
“ஏன் ஒரு வேலைக்காரப் பொண்ணு எப்பவும் வேலைக்காரியா தான் இருக்கணுமா?” என்று பதிலுக்குக் கேட்டவள், “என்மேல இவ்ளோ ஆத்திரம் வர்ற அளவுக்கு நான் அப்டி என்னங்க தப்பு பண்ணினேன்?” என்றும் ஆதங்கமாகக் கேட்டாள்.
அதில், “செய்யற தப்ப எல்லாம் செஞ்சிட்டு என்ன தப்பு பண்ணினேன்னு கேட்கிற. நீயும் பெரிய ஆளு தான்டி” என்று உறுமியவர், “ஒரு வேலைக்காரி வேலைக்காரியா மட்டும் இல்லாம பெரிய இடத்துப் பையனா பாத்து வளைச்சுப் போட்டு வீட்டுக்காரியா மாறி என் வீட்டுக்குள்ள நுழைஞ்சா உன்மேல ஆத்தரம் வராம நடு வீட்டுல தூக்கி வச்சு உன்ன அழகு பாக்கணுமோ?” என்று நாக்கில் நரம்பில்லாது பேசினார் சாந்திமதி.
அதைக்கேட்டு அவளுள்ளும் சினம் துளிர்க்க, “நான் ஒன்னும் உங்க பையனை வளைச்சு போட்டு இந்த வீட்டுக்குள்ள வரல. அவரு தான் என்ன பாத்ததும் பிடிச்சி போய் உங்க விருப்பத்தையும் மீறி என்ன கல்யாணம் செய்து இங்க கொண்டு வந்திருக்கார்” என்றாள் சற்றே நிமிர்ந்து நின்று.
அவள் கூற்றில் சிறிதான திமிரும் இருந்தாலும் அதில் இருந்த உண்மை சாந்திமதியை வெகுவாகச் சுட்டிருக்க வேகமாக அவளை நெருங்கியவர், “என் மகன் உன்ன பிடிச்சி கல்யாணம் பண்ணி இங்க கொண்டு வந்தான்னு சொல்றியே. கொண்டு வந்தவன் என்னவா வச்சுருக்கான்னு கொஞ்சம் யோசிச்சு பாரு. பொண்டாட்டியாவா?” என்றார் புருவத்தை ஏற்றி இறக்கி.
அதில் ஏகமாய் அதிர்ந்தவள் அவரை அடிபட்ட பார்வை பார்க்க, “என்னடி பாக்குற. அன்னிக்கு என் பையன் எனக்கு கொடுத்த வாக்கு ஞாபகம் இருக்குல்ல? நான் உம் ணு சொன்னா தான் உனக்கு இந்த வீட்டுல வேலைக்காரி இடம் கூட நிரந்தரம். போ போய் டாய்லட்டை சுத்தமா க்ளீன் பண்ணு. என் பொண்ணு உள்ள போறப்போ அவ முகம் தரையில தெரியணும்” என்று கட்டளை இட்டார் சாந்திமதி.
அதைக்கேட்டு, “ம்மா… அப்டியே அங்க இருக்க பேஷினையும் கழுவ சொல்லுங்க. நேத்து வள்ளி கழுவ மறந்துட்டா” என்று சுகன்யாவும் சிணுங்க…
அன்னை மகள் இருவரின் பேச்சிலுமே உள்ளம் உலைகலனாய் கொதிக்கத் தொடங்கியது தேன்கமலிக்கு.
இல்லாதவர்கள் என்றால் அப்படி என்ன இளக்காரம் இவர்களுக்கு???இவர்களிடம் பணம் அதிகமாக இருக்கிறது என்பதற்காக இல்லாக் கொடுமையில் இருப்பவர்களை என்ன வேண்டுமானாலும் பேசுவார்களா????
என்று இருவரையும் பார்வையாலே எரித்தவள், “ஓகே சுகன்யா… நான் உன் ரூமோட டாய்லட், அப்றம் பேசின் எல்லாம் சுத்தம் பண்ணுறேன். பதிலுக்கு நீ எங்க ரூம் டாய்லட்டை மட்டும் சுத்தம் பண்ணினா போதும்” என்று சிறு புன்னகையோடு கூறினாள் தேன்கமலி.
அவள் அப்படி கூற நினைத்தது என்னவோ சாந்திமதியிடம்தான். ஆனால் அவர் தன் கணவனின் அன்னை என்ற காரணத்தோடு, அவர் வயதுக்கும் மதிப்புக் கொடுத்தவள் தனக்கு சின்னவளான சுகன்யாவிடம் அப்படிக் கூறி இருந்தாள்.
தேன்கமலி தன் மகளை கழிவறையை சுத்தம் செய்யக் கூறவும் கொதித்துப் போன சாந்திமதி, “என்னடி சொன்ன? என்னடி சொன்ன?” என்று அவளை நெருங்குவதற்குள், “கமலீ…ஈ ஈ ஈ…” என்ற பெரும் கர்ஜனையுடன் அவள் முன்னால் வந்து நின்றிருந்தான் அகத்தியன் கிருஷ்ணா.
கணவனின் எதிர்பாராத அந்த வருகையிலும், உரத்த குரலிலும், அரண்டு போய் விழிகளை மூடி இரண்டு அடிகள் பின்னே சென்றாள் தேன்கமலி.
பெண்ணவளின் அந்த மிரண்ட விழிகளைக் கண்டே தன்னை மட்டுப்படுத்தியவன், “யாரைப் பார்த்து என்ன வார்த்தை பேசுற? அவ இந்த வீட்டுக்கே செல்லப் பொண்ணு. அவளைப் போய் டாய்லட் கழுவ சொல்லுற.” என்று அடிக்குரலில் உறுமினான்.
மகன் அப்படி வந்து உறுமியதும் சாந்திமதிக்கு மென்மேலும் குதூகலம் பிறக்க, “பாரு அகத்தி எப்டி பேசுறான்னு. இதுக்குத்தான் தராதாரம் இல்லாத இடத்தில பொண்ணு எடுக்கக் கூடாதுன்னு நான் அவ்ளோ யோசிச்சேன்” என்று அவர் பங்கிற்கு சப்தமிட…
“ண்ணா…” என்று ஓடிப் போய் அவன் கைவளைவில் நின்று கொண்டு தேம்பத் தொடங்கினாள் சுகன்யா.
அதைக்கண்ட அகத்தியனின் விழிகள் மனைவியை இன்னுமின்னும் பார்வையாலே பஸ்பமாக்க,
அவனிடம் தன்னை விளக்கி விடும் நோக்கத்துடன், “நான் உங்க தங்கச்சிய வேணும்னு அப்படி சொல்லலங்க. அவங்க ரெண்டு பேரும் தான் சமைக்கிறேன்னு கேட்டதுக்கு, என்னை டாய்லட் கழுவ சொன்னாங்க. அதான்” என்று வேகமாகக் கூற…
“ஏன் சொன்னா என்ன தப்பு? இதுக்கு முன்ன நீ அந்த வேலை தான பண்ணிட்டு இருந்த?” என்று பல்லைக் கடித்தான் அகத்தியன் கிருஷ்ணா.
ஏகாந்தம் எனதாக. என்னுடைய எழுத்தில் மற்றுமொரு காதல், மற்றும் குடும்ப நாவல். Dec 17 இல் இருந்து மீண்டும் உங்களுக்காக 🥰 வாசித்து கருத்துகளைப் பகிருங்கள் friends. நாவலின் முடிவில் நாயக, நாயகியைப் போல் நீங்களும் ஏகாந்தத்தை உணருவீர்கள். நட்புடன் JNisha Theen
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
11
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கதாபாத்திரங்கள் பெயர்கள் அருமை … அம்மாவும் மகளும் நல்லா நடிக்கிறாங்க … ஒரு பொண்ணை கல்யாணமும் பண்ணிட்டு வந்து டார்ச்சரும் பண்ணுவாங்க … 😏😏
Thankyou so much sis 🥰
இல்லாதவர்கள் என்றாலே சுயகெளரவம் அற்றவர்கள் ஆகிப்போகின்றனர் அடுத்தவர்கள் பார்வையில்.
ஆவலுடன் காத்திருக்கிறோம்.
படைப்பாளருக்கு வாழ்த்துகள் 👏🏼
நன்றிகள் sis 🥰❤️😍