
அத்தியாயம்-12
சுற்றிலும் பச்சை பசேலென்ற வயல்வெளிகளைக் கண்களில் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள், நண்பர்கள் நால்வரும்.
அவர்கள் அருகில் நின்றிருந்த ஜேன்ஸி தனது கருவிகள் மனப்பாடம் செய்து வைத்திருப்பதை ஒப்பிக்க தயாராக இருந்தது.
“ஏ ஜே.. அவ்ளோ அழகா இருக்கு” என்று ஜான் கூற,
“இந்த ஏரியா முழுசும் விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலம் மேம். ஒவ்வொரு ஊருலயும் விவசாயத்துக்குனு அரசாங்கம் ஒருகுறிப்பிட்ட இடம் ஒதுக்கிக் கொடுப்பாங்க. நிலம் அரசாங்கத்துக்கு மட்டுமே தான் சொந்தம். ஐந்து வருடத்துக்கு ஒருமுறை ஏலம் விட்டு நிலம் விவசாயிகளுக்குள் கைமாறிகிட்டே இருக்கும். அதில் விவசாயம் செய்து அவர்கள் ஈட்டும் ஒவ்வொரு பொருளுக்கும் விலை நிர்ணயம் பண்றதும் அவங்க தான்.
ஆனா விலை பட்டியலுக்குனு நிறையா விதிமுறைகள் இருக்கு. அந்த செடியையோ காய் கனியையோ உருவாக்க அவங்க செலவழிச்ச பணம் அன்ட் அவங்க உழைப்புக்கான கூலினு எல்லாம் கூட்டி அவங்க விலை நிர்ணயம் பண்ணுவாங்க. அதைவிட கூடுதலா எங்கேயும் விற்க முடியாது. வெளியூர் ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்களுக்கு மட்டும் தான் அந்த விலையை ஏற்றி விற்க உரிமை உண்டு.
விற்பனை நேரா விவசாயிகளிடமிருந்து மக்களுக்கே நடந்துடும். எல்லாமே ஆன்லைன் புக்கிங் தான் சார். தேவைப்படும் நேரம் அவங்கவங்க ஊர் பகுதியிலிருக்கும் இந்த இடத்தோட நிர்வாக அறைக்கு தகவல் தெரிவிப்பாங்க. அவங்க கேட்பதை பேக் பண்ணி டெலிவரி பண்ணிடுவாங்க” என்று ஜேன்ஸி நீளமாகப் பேசி முடிக்க, நால்வருக்கும் ஆச்சரியம் தாளவில்லை.
“அதென்ன அங்க பெரிய பேக்டரி மாதிரி இருக்கு?” என்று துருவன் அங்கிருந்த ஒரு தொழிற்சாலையைக் காட்டி வினவ,
“பயோ ப்யூயல் சார். விவசாயக் கழிவு மற்றும் மாட்டுக்கழிவுகள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த உயிரி எரிபொருளுக்கான தரம் நம்ம நாட்டில் ரொம்ப அதிகம். என்னதான் எல்லாமே மின்சாரமயமானாலும் சில இயந்திரங்களுக்கு எரிபொருளின் தேவை கண்டிப்பான தேவையா இருக்கு. இன்னும் சொல்லப்போனா இந்த எரிபொருள் தேவைக்காகத்தான் விவசாயமே பெரிய அளவுல கணக்கில் எடுக்கப்பட்டதுனும் சொல்லலாம்” என்று ஜேன்ஸி கூறியது.
அவர்கள் அமர்ந்து மீண்டும் வேடிக்கைப் பார்க்க, கையில் பெரிய பை முழுதும் செயற்கை மற்றும் வேதிப்பொருளால் தயாரான உரங்களோடு வந்த இளைஞன் ஒருவன் அதை செடிகளுக்கு இட்டான். உள்ளே நுழையும் முன்பே அவன் தனது காலணிகளை கழட்டி வைத்துவிட்டு வந்ததை ஆச்சரியமாய் நால்வரும் பார்க்க, உரமிட்டு முடித்து அந்த பச்சை பசேலென்ற செடிகளை உணர்வுக்குவியலுடன் தொட்டு ரசித்துவிட்டுச் சென்றான்.
சிலநிமிடம் காற்றின் ஓசை மட்டுமே அங்கு இசைபாட, “இயற்கை உரம் இல்ல, இங்க வந்து உக்கார்ந்த இவ்வளவு நேரத்தில் மண் வாசத்தைவிட வேதிப்பொருள் வாசம் தான் வீசிச்சு. ஆடு மாடுனு பண்ணைகள் சுற்றி இல்லை ஆனாலும் மாறாத ஒன்றா விவசாயம் இருக்குல? அந்த விவசாயிகளுக்கும் நிலத்துக்குமான பந்தம் மாறல, விவசாயத்திற்கான தேவை மாறல, நிலத்துக்கான அங்கீகாரம் மாறல. பார்க்கவே நிறைவா இருக்குல?” என்று விஷ்வேஷ் வினவ,
மற்ற மூவரும் புன்னகையுடன் தலையசைத்தனர்.
அப்போதே அங்கு அவர்களது அழைப்பிற்கு இணங்க, அகர்ணனும் அமிர்தப்ரியாவும் வந்தனர்.
புன்னகையுடன் தங்களை காண்போர் அருகே வந்தவர்களில் அகர்ணன், “ஹாய் சார்” என்றதில்,
“கமான் அகர்ணன்.. வேலையிடத்துல தான் இந்த சார் மோரெல்லாம். ஜஸ்ட் பெயர் சொல்லியே கூப்பிடுங்க” என்று துருவன் கூற, மறுப்பின்றி ஏற்றுக்கொண்டான்.
அங்கே அருகிலிருந்த மாந்தோப்பிற்குள் தங்கள் வருகைக்கான பதிவுகள் பலவற்றை முடித்துக் கொண்டு அறுவரும் உள்ளே சென்றனர்.
தன் அருகே விழிகளை ஆர்வத்தோடு சுழற்றி அவ்விடத்தினை ரசித்தபடியே வந்த அமிர்தப்ரியாவின் கரத்தினை விஷ்வேஷ் பற்றிக் கொள்ள, சட்டென கோர்த்துக் கொண்ட அவன் கரம் தந்த சூட்டில் திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தாள்.
வசீகரிக்கும் புன்னகை ஒன்றை ஆடவன் உதிர்க்க, அதில் லயித்து தானும் அழகாய் புன்னகைத்தாள்.
“அஹம்… அஹம்..” என்று ஜான்விகா இருமுறை இருமிக் கட்ட, “என்ன வேணுமாம் அந்த எருமைக்கு?” என்று தன்னவளிடமிருந்து பார்வையை எடுக்காதபடி அவன் வினவிய அடுத்த நொடி எதிலோ தடுக்கிக் கீழே விழுந்திருந்தினான்.
அதில் யாவரும் சிரித்திட, “இதுக்குத்தான் அந்த அஹம்..அஹம்.. பக்கி நாயே கீழ பார்த்து நடங்கடா” என்று அவன் தடுக்கி விழுந்த வேரை சுட்டிக் காட்டி அவள் கூற, மேலும் சிரிப்புச் சத்தம் அதிகரித்தது.
அதில் நாணம் கொண்ட ப்ரியாவும் நகைத்துவிட, ‘பாவி.. சிரிக்குறியா?’ என்றபடி எழுந்து தன்மேல் ஒட்டிய மண்ணை தட்டியபடி,
“என்னடா? இப்ப என்ன? கீழ தானே விழுந்தேன்.. காதல்லயே விழுந்து புரண்டாச்சு.. இதுலாம் பெருசா?” என்று கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் பெருமையாகப் பேசினான்.
அதில் தன் இருகைகளையும் தட்டிச் சிரித்த துருவன், “டேய் டேய் நடிக்காத போடா” என்க,
“அடடே.. எல்லாரும் பிக்நிக் வந்திருக்கீங்க போல?” என்றபடி அவர்கள் முன் ஆஜர் ஆனான் ராஜ்.
“ஹெலோ மிஸ்டர் ராஜ்” என்று உற்சாகமாக கைகுலுக்கிய துருவன், “நீங்க என்ன இங்க?” என்று வினவ,
“உங்கள போல தான் சுத்தி பார்க்க வந்திருக்கேன்..” என்று கூறி அகாவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு “சோலோவா” என்றான்.
“ஓ.. தென் உங்களுக்கு ஓகேனா எங்க கூட ஜாயின் பண்ணிக்கோங்க” என்று விஷ்வேஷ் கூற,
“கண்டிப்பா” என்று ஏற்றுக்கொண்டான்.
எழுவராக தொடர்ந்த பயணத்தில் பேசி சிரித்தபடி அவர்களுடன் எட்டாம் நபராக ஜேன்ஸியும் வலம் வந்தது. அங்கு பறவைகள் படம் போட்ட சிறிய வீடு போன்ற தோட்டம் இருப்பதைக் கண்ட அகநகை, “அதென்ன தோட்டம் போல இருக்கு?” என்று வினவ,
“கிட்டத்தட்ட தோட்டம் தான். பறவைகள் கொஞ்சம் வளர்க்குறாங்க அங்க. அழிஞ்சுபோன சில பறவை இனங்களோட புகைப்படங்களும் அங்க இருக்கும்” என்று ராஜ் கூறினான்.
அதில் புருவங்கள் மேலேற அவனைப் பார்த்தவள் “நீங்க இங்க ஏற்கனவே வந்திருக்கீங்களா?” என்று வினவ,
“அடிக்கடி வருவேன்.. எனக்கு ரொம்ப பிடிச்ச இடம்” என்று கூறினான்.
“ம்ம்.. அங்க போய் பார்க்கலாமா?” என்று அவள் வினவா,
“தாராளமா” என்றான்.
யாவரும் அங்கு சென்று பார்க்க தோழர்கள் நால்வரின் கண்களும் வானுக்கும் பூமிக்கும் விரிந்தன.
ஆற்று ஆள்காட்டி (Vanellus duvaucelii), சில கழுகு இணங்கள், இளஞ்சிகப்பு தலை வாத்து, நிறைய வல்லூறு உயிரனங்கள் என அங்கு அழிந்துபோன பறவை இனங்களின் பட்டியலில் இருந்தன.
மேலும் அழிந்து போன விலங்கின் பட்டியலில் கருப்பு காண்டாமிருகம், சில இனத்தைச் சேர்ந்த கருஞ்சிறுத்தை, வெள்ளை யானை ஆகியன முற்றிலுமாக அழிந்துவிட்டதைக் கண்டு மனம் நொந்தே போய்விட்டனர்.
“இதெல்லாம் அழிந்து போய் சில வருடங்கள் தான் ஆகுது” என்று சற்றே வருத்தத்தோடு அகர்ணன் கூற, அவனைத் திரும்பிப் பார்த்த அகநகை பார்வையிலும் முற்றும் முழுதும் வருத்தம் அப்பிக் கிடந்தது.
“இதெல்லாம் நெஜமாவே அழிஞ்சு போச்சா?” என்று அவள் வினவ,
“ஆமாமா.. ஆனா இந்த உயிரனங்களோட டி.என்.ஏ கூறுகள வச்சு மீண்டும் உருவாக்குற முயற்சி பல ஆராய்ச்சி நிறுவனங்கள்ல நடந்துட்டுதான் இருக்கு” என்று ராஜ் கூறினான்.
“எப்படி அந்த கன்னுகுட்டிய உருவாக்குற மாதிரியா?” என்று விஷ்வேஷ் சலிப்போடு வினவ,
“புள்ளகுட்டியே உருவாக்குறாங்க நீ கன்னுகுட்டிய சொல்றியேடா” என்று ஜான் கூறினாள்.
அதற்குமேல் அங்கு நிற்க பிடிக்காது அகா வெளியே பூங்காவுக்கு வந்திட, வலைகளுக்குள் அடைபட்ட அந்த பூங்காவில் அவளை வியக்க வைக்கும்படி அத்தனை பறவைகள் இருந்தன.
அதை கண்கள் விரிய கண்டவள் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்ப, “சில பறவைகள இங்க பாதுகாத்து வைச்சிருக்காங்க” என்று ராஜ் கூறினான்.
“பறவைகளுக்கு ஆண்டவன் ரெக்கைய குடுத்ததே சுதந்திரமா பறக்கத்தான்.. அதை இப்படி அடைச்சு வைத்து பாதுகாக்கும் நிலைமை” என்று கூறி கோணல் புன்னகை ஒன்றை அவள் சிந்த,
“உண்மை தான்.. ஆனா விட்டா இதுவும் இல்லாம போயிடுமே” என்றான்.
அதற்கு ஒரு பெருமூச்சை மட்டுமே பதிலாகக் கொடுத்தவள் நடக்க, தானும் அவளுடன் நடந்தவன், “அகா..” என்றழைத்தான்.
அவன் குரலில் இத்தனை நேரம் இல்லாத கனிவு இருப்பதைப் போன்று உணர்ந்த அகா நிமிர்ந்து அவன் கண்களை நோக்க, அதில் பளிச்சென்ற ஒரு பொழிவு.
“சொ..சொல்லுங்க ராஜ்..” என்று அவள் தடுமாற,
“உன்கிட்ட ரொம்ப நாளாவே ஒரு விஷயம் சொல்ல முயற்சி பண்றேன்” என்று அவனும் தடுமாறினான்.
அதில் மேலும் உள்ளுக்குள் அதிர்ந்தவள் முகம் வியர்க்கத் துவங்கிட, ‘ஆத்தீ.. பீதிய கிழப்புறானே’ என்ற எண்ணத்தோடு, “சொல்லுங்க” என்றாள்.
அப்போதே அகாவைத் தேடிக்கொண்டு அகர்ணன் அங்கு வர, “நான்.. நான் உன்னை விரும்புறேன்னு நினைக்குறேன் அகா. என்னமோ நீ எனக்கு.. ம்ம்.. உன்னை பார்க்கும்போது ஒரு வித்தியாசமான உணர்வு வருது. அது எனக்கு பிடிச்சிருக்கு. ஐ திங் ஐம் இன் லவ் வித் யூ” என்று கூறினான்.
‘அன்றும் இன்றும் என்றும் காதலுக்கு மட்டும் விளக்கமே இல்லை போல! என்றுமே காதல் புரியாத உணர்வு தானோ!?’ என்ற எண்ணத்தோடு என்ன கூறுவதென்று புரியாது அவள் தவிக்க, வந்த சுவடு தெரியாதபடி அகர்ணன் மீண்டும் உள்ளே சென்றான்.
ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டவள், ஏதோ கூறுவர, “அவசரமில்லைம்மா. நல்லா யோசிச்சே முடிவெடு” என்றான்.
“சாரி ராஜ்.. இதுல முடிவெடுக்க எதுமே இல்லை. என் மனச ஏற்கனவே வேற ஒருத்தருக்கு கொடுத்துட்டு தவிச்சுக்கிட்டு இருக்கேன். எ..என்னால உங்க காதலை ஏற்பதில்லை, யோசிக்கக் கூட முடியாது” என்று வருத்தத்தோடு கூறினாள்.
‘கொஞ்சம் சுமாரா இருக்கோம்னு அம்புட்டு பக்கியும் நம்மளை ஜானுக்கு லெட்டர் போஸ்ட் பண்ணவே தூது அனுப்பினானுங்க.. இங்க என்னடானா நம்மலை லவ் பண்ணிட்டு ஒருத்தன் நிக்குறான்.. ரிஜெக்ட் பண்றதுல இவ்வளவு சங்கடம் இருக்குமா?’ என்று நொந்துக் கொண்டவள்,
“சாரி ராஜ்.. நான் வேற ஒருத்தர விரும்புறேன்” என்று கூற, அவனுக்கு அது பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
அவனை வருத்தத்தோடு பார்த்தவளுக்கு அந்த சூழல் பெரும் தர்மசங்கடமான உணர்வைக் கொடுத்தது.
“இ..இட்ஸ் ஓகே அக..அகநகை. எனக்கு நீங்க வேற ஒருத்தர விரும்புறது தெரியாது. ஏதோ என் மனசுக்கு பிடிச்சதேனு தான் சொன்னேன். இட்ஸ் ஓகே” என்றவன் பேச்சில் ஒருமை மீண்டும் பன்மைக்கு மாறியதை உணர்ந்தவளுக்கு மனதில் ஒரு நிம்மதி உணர்வு.
“என்னை புரிஞ்சுகிட்டதுக்கு ரொம்ப நன்றி” என்றவள் நகர எத்தனிக்க,
“உங்களுக்கு ஆட்சேபணை இல்லைனா அது யாருனு தெரிஞ்சுக்கலாமா?” என்று ராஜ் வினவினான்.
“அவருக்கே என் காதலை இன்னும் சொல்லலை மிஸ்டர்.ராஜ்” என்று தானும் மரியாதைக் கொடுத்துப் பேசியவள், “ஆனால் உங்களுக்கு ரொம்பவே தெரிந்த ஒருத்தர் தான்” என்றுவிட்டுச் சென்றாள்.

