுப்பிடலாம். அழுறத நிறுத்து முதல்ல” என்று கூற, மீண்டும் அவள் கால் மேல் ஒன்று ஏறி ஓடியதில் பதறி “ஆ..” என்று கத்தியபடி துள்ளினாள்.

 

அவளை அணைத்து பிடித்தவன், “டேய் மதி.. அதுகள எதாது சொல்லி அனுப்பேன்டா..” என்று தன்னவள் அழுவது பொருக்காத கோபத்தில் கத்த, 

 

“கூல் கூல்..” என்ற மதி “ச்சை.. இவனுங்களோட கூட்டு சேந்ததுக்கு கடைசில எலி பொறுக்குற வேலையையும் தந்துட்டானுங்க” என்று முனுமுனுத்தான்.

 

கீழிருந்த ஒரு எலியுடன் பேச்சு வார்த்தை நடத்தியவன் அங்கிருக்கும் எலிகளை வெளியே செல்லும்படி பணிக்க, மொதுமொதுவென்று எங்கெங்கிருந்தோ கூட்டம் கூட்டமாய் வெளியே ஓடின.

 

அதை கண்ட மற்றவர்களுக்கே ஆசூசையாகவும் அச்சமாகவும் இருக்க, வீறிட்டு அழுபவளை தன் கரங்களில் ஏந்திக் கொண்டவன், “இளா காம் டௌன்..” என்றான்.

 

சில நிமிடங்களில் எலிகள் யாவும் சென்றிட, அவன் சட்டையை பற்றிக் கொண்டு மார்பில் முகம் புதைத்து குழந்தை போல் விசும்பிக் கொண்டிருந்தாள்.

 

“டேய்.. போயிடுச்சுடா..” என்று அவன் கூற, மெல்ல கண் திறந்தவள் அப்போதே அவன் கரங்களில் தான் மிதப்பதைக் கண்டு திடுக்கிட்டாள். 

 

அவளை கீழே இறக்கியவன், அகநகையிடமிருந்து பந்தத்தை வாங்கி, “எல்லாமே வெளிய போயிடுச்சு.. ஓகேவா?” என்று கேட்க, 

 

அனைவர் முன்பும் எலிக்காக ஆர்ப்பாட்டம் செய்ததில் சங்கோஜமாய் உணர்ந்தவள் தன் தலையை குனிந்துக் கொண்டு “ம்ம்..” என்றாள்.

 

தன் தோழர்களை நிமிர்ந்து பார்த்தவன் அவளுக்காக ஒரு இறைஞ்சும் பார்வையை செலுத்தி, “முன்னாடி போங்கடா” என்க, 

 

அதை புரிந்தவர்களாய் மென் புன்னகையுடன் தலையசைத்து சென்றனர்.

 

அவள் கரம் பற்றியவன், “வா..” என்க, 

 

தலையை தாழ்த்தியபடியே அவனுடன் நடந்தவள் மிக மிக மெல்லிய குரலில், “சாரி” என்றாள்.

 

“மா.. பயம் எல்லாருக்கும் இருக்குறதுதான்.. இதுக்குலாம் எதுக்கு சாரி?” என்று முதல் பாதியை மென்மையாகவும் இரண்டாம் பாதியை கடினமாகவும் வினவ, 

 

“இல்ல.. எனக்கு எலினா சின்ன வயசுலருந்தே கொஞ்சம் பயம்.. அது காலேஜ்ல எலி கடிக்குறதால உண்டாகும் நோய் பத்திலாம் படிச்சு இன்னும் பயமாயிடுச்சு. அ..அதான்.. இருந்தாலும் ரொம்ப ஆர்ப்பாட்டம் பண்ணிட்டேன்.. ரியலி சாரி” என்று விசும்பலோடு கூறினாள்.

 

“குற்றம் குறையில்லாம எதுவுமே இல்லடி.. தோய்ந்து போகுதுனு நினைச்சா கவிஞர்கள் நிலாவுக்கு கவிதையே எழுதிருக்க மாட்டாங்க.. எனக்கு நீ எப்புடி இருந்தாலும் பிடிக்கும்.. உன் பயமும் புரியும்.. இதுக்குலாம் லூசுபோல சாரி கேட்டுட்டு இருக்காத.. ரிலாக்ஸாகு..” என்று கூறியவனும் தனது பிடித்தத்தை வெளிப்படுத்திவிட்டதை உணரவில்லை, பயத்திலும், சங்கடத்திலும் இருந்தவளும் அதை கவனிக்கவில்லை!

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்