Loading

அத்தியாயம் 17

 

பார்கவியின் வீட்டிற்கு சென்று வந்த ஐந்தாவது நாள், அஸ்வந் தனது ஆஃபிஸுக்கு சென்று விட்டு வந்தவன், மாலை வேளை போல் ஸ்போர்ட்ஸ் கிளப் செல்வதற்காக தயாராகி வெளியே வர,

 

“அஸ்வந் எங்க போற..?” என்று அவனை வழி மறைத்தார் செவ்வந்தி. ஹாலில் தான் அமர்ந்திருந்தான் அபர்ஜித்தும். செவ்வந்தி அவனிடம் பேசுவதில்லை. தாயை சமாதானப்படுத்தவே வீட்டிற்கு நேரத்திற்கு வருகின்றான். ஆனால் எந்தவித பயனும் இல்லை.

 

“என்னம்மா.. ஸ்போர்ட்ஸ் கிளப்க்கு தான் கிளம்பிட்டேன்…” என்றான் தோள்களை குலுக்கி சாதாரணமாக, துள்ளலுடன்.

 

“நீ ஒரு மண்ணுக்கும் போக வேணாம் உள்ள போ..இன்னும் 14 நாள்ல உனக்கு கல்யாணம்.. இரண்டு வாரத்துக்கு நீ வீட்ல தான் இருக்கணும்.. ஆஃபீஸ்க்கு கூட போக வேணாம் லீவு போடு.. மொத்தமா கல்யாணத்த முடிச்சுட்டு போய்க்கலாம்…” என்று செவ்வந்தி சொல்ல

 

“அம்மா என்னாச்சு உங்களுக்கு.. கல்யாணத்துக்கு டூ வீக்ஸ் இருக்கு.. நான் இப்பவே எதுக்கு லீவு போடணும்..? அது மட்டும் இல்லாம நான் இப்போ ஏன் வெளிய போகக்கூடாது…?” என்று கேட்க

 

“ஹா.. நீயும் உன் அண்ணன மாதிரி இந்த 14 நாள்ல வேற எவளையாச்சும் லவ் பண்றேன்னு வந்து நின்னா, நான் உத்தரத்துல் தான் தொங்கணும்.. என் உயிர் எனக்கு ரொம்ப முக்கியம், அதனால நீ இன்னைல இருந்து வாசப்படிய தாண்ட கூடாது..

 

…இப்போ கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தான், பார்கவி வீட்ல இருந்து அவ சம்மதம் சொல்லியாச்சுன்னு ஃபோன் வந்துச்சு, என்ன போட்டு அழுத்திட்டு இருந்த ஏதோ ஒரு பெரிய பாரம் இறங்கின மாதிரி இப்பதான் மூச்சு விடுறேன்.. தயவு பண்ணி அதுல மண்ணள்ளி போட்டுடாத, உள்ள போ…!” என்று சொல்ல

 

அஸ்வந்தோ அங்கே அமர்ந்திருந்த அபர்ஜித்தை முறைத்துப் பார்த்தவன் “நீ செஞ்ச வேலையால என்ன ஹவுஸ் அரெஸ்ட் பண்றாங்க டா.. உனக்கு ஜாலியா இருக்கு இல்ல.. குளுகுளுன்னு இருக்குமே..

 

…பண்ற லவ்வ கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க முன்னாடி பண்ணி தொலைக்க வேண்டியது தானே.. எந்த மாப்பிளைக்கும் இந்த கொடும நடக்காது ச்சே…” என்றவாறு அபர்ஜித் அருகில் அமர்ந்து, அவன் கையில் இருந்த ரிமோட்டை பறித்து டிவி சேனலை மாற்றினான்.

 

“லவ் எப்போ வரும் எப்டி வரும்னு சொல்லிட்டா வரும்…” என்று அபர்ஜித் கேட்க

 

“என்ன சினிமா டயலாக்கா.. செட் ஆகல.. அந்த பொண்ணுனு சொல்றியே யார் அந்த பொண்ணு…?” என்று அஸ்வந் கேட்க, அபர்ஜித் பதில் சொல்லவில்லை.

 

“அவன் எப்டி வாய திறந்து சொல்லுவான்.. அந்த சிறுக்கி யாருன்னு எனக்கு தெரியும்.. பார்கவிய பொண்ணு பாக்க முன்னாடி அவளத்தான் லவ் பண்றேன்னு கூட்டிட்டு வந்து இருந்தா.. வாம்மா மருமகளேனு ஆரத்தி எடுத்து, நானே கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன் ..

 

…ஆனா இப்ப சொல்றேன் கேட்டுக்கடா.. உன் காதல ஏத்துக்கவும் முடியாது, அவள இந்த வீட்டோட மருமகளா அனுமதிக்கயும் முடியாது…” என்று கோவமாக சொன்னவர் சமையல் அறையினுள் நுழைந்து கொள்ள,

 

“ஏன்டா.. அம்மாகிட்ட யாருன்னு சொல்லிட்டியா என்ன.. ?” என்று அஸ்வந் கேட்க

 

“இல்லடா.. அவங்க யார நினைச்சு சொல்றாங்கனு எனக்கு தெரியலையே…” என்று அபர்ஜித்துமே குழம்பிப் போனான். பர்விதா என்று யூகித்திருக்க வாய்ப்பு கிடையாது. பின் யாரை நினைத்து இருப்பார் என்பது புரியாத புதிராக இருந்தது.

 

அபர்ஜித்திற்கு தெரியவில்லை அந்த புதிரின் விடை அறிவழகி என்று. அவள் தானே 24 மணி நேரமும் சீனியர் சீனியர் என்று இவன் பின்னாடியே சுற்றுபவள். இவன் காதல் என்று வந்து நின்றதும் செவ்வந்திக்கு முதலில் சந்தேகம் வந்தது அறிவழகி மீதுதான்.

 

கையில் கிடைத்தால் கொத்து கறி தான் என்று அறிவழகி மீது கொலை வெறியில் செவ்வந்தி இருக்க “சீனியர்..!” என்றவாறு உள்ளே நுழைந்தாள் அறிவு.

 

அவளைப் பார்த்ததும் நான் அபர்ஜித்துக்கே தோன்றியது தாய் ஒருவேளை இவளை சந்தேகப்பட்டு இருக்க கூடுமோ என்று.

 

அதற்க்கு ஏற்றார் போல் அவளது குரல் கேட்டது தான் தாமதம், சமையலறையில் இருந்து புடவையை இடுப்பில் சொருகியவாறு,

 

“ஏன்டி ஒரு பொம்பள புள்ள ஆறு மணிக்கு மேல இங்க என்ன அலுவல்.. ஆஃபீஸ் நேரம் முடிஞ்சது தெரியாதா?..” என்று கேட்க, அவர் எப்பவுமே அவளை அதட்டுவார் என்பதால் அவரது கேள்வியில் உள்ள வித்தியாசம் அவளுக்கு புரியவில்லை.

 

“அட மம்மி..! நான் வீட்டுக்கு தான் போயிட்டு இருந்தேன்.. இன்னைக்கு கோர்ட்டுக்கு போகும்போது எனக்கு புடிச்ச சாக்லேட் ஒன்னு வாங்குனேன்.. அவசரத்துக்கு சீனியரோட பேக்ல வச்சிட்டேன்.

 

…சாக்லேட் இல்லாம வீட்டுக்கு போக முடியாது இல்லையோ.. அப்டியே வீட்டுக்கு போனாலும் சாக்லேட்ட விட்டுட்டு வந்துட்டேனே என்ற கவலையில என்னால தூங்க முடியாது இல்லையோ.. அதனால தான் ஓடோடி வந்து விட்டேன்…” என்று அவள் வசனம் பேச

 

அபர்ஜித்தை முறைத்துப் பார்த்த செவ்வந்தி “பார்கவி அன்னைக்கு கதறுனது, கண்ணீர் விட்டதெல்லாம், என் கண்ணால பாத்தேன்.. அவ சிந்துன ஒவ்வொரு கண்ணீர் துளிக்கும் நீங்க பதில் சொல்ல வேண்டி இருக்கும்..

 

…என் வாயால சொல்லக்கூடாது தான் ஆனாலும் சொல்றேன்.. இன்னொருத்தி குடிய கெடுத்து, தான் வாழ நினைக்கிற ஜென்மம் எல்லாம் என்ன ஜென்மமோ…” என்று அவர் அறிவழகிக்கும் அபர்ஜித்திற்கும் பொதுவாக திட்ட ,

 

அறிவழகிக்கு ஏதோ புரிவது போல் இருக்க, அவனிடம் கண்களாலேயே என்ன விடயம் என்று கேட்க, அதுகூட செவ்வந்தியின் கண்களுக்கு காதலர்கள் கண் மொழி பேசுவது போன்றது தான் இருந்தது.

 

“எவ்ளவு சொன்னாலும் ஒரு சில ஜென்மங்களுக்கு சூடு, சொரண வராது போல.. இப்ப சொல்றேன் கேட்டுக்கடா இந்த வீட்டுக்கு ரெண்டு மகனா இருக்கலாம்.. ஆனா மருமக ஒன்னு தான்.. வேற எவளும் இந்த வாசப்படிய தாண்டி வரக்கூடாது…” என்று சொன்னவர் இப்போது அறிவழகிய முறைக்க

 

“மம்மி நீங்க கவலப்படாதீங்க.. உங்க ரெண்டாவது மருமக வீட்டுக்கு வரும்போது குறுக்க பலகை ஒன்ன வச்சிடுறேன்.. அவங்க வாசப்படிய தாண்ட வேணாம்..அந்த பலகைய தாண்டி வந்தா போதும்.. எப்டி ஐடியா…” என்று சொல்ல

 

“எடு விளக்கமாத்த.. எந்த சிறுக்கியும் என் வீட்டுக்குள்ள வரக்கூடாது.. நீ முதல்ல கிளம்புடி…” என்று சொல்ல

 

“எனக்கு என்ன வேண்டுதல!.. உங்க வாயில அரைபட.. என் சாக்லேட்ட தர சொல்லுங்க…” என்று அவள் குழந்தையாய் அடம் பிடிக்க,

 

வேகமாக உள்ளே சென்றவன், அவனது பையை எடுத்துக் கொண்டு அவளது கையில் திணித்து “மொத்தமா பைய எடுத்திட்டு கிளம்பு.. இருக்கிற பிரச்சினையில நீ வேற குட்டைய குழப்பாத…” என்று சொல்ல

 

“சீனியர் நீங்க கொளுத்தி போட்ட வெடி இன்னுமா வெச்சிட்டு இருக்கு.. நான் நெனச்சேன் ஊசி பட்டாசனு ஆனா இது ஆட்டோ பாம் போலயே…” என்று அவள் அவன் காதில் ரகசியம் பேச

 

“கருமம்.. கருமம்.. கொஞ்சமாவது கூச்ச நாச்சம், சூடு சொரணை ஏதாவது இருக்கா..!” என்று செவ்வந்தி திட்ட

 

“மம்மி! யாருக்கு எதுக்கு திட்ருறீங்கனு சொல்லிட்டு திட்டுங்க.. நீங்க பொதுவா திட்டுனா பாவம் அஸ்வந் அவரத்தான் சொல்றீங்கனு நினைச்சு பாரு இல்ல…” என்று சிவனே என்று இருந்தவனை வம்பில் இழுத்து விட

 

“ஓய்.. பிஞ்சு கொட்ட.. ஒழுங்கு மரியாதையா இடத்த காலி பண்ணு.. இல்ல உள்ள சட்னி அரைக்க தேங்காய் சில்லு இல்லையாம்..உன் மண்ட தான் இன்னைக்கு சட்னியாகப் போகுது…” என்று அவன் விரல் நீட்டி மிரட்ட

 

“அடியாத்தி!.. கொலைக்கார குடும்பமா இருக்கும் போலையே.. கொளுத்தி போட்டவன் எவனோ கொலையாகுறது எவளோவா.. நான் கிளம்புறேன்…” என்றவள் அங்கிருந்து ஓரேயோட்டமாக வெளியேறிவிட்டாள்.

 

*******

வள்ளியம்மா இறந்த போது கூட அந்த வீடு கலை இழந்து போகவில்லை. துக்க வீடு போன்று தெரியவில்லை. ஆனால் நாட்களோடி, நாளைய தினம் திருமணம் என்றான போது கூட, அந்த வீடு துக்க நிகழ்வு நடந்த வீடாகத்தான் காட்சியளித்தது.

 

எவரின் முகத்திலும் இம்மியளவும் புன்னகை என்பது இல்லை. எப்படி இருக்கும் மணப்பெண்ணான பார்கவி நோய்வாய்ப்பட்டவள் போல் உருக்குலைந்து, கலையிழந்து, கண்களைச் சுற்றி கருவளையத்தோடு, பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சியளிக்க,

 

பெற்றெடுத்து பார்த்து, பார்த்து வளர்த்த மகளை அந்த நிலையில் பார்க்கும்போது பெற்றெடுத்தவர்களுக்கு எத்தனை வேதனையாகவும், வலியாகவும் இருக்கும். அந்த வலியை தாண்டி புன்னகைப்பது என்பது நடவாத காரியம் அல்லவா.

 

வள்ளியம்மா இறந்து இன்னும் ஒரு வருடங்கள் முடியாத நிலையில் என்பதால், மண்டபத்தில் திருமணத்தை வைப்பதை விட சாதாரணமாக கோயிலில் திருமணத்தை நடத்தி விடலாம் என்று முடிவு எடுத்திருந்தனர்.

 

அதன்படி நாளை காலை நேரத்திற்கு கோயிலுக்கு செல்ல வேண்டும். பார்கவி தனது அறையில் ஜன்னல் வழியாக இருண்ட வானை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க,

 

உள்ளே வந்த பர்விதா “அக்கா இந்த பிளவுஸ்ஸ போட்டுப் பாரு.. ஒரு வேள ஆல்ட்ரனேட்டிவ் பண்ணனும்னா இப்பவே கொண்டு போகணும்…” என்று சொல்ல

 

“அதெல்லாம் தேவையில்ல பர்வி.. செத்த பொணத்துக்கு புடவைய போத்தி விட்டா என்ன.. கட்டி விட்டா என்ன…” என்று அவள் சொல்ல அவளது வார்த்தையில் துடிதுடித்து போனாள் பர்விதா.

 

“அக்கா!.. என்னக்கா பேச்சு இது?..” என்று அவளை அணைத்துக் கொண்டு அழுதது என்னவோ பர்விதா தான். பார்கவின் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை.

 

அபர்ஜித் அன்று வீடு தேடி வந்து மன்னிப்பு கேட்டதோடு சரி, அதன் பின் பர்விதாவை பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை, அபர்ஜித்துமே அவளைத் தொந்தரவு செய்யவில்லை. முதலில் பார்கவியின் திருமணம் முடியட்டும் என்று காத்திருந்தான்.

 

பார்கவி இத்தனை நாளில் தினமும் அபர்ஜிதிற்கு அழைப்பு எடுப்பாள். ஆனால் அவன் இவள் நம்பரை ப்ளாக்கில் போட்டு இருந்ததான். அழைப்பு செல்லாது.

 

இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்தவள் நாளை திருமணம் என்னும் பட்சத்தில்

அவனை சந்திக்க வேண்டும் என்று அந்த இருட்டில் மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல் அவனைத் தேடி சென்றிருந்தாள்.

 

அவளின் அனுமானம் சரியாக இருந்தால், உறவுக்காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் பதில் கூற முடியாமல், தனது அலுவலகத்தில் தான் அவன் இருக்க வேண்டும் என்று, நேரடியாக அங்கேயே தேடி வந்திருந்தாள்.

 

அவளது அனுமானம் சரி என்பது போல் அபர்ஜித் அங்கு தான் இருந்தான் . கொட்டும் மழையில் அவன் அலுவலகம் முன்பு, வீதியில் நின்று, அவன் பெயர் பொறிக்கப்பட்ட பலகையவே வெறித்து பார்த்துக் கொண்டு நின்றாள். உள்ளே செல்லவில்லை.

 

அவன் கார் அங்கு தான் இருந்தது. அவன் இருப்பது தெரியும். ஆனால் தன்னை வேண்டாம் என்று சொல்லி, தன்னை தவிர்ப்பவனை எவ்வாறு சென்று பார்க்க.

 

ஆனால் தேடி வந்தது அவனிடம் ஆயிரம் கேள்வி கேட்க வேண்டும் என்றுதான். ஆனால் அவன் பெயரை பார்த்ததற்கே அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை.

 

எதர்ச்சையா தனது அலுவலக அறையில் இருந்து ஜன்னல் வழியாக பார்கவியை பார்த்தவனுக்கு உள்ளத்தில் ஓராயிரம் மின்னல் தாக்கிய உணர்வு.

 

வெளியில், மழையில், நனைந்து கொண்டிருப்பவளை பார்த்த அடுத்த நொடி அவளின் முன்பு சென்று நிக்க வேண்டும் என்று தான் தோன்றியது.

 

ஆனாலும் காரியமே கெட்டுவிடும் என்பதால், உடனே அஸ்வந்துக்கு அழைத்து, காரை எடுத்து வருமாறு கூறியிருந்தான். அஸ்வந் அங்கு வரும் வரை அபர்ஜித் வெளியே வரவில்லை.

 

அங்கு உள்ள நிலவரத்தை தெளிவாக கூறி இருந்ததால் 10 நிமிடங்களிலேயே அவ்விடம் வந்து சேர்ந்திருந்தான் அஸ்வந். அவனுக்குமே பார்கவியை அந்த கோலத்தில் பார்த்ததும் பரிதாபமா தான் இருந்தது.

 

அஸ்வந் வந்த பின்னர், அலுவலக அறையை விட்டு வெளியே வந்த அபர்ஜித், பார்கவியை பார்க்காமல் அஸ்வந்திடம் “வீட்டுல கொண்டு போய் விடு…” என்று சொல்ல

 

பார்கவியின் பார்வை மொத்தமும் அபர்ஜித் மீது தான் இருந்தது. “எது.. எதுக்கு உங்களுக்கு என் மேல..என்மேல அந்த காதல் வரல…” என்று கேட்டாள் குளிரில் நடுங்கி வார்த்தைகளை கோர்த்து.

 

உயிருடன் அவனை நிற்க வைத்து, உள்ளுக்குள் இருக்கும் எலும்புகளை உருவி எடுத்த உணர்வு அபர்ஜித்திற்கு.

 

அவளது வார்த்தைகளில் இருந்த வலியும் வேதனையும் அபர்ஜித்தை மட்டும் இன்றி அஸ்வந்தின் அடி நெஞ்சை கூட இறுக்கி பிழிந்தது.

 

“ப்ளீஸ் பார்கவி.. விட்ட போ…” என்றவன் அஸ்வந்திடம் கண்ணை காட்டி விட்டு, அவனது காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.

 

அஸ்வந்தோ “மழை ரொம்ப அடிச்சு பெய்யுது ப்ளீஸ் அண்ணி வாங்க…” என்று பழக்க தோஷத்தில் கூறி விட, அவள் ஏறெடுத்த பார்த்த அந்த பார்வை. அதில் ஆயிரம் கேள்விகள். அவன் என்ன பதில் சொல்லி விட முடியும்.

 

தன்னைத்தானே கடிந்து கொண்டவன் “சாரி.. சாரி.. ப்ளீஸ் வாங்.. ‘மக்கு’.. வா வீட்ட போலாம்…” என்று கூப்பிட்டான். நெற்றியை தேய்த்து. அவளது பார்வை அவனை அப்படி தடுமாற வைத்தது.

 

ஆனால் அவளோ அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி, அதில் ஏறி வீடு வந்து சேர்ந்திருந்தாள்.அஸ்வந் அவள் பின்னாடியே வந்தவன், அவள் வீட்டிற்குள் சென்ற பின்னர் தான், அவன் வீட்டுக்கு வந்தான்.

 

வீட்டுக்கு வந்த மறு நொடி பர்விதாவிற்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைத்திருந்தான், நடந்த நிகழ்வுகளையும், பார்கவியை பத்திரமாக பார்த்துக் கொள்ளச் சொல்லியும். பர்விதாவும் அடுத்த நாள் மணவறையில் தமக்கையைக் கொண்டு அமர வைக்கும் வரை அவளுடனே இருந்தாள்.

 

 

*******

ஆர்ப்பாட்டம் இல்லாமல், ஆலய மண்டபத்தில் அழகாக நடந்து கொண்டிருந்தது அஸ்வந் பார்கவியின் திருமணம். மணமகளுக்கான கலை அவளிடமும் இல்லை. மணமகனுக்கான தேஜஸ் அஸ்வந் முகத்திலும் இல்லை. கடமைக்காக அமர்ந்திருந்தனர் இருவரும்.

 

நேரங்கள் கடந்து, மாங்கல்யம் ஆசிர்வாதம் வாங்கப்பட்டு, ஐயரின் கையினால் அஸ்வந்தின் கையில் கொடுக்கப்பட்டு, கெட்டிமேள சத்தம் கொட்டி முழங்க, அஸ்வந் பார்கவியின் கழுத்தில் மூன்று முடிச்சு போட,

 

அவளது கண்கள் என்னவோ தூரத்தில் தள்ளி நின்ற அபர்ஜித் மீது மட்டுமே இருந்தது.

 

அவளது எத்தனை நாள் கனவு, அவன் கையினால் மூன்று முடிச்சு வாங்கும் போது, அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே வாங்க வேண்டும் என்பது.

 

இப்போது அவன் தம்பி மூன்று முடிச்சு போட, அவன் கண்களை பார்த்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவள் வேல்விழிப் பார்வை அவன் நெஞ்சை துளைத்து சென்றதுதான்.

 

பார்கவியின் கழுத்தில் மங்கள நான் ஏறவும், செவ்வந்தி, வசந்தராஜன், சங்கரி உட்பட அனைவருக்கும், எப்படியாவது இவர்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஊஞ்சலாட, உள்ளார்ந்து ஆசிர்வதித்தனர் அர்ச்சதை பூக்களை தூவி.

 

கோயிலில் செய்யப்படும் அனைத்து சடங்குகளும் முடிந்து, மருமகளாக மாமியார் வீட்டிற்கு செல்லும் போது கூட பார்கவின் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. அவள் மனதளவில் மரித்து போய் தான் பல நாட்களாகின்றதே.

 

கலக்கமும் கண்ணீருமாக பார்கவியை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, கனத்த மனதுடன் வீடு வந்து சேர்ந்திருந்தனர் பர்விதாவும் பெற்றோரும்.

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
10
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. பார்கவி நிலை பாவம் தான்.. ஆனால் அபர்ஜித் காரணத்தோடு வேண்டாம் என்று சொல்லும் போது ஏற்றுக் கொள்ள வேண்டும்.. விருப்பமின்றி வற்புறுத்தினால் எதிர்காலம் பாதிக்கப்படும்..நம்மை ஒருவர் வேண்டாம் என்று சொல்லும்போது நாமும் அவர்களை விட்டு விலகுவது தான் சரியானது.. காலம் காயங்களை ஆற்றும்..

    1. Author

      நன்றி 💕
      அழகான புரிதல் 💕