
தேடல் 6:
மயங்கி விழுந்தவளை மடியில் தாங்கிக் கொண்டு, சுற்றி நின்ற எவரின் அதிர்ந்த பார்வையையும் கண்டு கொள்ளாது, “மிளிர்… மிளிர்… இங்க பாரும்மா… என்னைப் பாரு… கண்ணத் திறந்து என்னைப் பாரு மிளிர்… உனக்கு ஒன்னும் ஆகாது… மிளிர்… மிளிர்ம்மா… ” எனக் கொஞ்சலாய் அவள் கன்னம் தட்டி எழுப்ப முயன்று கொண்டிருந்தான் அக்னி. அப்படியும் அவள் கண் விழிப்பதற்கான சிறு அறிகுறியும் இல்லாது போக, இப்போது அதிகத்திற்கும் அதிகமாய் அவனை தொற்றிக் கொண்டது பதற்றம்.
“டேய் அண்ணா… இப்படி மசமசனு பாத்துட்டு நிக்கறீயே… வெளிய டாக்டர் யாராவது இருந்தா சீக்கிரம் போய் கூட்டிட்டு வாயேன்… இல்ல ஆம்புலன்ஸ்காவது கால் பண்ணேன்டா…” என இவன் பதறிப் பரபரத்துக் கொண்டிக்க, ‘உன் பதற்றம் தன்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை…’ என்னும் வகையில் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாது, இரு கைகளையும் மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு அவனையே குறுகுறுவெனப் பார்த்து வைத்தான்.
“டேய் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ண சொன்னா… என்னை எதுக்குடா உன் பொண்டாட்டியப் பாக்கற மாதிரி இவ்வளவு பாசமாப் பாத்து வைக்கற…” என்றான் அக்னி அவனை முறைத்துக் கொண்டே கடுப்பாய்.
அதை எல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாதவனாய் அதே குறுகுறு பார்வையை அவன் தொடர, “என் மூஞ்சையே ஏன்டா பாத்துட்டு நிக்கற… என் மூஞ்சுல என்ன படமா ஓடுது..?” என்றான் அக்னி எரிச்சலாய்.
“ஆமான் தம்பி படம் தான் ஓடுது… அதுவும் ஸ்பெஷல் காதல் படம்… அதான் நானும் என் புதுப் பொண்டாட்டியும் ரசிச்சுப் பாத்துட்டு இருக்கோம்…” என்றான் மணக்கோலத்தில் நின்றவன் எரிச்சல் மிகும் குரலில்.
“இங்க ஒரு பொண்ணு மயங்கி விழுந்து இருக்கா… கொஞ்சமாச்சும் பதறுதா உனக்கு… நீயெல்லாம் என்ன மனுஷன்டா..?” என்றான் அக்னி.
“சிறு திருத்தம்… அதுவா மயங்கல… நீ தான் தள்ளிவிட்டு மயங்க வச்சுருக்க…” என்றான் நக்கலாய் அவன்.
“பச்… இப்படி நின்னு வெட்டிப் பேச்சுப் பேசாம வெளிய போய் யாரையாவது டாக்டர் இருந்தா கூட்டிட்டு வரலாம் இல்ல…”
“இங்காரு… ஓவறா ஆடாத… அந்தப் புள்ள உன் மூஞ்சப் பக்கத்துல பாத்துத் தான் பதறிப் போய் மயங்கி இருக்குனு நினைக்கறேன்… இரண்டு கை தண்ணிய அள்ளித் தெளிச்சா தன்னால எழுந்து உக்காந்துக்கும்… அவ்வளவு தான்… ஆனா திரும்பவும் உன் மூஞ்சிய அதுகிட்டக் காட்டித் தொலைக்காத… மறுபடியும் படக்குனு மயங்கித் தொலையப் போகுது…” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பாதி நிறைந்த தண்ணீர் பாட்டில் ஒன்றை, மிளிரை மடியில் கிடத்தியபடி தர்க்கம் புரிந்து கொண்டிருந்த அக்னிமித்ரனிடம் நீட்டினாள் அந்த மணப்பெண்.
அதை வாங்கி அவன் மிளிரின் முகத்தில் தெளிக்க, கொஞ்சமாய் அசைந்தவள் மெல்ல கண்களைத் திறந்து பார்க்க, அத்தனை அருகில் தெரிந்த அவன் முகத்தைக் கண்டு உண்மைக்குமே பயந்து தான் போனாள் அவள். பதறித் துடித்துக் கொண்டு இரண்டடி அவனை விட்டுத் தள்ளி அமர, இவனோ அவளை அங்குலம் அங்குலமாய் ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் தன்னைச் சுற்றியும் ஒரு முறை பார்வையை ஓட்ட, இவனுக்கோ உள்ளே ஒரு பயப் பந்து உருண்டது. எங்கே படங்களில் எல்லாம் வருவதைப் போல மீண்டும், ‘நான் யாரு..? இப்போ எங்க இருக்கேன்..? நீங்களாம் யாரு..?’ எனக் கேட்டு வைப்பாளோ என்றிருந்தது அவனுக்கு. நல்ல வேளையாக அவள் அப்படி எதுவும் கேட்கவில்லை. ஆனால், அவனே வாய் அடைத்து நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு அமரும் அளவில் இருந்தது எழுந்து அமர்ந்தவளின் பேச்சு.
“ஹலோ மிஸ்டர்… கொஞ்சமாச்சும் அறிவிருக்கா உங்களுக்கு… இப்படித் தான் எரும மாடு மாதிரி கதவக் கூடத் தட்டாம இடிச்சுத் தள்ளிட்டு வருவீங்களா… மனுஷனா ஒரு மேனர்ஸ் வேண்டாம்… சரி அதக் கூட விட்டுடலாம்… இப்படித் தடிமாடு மாதிரி உடம்ப வளத்து வச்சு இருக்கீங்களே… ஸ்டெடியா நிக்கத் தெரியாது… இப்படிதான் மேல வந்து விழுவீங்களா..? ஏதாவது அடிபடக் கூடாத இடத்துல அடிபட்டு நா மேல போய் சேந்து இருந்தனா கொலக் கேசுல உள்ள போய்ருப்பீங்க… உங்க நல்ல நேரமோ என் நல்ல நேரமோ நான் பொழைச்சு எழுந்து உக்காந்து இருக்கேன்… அது பொறுக்கலையா உங்களுக்கு..? இவ்வளவு கிட்டக் கொண்டு வந்து உங்க மூஞ்ச மூஞ்சக் காட்டறீங்க… பாத்ததும் பக்குனு வருது எனக்கு… நெஞ்சடைச்சு செத்து தொலைஞ்சிருந்தா என்ன பண்ணி இருப்பீங்க..?” அவன் மட்டுமல்ல அங்கிருந்த அனைவருமே, ‘ஙே…’ என்று தான் அவளை அதிர்ந்து பார்த்தபடி நின்றிருந்தனர்.
அக்னியின் மனக்கண்ணில், ‘கேட்டாளே ஒரு கேள்வி…
நெஞ்சக் கிள்ளி விட்ட படுபாவி…
ஏதோ ஏதோ என்ன பேசிப் புட்ட…
எக்குத் தப்பா வார்த்தை வீசிப் புட்ட…’
என எஸ்.பி.பி சோகமே உருவாய் உருகிக் கொண்டிருக்க, ‘ஒரு கேள்வியா கேட்டா..? நல்லா நாக்கப் புடுங்கிக்கற மாதிரி மூஞ்சுல காறித் துப்பாத குறையா நறுக்குனு நாலு கேள்வி கேட்டா…’ என நேரங்கெட்ட நேரத்தில் மனச்சாட்சி வேறு கவுண்டர் கொடுக்க, அதை அடக்கும் வழி தெரியவில்லை அவனுக்கு.
“காது கேட்கும் தானே… நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்… நீங்க என்னனா பேக்கு மாதிரி ஒன்னும் சொல்லாம உக்காந்து இருக்கீங்க… ஏந்திரிச்சுத் தொலங்கனு தனியா ஒரு ஆள் வச்சு மைக்ல அனௌன்ஸ் பண்ணனுமா… ஆளப் பாரேன்… நவுந்து தொலைங்க மொதல்ல… வந்துட்டாரு பெரிசா ஜூஸத் தூக்கிட்டு…” என்றவள் அருகில் அமர்ந்திருந்தவனைத் தள்ளிக் கொண்டு எழ முயன்றாள். லேசாய் உடல் தள்ளாட, மீண்டும் மயக்கம் வரும் போல இருந்தது. அதைக் கண்ட அக்னியோ பதறிக்கொண்டு அவளை ஆதரவாய் பற்றிக் கொண்டான்.
“மிளிர்… என்னம்மா பண்ணுது…” என்றவனின் கரத்தினை விலக்கி விட்டவள், முயன்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவனை முறைத்துப் பார்த்தாள். உச்சந்தலையில் இரும்பால் அடித்ததைப் போல சுருக்கென்ற வலி தோன்ற, முகத்தில் வலியைக் காட்டாது இருக்க முடியவில்லை.
அவளின் முகச் சுருக்கத்தில் பதறியவன், “என்ன பண்ணுது மிளிர்… தலைய வலிக்குதா… டாக்டர்ட போவோமா..? ஒரு ஸ்கேன் எடுத்துப் பாத்திடலாம்…” என படபடவெனப் பொரிய, இப்போது மெல்ல மெல்ல ஆராய்ச்சியாய் அவனில் படிந்தது அவள் பார்வை.
‘இவனுக்கு எப்படி என் பெயர் தெரியும்..? எனக்கு ஒன்னுனா இவன் ஏன் இப்படிப் பதறுகிறான்..? யாராய் இருந்தாலும் இதை அத்தனை பெரிய விசயமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்..? இவன் பதறி ஸ்கேன் எடுக்கலாம்னு சொல்லறானா என்னைப் பத்தி முன்னாடியே தெரிஞ்சிருக்குமோ..?’ இப்படித்தான் இருந்தது அவளின் எண்ண ஓட்டம்.
“ஐ அம் ஓ.கே நவ்…” என்றவள் ஆழ்ந்து ஒரு முறை அவனைப் பார்த்துவிட்டு வெளியே சென்று விட்டாள். அவளுக்குமே அவனிடம் காய வேண்டுமென்று ஆசையா என்ன? எழுந்ததுமே தலையில் ஏற்பட்ட வலி அவளை அப்படிப் பேச வைத்திருந்தது. அத்தோடு சேர்ந்து எக்காரணம் கொண்டும் மீண்டும் தலையில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என டாக்டர் கூறி இருந்தது வேறு சேர்ந்து அவளை இன்னுமே பதற்றமடைய வைத்திருந்தது. சட்டென்று விழுந்ததில் மயக்கமும் வலியும் உண்டாகி இருக்க, அது ஒரு வித பயத்தை ஏற்படுத்தி இருந்தது.
செல்பவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தவனை, “என்னடா அக்னி இதெல்லாம்..?” என்றபடி நிகழ் உலகிற்கு கொண்டு வந்திருந்தான் இசை வேந்தன். இன்றைய நிகழ்வின் நாயகன். அக்னிமித்ரனின் உடன்பிறப்பு.
“எதெல்லாம்…” என்றவன் பார்வை இன்னும் அவளிடத்தில் தான் பதிந்திருந்தது.
“அக்னி… நான் உங்கிட்டத் தான் பேசறேன்… என்னைப் பாரு முதல்ல…” என அவனின் முகம் பற்றித் திருப்பி தன் பக்கம் நிறுத்தினான் இசை.
“பச்… என்னடா இப்ப உனக்கு…” என்றான் சலிப்பாக.
“ஒழுங்கா அண்ணனு கூப்பிடு… இப்போ எனக்குக் கல்யாணமும் ஆகிட்டு… இன்னமும் இப்படியே மரியாதை இல்லாமப் பேசிட்டு இருந்தா சரியிருக்காது பாத்துக்க…” என்றான் அண்ணன்காரன் அதட்டலாய்.
“சரிங்க ண்ணா… சொல்லுங்க அண்ணா…” என அவன் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு, பணிவாய்க் குனிந்து, கைகட்டிக் கேட்ட விதத்தில் திவ்யா சத்தமாகவே சிரித்து விட்டிருந்தாள். அவள் இந்த விழாவின் நாயகி. அவனின் தற்போதைய அண்ணி + மாமன் மகள் திவ்யதர்ஷினி.
“அந்தப் பொண்ண உனக்கு முன்னமே தெரியுமா..? என்னமோ பொண்டாட்டி மாதிரி மடியில போட்டுட்டு உருகுற… சாதாரண மயக்கத்துக்கு இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல…” என்றான் இசை.
“தெரியல…” என அவன் அசால்டாய் சொல்லவும், அவனைத் திட்ட இசை வாயைத் திறந்த சமயம் வேகமாக அங்கே வந்தார் தெய்வானை. அவர்களின் அன்பு அன்னை.
“அடே… ஒரு ஜூஸைக் குடுத்துட்டு வர உனக்கு இவ்வளவு நேரமா..? இதான் சாக்குனு இங்கையே குத்தவச்சு உக்காந்துட்டீயாக்கும்… அங்க உன் பெரிய அத்தைக்காரி ஜிங்குஜிங்குனு குதிச்சுட்டு இருக்கா… நீ கொண்டு போய் பஸ் ஸ்டான்டுல விட்டாத்தான் பஸ் வருமாமான்… போடா சீக்கரம்…” என்றவர் அங்கிருந்த நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்து, முந்தானையால் தனக்குத் தானே விசிறிக் கொண்டார்.
“உங்க செல்லப் புள்ள என்ன பண்ணானு கேளுங்க முதல்ல…” என்றான் இசை இப்போது வெளிப்படையாய் அக்னியை முறைத்துக் கொண்டு.
அப்போது தான் அறையைச் சுற்றிப் பார்த்தவர், “ஏன்டா ஒரு ஜூஸை உருப்படையா எடுத்துட்டு வந்து குடுக்கக் கூட உனக்குத் துப்பில்லையா… கொட்டிக் கவுத்தாச்சா… நீயெல்லாம் என்ன போலீஸோ..? அப்படி என்னதான் ட்ரைனிங்ல சொல்லிக் குடுத்தாங்களோ தெரியல..? போடா போ… சீக்கரம் போய் உன் பெரிய அத்தைய பஸ் ஏத்தி விட்டுட்டு வா… அதையாவது ஒழுங்காப் பண்ணித் தொல… அப்புறம் அவ வந்து நீ மதிக்கவே மாட்டறனு திரும்பவும் ஜிங்குஜிங்குனு குதிச்சா என்னால முடியாது சொல்லிட்டேன்… எனக்கு வேற லோ சுகர்… இப்பவே கிறுகிறுனு வருது…” என்றார் தெய்வானை கண்கள் சொருக.
“கேட்டுக்கடா… உன்னப் பத்து மாசம் சுமந்து பெத்த தாய்க்கும் கிறுகிறுனு வருதாமான்… அப்படியே மடியில போட்டுத் தாலாட்டுப் பாடறது தான… இப்பயெல்லாம் பாட மாட்டீங்களே…” என இசை நொடிக்க, என்ன நடக்கிறது என ஒன்றும் புரியவில்லை தெய்வானைக்கு.
“ஏன்டா… இன்னைக்குக் கூட உங்க சண்டைய நிறுத்த மாட்டீங்களா..? அதுக்குள்ள ஆரம்பிக்கணுமா..?” என்றார் இருவருக்கும் பொதுவாக.
“அவன் தான்ம்மா…” என்ற இசையிடம், “ஏன்டா பெரியவனே நீ அடுத்தது கோவிலுக்குப் போகணும் இல்ல… ஞாபகம் இருக்கா இல்லையா… போட்டோ எடுத்து முடிச்சுட்டீங்கனா… சட்டுனு சாப்பிட்டுப் போய் கோவிலுக்குக் கிளம்பு போ… இப்ப கிளம்பினாத் தான் நல்ல நேரத்துல கோவிலுக்கு போய்ட்டு வீட்டுக்கு வர முடியும்…” என்றவர் சின்ன மகனை அதட்டி ஏவவும் மறக்கவில்லை.
கொஞ்சம் ஆசுவாசமாக அமர்ந்திருந்தவர், இப்படியே நீண்ட நேரம் அமர்ந்திருக்க முடியாது என்பதை உணர்ந்து எழப் போன நேரம், வேகமாகக் கையில் கப்புடன் வந்து கொண்டிருந்தான் அக்னி. “புள்ளைக்கு அம்மா மேல எவ்வளவு பாசம்… மயக்கமா வருதுன்னு சொன்னதுமே மனசு கேக்காம காஃபி எடுத்துட்டு வருது பாரு… அந்தப் புள்ளையப் போய்க் கொற சொல்லறான் பாரு.. அறிவு கெட்டவன்…” என அவர் முழுதாய் பூரித்துப் போகும் முன், அக்னி யூ டேர்ன் எடுத்து மிளிரின் அருகில் சென்றிருந்தான்.
அருகில் ஏலக்காய் மணத்துடன் தேநீரின் வாசம் வரவும் சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள் அங்கே அக்னி நிற்கவும் கேள்வியாய்ப் புருவம் உயர்த்தினாள்.
“இல்ல தலையில கை வச்சுட்டு உக்காந்து இருந்தீங்களே… அதான் தலைவலியோனு…” என இழுவையாய் அவளைப் பார்த்தான் அக்னி.
“எனக்குத் தலைவலிச்சா உங்களுக்கு என்ன மிஸ்டர்..?” என்றாள் ஆழமாய் அவனைப் பார்த்தபடியே மிளிர்.
“எங்க அண்ணன் கல்யாணத்துக்கு வந்து இருக்கீங்க… உங்களப் பாத்துப் பக்குவமாக் கவனிக்கறது எங்க கடமை தானே…” என அவன் சொல்லவும், ஒரு மார்க்கமாய்ப் பார்த்தவள் மறுப்பு சொல்லாது அதை வாங்கிக் கொண்டாள். அவளுக்கும் அது அப்போது தேவையாய் இருந்தது.
திரும்பிச் செல்ல இருந்தவனைத் தடுத்து நிறுத்தியது அவள் குரல். “என்னை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?” என்றாள். “ஓஓஓ… நல்லா… ஒரு வாரத்துக்கு முன்னாடி இருநூறு ரூபாயைக் கையில திணிச்சுட்டுப் போனீங்களே…” என்றான் அவன் புன்முறுவலுடன்.
நினைவு படுத்த முயன்றும், அவளுக்கு இன்னாரென்று பிடிபடவில்லை. புருவத்தைச் சுருக்கி அவனைப் பார்க்க, “ஐ அம் மித்ரன்… அக்னி மித்ரன்… இன்ஸ்பெக்டர்…” என்று மிடுக்காய் அவள் புறம் கை நீட்டினான். ‘ஆமான் இவரு பெரிய ஜேம்ஸ் பாண்டு… வந்துட்டாரு கையத் தூக்கிட்டு…’ என்று அன்று போல் நினைத்தவள், மெல்ல அவனின் கை பற்றிக் குலுக்கினாள்.
“இப்படித் தான்… ரோட்டுல போற வர எல்லாரையும் பேரோட ஞாபகம் வச்சுப்பீங்களா..?” என்றாள் அவள் அவனையே கேள்வியாய் பார்த்து.
“எல்லாரையும் வச்சுக்கிறது இல்லைத்தான்… ஆனா எனக்கு முதல் முறை லஞ்சம் கொடுத்தவங்களை ஞாபகம் வச்சுக்கணுமே… அதான்…” என்றவன், “எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு… இன்னொரு நாள் பாக்கலாம்… பேசலாம்…” என்றபடியே அவனையே வாசலில் நின்று முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த பெரிய அத்தையை நோக்கி நகர்ந்து விட்டான். செல்லும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் மிளிர்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த தெய்வானைக்கோ உள்ளுக்குள் ஏதோ ஒன்று நெருடியது. அங்கிருந்தபடியே மிளிரை அவர் பார்வையால் அளவெடுக்க, அந்தப் பார்வை வீச்சின் குறுகுறுப்பில் திரும்பிப் பார்த்தாள் அவள்.
சட்டென எழுந்து அவள் அருகில் வந்தவர், “நீ அந்த மேக்அப் பொண்ணு தானே…” என்றார் யோசனையாய்.
“ஆமான்ங்க…” என அவள் சொல்லவும் தான் அவருக்குப் பொறி தட்டியது. ‘இதுக்குத் தான் சிம்பிளா வீட்டுல உள்ள ஆளுங்கள வச்சே பண்ணிக்கலானு சொன்னாக் கேக்காம பிடிவாதமா ப்யூட்டி பார்லர் வச்சாலே ஆச்சுன்னு தலைகீழா நின்னானா அந்தப் பய..? வரட்டும் இன்னைக்கு… பேசிக்கறேன்…” என்று அவர் மனதிற்குள் அக்னியை வறுத்துக் கொண்டிருக்க, மிளிரோ அவரின் ஆராயும் பார்வையில் நெளிந்தபடி நின்றிருந்தாள்.
அதை உணர்ந்தவர், ” நீ இன்னும் சாப்பிடலயாம்மா..? அதான் முகமே ரொம்ப சோர்வா தெரியுது.. வா… வா… வந்து சாப்பிடு முதல்ல…” என அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றவரை முதல் சந்திப்பிலேயே பிடித்துத் தான் போனது அவளுக்கு. வேலை செய்யவென்று வந்தவளை ‘சாப்பிட்டாயா..?’ என்று கேளாமல், முகமறிந்தே ‘வந்து சாப்பிடு…’ என உரிமையாகக் கை பற்றி இழுத்துச் செல்பவரை யாருக்குத் தான் பிடிக்காது? சாப்பிட்டுத் தனது மீதி சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு உடனே கிளம்பி விட்டாள் மிளிர்.
அழகு நிலையம் செல்லாது நேராக வீட்டிற்கு வந்தவளை வாசலிலேயே வரவேற்றான் இனியன்.
“என்ன அதுக்குள்ள வந்துட்ட… பார்லருக்குப் போகல..?”
“இல்ல காலையிலேயே ஏந்திரிச்சது கொஞ்சம் டயர்டா இருக்கு… அதான் சூர்யாவைப் பாத்துக்க சொல்லிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலானு வீட்டுக்கு வந்துட்டேன்…” என்றவளின் குரலில் சோர்வு அப்பட்டமாய் தெரிந்தது.
“அப்போ நான் வேணாப் போய்ட்டு…” என இழுவையாய் நிறுத்தி இனியன் அவளைப் பார்க்க,
“என்ன… என்ன சொன்ன இப்போ..?” என்றாள் மிரட்டலாய் மிளிர்.
“இல்ல… உனக்கு டயர்டா இருந்தா நான் வேணாப் போய்ட்டு ஜூஸ் எடுத்துட்டு வரவானு கேட்டேன் க்கா…” என்றான் அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு பவ்யமாய் இனியன்.
“அது… அந்தப் பயம் இருக்கணும்… இனிமே கட பக்கம் வந்த கால ஒடைச்சுடுவேன்… ஒழுங்காப் போய் டீ போட்டு எடுத்துட்டு வா… போ…” என்றவள் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
இவனும் தனது விதியை நொந்தபடியே தேநீரை தயாரிக்கச் சென்றான். முடியாது என்றால் கத்தி படுக்கையறையில் இருக்கும் தாயை அழைத்துப் பஞ்சாயத்தைக் கூட்டி விடுவாளே! இதைச் சொல்லியே, ஒரு நாளைக்கு ஐந்தாறு முறை அவனை தேநீர் தயாரிக்க வைத்து விடுகிறாள் அவள்.
தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டு வந்தவள் இனியன் எடுத்து வந்த தேநீரைக் குடித்துவிட்டுப் படுத்து விட்டாள். எந்த வம்பும் வளர்க்காமல் அவள் படுத்தது இனியனுக்கு உள்ளுக்குள் உறுத்தியது. வழமையாக இப்படி இருப்பவள் இல்லையே என்ற எண்ணம் ஓட, மதிய உணவிற்காகக் கூட அவள் எழவில்லை. அசந்து தூங்கும் அவளை எழுப்பவும் யாருக்கும் மனம் வரவில்லை.
மெல்ல அவள் கண்களைத் திறந்த போது இன்னும் தலை பாரமாய்த் தான் இருந்தது. அழுந்த ஒருமுறை தலையைப் பிடித்து விட்டுக் கொண்டவள் நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தாள். அது மணி ஆறரை என்றது. வெளியே பார்க்க மிதமான வெளிச்சம் பரவியிருந்தது. உண்மைக்குமே இது காலையா மாலையா என்று குழம்பிதான் போனாள் அவள். மெல்ல எழுந்து வெளியே வந்தவள், இனியன் அமர்ந்திருப்பதைப் பார்த்துக் கொண்டே அவன் அருகில் சோபாவில் தொப்பென்று அமர்ந்தாள்.
“ஆமான்டா தம்பி… இது காலையா இல்லை மாலையா..?” என்றாள் சந்தேகம் நீங்காமல்.
“ம்ம்ம் அர்த்தராத்திரி…” என்றான் அவன் கடுப்பாய் தொலைக்காட்சியில் கவனத்தைப் பதித்தபடியே.
“அடேய்… இப்போ எல்லாம் அம்மாவ விட நீ தான் அதிகமா சீரியல் பாக்கற…” என்றாள் அதட்டலாய் மிளிர்.
“கொஞ்ச நேரம் பேசாமக் கம்முனு இருடி… அந்த ஹிந்தி சீரியல் போடற நேரம்… அதுல ஹீரோயின் வேற கும்முனு இருப்பா…” என்றான் இனியன்
அதற்கு மேல் அவள் எதையும் கேட்காமல் தலையைப் பிடித்தபடி அமர்ந்து விட திரும்பி அவளைப் பார்த்தவன், “நீ போய் ஃப்ரஷாகிட்டு வா… நான் டீ போட்டுத் தரேன்…” என்றுவிட்டு சமையலறையை நோக்கிச் செல்ல, “அம்மா எங்கடா..?” என்றபடியே குளியலறையை நோக்கிச் சென்றாள் மிளிர்.
“கோவிலுக்குப் போயிருக்காங்க…” என சமையலறையில் இருந்து குரல் கொடுத்தவன், அவனுக்கும் அவளுக்கும் தேநீரை தயாரித்து, எடுத்துக் கொண்டு வந்து அவளைத் தேட வீட்டில் அவள் எங்குமில்லை. வீட்டின் வாசலில் வந்து குரல் கொடுக்க, மாடியில் நின்று தான் இங்கிருப்பதாய் பதிலுக்கு குரல் கொடுத்தாள் அவள். ‘இந்த டீய வேற இரண்டு மாடி ஏற வைக்கறாளே…’ என நொந்தபடியே ஏறியவன் ஒன்றை அவளிடம் நீட்டிவிட்டு ஒன்றைத் தனக்காய் எடுத்துக் கொண்டான்.
மாடியில் இருந்து தெருவை வேடிக்கை பார்த்தபடி தேநீரை மிடறு மிடறாய் ரசித்துப் பருகியவள், எதிர்ப்புறம் இருந்த வீட்டைக்காட்டி, “இந்த வீடு எப்போ இருந்து பூட்டி இருக்கு இனியா..?” என்றதுமே அவனுக்குக் குடித்த தேநீர் புரையேறியது. அது முன்பு மகிழினி அவள் குடும்பத்தோடு வசித்த வீடு.
“அது… அது… ரொம்ப நாளாவே பூட்டித் தான் இருக்கு…” என்றான் தடுமாற்றத்துடன்.
“அதான் எப்போ இருந்து… நான் ஒரு நாள் கூட அந்த வீட்டுக்கு யாரும் வந்து பாத்ததில்லையே… சுத்தம் பண்ணக் கூடவா யாரும் வர மாட்டாங்க..?” என்றாள் யோசனையாய் மிளிர்.
“அது… அது… அவங்க பையனுக்கு வெளியூர்ல வேலை கிடைக்கவும் குடும்பமா அங்கையே போய் செட்டில் ஆகிட்டாங்க…” என்றான் திக்கித் திணறி அவன்.
அவள் சிறிது நேரம் அமைதியாக தேநீரை அருந்த, ‘முடித்து விட்டாள் போல..’ என நிம்மதியாக அவனும் தேநீரைக் குடிக்க முற்பட்ட சமயம், “மகிழினி யாரு இனியா..?” என்றாள் ஆழ்ந்து ருசித்து தேநீரைப் பருகிக் கொண்டு அவனை ஆராய்ச்சியாய் பார்த்தபடி. அவள் கேட்ட கேள்வியில் அவன் விக்கித்து அப்படியே ஸ்தம்பித்து போனான்.
– தேடல் தொடரும்…

