
அத்தியாயம் 30
அஸ்வந் பார்கவி இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். அறைக்குள் நுழைந்ததும் அவளை சீண்டும் பொருட்டு “ம்ம குடு…” என்று அவள் முன்பு கையை நீட்ட
“என்ன?…” என்றாள் அவள் புரியாமல்.
“அடியே ஆட்டோ காசு 200 ரூபா.. அதுக்கு ஒத்துக்கிட்டு தானே வண்டியில ஏறுன…” என்று அவன் கேட்க
“காசு எல்லாம் கொடுக்க முடியாது போடா…” என்று அவள் நகர
“காசு கொடுக்க முடியாதா!.. ஒழுங்கு மரியாதையா பேசின காச குடுடி….”
“நான் காசு தரேன்னு சொல்லலையே.. வண்டிய எடுக்க தான் சொன்னேன்…” என்று அவள் சொல்ல
“அடிப்பாவி ஏமாத்துக்காரி.. இவ்ளவு ப்ராட நீ?…”
“யாரு? யாரு பிராடு.. நானா உன்கிட்ட வந்து பணம் கொடுக்கிறேன் என்ன வீட்ல கொண்டு விடுனு சொன்னேனா என்ன.. நீயா வந்து லூசு மாதிரி பேரம் பேசினா.. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்…”
“ஆமா லூசு தான்டி.. உன்ன அங்கயே விட்டுட்டு வந்து இருக்கணும்…” என்று அவன் சொல்ல
சேலையை இழுத்து இடையில் சொருகியவள் “ஓஹோ அவ்ளோ தைரியம் இருந்தா விட்டுட்டு வர வேண்டியதுதானே…” என்க
“பாவம் பாத்து போனா போகுதுன்னு கூட்டிட்டு வந்தேன் பாரு என்ன சொல்லணும்…”
“ஆஹா பாவம் பாத்து கூட்டிட்டு வந்தாராம் இல்ல.. எனக்கு முன்னாடி வீட்டுக்கு வந்தா அத்த நான் எங்கனு கேப்பாங்கன்னு பயத்துல தானே கூட்டிட்டு வந்த…”
“எனக்கு என்ன பயம்.. கொழுப்பெடுத்து உங்க மருமக பஸ்ல தான் வருவேன்னு நின்னா நான் என்ன பண்ண முடியும்னு கேப்பேன்ல…”
“ஓஹோ! அது அப்போ கார்ல வற தோணல அத்த.. இப்போ கூப்பிட்டா வந்திருப்பேனு சொல்லி மாட்டி விட்டிருப்பேன்ல…” என்று அவள் சொல்ல
“சரி.. அப்போ நாளைல இருந்து என் கூட கார்ல வா…” என்று விட்டு குறும்பு புன்னகையுடன் அவன் குளியல் அறைக்குள் நுழைந்து கொள்ள
“என்ன?” என்று ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள் பார்கவி.
அவள் வாயினாலேயே கூப்பிட்டால் வருவேன் என்று சொல்ல வைத்து விட்டான் அந்த திருவன்.
குளியல் அறைக்குள் வந்தவன் உற்சாகமாக துள்ளி குதித்தான்.பார்கவியுடன் அமைதியாக அனுகுவதை விட, அவளுடன் அடாவடியாக சண்டை போடும்போது அதிகப்படியான உரிமை தெரிவதை உணர முடிந்தது.
எனவே அவளை சீண்டி சீண்டியே, சிறுக சிறுக அவள் மனதில் கணவனாக சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டான்.
ஊடல் வந்தால் தானே கூடல் வரும். அந்த தியரியைத்தான் கையில் எடுத்திருந்தான்.
அவன் குளித்து முடித்து வெளியே வர, பார்கவி எதுவும் பேசவில்லை. அவனை முறைத்துப் பார்த்தாள்.
தன் வாயினாலேயே சம்மதம் கூற வைத்த அவன் சாமர்த்தியம் சிறிது நேரம் கழித்து தான் புரிந்தது.
அவளும் குளித்துவிட்டு வந்தாள். சிறிது நேரம் கழித்து செவ்வந்தி இருவரையும் சாப்பிட அழைக்க,
அஸ்வந் “என்ன சாப்பாடு ம்மா…?” என்று கேட்க
“தோசை தான்டா…”
“எனக்கு தோசை வேணாம்.. சப்பாத்தி தான் வேணும்…”
“என்னடா நீ.. திடீர்னு சப்பாத்தி கேட்டா எப்படி.. என்னாலலாம் இதுக்கு பிறகு மாவு பிசைஞ்சு சப்பாத்தி செய்யலாம் முடியாது…”
“உங்கள யாரு செய்ய சொன்னா.. அதுக்கு தான் என் பொண்டாட்டி இருக்காளே…” என்று அவன் பார்கவியை அடக்கப்பட்டு சிரிப்புடன் பார்க்க,
அவளோ அவனை திகைத்துப் பார்க்க, “புருஷனுக்கு தேவையானத பொண்டாட்டி தானே செஞ்சு கொடுக்கணும்…” என்று செவ்வந்தியை பார்த்து அவன் கண்ணடித்து கேட்க,
அவருக்கு இளைய மகனின் திட்டம் புரிய “அது சரி தான்டா.. உனக்கு தான் கல்யாணம் ஆச்சே.. உனக்கு தேவையானத உன் பொண்டாட்டி செஞ்சு கொடுக்கப் போறா…” என்றவர்
“அம்மாடி பார்கவி அவன் கேக்குறத செஞ்சு குடுமா…” என்று சொல்ல அவளுக்கு மறுக்க முடியாத நிலை.
“சரி அத்த…” என்றவள் சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
“கேடி எவ்ளவு நேக்கா வேலை வாங்குறான்.. பொண்டாட்டியாம் இல்ல பொண்டாட்டி…” என்று அவனுக்கு திட்டிக்கொண்டே மாவை குத்தி அவள் பிசைய,
அவள் மனசாட்சியோ (‘பொண்டாட்டி இல்லாம வேற என்ன?’) என்று கேட்க
‘நீ அந்த பக்கம் போ…’ என்று அதன் வாயையும் மாவை வைத்து அடைத்துவிட்டாள்.
ஒருவாறு சப்பாத்தியை செய்து எடுத்துக்கொண்டு டைனிங் டேபிள் வர, “பார்கவி நான் சாப்பிட்டேன்மா.. நான் போய் தூங்குறேன்.. நீ அவனுக்கு பரிமாறு…” என்று சொல்லிவிட்டு செவ்வந்தி அறைக்கு சென்று விட
“பச்ச குழந்தை.. தட்டுல போட்டு ஊட்டியும் வேற விடனும் போல…’ என்று முணுமுணுத்துக் கொண்டு, அஸ்வந் தட்டில் சப்பாத்தியை பார்கவி வைக்க
அவனோ முதல் முறை தனக்காக சமைத்து பரிமாறும் மனைவியை ஆசையாக பார்த்திருந்தான். அவன் பார்வை அவளைத் தாக்க, அவள் அவனை கண்டுகொண்டு “என்ன?.. சாப்பிடு…”என்று அதட்ட
“ம்ம்..”என்று ஒரு துண்டை பிய்த்து குருமாவுடன் வாயில் வைத்து சுவைத்தவன்
“ம்ம்ம்.. கவி உன் கன்னம் மாதிரியே சாஃப்டா இருக்கு…” என்று சொல்ல
“என்னது?…” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி அவள் சண்டைக்கு தயாராக
“அ..அது கன்னிப் பொண்ணு கன்னம் மாதிரி சாஃப்டா இருக்குன்னு சொன்னேன்…”
“ஓஹோ ஐயா எத்தன கன்னி பொண்ணுங்க கன்னத்த தடவி பாத்திருக்கீங்க…” என்று அவள் நக்கல் தோனியில் கேட்க
“எங்க கட்டுனவள் கன்னதையே தடவ முடியலையே…’ என்று அவன் வாய்க்குள் முணுமுணுக்க
“ஹா விளங்கல…”
“ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. உடனே லிஸ்ட் போடுன்னா எப்படி.. சரி விடு என் தோட்டத்து பூ போல இருக்கு ஓகேவா.. பாராட்டினா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது…” என்று அவன் சொல்ல
“அப்படியா.. தேங்க்ஸ்.. இந்தா பூ போல சப்பாத்தி…” என்று இன்னொன்றை அவன் தட்டில் எடுத்து வைக்க
“நன்றி” என்றவன் ரசித்து, ருசித்து உண்டான்.
அவள் அவன் மீது இருந்த கடுப்பில் குத்திய குத்தில் சப்பாத்தி கடினமாக தான் வந்தது. ஆனால் அவன் எதுவும் சொல்லாமல் உண்டது அவளுக்கு பிடித்திருந்தது.
அடுத்த நாள் காலை பார்கவி எப்போவும் போல காஃபி எடுத்துக்கொண்டு கண்ணாடி தோட்டத்திற்கு செல்ல போக அவள் முகத்தில் வந்து விழுந்தது அஸ்வந்தின் ஆலிவ் கிரீன் சட்டை.
அதை கையில் எடுத்தவள் கோபமாக “என்ன இது?…” என்க
“ஹா, என் சட்டை…”
“நான் மட்டும் என் ஜாக்கெட்னா சொன்னேன்…”
“உன் ஜாக்கெட்டா…” என்று அவளை தலை சரித்து அவன் பார்க்க ,
“என்ன?..” என்று அவள் முறைக்க
“ஒன்னும் இல்ல.. அதை இன்னொரு நாள் சொல்றேன்.. நீ இப்போ இத அயன் பண்ணி குடு…” என்று சொல்ல
” ஏன் உன் கைல என்ன?.. இவ்ளவு நாள் நீ தானே அயன் பண்ணுன…”
“இத்தன நாள் பண்ணுனதே தப்புதான்.. பொண்டாட்டி இருக்கும்போது நான் ஏன் பண்ணனும்.. இனிமே நீதான் டெய்லி நான் போடுற சட்டைய அயன் பண்ணனும்…” என்று சொல்ல
“முடியாதுன்னு சொன்னா…”
“சிம்பிள்.. உன்னோட ஃபேவரைட் தோட்டத்துக்கு போக முடியாது…” என்றவன், அந்த இரும்பு கம்பி கேட்டை சங்கிலியால் சுற்றி, பூட்டு போட்டு விட்டு சாவியை தூக்கி பிடிக்க,
அவன் மீதே அந்த சட்டையை தூக்கி எறிந்தவள் “ஒன்னும் வேணாம் போடா.. இவனுக்கு நான் பண்ணனுமாம்…” என்று திட்டியவள் சோஃபாவில் சென்று அமர்ந்து விட்டாள்.
“புருஷனுக்கு பொண்டாட்டி பண்ணலாம் தப்பில்ல…”என்று சொன்னவன் சட்டையை கட்டில் போட்டுவிட்டு குளிக்க சென்றான்.
கையில் இருந்த காஃபியை அவள் குடிக்கவே இல்லை. கண்கள் அந்த இரும்பு கம்பி கேட்டையே பார்த்தது. கண்கள் துரு துருனு உறுத்தியது.
21 நாட்கள் ஒரு விடயத்தை தொடர்ந்து செய்தால் அதை மாற்ற முடியாது என்பது போல், இத்தனை நாட்கள் காலை சூரியனும், கண்ணைக் கவரும் பூக்களும் சுற்றி இருக்க, ஊஞ்சலில் அமர்ந்து காஃபி அருந்தியே பழகி விட்டாள். வீம்புக்கு கூட அதை தவிர்க்க முடியவில்லை.
அவன் தனக்காக அமைத்த சொர்க்கத்தை இவளுக்கு பரிசளித்ததை போன்று எண்ணியிருந்தாள். இன்று இல்லை என்றதும் கவலையும் ஆத்திரமும் சேர்ந்து வந்தது.
சிறிது நேரம் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, அவனுக்கு திட்டிக் கொண்டிருந்தாள்.
அந்த தோட்டத்தில் சிறிது நேரம் அமரவில்லை என்றால், அவளுக்கு அந்த நாளே ஏதோ போல் இருக்கும்.
எனவே எழுந்து கட்டிலில் இருந்த அவன் சட்டையை அயன் செய்து வைத்தாள்.ஆறிய காஃபியை கொட்டி விட்டு சூடாக வேறு போட்டுக் கொண்டு அறைக்கு அவள் வரவும், அஸ்வந் குளித்து முடித்து வெளியே வரவும் சரியாக இருந்தது.
காபியை மேஜையில் வைத்தவள், அவன் முன்பு போய் கையை நீட்டி “சாவி…” என்க,
ஈரமான தலை முடியை கையால் சிலிப்பி விட்டு கொண்டிருந்தவன் “சட்டை…” என்றான்.
அவனை முறைத்தவள் முகத்தை திருப்பிக் கொண்டு, சட்டை எடுத்து நீட்ட, உதட்டுக்குள் மறைந்த புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டவன், சாவியை எடுத்து கொடுத்தான்.
வெடுக்கென்று அதை வாங்கிக் கொண்டவள், காஃபியுடன் தோட்டத்திற்கு சென்றாள். செல்லும் அவளையு ஆசையாக பார்த்திருந்தவன் மனதில் புதிதாக ஒரு சந்தோஷ ஊற்று.
அதன் பின் இருவரும் தயாராகி வேலைக்குச் செல்ல அறையை விட்டு வெளியே வந்து, காலை சாப்பாட்டை சாப்பிட அமர, யாரும் சொல்லாமலே அவனுக்குமாக பரிமாறி, அவளும் சாப்பிட்டாள்.
மதிய உணவை பேக் செய்யும் போது சமையலறையினுள் வந்த அஸ்வந் “எனக்கும் சேத்து பேக் பண்ணு…” என்று சொல்ல
“ஏன்? புதுசா என்ன?.. கண்மணி என்ன ஆனா?…” என்று நக்கலாக அவள் கேட்க
“என் பொண்டாட்டி நீ தானே…” என்றான் அவளை ஆழ்ந்து பார்த்து. அந்த பார்வையில் முகத்தை திருப்பிக் கொண்டவள், அவனுக்காகவும் சேர்த்து மதிய உணவை கட்டிக் கொண்டாள்.
என்று கண்மணியின் ஒரு தலை காதல் தெரிய வந்ததோ, அன்றிலிருந்து அவன் வீட்டு சாப்பாடு தான் கொண்டு செல்கின்றான். அது தெரிந்தாலும் அவனை சீண்டும் பொருட்டு அவள் கேட்க, அவன் பதிலடி கொடுத்திருந்தான்.
அனைத்தையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவளை காரின் அருகில் நின்று பார்த்திருந்தான்.
எப்பவும் போல் பிங் நிற புடவை உடுத்தி இருந்தாள். அவளுக்கு மிகவும் பிடித்த நிறம் போலும். அவள் நிறத்திற்கும், உடுத்தி இருந்த சேலைக்கும், பாலில் ரோஸ் எசன்ஸ் கலந்தது போன்று இருந்தாள்.
அவனைத் தாண்டி சென்றவனை “அடியே…” என்று அழைக்க, அவள் திரும்பி முறைக்க, கண்களால் காரில் ஏறும்படி சைகை செய்தான்.
அவள் அப்படியே நிற்க, “ஓஹோ மேடம் கூப்பிட்டா தான் வருவீங்க இல்ல.. அடியே பொண்டாட்டி வந்து கார்ல ஏறுடி…” என்று அவன் சொல்ல
கழுத்தை திருப்பி நொடித்துக் கொண்டவள் பின் சீட்டில் ஏறிக்கொண்டாள்.
“பாத்து, பாத்து கழுத்து சுளுக்கிக்க போகுது…” என்று அவன் கிண்டல் பண்ணவும்
“அது என் பாடு.. நீ ஒழுங்கா கார ஓட்டு…” என்றாள். இறுக்கம் இல்லை, கோவம் இல்லை, ஏட்டிக்கு போட்டி வாயாடும் தோனி தான் இருந்தது.
விசில் அடித்தபடியே அவனும் வண்டியை எடுத்தான். இதுவே தொடர்கதையானது. தினமும் காலை மாலை காரில் அவளை அழைத்துச் சென்றான்.
அவன் துடைத்த ஈர டவலை அவள் தோளில் போட்டுவிட்டு, அதை காயப் போட சொல்வது.
அவன் உடையை அவனே மறைத்து வைத்துவிட்டு அவளை தேடி தர சொல்வது.
அவளை சிறிது நேரம் கூட தனிமையில் இருக்க விடாமல் ஏதாவது சாப்பாடு செய்து தரச் சொல்லி கடுப்பைக் கூட்டுவது.
அவளால் அவனை முறைக்க கூட முடியாத நிலை. அவள் முறைத்து பார்த்தால் புருஷனுக்கு பொண்டாட்டி தானே செய்யணும் என்று சொல்வான்.
சில நேரம் கடுப்பாகி மறுத்து பேசிவிட்டு, அவன் பேச்சை கேட்க முடியாமல், அவன் வார்த்தைகள் வரும் முன் கையை நீட்டி தடுப்பவள்,
அவளே ” புருஷனுக்கு பொண்டாட்டி தானே செய்யணும் அது தானே.. செஞ்சு தொலைக்கிறேன்…” என்று சென்று விடுவாள்.
அவள் எண்ணத்தில் அவன் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக, அவன் சம்பந்தப்பட்ட சிறு சிறு வேலைகளை செய்ய வைத்தான்.
அவளும் செய்தாள். பழகியும் கொண்டாள்.இல்லையென்றால் தோட்டத்திற்குள் நுழைய விட மாட்டானே. அவளது இதமான அழகிய நிமிடங்களை இழக்க விரும்பவில்லை அவள்.
*******
அன்று வெள்ளிக்கிழமை. வழக்கமாக வேலைக்கு செல்லும் வழியில் இல்லாமல் அவன் வேறு வழியாக காரை திருப்ப,
“இந்த பக்கம் எங்க போற…” என்று கேட்க
“ஹா..உன்ன கடத்திட்டு ஹனிமூன் போறேன்…” என்று சொல்ல
“என்ன?…” என்று அவள் திகைப்பாக கேட்க
“ஷாக்க குறைடி.. ரொம்ப டென்ஷன் ஆகாத கோயிலுக்கு போறோம்.. கடத்திட்டு போயும் பிரயோசனமில்ல.. ஹனிமூன் கொண்டாடணும்னா கைகால கட்டி போட்டு தான் கொண்டாடணும்…” என்று அவன் சொன்ன பின்பாதி அவளுக்கு விளங்கவில்லை போலும்.
“என்ன திடீர்னு கோவிலுக்கு…?”
“இன்னைக்கு வெள்ளிக்கிழமைல கோயிலுக்கு போகணும்னு தோணுச்சு…” என்றவன் காரை கோயிலில் நிறுத்த, அவளும் இறங்கி அவனுடன் உள்ளே சென்றாள்.
இருவரும் சுவாமி சன்னதியின் முன்பு நிற்க, ஐயர் பார்கவிக்கு பூவும் குங்குமமும் கொடுக்க, அதை பவ்யமாக வாங்கிக் கொண்டாள்.
அஸ்வந்தும் பிரசாதம் வாங்கிக் கொண்டவன், அவள் கையில் இருந்த குங்குமத்தை எடுத்து புருவம் மத்தியில் வைத்து விட்டான்.
பார்கவியின் உடலில் ஒரு சிலிர்ப்பு. அதிர்ந்து அவனைப் பார்க்க, “என்ன புருஷன் தானே…” என்றான் அழுத்தமாக. அவள் எதுவும் சொல்லவில்லை.
அவள் நெற்றி வகுட்டிலும் பொட்டு வைத்து விட்டான் இரண்டாவது முறை. முதல் முறை போன்று இல்லாமல் இருவரின் மனதிலும் கனவின் மனைவி என்ற பந்தம் ஆழமாக பதிந்து இருந்தது.
பார்கவிக்கு என்ன உணர்வு என்றே புரியவில்லை. உடலில் ஒரு உணர்வு ஓடி இறங்கி உள்ளங்கால் குளிர்ந்தது.
அவள் கையில் இருந்த பூவையும் எடுத்து உரிமையுடன் அவள் தலையில் வைத்து விட்டான். கண்களை மூடி திறந்தாள் பார்கவி.
அவளை ஆசையாக பார்த்தவன் “இப்போதான் லட்சணமா இருக்க, வா…” என்று அவளை அழைத்துக்கொண்டு அலுவலகம் கிளம்பினான்.

