
அத்தியாயம் 15
குளித்து தயாராகி சாண்டல் நிற ஜீன்ஸும், நேவி ப்ளூ ஷர்ட் அணிந்து, தன் காதலை நிரூபித்து விட்ட மகிழ்ச்சியில் முகம் கொள்ளா புன்னகையுடன்,
அவள் முன்பு துள்ளலுடன் வந்து நின்றவனை பார்க்கும் போது மனதில் சுருக்கென்று தைத்தாலும் வேறு வழி அவளுக்கு தெரியவில்லை.
தினமும் தூரத்தில் இருந்து பார்ப்பவன் தான் ஆனாலும் கேட்டான்.”பர்வி எப்டி இருக்க?.. நீ சொன்னத நான் செஞ்சுட்டேன்.. என்கிட்ட பேசு பர்வி.. இல்ல இல்ல என் கூடவா.. நம்ம பீச் ஹவுஸ் போகலாம்.. ப்ளீஸ் டி.. இன்னைக்கு லீவ் போடு..
…எனக்கு உன் கிட்ட பேசணும்.. நீ பேசுறத கேட்கணும்.. நீ சம்மதம் சொல்றத என் காது குளிர கேட்கணும்…” என்று அசடு வழிந்தவன் “ஒரே ஒரு கிஸ் பண்ணனும்.. உன் மூச்சு காத்தோட அந்த வாசன.. உன் லிப்ஸோட அந்த டேஸ்ட்..உன் உடம்புல இருக்குற அந்த கத கதப்பு,..
…இது எதுவுமே இல்லாம இந்த ஆறு மாசம்.. உயிர புடுங்கி தனியா வச்ச மாதிரி இருந்துச்சு.. இன்னைக்கு உன்ன எனக்குள்ள மொத்தமா சுருட்டி வச்சுக்கணும்.. என்னோட ஒவ்வொரு செல்லுக்கும் உன்ன வச்சுத்தான் உயிர் கொடுக்கணும்…” என்று அவன் காதலாக பேசிக் கொண்டிருக்க
“இல்ல.. நான் எங்கயும் வரல.. உங்க காதல் எனக்கு புரியுது.. ஆனா எனக்கு உங்க மேல காதல் வரல.. உங்க காதல ஏத்துக்கவும் முடியாது…” என்று அவன் காதல் கனவுகளை அமிலம் ஊற்றி கருக்கி விட்டாள்.
“பர்வி விளையாடாத.. நீ சும்மா தானே சொல்ற…” என்று அவளை நம்பாமல் அவன் கேட்க,
“நான் எதுவும் சும்மா சொல்லல.. நீங்க தான் இன்னமுமே கற்பன உலகத்துல மிதந்துட்டு இருக்கீங்க.. காதலிக்கிறவங்க யாருமே கல்யாணம் பண்ணிக்கிறது கிடையாது.. வேறொருத்தங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு.. அவங்க துணைய ஏத்திக்கிட்டு நிறைய பேர் வாழறாங்க.. சந்தோஷமாவே வாழ்றாங்க..
…ஏன் உங்களால அக்காவ கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமாக வாழ முடியாது.. மனுஷனுக்கு வரம் என்ன தெரியுமா?.. காலம் மாற மாற அந்த காலத்துக்கு ஏத்த மாதிரி தங்களோட மனசு மாறிடும்.. நீங்க என்மேல வச்சிக்கிற காதல் நிறைவேறாமலே செத்துப் போச்சுன்னு நினைச்சுக்கோங்க..
…அக்காவ கல்யாணம் பண்ணிக்குங்க.. காலம் போகப்போக அவளோட காதலும், அவளோட நேசமும் உங்கள கண்டிப்பா மாத்திடும்.. நீங்க அவ கூட சந்தோஷமா வாழ்வீங்க…” என்று அவள் சொல்ல
“நிப்பாட்டுடி.. உனக்கு என் மேல லவ் வரல.. என் லவ்வ உன்னால ஏத்துக்க முடியல அது தானே.. பிரச்சனை இல்ல.. அதோட விடு.. உன் அக்காவ கல்யாணம் பண்ணிக்கிறதோ, இல்ல வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிதோ, அது என்னோட முடிவு..
…இந்த ஜென்மத்துல உன்னத் தவிர வேற ஒருத்தி எனக்கு வைஃபா வர முடியாது.. அது எப்டி வாய் கூசாம் உன் அக்காவ கல்யாணம் பண்ணிக்க சொல்ற.. உன்கிட்ட நான் எப்டி எல்லாம் நடந்து இருக்கேன்..
…எனக்கும் உன் அக்காவுக்கும் கல்யாணமான பிறகு, என்ன உன் அக்கா புருஷனா உன்னால பாக்க முடியுமா?…” என்று அவன் ஆத்திரமாக கேட்க
“இது மாதிரி நிறைய தர்ம சங்கடங்கள மத்தவங்களும் கடந்து தான் வாராங்க.. என்ன எனக்கு கல்யாணமாகுற வரைக்கும் அக்காவ பாக்குறதுக்கு அடிக்கடி வந்துட்டு போகணும்.. ஆனா எனக்கு கல்யாணமாகி எனக்குனு ஒரு குடும்பம் ஆயிடுச்சுனா..,
…வருஷத்துல ஒரு தடவையோ ரெண்டு தடவையோ தான் பார்த்துக்க போறோம்.. அதுக்கு இடையில என் மனசு சரியாயிகிடும்.. நமக்கு இடையில நடந்தத ஒரு கெட்ட கனவுனு நினைச்சு என்னால மறந்துற முடியும்…” என்று அவள் சொல்ல.
“கெட்ட கனவு.. கெட்ட கனவு இல்ல.. உனக்கும் எனக்கும் நடந்தது, என் உயிர் போய், என் உடல் கூடு மண்ணுக்குள்ள புதைஞ்சாலும் மறந்து போகாதுடி.. உனக்கும் எனக்கும் நடுவுல நடந்தது அடுத்த ஜென்மத்துல கூட நினைவிருக்கும்டி..ஒரு முத்தத்துல நம்ம உறவு ஆரம்பிச்சதால உனக்கு என்னோட உணர்வுகள் புரியலல..
…சரி விடு ஆறு மாசம் உன் கிட்ட பேசாம, உன்ன தொடாம, தூரத்துல இருந்து உன்னை பார்த்துட்டு என்னால வாழ முடிஞ்சுது.. இது கூட நல்லதுக்கு தான்.. இனி காலம் முழுக்க என்னால இப்டியே இருக்க முடியும்..
…ஆனா ஒன்னு மட்டும் ஞாபகம் வெச்சிக்க.. கடைசி வரைக்கும் நான் கல்யாணம் பண்ணாம இருக்க போறேன்னா.. நீயும் கல்யாணம் பண்ணாமத்தான் இருக்கணும்…” என்றான் வில்லன் தோரணையில் .
சன்னமாக சிரித்தவள், “நீங்க கல்யாணம் பண்ணாம இருந்தா.. நான் கல்யாணம் பண்ண கூடாது அதுதானே.. ரொம்ப நல்லா நடிக்கிறீங்க.. இன்னும் இருபது நாள்ல உங்களுக்கும் என் அக்காவுக்கும் கல்யாண ஏற்பாடு நடந்துட்டு இருக்கு.. அவள நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா.. நான் யார வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம் இல்ல…” என்று அவள் கேட்க
இந்த செய்தி அவனுக்கு புதிது. “என்ன சொல்ற இன்னும் இருபது நாள்ல எனக்கும் பார்கவிக்கும் கல்யாணமா..?”
“அட.. அட.. அட.. என்ன ஒரு ஆக்டிங்.. உங்க வீட்ல உங்களுக்கு தெரியாம தான் எல்லா ஏற்படும் நடக்குதா?..
“உண்மையா தெரியாது பர்வி.. நம்பு…”
சரி நம்புறேன்.. பட் இந்த முற இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கணும்.. எந்த தடங்களும் இல்லாம.. என் அக்கா உங்களுக்கு மனைவியாகணும்னு என்னெல்லாம் பண்ணுனா தெரியுமா..? இந்த ஆறு மாசம் நீங்க எதுக்காக மால போட்டீங்கனு எனக்கு தெரியும்..
…ஆனா இந்த ஆறு மாசத்துல அவள் உங்களுக்காக என்னெல்லாம் பண்ணுனாள்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.. அவள் காதலுக்கு முன்னாடி உங்க காதல், என்னோட கா…” என்று சொல்ல வந்தவள் அதோடு கத்தரித்து
“என்னோட நீங்க வாழ நினைக்கிறது.. எதுவுமே பெருசு கிடையாது.. உங்க மனசுல இருக்குற எல்லாத்தையும் அழிச்சிட்டு.. என் அக்காவ பொண்ணு பாக்க வந்த நேரம் வெறுமையான மனசோட இருந்தீங்களே..
…அதே மாதிரி அவள கல்யாணம் பண்ணிக்கோங்க.. கண்டிப்பா உங்க வாழ்க்க சந்தோஷமாக அமையும்…” என்று சொன்னவள் அவன் முகத்தை கூட பார்க்காமல் விறுவிறுவென காலேஜுக்குள் சென்று விட்டாள்.
அபர்ஜித்திற்கு தலையில் இடி விழுந்த உணர்வு. தனக்கு கூட சொல்லாமல் தாய் திருமண ஏற்பாடுகளை மீண்டும் துவங்கிவிட்டார் என்பது புரிந்தது. எப்படியாவது இந்த திருமணத்தை முதலில் நிறுத்த வேண்டும்.
அதன் பின் பர்விதாவின் மனதை மாற்ற வேண்டும். இல்லை.. இல்லை.. அவள் மனதில் ஒழிந்து கிடப்பதை வெளியே கொண்டு வர வேண்டும். காதல் கிறுக்கன் அவனுக்கு தெரியாதா அவன் காதல் கிழத்தியின் நயனங்களை பற்றி. அவள் கண்களே காட்டிக் கொடுத்துவிட்டது அவள் மனதை .
ஆனால் கூட பிறந்தவளுக்கு துரோகம் செய்துவிட்டு, எந்த பெண்ணும் தனக்கான வாழ்க்கையை யோசிக்க மாட்டாள் என்பதும் அவனுக்கு புரிந்தது.
பார்கவி மீது இருக்கும் பாசத்தை விட தன் மீது இருக்கும் நேசம் பெரிது என்று அவளுக்கு புரிய வைக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.
மூங்கில் எவ்வளவு வளைத்தாலும் வளையுமே ஒழிய முறிந்து விடாது. அவன் காதலும் அப்படித்தான் என்றுமே உடைந்து விடாது.
எல்லாவற்றுக்கு முன் பார்கவிக்கும் அவனுக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தை நிறுத்த வேண்டும். வேகமாக காரை எடுத்தவன் கொண்டு வந்து நிறுத்தியது அவன் வீட்டின் முன்புதான்.
உள்ளே நுழையவும் செவ்வந்தி ஹாலில் அமர்ந்திருந்தார். சற்று தள்ளி டிவி பார்த்துக் கொண்டிருந்தான் அஸ்வந். உள்ளே நுழைந்தவனைப் பார்த்த செவ்வந்தி
“வாப்பா!.. காலையிலேயே உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்னு நினைச்சேன்.. நீ தான் அவசரமா கிளம்பி போயிட்ட.. வந்து உட்காரு…” என்று சொல்ல
அவர் அருகில் சென்று அமர்ந்தவன் “அம்மா எனக்கும் பார்கவிக்கும் கல்யாண ஏற்பாடு நடக்குதா…?” என்று கேட்க
“அதுக்குள்ள உன் பொண்டாட்டி ஃபோன் போட்டு சொல்லிட்டாளா…” என்று அவர் புன்னகையுடன் கேட்க
“அம்மா!.. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.. நான் தாலி கட்டாம யாரையும் எனக்கு பொண்டாட்டின்னு சொல்லாதீங்க…” என்றான் சற்று காட்டமாக
“என்னடா பேசுற.. உன் பேச்சே சரி இல்லையே.. என்னாச்சு உனக்கு…? என்று செவ்வந்தி குழப்பமாக கேட்க
“அம்மா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல.. நான் வேற ஒரு பொண்ண லவ் பண்றேன்.. உடனே கல்யாண ஏற்பாட்ட நிப்பாட்டுங்க…” என்று அலுங்காமல் குலுங்காமல் அவர் தலையில் இடியை இறக்கி இருந்தான்.
அபர்ஜித் இப்படி பொறுப்பில்லாமல் பேசுபவன் இல்லை. அதே சமயம் திருமண விசயத்தில் விளையாட்டுக்கு சொல்லுபவனும் இல்லை.
அவனது இந்த பரிமாணம் புதிது. அவன் கூறியதை கேட்டு பேரதிர்ச்சியில் இருந்தவர், பின் நினைவு தெளிந்து, திருமணத்தை நிறுத்த சொன்னவனிடம்
“என்னடா பேசுற நீ.. நல்லா தானே இருந்த.. என்னாச்சு உனக்கு…” என்று கேட்க
“தெரியலம்மா.. நானும் பார்கவிய கல்யாணம் பண்ணிக்கலாம்னு தான் இருந்தேன்.. ஆனா அந்த கல்யாணம் நின்னதுக்கு பிறகு.. எனக்கு இந்த பொண்ண புடிச்சு போச்சு..
…அவளத் தவிர வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்க முடியும்னு எனக்கு தோணல.. அப்போ என் மனசுல காதல் இல்ல.. இப்போ என் மனசுல காதல் இருக்கு.. அது வேற ஒரு பொண்ணு மேல இருக்கு…” என்று சொல்ல
“என்னடா பேசுற.. நான் எடுத்து சொல்லுற அளவுக்கு நீ சின்ன பையன் இல்ல.. இந்த முடிவால எவ்ளவு சங்கடங்களும் மனக்கசப்பும் பிரச்சினைகளும் வரும்னு தெரியாதா?.. பார்கவிகிட்ட இத எப்டி சொல்றது.. அவ உடைஞ்சு போய்டுவாடா…” என்று சொல்ல
“நீங்க இப்போ நடக்குறத பத்தி யோசிக்கிறீங்க ம்மா.. ஆனா காதலே இல்லாம, நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னா, கடைசி வரைக்கும் அவ கஷ்டப்படுவா.. அது பரவாயில்லையா..?” என்று கேட்க
“இப்ப நீ முடிவா என்ன தான் சொல்ற…”அவர் முகமும் குரலும் இருகி இருந்தது.
“மன்னிச்சிடுங்க ம்மா.. என்னால நான் இப்ப காதலிக்க பொண்ண விட்டுட்டு வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது…”
“சரிடா சரி.. உன் இஷ்டத்துக்கு முடிவெடுத்திட்ட இல்ல.. அதனால வற போற தலைகுனிவு எல்லாத்தையும் நானே ஏத்துக்கொள்கிறேன்.. ஆனா ஒன்னுடா.. ஒரு பொண்ணு மனுச கஷ்டப்படுத்திட்டு கண்டிப்பா நல்லா வாழ்ந்திட முடியாது..
…இதுல ரெண்டு குடும்ப கௌரவ பிரச்சனை வேற இருக்கு.. நான் நேத்து வாக்கு குடுத்துட்டேன்.. இந்த குடும்பத்து மருமகள்னா அது பார்கவி தான்னு.. அத கண்டிப்பா நிறைவேத்தியே ஆகணும்…” என்று சொன்னவர்
இவர்கள் இருவரின் சம்பாஷனைகளை அதிர்ச்சியாக விழி விரித்து கேட்டுக் கொண்டிருந்த அஸ்வந்திடம் திரும்பி
“அவன் தான் என் கழுத்த அறுத்துட்டான்.. நீ என் புள்ள தானடா?..என் கௌரவம், என் வாக்கு அத நீ காப்பாத்துவ இல்ல…” என்று கேட்க
“அம்மா என்ன இது.. நீங்க என்ன சொன்னாலும் நான் செய்வேன்.. அதுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய வார்த்த.. என்று அஸ்வந்த் சொல்ல
“அப்போ பார்கவிய நீ கல்யாணம் பண்ணிக்க…” என்று சொல்ல அஸ்வந்துக்கோ பேரதிர்ச்சி தான்.
அண்ணி என்னும் வகையில் பார்த்தவளை இனி தாரமாக பார்க்க வேண்டும். எப்படி அவனால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனாலும் அண்ணன் செய்த தவறை அவன் செய்ய விரும்பவில்லை .
இருந்தும் மனம் கேளாமல் “அம்மா இருந்தாலும்…” என்று அவன் இழுக்க
“என்னடா நீயும் யாரையாச்சும் லவ் பண்றியா..?” என்று அவர் சத்தமாக கேட்க
“இல்லம்மா.. அப்படியெல்லாம் இல்ல.. ஆனா அவங்க வீட்ல..சம்மதிக்கணுமே…”என்று அவன் சொல்ல
இழுத்து பெருமூச்சு விட்டவர் “பார்கவிகிட்ட.. அவங்க வீட்ல பேச வேண்டியது என் பொறுப்பு.. நீ முழு மனசோட சம்பந்தம் மட்டும் சொல்லு…” என்று அதிகாரமாக கேட்க
“உங்க விருப்பம் ம்மா நான் அண்..ம்க்கும்.. பார்கவிய கல்யாணம் பண்ணிக்கிறேன்… என்றான் சற்று தடு மாற்றத்துடன்
“நீயாவது செவ்வந்தியோட பையனா வாக்கு தவறாமா இரு…” என்றவர் அபர்ஜித்தை முறைத்துக் கொண்டே பார்கவி வீட்டிற்கு சொல்ல வெளியேறி விட்டார்.
செவ்வந்தி கணவர் இறந்த பின்பு அபர்ஜித்தின் பொறுப்பில் தான் குடும்பத்தை நடத்தி வந்தார். அவன் விருப்பத்திற்கு எதிராக எதையும் செய்ததில்லை.
அதனால் தான் இந்த விடயத்தில் கூட அவனை வற்புறுத்தாமல், வரும் அவமானங்களையும் பிரச்சனைகளையும் பார்த்துக் கொள்ளலாம் என்று பார்கவி வீடு தேடி வந்திருந்தார்.

