Loading

காலை கனவு 19

“சாப்பாட்டையே பார்த்திட்டு இருந்தா… எல்லாம் ஆச்சா? எதையும் நினைக்காம சாப்பிடு அன்வி…” என்ற அனிதா, “மனசு தெம்புக்கு நம்பிக்கை போதும். ஆனால் உடம்புக்கு சாப்பாடு அவசியம். உன்னோட அத்தை, மாமா உண்மை என்னன்னு தெரிஞ்சாலும் இதை சாதாரணமா விடமாட்டாங்க தோணுது. உன் நியாயத்தை தெளிவா சொல்ல நீ ஸ்ட்ராங்கா இருக்க வேண்டாமா? உனக்கு துணையா நாங்க இத்தனை பேர் இருக்கோம். கடந்து வரணுங்கிற எண்ணம் இருந்தா மட்டும் போதும். நீ சுருண்டு உட்காருறது, கௌதமுக்கு வெற்றியாகிடும். நீ உடைஞ்சு உட்காருவன்னு தெரியும் சொன்னானாமே? இப்போ நீ சோகமா இருந்து அதை உண்மைன்னு காட்டப்போறியா? அது அவனோட வெற்றி ஆகிடாதா?” என்றவருக்கு அன்விதாவையும் திருமணம் செய்து கொள்கிறேனென கௌதம் சொல்லியது ஒரு அன்னையாய் கோபத்தைக் கொடுத்தது.

அதனை அன்விதாவிடம் சொல்லிட நா வரை வந்துவிட்ட வார்த்தைகளை அப்படியே விழுங்கிக் கொண்டார்.

கௌதமை தங்களின் இவன்ட் பவுன்சர்ஸ் வைத்து தாக்கியதை அனிதாவிடம் மறைக்காது கூறி தன்னுடைய இயல்புக்கு மீறி நடந்துகொண்ட செயலுக்காக ஆர்விக் வருந்திட, அக்கணம் கௌதம் பேசிய அனைத்தையும் அவரிடம் மறைக்காது சொல்லியிருந்தான்.

அதனாலே அன்விதாவின் அன்புக்கு கௌதம் கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்று நினைத்தே அவளுக்கு தேறுதல் வார்த்தைக் கூறிக்கொண்டிருக்கிறார்.

“நீ சோகமா ஃபீல் பண்ணி, அழுது அவன் சொன்னதை உண்மையாக்கப்போறிய அன்வி?”

“மேம்…”

“சில விஷயங்களை இங்க கடக்கிறது ஈசியில்லைன்னு தெரியும். ஆர்வியோட அப்பா இல்லாமப் போனப்போ எனக்கு வாழணும், அதிலிருந்து மீண்டு வரணும் பிடிப்பைக் கொடுத்தது சின்னப் பையனா என் முகத்தை முகத்தைப் பார்த்து, என்னையே சுத்தி வந்த ஆர்வி தான். உனக்கும் கௌதமைத் தாண்டி, உன் மேல அன்பு வைச்சிருக்க உறவு நிறையபேர் இருக்காங்க. அவங்களை மட்டும் மனசுல நிறுத்தி யோசி. கௌதமோட இந்த போலியான அன்பெல்லாம் ஒன்னுமே இல்லைன்னு ஆகிடும்” என்று அவளின் தலையில் பரிவாய் வருடினார்.

“நான் அழுது எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேன்ல?”

“அப்படியில்லை அன்வி… உனக்காக என்னவும் செய்ய நாங்க நிறைய பேர் இருக்கோம். கௌதம் காட்டின அன்புக்கு பக்கத்துல எங்களோட அன்பெல்லாம் வைச்சுப் பாரு. உனக்கே கௌதமோட அன்புக்கு இவ்வளவு வேல்யூ கொடுக்கணுமான்னு தோணும்” என்ற அனிதா,

“சக்தியை நாலு வருஷம் பக்கமிருந்து தினமும் பார்த்திருக்கேன். ஆனால் இப்படி கலங்கி ஒருநாளும் பார்த்தது இல்லை. அவன் வெளிக்காட்டிக்கலைன்னாலும் உனக்காக ரொம்பவே ஃபீல் பண்ணிட்டு இருக்கான்” என்றார்.

“இனி அழமாட்டேன் மேம்…” என்ற அன்விதா, “தேங்க்ஸ்” என்க…

“அப்புறம் சொல்லிக்கலாம் முதல்ல சாப்பிடு” என்றார்.

அனிதா அன்விதாவிடம் பேசுவதைக் கேட்டபடி வந்த சக்தி, அன்வியின் அருகில் அமர்ந்திட…

அனிதா சக்தியை உண்ணுமாறு கூறி தட்டில் உணவை எடுத்து வைத்து நகர்ந்து சென்றிருந்தார்.

“அண்ணா…” அன்விதாவுக்கு சக்தியை பார்த்ததும் மீண்டும் மனம் கலங்கும் போலிருந்தது.

“ஒண்ணுமில்லடா… பார்த்துக்கலாம்!”

சிறு பார்வையில் பெரும் நம்பிக்கை அளித்திட்டான் சக்தி.

ஏன் இப்படி? என ஒற்றை கேள்வி சக்தி கேட்டிருந்தாலும் அவள் மனம் துடித்திருக்கும்.

தங்கையின் மனம் அறிந்ததாலோ… அவளுக்கு வேண்டிய ஆறுதல் துணை இருக்கின்றேன் எனும் நம்பிக்கையை அளித்தல் மட்டுமே எனும் எண்ணம் சக்தியிடம்.

“ரொம்ப மனசுல போட்டு அலட்டிக்காத அன்வி… இது அவ்ளோதான்னு நினை.”

“சாரிண்ணா!”

“இதுல நீ மன்னிப்பு கேட்க வேண்டிய தேவையே இல்லை. ஊருக்கு போவோம். அங்க என்ன நடக்குது பார்ப்போம்” என்றான்.

இதைப்பற்றிய பேச்சினையே சக்தி முற்றிலும் தவிர்க்கிறான் என்பது அன்விதாவுக்கு புரிந்தது. அது தனக்கான வேதனையை அதிகப்படுத்தும் என்பதாலே என்றும் தெரிந்தது.

“அப்பா, அம்மா…”

“அவங்களுக்கு இன்னும் தெரியாது. சொல்லணும்” என்றான் சக்தி.

“ஹ்ம்ம்…”

“டூ ஹவர்சில் பஸ். வரும்போதே டிக்கெட் புக் பண்ணிட்டேன். கொஞ்ச நேரத்தில் கிளம்பிடலாம்” என்றான்.

“ஓகேண்ணா!”

********************************

“உங்க அவங்க சக்தி ப்ரோ தானா?” யாஷ் கேட்க,

“எப்புட்ரா?” என்றாள் நிதாஞ்சனி.

“அதான் கீழ இறங்கும்போது ஒரு லுக் விட்டாரே!” என்று யாஷ் சொல்ல…

“உனக்கு அது காதல் பார்வை மாதிரியா தெரிஞ்சுது?” என்று ஆர்விக் ஆச்சாரியமாகக் கேட்பதைப்போன்று நிதாஞ்சனியைப் பார்க்க…

“அதானே?” என்றாள் நிதாஞ்சனி.

“அப்போ இல்லையா?” யாஷ் குழப்பமாக வினவினான்.

“மேடம் நெஞ்சை பிடிச்சிக்கிட்டு மயக்கம் போட்டு விழும்போதே தெரியலையா?” என்றான் ஆர்விக்.

“அப்போ நிதா மட்டும் லவ் பண்றாங்க. அதான் அந்த நடிப்பா கோபால்?” என்றான் யாஷ்.

“அதான் தெரியுதே! அப்புறம் என்னடா கேள்வி” என்ற நிதாஞ்சனி, “அன்வியோட டைம் ஸ்பெண்ட் பண்ணனும் வரச்சொல்லி, என்னை வான்டட்டா அவங்ககிட்ட மாட்டிவிட்டுட்டு இருக்க நீ” என ஆர்விக்கை முறைத்தாள்.

“இது மாட்டிவிடுறது இல்லை நிதா. கோர்த்து விடுறது சொன்னாதான் கரெக்ட்டா பொருந்தும்” என்றான் யாஷ்.

நிதாஞ்சனி சிரிக்கும் ஆர்விக்கை பாவமாகப் பார்க்க…

“இதுவும் நல்லாதான இருக்கு?” என்ற ஆர்விக், “திரு வராங்கன்னுதான் உன்னை வரச்சொன்னேன்” என்றான்.

“ஆல்ரெடி லவ்வை சொல்லவே முடியாம திணறிட்டு இருக்கேன் ஆர்வி… இப்போ நானே அவங்க முன்னாடி நல்லா சொதப்பிட்டு இருக்கேன்” என்றவளின் தோள் மீது கையிட்டு அணைத்தவனாக,

“காதல்ல சொதப்பினா தான் அழகு நிதா… திரு முன்னாடி நார்மலா இருக்க பழகு. லவ் சொல்ல தானா தைரியம் வரும்” என்றான் ஆர்விக்.

“ஆமா… ஆமா… லவ் சொல்ல ஐடியா கொடுக்கிற ஆளைப் பாருங்க” என்ற யாஷ்…

“உன் லவ்வை சொல்ல உனக்கொரு சான்ஸ் கிடைச்சிருக்கு. அதை யோசிக்கமாட்டியா டா?” என்றான்.

“ஆர்வி லவ் பண்றானா?” என்ற நிதாஞ்சனி, “யாருடா பொண்ணு?” எனக் கேட்டாள்.

“ஆமா… பண்றான். ஏழு வருஷமா! அந்தப்பொண்ணுக்கேத் தெரியாம” என்ற யாஷ், ஆர்விக்கின் முறுவலில் நெற்றியில் தட்டிக் கொண்டான்.

“உங்க லவ் அவருக்கு தெரிஞ்சாவுது இருக்கு. ஆனால் இவன்… சின்னப் பார்வையில் கூட காட்டினது இல்லை. பொத்தி பொத்தி வைச்சிருக்கான்” என்ற யாஷ், “இனி எப்பவுமே நீ சொல்லமாட்டன்னு தெரியும். அதுக்காக அவள் நினைப்போட மட்டுமே வாழ்வேன் அப்படின்னா… நீயென்ன சொல்றது? நானே சொல்லிடுவேன்” என்றான்.

“என்ன ஆர்வி… உன் காதலுக்காக இவன் இவ்ளோ கோபப்படுறான்” என ஆர்விக்கிடம் நிதாஞ்சனி கேட்க…

“அவனுக்கு ஃப்ரெண்ட் ஆகிட்டனே… பட்டுதான் ஆகணும்” என்ற யாஷ், “இந்த செக் வரை உனக்கு இதுவொரு வாய்ப்புன்னு நீ நினைக்கவே இல்லைதானே?” எனக் கேட்டான்.

புன்னகையோடு ஆர்விக் இல்லையென இருபக்கமும் தலையசைக்க…

“தானா சேருமா? இதுவரைக்கும் சொல்லவே முடியாதளவுக்கு ஒரு தடை இருந்துச்சு. இப்போ அது இல்லவே இல்லைன்னு ஆனபிறகு, எதுக்கிந்த அமைதி ஆர்விக்?” என்றான்.

“நான் சொல்லாமலே என்னை உன்னால் புரிஞ்சிக்க முடியும் தெரியும். அப்புறம் எதுக்கு இந்த கேள்வி? போய் வேறெதுவும் வேலையிருந்தா பாருடா” என்ற ஆர்விக் எழுந்து சென்றிட…

“நீ இவ்ளோ கோபப்படுற அளவுக்கு அப்படி யாரடா அவன் லவ் பண்றான்?” என வினவினாள் நிதாஞ்சனி.

“எல்லாம் உங்க ஆளோட தங்கச்சியை தான்.”

“என் ஆளோட…” என்று இழுத்து யோசித்த நிதாஞ்சனி,

“அன்வியாடா?” என்றாள்.

“ஆமா… அக்காவும் தம்பியும் நல்ல ஆள் பார்த்தீங்க லவ் பண்ண” என்று கடுகடுப்போடு மொழிந்த யாஷ், “நானும் கீழப்போறேன்” என்றான்.

“அப்போ இங்க தனியா நான் என்னடா பண்றது?”

“உங்க ஆள் முன்னாடி நிக்க பயமில்லைன்னா… என்னோடவே வாங்க” என்று யாஷ் எழ…

கீழே சென்றால் சக்தி இருப்பானென்றே நிதாஞ்சனி அசையாது அங்கேயே அமர்ந்திருக்க…

“இந்த ரூமில் நான் இருக்கிறதுக்க முன்ன இருந்த ஃபேமிலல ஒருத்தன் நீங்க உட்கார்ந்திருக்க சோஃபாக்கு நேராதான் தூக்கு போட்டுக்கிட்டான்” என்று யாஷ் சொல்லிவிட்டுச் செல்ல, நிதாஞ்சனி அவன் பின்னோடு ஓடியிருந்தாள்.

***************************

ஆர்விக் வந்தபோதே சக்தியின் முகம் அடக்கப்பட்ட கோபத்தோடு இருந்தது.

தான் அவனுடன் பேசியதற்கு பின்பும் நன்றாகத்தானே இருந்தான். இப்போது என்னவாயிற்று எனத் தோன்றினாலும், ஆர்விக் எதுவும் கேட்காது அன்விதா எங்கென்று பார்த்தான்.

“கால் வந்துச்சு. மொபைல் ரூமில் இருக்கவும் உள்ள போனாள்” என்ற சக்தி, “இப்போ கிளம்பினா கிளம்பாக்கம் போக சரியா இருக்கும் ஆர்வி” என்றான்.

“ஹ்ம்ம்… நான் ட்ராப் பண்றேன்” என ஆர்விக் சொல்ல…

“இல்லை, உனக்கு வீண் அலைச்சல்” என்ற சக்தி, “கேப் புக் பண்ணியிருக்கேன்” என்றான்.

“எதுக்கு இப்போவே சக்தி? நாளைக்கு போலாமே!” என்றார் அனிதா.

“கிளம்புறது நல்லது மேம். மாமா, அத்தை கால் பண்ணிட்டே இருக்காங்க. ஒரு கட்டத்துக்கு மேல அவாய்ட் பண்ண முடியாம ஹாஸ்பிடல் போனாலும் போயிடுவேன். இப்போ கிளம்புறதுதான் சரி. நைட்டுக்குள்ள வீட்டுக்குப் போயிடலாம்” என்றான் சக்தி.

“ம்ம்… அப்போ நீங்க ஹாஸ்பிடல் போகலையா?” ஆர்விக் கேட்க,
யாஷ் மற்றும் நிதாஞ்சனி அவர்களின் பேச்சினை கேட்டவர்களாக அனிதாவின் அருகில் சென்று அமர்ந்தனர்.

“நீயாவது ஆள் வைச்சுதான் அடிச்ச… நான்” என்ற சக்தி, தன்னுடைய வார்த்தைகளிலும் அதில் பொதிந்திருந்த கோபத்திலும் சட்டென்று தோன்றிவிட்ட அதிர்வு கொண்டவளாக விழிவிரித்த நிதாஞ்சனியின் மீது பார்வையை நிலைக்கச் செய்து…

“இந்த நிலையில் அவனை அடிக்க வேண்டாமேன்னு பார்க்கிறேன்” என்றான்.

“ஆர்வி ஆள் வைச்சு அடிச்சானா?” என்று யாஷ் நம்ப முடியாது வினவ…

“ஆமா…” என்று பதில் சொல்லியவளாக ஆர்விக்கின் முன் வந்து நின்றாள் அன்விதா.

“நம்ப முடியலையே!”

யாஷ் சொல்ல…

“நம்புடா… எனக்காக சார் அவரோட இயல்புக்கு மீறிய விஷயம் செஞ்சிருக்கார்” என்ற அன்விதாவிடம் அத்தனை கோபம்.

“இப்போ எதுக்கு கோபப்படுற நீ?” என்ற ஆர்விக், “சும்மா நாலு தட்டு தான். அவன் ரொம்ப வீக்கா இருந்திருப்பான் போல… பெட்ல போய் படுத்துட்டான்” என்று அவன் சொல்லிய பாவனையில் சக்தியின் இதழ் சிரிப்பில் நெளிந்தது.

“நம்ம பவுன்சர்ஸ் வைச்சு அடிக்க வைச்சிருக்கான் யாஷ்” என்ற அன்விதா, “நான் தான் அவன்கிட்ட பேசவே வேணாம் சொன்னனே” என ஆர்விக்கை முறைத்தாள்.

“உனக்காக ஒரு அடியாவது அடின்னு சொன்னல… அடிக்கிறதெல்லாம் எனக்கு வரல அன்வி. அதான் ஆள் வச்சு அடிக்க சொன்னேன்” என்று ஆர்விக் சாதாரணமாகக் கூறிட…

“யூ இடியட்… அவன் அங்க கை, கால் முறிஞ்சு எழுந்துக்க முடியாமா இருக்கானாம்” என்றவள், தலையில் கை வைத்தவளாக, “உன்னை யாருடா இப்படி பண்ண சொன்னது?” என்றாள்.

“ஹோ… மேடமுக்கு அவன் பெட்ல படுத்திருக்கிறதுதான் கஷ்டமா இருக்கா?” என்ற ஆர்விக், “அவனுக்கு இதுவே கம்மின்னு நினைச்சிட்டு இருக்கேன்” என்றான்.

அன்விதாவிடம் அப்படியொரு முறைப்பு.

“அவன் செத்துப்போனாக் கூட எனக்கு எந்தவொரு வருத்தமும் இருக்காது” என சட்டென்று கன்னம் இறங்கிய நீரை வேகமாகத் துடைத்தபடி மொழிந்தவள், “அவனை தண்டிக்கிறன்னு நீ உன்னோட நேச்சரைத் தாண்டி திங்க் பண்ணியிருக்க… உனக்கு புரியுதா அது?” என்றாள்.

“அப்போ எனக்காக ஃபீல் பண்ற… ரைட்?” என்ற ஆர்விக்…

“இனி இந்த மாதிரி எதுவும் செய்யமாட்டேன். ஓகேவா?” என்றான்.

“இப்போ செய்ததுக்கு என்னடா சொல்லப்போற? அவன் போலீஸ்கிட்ட உன்னை சொன்னா என்ன பண்றது?” என்றாள். அவளால் ஆர்விக் செய்ததை சரியென்று ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தனக்காக அவனது குணத்திலிருந்து இறங்கி வந்து செய்துவிட்ட வருத்தம்.

“அப்படியெல்லாம் எதுவும் நடக்காது அன்வி.”

“ஆள் வைச்சு அடிச்சிட்டு, அவனை ஹாஸ்பிடலில் சேர்த்ததும் இல்லாம, அவன் அப்பாவுக்கே கால் பண்ணி சொல்லியிருக்க?” என்ற அன்விதா, “அடிபட்டு கிடக்கிறவனை ஹாஸ்பிடலில் சேர்த்து வீட்டுக்கு கால் பண்ணது தான் உன் காரக்டர். ஆனால் அதுக்கு முன்ன பண்ணது?” என அவனின் முன் தரை அமர்ந்தவள், “அது நீயில்லடா” என்றாள்.

“கோவத்துல பண்ணிட்டேன் சொல்லமாட்டேன். தெரிஞ்சுதான் பண்ணேன். அவன் பேசினதுக்கு சும்மாவிட முடியல” என்றான்.

“அடிபட்டு ரோட்ல கிடந்தான்னு ஹாஸ்பிடலில் சொல்லியிருக்க… போலீஸ் கண்டிப்பா விசாரிப்பாங்க, அதுமட்டுமில்லாம அவன்கிட்ட நீதான் பண்ணண்ணு சொல்லிட்டு வந்திருக்க” என அன்விதா சொல்லிட, சக்தியே ஆர்விக்கை சிறு அதிர்வோடு ஏறிட்டான்.

“அது நீங்களும் போலீஸ்க்கு தெரிஞ்சா என்ன பண்றதுன்னு கேட்டீங்களா? அதான் உங்களுக்கு என்னை நினைச்சு எதுக்கு தேவையில்லாத பயம்ன்னு நான்தான் பண்ணன்னு அவனுக்குத் தெரியாதுன்னு சொன்னேன்” என சக்தியிடம் கூறினான் ஆர்விக்.

“போலீஸ்கிட்ட அவன் சொல்லிட்டா…” என்ற அன்விதா, “நீதான் பண்ணன்னு உன்னை யாருடா அவன்கிட்ட வாக்குமூலம் கொடுக்க சொன்னது?” என்றாள்.

“போலீஸ்கிட்ட சொல்லணும்னா இந்நேரத்துக்கு அவன் சொல்லியிருப்பான். ஃப்ரீயா விடு அன்வி” என்ற ஆர்விக், “பஸ்க்கு டைம் ஆச்சே! கிளம்பினா சரியா இருக்கும்” என்றான்.

“மேம் நீங்களாவது அவனுக்கு சொல்லுங்க” என்று அன்விதா அனிதாவை அழைக்க…

“இனிமே இப்படி பண்ணாத ஆர்வி” என்று முடித்துக் கொண்டார் அனிதா.

“மேம்?”

“ம்ப்ச்…” என்ற அனிதா, “ஒருத்தரை ஆள் வைச்சு அடிக்கிறது தப்புதான். ஆனால் ஆர்விக் பண்ணது தப்புன்னு சொல்லமாட்டேன். கௌதம் டிசர்வ் திஸ்” என்றார்.

அனிதாவே இவ்வாறு சொல்லவும் ஆர்விக்கைப் பார்த்த அன்விதா,

“கௌதம் பேசுனதுல என்கிட்ட சொல்லாததும் எதுவும் இருக்கா ஆர்வி?” என்றாள்.

ஆர்விக் அமைதியாக இருக்க…

“சொல்லுடா? இருக்கா?” என்றாள்.

ஆர்விக் சக்தியை பார்க்க…

“அன்வி” என்ற சக்தி, “அவன் எதுவும் யோசிக்காம செய்திருக்கமாட்டான். அவனால மேனேஜ் பண்ண முடியும். முடியலன்னா நாம எதுக்கு இருக்கோம்?” என்றான்.

“இப்பவும் ஆர்வியா இதை செய்தான்னு என்னால நம்பவே முடியலண்ணா” என்றவள், “அத்தை ஃபோன்ல அவ்ளோ பேச்சு பேசுறாங்க” என்றாள்.

“கால் பண்ணது அவங்கதானா?” என்ற சக்தி… “என்னவாம் அவங்களுக்கு?” என்றான்.

ஆர்விக் மேலிருந்து கீழ் வந்தபோது சக்தி கோபமாக இருந்ததற்கு காரணமும் தென்னரசி தான்.

தங்களுடன் சென்னை வரை வந்தவன், “அன்விதாவை பார்க்கணும்” என்று தங்களை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு இவ்வளவு நேரமாகியும் வரவில்லையென சக்திக்கு அழைத்திருந்தார்.

சக்தியால் அவரது அழைப்பை நிராகரிக்க முடியவில்லை. கௌதம் செய்ததற்கு அவர்கள் எந்தளவிற்கு துணை நின்றிருக்கின்றனர் என்றும் தெரியவில்லை. தானாக ஒரு கணிப்பிற்குள் நின்று, அவர்களை ஒதுக்கி வைக்கவும் முடியாது அழைப்பை ஏற்றிருந்தான்.

“எப்போ வர சக்தி?” எடுத்ததும் தென்னரசி அவ்வாறு கேட்க, சக்தி மழுப்பவெல்லாம் இல்லை.

நேராக, “நான் வந்து அவனை பார்க்க முடியாது அத்தை” என்றிருந்தான்.

“ஏன் சக்தி இப்படி சொல்ற? அவனை இந்த நிலைமையில பார்க்க முடியல சக்தி. நீ வந்தா கொஞ்சம் தெம்பா இருக்கும்” என்றவர், “வரும் போது அன்வியையும் கூட்டிட்டு வாப்பா. அவளை பார்த்தா ஆறுதலா இருப்பான்” என்றார்.

“நான் இப்போ கொடைக்கானல் கிளம்புறேன்.”

“அவன் நாளைக்கு உங்கவீட்டு மாப்பிள்ளை ஆகப்போறான் சக்தி. இந்த நிலைமையில வந்து பார்க்கக்கூட முடியாதுன்னா என்ன அர்த்தம்?” என்றார்.

“அவனை எந்த நிலையிலும் பார்க்க விருப்பமில்லைன்னு அர்த்தம் அத்தை” என்று அழுத்தமாகக் கூறிய சக்தி, “அவனை காப்பாத்தி ஊர் வந்து சேருங்க” என்றான். உள்ளுக்குள் எரிமலையாய் வெடிக்க காத்து நிற்கும் ஆத்திரத்தை எப்படி கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது அவனுக்கே தெரியவில்லை.

“என்ன சக்தி பேச்செல்லாம் உள்ளர்த்தம் வைச்சு பேசுற மாதிரி இருக்கு” என்ற தென்னரசி, “நியாயமா எம் மகனுக்கு இப்படி ஆனதுக்கு உன் தங்கச்சியை நான் பேசணும்” என்றார்.

“என்ன பேசுவீங்களாம்?”

“கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சதுக்கே உன் தங்கச்சி ராசி என் மகனை முடமாக்கி படுக்க வச்சிட்டாள். இதுல கல்யாணமெல்லாம் ஆனா” என்று அவர் முடிக்கும் முன்பு,

“அத்தை” என்று அடர்த்தியாய் உச்சரித்தவன் ஒற்றை ஒலிக்கு தென்னரசியே அழைப்பைத் துண்டித்திருந்தார்.

அடுத்த கணம் அன்விதாவுக்கு அழைத்து…

“உன்னை கட்டிக்கப்போறவன் அடிபட்டு கிடக்கிறான். நீ ஒய்யாரமா அங்கவே உட்கார்ந்திருக்க. வந்து அவனை பார்ப்போம். கூடமாட ஒத்தாசையா இருப்போம் கொஞ்சமாவது நினைப்பிருக்கா” என்றவர்,

“ஆமா ஆள் வச்சு அடிச்சதே நீதான? நீயெப்படி வருவ?” என்றார்.

“அத்தை என்ன சொல்றீங்க?”

“உனக்கு ஒண்ணுமே தெரியாமதான் ஒருத்தனை காதலிச்சிக்கிட்டே இன்னொருத்தவன் கூட வேலைன்னு ஊர் சுத்திட்டு… கல்யாணத்துக்கு அப்புறம் அவன் கூட பேசக்கூடாதுன்னு பொறுமையா எடுத்து சொல்ல வந்த என் மகனை அவனை வைச்சே அடிச்சு படுக்க வைச்சியா? நீயெல்லாம் ஒரு பொண்ணா? உன் அண்ணன் உனக்கு சப்போர்ட்டுக்கு இருக்க தைரியமா? போலீஸ் மட்டும் வந்து விசாரிக்கட்டும், உன்னையும் அவனையும் ஜெயில்ல போடாம நான் இங்கிருந்து போவமாட்டேன்” என்றிருந்தார்.

தென்னரசியின் பேச்சை வைத்து, கௌதம் நடந்த அனைத்தையும் தன் பக்கம் திருப்பி விட்டிருக்கிறான் என்பதை அறிந்த அன்விதாவுக்கு, மொத்தமாக கௌதம் என்பவன் அருவருத்துப் போனான்.

அன்விதாவின் மூலம் அறிந்தவர்களுக்கும் கௌதம் எப்படிப்பட்ட மனிதன் என்பதை கணிக்க முடியாது ஆத்திரமே மேலோங்கியது.

“அவனை ஆர்வி அடிச்சதுல தப்பே இல்லை” என்ற அனிதா, சக்தி கண்கள் சிவக்க நின்றிருப்பதைப் பார்த்து, “கோவம் நியாயமானதுதான் சக்தி. ஆனால் அவன்கிட்ட நம்ம கோபத்தைக் காட்டுறதுக்கூட, நம்ம மேல நாமளே சேற்றை வாரி பூசிக்கிறதுக்கு சமம். ஆத்திரப்படாம பொறுமையா கௌதமை அன்வி வாழ்க்கையிலிருந்து விலக்கி வைக்க என்ன பண்ணனும் திங்க் பண்ணு” என்றார்.

“எஸ் திரு… இங்க வைச்சு நீங்க என்ன சொன்னாலும் உங்க அத்தை புரிஞ்சிக்கிறவங்களா தெரியல. அவங்க பேசினதை பார்த்தா, கௌதம் அவங்ககிட்ட வேற கதை சொல்லியிருக்க மாதிரி தெரியுது. நிதானமாதான் இதை ஹேண்டில் பண்ணனும்” என்றான் ஆர்விக்.

“ம்ம்…” என்ற சக்தி, அலைபேசி ஒலிக்கவே யாரெனப் பார்த்து,

“கேப் வந்திருச்சு” என்றான்.

“சரி சக்தி. பார்த்து போயிட்டு வாங்க. இப்போ அவங்க வைச்சிருக்கக் குற்றச்சாட்டு அவ்வளவு லேசானது கிடையாது. சீக்கிரமா முடிச்சு வைக்கப்பாரு” என்றார் அனிதா.

“ஓகே மேம்” என்ற சக்தி அனைவரிடமும் சொல்லிக்கொண்டு அன்விதாவை கூட்டிக்கொண்டு கொடைக்கானலுக்குப் புறப்பட்டிருந்தான்.

செல்லும் முன்பு அன்விதா ஆர்விக்கை பார்க்க…

“டேக் அ டீப் ப்ரீத் கேர்ள். திஸ் இஸ் ஜஸ்ட் வன் ச்சாப்டர்” என்று பார்வையால் அத்தனை திடம் அளித்திருந்தான்.

இங்கு தனக்காக ஒன்று செய்து ஆர்விக்குக்கு எதுவும் ஆகிவிடுமோ என்று அன்விதா அவனுக்காக யோசித்துப் பார்க்க, அவனோ அவளுக்காகப் பேசியிருந்தான்.

“அவங்க போலீஸ் போவோம் சொல்லியிருக்காங்க ஆர்வி…”

“ஹேய் அன்வி…” என்ற ஆர்விக், “போலீஸ்கிட்ட போனால் அந்த கௌதம் அவனோட அம்மா அப்பாகிட்ட சுத்தி வைச்சிருக்க ரீல் மொத்தமா அந்துடும்… இங்க எனக்கு எதுவும் ஆகாது. கண்டிப்பா அந்த கௌதம் போலீஸ்கிட்ட என் நேம் சொல்லமாட்டான்” என்றான்.

“ஹ்ம்ம்” என்று ஆர்விக்கின் கரத்தை பிடித்து அழுத்தம் கொடுத்து தனக்காகக் காத்திருந்த சக்தியுடன் சென்றிருந்தாள்.

கொடைக்கானல் சென்ற சில நாட்களில்… அன்விதாவை அவதூறாகத் தூற்றிய தென்னரசியே கௌதமை தன்னுடைய மகனில்லையென சொல்லியிருந்தார்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 52

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
35
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. பிரச்சினை முடிஞ்சது

    1. Author

      இனி தான் ஆரம்பம் அக்கா