
மௌனமாய் உன்னை நானே…
மனப்பாடம் செய்கின்றேன்.
யான் நீயே 1
“ம்மாஆஆஆ…”
வீட்டு பின்கட்டில் கட்டியிருந்த ‘ஆ’க்கள் ஒரே குரலில் தங்கள் இருப்பை காட்டின. அலறின என்பது சொல்வது சரியாக இருக்குமோ?
நள்ளிரவில் கட்டுத்தறியில் உறங்கிக்கொண்டிருந்த அனைத்து மாடுகளும் சலசலப்பை எழுப்பிட…
வீட்டுக்குள் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த மனிதர்கள் அனைவரும் விழித்துக் கொண்டனர்.
“என்னாச்சு தெரியலையே?” வீட்டின் மூத்த பெண்மணி மீனாட்சி வேகமாக சென்று அடைந்திருந்த கொல்லைப்புற கதவின் கொண்டியை கழட்டிட…
“ஏன் இப்படி கத்துதுங்க?” என்று கையில்லா பனியனுடன், வேட்டியை மடித்து கட்டியபடி வேக எட்டுக்களுடன் மீனாட்சியை கடந்து சென்றான் ‘வீர அமிழ்திறைவன்.’
வீட்டிலிருக்கும் நபர்கள் அனைவரும் ஒவ்வொருவராக கட்டுத்தறி இருக்கும் இடம் நோக்கி வர…
“அடேய் லிங்கம் வண்டி சாவியை கொண்டாடா… கரியனை தூக்கிட்டானுவ!” என்று உரக்க குரல் கொடுத்த வீரனிடம் அப்படியொரு வேகம்.
“களவாணிப்பயலுவ களவாண்டுட்டானுவளா? வருசா வருசம் இவனுவலுட்ட எ(ம்)வூட்டு மாட்டை காப்பந்து பண்ணறதே வேலையே இருக்கே” என்று நெஞ்சில் கை வைத்து அங்கிருந்த திண்டில் அப்பத்தா அமர்ந்திட…
“அப்பத்தா வாப்பெட்டியை சாத்து. வண்டி சத்தம் கேட்குதே! ரொம்ப தூரம் போவலமாட்டிக்கு…” என்று தன்னெதிரே எதிர்ப்பட்ட தனது தந்தையை கண்டு வீரன் தன்னுடைய நடையின் வேகத்தை குறைக்க…
“கரியன் லேசுல மாட்டுற ஆளில்லையேப்பு…” என்றார் முத்துவேல் பாண்டியன்.
“மயக்க மருந்து போட்டானுவலா தெரியலையே!” என்று அதற்கும் மீனாட்சி தன் சத்தத்தை கூட்ட…
“அப்பத்தா செத்த சும்மான்னு இரு” என்று அதட்டிய வீரன்,
“மாமாக்கு ஃபோன் போட்டு சொல்லுங்கய்யா. அவனுவ நம்ம ஊர் எல்லையை தாண்டக்கூடாது” என்று ருத்ரனாக கர்ஜித்தான்.
“ம்மா” என்று மீனாட்சியை பார்த்துக்கொள்ளுமாறு தனது அன்னை அபிராமிக்கு கண்காட்டியவன், முன் வாசலுக்கு வர… லிங்கம் வீரனின் வண்டியை தயாராக வைத்திருந்தான்.
இவை யாவும் இரண்டு நிமிடங்களில் நடந்திருந்தன.
“லிங்கம் நீ உன் வண்டியல தெக்க பக்கட்டு போல” என்று கூறிய வீரன், கரியனை தூக்கியவர்களின் வண்டி சத்தம் கேட்டதற்கு எதிர்பக்கம் சீறினான்.
“ஆத்தா உம்ம மருமவனுக்கு போன போட்டு விசயத்தை சொல்லும்” என்ற முத்துவேல் பாண்டியன், தன்னுடைய பண்ணையில் வேலை செய்யும் ஆட்களுக்கு தகவல் சொல்லி அவர்களையும் விரட்டினார்.
“வீரன் உன்கிட்டதானப்பு சொன்னான். நீயே சொல்ல வேண்டியதுதானே” என்ற போதும் மீனாட்சி தன்னுடைய மகளின் கணவனான மருதய்யனுக்கு போன் செய்தார்.
பொங்கல் என்றாலே இது வழமையாக நடப்பது தான்.
இவர்களின் கிராமம் விளாங்குடி. மதுரையிலிருந்து ஆறு கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
வருடா வருடம் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் மதுரையை சுற்றியுள்ள ஊர்களில் எங்கு ஜல்லிக்கட்டு நடைபெற்றாலும், வெற்றி பெறுவது கரியன் தான்.
கரியன் தன் திமிலை உதறி, வாடிவாசலில் அடி வைத்திட்டாலே கை தட்டலும், விசில் சத்தமும் விண்ணை முட்டும். கரியனுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
கரியன் களத்தில் இறங்கினால், மாடுபிடி வீரர்கள் தோல்வியை தழுவுவது உறுதி. இதுவரை ஒருவரும் கரியனை அடக்கியதில்லை.
கரியனை வாடிவாசலில் இறங்கவிடாது செய்வதற்காகவே கடந்த மூன்று வருடங்களாக, பொங்கல் நேரத்தில் களவாட நிறைய முயற்சிப்பர். சிலர் தங்கள் ஊர் ஏறுதழுவலில் கரியனை தங்கள் சார்பாக இறக்கிட களவு செய்வர். போனமுறை அந்த முறையில் தான் கரியனை தூக்க கட்டுத்தறிக்கு வந்தவனை ஒற்றை கொம்பில் சுழற்றி வீசியிருந்தது.
இம்முறையும் அதுவே. போனமுறை அனுபவத்தால் கரியனுக்கு விலங்குகளுக்கு செலுத்தும் மயக்க ஊசி போட்டு வண்டியில் ஏற்றியிருந்தனர். மற்ற மாடுகள் சத்தமிட்டு வீட்டு ஆட்களை எழுப்பி விடுமென்பதை எதிர்பார்க்காத எதிராளிகள் அவசரமாக வண்டியை கிளப்பியிருந்தனர்.
“மகா எந்திருடி. கரியனை தூக்கிட்டானுவலாம். உம் அம்மை ஒப்பாரி வைக்குதா! நான் ஒரு பக்கட்டு போயி என்னான்னு பாக்குதேன்” என்று படுக்கையிலிருந்து எழுந்த மருதன் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பிட… மகாவும் வாசலுக்கு வந்திருந்தார்.
வீரன் கரியனை தூக்கி செல்லும் வண்டியை சில நிமிடங்களில் பார்த்துவிட்டான்.
நிச்சயம் பின்னால் துரத்தி வருவார்கள் என்பதால் வண்டி ஊருக்குள் தான் பதுங்கியிருந்தது. அதனை கணித்தே லிங்கத்தை ஊருக்கு வெளிப்புற பாதையில் அனுப்பினாலும் வீரன் உள்ளுக்குள் சென்றான்.
லிங்கத்திற்கு அழைத்த வீரன்,
“வண்டியை பார்த்துட்டேன் லிங்கு. என்னை கண்டுட்டு மதுரை சாலைக்கு வாரானுவ, நீய்யி எதுக்கால வா. மாமாக்கும் விசயத்தை சொல்லு” என்று வைத்திட்டவனின் வேகம் மட்டும் சற்றும் குறையவில்லை.
சில நிமிடங்களில் தனக்கு முன்னால் தன்னை கண்டு வேகமாக சென்று கொண்டிருந்த மினி டெம்போவை கடந்து சில அடிகள் முன்னால் சென்ற வீரன் தன்னுடைய இருசக்கர வாகனத்தை வளைத்து திருப்பி டெம்போவை எதிர் நோக்கி பாய்ந்தான்.
டெம்போவும் வீரனின் வண்டியும் ஒன்றையொன்று முட்டிக்கொள்ள சில இன்ச் இடைவெளியே இருக்க… இருவருக்கும் இடையில் புகுந்திருந்தார் மருதய்யன்.
எதிர்பாராது புகுந்துவிட்ட மருதனின் வேகத்தில் டெம்போ சாலையை உராய்ந்தபடி கிரீச்சென்று நின்றிட, மருதனின் மீது மோதிவிடாதவாறு தன்னுடைய வண்டியை ஒடித்து திருப்பி நிறுத்தியிருந்தான் வீரன்.
மருதனை நோக்கி கூரான பார்வை வீரனிடம்.
“எத்தனை பேர் இருக்கானுவ தெரியல. வூடு பூந்து தூக்கியிருக்கானுவ. தனியா கெளம்பி, சொக்கா கூட மாட்டாம வந்திருக்கீறு” என்று வீரனுக்கு கேட்கும்படி எங்கோ பார்த்துக்கொண்டு மருதன் சொல்லிட, அதனை சற்றும் பொருட்படுத்தாத வீரன், வண்டியிலிருந்து இறங்கி டெம்போவை நோக்கிச் சென்றான்.
டெம்போவை பின்னால் அவர்கள் செலுத்திட… அங்கு தடையாக ஆட்களுடன் மறித்து நின்றான் லிங்கம்.
“சுத்துகட்டு போட்டானுவ பங்காளி.”
டெம்போவிற்குள் ஒருவன் கூறுவது தெளிவாகக் கேட்டது.
டெம்போவிற்குள் ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்திருந்தவன், வீரனை பற்றி ஏற்கனவே தெரிந்திருந்ததாலும், இப்போது அவன் மீசையை முறுக்கிவிட்டபடி அய்யனார் தோரணையில் நடந்து வருவதை கண்டு அஞ்சியவனாக, இமைக்கும் நேரத்தில் கீழிறங்கி வயல்களில் இறங்கி பின்னங்கால் பிடரியில் பட ஓடி மறைந்தான்.
“அண்ணே இது உங்கவூட்டு மாடுன்னு சத்தியமா தெரியாதுங்க… தெரிஞ்சிருந்தா(ல்) வந்திருக்கமாட்டேன்” என்று ஒருவன் வீரனின் முன் மண்டியிட்டு அளறினான்.
“எம்புட்டு நெஞ்சுரம் இருந்தா ஏமுட்டு மாட்டை களவாண்டு வந்திருப்பீக?” என்ற வீரன், “கரியன கீழிறக்கு லிங்கு” என்றான்.
லிங்கம் டெம்போவின் பின்பக்க கதவில் கை வைத்திட, நாலைந்து பேர் வீச்சரிவாள், வேல் கம்போடு அவன் முன்பு குதித்தனர்.
“அண்ணே கரியன் நினைவில்லாமல் படுத்திருக்கமாட்டிக்கு இருக்கு” என்று தடியர்களின் இடைவெளியில் மாட்டை கண்டுவிட்ட லிங்கம் பதற, நொடியில் பின்னால் வந்திருந்த வீரன், லிங்கத்தை தள்ளி நிற்க வைத்துவிட்டு தன்னை நோக்கி வந்த, அரிவாள் கம்பு யாவற்றையும் நொடியில் தூசிபோல் தட்டிவிட்டிருந்தான்.
அதற்குள் லிங்கம் ஆட்களுடன் வண்டிக்குள் ஏறி கரியனுக்கு என்னவென்று பார்க்க… மருதன் கையோடு கொண்டுவந்திருந்த மயக்கம் தெளிய வைக்கும் மருந்தை கரியனின் வாயை பிளந்து உள்ளுக்குள் ஊற்றினார்.
“அத்தை மருந்து கொடுத்து தூக்கியிருப்பானுவ, சந்தேகன்னுட்டு சொன்னாங்கேடா. அதேன் கொண்டுவந்தே(ய்)ன்” என்றார் மருதன்.
“எவம்ல தூக்க சொன்னது?”
இறுதியாக வெளுத்தவனிடம் வீரன் அதட்டி கேட்டிட…
“எல்லாம் பாலமேடு சுப்பு’வாத்தேன் இருக்கும். பல வருசமா நம்ம கரியனை அடக்க பாக்குதான். முடியுறதில்லையே. அதேன் இந்த சோலிய பார்த்திருக்கானாயிருக்கும்” என்றார் மருதன்.
வீரனிடம் வாங்கிய அடி தாங்காது, அவனும் மருதன் சொல்வது உண்மையென ஒப்புக்கொண்டான்.
“போன வருசமும் இதைத்தானே செய்து வாங்குனீக. பத்தலையா? இனி எவனாவது மாட்டை தொட்டு பாக்குறேன்னு வந்தீய்ங்க… அடுப்புல வைக்கிற பொங்கலை உங்க மூஞ்சில வச்சிப்புடுவேன்” என்று அவர்களை தலைதெறிக்க ஓட வைத்திருந்தான் வீரன்.
“என்னாச்சு லிங்கு?”
“அண்ணே… எழும்பலையே!”
“டேய் கரியா!” மயக்கம் தெளிய மருந்து கொடுத்த பின்னரும், விழிகள் திறக்க முடியாது திணறிக் கொண்டிருந்த கரியன் தன்னுடைய வீரனின் ஒற்றை விளிப்பிற்கு திமிலை உதறி, நொடி நேரத்தில் குதித்து எழுந்து நின்றது.
“அடேய்… வண்டிக்குள்ளாரா நிக்கிதோம்டா… உன் திமிலை ஆட்டுறேன்னு வண்டியை சாச்சிப்புடாத” என்று கரியன் எழுந்த வேகத்திற்கு வண்டி ஆடிய ஆட்டத்தில் லிங்கம் பதறி கத்தினான்.
“பலவைய போடு. இறங்கட்டும்” என்ற வீரன்,
“இவனுவல என்ன செய்ய?” என்று மருதனின் முகம் பார்க்காது வினவினான்.
“ஜல்லிக்கட்டுக்கு வாடிவசலில் புடிக்க வேண்டிய மாட்டை இங்கனக்குள்ளேயே புடிக்க வந்துட்டானுக. ஒவ்வொரு பொங்கலுக்கும் இது நடக்கிறதுதானே? என்னத்த தண்டனை கொடுக்கிறது” என்ற மருதன்,”வண்டியை ஓட்டிகிட்டு கெளம்புங்க. இனி ஏமூரூ பக்கட்டு உங்களை பாக்கவே கூடாது” என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்.
கரியன் இறங்கி வீரனின் அருகில் நின்று தலையையும், திமிலையும் ஒருசேர ஆட்டி அவனின் தோளில் நெற்றி இடித்தது.
“அதேன் வந்துட்டேனே. பொறவு என்ன வெசனம்” என்ற வீரன் கரியனின் நெற்றியில் முத்தம் வைத்து, தன்னுடைய இருசக்கர வாகனத்தின் பின்னால் அதனின் கழுத்து கயிற்றின் நுனியை கட்டி… அதனின் நடைக்கு ஏற்றவாறு வண்டியை செலுத்தினான்.
மருதனும் தனது வண்டியில் விறைப்பாக ஏறி அமர…
“வூட்டுக்கு வந்து போவலாமே மாமா!” என்றான் லிங்கம்.
“வர நேரம் வரும். நீயி பார்த்து போ” என்றவர் சென்றுவிட்டார்.
“இவர்கள் மொரப்பாடு எப்போ தீருமோ?” என்று மேல்நோக்கி புலம்பிய லிங்கம், தன்னுடன் வந்திருந்த ஆட்களை அனுப்பி வைத்துவிட்டு தானும் வீடு வந்து சேர்ந்தான்.
“கரியனுக்கு ஒண்ணுமாவலையே! நால்லாயிருக்காய்னா?”
வாசலில் வீரனுக்காக எதிர்பார்த்து அமர்ந்திருந்த மீனாட்சி, வீட்டின் முன்னால் நீண்டு பரந்திருக்கும் சமதள தரையில் வீரனின் வண்டியின் முன் சக்கரம் தொட்டதுமே ஓடிவந்து வழியை மறித்தவராக வினவினார்.
“அப்பத்தா…” என்று அழுத்தி விளித்த வீரன், “பொறவுல தான் நிக்குறான். பாரு” என்றவன், “ஐயா மாடுவலாம் உறங்கியாச்சா?” எனக்கேட்டு தந்தை பாண்டியனின் அருகில் சென்றான்.
“கத்துன கத்துல கலைப்படிஞ்சிபோச்சுவ! தண்ணி காட்டுனதும், குடிச்சிபுட்டு உறங்கிடுச்சுவ” என்றவர், “வந்தானா?” என்று மொட்டையாகக் கேட்டார்.
அவர் யாரை கேட்கிறார் என்பது புரிந்த வீரனுக்கு உள்ளுக்குள் சிரிப்புத்தான். பின்னே மாமன்,மச்சானின் ஒற்றுமை அவனறியாததா?
பாண்டியனின் இந்த பாராமுகம், ஒட்டிக்கொள்ளா பேச்செல்லாம் வீரனின் முன்பு மட்டும் தான்.
“அவன் தான் என்னுடைய முதல் எதிரி. எம்மவனுக்கு ஆவாதவேன், எனக்கும் ஆவாதவேன் தான்” என்று வீர வசனம் பேசும் பாண்டியன், தன்னுடைய மாமன் மருதனை கண்டுவிட்டால் கொஞ்சல் தான்.
மாமன், மச்சான் அன்பு தெரிந்த வீரனுக்கு… எப்போதும் போல் இன்றும், ‘இவர்களுக்கிடையே, இவர்களின் வெளிப்படையான பாசத்துக்கு தான் தான் தடையாக இருக்கின்றோமோ?’ என்று எண்ண வைத்தது.
“என்ன சிந்தனை அமிழ்தா?”
அபிராமி கேட்டிட…
“உண்மையிலே இவுக ரெண்டு பேரும் முறைச்சிக்கிட்டு தான் இருக்காய்ங்களா?” என்றான்.
“ம்க்கும். நீ இருந்தா மட்டுந்தேன்… உன் முன்னுக்க இந்த சடப்பெல்லாம். என்ன ஒன்னு, பாசம் எம்புட்டு இருந்தாலும்… இன்னும் வாப்படியை மிதிக்காமத்தான் இருக்காய்ங்க” என்ற அபிராமியிடமும் வருத்தம்.
அன்றைய நிகழ்வை எண்ணி. வீரனுக்கும்.
******************
மீனாட்சியின் இரண்டாவது மகன் முத்துவேல் பாண்டியன். அவருக்கும் மூத்தவள் தான் மருதய்யனின் மனைவி மகாலட்சுமி.
மீனாட்சியும், மருதய்யனின் தந்தையும் உடன் பிறந்தவர்கள். ஆதலால் சிறுவயது முதலே மருதனுக்கும், பாண்டியனுக்கும் அத்தனை நெருக்கம். உறவாலும், நட்பாலும்.
மருதய்யனுக்கு மகாவின் மீது காதல். வீட்டில் சொல்லிட… இரு குடும்பமும் மனமுவந்து திருமணம் செய்து வைத்தனர்.
மருதய்யன் வீட்டிற்கு மூத்த ஆண் பிள்ளை. தனக்கு இரண்டு மூன்று பிள்ளைகள் வேண்டுமென்று ஆசை. அவரின் ஆசை பல வருடங்கள் நிறைவேறாது ஏக்கமாக வலி சுமந்தே நடந்தது.
அபிராமி பாண்டியனுக்கு வெளி உறவில் எடுக்கப்பட்ட பெண். திருமணம் முடிந்த வருடமே வீரனை பெற்றெடுத்தார். தனது மாமனின் பிள்ளை ஆசை அறிந்த பாண்டியன் தனது மகவை மருதனுக்கே வார்த்து கொடுக்க… மருதன் நெகிழ்ந்துபோனார்.
தன் கரம் ஏந்திய முதல் பிஞ்சுவின் மீது கொள்ளைப்பிரியம் வைத்தார். வீரன் பிறந்த இரண்டு வருடங்களுக்கு பின்னர், அபிராமிக்கு லிங்கம் பிறக்க, மகாவுக்கு பிரேம் பிறந்தான். லிங்கத்திற்கு அடுத்து அழகு நாச்சியார். அவ்வீட்டின் கடைக்குட்டியாக, மருதனின் இளவரசியாக பிறந்தாள் தங்க மீனாள். இவளுக்கு அடுத்து மகா, மருதன் தம்பதியருக்கு பிறந்த கடைசி வாரிசு அங்கை. வீரனின் செல்லக்குட்டி.
இவர்களது குடும்பத்தொழில் விவசாயம் தான். மருதனும், பாண்டியனும் சேர்ந்து மதுரையில் சுற்றுலாவாசிகளை அடிப்படையாக வைத்து, உணவு மற்றும் தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல் தொழிலை ஆரம்பித்தனர். நன்கு முன்னேற்றம் கண்டு மாவட்டத்திலேயே நான்கைந்து கிளைகள் கொண்டுள்ளனர்.
வீரன் முதுகலை படித்திருந்தபோதும், தந்தை மற்றும் மாமனுக்கு ஓய்வு கொடுக்க எண்ணி தங்களது தொழிலை கையில் எடுத்துக்கொண்டான். பேச்சுவார்த்தை இல்லையென்றாலும் தொழில் லாபத்தில் சரிபாதியை மருதனின் கணக்கில் செலுத்திடுவான்.
ஒரு கட்டத்தில் விவசாயத்திலும் அவனது நாட்டம் செல்ல… இயற்கை முறையில் பயிரிடத் தொடங்கி முன்னேற்றம் கண்டான். அதனை தொடர்ந்து தன்னுடைய சொந்த முயற்சியில் அரிசி ஆலை தொடங்கினான். விளாங்குடிக்கும் மதுரைக்கும் இடையில் முக்கிய சாலையில் அமைந்துள்ளது. மதுரை முழுக்க வீரனின் அரிசி ஆலை மற்றும் மண்டி பிரபலம். கொள்முதல், விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, அனைத்திற்கும் இங்குதான் வருவர். பாதி நேரம் அவனின் நாள் ஆலையில் தான் கழியும்.
வீரன் விவாசயம், ஆலையென்று இறங்கிட… லிங்கம் படிப்பை முடித்து ஹோட்டலை தன் கையில் எடுத்துக்கொண்டான். வீரனாக பொறுப்பை ஒப்படைத்தான் என்பது சரியாகும். அங்கு அனைத்தும் லிங்கத்தின் கீழ் தான் என்றாலும், தின நடவடிக்கைகள் மற்றும் கணக்குகளை அண்ணனிடம் தவறாது உரைத்திடுவான்.
பிரேம் நகரத்தில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். ஊர் என்றாலே அவனுக்கு அதிர்வு தான். அறியாத வயதில்… அப்படி சொல்லிவிட முடியாது, அறிந்த வயதில் தெரியாது செய்த செயலின் வீரியம் மனதளவில் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக குடும்பம் உறவை பாசத்தை விட்டுவிட முடியாதே! விடுமுறை மற்றும் விசேட நாட்களில் ஓடிவந்திடுவான்.
அழகு நாச்சி கடந்த வருடம் இளங்கலை முடித்திருக்க… மேலே படிக்க ஆர்வமில்லாததால் வீட்டோடு இருக்கிறாள். அப்பப்போ ஆலைக்கு அழைத்துச் சென்று கணக்கு வழக்குகளை பார்க்க வைப்பான் வீரன். அவனுக்கு தங்கை மேலே படித்து நல்ல வேலைக்கு போக வேண்டுமென்கிற ஆசை இருந்தது. ஆனால் அவளின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து எதையும் திணிக்காமல் விட்டுவிட்டான். தங்கைக்கு தையலில் ஆர்வமென்பதை அவனாக கண்டுகொண்டு அதற்கான வகுப்பிற்கு தற்போது அனுப்பி வைக்கின்றான்.
மீனாள் படிப்பில் கெட்டி. அவளுக்கு இந்த வேலைக்கு செல்ல வேண்டுமென்று ஒரு பெரும் கனவுண்டு. அதற்காக படிக்க வேண்டும். நிறைய படிக்க வேண்டுமென்பது மட்டுமே ஆசை. முதுகலை முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள்.
அங்கை இப்போது தான் பள்ளி உயர் கல்வியில் முதல் வருடம். வீரனுக்கு அங்கை என்றால் அதீத பாசம். அவளும் அவனுடன் தான் அதிகம் சுற்றித் திரிவாள். தங்கையை விவரம் தெரியாத வயதில் தூக்கி பழகியிருந்தாலும், அவனை பெரிய மனிதனாக உணர வைத்தது அங்கை தான். அவளை தன் குழந்தைபோல் பாவித்து கையில் ஏந்திய தருணம் எப்போது நினைத்தாலும் அவனின் இதழில் புன்னகையை தோற்றுவிக்கும்.
வீரனுக்கு அடுத்து ஐந்து பிள்ளைகள் பிறந்திருந்தாலும், மருதனுக்கு வீரனின் மீது அதீத பாசம். அவரின் மார்பை உதைத்த முதல் பிஞ்சு பாதம் அவனுடையதல்லவா. விட்டுக்கொடுத்திடுவாரா?
அப்படி அவர் விட்டுக்கொடுத்து பேசிய நாளும் ஒன்று உள்ளது. அந்நாளின் கசப்பு… வீரன் பேசிய வார்த்தைகள் அவரின் மனதை அதிகமாக காயப்படுத்திவிட்டது. மருதனின் பதில் தாக்குதல் அதைவிட அதிகமாக வீரனை தாக்கியது. அதில் இருவருமே உறவளவில் விலகி நின்றுகொண்டனர்.
மனதளவில்? அவ்விருவருக்கு மட்டுமே தெரியும்.
பிரச்சனையின் மூலகர்த்தாவான பிரேம் வீரனிடம் ஒட்டிக்கொண்டு தான் திரிகிறான். அவனுக்கு மட்டுமல்ல மற்ற பிள்ளைகளுக்கும் எதுவென்றாலும் வீரன் வேண்டும். இதில் தங்க மீனாள் மட்டும் வீரனிடமிருந்து கொஞ்சம் தள்ளி நிற்பாள். அளந்து பேசுவாள். அதற்கு வீரனின் அன்றைய பேச்சு காரணமாக இருக்கலாம்.
மீனாளின் விலகல் எல்லாம் அவளளவில் மட்டுமே!
வீரன் மற்ற ஐவரிடமும் காட்டும் அக்கறை அன்பை கொஞ்சமும் குறையாது மீனாளிடமும் காட்டிடுவான்.
அன்றைய நிகழ்வுக்கு பின்னர் மருதனின் வரவு இங்கு முற்றிலும் நின்று போக, பிள்ளைகள் இரு வீட்டுக்கும் பாலம் அமைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
மருதனும் தன் பேச்சை வீரனிடம் மட்டுமே நிறுத்திக்கொண்டார். இருப்பினும் வீரனென்றால் அன்றைய பாசம் இந்த நொடியும் அவருக்கு குறையாது உள்ளது.
ஆதலாலே வீரன் ஒத்தையாக கரியனைத்தேடி சென்றிருக்கிறான் என்றதும் விரைந்து ஓடி வந்திருந்தார்.
அவரின் பாசத்தை தள்ளி நின்றாலும் மனதால் உணரப்படுபவனுக்கு… அன்றைய மருதனின் வேறுபாடான பேச்சு இன்றும் வருத்தத்தை கொடுக்க அபிராமி பேசுவதை கவனத்தில் கொள்ளாது தனது அறைக்கு சென்றுவிட்டான்.
“அமிழ்தன் போயிட்டானா?” உள்ளே வந்த மீனாட்சி, கூடத்து தூணில் சாய்ந்து உட்கார்ந்தவராக அபிராமியிடம் கேட்க…
“போயிட்டான் அத்தை” என்ற அபிராமி, “தூங்கலையா?” எனக் கேட்டு அவரின் முன் அமர்ந்தார்.
“நம்ம வூட்டுக்கு ஒண்ணுன்னதும் ஓடிவந்தியான் பார்த்தியா? அவனுக்கு ஏதுமாட்டிக்கும்ன்னா இங்கிருந்தும் ஓடுவானுவ. பொறவு என்னத்துக்கு சடவுன்னு தெரியல” என்று தினமும் புலம்பும் பேச்சை இப்போதும் பேசினார் மீனாட்சி.
“எனக்கொரு ரோசனை அத்தை” என்று, கொல்லை புறத்திலிருந்து வீட்டிற்குள் நுழைந்த பாண்டியனை பார்த்துக்கொண்டே கூறினார் அபிராமி.
“என்ன சங்கதி?” பாண்டியனும் அவர்களுக்கு அருகிலிருந்த ஊஞ்சலில் அமர,
“கரியனுக்கு தண்ணீ காட்டிட்டேங்க. நானு உறங்க செல்லுதேன்” என்று வந்த லிங்கம் அவர்களின் பேச்சு கேட்டதும், காதினை கூர்மையாக்கி படிகளில் மெல்ல ஏறினான்.
“மீனாளுக்கும், அமிழ்தனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிப்புடலாம்” என்றார்.
“ஆத்தீ…” லிங்கம் நெஞ்சில் கை வைத்துக்கொண்டான். சத்தமில்லாமல் அளறிவிட்டான்.
“அண்ணே அன்னைக்கு பேசுன பேச்சுக்கு அந்தபுள்ள பக்கமே வரமாட்டிக்கு. இதுல இவுக கோர்த்துவிடப் பார்க்குறாய்ங்க” என்று முணுமுணுத்தவனாக சென்றுவிட்டான்.
“இது நடக்குமாட்டிக்கு உனக்கு தோணுதாக்கும்” என்ற அப்பத்தாவிடம் மட்டுமல்ல, கேட்ட அபிராமிக்குமே அந்த நம்பிக்கை இல்லை.
“ஆசைதான். நடந்தாக்கா நல்லாயிருக்கும்” என்ற பாண்டியன், “செத்த கட்டையை சாயிங்க” என எழுந்து சென்றார்.
“நான் இங்கனக்குள்ளவே உறங்குறேன். நீயி போத்தா” என்று கூடத்துலே படுத்து கண் அயர்ந்தார் மீனாட்சி.
புலம்பியபடி மாடியேறிய லிங்கம் படியில் கால் இடறி பொத்தென்று அமர்ந்திட… மர பலகையால் ஆன படி என்பதால் சத்தம் கேட்டு தனதறையிலிருந்து வந்த வீரன்…
“இன்னுமாட்டிக்கு உறங்காமல் என்ன செய்யற நீயி?” என்ற அதட்டலோடு தம்பியை தூக்கி விட்டு, அவனின் காலினை ஆராய்ந்தான்.
“அடியெல்லாம் இல்லைங்கண்ணே” என்ற லிங்கம், “உங்க கல்யாணப்பேச்சு பேசுறாய்ங்க” என்றான்.
“பொண்ணு யாராம்?”
“அண்ணே?” வீரனின் கேள்வியை நம்ப முடியாது விழி விரித்தான் லிங்கம்.
“காலா காலத்துல நடக்க வேண்டியது நடந்து தானேடா ஆவனும்” என்ற வீரன், “நாச்சியாவுக்கு முடிச்சிட்டு பொறவு பார்ப்போம்” என்று நகர்ந்தான்.
வீரன் இப்படித்தான். போகிறபோக்கில் வாழ்வை எதிர்கொண்டுவிடுவான். அவனின் பக்குவம் யாருமே எதிர்பாராத வகையில் இருக்கும்.
“பொண்ணு மீனுக்குட்டியாம்” என்றான். வீரனின் பிரதிபிலிப்பு என்னவாக இருக்குமென்பதை தெரிந்துகொள்ள, செல்லும் அவனின் முதுகை பார்த்து வேகமாக கூறியிருந்தான்.
“ஹோ” என்று எவ்வித பாவனையும் காட்டாது சாதாரணமாக குவிந்து ஒலித்தது அவனது அதரங்கள்.
“ஷாக் ஆவீங்க நெனைச்சேன்.” லிங்கம் உண்மையை மறையாது கூறினான்.
“அவளுக்கு வேணுமின்னா ஷாக்கா இருக்கலாம்” என்றான் வீரன்.
“அப்போ நீங்க எதிர்பார்த்தீங்கமாட்டிக்கு!” லிங்கம் புருவம் உயர்த்தினான்.
“ஏண்டா… அவ எனக்கு அத்தை மவ, கல்யாணம் பேச்செடுத்தாக்கா இப்படியொரு ரோசனை வருமின்னு கூடவா தெரியாது” என்று வேகமாக மொழிந்த வீரன், “போயி சோலியை பாரும்” என்று தம்பியின் முதுகிலே தன் கழுத்தில் கிடந்த துண்டால் தட்டிவிட்டு சென்றான்.
“இவீங்க மனசுக்குள்ளார என்னத்தையோ மறைக்குதாக” என்று முணுமுணுத்த லிங்கம், “என்னைக்காச்சும் தெரியுமாட்டிக்கு” என்று நகர்ந்தான்.
காலை எழுந்ததும் வயலை சுற்றி நடந்து வந்த வீரன், கட்டுத்தறிக்கு சென்று அங்கிருக்கும் கால்நடைகள் மற்றும் பறவைகளை பார்வையிட்டான்.
“அண்ணே கரியன் மட்டும் நீங்க வச்சாதேன் உண்குவேன்னு சலம்புறான்” என்று கால்நடைகளை பராமரிக்கும் கண்ணாயரம் சொல்லிட,
கூடையிலிருந்த பருத்தி கொட்டையை கை நிறைய அள்ளி கரியனின் வாயருகே நீட்டினான்.
அதுவரை முரண்டு பிடித்துக்கொண்டிருந்த கரியன் சமத்தாக உண்ணத் துவங்கியது.
“வர வர இவன் ரொம்பத்தான் பகுமானம் பண்ணுதான் அண்ணே” என்ற கண்ணாயரம் அடுத்த மாட்டை கவனிக்கச் செல்ல, வீரனின் பார்வை அங்கிருந்த தோட்டப் பகுதியை கடந்து சற்று தொலைவில் தென்பட்ட வீட்டின் மொட்டை மாடியில் பதிந்தது.
“பனி விலகாம மேலுக்கு முழுகியிருக்கா! பொறவு தலை நோவுன்னு கத்துவாள்” என்று மெல்ல சடைத்தவனின் பேச்சினை பாதி கேட்டும் கேட்காது அருகில் வந்த லிங்கமும், நாச்சியும்…
“அங்கனக்குள்ள என்னத்தண்ணே பார்த்திட்டு இருக்கீய்ங்க?” என்று ஒருசேர வினவினர்.
வீரன் பதில் சொல்லாது தனது பார்வையையும் மாற்றாது, அவர்களையும் பாராது, கரியன் உண்டு முடிப்பதற்கு காத்திருந்தவன் போல் தனது கை காலியானதும் ஓடும் வாய்க்காலில் குனிந்து கையினை கழுவினான்.
“அங்குட்டு தெரியுற மீனாவையாண்ணே பார்த்திட்டு இருந்தீய்ங்க?”
வீரனின் மனசை ஓரளவுக்கு அறிந்திருந்த நாச்சியா, அவனை சீண்டி பார்க்கும் விதமாக கேட்டிட,
“ம்க்கும்… பார்த்துப்புட்டாலும்” என்று நொடித்த லிங்கம், “இந்த தென்னந்தோப்பு தாண்டி அங்குட்டு மாடியில முடியை உணத்துர மீனாவை ஏன் அவுக பார்க்கப்போறாவ! தோட்டத்துல செடிலாம் காய்ச்சிக்கிடக்கா பார்திருப்பாய்ங்க” என்றான்.
“ஆமாவாண்ணே?” என வீரனிடம் கேட்ட நாச்சியிடம் அப்படியொரு விஷமப் புன்னகை.
“பார்த்திருந்தாலும் என்ன தப்பிருக்குமாட்டி” என்ற வீரன் பார்வையாலே தங்கையை கண்டித்திருந்தான்.
“கோர்ஸ் எப்போ முடியுது?”
“இன்னும் ரெண்டு மாசம் இருக்குண்ணே” என்ற நாச்சி, “பொட்டிக் வச்சித்தறீங்களா?” என்று ஆசையாகக் கேட்டாள்.
“மொத யாருக்கிட்டவாச்சம் சேர்ந்து கொஞ்சநா(ள்) நீக்கு போக்கு கத்துக்கோ. பொறவு வச்சிக்கலாம்” என்றவன், “வாத்து குட்டையை சுத்தம் பண்ண சொல்லு லிங்கு. கோழிங்க கூண்டு புதுசு மாத்த சொல்லு” என்று சொல்லிச் சென்றான்.
“நீயேன் நாச்சியா அண்ணனை சீண்டுறா மாறி பேசுற?” வீரன் தலை மறைந்ததும் லிங்கம் தங்கையிடம் வினவினான்.
“மீனாள் மேல அண்ணேக்கு விருப்பம் இருக்குமாட்டிக்கு அண்ணே.”
நாச்சியா சொல்லியதை நம்ப முடியாது அரண்டு பார்த்தான் லிங்கம்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
20
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சூப்பர் … காதல் குடும்பம்னு கதை நல்லா நகருது … வீரன் பெயரிலேயே நான் விழுந்துட்டேன் … எதுக்கு அடிச்சிப்போம்னு தெரியாது … எதுக்கு சேருவோம்னு தெரியாது … ஏன்னா நாங்க மதுரைக்காரங்கலே … ❤️
வாவ்… நீங்க மதுரைக்காரய்ங்களா… சூப்பர் சூப்பர்… நன்றி சிஸ் 🥰❤️
அதிரடியான ஆரம்பம். வீரமும் பாசமும் நிறைந்த மதுரை மண்ணின் வாசம்.
வீரஅமிழ்த்திறைவன் அழகான பெயர். அனைவரின் பெயர் தேர்வும் அருமை.
கரியன் வீரனோட ஒற்றை விளிப்பிற்கு திமிலை உதறுது, அவன் ஊட்டினா தான் உண்ணுது. Over loves போலையே. 😝
மாமனுக்கும் மருமகனுக்கும் எதுக்கிந்த மொரப்பாடு? வாப்படிய கூட மிதிக்காத அளவுக்கு?
கரியனின் பாய்ச்சலை காண ஆவலாக காத்திருக்கிறோம்.
வாழ்த்துகள்.
அனைத்து உயிர்களிடத்தில் அன்பு கொள்வது நிதர்சனமாயிற்றே… மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றி சிஸ் 🥰❤️