Loading


அத்தியாயம்-11

 

ஜான்விகா, ஆத்விகா (ஜான் அம்மா), அகா, துரு, இளா, அன்புக்கரசி (அகா அம்மா), ஆதவன், வித்யா (துருவனின் தாய் தந்தை) ஆகியோர் அந்த மருத்துவமனையில் கூடியிருக்க, அங்கே விரைந்து வந்தனர் விஷ், ப்ரியா மற்றும் அகர்ணன்.

 

“ஏ ஜான் என்னாச்சு?” என்று தவிப்பும் கலக்கமுமாக நின்றிருந்த தோழியிடம் வந்தவன் வினவ, 

 

“அ..அப்பாடா” என்றபடி அவனை அணைத்துக் கொண்டு அழுதாள். 

 

“ஏ என்னாச்சுமா?” என்றவன் துருவனைப் பார்க்க, 

 

“நெஞ்சு வலினு சொன்னவர் திடீர்னு மயங்கி விழுந்துட்டாருடா” என்றான்.

 

தனது மாணவ அடையாள அட்டைக் கொண்டு உள்ளே சென்ற‌ இளா மருத்துவருடன் பேசிவிட்டு வர, யாவரும் பரபரப்போடு அவளை சூந்துக்கொண்டனர். 

 

“ஹார்ட் பிராப்ளம் தான். குவான்டம் மெட் பெட் டிரீட்மென்டுக்கு ஒத்து வருதானு பார்க்கணும் இல்லைனா த்ரீடி ப்ரின்டிங் சர்ஜெரினு சொல்றாங்க” என்று புரியாத பாஷையில் பேசியவளைத் தோழர்கள் ‘பே’ எனப் பார்க்க, 

 

ஜகன் வேறொரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

 

கண்ணாடி வழியே நடப்பதை நால்வரும் வேடிக்கைப் பார்க்க, ஒரு படுக்கையில் ஜகன் படுக்க வைக்கப்பட்டார். 

 

அவர் படுத்ததும் சுற்றிலும் கண்ணாடி அவரை சூழ்ந்து அடைத்துக் கொள்ள, அவரது உடல் உள்ளுருப்புகளின் படங்கள் அங்கே ஓர் திரையில் தெரிந்தது.

 

“என்னடா எங்கப்பாவ உயிரோட சமாதிக்குள்ள அடச்சு படம் பிடிக்குறாங்க” என்று பீதியுடன் ஜான் வினவ, 

 

மற்ற மூவரும் அதே குழப்பத்துடன் தான் பார்த்துக் கொண்டிருந்தனர். 

 

சட்டென ஏதோ நினைவு பெற்றதைப் போல் “ஆங்..” என்று அகா கூற, 

 

“என்ன உனக்கு தெரியுமா?” என்று விஷ் வினவினான்.

 

“இல்ல.. என் தங்கச்சி மெடிக் தானே படிக்குறா. அவள கேட்போம்” என்று அகா கூறி கண் சிமிட்ட, 

 

“த்தூ” என்ற விஷ், இளாவிடம் சென்றான். 

 

மற்ற மூவரும் அவனைத் தொடர, “இளா..” என்று ஜான் அழைக்க, 

 

“ஒன்னும் பயப்படாதீங்க.. அப்பாக்கு ஒன்னும் இல்லை” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டாள்.

 

“இல்லடா.. அ..அது என்ன? அப்பாக்கு என்ன பண்றாங்க?” என்று அவள் வினவ, 

 

“அது வெறும் க்வான்டம் மெட் பெட் தான்” என்று இதை ஏன் கேட்கிறாள் என்ற தோரணையில் அவள் கூறினாள்.

 

“அ..அது தெரியுது இளா. அதுக்குள்ள ஏன் ஜகனப்பாவ வச்சி.. கொஞ்சம் புரியுற போல சொல்லேன்” என்று அகா வினவ, 

 

அவளது மருத்துவ ஆர்வம் தூண்டப்பட்டு “ஓ.. அது க்வான்டம் மெட் பெட். அதுக்குள்ள ஒரு மனிதன படுக்க வச்சதும் முழுசா மூடிடும். முழு உடல ஸ்கேன் செய்த உள்ளுருப்புகளோட படத்தை ஸ்கிரீன்ல காட்டும் அது மூலமா என்ன பிரச்சினைனு பார்த்து ரேஸ் (கதிர்கள்) மூலமாகவே சரிசெய்ய முடியுமா பார்ப்பாங்க. அதனால சரிசெய்ய முடியாதுனா த்ரீ டி பிரின்டிங் சர்ஜெரி தான்” என்றாள்.

 

‘அப்படினா என்ன?’ என்று துருவன் கேட்க வருவதற்குள் “ஓகே இளா” என்று தடுத்த ஜான் உள்ளே மருத்துவர்கள் அறையில் கட்டண விவரங்களைப் பார்த்துவிட்டு வந்த ஜேன்ஸியைக் கண் காட்டினாள். 

 

‘இனி ஜேன்ஸியிடம் கேட்டுக்கொள்லலாம்’ என்பது அவள் கண்ணசைவில் புரிய, நால்வரும் ஜேவிடம் சென்றனர்.

 

“ஜே.. அப்பாக்கு நெஞ்சுவலினு கூட்டிட்டு வந்தா இங்க எதோ க்வான்டம் ரோபோட்டுனுங்குறானுங்க த்ரீடி பிரிடிங்குறானுங்க..‌எனக்கே நெஞ்சு வலி வந்துடும்போல இருக்கு ஜே” என்று ஜான் கூற, 

 

“அது ஒன்னுமில்லை மேம்.. க்வான்டம் மெட் பெட் குள்ள பேஷன்ட படுக்க வைத்து சோதனை பண்ணினா அவங்க பிரச்சினைய கண்டுபிடிச்சு அதுவே குணப்படுத்தவும் செய்யும். இல்ல அதனால முடியாதுனா.. அதாவது இதய குழாய்கள்ல எதும் பிரச்சினைனா ஒரு த்ரீடி மாடல் இரத்த குழாய உருவாக்கி உள்ள வச்சுடுவாங்க” என்று கூறியது.

 

“என்னடா பொம்மைய உள்ள வச்சு தைக்குற போல சொல்லுது..” என்று ஜான் கூற, 

 

“ஜான்.. இது நம்ம காலத்துலயே ஏஐ (AI) பிரபலமான சமயம் பேசப்பட்ட ஒரு தியரி தான். இப்ப நிஜத்துல நடக்குது” என்று அகா கூறினாள். 

 

‘உனக்கு இம்புட்டு மூளையா?’ என்ற ரீதியில் தோழர்கள் பார்த்து வைக்க, “ரொம்ப நோக்காதீங்க.. இளா சொல்லி கேட்டிருக்கேன்” என்று முகத்தை எங்கோ திருப்பிக் கொண்டபடி கூறினாள்.

 

வெளியே வந்த மருத்துவக்குழு பெரிய பிரச்சினை இல்லை என்றும் ‘மைனர் அடேக்’ தான் என்றும் கூறிவிட, அப்போதே யாவருக்கும் பெருமூச்சு வந்தது. 

 

இருந்தாலும் சில நிமிடங்கள் மருத்துவமனையிலேயே வைத்து பார்த்துவிட்டுதான் அனுப்புவோம் என்று கூறிய மருத்துவர் தங்கள் அறைக்கு ஜான்விகாவை அழைத்து அவளது வங்கி கணக்கை கிழி கிழியென கிழித்து தொங்கப்போடும்படி ‘பில்’ போட்டு அனுப்பிவைத்தனர்.

 

“ஒன்னுமே இல்லை ஒன்னுமே இல்லைனு சொல்லிட்டு எதுக்குடா பன்னிரெண்டு லச்சத்துக்கு பில்ல போட்டுக் கொடுக்குறாரு” என்று மூக்கை சிந்தியபடி சென்றவள் யார் மீதோ மோதிக் கொள்ள, அந்த பெண்மணி பதற்றத்தோடு “சாரி” என்றுவிட்டு ஓடினாள். 

 

பாவை மன்னிப்புக் கேட்பதற்குள் அங்கு வந்த மருத்துவரிடம் சென்ற பெண்,

 

“டாக்டர் தலை வலிக்குது.. எனக்கு என்னாச்சுனு செக் பண்ணுங்க” என்கவும் 

 

“ஏதே.. தலைவலிக்கு ஆஸ்பத்ரியா?” என்று அதிர்ந்தனர். 

 

அதே ‘ஒன்னுமே இல்லை’ என்ற வார்த்தையுடன் சிகிச்சை முடித்து ஒரு லச்சத்திற்கு அவளுக்கு பணச்சீட்டை பல்லிளிக்கச் செய்த மருத்துவர் செல்ல திருப்தியோடு பணம் கட்டிச் சென்ற பெண்ணை ஏழாவது கிரகத்து எட்டாவது அதிசயமாகப் பார்த்தனர்.

 

மீண்டும் வீடு திரும்புவதற்கு ஆயத்தமானப் பிறகு தன் தந்தையை ஏற்றிக் கொண்ட ஜான் தாயுடன் சென்றிட, மற்ற மூவரும் பெருமூச்சு விட்டுக் கொண்டனர். அதன் பிறகே அத்தனை நேரம் அகர்ணன் மற்றும் அமிர்தப்ரியா அங்கு இருப்பதையே கிரகித்தனர்.

 

“உஃப்.. சாரிப்பா.. இருந்த டென்ஷன்ல உங்கள மறந்துட்டோம்” என்று துருவன் கூற, 

 

“இருக்கட்டும் சார்” என்று அமிர்தா கூறினாள். 

 

“சரிம்மா.. பார்த்து போங்க” என்று துருவன் கூறிவிட்டு விஷ்வேஷை நோக்க, அவன் கண்களாலேயே அவளிடம் விடைபெற்றுக் கொண்டிருந்தான்.

 

அதைக் கண்டவன் தன் குரலை செருமிவிட்டு “போலாமா?” என்க, நண்பனைப் பார்த்து சிரித்துக் கொண்டவன் தலையசைத்தான். 

 

மூவரும் சேர்ந்து வெளியேற தன்னையே ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டிருந்த அகர்ணனைத் திரும்பிப் பார்த்தாள், அகநகை. 

 

அவன் பார்வையை அப்போதும் விலக்காது அவளையே தான் பார்த்தான். அதில் சட்டெனத் திரும்பிக் கொண்டவள் ஒரு பெருமூச்சு விட்டு தன்னை சமன் செய்துக் கொள்ள, 

 

“என்னடா கண்கள் இரண்டால் எல்லாம் பலமா இருக்கு? ஓகே எதும் சொல்லிட்டியா என்ன?” என்று துருவன் கேட்டான்.

 

‘இல்லை’ என்ற பதிலை எதிர்பார்த்து கேட்டவனுக்கு “ஆமாடா” என்று கூறி அதிர வைத்தான் விஷ்வேஷ். 

 

“அடேய்.. இதெப்படா?” என்று துருவன் அதிர்ந்து வினவ, 

 

“இங்க வரும் முன்னதான்டா” என்று சுண்டு விரல் நகத்தை கடித்தபடி வெட்கப்பட்டு கூறினான். 

 

அதில் “டேய் டேய்.. வேணாம்டா..” என்றவன் அகநகையை நோக்க, அவள் இன்னும் சிந்தனை வயப்பட்டவளாகவே இருந்தாள்.

 

“அகா..” என்று ஆடவன் அவள் தோள் பற்றி உலுக்க, திடுக்கிட்டு நினைவு வந்தவள் கண்டு தோழர்கள் இருவரும் புரியாமல் நின்றனர். இருவரும் என்ன பேசினர் என்றே புரியாது தன்னை நிகழ்வுக்கு கொண்டு வந்ததன் திடுக்கிடலிலிருந்து திரும்பியப் பெண் திருதிருவென விழிக்க, 

 

“பைத்தியமே.. என்ன திருவிழால காணாம போனவ மாதிரி முழிக்குற?” என்று விஷ் வினவினான்.

 

‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையசைத்தவள் ஜேன்ஸியைத் தேட, அவளிடம் வந்து நின்றது. 

 

“வண்டி எடுத்துட்டுவா” என்றவள் அமைதியாக நின்றுவிட தோழர்கள் அவளை புரியாத பார்வைப் பார்த்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

வண்டி வந்ததும் மூவரும் ஏறி அமர, சற்றே கூட்டம் அதிகமாக இருந்ததால் வேறு பதையில் ஜே பயணித்தது. சாலையையே பார்த்தபடி வந்துக்கொண்டிருந்த அகா அந்த வித்தியாசமான ஒற்றுமையைப் கண்டு, 

 

“ஏ ஜே! என்ன இது இத்தனை ஜிம் இருக்கு. அதுவும் இவ்ளோ பெரிய பெரிய இன்பிராஸ்டக்சர்ஸோட.. பார்கிங்ல இவ்ளோ வண்டிகள் வேற இருக்கு” என்று ஒவ்வொரு உடற்பயிற்சி கூடத்தின் வாகன நிறுத்தத்திலும் அதிக வாகனங்கள் இருப்பதைக் கண்டு வினவினாள்.

 

“இதென்ன கேள்வி அகா.. விஞ்ஞானம் அதிகரிச்சிடுச்சு, சோம்பேறித்தனம் அதிகமாகிடுச்சு.. அதனால உடல் நலம் குறைஞ்சு போச்சு. அதை சரிகட்டுவதற்காகத்தான் இருக்கும். வயிற்றை நிறைக்க ஓடின காலம் போய் வயிற்றை குறைக்க ஓடுறது நம்ம காலத்துலயே வந்துடுச்சே” என்று விஷ்வேஷ் கூற, 

 

“ரொம்ப சரியா சொன்னீங்க சார்” என்று ஜேன்ஸி கூறியது.

 

“வேலைப் பளுவையும் நேரத்தையும் குறைக்க நிறைய இயந்திரங்கள் வந்துடுச்சு மேம். குனிந்து நிமிர்ந்து செய்யுறதுக்கு இங்க ஒரு வேலையும் இல்லை. இப்படியே போன எடை போடும் என்பதைவிட, நோய்களுக்கு சோம்பல் ஒரு சிறந்த இருப்பிடம் என்பது மக்கள் மனசுல பெரிய ஐயத்தை விதைச்சிருக்கு. அந்த பயம் இதுபோன்ற உடற்பயிற்சி கூடம் அமைப்பவர்களோட லாபம். அதை சரியா பயன்படுத்தி இப்படியான பல நிறுவனங்கள் நீ நான் என்ற போட்டியில் ஓடிக்கிட்டு இருக்கு” என்று ஜேன்ஸி கூற, 

 

“உயிர் பயம்.. இன்னிக்கு தாராளமா ஒரு லட்சம் கட்டிட்டு வெறும் தலைவலிக்கு அந்த பொண்ணு திருப்தியோட மருத்துவம் பார்த்துட்டு போனதிலேயே உயிர் பயம் மக்கள் மனசுல எவ்வளவு ஆழமா பதிஞ்சிருக்குனு புரிஞ்சது” என்று துருவன் கூறினான்.

 

அனைவரிடமும் பெருமூச்சு மட்டுமே பிரதானமாக, அவரவர் வீடு வரவும் இறங்கிக் கொண்டனர். தன்னறைக்குள் வந்து அடைக்கலம் புகுந்துக் கொண்ட அகநகை தனது பால்கனியில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்துக் கொண்டாள். 

 

சில நிமிடங்கள்‌ இருளை வெறித்துக் கொண்டிருந்தவள் கண்களில் நீர் வடியத் துவங்கியது.

 

அந்த அமைதியான கண்ணீர் கேவலுக்கு வழிவகை செய்ய, சில நிமிடங்களில் விக்கி விக்கி அழத்துவங்கிட்டாள். 

 

‘ஏன் அழுகை?’ ‘எதற்கு அழுகை?’ என்று காரணமே புரியாது வந்த அந்த அழுகைக்கு உண்மையில் மொத்த காரணமானவனின் அழைப்போடு அருகிலிருந்த மேஜையில் இருக்கும் அலைபேசி சிணுங்கியது.

 

சிலநேரங்களுக்குப் பின்பே அதை உணர்ந்தவள் முன் உருவான திரையில் சிரித்தபடி நிற்கும் அவன் நிழற்படம் மின்னியது. அழைப்பை ஏற்றுவிடேன் என்று அந்த பக்கம் அவன் வேண்டிக்கொண்டிருந்த வேண்டுதலுக்கு இணங்க, திரையில் தெரிந்தவன் முகத்தை தொடுவதாக நினைத்துக் கொண்டு அழைப்பை ஏற்றுத் தொலைத்தாள்.

 

“ஹலோ அவி” என்றவன் குரலில் பதறிப் போனவளுக்கு பேச்சு வராமல் நா சுழன்றது. 

 

“அவி..” என்று மீண்டும் மீண்டும் மூன்று முறை அவன் அழைத்த பின்பே சமன் பெற்றவள் “ம்.. ம்ம் சொல்லுங்க அகர்.. அகர்ணன்” என்றாள்.

 

“என்ன குரல் ஒருமாதிரி இருக்கு?” என்றவன் கேள்வியில் நின்ற கண்ணீர் மீண்டும் பிறப்பெடுத்து அருவியாய் வடிந்தது. 

 

“இ.. இல்ல தூக்க கலக்கத்துல” என்று அவள் சமாளிப்பது அவனுக்கு கண்ணாடியாய் விளங்க, “ம்ம்..” என்றதோடு அமைதியானவன் ஏதும் பேசவில்லை. ஏனோ அவளாக பேசட்டும் என அமைதி காத்தான்.

 

“அ..அகர்” என்று அவள் அழைக்க, 

 

“சொல்லுமா” என்றான். 

 

“எ..என்னை எந்த அளவு நீங்க நம்புவீங்க?” என்று தட்டுத்தடுமாறி அவள் வினவ, 

 

“ஏன் திடீர்னு இப்படியொரு கேள்வி?” என்றான். 

 

“தோனுச்சு” என ஒற்றை வார்த்தையில் அவள் பதிலுறைக்க, 

 

“தெரியலைமா.. ஆனா உன்னை எப்பவும் நம்புவேன்..” என்று அவன் கூறினான்.

 

அதில் சிரித்துக் கொண்டாள்.. ஆனால் கண்ணீர் வந்தது! ‘இதென்ன நிலைமை? புரியாத புதிர் போல’ என்று எண்ணியவள் “வச்சிடவா?” என்று வினவ, 

 

“உன் இஷ்டம்” என்றான். 

 

ஏனோ வைக்க மனமில்லையே அவளுக்கு! இப்படி கேட்டு அவன் ‘வை’ என்று கூறினாலாவது வைப்போமா என்ற எண்ணத்தில் அவள் கேட்டதையும் முறியடித்து விட்டானே!

 

இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை ஆனால் மௌனமாய் ஒருமணி நேரம் இணைப்பில் இருந்தனர். ஒரு பெருமூச்சு விட்டவனது சூடான மூச்சுக்காற்று அவளை தழுவுவதுப்போல இதமான தென்றல் அவளைத் தழுவியது. 

 

“போய் படும்மா.. காலைல பேசலாம்” என்று அவன் கூற, 

 

“ம்ம்” என்றாள்.

 

அழைப்பு அணைக்கப்பட்டது, அவள் மனம் திறக்கப்பட்டது!

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்