
அத்தியாயம் 39
அபர்ஜித் அலுவலகத்தில் வெகு நேரம் இருந்து விட்டு, இரவு 9 மணி போல் பீச் ஹவுஸ் வந்தான்.
அப்போதும் அஸ்வந் கார் வீட்டின் முன்பு நிற்க, விஷயம் ஒரளவு புரிந்து விட, காரை கடற்கரையில் நிறுத்தி அதனுள் படுத்து தூக்க முயன்றான்.
அப்போது அறிவழியிடம் இருந்து ஃபோன் கால்.
“சொல்லு அறிவு…”
“சீனியர் வெளிய வாங்க…” என்று அவள் கூப்பிட
“எது வெளிய வரவா.. என்ன ஆச்சு? எங்க நிற்கிற நீ…” என்று கேட்க
“அட பீச் ஹவுஸ் முன்னாடி தான் நிற்கிறேன்.. நானே என் கையால செஞ்ச மஷ்ரூம் கிரேவியும் சப்பாத்தியும் எடுத்துட்டு வந்து இருக்கேன்.. வந்து வாங்கிட்டு போங்க.. நான் சீக்கிரம் வீட்ட போகணும்…”
“எரும மாடு.. இந்த டைம்ல வீட்டு பக்கம் வராதன்னு எத்தன வாட்டி சொல்றது.. அது தான் சீனியர் நான் வீட்டுக்குள்ள வரல.. வெளியில நிக்கிறேன்…”
“அறிவு நீ தெரிஞ்சு தான் பண்றியா.. தெரியாம பண்றியா.. நான் வீட்ட இல்ல…”
“அப்போ எங்க?..”
“அப்படியே கடற்கரைக்கு வா…” என்று சொல்ல அவளும் அவர்கள் வழமையாக இருக்கும் இடத்திற்கு வந்தாள்.
“என்னாச்சு சீனியர்.. ஏன் இங்க இருக்கீங்க…” என்று கேட்க
“அங்க நீ கவனிக்கலையா.. அஸ்வந் வந்து இருக்கான்.. நான் வீட்டுக்கு போக முடியாது…”
“அட இன்னும் எத்தன நாளைக்கு மறைக்கப் போறீங்க.. நீங்க ஊருக்கு வந்தத சொல்லுங்க சீனியர்…”
“அத எப்ப சொல்லணும்னு எனக்கு தெரியும்.. நீ வீட்டுக்கு கிளம்பு…”
” இப்ப என்ன நீங்க வீட்டுக்கு போய் தூங்க முடியாது.. சரி வாங்க என் வீட்டு போய் தூங்கிக்கலாம்…”
“உனக்கு அறிவுனு பேர் வச்சவங்க என் கைல மட்டும் கிடைச்சாங்க.. முதல் கொலை அவங்கதான்.. தனியா இருக்குற உன் கூட வந்து நான் தங்கணும்.. ஏற்கனவே உனக்கும் எனக்கும் தான் லவ் ஓடிக்கிட்டு இருக்குன்னு எங்க வீட்ல நம்புறாங்க.. இது போதாதுன்னு இன்னைக்கு ஒரு நாள் உன் வீட்டுல தங்கினேன்னு வை.. மொத்தமா சுவாகா.. என் காதல குழி தோண்டி புதைக்குறதுல உனக்கு என்ன அப்படி ஒரு ஆனந்தம்…”
“அப்படி ஒரு விஷயம் இருக்குல்ல.. நான் எதாவது ஹெல்ப் பண்ண கேட்டேன்.. வேணாட்டி போங்க.. சரி இந்தாங்க இதை சாப்பிடுங்க…” என்று அவள் கொண்டு வந்ததை கொடுக்க
அதை வாங்கியவன், காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கையை கழுவி சாப்பிட்டான்.
அவன் சாப்பிடும் வரை வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தாள் அறிவழகி.
“சீனியர் இன்னொரு பொண்ணு வீட்ல போய் தங்குனாதானே உங்க காதலுக்கு பிரச்சனை.. எப்போதும் போல மதில் ஏறி குதிச்சு உங்க ஆளு கூட போய் தூங்குனா என்ன…” என்று கேட்க
“இல்ல அங்கேயும் போக மாட்டேன்.. நீ வா, உன்ன வீட்ல விட்டுட்டு வரேன்…”
“சீனியர் வீடு பக்கம் தானே, நானே போய்டுவேன்…”
“அறிவு என் கையால அடி வாங்கி கட்டாம ஒழுங்கு மரியாதையா வா…” என்றவன் அவளை ஸ்கூட்டியில் முன் செல்ல விட்டு, அவள் வீடு செல்லும் வரை பின் சென்று பார்த்தவன், அதன்பின் வந்து கடற்கரையிலேயே படுத்துக்கொண்டான்.
*****
வீட்டுக்கு வந்த அஸ்வந்தும் பார்கவியும் கண்டது கவலையாக தோட்டத்தில் அமர்ந்திருந்த செவ்வந்தியைத்தான்.
இருவரும் செவ்வந்தியை நெருங்க, பார்கவியை சற்று தள்ளி நிறுத்திய அஸ்வந், அவர் அருகில் சென்று “அம்மா!…” என்று அழைக்க
திரும்பி பார்த்தவர் கண்களில் கண்ணீர். அவர் கண்களில் கண்ணீரை கண்டதும் பதறியவன் “அம்மா! என்ன ஆச்சு…?” என்று கேட்க
அவனை அங்கு எதிர்பாராதவர் சட்டென்று கண்ணீரை துடைத்துக் கொண்டு, “ஒன்னும் இல்ல அஸ்வந்.. இப்பதான் வாறாயா…?” என்று கேட்க
அவர் அருகில் அமர்ந்தவன் “அம்மா என்கிட்ட என்ன மறைக்கிறீங்க…?” என்று கேட்க
சிறிது நேரம் செவ்வந்தி எதுவும் கூறவில்லை. எதை எதையோ போட்டு மனதில் குழப்பிக் கொண்டவர் பெருமூச்சை இழுத்து விட்டு,
“நான் என்னத்த மறைக்க போறேன்.. எல்லாம் உன் அண்ணன பத்தி தான்…”
“அண்ணன பத்தியா…?”
“ம்ம்.. அவன பத்தி தான்..அவன் ஆஸ்திரேலியா போய் ஆறு மாசம் ஆச்சு.. இன்னும் மூணு மாசம் போனா அவனுக்கு 29 வயசே முடிஞ்சுரும்.. அவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணனுமே.. தனியா அங்க என்ன பண்றான், ஏது பண்றான் எதுவுமே தெரியல..
…கேட்கும் போதெல்லாம் நான் நல்லா இருக்கேன் மா, நான் நல்லா இருக்கேன்மானு சொல்றான். ஆனா இங்க இருக்கும்போதே வெளியில சாப்பிட விரும்ப மாட்டான்.. சமைச்சு சாப்பிடவும் தெரியாது, என்ன சாப்பிட்டான்! சரியா தூங்கினானா? எதுவும் தெரியல..
…இப்படியாகும்னு தெரிஞ்சிருந்தா ஆஸ்திரேலியா போக முன்னாடியே கல்யாணத்த முடிச்சு பொண்டாட்டியோட அனுப்பி இருப்பேன்.. என் இடத்துல இருந்து ஒருத்தி பார்த்துப்பா என்ற நிம்மதியாவது இருந்திருக்கும்..
…இப்ப பாரு மனசு கிடந்து அடிச்சிக்கிது.. எல்லாத்துக்குமேல அவனைப் பத்தி ஊர்ல என்ன எல்லாம் பேசுறாங்க.. சாதாரண விஷயமடா அது.. ஒரு பையன் எந்த ஒரு தப்பான அடையாளத்த சுமக்க கூடாதோ அதை இப்போ சுமந்துட்டு இருக்கான்..
…இதுக்கு அப்புறம் என்னதான் அவன் கல்யாணம் பண்ணி, அவனுக்கு ஒரு குழந்தை பிறந்தாலும், வைத்தியம் பாத்துக்கிட்டதால தான் அவனோட குறை சரியானதா தானே சொல்லுவாங்க.. இல்லாத ஒரு குறைய கடைசி வரைக்கும் இவன் எதுக்குடா தூக்கி சுமக்கணும்…” என்று செவ்வந்தி அழுகையோடு கேட்க
அஸ்வந்துக்கும் மனது கனத்தது. இதோ அவன் வாழ்க்கை சீராகி விட்டது. ஆனால் அபர்ஜித்தின் வாழ்க்கையை அவனே சிக்கல் ஆக்கிக் கொண்டான். இதற்கான வழி என்ன?.
நிச்சயம் செவ்வந்தி கூறுவது போல் நாளைக்கு அவனுக்கென்று ஒரு குழந்தை பிறந்தாலும், இப்போது அவன் மீது சுமத்தப்பட்ட பழி மாறிவிடாதே.
தன்னைப் பற்றி கூட யோசிக்காமல் அவன் நேசித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றான் என்றால் அந்த பெண் மிகவும் கொடுத்து வைத்தவள் என்று தான் தோன்றியது .
“அம்மா நீங்க ஊர்ல இருக்கிறவங்க பேசுறத ஏன் யோசிக்கிறீங்க.. அவனுக்கு எதுவும் இல்ல என்றது நமக்கு தெரியும்.. அவன் காதலிக்கிற பொண்ணு அவன நம்புவா.. இதெல்லாம் கொஞ்ச நாளைக்குதான்மா.. அவன் ஊருக்கு வந்து கல்யாணமாகி சந்தோஷமா வாழ்ந்தா.. எல்லாமே மாறிடும்…”
“எப்போடா?.. இன்னும் எத்தன நாளைக்கு…” என்று கேட்க
அஸ்வந் பார்கவியை திரும்பி பார்த்தான். அவள் தானே அதற்கான முடிவு சொல்ல வேண்டும்.
பார்கவியின் காதிலும் அவர்கள் பேசியது கேட்டது. கண்களை மூடி திறந்து அஸ்வந்துக்கு நம்பிக்கையை கொடுத்தாள்.
“அம்மா! அண்ணா கூடிய சீக்கிரம் வருவான்.. அவன் கல்யாணமும் நடக்கும்.. நீங்க யோசிச்சு உடம்ப கெடுத்துக்காதீங்க.. அவன் கல்யாணத்துக்கு ஓடி ஆடி வேலை பாக்கணும் இல்ல, வாங்க…” என்று அவரை தட்டிக் கொடுத்து வீட்டினுள் அழைத்து வந்தான்.
*****
டைனிங் டேபிளில் அமர்ந்து, அன்றைய மதிய உணவிற்காக காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தாள் பார்கவி. செவ்வந்தியும் அவள் அருகில் தான் இருந்தார்.
அஸ்வந் சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.
“அத்தை, பாட்டி இறந்து ஒரு வருஷம் ஆனதும் எங்க கல்யாண ரிசப்ஷன் வச்சிக்கலாம்னு முடிவு பண்ணி இருந்தோம் இல்ல…” என்று கேட்க
“ஆமா பார்கவி, பண்ணனும் தான்…” என்றவருக்கு குடும்பத்தின் மூத்த வாரிசு அபர்ஜித் இல்லாமல் எப்படி செய்வது என்ற கவலையும்
அவனை அழைப்போம் என்றால் பார்கவி என்ன சொல்வாளோ என்ற தயக்கமும் இருந்தது.
“அம்மா கொஞ்ச நேரம் முன்னாடி ஃபோன்ல கூப்பிடு இருந்தாங்க அத்தை.. ரிசப்ஷன் வைக்கிறத பத்தி கேட்டாங்க.. நான் ஏற்பாடு பண்ணிடலாம்னு சொல்லிட்டேன்.. வார மாசம் பங்க்ஷன் வச்சிடலாமா அத்தை…” என்று கேட்க
“என்னம்மா வார மாசமே வா.. என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல…”
“எப்படியும் என் விருப்பத்துக்கு சம்மதிப்பீங்கன்னு தெரியுமே அத்தை…” என்றவள்
அஸ்வந்தை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு “எங்க கல்யாணமும் சாதாரணமா, தெரிஞ்ச உறவுகளுக்கு மட்டும் சொல்லி நடந்துச்சு.. அப்படி பாத்தா இந்த ரிசப்ஷன் தான் இந்த வீட்ல நடக்கிற முதல் பெரியா விசேஷம் இல்ல…” என்று கேட்க
செவ்வந்தி எதுவும் பேசவில்லை. அபர்ஜித்தை நினைத்து துக்கம் தொண்டையை அடைத்தது. ஆம் என்று தலையை ஆட்ட
“அப்போ இந்த வீட்டு விசேஷத்த மூத்தவர் இருந்து செஞ்சி தரணும் இல்ல.. அபர்ஜித் மாமாக்கு ஃபோன் போட்டு ஊருக்கு வர சொல்லுங்க.. வந்து எங்க ரிசப்ஷன நல்ல படியா நடத்தி கொடுக்க சொல்லுங்க…” என்று சொன்ன மறு நொடி அவளைத் தாவி அணைத்திருந்தார் செவ்வந்தி.
“அம்மாடி பார்கவி!…” என்றவருக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை. கண்ணீர் தான் வந்தது. அது ஆனந்த கண்ணீர்.
அபர்ஜித்தை வரச் சொன்னதும் இல்லாமல், அவனை மாமா என்று உறவு கூறி அழைத்தது, அவளது மனதில் அவன் எந்த இடத்தில் இருக்கின்றான் என்பது தெரிந்தது.
அஸ்வந் பார்கவியை பெருமை பொங்க பார்த்தான். அவனை ஏற்றுக் கொண்ட போது கூட பாதி மகிழ்ச்சி தான் கிடைத்திருந்தது. ஆனால் இப்போது மொத்த மகிழ்ச்சியையும் மீட்டுக் கொடுத்திருந்தாள் பார்கவி.
அவர்களிடம் வந்தவன் “போதும், போதும்.. ரொம்ப தான் மாமியாரும் மருமகளும் ஒட்டிக்கிறீங்க.. மூணாவதா என் அண்ணி வருவாங்க, அவங்க வந்ததுக்கு பிறகு இருக்கு…” என்று அவன் சொல்ல
“யார் வந்தாலும், நான் பார்த்து, ஆசைப்பட்டு கூட்டி வந்த என் மருமகள்தான்டா எனக்கு பெருசு…” என்று சொன்னார் செவ்வந்தி பார்கவியின் கன்னம் தடவி
“ஆக மகனுக்காக மருமகள் தேடல.. உங்களுக்காக தேடி இருக்கீங்க…” என்று அவன் கிண்டல் செய்ய
“போடா அங்கிட்டு.. உன் அண்ணனுக்கு ஃபோன் போட்டு ஊருக்கு வர சொல்லு.. எவ்ளோ வேலை இருக்குது, ஊருக்கே சொல்லி பெருசா பண்ணனும்…” என்று அப்போதே என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று செவ்வந்தி கூற ஆரம்பித்து விட்டார்.
அஸ்வந் அபர்ஜித்துக்கு அழைத்தான் . அலுவலகத்தில் இருந்த அபர்ஜித் தம்பியின் அழைப்பை ஏற்க
“அண்ணா எதுவும் பேசாத.. அடுத்த நிமிஷமே ஊருக்கு வந்து சேரு…” என்று சொல்ல
“என்னடா? என்ன ஆச்சு?.. அங்க எல்லாரும் ஓகே தானே…” என்று அவன் கேட்க
“என் குரல்ல ஏதாவது சோகம் தெரியுதா என்ன.. ரொம்ப சந்தோஷமா கூப்பிடுறேன்.. நல்ல விஷயம் தான் பார்கவியே உன்ன வீட்டுக்கு வர சொல்லிட்டா…” என்று சொல்ல
அபர்ஜித்தால் நம்ப முடியவில்லை. நேற்றைய தினமே புரிந்தது அஸ்வந் பார்கவிக்கு இடையிலான இணக்கம்.
ஆனாலும் தன் மீது இருந்த அதிருப்தி காணாமல் போயிருக்கும் என்று அவன் நினைக்கவில்லை .
சந்தோஷ மிகுதியில் இருந்தவன் “இன்னும் பத்து நிமிஷத்துல வீட்ட இருப்பேன்…” என்று சொல்ல
“என்னடா சொல்ற.. ஆஸ்திரேலியா இருந்து பத்து நிமிஷத்துல எப்படி வர முடியும்…?”
“ஆஸ்திரேலியால இருந்து பத்து நிமிஷத்துல வர முடியாது.. என் ஆபீஸ்ல இருந்து பத்து நிமிஷத்துல வர முடியும்…” என்று சொல்லி ஃபோனை வைக்க
“அப்பவே நினைச்சேன்.. கேஸ் ரொம்ப சீக்கிரம் முடிஞ்சிருச்சே.. இந்த அறிவுக்கு இவ்ளவு அறிவு இல்லையே அப்படின்னு.. அண்ணனோட வேலையா…” என்று சொல்லி சிரித்துக் கொண்டவன்,
“அம்மா! உங்களுக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் இருக்கு.. ரெடியா இருங்க…” என்று சொன்னான்.
அபர்ஜித்தும் பத்து நிமிடங்களில் வீட்டிற்கு வந்திருந்தான்.
அவனைப் பார்த்ததும் செவ்வந்திக்கு இன்ப அதிர்ச்சி தான். ஓடி சென்று அணைத்துக் கொண்டார்.
“எப்படிடா இருக்க.. இங்க தான் இருந்தியா?.. ஏன்டா என்ன பாக்க வரல…” என்று கேட்க
“அம்மா நான் நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க…?” என்று செவ்வந்தி முகத்தை தாங்கி கேட்க
“நான் நல்லா இருக்கேன் டா.. நீதான் எங்கேயோ போய் தனியா கிடந்த.. எப்ப வந்த…?”
“அஸ்வந்துக்கு பிரச்சனை ஆச்சு இல்ல, அதுக்கு அடுத்த நாளே வந்துட்டேன்.. ஆனா உங்களுக்கு தெரிய வேணான்னு நினைச்சேன்…”
“என்கிட்ட மட்டுமாவது சொல்லி இருக்கலாம் இல்ல.. உன்ன வந்து பார்த்திருப்பேனே…”என்று மூக்கை உறிஞ்ச
அஸ்வந்தும் அபஜித்தை தோளோடு அணைத்துக் கொண்டவன் “நீங்க நேர்ல போய் அழுதே அண்ணாவ ஒரு வழி பண்ணிடுவீங்கன்னு தான் அண்ணா சொல்லல…” என்று அவன் சொல்ல
“போங்கடா.. உங்க யாருக்கும் என் கஷ்டம் புரியாது…” என்று செவ்வந்தி முகத்தை தூக்க,
“அம்மா!…” என்று இரு மகன்களும் அவரை கட்டிக் கொண்டனர்.
வாசலிலேயே நின்றவனை “சரி, வா உள்ள…” என்று அழைக்க
அங்கே ஹாலில் நின்றிருந்த பார்கவியை பார்த்தான் அபர்ஜித்.
பார்கவியும் “வாங்க மாமா…” என்று புன்னகையுடன் வரவேற்க, உள்ளே சென்றான்.
அவள் முகத்தில் இருந்த தெளிவு, அபர்ஜித்திற்கு ஒரு பெருத்த நிம்மதியை கொடுத்திருந்தது.
“எப்படி இருக்க பார்கவி…?”
“ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மாமா…” என்றவள், சமையல் அறைக்கு சென்று அனைவருக்கும் ஜூஸ் போட்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.
“என்னடா ஏதோ நல்ல விஷயம் நடக்க இருக்குன்னு சொன்ன…?” என்று அபர்ஜித் அஸ்வந்தையும் பார்கவியையும் மாறி, மாறி பார்த்து விட்டு கேட்க,
“ஹலோ ப்ரோ.. நீ எதை யோசிக்கிறனு தெரியுது.. அதுக்கு இன்னும் நாள் இருக்கு…” என்று சொல்லி கண்ணடித்தவன்
“கல்யாணம் சிம்பிளா நடந்துச்சு இல்ல.. அதனால ரிசப்ஷன் வைக்கிறதுக்கு முடிவு பண்ணியாச்சு.. என் கல்யாணத்துக்கு எல்லா வேலையும் நீதானே பார்த்த.. ரிசப்ஷன் வேலையும் நீ தான் பார்க்கணும்…” என்று சொல்ல
“மாமா மட்டுமில்ல நீயும் வேலை பார்க்கணும்.. ஏன்னா இது நம்ம ரிசப்ஷன் மட்டும் இல்ல.. அபர்ஜித் மாமாவோட கல்யாணமும் தான்…” என்று பார்கவி சொல்ல
அனைவரும் அவளை திகைத்துப் பார்க்க, “இன்னும் எத்தன நாளைக்கு தள்ளி போடணும்.. எப்படியும் ரிசப்ஷனுக்கு ஒருத்தர் விடாம எல்லாருக்கும் பத்திரிகை வச்சு கூப்பிட போறோம்.. அதை கல்யாணத்துக்காகவும் பயன்படுத்திக்கலாமே…”
“அது எப்படிமா.. உடனே கல்யாணம்னா…” என்று செவ்வந்தி கேட்க
” ஒரு மாசம் இருக்கு, போதாதா.. ஆளுக்கு ஒரு வேலையா பார்த்தா முடிஞ்சிட போகுது.. அதுக்கு மேல இவேன்ட் மேனேஜ்மென்ட் இருக்கு.. ஏதாவது ஒரு டீம் கிட்ட பொறுப்ப ஒப்படைச்சா சரி.. ஒரே மேடையில உங்க ரெண்டு பிள்ளைகளையும் ஜோடியா பார்க்க ஆசை இல்லையா அத்த…” என்று கேட்க
“நீ சொல்றதும் நல்ல ஐடியா தான்…” என்ற செவ்வந்தி
அபர்ஜிதை பார்க்க “அம்மா.. எல்லாம் ஓகே தான்.. ஆனா.. நான் லவ் பண்ற பொண்ணு…” என்று சொல்லி அவன் பர்விதாவை எப்படி சொல்வது என்று தடுமாற
“அறிவழகி தானே.. அவங்களுக்கும் யாரும் இல்ல.. அவங்க சைட்ல இருந்து பார்க்க வேண்டிய வேலையையும் நாமதான் பாக்கணும்.. அப்புறம் என்ன…” என்று பார்கவி கேட்க
‘போச்சு போ.. அறிவு உன் கூடயா எனக்கு கல்யாணம்…’ என்று மனதுக்குள் அலறியவன், மனதில் புதிதாய் ஒரு திட்டம் தோன்ற
“ஆமா, அறிவு தான்.. ஆனா இப்போ அறிவுக்கு எதுவும் தெரிய வேணாம்.. நீ சொன்ன மாதிரி அவ சைட்ல இருக்குற வேலையும் நம்ம தானே பார்க்க போறோம்.. சோ கல்யாண நாள் அன்னைக்கே சப்ரைஸ்சா சொல்லலாம்…” என்று சொல்ல
சரி என அடுத்தடுத்து நடக்க வேண்டிய வேலைகளைப் பற்றி பேசி முடிவெடுத்துக் கொண்டனர் .

