
அத்தியாயம்-01
31.12.2023 இரவு பத்து மணி..
“டேய் தூக்கம் வருது வுடுங்கடா” என ஜான்விகா கூற,
“அடியே! இவ்வளவு நேரம் முழிச்சாச்சு, இன்னும் ரெண்டு மணி நேரம் தான். முழிச்சிருந்து வருஷம் பிறக்குறத பாத்துட்டு தூங்குவோமே” என துருவன் கூறினான்.
“அடேய்.. கொடும படுத்துறீங்கடா” என அவள் மூக்கை உறிஞ்ச தட்டு நிறைய சிப்ஸ், முறுக்கு, தட்டை என தீனிகளையும்; ஜிகினா தூவியதைப் போல மினுமினுத்த ஒரு சீட்டுக்கட்டையும் எடுத்துக் கொண்டு அங்கு வந்தாள், அகநகை செல்வி.
“தூக்கம் வராம இருக்க எதாவது விளையாடலாம்னு கொண்டுவந்தேன். அப்படியே கேம் விளையாடி கலைச்சு போய்ட்டா சாப்பிட எதாவது வேணும்ல? அதான்” என வாய் நிறையப் பல்லாக அகநகை கூற,
“இது நல்ல புள்ளைக்கு அழகு” என அந்தத் தட்டை வாங்கி வைத்தான், விஷ்வேஷ்.
‘ஜான்’ எனப்படும் ஜான்விகா, ‘அகா’ எனப்படும் அகநகை செல்வி, ‘துரு’ எனப்படும் துருவன், ‘விஷ்’ எனப்படும் விஷ்வேஷ் ஆகிய நால்வரும் ஒரே தட்டில் உண்டு ஒரே மட்டில் (mud- களிமண்) ஊரிய தோழமைகள். நால்வருமே பொறியியல் முடித்த வேலையில்லா பட்டதாரிகள்.
ஜகன் மற்றும் ஆத்விகாவின் காதல் திருமணத்திற்கு சாட்சியாக உதித்த ஒரே கொத்தமல்லி கறிவேப்பிலை தான் நம் ஜான்விகா. ஜகன் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிபவர், ஆத்விகா ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர்.
தமிழ்வேந்தன் மற்றும் அன்புக்கரசியின் திருமண வாழ்விற்கு சாட்சியாக உதித்த இரண்டு பெண்ணரசிகளில், மூத்தவள் நம் அகநகை செல்வி, இளையவள் இளநகை செல்வி. தமிழ்வேந்தர் மற்றும் அன்புக்கரசி இருவருமே தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்களாக பணிபுரிகின்றனர். அகா படிப்பை முடித்து பத்து மாதமாக வேலைத்தேடி அலையும் பட்டதாரி, இளா மருத்துவம் மூன்றாம் ஆண்டு மாணவி.
மூர்த்தி மற்றும் தனலட்சுமி தம்பதியரின் வாரிசுகளில் இரண்டாம் பிள்ளையே விஷ்வேஷ். மூர்த்தி ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. தனலட்சுமி இல்லத்தரசி. இவர்களின் மூத்த மகள் சர்வேஷினி அரசு கருவூலத்துறையில் பணியாற்றுகிறாள்.
இரண்டு வருடங்கள் முன்பு அருகிலுள்ள ஒரு போட்டித் தேர்வு பயிற்சி மையமொன்றில் பணிபுரியும் பார்த்திபனை திருமணம் முடித்த சர்வேஷ்னி தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக பிரசவத்திறக்கு பிறந்த வீடு வந்துள்ளாள்.
ஆதவன் மற்றும் வித்தியா தம்பதியரின் வாரிசுகளில் இரண்டாமவனே துருவன். ஆதவன் ஒரு அரசு பட்டய கணக்காளர். வித்தியா ஒரு பதிப்பகத்தில் வேலை செய்பவர். இவர்களின் மூத்த மகன் வித்வன் ஒரு பொறுப்பான காவலதிகாரன். துருவன் பொறியியல் பட்டதாரி. ஒரே தெருவில் ஒரே வரிசையில் இருக்கும் நான்கு வீடுகளில் இவர்களின் வாசம். முழங்கால் அவளவு தடுப்பு சுவரால் பிரிக்கப்பட்ட இந்த நான்கு வீட்டின் மொட்டை மாடி தான் இவர்களின் சொர்க்கம்!
“அடேய்! புது வர்ஷமே வரப்போகுது, நமக்கு இன்னும் ஒரு வேலை அமைஞ்ச பாடில்லையேடா” என துருவன் கூற,
“ஆமாடா! நேத்து கூட அம்மா கேட்டாங்க. நீ வேலைக்குலாம் போக ஐடியா இல்லைனா சொல்லு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடுறேன்னு. கடுப்பா வருது” என அகா கூறினாள்.
“இப்படிலாம் எங்க வீட்ல கேக்க மாட்றாங்களே” எனக் கூறி ஜானும் விஷ்வேஷும் ஒரு பெருமூச்சுவிட, துருவன் மற்றும் அகா இருவரையும் ஒற்றை புருவம் உயர்த்திப் பார்த்தனர்.
“இவனுக்கு அத்த பெத்த பைங்கிளி இருக்கு, பெருமூச்சு விடுறான். உனக்கென்னத்துக்கு பீலிங்கு?” என அகா கேட்க,
“லவ்வுலாம் இல்ல. ஆனா எத்தனை நாள் உங்க கூடயே குப்பை கொட்டுறது? எனக்கும் கல்யாணம் காட்சிலாம் பாக்கணும்னு ஆசை இருக்காதா?” என ஜான் கூறினாள்.
“துரு.. நம்ம போற போக்குல ஜகன் மாம்ஸ் கிட்ட போட்டுவிட்டுட்டு போவோம். நல்ல அமேரிக்கா சம்மந்தமா பாக்க சொல்லுவோம்” என அகா கூற துருவும் விஷ்வேஷும் விழுந்து விழுந்து சிரிக்க, ஜான் முறைக்க என கூத்தாக இருந்தது.
“ஒரு பேச்சுக்கு சொன்னா உடனே படம் ஓட்ட வேண்டியது” எனக் கூறிய ஜான் “ரெண்டாந்தேதி மீட்டிங் நியாபகம் இருக்குல?” எனக் கேட்க,
மூவரும் “ம்ம்.. ம்ம்..” என்றனர்.
“டேய் பாஸிடிவ்வா யோசிப்போம்டா” என விஷ்வேஷ் கூற,
“எனக்கு நெகடிவ் பிளட்டுடா” என துரு கூறினான்.
அதில் பெண்கள் இருவரும் சிரிக்க, விஷ் துருவை மொத்த, மூர்த்தி இவர்கள் அலப்பறையில் மேலே வந்து கத்த, என ஒரு குட்டி போர் நடந்தது.
“காலம் எவ்வளவு மாறினாலும் இன்னும் சில விஷயங்கள் எல்லாம் மாறவே இல்லை” என அகா ஒரு பெருமூச்சுடன் நொந்துகொண்டு “அடேய்! அறிவு இருந்தும் நம்மளை வேலைக்கே எடுக்க மாட்றானுகளே அங்க போஸ்டிங்ல இருக்குற எல்லாரும் அம்புட்டு அறிவாளிகளா?” எனக் கேட்க,
“அறிவாளிகள் இல்லைனு சொல்ல முடியாது அகா. ஆனா நிறைய கரப்ஷென் அன்ட் ரெகமென்டேஷன் தான் பிரச்சினை. நீ இப்ப நொந்துகிட்ட கல்யாண மேட்டர்போல தான் இதுவும். இந்த கேஸ்டிஸம், கரெப்ஷன், அபியூஸ், ராபரி இதுலாம் மாறுறது ரொம்ப கஷ்டம். இன்னும் அம்பது என ஐநூறு வருஷம் ஆனாலும் மாறாது” என துரு கூறினான்.
பின் மீண்டும் சீட்டு விளையாடிய தோழமைகளில் ஜான் திடீரென ஏதோ நினைவு வந்த வளாக, “ஏ அகா! காலைல ஏதோ நல்ல கனவ நான் போன் போட்டு கெடுத்துட்டேன்னு சொன்னியே. என்ன கனவு?” என கேட்டாள்.
“அய்யோ! அத ஏன்டி நியாபகப்படுத்துற?” என கேட்டு அகா அழுக,
அவள் வாயை கப்பென பொத்திய விஷ்வேஷ் “மறுபடியும் எங்க நைனா கிட்ட என்னால மிதிவாங்க முடியாது. ஓரமா உக்காந்து சத்தமில்லாம அழுதுட்டு வந்து சொல்லு. போ” எனக் கூறினான்.
அதில் மீண்டும் தோழமைக் கூட்டம் சிரிக்க, பல்பு வாங்கிய சோகத்துடன் “என் ரெண்டே ரெண்டு கண்ணு முன்ன..” எனக் கூற வந்த அகாவை இடைமறித்து “எல்லோருக்கும் ரெண்டு கண்ணு தான்” என துரு கூறினான்.
“குறுக்க பேசின கடிச்சு வச்சிடுவேன்” என அவள் கூற,
“அய்யோ வெசம்” என அவளிடமிருந்து தள்ளி அமர்ந்து கொண்டான்.
அவளோ “என் கண்ணு முன்ன நல்லா கோர்ட் சூட்டலாம் போட்டுகிட்டு செம்ம ஸ்டைலா டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்க.. காது குளிர குளிர காதல் பாட்டு வாராயோ வாராயோ மோனாலிஸானு வரும்போது என் கைய புடிச்சு டான்ஸ் ஆட கூப்பிட்டார். பாதகத்தி கரெக்ட்டா போன அடிச்சு கனவ கெடுத்துபுட்டா” என அழ,
“யார் கூட?” என மூவரும் கோரசாக கேட்டனர்.
அதற்கு பாவையோ முகத்தை தொங்க போட்டுக் கொண்டு “ரால்ஃப் ஃபைன்ஸ் (ralph fiennes)” என கூற,
மூவரும் கோரசாக “எதே?” என்றனர்.
அதில் திடுக்கிட்டு நிமிர்ந்து அகா மலங்க மலங்க விழித்தபடி “ஏன்டா?” என்க,
மூவரும் அவளை ஏகபோகத்திற்கு முறைத்தனர்.
அவள் கூறியது ‘ஹாரி பாட்டர்’ என்ற ஆங்கில திரைபடத்தின் நடிகர் ஒருவரை. ஆங்கில நடிகருடன் தமிழ் பாடலில் டூயட் என்பதே மகா கொடுமை. இவர் அப்படத்தில் ‘வோல்ட்மார்ட்’ என்ற பெயரில் வில்லனாக நடித்தவர். அதிலும் பெரும்கொடுமை அவருக்கு தற்போது கிட்டதட்ட அறுபது வயது இருக்கும். அவரது சிறுவயது புகைப்படத்தைப் பார்த்தது முதல் அதிலிருக்கும் இளம் ரால்ஃபின் மேல் மையலுடன் சுத்துகின்றது இந்த மைனா.
கடுப்பான தோழர்கள் அவளை மொத்திவிட்டே ஓய்ந்தனர். பின் மீண்டும் விளையாட்டில் மூழ்க இரவு பன்னிரெண்டு மணியும் வந்தது.
அவர்கள் வாங்கி வைத்த கேக்கை ஜான் எடுத்துவர அதை உண்டு, ஆடி, பாடி, ஓடி என கொண்டாடி தீர்த்தனர்.
எப்போதும் போல் நால்வரும் தங்கள் கரம் கோர்த்துக் கொண்டு வானில் மிளிர்ந்த நிலவை பார்த்தபடி ‘எங்க பிரண்ட்ஷிப் எப்பவும் உடையாம இருக்கணும். ஒவ்வொரு வர்ஷமும் இன்னுமின்னும் ஸ்டிராங் ஆகணும்’ என வேண்டிக் கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொள்ள, நிலவொளியில் அந்த சீட்டுக்கட்டும் மினுமினுத்துக் கொண்டது.
பின் அவரவர் வீடு திரும்பியவர்களில் ஒவ்வொருவர் மனதிலும் இரண்டாம் தேதி நடக்கவுள்ள மீட்டிங்கில் எப்படியாவது தேர்வாகிவிட வேண்டும் என்பதே நெருடியது.
ஜான்விகாவுக்கோ காதலித்து திருமணம் செய்துகொண்டு தனித்த வந்த பெற்றோருக்கு பெண்பிள்ளை பிறக்கவும், சுற்றாரின் துணையின்றி ஒரு பெண் பிள்ளையை எங்கனம் வளர்க்கப் போகின்றீர்கள் என சபிக்கும் வார்த்தைகள் பேசிய உறவுகளின் முகத்தில் ஒரு நன்னிலைக்கு வந்து கரியை பூச வேண்டும் என்ற எண்ணம்.
அகநகையின் பெற்றோர் இருவரும் மருத்துவர்களாகவே இருந்தாலும், இரு பெண் பிள்ளைகளுக்கும் செய்ய வேண்டிய கடமைகளுக்கான சேமிப்பு, புள்ளி ஐந்து மதிப்பெண்ணில் அரசு கல்லூரியில் வாய்ப்பு கிடைக்காமல் தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் இளாவின் கல்லூரி கட்டனம் என பலதும் மனதில் உறுத்தலாக இருந்தது. பெற்றோருக்கு தோள் கொடுக்கமுடியாத வேதனை அகநகையை வாட்டியது.
தந்தையின் வருமானம் மட்டுமே வீட்டிற்கு போதியபோதும் வயிற்றுப் பிள்ளையாக வந்திருக்கும் பாசமிகு அக்காவிற்கு தன் செலவில் ஏதும் செய்யமுடியாமல் ஒவ்வொன்றிற்கும் அப்பாவிடம் நிற்க விஷ்வேஷிற்கு சங்கடமாக இருந்தது.
மருமகனுக்கு பயன்படுத்தும் முதல் பொருட்கள் அனைத்தும் தன் சொந்த செலவில் இருக்கவேண்டும் என்பதே அவனது ஆசை. அதற்காகவும் தனது அத்தை பெத்த ரத்தினமான ஆடைக்கலை வடிவமைப்பில் முதுகலை முதலாம் ஆண்டு பயிலும் அமிர்தப்ரியாவை கரம் பிடிப்பதற்காகவும் விரைவில் நல்ல வேலையில் பணியாற்ற வேண்டும் என்பது அவனது எண்ணம்.
துருவனுக்கு வீட்டில் பணத்திற்கு பஞ்சமில்லை தான். எனினும் எத்தனை காலம் இப்படி இருப்பது? தன்னை வளர்த்த பெற்றோரை தாங்கவேண்டிய ஆசை, அண்ணனுக்கு தோள் கொடுக்க வேண்டிய கடமை என இன்னும் சில ரகசியக் காரணங்களுக்காக எப்படியாவது ஒரு நல்ல வேலையில் அமரவேண்டும் என்பது அவன் எண்ணம்.
இப்படியே ஒவ்வொருவரும் அவரவர் எண்ணத்துடன் தத்தமது அறைக்குச் சென்றனர். அகநகை தன் அறையினுள் நுழைய அவள் அறையின் நடுப்பகுதியை ஒருவர் படுக்குமளவான கட்டிலும் வலதுபுற சுவர் பகுதியினை பீரோ மற்றும் கப்போர்ட் ஆக்கிரமித்தது போக மீதியை அவளுக்கு விட்டு வைத்திருந்தது. சென்று பொத்தென கட்டிலில் விழுந்தவள் கவலைகள் மறந்த ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றாள்.
மறுநாள் காலை வெகு தாமதமாகவே துயில் கலைந்த அகநகை கண் திறக்கவும் அத்தனை நேரம் இருந்த இருள் திடீரென்று பளிச்சிட்ட உணர்வு.
கண்கள் கூசவே முகத்தையும் கண்களையும் சுருக்கியபடி எழுந்தவள் கண்களை கசக்கிக் கொண்டு திறக்க, திடுக்கிட்டுப் போனாள். முழுதும் டைல்ஸில் பளபளத்தது அந்த அறை! கண்ணை கசக்கி கசக்கி திறந்தவள் சுற்றிப் பார்வையை சுழல விட, நவ நாகரீகமாக இருந்த அவ்வறையில் பீரோ என்பதே இல்லை. சுவற்றில் ஆங்காங்கே பொத்தான்கள் (பட்டன்கள்) போன்று இருந்தன. அப்போதே அவள் படுத்திருந்த படுக்கையைக் கவனித்தாள்.
கிங் சைஸ் குஷன் பெட்! அதுவும் தரையிலிருந்து ஓரடி உயரத்தில் கட்டிலின் ஒரு பக்கம் மட்டும் சுவரோடு இணைக்கபட்டு அந்தரத்தில் இருந்தது. தன்னை யாரேனும் கடத்திவிட்டனரோ? என அவள் பயத்தில் வியர்க்க விறுவிறுக்க கட்டிலை சுற்றி சுற்றிப் பார்க்க, கட்டிலின் அருகே அவள் அலைபேசியை வைப்பதற்காகவே தரையிலிருந்து முளைத்த நிளமான கம்பியின் மேல் முனையில் அலைபேசியை பொருத்தி வைப்பது போன்ற வடிவமைப்போடு இருந்தது. அதில் அவள் அலைபேசி பொருத்தி வைக்கப்பட்டிருக்க, அதை எட்டி எடுத்தவள், இயக்க முன்வரவும், அது அதிரத் துவங்கியது.
திடீரென்று அது இரண்டாகப் பிளக்க “ஆ!!” என்ற கத்தலுடன் அதை கட்டிலில் போட்டாள்.
அலைபேசி இரண்டாக உடைந்து ஒளி வீச, அதில் கண்கள் கூச முகத்தை திருப்பிக் கொண்டவள் அவ்வொளி மங்கியதும் அதைப் பார்க்க, கண்ணாடி போன்று தட்டையாக ஒன்று இருந்தது.
பாவை அதனை எடுத்து திருப்பித் திருப்பிப் பார்க்க அவள் அருகே “குட் மார்னிங் மேம்” என்ற சத்தம் கேட்டது.
அதில் திரும்பியவள் தன் முன் இருந்த இயந்திர மனிதனைக் கண்டு விழிகள் விரிய “அம்மே!” என கத்தினாள்.
அவள் கூரல் கேட்டு “ஏ! என்னடி?” என அவளது அன்னை உள்ளே வர அவரை கண்டு அதிர்வின் உச்சகட்டத்திற்கே சென்றுவிட்டாள்.
நிறம் மங்கிய ஜீன்சும் தொடைப்பகுதி வரை நீண்ட ஒரு சட்டையும் அணிந்திருந்தவரை வாய்பிளந்து பார்த்த அகா,
“எம்மா! எப்பம்மா இந்த மாதிரி ட்ரஸ்லாம் போட ஆரம்பிச்ச?” என கேட்க,
“இது நான் கேட்கவேண்டிய கேள்விடி. ஆமா உன்கிட்ட ஏது சல்வார்? நீ எல்லாம் ஜீன்ஸ் ஷர்ட் தானே வச்சிருக்க?” என்றார்.
பெற்ற அன்னையையே வேற்று கிரகவாசி போல் பார்த்த அகநகை அவர் சென்றதை கூட உணராத நிலையில் திக் பிரம்மை பிடித்து அமர்ந்திருந்தாள்.
அந்த இயந்திர மனிதன் மீண்டும் “குட் மார்னிங் மேம்” என்க,
அதைத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தவள் “நீ யாரு?” என கேட்டாள்.
“நா தான் உங்க ரோபோர்ட் மேம்” என கூறிய அந்த இயந்திரத்தை நம்பாத பார்வை பார்த்தவள் இடவலமாக தலையாட்டி “நா யாரு?” எனக் கேட்டாள்.
“நீங்க மிஸ் அகநகை செல்வி மேம். தமிழ்வேந்தன் சார் அன்ட் அன்புக்கரசி மேமோட பர்ஸ்ட் டாட்டர் (முதல் குழந்தை)” என அது கூற,
அந்த கண்ணாடி தகட்டை எடுத்து “இதென்ன?” என்றாள்.
“இதான் நீங்க நேத்து வாங்கின லேட்டஸ்ட் மொபைல் மே..” என அது முடிக்கும் முன் “உருட்டு” என்றாள்.
அது “மேம்?” என்க,
“டேய்! என்ன? என்னைய வச்சு காமடி பண்றீங்களா? இது யார் வீடுடா? எங்கடா இருக்கேன் நானு?” என்றாள்.
“இது உங்க வீடு தான் மேம். உங்களோட பர்ஸனல் ரூம்” என அது கூற,
“அய்யோ!” என தலையை பிய்த்துக் கொண்டாள்.
பின் அந்த இயந்திரத்தை பாவமாக பார்த்தவள் இரண்டே விரலில் அந்த கண்ணாடி தகட்டினை பதமாக தூக்கி “இத கொஞ்சம் எப்படி யூஸ் பண்ணனு சொல்லேன்” என்றாள்.
அதுவே அதை இயக்க, அந்த கண்ணாடியிலிருந்து வெளி வந்த ஒளி மூலம் அவள் முகத்தின் முன் ஒரு திரை உருவானது (projector). அதைக் கண்டு திடுக்கிட்டாள்,
“ஏ! இது போனுன்னு சொன்ன. ப்ரொஜெக்டர் மாதிரி மூஞ்சிக்கு முன்னாடி ஸ்கிரீன் வருது” என கேட்க,
“ஆமா மேம். இது இப்ப வந்திருக்கும் புது மாடல். நேத்து தான் லான்ச் ஆச்சு” என அது சொன்னது.
“ஓ!! நேத்து லான்ச்சானத நா நேத்தே வாங்கிட்டேனாக்கும்? எவன்டா இவன்? நானே நேத்து புது சல்வார் வாங்கித்தர சொல்லி கேட்டப்ப திட்டின அம்மா சல்வாரே பழசுனு சொல்லிட்டு ஜீன்சுல சுத்துதேனு அதிர்ச்சில இருக்கேன். இதுல நா நேத்து வந்த போன நேத்தே வாங்கிடேனாம்” என அவள் நொந்து கொள்ள,
அது அமைதியாய் அவளையே பார்த்தது.
“இதுல என் ப்ரெண்ட்ஸுக்கொரு போன் போடனுமே. முடியுமா?” என அவள் கேட்க,
“எஸ் மேம்! துருவன் சார், ஜான்விகா மேம், விஷ்வேஷ் சாருக்கு தானே மேம்?” என்றது.
“தோ பார்ரா! உனக்கு அவனுங்க பேருலாம் தெரிஞ்சிருக்கு. சரி சரி அந்த பக்கிகளுக்கு தான். கான்பரன்ஸ் போடு” என அவள் கூற, அதுவும் அழைப்பு விடுத்தது.
யாரோ மற்றொருவரின் அலைபேசியை எட்டி எட்டி பார்ப்பதுபோல் பார்த்தவளிடம் அழைப்பு விடுத்துவிட்டு அது கொடுக்க அழைப்பு ஏற்கப்பட்டதும் “டேய் என்னடா நடக்குது?” என ஒன்றுபோல கூறினர்.
“மச்சான்! நைட்டி கூட போடாத எங்க அம்மா ஜீன்ஸ்லாம் போட்டுட்டு சுத்துறாங்கடா. ஒன்னுமே புரியலை” என விஷ்வேஷ் கூற,
“இங்கயும் அதே தான்டா” என்றனர்.
“என்னடா, ஏலியன்ஸ் எதும் நம்மல தூக்கிட்டு வந்துடுச்சா?” என ஜான் கூற,
“மவளே! பக்கத்துல இருந்த தூக்கிப்போட்டு மிதிச்சிடுவேன். தூக்கிட்டு வர்றது குடும்பத்தோட தூக்கிட்டு வருதா?” என விஷ்வேஷ் கூறினான்.
துருவனும் அகாவும் தலையிலடித்துக் கொள்ள அந்த இயந்திர மனிதன் “ஹாப்பி டிசம்பர் மேம்” என அகாவிடம் வந்து கூறியது.
“டிசம்பரா?” என அவள் புரியாமல் கேட்க,
“எஸ் மேம்!” என்றதும் அது வழிவிட்டு நிற்க சுவற்றில் நாட்காட்டி போன்று காட்சி இயந்திரம் (projector) இருந்தது.
அதில் அன்றைய தினமான முதலாம் தேதி மட்டும் பலவர்ணத்திலும் மற்றைய திகதிகள் கருப்பு நிறத்திலும் இருக்க, டிசம்பர் என மேலே இருந்ததை வாசித்தவள், அதற்கு நேரே இருப்பதை கண்டு “2074ஆ?” என அதிர,
மற்ற மூவரும் அவள் கூறியதை கேட்டு “எதே?” என அதிர்ந்தனர்.
அந்த நாட்காட்டியைக் கண்ட யாவரும் வியர்வை ஊற்றாகி வழிவதை உணராது இருந்தனர்.
முதலில் சுயமடைந்த துருவன் “ஏ காய்ஸ் முதல்ல எல்லாரும் குளிச்சு ரெடியாகிட்டு வாங்க. நம்ம எங்கேயாவது மீட் பண்ணுவோம்” என்க,
“எங்கேயாவதுனா? இந்த புது உலகத்துல எங்க மீட் பண்ண?” என ஜான் கேட்டாள்.
“இரு கேக்குறேன்” என்ற அகா, “ஏ கூகுல்” என்க,
“மேம் என்னோட நேம் ஜேன்ஸி. ஐயம் அ நியூ மாடல் ஃப்ரம் இன்டோநேஷியா. என்கிட்ட லிமிட்லெஸ் ஸ்டோரேஜ் அன்ட் எமர்ஜென்ஸி ஆக்சசரீஸ் இருக்கு..” என அது அடுக்கிக் கொண்டே போனது.
“ஏ ஏ ஏ! நிறுத்து. உன் பேர மாத்தி கூப்டது தப்பு தான். இப்ப நாங்க நாலு பேரும் மீட் பண்ணிக்கனும். எதாவது பண்ணு” என அவள் கூற,
“ஓகே மேம்” என்றுவிட்டு சென்ற இயந்திரம் தன் மூக்கைத் தட்ட அதன் முன் ஒரு திரை உருவானது.
அதில் கையை வைத்து என்னென்னவோ தட்டிவிட்டு வந்த இயந்திரம், “காஃபி ஷாப்ல நாலு டேபிள் புக் பண்ணிருக்கேன் மேம். ஜான் மேம், விஷ் அன்ட் துரு சார்க்கு கார் புக் பண்ணிட்டேன். பத்து மணிக்கு துரு சார் வீட்டுக்கு போய்டும். அங்கிருந்து அடுத்தடுத்து ஜான் மேம் அன்ட் விஷ் சார பிக் பண்ணிட்டு கேஃபே வந்திடும்” என்றது.
அதை ‘ஆ’ என பார்த்து “டேய் சாருகளா.. கேட்டுதா? தயாரா இருங்க” என்றவள், “கட் பண்ணு” என அந்த போனை அதனிடம் கொடுத்தாள்.
அப்படியே தலையைப் பிடித்தபடி அமர்ந்தவளுக்கு பிரம்மை பிடித்தார் போன்று இருந்தது. தன் தலையை மெல்ல தூக்கியவள் தன்னையே இமைக்காமல் பார்க்கும் அந்த இயந்திரத்தை பார்த்தாள். அவள் பார்க்கவும் அந்த இயந்திரம் புன்னகைக்க, அதில் தானும் மெல்ல முறுவலித்தவள், “ஜேன்ஸி ரைட்?” என்றாள்.
“எஸ் மேம்” என அது கூற,
“நா உன்ன ஜேனு கூப்டுக்கவா?” என கேட்டாள்.
“ஷோர் மேம்” என அது கூற,
“நீயும் என்ன அகானே கூப்பிடு. மேம் வேணாம்” என்றாள்.
“நோ மேம். என்னோட ப்ரோக்ராமிங் இது தான். என்னால உங்களை பேர் சொல்லி கூப்பிட முடியாது” என்று அது கூற,
“ஓ சரி சரி. மறுபடியும் உன்ன பத்தி சொல்ல ஆரம்பிச்சுடாத” என்றவள்,
அந்தரத்தில் நிற்கும் படுக்கையிலிருந்து கீழே எட்டிப் பார்த்து, “நா எப்படி இறங்க?” என கேட்டாள்.
அவள் படுக்கையின் வலதுபுறப் பிடியிலிருந்த பொத்தான் ஒன்றை அது அழுத்து மெல்ல படுக்கை கீழே இறங்கியது. அதிலிருந்து அவள் இறங்கவும் மீண்டும் அது மேலே சென்றது.
அனைத்தையும் வியப்பாக பார்த்தவள் “ரெஸ்ட்ரூம் எங்க?” என கேட்க,
அதுவும் அவளை அந்த குளியலறைக்கு கூட்டிச் சென்றது.
அதைக் கண்டவளுக்கு தலையே சுற்றிவிடும் போலானது.
“இங்க குளிக்குறதுக்கே நான் ஒரு வாரம் கிளாஸ் எடுத்துக்கணும் போலயே” என நொந்து கொண்டவள் அந்த இயந்திரத்தைப் பாவமாகப் பார்க்க,
தன் கண்கள் மூலம் அவள் முகபாவனையை ஸ்கேன் செய்து, அவள் சோகமாக இருப்பதை புரிந்துக் கொண்ட இயந்திரம், “மே ஐ ஹெல்ப் யூ மேம்” என்றது.
அவள் ஆமென தலையசைக்க, அங்கு ஒரு குளியலறைப் பயணம் (பாத்ரூம் டூர்) நடந்தது. பளிங்கால் செய்யப்பட்ட நாற்காலி வடிவில் இருந்த அமைப்பை சுட்டிக் காட்டிய ஜே,
“மேம் இதுல நீங்க உக்காந்தீங்கனா மேலே இருக்குற டோம் உங்க தலைல வந்து பிக்ஸ் ஆயிடும். அது உங்க ஹேர வாஷ் பண்ணிடும். அன்ட் சைட்ல இருக்குற ரெண்டு ரோபாட்டிக் ஹான்ஸ் (இயந்திர கைகள்) உங்க காலுக்கு மஸாஜ் செய்யும்” என்றது.
அதையடுத்து ஒரு குளியல் தொட்டி இருக்க, “இது பாத்டப் தானே? எனக்கு தெரியும்” என அகா கூறினாள்.
“ஆமா மேம். ஆனா இது புது மாடல்” என ஜே கூற,
“என் வீட்ல நான் மட்டுந்தேன் பழைய மாடல் போல. எதை காட்டினாலும் புதுமாடல்னு சொல்ற” என்றாள்.
பின் அதையடுத்து ஒரு மனிதன் நிற்குமளவு ஒரு கொள்கலன் (container) இருக்க அதை காட்டி, “இது குளிர்காலத்துல, குளிச்சு முடிச்சுட்டு உங்க உடம்ப ட்ரை பண்ணிக்குறதுக்கு மேம். இதுக்குள்ள போய்ட்டு உள்ள இருக்கும் பச்சை கலர் பட்டன அழுத்தினா மிதமான சூடு பரவி, உங்க உடல காயவைக்கும்” என ஜே விளக்கம் கொடுத்தாள்.
“ஏன்டா குளிச்சுட்டு உடம்பை துடைச்சுக்க ஒரு மிஷினா?” என அகா கேட்க,
“இல்ல மேம். இது உடம்பை ட்ரை பண்ண. உடம்பை துடைச்சுக்க இந்த மிஷின். இதுக்குள்ள நீங்க போய் ஒரு பட்டன ப்ரஸ் பண்ணா அதுல உள்ள ரோபாட்டிக் ஹான்ட் அந்த நீலமான டவல் வச்சு துடைச்சு விடும்” என்றது.
“அடக்கருமமே..! டெக்னாலஜி என்னடா இவ்வளவு சோம்பேறித்தனமாவும் கேவலமாவும் யோசிச்சிருக்கு” என்றாள்.
மேலும் அங்கு இருந்த குளியல் அங்கிகள் தொங்குமிடம், ஷவர் செய்யுமிடம் என அனைத்தையும் அது காட்டி முடிக்க,
“சரி இப்ப நான் எங்க சுச்சு போகுறது?” என்றாள்.
“மேம்?” என அது புரியாமல் வினவ,
“அய்யோ.. நான் பாத்ரூம் போகணும்” என்றாள்.
அதுவோ மீண்டும் அவள் முகத்தை ஸ்கேன் செய்து அவள் உணர்வுகளை அறிந்து கொண்டு அவளை கூட்டிச் செல்ல,
‘அய்யோ.. இன்னும் அங்க என்ன கருமம் இருக்கோ’ என நொந்துக் கொண்டாள்.
அங்கு மேற்கத்திய (வெஸ்டர்ன்), இந்திய (இன்டியன்) என தற்போது இருப்பது போன்று தான் இருந்தது. அதில் ஒரு நிம்மதி பெருமூச்சை விட்டவள் “சரி நீ கிளம்பு” என்றாள்.
அதுவும் புறப்பட்டிட தானும் தன் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, குளித்துவிட்டு அந்த குளியல் அங்கியுடன் வந்தாள்.
அவளுக்காக ஜே காத்திருக்கவும், “என்னோட ட்ரஸ்லாம் எங்க இருக்கு?” என அவள் கேட்க,
“கப்போர்ட்ல மேம்” என்றது.
சுற்றி முற்றி ஒரு கப்போர்ட் கூட இல்லாத அந்த அறையை பார்த்தவள் “அடேய்.. நான் குளிச்சு ரெடியாகி சாப்பிட போறதுக்குள்ள என் மொத்த சத்தும் அழிஞ்சுடும் போல. நீயே அந்த கப்போர்ட திற” என்க,
அதுவும் சென்று சுவற்றிலிருக்கும் ஒரு பொத்தானை அழுத்தியது.
அந்த சுவர் இரண்டாகப் பிளந்து உள்ளிருந்து நீண்ட கம்புகளில் வரிசையாக ஆடைகள் தொங்க, ‘இதெல்லாம் என்னோட ட்ரஸ்ஸாக்கும். இதைக் கேட்டா இந்த கூகுள் ஆமா மேம்னு பவ்யமா மண்டைய ஆட்டும்’ என மனதோடு புலம்பியவள் அதிலிருந்து ஒரு டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸை எடுத்துக் கொள்ள, அறையின் ஒரு மூலைக்கு சென்று மீண்டும் ஒரு பொத்தானை அழுத்தியது.
சீலிங்கிலிருந்து ஒரு ஒளித்திரை உண்டாகி அவளை சுற்றி மறைத்துக் கொள்ள, “இங்க நீங்க ட்ரஸ் சேஞ் பண்ணலாம் மேம்” என்றுவிட்டு வெளியே சென்றது.
உடைமாற்றி வந்தவள் “இங்க பாரு எனக்கு பசியே இல்லை. வா கேஃபே போகலாம்” எனக் கூற,
“ஓஹோ! இல்ல மேம். காலைல சாப்பிடாம உங்களால வீட்டைவிட்டு வெளிய போக முடியாது” என்றது.
“ஏதே?” என அவள் வினவ,
“காலைல நீங்க சாப்பாடு சாப்ட தட்டை ஸ்கேன் பண்ணி அதுல வர்ற கோட டோர்ல உள்ள ஸ்கேனர்ல அப்ளை பண்ணினா மட்டும் தான் உங்களுக்கு டோர் ஓபன் ஆகும். அப்படி இங்க உள்ள எல்லார் வீடும் டிசைன் பண்ணப்பட்டிருக்கு” என்றது.
“இதென்னடா புதுசு புதுசா சொல்ற?” என அவள் வினவ,
“ஒரு இருபது முப்பது வருஷத்துக்கு முன்னாடி மக்கள் நிறைய பேர் காலை உணவை தவிர்த்துட்டு செல்றதையே வழக்கமா வச்சிருந்திருக்காங்க. அதனால குடல்புண், ரத்த அழுத்தம்னு நிறைய நோய் வர ஆரம்பிச்சு, அதனால மக்களோட இறப்பு அப்போ ரொம்ப அதிகரிக்க ஆரம்பிச்சுது. அதனால தான் இப்படி ஒரு சிஸ்டம் கொண்டு வந்தாங்க” என ஜே கூறியது.
‘எவ்வளவு நல்ல திட்டம்’ என மனதினுள் மெச்சிக் கொண்டவள் உணவு மேஜையை அடைய, இளா, அவர்கள் தந்தை தமிழ்வேந்தன் மற்றும் தாய் அன்புக்கரசி அமர்ந்திருந்தனர்.
“வா அகா.. எவ்வளவு நேரம் வெயிட் பண்றது. அவ காலேஜ் போக வேணாம்” என்ற அன்புக்கரசி கூற,
“சாரி மாம்” என்றபடி அமர்ந்தாள்.
வீட்டுக்கென்று இருக்கும் ஒரு ரோபோட் அவர்களுக்கு உணவினை பரிமாற, வேகமாக சாப்பிட்டு முடித்தாள்.
ஜே வந்து அவள் தட்டை, அவளது அந்த கண்ணாடி தகட்டு அலைபேசியில் ஸ்கேன் செய்துக் கொள்ள, கை கழுவுவதற்கு ஒரு கிண்ணம் வந்து சேர்ந்தது. அதில் கையை அலம்பிக் கொண்டவள் “ம்மா.. வரேன்” என்றுவிட்டு ஜேவுடன் புறப்பட்டாள்.
“ஏ எதுல போறோம்?” என அவள் கேட்க அவளை அன்டர்கிரவுண்டுக்கு கூட்டிச் சென்றது.
அங்கு ஒரே ஒரு கார் மூன்று மிதிவண்டி இருந்தது. அதைக் கண்டு ஆச்சரியமுற்றவள்,
“ஏ ஜே.. நான் இவ்ளோ பெரிய பணக்கார வீட்ல இருக்கேன், என்கிட்ட ஒரே ஒரு கார் தான் இருக்கா?” என வினவ,
“ஆமா மேம்” என்றது.
“ஏன் இப்படி? இப்ப நான் இதை எடுத்துட்டு போயிட்டா அப்பா எதுல போவாங்க?” என அவள் வினவ,
“அவங்க வண்டி சொல்லிப்பாங்க மேம். இது உங்க கார்” என கூறியது.
“ஏன் இன்னொரு கார் வாங்க கூடாதா?” என அவள் கேட்க,
“ஒரு வீட்டுக்கு ஒரு கார் தான் இருக்கணும் மேம். இன்னொரு கார் வாங்கணும்னா ரெண்டு கோடி பைன் கட்டனும். வருஷா வருஷம் அந்த கார பயன்படுத்துறது பொருத்து பே பண்ணிட்டே இருக்கணும்” என அது கூறியது.
“ஆத்தாடி..” என்றவள், “நமக்கு எதுக்கு இன்னொன்னு? வா வா..வந்து வண்டிய எடு” எனக் கூற இருவரும் சென்று அமர்ந்தனர்.
நல்ல சொகுசாக இருந்த காரில் சாய்ந்து அமர்ந்து கொண்டவள்,
“டீசல்லாம் புல்லா இருக்குல?” என்க,
“டீசல்? அதென்ன மேம்?” என்றது.
அதை வியப்பாகப் பார்த்தவள், “பெட்ரோல் காரா?” என்க,
“பெட்ரோலா?” என்றது.
“ஆமா. அதில்லாம கார் எப்படி ஓடும்?” என்று அவள் வினவ,
மீண்டும் தன்னுள் ஏதோ ஸ்கேன் செய்த ஜே “ஓ.. பெட்ரோல். மேம் நீங்க சொல்ற பெட்ரோல்லாம் கிடையாது மேம்” என்றது.
“கிடையாதா?” என அவள் வியப்பாக வினவ,
தன் கண்ணிலிருந்து ஒரு ஒளி திரையை உருவாக்கியது. அதில் படம் போல உருவான கதையை ஜே கூறியது.
“நீங்க சொல்ற இந்த பெட்ரோல் 1859ல தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனா அப்போ இதோட பயன்பாடு குறைவான அளவுல தான் இருந்தது. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுக்கு மேல இது அதிகளவு பயன்பட்டது. ஒரு வீட்டுக்கு மூனு நாலு வண்டினு இருந்தது. இதுனால நிறைய காற்று மாசுபாடு ஏற்பட்டதும் இல்லாம ஒரு கட்டத்துல நிலத்தடியில பெட்ரோலே தீந்தும் போயிடுச்சு” என ஜே கூற,
“ஏதே..தீந்து போச்சா?” என்றாள்.
“ஆமா மேம். 2045ஐ ஒட்டி ரொம்ப தட்டுபாடு ஏற்பட்டுச்சு. அதுக்கு பிறகு காலியாகிப் போச்சு. ஆனா தட்டுப்பாடு ஏற்படும்போதே நம்ம முக்கால்வாசி எல்லாத்துலயும் மின்சார பயன்பாட்டுக்கு மாறிட்டோம். இயற்கை எரிபொருளும் உருவாக்கியாச்சு. HEFA-SPK fuel அப்படிங்குற உயிரி எரிபொருள் தான் இப்ப வான்வழி உபயோகத்துக்கு பயன்படுது. இப்ப இருக்குற கார், பைக், ஸ்டவ்னு எல்லாமே மின்சாரம் தான். எலிக்டிரிக் பயன்பாட்டுக்கு இப்ப எல்லார் வீட்டு மாடிலயுமே சோலார் பேனல் கண்டிப்பா பொருத்தப்பட்டிருக்கும் மேம்” என்று ஜே கூற அகா வியந்து தான் போனாள்.
என்றோ தன் பாடத்திட்டத்தில் ‘பெட்ரோல் என்பது நமது எதிர்காலத்தில் தீர்ந்து போகும் வாய்ப்புகள் அதிகம்’ என்று படித்த நினைவுகள் அவள் மூளையில் அணிவகுத்தன.
“சரி வா போவோம்” என அவள் கூற ஜே வண்டியை இயக்கியது.
சாலை விதிமுறைகள் யாவும் அத்தனை கடுமையாக இருந்தது. அவள் சிறுவயதில் வெளிநாட்டில் உள்ள சாலை விதிமுறைகள் பற்றி கேள்விபட்டு ஆச்சரியப்பட்ட யாவும் தற்போது அவள் கண் முன் தெரியவே மேலும் குழம்பிப் போனாள்.
“நம்ம எந்த கன்ட்ரீல இருக்கோம்?” என அவள் வினவ,
“இந்தியா மேம். தென்னிந்தியா, தமிழ்நாடு” என்றது.
வெளியே எட்டிப்பார்த்தபடி வந்தவள் சுற்றி இருந்த பச்சை பசேலென்ற மரங்களை கண்டு “இவ்ளோ மரம் ஹை-டெக் சிட்டில எப்படி?” என்றாள்.
“ஹை-டெக் சிட்டீஸ்ல தான் முக்கியமா மரங்கள் இருக்கும் மேம். இந்த நவநாகரீக சிட்டிகள்ல ஒலி மற்றும் ஒளி மாசுபாடு ரொம்பவே அதிகமா இருக்கும். இந்த பிரச்சினைல ஒருசில இடங்களில் காது கேட்காம போற பிரச்சினை, கண்ணு மங்களாகும் பிரச்சினை நிறைய உருவாக ஆரம்பிச்சது. இந்த குறைபாடுகளோட மூலகாரணத்தை ஆராய்ச்சி செஞ்சப்போ வண்டிகள் ஏற்படுத்தும் இரைச்சலும், ஒளியும் தான் காரணம் அப்படினு தெரிஞ்சது. அதனால தான் இந்த மரம் வளர்ப்பு சிஸ்டத்தை கொண்டு வந்தாங்க” என்று ஜே கூறியது.
“கண்ணாடிய திருப்பினா வண்டி ஓடுமா ஜீவா? இதுக்கும் மரம் வளர்க்குறதுக்கும் என்ன சம்மந்தம்?” என அகா வினவ,
“மரங்களோட பசுமை, ஒரு மஃப்ளிங் எஃபெக்ட் (mafling effect) கொண்டிருக்கும். அது தன்னை அடையும் ஒலியோட அளவைக் குறைக்கும்” என்றது. அத்தனையும் வியப்புடன் கேட்டவளுக்கு மனதில் மேலும் படபடப்பு கூடியது.
அவர்கள் வரவேண்டிய கெஃபேவை அடைய, அங்கு அவள் தோழர்கள் மூவரையும் கூட்டிக் கொண்டு அந்த காரும் வந்து நின்றது. அந்த காரை ஓட்டி வந்த இயந்திர மனிதனுக்கான கூலியை கொடுத்து அனுப்ப
ஜே சென்றிட, நால்வரும் உள்ளே சென்றனர்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நல்ல நட்பு
Thank you so much akka 🥰😍
ஒரே தட்டில் சாப்பிட்டு ஒரே மட்டில் ஊறி வளர்ந்தவங்க. 😍😍
அசத்தலான ஆரம்பம் ♥️
அருகருகே வீடுகளில் ஒரே வயதை ஒத்தவர்கள் நண்பர்களாக அமைவது வரம்.
நால்வரின் நட்பும், குடும்பத்தின் மீதான பொறுப்புணர்வும் அருமை.
கனவுகளில் மட்டுமே சாத்தியமாக கூடிய ஒன்று நிஜத்தினில் நடந்தால்!
“என் வீட்ல நா மட்டும் தான் பழைய மாடல் போல” 🤣🤣
Breakfast scanner door lock connected system, electric vechicles, model amenities, Hefa spk fuel and muffling effect 👏🏼👏🏼.
Wonderful explanations.
வாழ்த்துகள்டா 👏🏼🥰🥰❤️
அடடா😍 உங்க கமென்ட் பார்த்தே ரொம்ப சந்தோஷமா இருக்கு சிஸ்😍 மிக்க நன்றி அக்கா 🥰😍❤️ அத்தியாயம் உங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி😍❤️