Loading

அத்தியாயம்-36

 

சுற்றிலும் பச்சை பசேலென்றும், ஜில்லென்று ஈரக்காற்று வீசியும், அந்தச் சூழலை இலகுவாகக் காட்டியது.

 

ஆனால் அந்தச் சூழலில் பயணித்துக் கொண்டிருந்தோரின் மனம் தான், அதற்கு முரணாக யோசனையும் படபடப்புமாய் இருந்தது.

 

“இருபால் பறவைனா என்ன பொருள்?” என்று துருவன் கேட்க, 

 

“ஆண் பெண் இருபாலும் உள்ள பறவை. கேள்விப்பட்ட மாதிரி தான் இருக்கு. ஆனா நினைவு வரலை” என்று இளநகை கூறினாள்.

 

“ஹ்ம்.. இப்பதான் முதல் க்ளூவே கிடைச்சிருக்கு. இன்னும் எத்தனை இருக்கோனு ஆயாசமா இருக்கு” என்றவன் கைகளைச் சூடு பறக்கத் தேய்த்து தன் முகத்தில் அழுத்திக் கொள்ள,

 

“நம்பிக்கையா இருங்க துரு.. நம்ம வீட்டுல விளையாடும்போது ஜாலியா விளையாடுவோம் தானே? அதுபோல நினைச்சு விளையாடுங்க. கண்டிப்பா நாம இதை முடிப்போம்” என்று நம்பிக்கையூட்டினாள்.

 

அவளைக் கண்டு மெல்ல புன்னகைத்தவன் கண்கள், அவள்மீது அப்போது தான் தனது ரசோபாவத்தை கண்டது. 

 

அழகாய், அரைக்கைச்சட்டையும், டிராக் பேண்டும் அணிந்துகொண்டு கையில் ஒரு புத்தகம் மற்றும் பேனாவுடன் யோசனையோடு நடந்து கொண்டிருந்தாள்.

 

‘ப்ச்.. இந்த மாதிரி சீனெரில உன்கூட என் லவ்வ சொல்லி எவ்வளவு ரொமான்டிக்கா போயிருக்கனும்..’ என்று நினைத்தவன் பார்வை இதழ் கடித்து யோசிப்பவள் உதடுகளில் நிலைத்தது.

 

சட்டெனத் தன் பார்வை போகும் நிலையுணர்ந்து திரும்பிக் கொண்டவனுக்குத்தான் முகம் சிவந்து மூச்சு முட்டியது. அவளை ரசித்திருக்கின்றான் தான். ஆனால் இப்படியெல்லாம் அவன் பார்வைகள் அத்துமீறியதில்லை!

 

அவள் புத்தாடை உடுத்தி வருகையில் ‘ஆஹா என்னவள் எத்தனை அழகானவள்! அவளுக்கென்றே உருவாக்கியதைப் போல் உள்ளதே!’ என்றெல்லாம் மனதிற்குள் அவன் குதூகலித்ததும் ஏராளம். 

 

எங்கே தன் ரசனை கூட அவளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாய் சித்தரித்திடுமோ என்று அவன் அஞ்சிய காலங்களும் ஏராளம்.

 

ஆனால் இன்று அவன் ரசனைகள் போகும் போக்கு மோகத்துடன் கைகோர்த்தல்லவா பயணம் புரிகிறது! அந்தப் புதுவகை உணர்வில் மூச்சு வாங்கி பக்கவாட்டாய் திரும்பித் தன் தலை கோதியவனை இத்தோடு இரண்டாம் முறையாக அழைத்திருந்தவள், அவன் தோள்களைத் தட்டி அழைத்தாள்.

 

உள்ளுக்குள் சில்லென்ற உணர்வைக் கொடுத்த அவள் பஞ்சு விரல்களின் ஸ்பரிசம் கூட அவனுக்குள் இன்பத் தீத்துகள்களைத் தூவியதை அவனால் தவிர்க்க இயலவில்லை.

 

மெல்லத் திரும்பியவனைக் கண்டு, “என்னாச்சு மூச்சு வாங்குதா? கொஞ்சம் உக்காந்துட்டு போகலாமா?” என்று அவள் கேட்க, 

 

இடவலமாய் தலையாட்டியவன், “எதுக்குடா கூப்பிட்ட?” என்றான்.

 

மனதிற்குள் ‘என் தவிப்புகள் உன்னைச் சென்றடையவே இல்லையாடி’ என்ற செல்லச் சிணுங்களும் எழத்தான் செய்தது அவனுக்கு. ஆனால் அவனே அறியாத ஒன்று, ‘சிலநேரம் ‘டி’ போடுறாங்க. சிலநேரம் ‘டா’ போடுறாங்க. அப்ப அப்ப வித்தியாசமா பாக்குறாங்க. தப்பா தெரியலை.. ஆனா அது ஏதோ வித்தியாசமா இருக்கே’ என்று அவள் தற்போது கூட நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றாள் என்பது தான்!

 

“மா..இளா..” என்று அவன் அழைக்க, 

 

சட்டென நிலை பெற்றவள், “இல்லை.. இந்தபக்கம் ரெண்டு பாதை போகுது.. எந்தப் பாதைல போகலாம்?” என்று கேட்டாள்.

 

இரண்டு பாதையையும் பார்த்தவன், “தெரியலையே..” என்றபடி சுற்றிமுற்றி பார்த்தான்.

 

“வேணும்னா ஆளுக்கொரு பாதைல போவோமா?” என்று அவள் கேட்க, 

 

அவன் பதறித்தான் போனான். 

 

“என்னடி விளையாடுறியா? நீ பாட்டுக்கு போய்த் தொலைஞ்சுட்டா நான் என்ன பண்ணுவேன்? சும்மா இரு.. எங்கயா இருந்தாலும் ஒன்னாவே போகலாம்” என்றவன், 

 

அருகில் உள்ள மரத்தைப் பார்த்து, “நான் மேல ஏறிப் பாக்குறேன்” என்றபடி அதை நோக்கிச் சென்றான்.

 

அந்தோ பரிதாபம்! அவனுக்குத்தான் மரமேறத் தெரியாதே!

 

“ப்ச்..” என்று தலையைத் தேய்த்துக் கொண்டவன் அருகே அவள் வர, 

 

“எ..எனக்கு மரமேற வராது.. நான் ஏத்திவிடுறேன்.. நீ பாரு” என்று திக்கித்திணறி கூறினான்.

 

அதில் லேசாய் சிரித்துக் கொண்டவள் அவன் அருகே வந்து ‘எப்படி ஏறனும்’ என்பதாய் பார்க்கவும், ஒற்றைக்காலை பாதியாக மடக்கி நன்கு ஊன்றி நின்றவன், “ஷோல்டர புடிச்சுட்டு கால்ல ஏறுடா” என்க, 

 

விழிகள் தெறிக்கப் பார்த்தவள், “க..கால் வலிக்கப் போகுது” என்றாள்.

 

அவளது புசுபுசு தோற்றம் கண்டு மெல்லச் சிரித்தவன், “பேலன்ஸ் பண்ணிடுவேன்டி.. ஏறு” என்று அவன் கூற, 

 

பயத்துடன் பார்த்தபடி மரத்தை ஒரு கையால் பற்றிக் கொண்டு ஒற்றை காலை அவன் தொடை மீது வைத்தாள்.

 

“ஏறவா?” என்று அவள் கேட்க, 

 

அவள் மற்றைய கரத்தைப் பற்றித் தன் தோள்மீது வைத்தவன் “ஏறு” என்றான்.

 

‘ஆண்டவா’ என்று வேண்டிக் கொண்டு ஏறியவள் அவனைப் பார்க்க, “அந்தக் கிளைய பிடிச்சு ஏறு” என்று கண் காட்டிக் கூறினான். 

 

அவனைப் பார்த்தபடியே மெல்ல தலையாட்டியவள் அந்தக் கிளையைப் பற்றி ஏற முற்பட, தாவி ஏற முடியாது சற்றே தடுமாறினாள்.

 

“என் ஷோல்டர்ல நல்லா பேலன்ஸ் பண்ணி அந்தக் கிளைய ஒரு கைல பிடிச்சு எம்பு” என்று துரு கூற, 

 

அதற்கும் உம் கொட்டியவள் அவன் சொன்னபடி எம்ப அவள் கால்களைப் பற்றி நிமிர்ந்து நின்றவன் அவளை மேலே தூக்கி விட்டிருந்தான்.

 

கிளைகளை நன்கு பற்றி அதில் ஏறிக் கொண்டவள் அதிர்ந்து அரண்டு அவனை நோக்க, 

 

“ஆர் யூ ஓகே?” என்றவன் தான் உண்மையில் பதறித் தெரிந்தான்.

 

“நி..நீங்க ஓகேவா?” என்று அவள் கேட்க, 

 

‘அய்யோ… கொல்லாதடி’ என்று நினைத்துக் கொண்டவன் “ஓகேதான்டா. அங்க இருந்து ஏதும் தெரியாது. இன்னும் ஒரு கிளை மேல ஏறி இல்லைனா அந்தக் கிளைய பிடிச்சு எழுந்து நின்னு பாரு. பயப்படாத விழுந்தா நான் புடிச்சுக்குறேன்” என்று தைரியமூட்டினான்‌.

 

பீதியுடன் தலையாட்டியவள் எழுந்து நின்று பார்க்க, தூரத்தில் அந்த அருவி தெரிந்தது. அதற்கான பாதையையும் ஓரளவு கண்டுகொண்டவள், “பார்த்துட்டேன்” என்று கூற, 

 

“மெல்ல உக்காந்துட்டு பிறகு இறங்கு” என்றான்.

 

மீண்டும் அதே கிளையில் அமர்ந்து கால்களை ஒரே பக்கமாகத் தொங்க விட்டவள், “எப்படி இறங்க?” என்றாள்.

 

“ஒரு காலை ஷோல்டர்லயும் இன்னொரு காலைக் கைலயும் வச்சு என் ஷோல்டர பிடிச்சு இறங்கு” என்று அவன் கூற, 

 

“ஆஹாங் ஆஹாங்.. நீங்கத் தள்ளுங்க நான் குதிச்சுடுறேன்” என்றாள்.

 

“ஏ கைய கால உடைச்சுகிட்டா என்னால இந்தக் கரடுமுரடான பாதைல உன்னைத் தூக்கிட்டு போகமுடியாதுடி. ஒழுங்கா சொல்றதை செய்” என்று அவன் கூற, 

 

‘ஹாங்..’ என்று சிணுங்கியவள் அவன் சொன்னபடி செய்தாள்.

 

அவன் தோளைப் பற்றிக் கொண்டு இறங்குவதற்கு குதிக்க, அவள் இடை பற்றிப் பிடித்துக் கொண்டு கீழே இறக்கினான்.

 

அந்தச் செயலில் இருவரும் மனதில் இனம் புரியாத உணர்வை உணர்ந்தனரோ?! அவளைக் கீழே இறக்கி விட்டதும் பட்டெனத் தன் கைகளை எடுத்துக் கொண்டவன் திரும்பிட, பெண்ணவள் புரியாத படபடப்புடன் நின்றாள்.

 

உள்ளத்தில் தடதடவென்று குதிரை குதித்து ஓட, அதைக் கடிவாளமிட்டு அடக்கிடும் வழி அறியாமல் அவனைக் கண்டாள்.

 

சிரம் தாழ்த்தி அவள் பார்வையை முற்றுமாகத் தவித்திருந்தவன், ‘அய்யோ.. என்ன நினைப்பா இப்ப? நாளைப் பின்ன லவ்வுனு போய்ச் சொன்னா வேணும்னே தான் தூக்கிவிட்டேன்னு என்னைத் தப்பா நினைச்சுட மாட்டா? அடேய் துருவா..’ என்று எண்ண, 

 

அவன் முகம் பிரதிபலிக்கும் சங்கோஜம் அவளுள் ஒரு சிலிர்ப்பை தூண்டியது.

 

‘நான் எதும் சொல்லுவேன்னு பயப்படுறாங்களோ?’ என்று நினைத்து “த்..துரு” என்றவள், கண்களை அழுந்த மூடித் திறந்து அவன் “ஐம்..” என்று ஏதோ கூற வரும் முன், 

 

“இந்தப் பாதைதான். போவோமா?” என்றாள்.

 

அவள் கண்களை ஆழ்ந்து நோக்கியவன் காதல் மனம், ‘எந்தப் பாதையோ? வாழ்நாள் முழுக்க போலாமா?” என்று எண்ண, 

 

“போலாம்” என்றாள். 

 

சட்டென நிமிர்ந்தவன் கண்கள் காதல் உணர்ச்சிகளில் கலங்கி தெரிய, அதில் தன்னிடமிருந்து எதையோ அவனிடம் தொலைக்க துடித்தவள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு முன்னே நடந்தாள்.

 

அமைதியான அந்தப் பயணத்தின் முடிவில் அழகாய் அந்த நீர்வீழ்ச்சி இருவரின் விழிகளையும் ரசனைகளையும் மொத்தமாய் களவாடிக் கொண்டது.

 

“வாவ்..” என்று அவள் வாய்விட்டுக் கூற, 

 

“ரொம்ப அழகா இருக்குல்ல இந்த இடம்?” என்று கேட்டான். 

 

ஆமென்று தலையசைத்தவள் அந்த அருவியைச் சுற்றி முற்றி பார்த்து, “யாஹூ” என்று குதிக்க, அதில் திடுக்கிட்டுத் திரும்பியவன், 

 

“ஏன்டி?” என்றான்.

 

“துரு.. சுற்றி பாருங்க.. ஃபாக்ஸ் க்ளௌஸ்” என்று அவள் உற்சாகமாகக் கூற, 

 

தானும் சுற்றி பார்த்தவன், “இந்தப் பிங்க் கலர் பூ தான் ஃபாக்ஸ் க்ளௌஸா?” என்றான். 

 

“ஆமா.. இதுதான் அது. நம்ம விஷ்க்கு இன்ஃபோ பாஸ் பண்ணனும்” என்று அவள் கூற, 

 

“ம்ம்..” என்றபடி சுற்றி முற்றி பார்த்தவன் “ஆனா பனை மரத்தையே காணும்?” என்றான்.

 

தானும் சுற்றி முற்றி பார்த்தவள் “ஆமா..” என்று ஏமாற்றமாய் கூற, 

 

“சில்டா.. தேடிப்பார்ப்போம்” என்றான். 

 

இருவருமாய் தேடி முன்னேற, “ப்ச்.. என்னால முடியலை.. கால் வலிக்குது” என்று அங்குள்ள பாறை ஒன்றின் மீது அமர்ந்தாள்.

 

தானும் அவள் அருகே அமர்ந்து தனது கால்களைப் பிடித்துக் கொண்டவன், ஒரு பெருமூச்சு விட்டு, “என்னாலையும் முடியலைம்மா” என்றான். 

 

“இப்ப இது தான் அந்தக் குறிப்புல சொன்ன இடமானு கன்ஃபார்மா தெரியாம அவங்களை கூப்பிடவும் முடியாது” என்று கூறியவள் அப்படியே அந்தப் பாறையில் சரிந்து படுத்துக் கண்களை மூடிக் கொள்ள, 

 

கரங்களைப் பின்னே ஊன்றிச் சரிந்து அமர்ந்தவன் தலையைத் திருப்பி அவளைக் கண்டான்.

 

முகம் சுருக்கி படுத்திருந்தவள் பாதங்களை அசைக்க, அவள் கால்களைப் பற்றிச் சற்றும் தயங்காமல் அவளது பாதணிகளை அவிழ்த்தான்.

 

சட்டெனப் பதறி எழுந்தவள் “துரு.. விடுங்க” என்று கூற, 

 

“ஷுஸ் ரொம்ப டைட்டா இருக்கும் இளா.. கொஞ்ச நேரம் கலட்டி வச்சுட்டு போட்டுக்கோ” என்றபடி அவற்றைக் கழற்றினான்.

 

“இல்லை நானே..” என்றவள் அவன் அதைக் கழற்றியதும் “ஸ்ஸ்..” என்று காலைப் பற்றிக் கொள்ள, முதலில் விண் விண்ணென்று தெரித்த வலி மெல்ல மெல்ல மட்டுப்பட்டது. 

 

தானும் தனது பாதணிகளைக் கழற்றி வைத்தவன் அந்தப் பாறையில் படுக்க, தன் பாதங்களில் உள்ளங்கை வைத்து அழுத்தியபடி அமர்ந்திருந்தவள் அவனைத் திரும்பிப் பார்த்தான்.

 

கால்களை இடவலமாய் ஆட்டிக் கொண்டு ஒரு கையைத் தலைக்கு அடியிலும் மறு கையை நெற்றியிலும் வைத்துப் படுத்துக் கொண்டிருந்தவன் மெல்ல தன் நெற்றியிலிருந்த கரத்தினை விலக்கி, தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவளைப் பார்த்து, ‘என்ன’ என்பதாய் புருவம் ஏற்றி இறக்கினான்.

 

அதில் சற்றே திடுக்கிட்டவள் ஒன்னுமில்லை என்பதாய் தலையசைத்து திரும்பிட, 

 

சட்டென எழுந்து, “அருவில கால் நனைப்போமா?” என்றான்.

 

சிறுபிள்ளை போல் அவன் அவ்வாறு கேட்கவும் லேசாய் சிரித்தவள், சரியென்று தலையாட்ட, மெல்ல எழுந்து தன் சட்டையை உதறிக் கொண்டு அவளுக்குக் கைக்கொடுத்தான். 

 

தானும் எழுந்தவள் அவனோடு நடந்து அந்த அருவி நீர் கீழே விழும் குளம் போன்ற பகுதிக்குச் சென்றனர்.

 

பார்ப்பதற்கே வெள்ளியை உருக்கிக் கொட்டுவதைப் போல் காட்சி தந்த அவ்விடம் கண்களுக்கும் உடலுக்கு ஒரு குளிர்ச்சியை கொடுத்தது.

 

இருவருமாய் அந்த நீரில் கால் வைக்க, அதன் குளிர்ச்சியில் அவன் கரங்களை அழுந்தப் பிடித்துக் கொண்டு, “ஸ்ஸ்.. ஜில்லுனு இருக்கு” என்றாள்‌. 

 

அவளைப் பக்கவாட்டாய் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தவன், “இப்ப தான் காலுக்கு நல்லா இருக்கு” என்றபடி மேலே நோக்க, அப்படியே விழிகள் விரித்து நின்றான்.

 

அவன் அமைதியில் அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, அவனது அதிர்ச்சியில் மேலே நோக்கியவள், “ஏ பாம் ட்ரீ” என்று துள்ள, 

 

அவள் கரம் பற்றியிருந்தவன் அதில் தடுமாறி, “ஏ..ஏ..” என்று தண்ணீருக்குள் விழுந்தான்‌. விழும் நேரம் அவள் கரத்தை அவன் விட்டிருக்க, அவள் பிடிப்பதற்குள் தண்ணீருக்குள் விழுந்து, நீர் திவளைகளை வாரி அவள் மீதே இறைத்திருந்தான்.

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்