
அத்தியாயம் 21
அடுத்த நாளிலிருந்து பார்கவி பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்தாள்.
காலையில் எழுந்து தனது கடமைகளை முடித்துவிட்டு, அஸ்வந்தை கூட கண்டுகொள்ள மாட்டாள். பஸ்ஸில் பாடசாலை வந்து சேர்ந்து விடுவாள்.
பேருக்கு கண்மணி மாளவிகாவுடன் பேசிக் கொள்வாள். மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பது அவளது மனதிற்கு சற்று அமைதியாகவே இருந்தது. பிடித்த வேலை அல்லவா எனவே அதில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள்.
ஆனால் வீட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. செவ்வந்திக்கு அவளை நினைக்க நினைக்க மனது கஷ்டமாக இருந்தது.
பெண் பிள்ளை இல்லாமல் ஏங்கி இருந்தவர், என்னதான் தன் ஆண் பிள்ளைகள் பாசமாக இருந்தாலும், அவர்களிடம் அவர் நினைப்பது எல்லாவற்றையும் பேசி விட முடியாதே.
எனவே தான் தனக்கு ஒரு மருகள் வருவாள், அவள் வந்த பின் தனக்கு பேச்சு துணையாக இருப்பாள், தன்னுடன் சேர்ந்து நேரம் செலவழிப்பாள், கும்பத்தை கலலப்பாக வைத்துக்கொள்வாள் என்று எதிர் பார்க்க, ஆனால் வீட்டிற்கு மருமகள் வந்தது போன்றே இல்லை.
வீட்டு வேலைகள் எதுவும் பார்கவி செய்தது கிடையாது. செவ்வந்தி செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்ததும் இல்லை .
ஆனால் காலையில் எழுந்து பூஜை செய்யலாம் அல்லவா. அதைக் கூட அவள் செய்வதில்லை. திருமணமான அன்று பூஜை அறையில் விளக்கேற்றியது, அதன் பின் அந்த பூஜை அறைக்குள் அவள் செல்லவே இல்லை.
அவள் இருந்த விரக்தியான மனநிலையில் கடவுளை தெழுவது முக்கியமாக படவில்லை. இருந்த தெய்வங்கள் அத்தனையையும் நம்பினாளே, பூஜை செய்தாளே, ஒரு தெய்வமாவது அவள் வேண்டி நின்ற வரத்தை கொடுக்கவில்லையே .
அதன் பிறகு எப்படி தோன்றும் அவளுக்கு பூஜை செய்ய வேண்டும்.புனர்ஸ்காரம் பண்ண வேண்டும் என்று.
அவளே எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தன் எதிர்காலத்திடம் இருந்து ஒழிந்து ஓட வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றாள்.
பார்கவி நாட்கள் இப்படி செல்ல பர்விதாவோ அபர்ஜித்தின் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்று மிகக் கவனமாக அவனை தவிர்த்து வந்தாள்.
அபர்ஜித் பர்விதாவை கடைசியாக பார்கவியின் திருமணத்தின்போது பார்த்தது. இதோ இருபது நாட்கள் முடிவடைந்து விட்டது. அவனும் காலையிலும் மாலையிலும் காலேஜ் வாசலில் வந்து நின்று அவளுக்காக காத்திருக்கின்றான்.
முதலில் அவன் கண்ணிலேயே படாமல் இருந்தவள், அதன் பின் தந்தையுடன் வந்து சென்றாள். வசந்தராஜன் அவளை அழைத்துச் செல்வதற்கு வந்த பின்னர் தான் காலேஜை விட்டு வெளியேவே வருவாள்.
வசந்தராஜன் முன்னிலையில் பர்விதாவிடம் போய் பேச முடியாமல், எப்படி அவளை வழிக்கு கொண்டு வருவது என்றும் புரியாமல் தவித்தான் அபர்ஜித்.
அவனது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று அவளுக்கு நன்கு தெரியுமே. இரண்டு முறை திருட்டுத்தனமாக வீட்டிற்கு கூட சென்று பார்த்து விட்டான்.
அவள் இதற்கு முன் செய்தது போன்றே, அவன் உள்ளே வருவதற்கான எந்த வழியையும் விட்டு வைக்கவில்லை. முன்னேற்பாடுகளை செய்து விட்டே தூங்கினாள்
பர்விதாவை பார்க்க முடியாமல், பேச முடியாமல் பைத்தியக்காரனைப் போன்றே சுற்றி வந்தான் அபர்ஜித்.
அவன் ஆசைப்பட்டு படித்து, திறன்பட செய்து வந்த வக்கீல் வேலையை கூட அவனால் பார்க்க முடியவில்லை.
அறிவழகியை கோட்டுக்கு அனுப்பி வாய்தா வாங்கிக்கொண்டு அலுவலகத்திலேயே பித்து பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான்.
“சூனியம் எல்லாம் பலிக்காதுனு நினைச்சேன் சீனியர்.. ஆனா பளிச்சுருச்சு போல…” என்று அறிவழகி திடீரென்று சொல்ல,
தன் வாட்டமான முத்தை கையில் தாங்கி இருந்தவன் “எப்டியும் தேவையில்லாத ஆணியத்தான் புடுங்க போற.. சொல்லு.. என்ன இப்ப சொல்லணும்…” என்று அவன் கேட்க
“முட்டை சூனியம் கேள்விப்பட்டிருக்க சீனியர்.. முத்த சூன்யம் இப்பதான் முதல் முறையா பாக்கிறேன்.. ரொம்ப பவர்ஃபுல் இல்ல…”என்று அவள் கன்னத்தில் கை வைக்க
“ஏதோ முடிவு பண்ணிட்ட.. முழுசா சொல்லி முடி…”
“என்னாச்சு சீனியர்.. முடிக்க வேண்டிய கேசையெல்லாம் வக்காலத்து பண்ணாம.. வாய்தா வாங்கி வச்சுட்டு ஹாயா ஆஃபீஸ்ல இருந்து சோக கீதம் வாசிக்கிறீங்க.. இது உங்களுக்கு செட் ஆகல சீனியர்.. காலேஜ்ல உங்கள எவ்ளவு கெத்தா பாத்தேன்.. கோர்ட்ல எவ்ளோ மாஸா இருந்தீங்க.. இப்டி லூசு ஆயிட்டீங்களே…”
“அறிவு ப்ளீஸ்.. நானே மண்டய பிச்சிக்கிட்டு உட்கார்ந்து இருக்கேன்.. என் பொறுமை எங்கயோ போயிட்டு இருக்கு.. நீ வேற என்ன சோதிக்காத…” என்று அவன் கடிந்து கொள்ள
“பின்ன என்ன சீனியர்.. இப்ப என்ன பிரச்சன.. உங்க பொண்ணோட கொஞ்சம் பேசணும்னு அவங்க அப்பா கிட்ட சொல்லிட்டு, பேசிட்டு வாங்க.. இதுக்கு பிறகு ஏத மறைக்க போறீங்க.. அதுதான் பார்கவி மேடமுக்கு கல்யாணம் ஆயிடுச்சுல…”
“அது தெரியாமலா லூசு அறிவே இத்தன நாள் அமைதியா இருக்கேன்.. கல்யாணம் தான் ஆகியிருக்கு.. பார்கவி நோர்மலா இல்ல.. அவ சந்தோஷமா வாழ்ந்தாளே பர்வி என்ன தேடி வருவான்னு தோணுது..
ஆனா அது என் கையில இல்ல.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல..சரி இவள சமாதானப்படுத்திடலாம்னு பாத்தா.. எனக்கான ஸ்பேஸே தர மாட்டேங்குறா.. எப்பவுமே இப்டித்தான் பண்றா..என்ன அவாய்ட் பண்றது..அவ மட்டும் தனியா என்கிட்ட மாட்டுனா.. எனக்கு இருக்கிற ஆத்திரத்துக்கு… ”
“என்ன சீனியர்.. இழுத்து வச்சு கிஸ் அடிக்க போறீங்க அதுதானே…” என்று அவள் காலை வார,
“அறிவு உங்கிட்ட எல்லாத்தையும் ஓபனா சொன்னது தப்பா போச்சு.. டைம் கிடைக்கும் போதெல்லாம் நீ என் கால வார்ர…”
“சரி சரி நமக்குள்ள இதெல்லாம் நடக்குறது தானே.. சொல்லுங்க …”
“நீ சொல்ற மாதிரி எல்லார் முன்னாடியும் உண்மைய சொல்லிடுவேன்.. ஆனா நான் சொல்லப்போய், அவ முடியவே முடியாது, இவர நான் கட்டிக்கவே மாட்டேன்னு திரும்பவும் பிளேட்ட மாத்தி விட்டுருவா.. அவள தனியா சந்திச்சு கொஞ்சம் மாயப்பொடி தூவணும் எப்படின்னு தான் தெரியல…”
“உங்களுக்கு இப்போல்லாம் மூள வேலை செய்ய மாட்டேங்குது அது ஏன்னு தெரியவில்ல சீனியர்..
…நீங்க மௌனராகம் படம் பாக்கலையா.. காலேஜ்ல ரேவதி படிச்சிட்டு இருப்பாங்க கார்த்திக் அவங்கள வெளியே கூட்டி வரணும்ன்றதுக்காக உங்க அப்பாக்கு ஆக்சிடென்ட்னு பொய் சொல்லி வெளியே கூட்டிட்டு வந்து லவ் சொல்லுவாங்க..
…எவ்ளவு அழகான சீன்.. காலம் காலமா இப்ப வரைக்கும் நின்னு பேசுற சீன்.. அத நீங்க ஏன் ட்ரை பண்ண கூடாது…”
“ஆமா நான் போயிட்டு ஏதாவது சொன்னேனா அப்டியே என் பின்னாடியே வந்துருவா பாரு.. நடக்கிறத பேசு.. அவ என்ன நம்ப மாட்டா.. அது மட்டும் இல்லாம அப்போ ஃபோன் இல்ல.. இப்போ ஃபோன் இருக்கு கால் பண்ணி கேட்டுட்டானா விஷயம் முடிஞ்சது …”
“ஓஹோ இந்த டெக்னாலஜி வளர்ந்து பல காதலுக்கு விளக்கேத்தி வச்சிச்சு ஆனா உங்க காதல்ல மண்ணள்ளி போட்டுருச்சே.. சரி இப்போ என்ன.. டெக்னாலஜி கைவிட்டாலும் இந்த அறிவு கை விடமாட்டா கிளம்புங்க.. இன்னைக்கு உங்க ஆள நீங்க கடத்துறீங்க…” என்று அவள் தலையை சிலுப்பி சொல்ல,
“எப்டி முதல்ல ஐடியாவ சொல்லு…”
“அட உங்க மாமனார் வந்தாத்தானே நேரத்துக்கு கிளம்பி மேடம் போக முடியும்.. அவர் லேட்டா வந்தா.. காலேஜ்ல இருக்குற எல்லாரும் வீட்டுக்கு கிளம்பிடுவாங்க.. தனியா இருக்கிற மேடத்த கடத்த உங்களுக்கு சொல்லியா தரணும்…” என்று கேட்க
“கரெக்ட் தான்.. ஆனா எப்டி முடியும்…”
“அதெல்லாம் சப்ப மேட்டர்.. வாங்க…” என்றவள் வெளியே வந்து தன் ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தவள், கட்டை விரலை தூக்கி காட்டி விட்டு முன் சென்றாள்.
இவனும் எப்படியாவது பர்விதாவை பார்த்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் காலேஜ் வாசலுக்கு வந்து நின்றான்.
மாலை காலேஜ் முடியவும் மாணவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர்.
காலேஜிலிருந்து சற்று தள்ளி வசந்தராஜன் வரும் வழியை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் அறிவழகி.
அவர் வருவதை பார்த்துவிட்டு வண்டியை மெதுவாக ஸ்டார்ட் செய்து, அவர் பின்னே ஓட்டி வந்தவள், அவரது வண்டியை இடிப்பது போல் போகவும், வசந்தராஜன் சுதாரித்துக் கொண்டு வண்டியை நிறுத்தினார்.
அவர் நிருத்திய பின்னர் இவளாக கொண்டு அவரின் வண்டியின் முன் டயரில் தன் வண்டியை மோத விட்டுவிட்டு ஐயோ அம்மா என்று கத்தி ஊரையே கூட்டி விட்டாள்.
வசந்தராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளாக வந்து நிறுத்தி இருந்த வண்டியில் மோதிவிட்டு ஆர்ப்பாட்டம் பண்ணவும்
“அம்மாடி என்ன ஆச்சு?.. நீ ஏமா சத்தம் போடுற…” என்று கேட்க
“ஏன் சத்தம் போடுறேனா.. என் வண்டிய இடிச்சு தள்ளிட்டு இப்போ ஏன் கத்துறேன்னா கேக்குறீங்க…”என்று கேட்க
அவர் வண்டியை எட்டிப் பார்த்தார், ஸ்டான்ட் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவள்
“அ..அது..நான் தான் தூக்கி நிறுத்தி வச்சிருக்கேன்.. ஏதோ நானா இருக்க போக காயம் இல்லாம முழுசா நிக்குறேன்..இதுவே வேற யாராவதுனா நாலடி தள்ளி போய் விழுந்து.. ரோட்டுல போற வாகனத்துல மிதிபட்டு அவ்ளவுதான்…” என்று நாகை வெளியே தள்ளி இறப்பது போல் காண்பித்தவள்
“கொல கேஸ்ல உள்ள போயிருப்பீங்க…” என்று அவரை மிரட்ட
“அய்யோ! நான் எதுவும் பண்ணல.. நான் தான் பிரேக் போட்டு நிப்பாட்டிட்டேனே.. நீயாதானேமா வந்து மோதுன…”
“அய்யோ.. அய்யோ.. அய்யோ.. எவ்ளோ பெரிய பொய்.. நானா வந்து உங்க வண்டியில மோதுனனா.. ஏன் எனக்கு கண்ணு தெரியாதா? இல்ல வண்டி தான் ஓட்ட தெரியாதா.. லைசன்ஸ் எடுத்து ஏழு வருஷம் ஆகுது…” என்று அவள் அளந்து விட்டுக் கொண்டே போக
“சரிமா.. இப்ப என்ன வண்டி ரிப்பேரா.. நான் அதுக்கு காசு தந்துடுறேன்…”
“எது காசா.. காசு தந்து எல்லாத்தையும் மூடி மறைக்கலாம்னு பாக்குறீங்களா..? முடியவே முடியாது இப்ப போலீஸ் வந்தாகணும்…”
“சரி போலீச கூப்பிடுமா…” என்று அவர் சொல்ல உடனே திருட்டு முழி முழித்தவள்
“அது எப்டி முடியும்.. போலீஸ் வந்ததும் நீங்க ஏதாவது பேசி அப்டியே எஸ்கேப் ஆயிடலாம்னு பாக்குறீங்களா.. முடியவே முடியாது… ”
“சரிமா இப்போ நான் என்னதான் பண்ணனும்…”
“அது எப்டி.. டக்குன்னு சொல்றது..நீங்க முதல்ல இங்கயே இருங்க..நம்ம பேசி ஒரு முடிவுக்கு வரலாம்…” அவரை எப்படி இதற்கு மேல் தடுத்து நிப்பாட்டுவது என்று புரியாமல் அவளும் முடிந்தவரை வசந்தராஜனை தடுத்து வைத்திருந்தாள்.
பர்விதா காலேஜில் வசந்தராஜனுக்காக பார்த்து பார்த்து நின்றவள் தொலைபேசியில் அழைத்தாள்.
அறிவழகி இங்கே கூட்டிக் கொண்டிருந்த அளப்பறையில் வசந்தராஜனால் தொலைபேசியை எடுத்துப் பேசக்கூட முடியவில்லை.
இடையில் ஒரு தடவை மட்டும் அழைப்பை ஏற்று வந்து கொண்டிருப்பதாக கூறிவிட்டு வைத்து விட்டார்.
அபர்ஜித் வெளியே காத்திருந்தவன் பெரும்பாலான மாணவர்கள் சென்ற பின் காலேஜின் உள்ளே நுழைந்தான்.
அவனை காலேஜின் உள்ளே பார்த்ததும் பர்விதாவிற்கு தூக்கி வாரி போட்டது. அதே நேரம் அவள் காதல் கொண்ட மனது அவனை கண்களில் நிரப்பிக் கொண்டது.
அவனோ கண்களில் உயிர்ப்பில்லாமல் அவன் உயிரானவளை தேடிக்கொண்டிருந்தான். பர்விதாவை கண்டதும் காதல், பாசம், அதையும் தாண்டி அத்தனை ஆத்திரம்.
அவனுக்கு நன்கு தெரியுமே அவள் மனதிலும் அவன் இருப்பது. இருந்தும் ஏன் இந்த விலகல் என்பதுதான் அவன் கோபத்திற்கு காரணம்.
எதுவும் பேசாமல் அவள் கையை பிடித்து வேகமாக இழுத்து வந்தான் வெளியே. அவளும் பெரிதாக ஒன்றும் எதிர்க்கவில்லை. ஆனால் காரின் அருகே வந்ததும்
“விடுங்க!. நான் உங்க கூட வர முடியாது…” என்று சொல்ல ஒற்றை விரலை நீட்டி, அவன் உறுத்து பார்த்த அந்த பார்வை கண்களில் அத்தனை சிவப்பு “வாய மூடிட்டு உள்ள ஏறு.. ஏதாவது பேசுன.. ஒரே அடி தான் இங்கே விழுந்திடுவ…” என்று அவன் கோபப்பட
“இல்ல.. இது சரியா வராது.. நான்தான் அன்னைக்கே சொல்லிட்டேனே.. என்ன பேசணும் என்கிட்ட.. ஏன் திரும்பத் திரும்ப என்ன டார்ச்சர் பண்றீங்க…”
“உன்ன உள்ள ஏறுன்னு சொன்னேன்.. உனக்கு அந்த ஈர வெங்காய விளக்கம் எல்லாம் நம்ம வீட்டுக்கு போனதும் தாரேன்…” என்று அவளை பிடித்து காரின் உள்ளே தள்ளிவிட்டு, கதவை அடைத்தவன், வேகமாக காரை பீச் ஹவுஸ் நோக்கி விரட்டினான்.
வீட்டின் முன் காரை கொண்டு வந்து நிறுத்தியவன், அவளது புஜத்தை பற்றி உள்ளே இழுத்து வந்து சோஃபாவில் தள்ளி விட்டான்.
அவளோ அவனது வேகத்தில் தடுமாறி விழுந்து, அவனை மிராட்சியாக பார்க்க, அவளது பையை பறித்து உள்ளே இருந்த அவள் ஃபோனை எடுத்தான்.
“இந்தா.. உன் அப்பாக்கு ஃபோன போட்டு.. என் ஃப்ரெண்ட் வீட்டுக்கு போறேன்..டூ ஹவர்ஸ்ல வந்துருவேன்னு சொல்லு…” என்று சொல்ல
“இல்ல.. முடியாது.. நான் போகணும்.. எனக்கு உங்க கிட்ட பேசுறதுக்கு எதுவுமே இல்ல.. என்று அவள் மறுக்க,
ஃபோனை போட்டு சொன்னேன்னு சொன்னா டூ ஹவர்ஸ்ல போயிடலாம்.. இல்லனா எத்தன நாள் ஆனாலும் நீ இங்க, என்னோட தான் இருக்க போற.. பின்னுக்கு எந்த விளைவு வந்தாலும் அத எப்டி ஹேண்டில் பண்ணனும்னு எனக்கு நல்லாவே தெரியும்…” அவனது குரலில் என்றும் இல்லாத இருக்கம்.
அவன் சொல்வதை கேட்பதை தவிர வேறு வழியும் இல்லை அவளுக்கு. அதே நேரம் அவனுடனான அந்த நேரங்கள் அவளுக்கு தேவைப்பட்டதுவோ என்னவோ. வசந்தராஜனுக்கு ஃபோனை போட்டு, தானே வீட்டுக்கு வருவதாக கூறிவிட்டாள்.
அவரோ அறிவழகியின் தொல்லையிலிருந்து அப்போதுதான் விடுபட்டவர், அப்பாடா என்று நிம்மதி பெரும்மூச்சை இழுத்து விட்டு வீட்டை நோக்கி திரும்பினார்.
அவள் ஃபோனை வைத்த மறு நொடி மொத்தமாக அவள் மீது விழுந்து, அழுத்தி இதழ்கள் ஆழமாக கவ்விக் கொண்டான் அந்த காதல் விடாக்கண்டன்.


வெள்ளிமலை தேவதையிவளோ - பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார்
காற்றிலாடும் காதல்கள் - ஆலோன் மகரி