
அத்தியாயம்-09
நால்வரும் அந்த பெரிய கட்டிடத்தைக் கண்டு ‘பே’ என விழித்துக் கொண்டிருக்க,
“ஏ ஜேன்ஸி.. என்னதிது?” என்று கிட்டதட்ட அலறும் குரலில் அகநகை வினவினாள்.
“இது பேபி பேக்டரி மேம்” என்று அது கூற,
“இதென்னடா பாஸ் பேபி படத்துக்கு வந்த சோதனை” என்று நால்வரும் ஒன்றுபோல கூறினர்.
“எ..என்ன ஜே இதெல்லாம்?” என்று விஷ் வினவ,
“வாங்க சார் உள்ள போகலாம். அவங்களே எக்ஸ்பிலைன் பண்ணுவாங்க” என்று ஜே அழைத்தது.
“இது எதும் விவகாரமா இருந்திடாதே?” என்று துருவன் சங்கோஜமாய் வினவ,
“எனக்கும் அதான்டா பக்கு பக்குனு வருது” என்று விஷ் கூறினான்.
முந்தைய தொழிற்சாலை போல் இங்கேயும் அனைத்து சோதனைகளும் முடிந்து உள்ளே சென்றவர்களுக்கு அந்த நிறுவனத்தார் அனைத்தையும் விளக்கினார்.
“பல வருடங்களுக்கு முன்ன இருந்த டெஸ்டியூப் பேபி சிஸ்டம் நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க. இப்ப நம்ம மாட்டு உற்பத்திக்கு தான் அது பயன்படுது. டெஸ்டியூப் பேபி, அப்றம் முன்ன ரொம்ப பழைய முறையான வாடகைத்தாய் முறைலாம் இப்ப இல்லாம போயே பத்து வருடம் மேல ஆகுது. இப்போ இந்த பேபி ப்ரோடியூஸிங் மெதேர்ட்கு எல்லாரும் மாறிட்டாங்க. அதாவது ஆணோட விந்தணுவையும் பெண்ணோட கருமுட்டையையும் வைத்து ஒரு கருவை உருவாக்கி, இதோ பனிக்குடம் போல செயற்கையா நாங்க உருவாக்கின இந்த பேக் குள்ள ஆம்னியாடிக் ப்லூயிட் (பனிக்குட நீர்) நிரப்பி கருவையும் உள்ள வச்சுடுவோம்” என்று அங்கிருந்த கருப்பை அமைப்பைக் கொண்ட கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் பெட்டியைக் காட்டிக் கூறினார்.
“இந்த செய்முறைக்கான பயன்கள் நிறையா இருக்கு. வலியோடு ஒரு குழந்தைய பெத்து எடுக்கணும்னு அவசியம் கிடையாது. குழந்தை பிறந்த பிறகு தங்களோட உடலமைப்பு மாற்றம் ஏற்படும்னு நினைக்கும் பெரிய பெரிய மாடல்ஸ்கு இது ஒரு நல்ல முறையா இருக்கு. இதுல குழந்தை எந்த சைஸ்ல இருக்கனும்ங்குறதுல இருந்து குழந்தையோட நிறம், குழந்தை கண் மற்றும் முடியோட நிறம், ஜாடைனு அவங்க எந்த மாதிரி குழந்தை எதிர்ப்பார்க்குறாங்களோ அதே போல நாங்க உருவாக்கிக் கொடுப்போம்
குழந்தை இந்த செயற்கை கருவறைல பத்து மாதம் இருக்கும். பத்தாம் மாதம் முடிஞ்சதும் அவங்க கேக்குற நேரத்துல வெளிய எடுத்து கொடுப்போம். குழந்தையோட அசைவுகள அவங்க உணர நினைச்சா அதுக்கும் அவங்க வீட்டுலயே சில செயல்பாடுகளை செய்து கொடுப்போம். அதுல உள்ள ஒரு பெல்டை அவங்க அணியிறது மூலமா குழந்தையோட அசைவை உணரலாம்” என்று நீண்ட விளக்கத்தைக் கொடுத்தார் அந்த நிறுவனத்தார்.
கேட்ட நால்வர் முகத்திலும் அத்தனை அதிருப்தி. காதலாக கூடிக் கழிக்கும் பொழுதுகள் தங்கள் சந்ததியை எதிர்நோக்கியது தானே!?
தானே பத்து மாதம் சுமந்தும், வலிகள் பல அனுபவித்தும் குழந்தையை ஈன்றெடுப்பதை ஆர்வத்தோடு எதிர்நோக்கும் உணர்வுகள் மொத்தமும் துண்டிக்கப்பட்டு, இங்கு பெட்டிக்குள் அல்லவா பிறக்கின்றது! விஞ்ஞானத்தின் வளர்ச்சி உணர்வுகளின் வீழ்ச்சியா? என்ற எண்ணம் நால்வர் மூளையிலும் ஓடியது.
“எல்லாருமே இப்படித்தான் பேபி பெத்துக்குறாங்களா?” என்று அகநகை சற்றே அசௌகரியத்தோடு வினவ,
ஒரு பெருமூச்சை விட்ட அந்த நிறுவனத்தார் “இல்ல மேம். குழந்தை பெத்துக்க முடியாதவங்க மட்டும் தான் இந்த முறையில் பெத்துப்பாங்க. இப்ப உள்ள லைஃப் ஸ்டைல்ல குழந்தையின்மைங்குறது ஒரு சாதாரண விஷயமா போனதால இந்த முறையும் பரவலா எல்லாராலும் பயன்படுத்தப்பட்டாலும் மத்த எல்லாரும் நார்மலா அவங்களே தான் பெத்தெடுப்பாங்க.
வெளிநாடுகளிலுமே வெகு சில பகுதிகள்ல தான் குழந்தை பெத்துக்க முடிஞ்சவங்களும் அத்தனை வலியை அனுபவிக்க பயந்து இந்த முறையை கையாளுறாங்க. மத்தவங்கல்லாம் தானே சுமக்கணும், தானே உணரணும், தானே அனுபவிக்கணும்னு இன்னமும் ஓல்ட் தாட்ஸோட தான் இருக்காங்க” என்று அதிருப்தியோடு கூறிய அந்த மனிதரைக் சற்றே கோபத்தோடு பார்த்த ஜான்,
“உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?” என்றாள்.
“நோ (இல்லை)” என்று அவர் கூற,
“கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க உங்களுக்கு கல்யாணம் ஆனா இந்த முறைல தான் குழந்தை பெத்துப்பீங்களா?” என்று அவள் வினவினாள்.
“கண்டிப்பா. அவ்வளவு வலியை என் மனைவி அனுபவிக்கணும்னு என்ன அவசியம்?” என்று அவன் கூற,
“உங்க மனைவி வலி அனுபவிக்கக் கூடாதுனு நீங்க நினைக்குறத பாராட்டுறேன். ஆனா விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்தாலும் சில விஷயம் இயற்கையா நடந்தா தான் அதுக்கு அழகு” என்று பட்டென கூறியவளை அவர் முகம் சுளித்துப் பார்க்க, தோழர்கள் அதிர்வோடு பார்த்தனர்.
“சாரி சார். அவ ஏதோ தெரியாம பேசிட்டா நாங்க வரோம்” என்று துருவன் கூற,
“தெரியாமயெல்லாம் இல்லை. தெரிஞ்சே தான் சொல்றேன். பெட்டிக்குள்ள இருந்து எடுக்க அது பொம்மையில்லை. உயிருள்ள குழந்தை. உயிரும் உணர்வும் கலந்து பிறக்கும் குழந்தைக்கும் விஞ்ஞானமும் கருவிகளும் கலந்து பிறக்கும் குழந்தைக்கும் வித்தியாசம் இல்லையா?” என்று மல்லுக்கு நின்றாள்.
“எக்ஸ்கியூஸ்மி.. இந்த முறை வந்து வெற்றிகரமா செயல்பட்டே பல வருடங்கள் ஆகிடுச்சு. இப்ப வந்து என்கிட்ட கத்துறீங்க?” என்று அவரும் ஆவேசமாகப் பேச,
‘அய்யோ இறைவா உருப்படியா வீடு போய் சேரணுமே’ என்றபடி ஜானின் வாயை அடைத்து எப்படியோ வெளியே இழுத்து வந்தனர்.
“லூசு.. தொழில் பண்றவன்கிட்டயே போய் உன் சரக்கு சரியில்லனு மல்லுக்கு நிக்குறியே” என்று விஷ் திட்ட,
“அவன் பேசுனத கேட்டியா? அவ்ளோ இர்ரிடேடிங்கா இருக்கு” என்று கூறினாள்.
“லிஸன் ஜான்.. அவரோட செயல்முறைய முற்றும் முழுதும் தப்புனு நம்மால சொல்ல முடியாது. ஒரு பெண் அவ்வளவு வலியை அனுபவிக்க வேண்டாம்னு யோசிச்சு வந்த முறையா இருக்கு இது. குழந்தை இல்லைனு சொல்றவங்க இந்த முறைல குழந்தை பெத்துக்குறதுல தப்பில்லைனு தான் எனக்குமே தோன்றுது” என்று துரு கூற,
“இதை நானும் தப்புனு சொல்லலை. ஆனா நம்ம எமோஷன்ஸ ஓல்ட் தாட்ஸ்னு அவன் சொல்றது எனக்கு பிடிக்கலை” என்றாள்.
“எனக்கும் அதுதான் கோபம் ஜான். கணவன் மனைவினு ரெண்டு பேரும் உணர்வுபூர்வமா கட்டுப்படும் ஒரு விஷயத்தை இப்படி கருவி செய்து கொடுப்பதில் எனக்கு சுத்தமா உடன்பாடே இல்லை” என்று அகா கூற,
“உண்மை தான் அகா. இதை நம்ம யாருமே ஏத்துக்கமாட்டோம். ஏன் இந்த ஜெனரேஷன்ல இருக்குறவங்களாலயே ஏத்துக்க முடியலைனா என்ன அர்த்தம்? விஞ்ஞானத்தால மனிதர்களோட உணர்வுகளை இன்னும் அழிக்க முடியலைனு அர்த்தம்” என்று விஷ் கூறினான்.
நால்வரிடமும் பெருமூச்சே வெளியானது.
“கடைசில பிள்ள குட்டி கூட சந்தைல ரெண்டு பத்துருவா ரேஞ்சுக்கு வந்துருச்சேடா” என்று ஜான் கூற,
“ஏன் ஜே.. இந்த ஆர்பனேஜ்லாம் இருக்கா?” என்று துரு வினவினான்.
“எஸ் சார் இருக்கு” என்று ஜே கூற,
“அங்கருந்து யாரும் பேபி அடேப்ட் பண்ணிக்க மாட்டாங்களா?” என்று அகா வினவ,
“இல்ல மேம். பேபி இல்லைனாலும் இந்த பேபி ஃபார்மிங் முறைல பெத்துக்கலாம் என்பதால யாரும் குழந்தைகள் அடேப்ட் பண்றது இல்லை. இதனால அரசாங்கத்துக்கு மதாமாதம் தனிமனிதன் சம்பளத்துலருந்து ‘ஆர்பனேஜ் டேக்ஸ்’ அப்படினு ஒரு பங்கு கட்டுவாங்க. அது மூலமா ஆர்பனேஜ் ரன் பண்ண பணம் ஒதுக்கிக் கொடுப்பாங்க. ஆனா தத்து எடுக்கவே கூடாதுனு இல்லை. விருப்பம் உள்ளவங்க தத்தெடுக்கலாம்” என்று ஜே கூறியது.
‘ஒருவரின் வளர்ச்சி இன்னொருவருக்கு வீழ்ச்சி’ என்ற உலக நியதி இங்கும் அழகாக வேலை செய்துள்ளது என்றெண்ணிய தோழர்களில் விஷ்,
“இதுக்கு மேல என்னால எந்த ஷாக்கையும் தாங்க முடியாது. ப்ளீஸ் வீட்டுக்கு போகலாம்” என்றான்.
யாவரும் அவன் கூற்றிற்கிணங்க வீட்டை நோக்கி நடக்க, அவரவர் இல்லம் வரவும் விடைபெற்றுக் கொண்டு உள்ளே சென்றனர்.
கடைசியாக ஜேன்ஸியுடன் தனித்து நடந்து சென்ற அகநகையின் மனம் யோசிப்பதற்கு ஆயிரம் எண்ணங்கள் இருந்தும் எதை யோசிக்க என்று புரியாத நிலையில் குழம்பி நின்றிருந்தாள்.
“ஏ அவி” என்று தன் மிதிவண்டியின் மணியை அடித்தபடி வந்து நின்றவன், அகர்ணனைத் தவிர வேறு யாராக இருக்க இயலும்?
அதில் திடுக்கிட்டு நின்றவள் கண்டு சிரித்தவன், “சாரி” என்க,
அவனை முறைக்க முயன்ற பெண்ணவளும் சிரித்து தான் வைத்தாள்.
ஆடவன் ஜேன்ஸியைக் கண்டு, “ஹாய் ஜேன்ஸி” என்க,
“ஹாய் சார்” என்றது.
“என்ன அவி வாக்கிங்கா?” என்று அகர் வினவ,
“இல்ல அகர்.. வீக்கென்ட் ஃப்ரண்ஸோட ஒரு மீட்டப் போட்டோம். அது முடிஞ்சு வீட்டுக்கு ரிட்டர்ன் போயிட்டு இருக்கேன்” என்று கூறினாள்.
“ஓ.. கார்ல வரலையா?” என்று அவன் வினவ,
“இல்ல சும்மா நடந்தே போகலாம்னு” என்றாள்.
“தட்ஸ் நைஸ்” என்றவன், மிதிவண்டியிலிருந்து இறங்கி, “நானும் ஜாயின் பண்ணிக்குறேன்” என்க,
“ஷ்யோர்” என்றாள்.
மௌனமாகத் தான் இருவரும் சென்றனர், ஆனால் பேசிக்கொள்ள இருவருக்குள்ளும் ஆயிரம் வார்த்தைகள் இருந்தனவோ!?
தன் தொண்டையை செருமிய அகர், “என்ன அவி சைலன்டா இருக்க? எதும் பிராப்ளமா?” என்று வினவ,
“இ..இல்ல அகர்” என்றாள்.
“ம்ம்.. அப்றம் ஏன் இவ்ளோ அமைதி?” என்று அவன் கேட்க,
‘உன்கிட்ட நான் என்னனு சொல்ல? சொன்னா எனக்கு பைத்தியம் புடிச்சிருச்சுனு நினைப்ப’ என்று எண்ணிக் கொண்டவள், “இல்ல ஒன்னுமில்ல அகர்..” என்றாள்.
“இல்ல அவி.. கொஞ்ச நாளாவே நீ ஒருமாதிரி ரெஸ்லெஸ்ஸா இருக்க. எதாச்சும் பிரச்சினையா? எதுனாலும் என்கிட்ட ஷேர் பண்ணு அவி. நான் உன்னை நம்புவேன். நீயும் ரிலாக்ஸாகலாம்ல?” என்று அவன் வினவ,
அவனை காதலாய் ஓர் பார்வை பார்த்தவள், ‘இதை சொன்னா நிச்சயம் உன்னால நம்ப முடியாது அகர்.. நீ என்னையும் நான் உன்னையும் புரிஞ்சு வைத்திருக்கும் அழகான புரிதல் சீக்கிரத்தில் காணாமல் போகக் கூடியதுனு சொன்னா உன்னால ஏத்துக்க முடியுமா?’ என்று எண்ணிக் கொண்டு,
“நிச்சயம் சொல்றேன் அகர்.. இப்ப வேணாம்” என்றாள்.
அவளைக் கண்டு சின்ன புன்னகை ஒன்றை உதிர்த்தவன், “நீ எப்பவும் துருதுருனு இருப்ப.. அதுதான் உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்ப கொஞ்ச நாளா அதை காணுமா.. அதான் கேட்டேன். உனக்கு தோனுறப்ப சொல்லும்மா” என்று கூற,
அந்த வார்த்தைகளில் வழிந்தோடிய அக்கறை அவள் உள்ளத்தில் வந்து அப்பிக் கொண்டது.
அவனோடு பேசியபடி வீட்டை அடைந்தவள் அவனுக்கு விடைகொடுத்துவிட்டு வீட்டிற்குள் நுழைய, “என்ன அகா.. உன் ஃப்ரன்ஸோட நேரம் செலவிட்டு முடிச்சாச்சுனா குடும்பத்தோடு கொஞ்சம் நேரம் செலவிடுறது” என்று இளா கூறினாள்.
அதில் சிரித்தபடி தங்கை கன்னம் கிள்ளியவள், “என்ன டாக்டர் மேடம்.. எப்பவும் படிப்பு படிப்புனு பறப்பீங்க. இன்னிக்கு என்கிட்ட வந்து நேரம் செலவிட கேட்குறீங்க?” என்று பதில் கேள்வி கேட்க,
“இன்னிக்கு தான் நான் ஃப்ரீயா இருக்கேன். அதனால தான் கேட்குறேன்” என்றாள்.
அதில் புன்னகைத்த அகா, “சரி என்ன பண்ணனும்?” என்று வினவ,
“ம்ம்” என்று முகவாயில் விரல் தட்டி யோசித்தவள், “நாலு பேரும் பீச் போயிட்டு வருவோமா?” என்று வினவினாள்.
‘ஆத்தீ… இன்னும் அங்க என்ன என்னத்த வச்சிருப்பானுங்களோ’ என்று மனம் நொந்தபோதும் தங்கையின் எண்ணத்தினை குழைக்க அவளுக்கு மனமில்லை.
“சரிடா.. அம்மா அப்பா எங்க?” என்று அகா வினவ,
“இதோ ரெடியாக சொல்றேன்” என்று சிட்டாகப் பறந்தாள்.
“என்ன மேடம் இன்னிக்கு உன் வானரப்படையோட போகலையா?” என்று அன்புக்கரசி (அகா அம்மா) வினவ,
“என்ன டாக்டர் உங்க டாக்டர் ஹஸ்பென்டோட ஹாஸ்பிடல்ல குடும்பம் நடத்தலையா?” என்று அகா பதில் கேள்வி கேட்டு சிரித்தாள்.
“உன்கிட்ட வாய குடுத்தேன் பாரு.. என்னை சொல்லணும்” என்று அரசி கூற,
“ஏன்டி எப்பப்பாரு எம்பொண்ணுகிட்ட வம்பு பண்ணிகிட்டே இருக்க?” என்று வேந்தன் வினவினார்.
“நல்லா கேளுங்கப்பா” என்று தந்தையை துணைக்கு அழைத்த மகளை முறைத்த அரசி,
“அதான.. உங்க பொண்ண ஒரு வார்த்தை சொல்லிடக்கூடாது” என்று நொடித்துக் கொள்ள,
“ஆல்வேஸ் டாடீஸ் லிடில் பிரின்ஸஸ்” என்றாள்.
சிரிப்பும் கலகலப்புமாக யாவரும் புறப்பட்டு கடற்கரை நோக்கி தன் எதிர்ப்பார்ப்பைப் போல் பல அதிசயங்களையும், எதிர்பாராத இங்கிருந்து தப்பி தங்கள் உலகம் செல்லும் வழிக்கான சிறு துரும்பையும் அறியப்போவதறியாது சென்றாள்.

