Loading

அத்தியாயம் 18

 

அபர்ஜித்தின் வீட்டினுள் அஸ்வந்தின் மனைவியாக வலது காலை எடுத்து வைத்து வந்தாள் பார்கவி.

 

வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி, மணமக்களுக்கு பால், பழம் வழங்கி, மற்ற சடங்குகளும் இனிதே நிறைவேற, ஓய்வெடுப்பதற்காக செவ்வந்தியின் அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தாள் பார்கவி.

 

செவ்வந்திக்கு அத்தனை மகிழ்ச்சி. அவர் ஆசைப்பட்ட பெண்ணை மருமகளாக கொண்டு வந்தது விட்டாரே.

 

செவ்வந்தி சற்று பழங்கால மனிதி என்பதால், திருமணம் ஆகிவிட்டால் மற்ற ஒரு சில பெண்களை போல், எதார்த்தத்தை புரிந்து கொண்டு பார்கவி இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்வாள் என்று தான் நினைத்தார் .

 

பார்கவி சம்மதம் சொல்லிவிட்டாள் என்று தெரிந்ததிலிருந்து, அவளது மனநிலை தெளிந்து விட்டது, தன் இளைய மகனுடன் சந்தோஷமாக வாழ ஆரம்பித்துவிடுவாள் என்று கனவு கண்டார்.

 

ஒரு தாயாக தன் மகனின் வாழ்க்கையைப் பற்றி யோசித்தாரே ஒழிய, ஒரு பெண்ணாக பார்கவியின் மனநிலையை புரிந்து கொள்ளவில்லை. அதனால் சிறிது நேரம் கழித்து உறவு பெண்களிடம் கூறி, அவளை முதலிரவுக்காக அலங்காரம் செய்யச் சொல்லி இருந்தார்.

 

பார்கவி அவர்களிடம் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அவர்கள் அலங்காரம் செய்து முடியும் வரை அமைதியாக ஜடமாக இருந்தாள்.

 

ஒரு வழியாக இரவு திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் கலைந்து சென்றிருக்க, தனது அறைக்கு பார்கவியை தேடி வந்திருந்தார் செவ்வந்தி.

 

மரப்பாச்சி பொம்மையாக நின்றிருந்தவளை அழைத்துக் கொண்டு, அஸ்வந்தின் அறைவாசலில் விட்டவர் “இதுதான் உன் புருஷன் ரூம்.. உள்ள போமா…” என்று சொன்னார்

 

அந்த வார்த்தையை கேட்டவள், அவரை திரும்பி ஒரு பார்வை பார்க்க, அந்தப் பார்வையில் இருந்த அர்த்தம் செவ்வந்திக்கு புரியாமல் போனது.

 

எதையும் உணராத வண்ணம், கால்களை அடிமேல் அடிவைத்து அந்த அறையின்னுள் நுழைந்தவள் கண்களில் காட்சியாக விரிந்தது இருபது நாட்களுக்கு முன்பு நடந்த அந்த நிகழ்வு.

 

******

மண்டபம் வரை திருமணம் வந்து நின்று போனதிலிருந்து பார்கவி மன்றாடாத தெய்வம் இல்லை, வேண்டிக் கொள்ளாத கோயில் இல்லை, செய்யாத பரிகாரங்கள் இல்லை.

 

அதன்படி பார்கவி அம்மன் கோயிலுக்கு வேண்டுதலை நிறைவேற்ற, குடும்பத்துடன் வந்திருந்தாள்.

 

கையில் விளக்கை ஏந்திக்கொண்டு கோயிலை 108 முறை சுற்றிவர வேண்டும் அதுதான் வேண்டுதல்.

 

அதே கோயிலுக்கு செவ்வந்தியும் வந்திருந்தார். சிரமப்பட்டு வேண்டுதலை செய்து கொண்டிருக்கும் தன் மருமகளாகப் போகும் பார்கவியைப் பார்த்தார்.

 

அவளது முகத்தின் சோர்வே வெகு நேரமாக அவள் அதை செய்து கொண்டிருப்பது தெரிந்தது, உடனே அவ்விடம் விரைந்தார்.

 

அவளிடம் சென்றவர் “பார்கவி! என்னமா இது?.. எதுக்கு இவ்ளோ கஷ்டமான வேண்டுதல்?…” என்று கேட்க சிறு புன்னகையை மட்டுமே பரிசாக கொடுத்தவள், வேண்டுதலை முழுதாக முடிக்க நகரவும்,

 

சங்கரியோ ” அவளுக்கு கல்யாணம் மண்டபம் வற வந்து பாதியிலேயே நின்றுச்சு இல்லையா.. அதுதான் உங்க வீட்டுக்கு மருமகளா வரணும்னு அப்பவே வேண்டிகிட்டா.. கல்யாணம் நடக்கிற வரைக்கும் ஒவ்வொரு வெள்ளியும் இந்த வேண்டுதல் நடக்கும்…”என்று சொல்ல

 

செவ்வந்தி அதிர்ந்தே விட்டார். “என்னது ஒவ்வொரு வெள்ளியுமா?.. என்ன சொல்றீங்க சம்மந்திமா…” என்று கேட்க

 

அவரும் கவலையுடன் பெருமூச்சு விட்டவர் “என்னத்த சம்பந்திம்மா சொல்லுவேன்.. அவ மனசுல ஏதோ பயம் வந்திருக்கும் போல.. அதுதான் எப்பவுமே கடவுளே சரணாகதினு இருக்கா…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேண்டுதலை முடித்துவிட்டு

 

நடக்க முடியாமல், தாங்கி தாங்கி நடந்து வந்த பார்கவியை கைதாங்களாக அழைத்துக் கொண்டு அவர்களிடம் வந்தாள் பர்விதா. கடந்த மூன்று மாதங்களாக இந்த வேண்டுதல் நடக்கிறது ஆனால் பர்விதாவிற்கு அன்று தான் தெரியும்.

 

பார்கவியின் முகத்தை வாஞ்சையாக தடவிய செவ்வந்தி, “என்னடா இதெல்லாம்.. எதுக்கு இந்த வேண்டுதல்.. கண்டிப்பா உனக்கும் அபர்ஜித்துக்கும் கல்யாணம் நடக்கும்…” என்று சொல்ல

 

அழகாக சிரித்த பார்கவி “நடக்கும் அத்த.. இருந்தாலும் ஏதோ ஒரு கலக்கம் மனசுல.. முதல் தடவ இரண்டே நாள் இருக்கும்போது மண்டபம் வற வந்து நின்னு போச்சு.. இப்பவும் அபசகுணமா எதுவும் நடந்துட கூடாது இல்ல.. அதுதான்…” என்று சொல்ல

 

“என்னடா மா.. அது ஏதோ எதிர்பாராத ஒரு விஷயம்.. அதே மாதிரி ஒவ்வொரு தடவையும் நடக்குமா என்ன.. இந்த கோயில்ல வச்சு சொல்றேன்.. நீ தான் என் மருமக…” என்று அவர் ஆருடம் சொன்னாலும்,

 

பார்கவின் முகத்தில் அவ்வளவாக தெளிவு எட்டிப் பார்க்கவில்லை. பின்பு ஒரு முடிவுக்கு வந்தவராக “சரி இன்னைக்கு நல்ல நாள்.. வா, நீ வாழ போற வீட்ட ஒருத்தடவ வந்து பாத்துட்டு வா…”என்று அழைக்க

 

அவரை பார்கவி சற்று விழி விரித்து பார்த்தாள். உடனே தாய் தந்தையரை பார்க்க, சங்கரி “இல்ல சம்பந்திம்மா இப்ப எதுக்கு…” என்று சொல்ல

 

“அட இதுல என்ன இருக்கு.. அவ வாழ போற வீட்ட அவ வந்து பாக்க வேணாமா.. வாங்க எல்லாரும் வீட்ட போகலாம்…” என்று அழைக்க

 

பர்விதா “ஐயோ அத்த நான் இப்போ காலேஜ் போகணும்…” என்று சொல்ல

 

“சரி அப்படின்னா பார்கவியும் சம்பந்திம்மாவும் என்னோட வரட்டும்.. நான் கார்ல தான் வந்தேன்.. சம்பந்தி நீங்க பர்விதாவ காலேஜ்ல விட்டுட்டு அப்டியே வந்து இவங்கள பிக்கப் பண்ணிக்கோங்க…” என்று சொல்ல

 

சரி என்று பர்விதா தந்தையுடன் செல்ல, சங்கரியும், பார்கவியும் செவ்வந்தியுடன் பார்கவி வாழப்போகும் வீட்டைப் பார்க்க ஆர்வமாக சென்றனர்.

 

செவ்வந்தி வீட்டை அடைந்ததும் பார்கவியை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு, உள்ளே சென்று ஆரத்தி தட்டுடன் வந்தார். சங்கரி “என்ன சம்பந்திம்மா இது…” என்று கேட்க

 

“அட! எப்டி இருந்தாலும் என் மருமகள் இல்லையா.. ஆரத்தி எடுத்து உள்ள கூப்பிட வேணாமா…” என்று சொன்னபடி பார்கவிக்கு அவரே ஆழம் சுற்றி, பக்கத்திலிருந்த வேலைக்கார பெண்மணியிடம் அதை வெளியே கொட்டும்படி கொடுத்துவிட்டு,

 

அவளது கையைப் பிடித்து உள்ளே அழைத்து சென்றார். தான் வாழப்போகும் வீட்டை பூரிப்புடன் பார்த்து, மனதில் குதூகலத்துடன், உள்ளே வலது காலை எடுத்து வைத்தாள் பார்கவி.

 

பார்கவியை உள்ளே அழைத்து வந்தவர், இருவரையும் அமருமாறு கூறி சோபாவில் அமர வைத்துவிட்டு, பணிப் பெண்ணிடம் அவர்களுக்கு தேவையான குடிபானத்தை தயாரிக்க சொன்னார்.

 

வேலைக்கார பெண்மணியும் அவர்களுக்கு குடிப்பதற்கு கொண்டு வந்து வைத்து விட்டு செல்ல, இருவரையும் எடுத்து பருகச் சொன்னார் செவ்வந்தி. அவர்கள் இருவரும் டீ குடித்து முடிய

 

“சரி வாங்க.. வீட்ட சுத்தி காட்டுறேன்…” என்றவாறு இருவரையும் அழைக்க, சங்கரியோ “இல்ல.. நான் தான் ஒரு முற வந்திருக்கேனே நீங்க உங்க மருமகள கூட்டிக்கொண்டு காட்டுங்க.. என்று கூற செவ்வந்தி பார்கவியை அழைத்துக்கொண்டு மொத்த வீட்டையும் அவளுக்கு சுற்றிக் காட்டினார்.

 

இறுதியாக அபர்ஜித்தின் அறையை காட்டியவர் “இதுதான் உன் புருஷன் ரூம்.. உள்ள போய் பாரு…” என்றவாறு கதவை திறந்து விட, அவளும் ஒருவித பரவசத்துடன் உள்ளே சென்றாள். அவளை உள்ளே செல்லுமாறு கூறிவிட்டு, செவ்வந்தி சங்கரியிடம் வந்து விட்டார்.

 

உள்ளே வந்த பார்கவி அந்த அறையை ஒவ்வொரு இடமாக சுற்றிப் பார்த்தாள். முதலில் இடது பக்கமாக இருந்த பாத்ரூமை திறந்து, தலையை மட்டும் நீட்டி, எட்டிப் பார்த்தாள். பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் வந்து நின்றவள்,

 

அந்தக் கண்ணாடியில் தன் விம்பத்தை பார்த்தவள், சற்று தள்ளி இருந்த குளியலறையை பார்க்க, திருமணத்திற்கு பிறகு அபர்ஜித் உடனான வாழ்க்கை அவள் கண் முன் கற்பனையாக விரிந்தது.

 

பாத்ரூமில் இருந்து புதுமஞ்சள் கயிறு கழுத்தில் தொங்க, குளித்துவிட்டு புடவையுடன் வந்து, ட்ரெஸ்ஸிங் டேபிள்லின் முன் நின்று தலையை துவட்டும் பார்கவியின் பின்னிருந்து அவளைக் கட்டி அணைத்தான் அபர்ஜித் .

 

கற்பனையே அவளது உடலை சிலிர்க்க வைக்கி “அச்சோ!.. என்றவாறு வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டாள். வெட்கத்தில் மூடிய கைகளை மெதுவாக பிரித்து, அந்த கண்ணாடியை பார்க்க இப்போது அவள் மட்டுமே, அவளது உருவம் மட்டுமே தெரிந்தது.

 

‘ஐயோ கவி.. உன் கற்பன கண்டமேனிக்கு போகுதே…’ என்று தன்னுள்ளே சொல்லிக் கொண்டவள், மற்றைய பக்கம் திரும்பியவள் கண்ணில் பட்டது, அந்த வெள்ளை நிற படுக்கை.

 

அதைப் பார்த்தவள் ‘அச்சச்சோ அந்த மாதிரி எல்லாம் கற்பன பண்ணிடாதடி…’ என்று தனக்குத்தானே தன் கற்பனைக்கு கடிவாளம் போட்டவள், அந்த அறையை ரசித்து சுற்றிப் பார்த்தாள். ஒவ்வொரு இடத்திலும் அவளும் அபர்ஜித்தும் வாழப் போகும் வாழ்க்கையே கற்பனையாக விரிந்தது.

 

தன்னை மீறிய வெட்க சிரிப்புடன் அறையை பார்த்துக் கொண்டே வந்தவள், அபர்ஜித்தின் இரண்டு அடி அகலத்தில் நான்கு அடி உயரத்தில் இருந்த அவனது புகைப்படம் கண்ணில் பட்டது. அவனது வக்கீல் கோட்டை கையில் பிடித்தவாறு, ஒரு கதிரையில் அமர்ந்து முன்னோக்கி சரிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்திருந்தான்.

 

அதை வருடியவள் இதழ்கள் மெலிதாக விரிந்து கொண்டன. அப்படியே அருகில் இருந்த காலண்டரில் திகதியை பார்த்தவள் “இன்னும் இருபது நாள்ல இதே அறையில.. அவர் மனைவியா…” என்று சொல்லிக் கொண்டவளுக்கு அப்படி ஒரு ஆனந்தம். முகம் வெள்ளி நிலவு போல் பிரகாசித்தது.

 

பார்கவி அறையை சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வரவும் அதற்கிடையில் சங்கரியும் செவ்வந்தியும் பேசியவாறு, அவர்களும் சமையல் அறலயை பார்த்து விட்டு ஹாலுக்கு வந்தனர்.

 

அதே சமயம் பர்விதாவை காலேஜில் விட்டுவிட்டு வசந்தராஜன் வந்து சேரவும் சரியாக இருந்தது.

 

“வாங்க சம்பந்தி…” என்று அவரை வரவேற்று, அவருக்கு குடிப்பதற்கு பானம் வழங்க, அவர் குடித்து முடிய, மூவரும் விடை பெற்று கிளம்ப எத்தனிக்க,

 

செவ்வந்திக்கு தான் மருமகளை அனுப்புவதற்கு மனமே வரவில்லை. அதே நேரம் இன்னமும் வலுவாக அவளது மனதில், அவள் தான் இந்த வீட்டு மருமகள் என்று பதிய வைக்க அக்கணம் அவருக்கு ஏன் தோன்றியது என்றும் தெரியவில்லை.

 

திருமணத்திற்கு பிறகு அவளுக்கு, அந்த குடும்பத்தின் பரம்பரை வளையலை போட்டு விட வேண்டும் என்று இருந்தவர்,

 

“பார்கவி ஒரு நிமிஷம்…” என்று சொல்லி அவளை பூஜையறைக்கு அழைத்து சென்றார் .

 

அங்கே சுவாமி படங்களுக்கு கீழே இருந்த, ட்ராக்கில் தனது இடுப்பில் இருந்த சாவிக்கொத்தை எடுத்து திறந்தவர், அதனுள் இருந்து ஒரு பெட்டியை எடுத்தார், அதிலிருந்தது வைர கற்கள் பதிக்கப்பட்ட அந்த வளையல்.

 

அதைக் கைகளில் எடுத்தவர் பார்க்கவியை பார்த்து “இது எங்க பரம்பரை வளையல்.. எங்க குடும்பத்துக்கு வார மருமகள்கள் போட்டுகிறது.. நான் உனக்கு கொடுக்கணும்னு மண்டபத்துக்கு வாரத்துக்கு முன்னாடி கழட்டி வச்சது..

 

…இத உனக்கு நான் இப்பவே போட்டு விடுறேன்.. இன்னைல இருந்து நீ இந்த வீட்டு மருமக தான்…” என்று கூறியவாறு அவளது கைகளில் அந்த வளையலை போட்டு விட்டார் .

 

பார்கவிக்கு அளவுக்கு அதிகமான மகிழ்ச்சி, அத்தனை பூரிப்பு, காற்றில் மிதப்பது போன்றதொரு சந்தோஷம். அவளது மனதில் இருந்த கலக்கம் எல்லாம் எங்கோ ஒரு மூலையில் சென்று ஒளிந்து கொண்டது.

 

இப்போது முழுக்க முழுக்க திடமாக நம்பினாள். அபர்ஜித்திற்கும் அவளுக்கும் கண்டிப்பாக திருமணம் நடக்கும், இந்த வீட்டு மருமகள் தான் தான் என்று. அப்போது அவளது கண்கள் ஹாலில் இருந்த அபர்ஜித்தின் புகைப்படத்தை ஆசையாக வருடியது.

 

 

********

காட்சிகள் சுருங்க, இப்போது அஸ்வந்தின் புகைப்படத்தின் முன்பு, அவனது அறையில் நின்றாள் பார்கவி. கையில் இருந்த பால் செம்பை அந்தப் புகைப்படத்தை பார்த்தவறே மேசையில் வைத்தவள் இதழ்களில் சிரிப்பு.

 

மெது மெதுவாக அந்தச் சிரிப்பு சத்தமாக மாறியது. சத்தம் போட்டு சிரித்தாள். ஆங்காரமாக சிரித்தாள். அடி வயிற்றில் இருந்து சிரித்தாள்.

 

சிரிப்பினுடே கண்ணில் இருந்து வழிந்தது அந்த கண்ணீர். சிரிப்பினால் உண்டான கண்ணீர் இல்லை. அவள் மன அடியாழத்திலிருந்த ரணத்தினால் உண்டான கண்ணீர்.

 

பால்கனியில் நின்றிருந்த அஸ்வந் பார்கவியின் சிரிப்பு சத்தத்தில் உள்ளே வந்தவன், அவளைக் கண்டதும் அதே இடத்தில் நின்று விட்டான்.

 

காலையிலிருந்து வெறித்த பார்வையும் அமைதியுமாக இருந்தாள். அதற்கு எதிர்ப்பதமாக இப்போது ஆங்காரமாக சிரிக்கும் பார்கவியை பார்க்கும் போது அவனுக்கு திக்க என்ற உணர்வு.

 

அவளது மனநிலையை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனுக்குமே தனக்கு அண்ணியாக வர இருந்தவளை மனைவியாக பார்ப்பது கடினமாகவே இருந்தது. ஆனால் அவனுக்குள் இருப்பது போராட்டம் மட்டுமே

 

ஆனால் அவளிடம் இருப்பது ஏமாற்றம், உயிரை உருவி போடும் அந்த ஏமாற்றம். வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல், அந்தரத்தில் நிற்க வைத்து மூச்சுக்காற்றுக்கு ஏங்க வைத்த அந்த ஏமாற்றம்,

 

சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தவள் ஒரு கட்டத்திற்கு மேல் தோய்ந்து அமர்ந்து கதறினாள்.

 

அழுகை மட்டுமே அவளது கண்களிலும் உதடுகளிலும் இப்போது. நிலத்தில் கைகளை அடித்து அடித்து அழுதாள். அவளது ஆங்காரமான அந்த அழுகை அவனை அவளிடம் கிட்ட கூட நெருங்க விடவில்லை.

 

ஒட்டுமொத்தமாக உடைந்து அழுது கொண்டிருதவளை நோக்கி, ஒரு அடி அவளை சமாதானப்படுத்தும் நோக்கில் கால் எடுத்து வைக்க,

 

நிமிர்ந்து அவள் பார்த்த அந்த பார்வை. கண்கள் வீங்கி, சிவந்து, சிவப்பு கோடுகளாக இளையோடி, அவள் காலையில் வெறித்துப் பார்த்த அந்த அக்கினி புளம்பை விட அனலாக இருந்தது.

 

முன்னோக்கி வைத்த காலை பின்னோக்கி அதே இடத்தில் வைத்து, அப்படியே நின்று விட்டான் அஸ்வந்.

 

ஓங்கி ஓங்கி கையால் தரையில் அடித்தவள் கண்களில் பட்டது அந்த வளையல். நீதான் இந்த வீட்டு மருமகள் என்று செவ்வந்தி போட்டுவிட்ட அந்த வைர வளையல். ஆக்ரோஷமாக அதை கழட்டி வீசினாள்.அது உருண்டு போய் ஒளிந்து கொண்டது அஸ்வந்தின் அலமாரியின் கீழ்.

Click on a star to rate it!

Rating 4.2 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
10
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்