
அத்தியாயம் 16
பார்கவியின் வீட்டிற்கு வந்த செவ்வந்தி வெகு நேரமாக அமைதியாகவே நகங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார். அவரின் அசாத்திய அமைதியே அங்கிருந்த அனைவருக்கும் நெஞ்சில் நெருடலாக இருந்தது.
ஆனால் பர்விதாவிற்கு மட்டும் அபர்ஜித்தினால் ஏதோ விபரீதம் நடந்திருக்க வேண்டும், என்று மனது அடித்துக் கூறியது. அங்கு நிலவிய அமைதியின் கணம் தாங்க முடியாத வசந்தராஜன்
“என்ன சம்பந்திம்மா.. எதுவா இருந்தாலும் சொல்லுங்க.. நான் நேத்தே சொன்னேன் இருபது நாள் திரும்பவும் கல்யாணம் எப்பாடு பண்றதுக்கு போதாம இருக்குமோன்னு.. நாள தள்ளிப் போடுறதா இருந்தாலும் பரவால்ல சம்பந்திம்மா.. நீங்க சங்கோஜப்படாமா விஷயத்த சொல்லுங்க…” என்று கேட்க
லேசாக கலங்கிய கண்களோடு அவர் நிமிர்ந்து பார்த்தது என்னவோ பார்கவியைத்தான். அந்தப் பார்வையே பார்கவின் நெஞ்சில் கிலியைப் பரப்பியது. மெதுவாக விழிகளை நகர்த்தி வசந்தராஜனை பார்த்தவர்
“நேத்து முடிவு பண்ண மாதிரியே கல்யாணம் கண்டிப்பா நடக்ககும்.. ஆனா மாப்பிள்ள அபர்ஜித் இல்ல.. என் ரெண்டாவது பையன் அஸ்வந்…” என்று முழுமூச்சாக விஷயத்தை சொல்லி முடிக்க,
அவர் கூறியதை கிரகித்துக் கொள்ளவே அங்கிருந்தவர்களுக்கு சில நொடிகள் எடுத்தது. அதிலும் பார்கவியோ “அத்த என்னாச்சு.. நீங்க என்னமோ சொன்னீங்க.. எனக்கு புரியல…” என்று கேட்க
“அம்மாடி.. இன்னைக்கு திடீர்னு வந்து வேறொரு பொண்ண லவ் பண்றேன்.. இந்த கல்யாணத்த நிப்பாட்டுங்கனு என் தலைல இடியா தூக்கி போட்டுட்டான்டா..
…நான் எவ்ளவோ கேட்டு பாத்துட்டேன், காதல் இல்லாம ஒரு கல்யாணம் பண்ணிட்டு கஷ்டப்பட முடியாதுனு ஒரேடியா முறிச்சு சொல்லிட்டான்.. நான் என்னடா பண்ணட்டும்..
…ஏற்கனவே ஒருத்தடவ கல்யாணம் நின்னு நீ எவ்ளவு மன உளைச்சலுக்கு ஆளானனு எனக்கு நல்லா தெரியும்.. இந்த தடவையும் எதுவும் அபசகுணமா நடக்க வேணாம்.. நீ ஆசைப்பட்டபடி என் வீட்டுக்கு நீ தான் மருமக.. என்ன பெரியவனுக்கு பதிலா சின்னவன கல்யாணம் பண்ணிக்க போற..
… ரெண்டு பேருமே என் பசங்கதானே.. ரெண்டு பேரையும் நான் நல்ல விதமாத்தான் வளர்த்தேன்.. அவன் மனசு மாறுனா நான் என்னடா பண்ண முடியும்.. அஸ்வந் உன்ன நல்லா பாத்துப்பான்.. முடியாதுனு மட்டும் சொல்லிடாதடா…” என்று அவர் இறைஞ்சலாக பேசிக்கொண்டே போக
“சம்பந்திம்மா என்ன பேசுறீங்க.. அண்ணனுக்கு பேசி முடிச்ச பொண்ண தம்பிக்கு கட்டிக் கொடுக்கிறதா.. நாலு பேர் கேட்டாங்கன்னா என்ன சொல்லுவாங்க.. அதுலயும் இவள இன்னுமும் கொத்தி தின்னுட்டு இருக்குற சொந்தக்காரங்க காதுல விழுந்தா.. நாராசமா பேசியே இவள உயிரோட கொன்னுடுவாங்க..
…என்னதான் ஆச்சு, நான் வேணும்னா மாப்பிள்ள கிட்ட பேசி பார்க்கட்டுமா.. யாராச்சும் ஏதாவது சொல்லி அவர் மனச கலைச்சிருக்க போறாங்க…” என்று சங்கரி அழுகையை அடக்கியபடி கேட்க ,
அவர் முகத்தைக் கூட செவ்வந்தியால் பார்க்க முடியவில்லை. தரையைப் பார்த்தவாறே “இல்ல சம்பந்திம்மா மத்தவங்க பேச்சக் கேட்கிற ஆள் அவன் கிடையாது.. தனக்கு சரின்னு பட்டா மட்டும் தான் எதுவா இருந்தாலும் செய்வான்..
…அவன் ஒரு வக்கீலா அந்தத் துறையில தனித்துவமா தெரியுறதுக்கு காரணமே அவனோட புத்திசாலித்தனம் தான்.. உண்மையாவே மனசு மாறினதால தான் இப்டி சொல்றான்.. பார்கவிய பொண்ணு பார்க்க வரும்போது மனசுல எந்த எண்ணமும் இல்லையாம்..
…ஆனா இப்போ வேற ஒரு பொண்ண காதலிக்கிறேன்னு சொல்றான்.. அவங்கிட்ட போய் நீங்க என்ன பேசுவீங்க.. நம்ம சொந்தக்காரங்க உறவுக்காரங்கனு பாக்க வேணாம்.. நம்ம குழந்தைங்க நல்லா வாழனும்..
…என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருந்தா பார்கவிய என் ரெண்டாவது பையனுக்கு கல்யாணம் பண்ணி குடுங்க..
…இந்த கல்யாணம் திரும்பவும் நிற்க வேணாம்.. கேக்குறவங்க கிட்ட என் பையனுக்கு உடம்புல ஏதாவது குறை.. இல்ல மனநிலை பாதிக்கப்பட்டிருச்சு, பைத்தியம் ஏதாவது சொல்லிக்கலாம்..ஆனா இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கணும்… என்று அவர் சொல்ல,
அனைவருக்கும் அதிர்ச்சி தான். அவருக்கு வேறு வழியும் தெரியவில்லை. அபர்ஜித்தை நியாயப்படுத்தி கூற போனால், பார்கவி அஸ்வந் திருமணம் வேறு விதமாக பேசப்படும். ஊர் வாயை மூட முடியுமா என்ன.
அங்குள்ளவர்களுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. பார்கவி திகைத்த பார்வையுடன், கண்ணீர் பொங்கி நிறைந்த கண்களுடன் சிலையாக, உயிர் இல்லாத ஜடமாக அமர்ந்திருந்தாள்.
உச்சபட்ச அதிர்ச்சியை நம் மூளை ஏற்றுக் கொள்ளும் போது எந்த எதிர்வினையும் ஆற்ற தோன்றாதாம், என்பது அவள் விடயத்தில் உண்மையாகி போனதோ என்னவோ.
வசந்தராஜன் சங்கரிக்கு யோசிப்பதற்கு அவகாசம் தேவைப்பட்டது. எனவே அவர்கள் அமைதியாக இருக்க
“என்ன மன்னிச்சிடுங்க சம்பந்திம்மா.. மன்னிப்ப தவிர வேற என்ன கேட்கிறதுனு எனக்கு தெரியல.. நீங்க கலந்து பேசிட்டு முடிவு சொல்லுங்க.. நீங்க என்ன முடிவு எடுத்தாலும் நான் கட்டுப்படுறேன்…” என்று கைகூப்பி மன்னிப்பு கேட்டவர் வாசல் நோக்கி திரும்ப,
வாசலில் நின்று இருந்தான் அபர்ஜித். அவனைப் பார்த்தவர்கள் அனைவருக்கும் கோபம், ஆதங்கம்,அதிருப்தி, மனவருத்தம் என்று என்னென்னவோ உணர்வுகள். அதனால் அவன் வருகைக்கு அங்கே எந்த விதை எதிர்வினையும் இருக்கவில்லை.
அவன் உள்ளே வரவில்லை. அங்கு நின்றவாறே கையை கூப்பி “என்ன மன்னிச்சிடுங்க.. நான் இப்டி பண்ணி இருக்க கூடாது.. அதே நேரம் என் மனசாட்சிக்கு துரோகம் பண்ணிட்டு பார்கவிய கல்யாணம் பண்ணிக்க முடியாது..
… மன்னிப்பு என்கிற ஒரு வார்த்த எல்லாத்தையுமே சரி பண்ணிடாது தெரியும்.. ஆனாலும் என்கிட்ட காரணங்கள் தான் இருக்கு உங்க மனக்காயத்துக்கான மருந்து என்கிட்ட இல்ல.. மன்னிச்சிடுங்க…” என்றவன் வேகமாக தன் காரை நோக்கி செல்ல
அபர்ஜித்தின் குரல் கேட்டு தான் அதிர்ச்சியில் உறைந்து போன, உடற்கூட்டுக்கு உயிர் வந்தது போன்று வேகமாக எழுந்த பார்கவி
“என்னங்க கொஞ்சம் நில்லுங்க.. ப்ளீஸ் கொஞ்சம் நில்லுங்க.. நான் பேசணும்..ஒரே ஒரு தடவ என்ன பாருங்க.. நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க…”என்றுவாறு அவனைப் பின்தொடர்ந்து ஓட,
அவளது வலி நிறைந்த குரல் காதில் விழுந்தாலும், அவளை நேருக்கு நேர் பார்த்து விளக்கம் கொடுக்கும் அளவிற்கு அவனின் மனநிலை இருக்கவில்லை.
தனக்காக தன் தாய் தலைகுனிய வேண்டாம் என்றுதான் அவரின் பின்னோடு வந்து அவனும் மன்னிப்பை யாசித்திருந்தான்.
பார்கவின் குரலுக்கு செவிமடுக்காமல் அபர்ஜித் காரில் ஏறி சென்றுவிட, அவனைப் பின்தொடர்ந்து வாசல் வரை ஓடி வந்தவள், மனது சோர்வடைந்ததால் உடல் பலவீனமாக உணர, மேற்கொண்டு ஒரு அடி எடுத்து வைக்க முடியாமல் தடுமாறி கீழே விழுந்தாள்.
அவளின் கண்ணீரும், அவளின் அழுகுரலும், மணல் புழுதியில் மடிந்து அமர்ந்து இருந்த அவளின் கோலமும், அங்கு இருந்த அத்தனை பேரின் மனதையும் ஒரு நொடி உலுக்கி போட்டது.
பெற்றவர்களுக்கு அவளை எப்படி தேற்றுவது, ஆற்றுவது எதுவும் புரியவில்லை. இதுவரை கல்லாக இருந்த வசந்தராஜனையே மகளின் நிலை கண்ணீரை வர வைத்திருந்தது.
கலங்கிய கண்களுடன் செவ்வந்தியை ஏறெடுத்து பார்க்க, செவ்வந்தியால் யாரின் முகத்தையும் பார்க்க முடியவில்லை. சங்கரி தான் ஓடி சென்று மகளைத் தூக்க முனைய,
அவரின் கால்களைக் கட்டிக்கொண்டவள் “அம்மா..! அம்மா அவர் போறாருமா.. அவர நிற்க சொல்லும்மா.. நான் அவர்கிட்ட பேசணும்.. என் முகத்தப் பார்த்தார்னா மனசு மாறிடுவார்ம்மா.. என்ன ஒரு தடவ பாக்கச் சொல்லும்மா…” என்று சொல்லி அவள் கண்ணீர் வடிக்க,
“ஐயோ! கவி புரிஞ்சுக்கடா.. அவர்தான் தெளிவா சொல்லிட்டு போயிட்டாரே..உன்ன பிடிக்கல வேற ஒருத்திய காதலிக்கிறேன்னு.. இதுக்கு மேல என்னடா பண்ண முடியும்…”என்று சங்கரி மகளுக்கு ஆறுதல் கூற
“என்னத்தம்மா புரிஞ்சிக்க.. அப்போ நான் இதுவரைக்கும் பண்ணுன பூஜை, பரிகாரம், விரதம் எதுவுமே எனக்கு கை கொடுக்கலையா?…” என்று கேட்டவளிடம் என்ன சொல்லுவார்!.
அவன் பாட்டிற்கு இந்த ஆறு மாதங்கள் மாலை, விரதம் என்று இருக்க, கோயிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும், ஒரு பொழுது உண்டு.. தரையில் படுத்து.. மனதளவில் கடவுளை வேண்டினாளே. ஒரு தெய்வம் கூட அவளின் உண்மையான அன்புக்கு செவி கொடுக்கவில்லையா?.
சங்கரிக்குமே அழுகை நெஞ்சை அடைத்தது. “ஐயோ…! செல்லமே அழாதடி.. இங்க பாரு!.. ஒண்ணுமே இல்ல.. உன் கல்யாணம் நடக்கும்.. என்ன அவர் இல்லன்னா வேற மாப்பிள்ளையா இல்ல.. மனச தேத்திக்கடா…” என்று சொல்ல
அவள் நிமிர்ந்து பார்த்த அந்த ஒரு பார்வை. திருமணம் நடக்காது என்ற கலக்கத்திலா அவள் கண்ணீர் வடிக்கின்றாள்,
ஆறு ஏழு மாதங்கள் மனது முழுவதும் ஒருவனை நித்தம் நித்தம் நினைத்து உருகி கரைந்தாளே அவனை மறக்க சொன்னால் முடியுமா.
பார்கவியை சமாதானப்படுத்தும் பொருட்டு, செவ்வந்தி அருகில் வந்து அவள் தோளைத் தொட, “அத்த!.. நீங்.. நீங்க.. வாக்கு தந்தீங்களே இப்போ என்னாச்சு…” என்று துக்கத்தில் தொண்டை அடைக்க விம்மி விம்மி அவள் கேட்க
“அதுதான் சொல்றேனே கண்ணம்மா.. நீ என் மருமகதான்டா.. அஸ்வந்த கல்யாணம் பண்ணிக்கடா..இவன் மேல நீ ஏன்டா இவ்ளவு நேசம் வச்ச..
…ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பேசுறதும், அதுக்கு கடைசி நிமிஷத்துல அறுந்து போறதும் சில நேரம் நடக்கும்.. அது மாதிரி நினச்சு மனச தேத்திக்க..குறிச்ச தேதியில கல்யாணம் நடக்கும்.. நீ என் வீட்டுக்கு மருமகளா வருவ கவலப்படாதடா…” என்று சொல்ல
“வேணாம்..! நான் யார் வீட்டுக்கும் மருமகளா போக வேணாம்…! என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?.. ஆறு, ஏழு மாசமா ஒருத்தன புருஷன்னு சொல்லி சொல்லி என் மனசுல ஆழமா பதிய வச்சிட்டு,
…இப்போ வந்து அவனும் என் பையன் தான்.. இவனும் என் பையன் தான்.. யாரையாவது கட்டிட்டு என் வீட்டுக்கு மருமகளா வானு சொன்னா எப்டி..
…வேணாம்! எனக்கு எதுவும் வேணாம்!.. யாரும் வேணாம்…!”என்றவள் வேகமாக வீட்டினுள் நுழைந்து, தனது அறையில் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
வெளியில் இருந்த அத்தனை பேருக்கும் தூக்கி வாரி போட்டது. கவலையிலும், துக்கத்திலும் தவறான முடிவை எடுத்து விடுவாளோ! என்று இதயம் வேகமாக துடித்தது. அனைவரும் விரைந்து சென்று கதவை தட்ட அவளின் அழுகுரல் தான் கேட்டது.
“அம்மாடி பார்கவி!.. கதவை திறடா.. அம்மாக்கு பயமா இருக்குடா…” என்று சங்கரி கெஞ்ச,
“அம்மா நான் உள்ளதான் இருக்கேன்.. நா.. நான் அக்காவ பாத்துக்குறேன்…” என்று கரகரத்த குரலில் கூறினாள் பர்விதா. அழுது இருப்பாள் போலும்.
பர்விதா அபர்ஜித் வந்தபோதே யூகித்து விட்டாள், பார்கவியின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று. அவனின் கிறுக்குத்தனத்திற்கு தமக்கையை பலி கொடுக்க முடியாதே. எனவே முன்கூட்டியே அவளது அறையில் வந்து இருந்து கொண்டாள்.
உள்ளே பர்விதா இருப்பதை கவனிக்காமல் கதவை அடைத்து அழுது கரைந்தாள் பார்கவி. பர்விதா மற்றவர்களுக்கு பதில் கூறும் போது கூட அவளைத் திரும்பி பார்க்கவில்லை.
ஆனால் பர்விதாவிற்கு தான் இதயத்தை சுத்தியல் கொண்டு அடிப்பது போன்று அத்தனை வலியாகவும், வேதனையாகவும் இருந்தது. பார்கவி கட்டிலில் விழுந்து அழுது கரைய, அவளைப் பார்த்த மாதிரியே சுவரோடு ஒன்றி, கீழே அமர்ந்து விட்டாள் பர்விதா.
அவள் பார்வை வேறு எங்குமே செல்லவில்லை. பார்கவியை மட்டுமே நிலைத்த பார்வையுடன் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
செவ்வந்திக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. போயிட்டு வருகிறேன் என்று சொல்லக்கூட தோன்றாமல் அப்படியே வெளியேறி விட்டார்.
வசந்தராஜனுக்கும், சங்கரிக்குமே பெற்ற மகள் உயிரோடு இருந்தும், அவளை இழந்து விடுவோமோ என்ற பயம் ஈரக்குலையை நடுங்க வைத்தது. அவர்களும் அவளது அறையின் வாயில்லேயே அமர்ந்து விட்டனர்.
வழி தெரியாத மதயானை ஒன்று வாரி சுருட்டிச் சென்ற பூந்தோட்டமாக பார்கவியின் வீடு இருந்தது. அன்றைய நாள் முழுவதும் தூக்கத்தையும் மறந்து, பார்கவி தாழ முடியாத துயரில் மூழ்கி அழுது கொண்டிருக்க, அவளுக்கு துணையாக பர்விதாவும் அங்கே அமர்ந்திருந்தாள்.
பெற்ற பிள்ளைகள் பட்டினி கிடந்து, துயரத்தில் தவிக்க, பெற்றவர்களுக்கு மட்டும் தொண்டைக் குழியில் எச்சில் இறங்குமா என்ன. அவர்களும் அடுத்து என்ன செய்வதென்று அறியாது அப்படியே உறங்கிப் போயினர் .
அடுத்த நாள் காலையிலிருந்து பார்கவி சித்தபிரமை பிடித்தவள் போல அமர்ந்திருந்தாள்.
பெற்ற வயிறு பற்றி எரிந்தது சங்கரிக்கு. இரண்டு நாட்கள் பேருக்கு சாப்பிட்டு, ஏதோ உயிரோடு இருக்கின்றோம் எனும் வகையில் நடமாடிக் கொண்டிருந்தனர் பார்கவி வீட்டில் இருந்தவர்கள்.
பார்கவி முதல்நாள் அண்ணாகரம் ஏதும் இல்லாமல் இருந்தவள் மறுநாள் பர்விதா கொஞ்சி, கெஞ்சி ஒருவாறு ஊட்டி விட, கல்லை மண்ணை உண்பது போல் உண்டு, உறங்காமல் தன்னை காதல் துயரில் உருக்கிக் கொண்டிருந்தாள்.
இதற்கு மேலும் ஒரு குடும்பத் தலைவனாக எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்றால், சில விடயங்கள் கையை விட்டு சென்று விடும் என்ற பட்சத்தில், வசந்தராஜன் மனைவியை அழைத்துக்கொண்டு மகள்கள் இருக்கும் அறைக்கு வந்தார்.
தந்தையை பார்த்துக் கூட எந்தவித அசைவுமே இல்லாமல் அப்படியே கட்டிலில் அமர்ந்திருந்தாள் பார்கவி.
“கவி நீ இப்டியே இருக்கிறதால எதுவுமே மாறப்போறதில்ல.. ரெண்டே ரெண்டு விஷயம் தான் உன் கையில இருக்கு…” என்று வந்தராஜன் சொல்ல,
சங்கரியும், பரவிதாவும் புரியாமல் அவரைப் பார்க்க, லேசாக விழிகளை நகர்த்தி புருவ சுழிப்புடன் தந்தையைப் பார்த்தாள் பார்கவி.
“ஒன்னு.. நீ அபர்ஜித்த மறக்க முடியாம இப்டியே முடங்கி இருக்கணும்.. இந்த கல்யாணம் நின்னு போய், அவமானத்துல வாழ்றத விட, உன்னையும் இப்டி பார்க்க முடியாம தவிக்கிறத விட, நம் குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம்…” என்று சொல்ல
பர்விதா “அப்பா என்ன பேசுறீங்க..!” “என்னங்க..!” என்று பர்விதாவும், சங்கரியும் அதிர்ச்சியாக ஆட்சேபனை தெரிவிக்க
“வேற வழி இல்ல நமக்கு.. அப்டி இல்லையா பார்கவி மனச மாத்திக்கிட்டு அஸ்வந்த கல்யாணம் பண்ணிக்கணும்.. குறிச்ச தேதியில இந்த கல்யாணம் நடக்கணும்.. முடிவு உன் கையில…” என்றவருக்கு தெரியும், தனது வார்த்தைகள் தன் மகளை எந்த அளவுக்கு காயப்படுத்தும் என்று .
ஆனாலும் அவளது வாழ்க்கையை சரி செய்ய அவருக்கும் வேறு வழி தெரியவில்லை . எங்கே அவள் ஆத்திரத்தில் கூறியது போன்று காலத்திற்கும் தனியாகவே இருந்து விடுவாளோ என்ற பயம் அவரை ஆட்டி வைத்தது.
அடுத்த நாளே பார்கவி தனது முடிவை கூறியிருந்தாள். வாழ்க்கையை வெறுத்து, தன்னையும் வெறுத்து, இந்த உலகை வெறுத்து, அவள் எடுத்திருந்த அந்த முடிவு, தன் பெற்றோருக்காகவும் தனக்கு பிறகு இருக்கும் தங்கைக்காகவுமே.
அவளின் முடிவு யாருக்கா என்று பர்விதாவிற்கு நன்கு தெரியும். சொல்லப் போனால் தன்னால்தான் இத்தனை துயரங்களும் என்று குற்ற உணர்ச்சியில் கூனி குறுகி, நித்தமும் நெருப்பில் விழுந்த புழுவாக துடித்துக் கொண்டிருக்கின்றாள். ஆனாலும் அவளது கையில் என்ன இருந்தது .

