Loading

அத்தியாயம் 14

 

பர்விதா கூறிய நிபந்தனைகளை முழுதாக கேட்டு விட்டு இழுத்து பெருமூச்சு விட்டவன்

 

“சரி.. ஓகே.. உன்ன பாத்துகிட்டு ஆறு மாசம் என்ன ஆயிசுக்கும் என்னால இருக்க முடியும்.. அப்படின்னு சினிமா டயலாக் எல்லாம் சொல்ல முடியாது பர்வி.. உன்ன பாத்தாலே என்னால, என்ன கண்ட்ரோல் பண்ண முடியாது..

 

…நீ சொல்ற மாதிரி இருக்கிறது கஷ்டம்டி.. ம்ஹும் ஆறு மாசம்தான் சொல்லிட்டேன்.. நீ சொன்ன மாதிரியே உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன்.. உன்கிட்ட வரமாட்டேன்.. உன்கிட்ட பேசமாட்டேன்..

 

…ஆனா ஆறு மாசம் முடிய நீ என் காதல ஏத்துக்கொள்ளணும்.. நம்ம கல்யாணத்துக்கு சம்பந்தம் சொல்லணும்.. அது மட்டும் போதும்.. நம்ம ரெண்டு வீட்லயும் பேசி உனக்கும் எனக்கும் கல்யாணத்த நடத்த வேண்டியது என் பொறுப்பு ஓகே…” என்று கேட்க

 

அவளும் ஆமென்று தலையை ஆட்டினாள். அவளுக்குமே அபர்ஜித்தை பிடித்து இருக்கின்றதோ என்ற சந்தேம். அதே சமயம் பார்கவின் காதல், அதனால் அவனை பிடித்து விடக்கூடாது என்ற வைராக்கியம் என இரு வேறு மனநிலையில் தான் தவித்தாள்.

 

பருவமடைந்ததிலிருந்து தாயிடமோ தமக்கையிடமோ அவன் முன்பு இருந்த நிலையில் அவள் இருந்ததில்லை. அவன் முன்பு அப்படி இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை. அதே நேரம் அவன் செய்யும் சில்மிஷங்களும் அருவெறுக்கவில்லை.

 

அவன் விடயத்தில் அவள் என்ன உணர்கின்றாள், எதுவும் அவளுக்கு புரியாத நிலை. தன் மனதில் என்ன இருக்கின்றது, தமக்கையை மீறி அவளின் காதலையும் மீறி, இவனுடன் ஒரு வாழ்க்கை வாழ முடியுமா?.

 

அவனது மனநிலையும் சற்று புரியத்தான் செய்தது அவளுக்கு. மனதில் ஒருத்தியை வைத்துக் கொண்டு, இன்னொருத்தியை மணம் முடித்து சந்தோஷமாக வாழ முடியாது தான். அதற்காக அவள் தமக்கைக்கு துரோகம் பண்ண முடியாது .

 

அதே நேரம் அபர்ஜித்தை பிடிக்கவில்லை என்று முழுமையாக கூறி விடவும் முடியவில்லை. அவன் இவ்வளவு செய்தும் அவன் மீது கோபம் வரவில்லை. மனத்தாங்களும் ஆதங்கமும் தான் கொட்டி கிடந்தது.

 

எனவே தன்னை பற்றி அலசி ஆராய, அவனது காதலை பரிசோதிக்க, இந்த ஆறு மாதங்கள் தேவைப்பட்டது. இவர்கள் இருவரின் காதல் பரிசோதனையில் பார்கவியின் காதல் கருகிப் போய்விடும் என்பதை உணரவில்லையோ என்னவோ…

 

********

அபர்ஜித்தோ தனது அலுவலக அறையில் தன் இருக்கையில் அமர்ந்து, மேஜையில் இரு கைகளையும் ஊன்றி, கைகளால் தன் கன்னத்தை தாக்கியபடி, அவன் முன் இருந்த ஃபோனை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான் .

 

உள்ளே வந்த அறிவழகி, அவனையும் அவன் பார்வை பதிந்து இருக்கும் ஃபோனையும் மாறி மாறி பார்த்துவிட்டு, “ஓடாத டிவிய வெறிக்க வெறிக்க பாக்குற சீரியல் பைத்தியத்த கூட பாத்திருக்கேன்.. எதுவுமே இல்லாத ஃபோன எதுக்கு இவர் வெறிச்சு பாக்குறாரு..

 

…அய்யய்யோ! வாழ்க்கையில லவ் மட்டும் பண்ணிட கூடாது டா சாமி.. காலேஜ் டாப்பர்.. ஜீனியஸ்னு பேர் எடுத்த அட்வகேட்.. போர போக்க பாத்தா பேர் போயிடும் போலயே…” என்று புலம்பியவள்

 

“சீனியர்.. சீனியர்….” என்று அவனை உலுக்க, எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி கண்களை மட்டும் நகர்த்தி அவளை பார்த்தவன் “சொல்லு அறிவு…” என்றான் சோர்ந்து போனவனாக .

 

அவனது சோகத்திற்கு பெரிதாக ஒன்றும் காரணம் இருக்கவில்லை. அன்று பர்விதா கூறிய நிபந்தனைகள் தான். இதோ இரண்டு நாட்கள் தான் கடந்து இருக்கும். அன்றைக்கு பிறகு இந்த இரண்டு நாட்கள் பர்விதா காலேஜ் வருகின்றாள்.

 

இவன் தூரமாக நின்று அவளை பார்த்துவிட்டு அலுவலகம் வருகின்றான். காலேஜ் முடியும் தருவாயிலும் அவளைச் சென்று பார்க்கின்றான். அது அவனுக்கு போதாதாம்.

 

அவளை பார்க்கும் போது அவளை சிறையெடுக்க உந்தித் தள்ளும் மனதை சமாளிப்பது மலையை உடைத்து மணலாக்குவது போல் இருக்க, அந்த மணலில் குழி தோண்டி மரக்கன்று நட்டு பழம் பறிக்கக் கூடியது போல் ஆனது அவன் நிலமை பார்கவியால்.

 

பார்கவி தினமும் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்கு இவன் பதில் அனுப்பியது கிடையாது. அவளும் வேலையாக இருக்கின்றான் என்று விட்டுவிடுவாள். ஆனால் அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு அவளை சமாளிப்பது எப்படி என்று அவனுக்கு எதுவும் புரியவில்லை.

 

குறைந்தது பத்து நாட்கள் அவளை தவிர்க்க முடியும். அதன் பின் சரியான காரணங்கள் கூற வேண்டுமே. பர்விதாவின் மூலம் பார்கவின் மனது என்னவென்பது அவனுக்கு நன்கு தெரியும்.

 

அந்த 16 நாட்களிலேயே அவன் சரியாக பேசாமல் போனதற்கு, வாடி வதங்கி பசலை நோய்த்தாக்கியவள் போல் இருந்தாள் பார்கவி. அதன் பிறகு பர்விதாவை பார்ப்பதற்காக ஒருமுறை வீட்டிற்கு சென்று வந்திருந்தான்.

 

இதோ நாட்கள் ஓடி விட்டது. இனிமேலும் அவளை தவிர்த்தால், அதற்கு சரியான காரணம் கூற வேண்டும். எப்போதும் குறுஞ்செய்தி அனுப்புபவள், இன்று கால் எடுத்து இருந்தாள்.

 

அவளது அழைப்பு வந்து, தானாக துண்டிக்கப்படும் வரை ஃபோனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவன், தொடுத்திறையின் ஒளி அணைந்த பிறகும் அதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“என்னாச்சு சீனியர்…?” என்று அறிவழகி கேட்க

 

“என் நிலைம இரண்டு பொண்டாட்டிக்காரன் நிலைம மாதிரி ஆயிடுச்சு அறிவு.. பார்கவி ஃபோன் பண்றா.. நான் என்ன சொல்லுவேன்.. அவ கூட மேற்கொண்டு பேசி, பழகி இன்னும் இன்னும் அவ மனசுல ஆசைய வளக்க நான் விரும்பல.. அதே நேரம் சரியான ரீசன் சொல்லாம அவள அவாய்ட் பண்ண முடியாது..

 

…இந்த பிரச்சனைய ஈஸியா ஹேண்டில் பண்றதுக்கு.. பர்வி சொன்ன ஆறு மாசம் இடையில தடுக்குது.. அவ ஓகே சொல்லாம அவளத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு என்னால யாருகிட்டயும் சொல்ல முடியாது.. நான் சொல்ல போய், அவகிட்ட சம்மதம் கேட்க.. அவ முடியாதுன்னு சொல்ல.. அது இன்னும் பெரிய சிக்கல்ல போய் முடியும் ..

 

… அட்லீஸ்..எங்க ரெண்டு பேருக்கும் புடிச்சிருக்குன்னு தெரிஞ்சாலாவது.. மத்தவங்கள சமாளிக்கிறது ஈசியா இருக்கும்.. அதனால தான் பர்வியோட சம்மதம் எனக்கு முக்கியம்.. அதுக்கு இடையில பார்கவிய நான் சமாளிக்கணும் எப்டினு தான் தெரியல…”

 

“நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?..” என்று அறிவு கேட்க, “வேற யார் கிட்ட கேட்க போறேன்.. நீ தான் சொல்லணும்.. சொல்லு…” என்று அவன் சொல்ல

 

“ஒரு 41 நாள் சமாளிக்க முடியும்…” என்று அவள் சொல்ல

 

“எப்படி..?” அவன் ஆர்வமாக கேட்க

 

“அது பெருசா ஒன்னும் இல்ல.. ஐயப்பனுக்கு மாலை போட்டுங்க.. மாலை போட்டு இருக்கும் போது பொண்ணுங்க கூட பேச கூடாதுன்னு சொல்லிடுங்க..

 

…அதே நேரம் மாலை போட்டா உங்க மனசு அதுக்காகவே கட்டுப்பாடோட இருக்கும்.. பர்வி மேடம பாக்கும்போது மனசுல ஏற்படுற சலனத்தையும் கட்டுப்படுத்தலாம்.. எப்டி ஒரே கல்லுல ரெண்டு மாங்கா…” என்று அவள் கேட்க

 

“41 நாளைக்கு சரி.. மலைக்கு போயிட்டு வந்ததுக்கு பிறகு என்ன பண்றது…? என்று அவன் கேட்க

 

“நம்ம ஊர்ல சாமிக்கா பஞ்சம் சீனியர்.. அடுத்து மாரியம்மனுக்கு போடுங்க.. அதுக்கு அடுத்து முருகனுக்கு போடுங்க..ஆறு மாசம் முடியுற வரைக்கும் யாரோ ஒரு கடவுளுக்கு மால போட்டுட்டே இருங்க…”

 

“அப்டியா சொல்ற…”

 

“அப்டித்தான்.. வேற வழி இல்ல.. நீங்க வேற சபல புத்திக்காரன்…”

 

“ஏய்!.. என்ன டைம் கிடைக்கும் போதெல்லாம்.. நீ என்ன டேமேஜ் பண்ற…”

 

“ஆமா.. ஆமா ..ஏற்கனவே உங்க கேரக்டர் நாறிப் போய் கிடக்குது.. இதுல நான் வந்து தான் டேமேஜ் பண்ணனுமா..?” என்று அவள் நக்கலாக கேட்க,

 

“உன்ன…” என்று அவன் அவளை அடிப்பதற்கு பைலை தூக்க

 

“சாமியே! சரணம் ஐயப்பா.. சாமி சரணம்.. சாமி சரணம்.. இப்டியெல்லாம் வன்முறையில இறங்க கூடாது…” என்று அவள் கன்னத்தில் போட்டுக் கொள்ள

 

பைலை கீழே போட்டவன் “சாமி சரணம்…” என்று நெஞ்சில் தொட்டு உதட்டில் வைத்துக் கொண்டான்.

 

“ஹேய்! வெயிட்.. வெயிட்.. நான் இன்னும் மாலை போடலையே…”

 

“அட! அதுவா சீனியர் முக்கியம்.. போடணும்னு நினைச்சாலே சாமிதான்.. வாங்க! வாங்க.. முதல்ல போய் உங்களுக்கு மாலைய போடணும்…” என்று கையோடு அவனை இழுத்துச் சென்று, கோயிலில் மாலை போட வைத்தே, வீட்டிற்கு அனுப்பி வைத்தாள் .

 

வீட்டிற்கு கழுத்தில் மாலையும், கருப்பு உடையுமாக வந்தவனை பார்த்ததும் செவ்வந்திக்கும் அஸ்வந்துக்கும் சற்று அதிர்ச்சி தான். “டேய் என்னடா இது.. சொல்லவே இல்ல…” என்று அஸ்வந்த் கேட்க

 

“அஸ்வந் என்னடா இது.. மால போட்டு இருக்கிறவன வாடா போடான்னு சொல்ற.. ஏதாவது மனசுல நினைச்சி இருந்துருப்பான்.. இப்போ எதுவும் கேட்க வேணாம்.. முதல்ல மலைக்கு போய்ட்டு வரட்டும்…” என்று செவ்வந்தி சொல்ல

 

“ஆமால.. சாமி சரணம்…” என்று அவன் கன்னத்தில் போட்டுக் கொண்டான் அஸ்வந்.

 

“என்ன சாமி முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல.. சரி பரவால்ல வாங்க…” என்று அழைத்துச் சென்று, பூஜை அறையில் அவனை விளக்கேற்ற வைத்து அவனது அறைக்கு அனுப்பி வைத்த பின், வீட்டில் பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தார் செவ்வந்தி.

 

அவரது எண்ணம் திருமண மண்டபம் வரை வந்து கல்யாணம் நின்று போனதால், மீண்டும் நல்ல முறையில் திருமணம் நடக்க வேண்டும் என்று மாலை போட்டு இருப்பான் என்று எண்ணிக் கொண்டார்.

 

பார்கவின் மீது அவனுக்கு அளவு கடந்த நேசமும், காதலும் உண்டு என்று நினைத்தார். தனது அறைக்கு வந்தவன் முதலில் செய்தது, பார்கவிக்கு அழைப்பை எடுத்து, தான் ஐயப்பனுக்கு மாலை போட்டு இருப்பதை கூறியதுதான்.

 

அதைக் கேட்டதும் அவளுக்குமே கண்கள் கலங்கிவிட்டது. ஏனென்றால் செவ்வந்தி நினைத்ததை தான் அவளுமே நினைத்தாள். தங்கள் இருவரின் திருமணம் நல்ல முறையில் நடக்க வேண்டும், நான் அவர் மனைவியாக வேண்டும் என்று தான் மாலை போட்டிருப்பார் என்று முழுமையாக நம்பினாள்.

 

பாட்டி இறந்து இன்னும் ஆறு மாதங்கள் கூட முடியவில்லை என்பதால், அவளால் கோயிலுக்கு செல்ல முடியாது. எனவே மனதளவில் அவளும் இறைவனை மன்றாடி கொண்டு தான் இருந்தாள் அவன் மனைவியாக வேண்டும் என்று.

 

அன்றே பார்கவின் மூலம் பர்விதாவிற்கும் விஷயம் கடத்தப்பட்டது. அவளுக்கு தெரியுமே அவளின் கேடியைப் பற்றி ‘அக்காவா அவாய்ட் பண்ணனும்.. அதே நேரம் என்கிட்ட கட்டுப்பாடா இருக்கணும்.. இது ரெண்டுக்கும் சேர்த்து தான் மாலை போட்டிருக்காரு..

 

…ஆனா அக்கா.. அவளுக்காக தான் மாலை போட்டு இருக்கிறதா நினைக்கிறா.. இவர் எது பண்ணினாலும் திரும்பத் திரும்ப அக்கா மனச பாதிக்கும்ணு ஏன் இவருக்கு புரியல…’ என்று தான் தோன்றியது பர்விதாவிற்கு.

 

அடுத்த நாள் மாலையும், கருப்பு உடையுமாக தூரத்திலிருந்து அவளை ஏக்கமாக பாக்கும் அபர்ஜித்தை பார்க்கும் போது ஏனோ லேசாக மனதில் நேசம் கசிய தான் செய்தது.

 

 

******

அறிவு கூறியதைப் போன்று மலைக்கு போய் வந்த பின்னரும் ஒவ்வொரு தெய்வத்திற்காக மாலை, விரதம் என்று அபர்ஜித்தின் நாட்கள், காலை, மாலை பர்விதாவை பார்ப்பதும், அதன் பின் தன் வேலைகளை கவனிப்பதுமாக கடந்தது.

 

பார்கவியும் அபர்ஜித்தின் செயல்கள் யாவும் தங்களது நல்வாழ்க்கைக்கா என்று எண்ணி, அவனுடன் பேச துடித்த மனதை தேற்றிக்கொண்டாள். அப்படி இருந்தும் மாதத்திற்கு ஒரு முறை அவனுக்கு அழைப்பு எடுத்து, “சாப்டீங்களா” என்று கேட்பாள்.

 

அந்த ஒற்றை வார்த்தையில் ஓர் ஆயிரம் அன்பை தேக்கி வைத்து, அவள் நேசத்தையும், பாசத்தையும் தொலைபேசி மூலம் கடத்தி விடுவாள். அந்த குரலில் இருக்கும் மென்மையும், பாசமும், காதலும் அபர்ஜித்தை கூறு கூறாக வெட்டி போட்டாலும் அவனுக்கும் வேறு வழி தெரியவில்லை.

 

பர்விதா (ஆம்) என்று ஒரு சம்மதம் கூறிவிட்டால் இத்தனை மனக்கசப்புகளையும் அவன் எளிதில் கடந்து விடுவான். அவள் தான் பிடிவாதமாக ஆறு மாதங்களுக்கு நிபந்தனைகளை விதித்து விட்டு நிம்மதியாக இருக்கின்றாளே.

 

அப்படி தான் அபர்ஜித் நினைத்தான். ஆனால் ஓர் இரண்டு மாதங்களிலேயே பர்விதாவின் மனது அவன் பக்கம் முழுமையாக சாய்ந்து விட்டது.

 

சபரி மலைக்கு போயி விட்டு வந்தவன் மறுபடியும் மாலையும் கழுத்துமாக வந்து நிற்க, இது அனைத்தும் தான் விதித்த அந்த ஆறு மாதங்களுக்காக தான் என்று புரிந்து போனது. அவனது கட்டுப்பாடுகளும், அவன் கண்களில் தெரியும் அந்த ஏக்கமும்,

 

கடவுளை காணும் பக்தனை போன்று அவளை பார்க்கும் அந்த பார்வையும், அவளுள் இறங்கி அவள் அடி மனதில் உள்ள நேசத்தை தூண்டி விட்டது. அதன் விளைவு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் அவன் மீது ஆழமான காதல் வந்தது புரிந்து போனது.

 

ஆனாலும் அதை ஒத்துக்கொள்ளும் நிலையிலோ, ஏற்றுக்கொள்ளும் நிலையிலோ அவள் இல்லை.

 

தன் மனதில் தோன்றிய காதலை விட, தன் மீது அபர்ஜித் வைத்திருக்கும் காதலை விட, தன் தமக்கை அபர்ஜித் மீது வைத்திருக்கும் காதல் தான் உயர்வானது என்று தோன்றியதால்,

 

தமக்கையின் மனதை உடைத்து விட்டு தனக்கு மாங்கல்யம் ஏறத் தேவையில்லை என்பதே அவளது தீர்க்கமான முடிவாக இருந்தது.

 

கண்ணிமைக்கும் நொடியில் ஆறு மாதங்கள் முடிந்து போய் இருக்க, காலேஜ் வாசலில் அவளுக்காக காத்திருந்தான் அபர்ஜித்.

 

பர்விதாவிற்கு அன்று காலேஜ் வரவே விருப்பமில்லை. இருந்தும் வராமல் இருக்க முடியவில்லை. அவனிடம் என்ன கூறுவது, எப்படி அவனை சமாளிப்பது எதுவும் அவளுக்கு புரியவில்லை.

 

இத்தனை நாட்கள் அவன் காதலை முன்னிறுத்தி அவனை கட்டுப்படுத்தி வைத்திருந்தாள். இதன் பிறகு கண்டிப்பாக அவனை கட்டி நிறுத்த முடியாது. அவனை தவிர்த்தால் என்ன செய்வான் என்பது நன்கு தெரியும்.

 

இனி மேலும் அவனது சீண்டல்களும் சில்மிஷங்களும் தன்னிடம் நடக்கக்கூடாது என்பதில் முடிவாக இருந்தாள். அதற்கு காரணம் முந்தைய தினம் நடந்த ஒரு நிகழ்வு.

 

Click on a star to rate it!

Rating 4.2 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்