Loading

அத்தியாயம்-05

 

 

அந்த அழகிய நந்தவனத்தில், சுற்றி செர்ரீ பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. மெல்லிய கதிரொளி அந்தப் பூக்களை ஊடுருவி வந்து அவள் மேனியில் பட்டுத் தெறிக்க, அவன் அணைப்பில் கட்டுண்டு இருந்தாள் பெண். 

 

அவர்களது இறுகிய அணைப்பினை கதிரவனாலும் விலக்க இயலவில்லை, மெல்லிய வளியவளாளும்(காற்று) விலக்க இயலவில்லை.

 

கண்களில் கசிந்துருகும் காதலுடன் அவன் கண்ணோடு கண்பார்த்தவள் இதழ்கள் துடிதுடிக்க, “லவ் யூ அவி” என்று காற்றாகிப்போன குரலில் கூறியவன், அவள் மெல்லிய இதழ்களை சிறை செய்தான். 

 

முதலில் அந்த இதழ் அணைப்பினை இதமாய் ரசித்தவள், மூலையில் படீரென்று அடித்த அபாயமணியில் திடீரென்று கண்களை திறக்க, துயில் கலைந்து எழுந்தாள் அகநகை செல்வி.

 

அந்த இரவு வேளையில் அவள் எழுந்தவுடன் மெல்லிய விளக்குகள் எரிந்து அறையினுள் மங்கிய மஞ்சள் ஒளியை பரப்ப, முகம் முழுதும் வியர்வை முத்துக்கள் பூத்துக்குலுங்க மூச்சு வாங்கி அமர்ந்தாள். 

 

அவளிடம் வந்த ஜே “டிட் யூ நீட் எனிதிங் மேம்? (உங்களுக்கு ஏதாவது வேண்டுமா மேம்)” என்று வினவ, 

 

மூச்சு வாங்க அதை திரும்பிப் பார்த்தவள் ‘தண்ணீர்’ என சைகை செய்தாள்.

 

மனித சைகைகளையும் ஆராய்ந்து செயல்படும் திறன் அதனிடம் இருப்பதால், சென்று நீர் எடுத்து வந்து கொடுக்க, அதைப் பருகிவிட்டு, 

 

“நீ போ ஜே. ஐம் ஓகே” என்றாள். 

 

அதுவும் வெளியே சென்றிட, அமைதியற்று அமர்ந்தவள் எழுந்து பால்கனிக்குச் சென்றாள். அவளுள் அப்படியொரு படபடப்பு. 

 

‘புதிதாக இன்று சந்தித்த அந்த ஒருவன், பார்த்த முதல் பார்வையில், இத்தனை அந்தரங்கமான செயலில், தனது கனவில் வருவது எப்படி சாத்தியமாக இயலும்?’ என்று எண்ணம் அவளை மூச்சுமுட்டச் செய்ய, தனது தோழமைக் கூட்டத்திடம் இதை பகிர்ந்துக் கொள்ளவும் அவளுக்கு மனம் வரவில்லை.

 

வேறு ஏதும் பேய் கனவோ, அல்லது அசம்பாவிதமான கனவுகளாக இருந்திருந்தால் நிச்சயம் கூறியிருப்பாள். ஆனால் இந்த கனவை யாரிடமும் கூற அவளுக்கு மனமே இல்லாது போக, மீண்டும் கட்டிலில் பொத்தென விழுந்தவளது காதுகளுக்குள், ‘ஐ லவ் யூ அவி’ என்றவனது வாக்கியம் அச்சரம் பிசகாமல் ஒலித்தது.

 

இத்தனை நாள் புதியதோர் உலகத்தின் எண்ணங்களோடு போராடிக் கொண்டிருந்தவள் மனம், தற்போது புதியதோர் மனிதனோடு போராடுகிற அவலத்தினை பாவம் அவள் உணரவும் இல்லை. தன் எண்ணப்போக்கில் பயணித்தவள் அப்படியே உறங்கிப் போக, காலை துருவன் வந்து எழுப்பியதிலேயே கண் விழித்தாள்.

 

பதறியடித்து எழுந்த தோழியைக் கண்ட துருவன், “ஏ அகா என்னாச்சு?” என்க, 

 

அவனைக் கண்டு ஆசுவாசம் அடைந்தவன், “ஒன்னுமில்லைடா” என்றாள். 

 

“ஏ நைட்டு தூங்கினியா இல்லையா? கண்ணு சிவந்திருக்கு” என்று துரு வினவ, விஷ்வேஷும், ஜான்விகாவும் வந்தனர்.

 

“என்னடி என்னாச்சு? கண்ணெல்லாம் சிவந்துருக்கு” என்று ஜான் வினவ, 

 

“ம்ம்.. நைட்டெல்லாம் உட்காந்து ராமாயணம் கேட்டேன்” என்றாள். 

 

“அவ்வளவு நல்லவளா நீ? சரி சொல்லு சீதைக்கு ராமன் யாரு?” என்று விஷ் வினவ, 

 

“ஹான் சித்தப்பா” என்றாள். 

 

“ஏ பழைய காமெடி” என்று ஜான் கூற, 

 

“அப்ப பெரியப்பா ஓகேவா?” என்று கேட்டாள்.

 

இவர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருத்த நேரம் அங்கு வந்த இளநகை, “அதானே‌ பார்த்தேன். உன் வாணரப் படை வந்ததால்தான் இவ்வளவு சத்தமா இருக்கா?” என்று வினவ, 

 

ஜானின் பார்வை அறையிலுள்ள அனைவர் மீதும் ஆர்வமாய் படிந்து மீண்டது. 

 

“ஏ இளா.. என்ன காலேஜ் போகலையா?” என்று விஷ்வேஷ் வினவ, 

 

“இன்னிக்கு அனாடமி கிளாசே இருக்காது. சுத்த போரிங் தியரி கிளாஸஸ் பா. ஒரே கடுப்ஸா இருக்கும்” என்றாள்.

 

“அனாடமி கிளாஸா உனக்கு புடிக்கும்?” என்று ஜான் விழிகள் தெறிக்க வினவ, 

 

“ஆமா உடம்ப பார்ட் பார்டா கட் பண்ணி பீஸ் போட்டு கொடுக்குறதும், வாட் பேஷன்ஸோட கொஞ்ச நஞ்ச உயிரை உறியிறதும் தான் இவளுக்கு புடிக்கும்” என்று துரு கூறினான். 

 

அதில் அவனை முறைத்த இளா, “ஹேல்லோ.. நான் ஒன்னும் அடுத்தவங்க உயிரைலாம் உறிய மாட்டேன்” என்று கூற, 

 

“அதெப்படி நீ சொல்லுவ? நீ எத்தனை பேரோட உயிர ஸ்டிரா போட்டு இழுக்குறனு பாதிக்கப்பட்டவங்களுக்கு தான் தெரியும்” என்று ஜான் கூறி சிரித்தாள்.

 

அதில் அவளையும் முறைத்தவள், “ஏ அகா.. உன் வாணரப்படை என் லைன்ல ரொம்ப கிராஸ் பண்ணுது. அப்பறம் நான் கோவத்துல அடிச்சு கிடிச்சு வச்சுடுவேன்” என்று பத்திரம் காட்டி பேச, 

 

யாவரும் அவள் முறைப்பைக் கண்டு சிரித்தனர். 

 

எத்தனை பயமுறுத்தி பேசினாலும் அங்குள்ளோருக்கு இன்னுமே அவள் குழந்தை தான் என்ற எண்ணம் இருப்பதால் அவள் கோபம் கூட சிரிப்பையே கொடுத்திருந்தது.

 

“என்ன சிரிக்குறீங்க” என்று அவள் சிணுங்களாகக் கேட்க, 

 

“நீ எங்க குட்டிடா. நீ கோவப்படுறது கூட எங்களுக்கு குட்டிப்பிள்ளைத்தனமா தான் இருக்கும்” என்று விஷ் கூற, 

 

“அட போ விஷ்” என்றவள் “சரி சுபம்மா அசிங்கப்படுத்திட்டீங்க. நான் கிளம்புறேன்” என்றுவிட்டுச் சென்றாள்.

 

சுற்றிலும் தன் பார்வையை சுழலவிட்ட ஜான், தன் தொண்டையை செருமிக் கொள்ள, 

 

துருவன் “ஏ அகா ரெடியாகிட்டு வா. அவ்வளவு பெரிய கம்பெனிக்கு முதலாளியா இருந்துட்டு இப்படி பொறுப்பே இல்லாம தூங்கிட்டு இருக்க” என்றான். 

 

“அதுசரி.. போங்கடா டேய்.. கனவு ஒன்னு கண்டு தொலைச்சுட்டு நைட்டெல்லாம் தூங்கமுடியாம நான் தவிச்ச தவிப்பு எனக்குத்தான் தெரியும்” என்று தன் போக்கில் அவள் கூறிட, 

 

“அப்படி என்ன கனவு?” என விஷ்வேஷ் கேட்டான்.

 

பின்பே தான் கூறியதை உணர்ந்தவள் “ம்ம்.. நீ செத்துப்போன போல கனவு கண்டேன்” என்றிட, 

 

“ஏதே” என்றான். 

 

யாவரும் வாய்விட்டு சிரிக்க, “டேய்.. அது ஒரு கனவுடா. விடுங்க. நான் ரெடியாகிட்டு வரேன்” என்றுவிட்டு குளியலறைக்குள் செல்ல, யாவரும் வெளியேறினர்.

 

பாவை தயாராகிவிட்டு வர, காலை உணவை முடித்துக் கொண்டு, யாவரும் புறப்பட இருந்தனர். இளநகையும் தயாராகி இருக்கவே அவளையும் தங்கள் வண்டியிலேயே கூட்டிச் சென்றனர். ஜே வண்டி ஓட்ட, அருகே அகா அமர்ந்திருக்க, பின்னே ஜான், விஷ், துரு மற்றும் இளா அமர்ந்திருந்தனர். 

 

அவளைக் கல்லூரியில் விட்டுவிட்டு மற்றோர் தங்கள் நிறுவனத்தினை அடைய, அனைவரும் இறங்கினர்.

 

உள்ளே செல்ல இருந்தவர்களில் விஷ்வேஷ்வரன் மீது வேகமாக வந்த ஒரு பெண் இடித்திட, தடுமாறி விழப்போனவள் இடையை பற்றி நிறுத்தியவன் விழிகள் முழுநிலவைப் போல் வட்டமாக விரிந்துக்கொண்டன. 

 

முன்னே சென்று கொண்டிருந்த அனைவரும் அவர்களைத் திரும்பிப் பார்க்க, அந்தப் பெண்ணை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வேஷ்.

 

அவன் பிடித்ததில் அதிர்ந்த பெண்ணும் சற்றே நிதானமடைந்து சட்டென விலகி, “ச..சாரி சார்” என்க, தற்போது அப்பெண்ணின் குரலில் மற்றய மூவரும் அதிர்ந்து நின்றனர். 

 

“அ..அமிர்தா” என்று விஷ் கூற, “ரியலி சாரி சார்” என்று அவள் மீண்டும் மன்னிப்புக் கேட்டாள்‌. 

 

அப்போது அங்கு வந்த அகர்ணன், “ஹாப்பி மார்னிங் சார் அன்ட் மேம்” என்றுவிட்டு அமிர்தப்ரியாவைக் கண்டு, “ப்ரியா வாட் ஹேபன்ட்? நீ எங்க இங்க?” என்று உரிமையுடன் வினவ, அவனது இந்த உரிமையான பேச்சில் இரு மனங்கள் ஒருநொடி நொருங்கும் வலியை அனுபவித்தது.

 

“அ..அது.. உன்ன பார்க்க தான் வந்தேன். தெரியாம சார் மேல இடிச்சுட்டேன்” என்று அவள் கூற, 

 

“ஓ.. சாரி சார்” என்று கூறியவன் அவள் கை பற்றி கூட்டிக் கொண்டு செல்ல, இங்கு விஷ்வேஷ்வரன் கண்கள் சிவந்தேவிட்டன. 

 

அவன் தோளில் ஜான் கைவைக்க, அவளை சட்டென அணைத்துக் கொண்டவன், “வாட்ஸ் ஹாப்பனிங் ஹியர்? (என்ன நடக்குது இங்க?) யார் அவன்?” என்று கரகரத்த குரலில் வினவினான்.

 

“விஷ்.. வா மேல போய் பேசலாம்” என்ற ஜான் அவனை மேலே அழைத்துச் செல்ல, அவர்கள் அறைக்குள் நுழைந்ததும் முகத்தை மூடிக் கொண்டு அழவே ஆரம்பித்துவிட்டான். அனைவருக்கும் அவனை பார்க்க பாவமாக இருக்க, அகாவும் கண்களில் நீர் வழிவது கூட உணராது அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

சூழலை கையில் எடுத்த துருவன், “ஜே.. அவங்க ரெண்டு பேரும் யாரு?” என்று வினவ, 

 

ஜேவை முந்திக் கொண்டு “அவர் அகர்ணன். நம்ம கம்பெனியோட பார்ட்னர்ஷிப் வச்சிருக்குற கம்பெனி ஓனரோட பர்சனல் செகரட்டரி. அமிர்தப்ரியா அவருக்கு என்ன உறவுனு தெ..தெரியலை” என்று அகா கூறினாள். 

 

அவளைத் தொடர்ந்த ஜே, “அவங்க அமிர்தப்ரியா ஃபேஷன் டிசைனிங் முடிச்சு பெரிய கம்பெனில லீடிங் டிசைனரா இருக்காங்க” என்று கூறி ‘அகர்ணன் சாரோட..’ என்று கூறுகையில் அங்குள்ள அனைவரின் இதயத்துடிப்பும் எகுறித்துடித்துக் கொண்டிருந்தது.

 

“அகர்ணன் சாரோட ஃப்ரண்ட்” என்று ஜே கூறுகையில் தான் அங்குள்ளோருக்கு மூச்சே வர,

 

“ஃப்ரண்ட்!” என்று நிம்மதியுடன் முணுமுணுத்துக் கொண்ட அகா அப்போதே தன் மனம் தவித்த தவிப்பை எண்ணி திகைத்துப் போனாள். 

 

“நடுவில் கொஞ்ச நாள் அவங்க மேரேஜ் பண்ணிக்க போறதா வதந்திகள் வந்தது. ஆனா..” என்ற ஜே விஷ்வேஷைப் பார்த்து “அவங்க விஷ்வேஷ் சாரை வன் சைடா ரொம்ப வருஷமா லவ் பண்றாங்க. சார் தான் அவங்க காதலை ஏத்துக்கலை” என்று கூறவும் தோழர்கள் நால்வரும், “ஏதே?” என்றனர்.

 

“ஆமா சார். அமிர்தப்ரியா மேம் உங்களை நாலு வருஷமா லவ் பண்றாங்க. நீங்க தான் இன்னும் ஏத்துக்கலை” என்று ஜே கூற, விஷ்வேஷின் மனதில் ஒரு சம்பவம் வலம் வந்தது. 

 

ஓர் உறவினரின் திருமணத்திற்கு வந்திருந்தவன் கண்களுக்கு விருந்தாக, அவன் அவளுக்கு முதன்முறை வாங்கி தந்திருந்த புடவையை கட்டி வந்திருந்தாள் அமிர்தப்ரியா.

 

அவன் கைகளுக்கு அகப்படாமல் சுற்றிக் கொண்டிருந்தவளை பிடித்து அங்குள்ள அறையினுள் நுழைந்தவன், “ஏ கேடி.. ரொம்ப சீண்டிட்டடி என்னை” என்று கூற, 

 

“விடுங்க மாமா. யாராச்சும் வந்துடப் போறாங்க” என்றாள். 

 

“வந்தா வரட்டும்” என்றவன் அவளை நெருங்க, 

 

“மாமா.. வேணாம்” என்ற கண்களை மூடிக்கொண்டு இதழ் மலர கூறினாள். 

 

அதில் அவளை கண்ணார ரசித்தவன், “என்னை ரொம்ப ஓடவிடுறல நீ? அடுத்த ஜென்மத்தில் நீ என்னை வன் சைடா லவ் பண்ணனும். நீ என்னை அலையவிட்டமாதிரி நான் உன்னை அலையவிடணும்” என்றான்.

 

“அய்யோடா.. பண்ணுவாங்க பண்ணுவாங்க” என்றவள், “அச்சோ அத்தை” என்க “அம்மாவா” என்று திரும்பியவன் கன்னத்தில் பச்சென்று ஒரு இச்சுவைத்திட்டு சிட்டாக பறந்தாள்.

 

அந்த சம்பவத்தை அசைபோட்டவன் வாய்விட்டு சிரிக்கத் துவங்கிட, யாவரும் அவனை ‘பே’ என பார்த்தனர். 

 

“ஓ காட்.. ஐ லவ் திஸ்” என்றவன் “வன் சைட் லவ் தானே.. பண்ணட்டும் பண்ணட்டும்” என்க, 

 

“மச்சான் மண்டைல கிண்டைல எதும் அடி இல்லையே? படுக்கும்போது உருண்டு விழுந்துட்டியா” என்று துரு கேட்டான்.

 

“இல்ல மச்சி.. நான் ஒருமுறை விளையாட்டா அமி கிட்ட நீ என்ன வன் சைடா லவ் பண்ணனும் நான் உன்னை அலைய விடணும்னு சொல்லிருந்தேன். இப்ப அதுதான் நடக்குது” என்று விஷ் கூற அனைவரும் ஆச்சரியத்துடன் விழித்தனர்.

 

“எனக்கு தெரிஞ்சு இது நம்ம எப்பவோ என்னிக்கோ இப்படி நடந்தா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணினதையெல்லாம் வச்சு தான் இந்த உலகம் இருக்குனு தோனுதுடா. இங்கிருந்து நம்ம வெளிய போறதுக்கான ஹின்டும் ஏதோ இருக்குனு தான் தோனுது” என்று ஜான் கூற யாவரும் ஆமோதிப்பாக தலையசைத்தனர்.

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அகா என்ன ஒரு அருமையான கனவு 😍

    புதிய உலக எண்ணங்களுடன் போராடிக்கொண்டிருக்கும் சமயம் புதியதொரு மனிதனை பற்றிய எண்ணங்களுடனும் போராட வேண்டியுள்ளது.

    பார்ட் பார்ட்டா கட் பண்ணி பீஸ் போடறது 🤣🤣

    அகர்ணன் மற்றும் அமிர்தாவை கண்டதும் அகா மற்றும் விஷ்ஷின் தவிப்பு அருமை.

    கனவுகள், கற்பனைகள் எல்லாம் நிஜமாகிய ஒரு கனவு உலகம் போல் உள்ளது.