Loading

அத்தியாயம் 1

     மஞ்சளும், சிகப்பும் கலந்து கிழக்கு வானம் ஜொலிக்க ஆரம்பிக்க, கடலின் மேல் மேகமெத்தையில் நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்த கதிரவன் துயில் கலைந்து பணி செய்யப் புறப்பட்டான்.

     தான் வளர்க்கும் சேவல் கூவி தன்னை எழுப்புவதற்கு இடம் கொடாமல், வழக்கம் போல் இன்றும் அதிகாலையிலே எழுந்த பரமேஸ்வரி, தன் வீட்டின் வாசல் தெளித்து கோலமிட்டு அதன் அழகை கண்கள் நிறைய இரசித்து முடித்து, துண்டோடு சேர்த்து கொண்டையிட்டிருந்த தலைமுடியைப் பிரித்துத் துவட்டிக் கொண்டிருந்த நேரத்தில் சரியாக வந்து சேர்ந்தான் ஏரியா பால்காரன்.

     அவரின் சைக்கிள் மணி சத்தம் கேட்டு, வழக்கமாகப் பால் வாங்கும் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார் பரமேஸ்வரி.

     ஆடி மாத செவ்வாய்கிழமையின் அதிகாலை வேளை, பச்சை நிற காட்டன் புடவை அணிந்து கஸ்தூரி மஞ்சளில் ஜொலித்த மாசுமரு இல்லாத முகம் தெய்வகடாட்சம் என்ற வார்த்தைக்கு உருவம் கொடுக்க, நடுநெற்றியில் சற்றே பெரிய பொட்டு, காதில் நடுத்தர குடும்பத்திற்கு அடையாளமான சிறிய ஜிமிக்கி கம்மல், கை நிறைய கண்ணாடி வளையல்கள் எனத் தினம்தோறும் தான் வணங்கும் அம்மனுக்கு போட்டியாக வந்து நிற்கும் பரமேஸ்வரியைப் பார்த்து, எப்போதும் போல தன்னையும் அறியாது கைகூப்பினான் வேலன்.

     இது அவனுடைய தினசரி வாடிக்கை, “நான் உங்களை விட சின்னப்பொண்ணு தான். இப்படி செஞ்சு என்னை சங்கோஜப்படுத்தாதீங்க.” என ஒருமுறைக்குப் பலமுறை பரமேஸ்வரி சொல்லிப் பார்த்துவிட்டார். வேலன் கேட்பதாய் இல்லை,

     “என் குலசாமி மனித உருவம் எடுத்தது மாதிரி இருக்கீங்க. உங்களைக் கையெடுத்து கும்பிடுவதில் தப்பு இல்லைம்மா.” என்று முடித்துவிடுவான். சொல்லிப் பார்த்து சலித்த பரமாவும் அதற்குப் பிறகு உங்கள் விருப்பம் என்பதாய் ஒதுங்கிக் கொண்டார்.

     “அம்மா இன்னைக்கு உங்க வீட்டில் தான் முதன் முதலா பால் ஊத்துறேன்.” புன்னகையோடு சொன்னான் வேலன்.

     பரமேஸ்வரி வசிப்பது ஒரே காம்பவுண்ட்டிற்குள் இருக்கும் முப்பது வீடுகள் கொண்ட ஒரு நடுத்தர காலனியில். தன் வீட்டிற்கு வர வேண்டும் என்றால் அதற்கு முன்னால் பல வீடுகளைக் கடந்து வந்திருக்க வேண்டும். அப்படி இருக்க இவர் சொல்வதன் உள்ளர்த்தம் என்ன என்பதாய் யோசித்தார் பரமா.

     “ஏன் னு தானே யோசிக்கிறீங்க. காரணம் இல்லாம இல்லம்மா. காலங்காத்தால, தூக்கக் கலக்கத்தில் கறந்து வைச்ச பாலைத் தூக்கிக்கிட்டு, சைக்கிளை மிதிச்சு வரும் போது கஷ்டமா இருக்கும். ஒருநாள் கூட நிம்மதியா தூங்க முடியலையே. மனுஷனோட தேவையே மூன்று வேளை சாப்பாட்டும், நல்ல தூக்கமும் தானே. எதுக்குடா இந்தப் பிழைப்புன்னு வேதனையா இருக்கும்.

     ஆனா, சூரியன் உதிக்கிறதுக்கு முன்னாடி பச்சைத் தண்ணியில் குளிச்சு, மங்களகரமா மஞ்சள் பூசி, குங்கமத்தால பொட்டு வைச்சு அம்மன் சிலை மாதிரி இருக்கும் உங்களைப் பார்க்கும் போது புதுத் தெம்பு கிடைக்குதும்மா.

     கவலை, சோர்வு எல்லாம் மறந்து புதுசா பிறந்த குழந்தை மாதிரி மனசு ஒருமாதிரி புத்துணர்ச்சியா மாறிடும். அதுவும் இல்லாம இன்னைக்கு கொஞ்சம் ஸ்பெஷல். என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை முடிவு பண்றதுக்காக அவர் வீட்டைப் பார்க்கப் போறோம். உங்க முகத்தைப் பார்த்துட்டு போனா எல்லாம் நல்லதா நடக்கும் னு என்னோட நம்பிக்கை.” வேலன் சொல்லவும் பெரிதாகப் புன்னகைத்த பரமா,

     “ஏற்கனவே பச்சைத் தண்ணில குளிச்சிருக்கேன். இப்படி நீங்களும் ஐஸ் வைச்சா என்ன ஆகுறது. போங்க, வழக்கம் போல காலனியில் உள்ள எல்லாரையும் எழுப்பி பாலைக் கொடுங்க.” சிரித்தவாரே சொல்லிவிட்டு வழக்கமான வேலைகளைப் பார்க்க வீட்டினுள் நுழைந்தார்.

     அடுத்த தெருவில் இருக்கும் தொழிற்சாலை ஒன்றில் தான் அந்தக் காலனியில் இருக்கும் ஆண், பெண் எனப் பலரும் வேலை செய்து கொண்டிருந்தனர். அதில் பரமேஸ்வரியின் கணவரும் ஒருவர்.

     ஆறு மணி வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த கணவனிடம் வந்த பரமா, “என்னங்க நான் சொன்னது ஞாபகம் இருக்கு தானே. இன்னைக்கு இரண்டாவது ஷிப்ட் சேர்த்துப் பார்க்க வேண்டாம். கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுங்க. அப்ப தான் நாம நேரமே அங்க போயிட்டு, பாப்பா ஸ்கூலில் இருந்து வரதுக்குள்ள திரும்பி வர முடியும்.” வெட்கமும் தயக்கமும் கலந்த குரலில் கணவனை கண் நிமிர்ந்து பார்க்காமல் தரை பார்த்து பேசினார் பரமேஸ்வரி.

     மனைவியின் முகத்தை தன் கரம் கொண்டு நிமிர்த்தி, தன்னைக் காண வைத்து, “கண்டிப்பா வந்திடுவேன் பரமா, உன்னை விட அந்த வேலையா எனக்குப் பெருசு.” என்றவண்ணம் மனைவியின் கன்னம் கிள்ள வந்தவரை, “பாப்பா இருக்கா” என்று கண்களாலே எச்சரித்தார் பரமேஸ்வரி.

     சின்னச் சிரிப்புடன் அவர் நகர, “பாப்பா என்ன பண்றீங்க, எழுந்திட்டீங்களா? போய் முகம் கழுவிட்டு, பல் தேய்ச்சிட்டு வாங்க. அம்மா காபி போட்டு தரேன்.” நான்கு வயது மகள் ரஞ்சினியைக் கொஞ்சினார் பரமேஸ்வரி.

     “நான் அம்மா கூட பேசமாட்டேன்.” முகத்தை திருப்பியது நண்டு.

     “அச்சச்சோ, ஏன்டா அப்படி. அம்மா என்ன தப்புப் பண்ணேன், எதுக்காக என் தங்கம் என்கிட்ட பேசாது.” மகள் விளையாடுகிறாள் என்று தெரிந்ததும் தானும் சேர்ந்து விளையாடினார்.

     “அம்மாவும், அப்பாவும் பாப்பாவுக்குத் தெரியாம ஏதோ இரகசியம் பேசுறீங்க. அது பாப்பாவுக்குப் பிடிக்கல.” தன் மழலை மொழியில் சொன்னாள் சிவரஞ்சனி.

     “அச்சச்சோ, பாப்பா கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்ல டா. இன்னைக்கு சாயங்காலம் நீ வந்ததும் அம்மாவும், அப்பாவும் பாப்பாகிட்ட கண்டிப்பா சொல்றோம்.” சொன்ன தாயை நம்பாமல், “ப்ராமிஸா” எனத் தன் உள்ளங்கையை நீட்டினாள் அந்த வாண்டு.

     சத்தியம் செய்து, மகளின் விளையாட்டு சண்டைக்கு தீர்வு கண்டுபிடித்த திருப்தியில் அன்றாட அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தார் பரமேஸ்வரி.

     அன்று மாலையில் பள்ளி முடிந்து வீடு வந்து சேர்ந்த தன் ஆசை மகளை அள்ளி அணைத்து லேசான முத்தம் பதித்து தன் மடியில் அமர வைத்தவாறே, “ரஞ்சினி செல்லம், அப்பா உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லப் போறேன் டா.” பேச்சை ஆரம்பித்தார் குடும்பத் தலைவன் ரமணிச்சந்திரன்.

     “என்னப்பா விஷயம்.” மழலை மொழியில் கேட்ட தன் செல்ல மகளை ஆசையாய் பார்த்தவர், “உனக்கு தம்பிப் பாப்பா பிறக்கப் போகுது டா கண்ணா.” மகளின் தலை தடவி சொன்னவரிடம் இருந்த சந்தோஷம் இப்போது சிறுபெண்ணையும் தொற்றிக் கொண்டது.

     “தம்பிப் பாப்பாவா!” ஆச்சர்யத்திலும், சந்தோஷத்திலும் தன் மடியில் இருந்து குதித்து முட்டைக் கண்ணை விரித்துப் பார்த்த மகளைப் பார்த்து நிறைவாய் சிரித்தார் ரமணி.

     “அம்மா நிஜமாவாம்மா, எனக்குத் தம்பி பிறக்கப் போறானா?” தகப்பன் வார்த்தையில் திருப்தி அடையாதவளாய் தாயிடம் திரும்பக் கேட்டாள் சிவரஞ்சினி.

     “ஆமா டா செல்லம். என் ரஞ்சினிப் பாப்பா இப்ப பெரிய பொண்ணாகிட்டா. அவ அவளோட தம்பியை நல்லாப் பார்த்துப்ப தானே.” மகளுக்கு அக்காவாக அவள் கடமையை இப்போதே புரிய வைக்க நினைத்து அதற்கு ஏற்ப பேச்சை ஆரம்பித்தார் பரமேஸ்வரி.

     “ஆமா, நான் பெரிய பொண்ணு. என் தம்பியை நான் நல்லாப் பார்த்துப்பேன்.” சொல்லிச் சிரித்தாள் குழந்தை. புது உயிரின் வரவால் அந்தக் குடும்பத்தில் சந்தோஷ அலைகள் தாண்டவமாடியது.

     அடுத்து வந்த நாட்களில் ரஞ்சினி ஒரே அடம், “நீங்க என்கிட்ட பொய் சொல்லிட்டீங்க. தம்பிப் பாப்பா வரப்போறான்னு சொல்லி முழுசா நாலு நாள் ஆச்சு. ஆனா இன்னும் வரல. எப்பதான் வருவான் என்னோட தம்பிப்பாப்பா, எப்ப என்னோட விளையாடுவான்.” கேள்விக் கணைகளை விடாமல் தொடுத்ததோடு, பிஞ்சுக்கைகளால் தன் மார்பில் அடிக்கும் தன் மகளைக் கிச்சுச்கிச்சு மூட்டி சிரிக்க வைத்து அப்போதைக்கு சமாளிப்பார் ரமணி. பரமேஸ்வரி தான் குழந்தையின் மனநிலைக்கு இறங்கி அவளுக்கு நடப்பை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார்.

     “இன்னும் எட்டு மாசம் ஆகுமா?” பெருங்கவலை கொண்டாள் சிறுமி. அவளின் ஏக்கத்தைப் பார்த்து கணவன், மனைவி இருவரும் சிரித்துக் கொள்வர்.

     ரஞ்சனி சாட்சாத் பரமேஸ்வரியின் பிரதிபலிப்பு. வயதுக்கு மேலான பொறுமையும், பொறுப்பும் கொண்டவள். மற்ற குழந்தைகளைப் போல வயதுக்கான சின்னச்சின்ன சேட்டைகள் கூட செய்ததில்லையே என்ற கவலை பெற்றவர்கள் இருவருக்கும் இருந்தது. வரப்போகும் தம்பியை நினைத்து சிறுமிக்குள் மறைந்திருந்த சிறுமி வெளியே வந்துவிட வேறென்ன வேண்டும் அவளைப் பெற்றவர்களுக்கு.

     “அடியேய் ரஞ்சினி என்ன பண்ணிட்டு இருக்க நீ.” கேள்வியோடு அருகே வந்தார் எதிர்வீட்டுப் பெண்மணி.

     “அம்மா வயித்துக்குள்ள தம்பிப் பாப்பா இருக்கான். அம்மா நிறைய வேலை செஞ்சா தம்பிக்கு வலிக்கும் இல்ல, அதான் நான் செய்யுறேன்.” என்றவள், பிஞ்சுக் கைகளால் வீட்டு முற்றத்தை சுத்தம் செய்யத் தெரியாமல் ஏனோ தானோவென்னனு ஏதோ செய்துவிட்டு, தண்ணீரைத் தெளிக்கத் தெரியாமல் தெளிக்க பாதி இடம் கூட நனையவில்லை.

     கோலம் போடுகிறேன் என்று அமர்ந்துவிட்ட பிறகு, கோலம் போடத் தெரியாததால் தனக்குத் தெரிந்த A, B, C, D ஐ கோலமாவால் வீட்டு முற்றத்தில் எழுதிவிட்டு, ஏதோ பெரிதாகச் சாதித்ததைப் போல சந்தோஷமாக உள்ளே சென்றாள் குழந்தை.

     மசக்கையில் அதிகம் துவண்டு போனார் பரமேஸ்வரி. அவரின் கரு தாங்கிய வயிறும் இரண்டு மாதங்களிலே ஐந்தாறு மாதம் போல பெரிதாக, காலனி முழுக்க அவரைப் பற்றி தான் பேச்சாக இருந்தது.

     என்னவோ ஏதோ என்ற பயத்தில் தனியார் மையத்தில் ஸ்கேன் செய்து பார்த்த கணவன், மனைவிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தமாக நான்கு குழந்தைகள்பரமேஸ்வரியின் கர்ப்பத்தில்.

     குழந்தைச்செல்வம் அரிதில் கிடைத்திடாத வரம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை தான். ஆனால் அளவுக்கு அதிகமாக கிடைக்கும் போது அதுவும் பாரமாகத் தானே தெரியும். அப்படி பாரமேறிய மனதுடன் தான் வீடு வந்து சேர்ந்தனர் கணவன், மனைவி இருவரும்.

     அன்றைய மாலை நேரம் இருவருக்கும் நடுவில் பயங்கரமான வாதம். கணவன் நடப்பை எடுத்துச்சொல்லி கருவைக் கலைக்கச் சொல்லிவிட தாய் மனமோ அதற்கு இசைய முடியாமல் போராடியது.

     “பரமா எனக்கு மட்டும் நம்ம உயிரைக் கொல்ல ஆசையா என்ன. நாலு குழந்தையை எப்படி நம்மால் வளர்க்க முடியும். ஒருவேளை எல்லாமே பெண் குழந்தைங்களா இருந்துட்டா.

     கொஞ்சம் யோசிச்சுப் பாரு. ஐந்து பொண்ணுங்க, என்னால முடியாதும்மா. பிறக்காத குழந்தையால நமக்குள்ள பிரச்சனை வேண்டாம் புரிஞ்சிக்கோ.” முடிந்தவரை தன்மையாகவே எடுத்துச் சொல்ல முயன்றார் ரமணி.

     “உங்க சம்பாத்யத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிக்கனம் பண்ணி புள்ளைங்களை நான் வளர்க்கிறேன். நானும் வேலைக்குப் போறேன். அப்பவும்  முடியலையா யாருக்காவது தத்துக் கொடுத்திடுவோம்.

     ஆனா நாம பிறக்க வைப்போம் னு நம்பி என் வயித்துக்குள்ள வந்து இருக்கிற உயிர்களை கொல்ல வேண்டாம்.” தன் பங்கிற்கு சரிக்கு சரியாய் தானும் பேசினார், பரமேஸ்வரி.

     தன்னிடம் இல்லாமல் போனாலும் பரவாயில்லை, வேறு எங்காவது தன் பிள்ளைகள் உயிரோடு நலமோடு வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று தாயாக அவர் மனம் பரிதவித்தது.

     சாதாரணமாக ஆரம்பித்த பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாற, இதுவரை நடக்காத ஒன்று தன் வீட்டில் நடப்பதைப் பார்த்து பயந்து போன ரஞ்சினி கத்தி அழ ஆரம்பித்தாள். அவள் அழுகை அவளின் பெற்றோரை அப்போதைக்கு சமாதானப்படுத்த, சண்டையை நிறுத்தினர் இருவரும்.

     “அப்புறம் என்ன ஆச்சு அத்தை.” ஆர்வம் தாங்க முடியாமல், கதை சொல்லிக் கொண்டிருந்த தன் மாமியார் செண்பகவல்லியிடம் கேட்டார் நிறைமாத கர்பிணியாய் இருந்த ராதா.

     “என்னத்தை சொல்றது, பிறக்காத அந்தக் குழந்தைங்களால அந்த வீட்டில் தினம் தினம் பிரச்சனை தான். விடாமப் போராடி, குழந்தைங்களைப் பெத்துக்க, அரை மனசா ரமணியை ஒத்துக்க வைச்சா பரமேஸ்வரி.

     நாலு பிள்ளைகளில் ஒன்னாவது ஆணா இருக்காதான்னு ஏங்கிப் போய் பொண்டாட்டியை மறுபடியும் தனியார் லேபுக்கு கூட்டிக்கிட்டு போய் ஸ்கேன் எடுத்துப் பார்த்த ரமணிகிட்ட, அவன் ஒரு மாச சம்பளத்தை மொத்தமாக வாங்கிக்கிட்டு அத்தனையும் பொம்பளைப் புள்ளைங்கன்னு உண்மையை ஒடைச்சி சொல்லிட்டான் ஒருத்தன்.” என்றுவிட்டு அந்நாளின் நினைவில் இன்று பெருமூச்சுவிட்டார் வயதில் மூத்த  பெண்மணி.

     “அடக்கடவுளே, பாவம் அந்த அம்மா. கடைசியா என்ன தான் ஆச்சு.” உண்மையான கவலையுடன் கேட்டார் ராதா.

     “ரமணிக்கு தூக்கமே வரல. ஐந்து பொண்ணுங்களை எப்படி படிக்க வைச்சு, பாதுகாப்பா வளர்த்து, இன்னொரு வீட்டுக்குக் கட்டிக்கொடுத்து, அவங்களுக்கு நல்லது கெட்டது பார்த்துக் கரை சேர்ப்பதுங்கிற கவலை.

     ஆசைப்பட்டு கட்டிக்கிட்ட பொண்டாட்டி தன்னைப் புரிஞ்சிக்கலையேங்கிற கோவம். அவனைச் சுற்றி இருக்கும் எல்லோரும் அவனைப் பார்த்து சிரிப்பாங்களேங்கிற தாழ்வு மனப்பான்மை, எல்லாம் சேர்ந்து அவனைப் போட்டு அழுத்த, கடைசியா ஒரு முடிவெடுத்தான்.” என்றவர் நிறுத்தவும், மாமியாரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ராதா, “எனக்குத் தெரியும், ரமணி கண்டிப்பா நல்ல முடிவு தான் எடுத்து இருப்பாரு.” நம்பிக்கையாய் கூறினார்.

     “அதுதான் இல்லம்மா, தன்னால நிச்சயம் இந்த பாரத்தைத் தாங்கிக்க முடியாதுன்னு பொண்டாட்டி புள்ளையை விட்டுட்டு தூக்கில் தொங்கிட்டான் படுபாவி.” அந்நாளின் நினைவில் இன்றும் பதறிய நெஞ்சத்தைக் கைகளில் பிடித்துக்கொண்டார் செண்பகவல்லி.

     “அடக்கடவுளே! இப்படியா பண்ணனும். குழந்தைங்களை கொடுத்த கடவுள் அதை வளர்க்க வழி செஞ்சு கொடுக்க மாட்டாரா. எதுக்காக அந்த மனுஷனுக்கு இப்படி ஒரு எண்ணம் வரணும். பாவம் அந்த அம்மா புருஷன் சாவுக்கு அவங்க தான் காரணம் னு துடிச்சி போய் இருப்பாங்களே.” ராதா தானும் ஒரு பெண்ணாக இருந்து தன்னைப் போன்ற இன்னொரு பெண்ணான பரமேஸ்வரியின் துடிப்பை உணர்ந்தது போல் சொல்லவும் செண்பகவல்லிக்கு மனம் தாங்கவில்லை.

     “ஆமா துடிச்சிப் போயிட்டா தான். நாங்க அத்தனை பேர் அவளுக்கு ஆறுதல் சொன்னோம். ஒருத்தர் கூடவும் ஒரு வார்த்தை கூடப் பேசல. அவளும் ஏதும் தப்பான முடிவு எடுத்திடக் கூடாதுன்னு காலனியில் இருந்த ஒரு வயசான பாட்டி ரமணியோட காரியம் முடியுறவரைக்கும் தினம் இராத்திரி அவ கூடவே இருந்தாங்க.

     இப்ப ரமணியோட கவலை அவளுக்கு வந்திடுச்சு. ஐந்து பொண்ணுங்களை தனி ஒருத்தியா எப்படிக் காப்பாத்துறதுன்னு யோசிச்சு வழி கிடைக்காம புருஷன் பின்னாடியே போயிடலாம் னு நினைச்ச அந்தப் புண்ணியவதி, புருஷனோட காரியம் முடிஞ்ச உடனே, அப்பா அப்பான்னு ஏக்கத்தில் அழுதுக்கிட்டு இருந்த ரஞ்சினிக்கு விஷம் கலந்த பாலைக் கொடுத்துட்டு தானும் குடிச்சிட்டா.” சொல்லிவிட்டு புடவை முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டு அழுதார் செண்பகவல்லி.

     “அம்மா, எதுக்காக இந்தக் கதையை அவகிட்ட சொல்லிட்டு இருக்கீங்க. அதுவும் அவ நிறைமாசமா இருக்கிற இந்த நேரத்தில்.” கோபித்தவாறே அருகே வந்த அமர்ந்தார் செண்பகவல்லி ஈன்றெடுத்த ஒற்றை மகனும், ராதாவின் கணவனுமாகிய வடிவேலு.

     “காரணம் இல்லாம இல்ல டா, உனக்கு ஏற்கனவே இரட்டைப் பிள்ளைங்க இருக்கு. இப்ப திரும்பவும் இரட்டைப் பிள்ளைங்க. அந்த ரமணியும், அவன் பொண்டாட்டியும் பண்ணிக்கிட்ட மாதிரி நீங்க பண்ணிடக் கூடாதுன்னு தான், பழசை நினைவு படுத்துறேன்.

     என்ன பார்க்கிற, ஏற்கனவே இரண்டு இப்ப இன்னும் இரண்டான்னு நீ வருத்தப்பட்டு கேட்டதா ராதா என்கிட்ட சொன்னா.” என்று நிறுத்த, வடிவேலு மனைவியைப் பார்த்தார்.

     “வருமானமே இல்லாத காலத்துல பத்து புள்ளைங்களை பெத்துக் கரை சேர்த்தவங்க டா நாங்க. காலம் மாற மாற நீங்க ஒன்னு இரண்டோட நிறுத்திக்கிறீங்க.

     அதையும் மீறி சிலருக்குத் தான் ஆண்டவன் பிள்ளைச் செல்வத்தை அதிகமாக் கொடுப்பான். அதுக்கு கூட ஒரு கொடுப்பினை வேணும் டா. அந்தக் கொடுப்பினை உங்க இரண்டு பேருக்கும் கிடைச்சிருக்கு, ஆண்டவனோட ஆசிர்வாதத்தை உதாசீனப்படுத்திடாதீங்க.

     முன்னாடி பிறந்தது இரண்டு ஆண் பிள்ளைங்க, இப்ப பிறக்கப் போறது எந்தக் குழந்தையா இருந்தாலும், முழு மனசோட அதை ஏத்துக்கிட்டு வளர்த்து ஆளாக்குங்க. உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன், என் பேரப் பிள்ளைங்களை ஏதும் பண்ணிடாதீங்க.” கிட்டத்தட்ட கதறும் நிலைக்குச் சென்றுவிட்டார் மூதாட்டி.

     “அம்மா, அது ஏதோ ஒரு குழப்பத்தில் சொன்னது. என்னோட சக்திக்கு நாலு பிள்ளைங்க என்ன, நாற்பது பிள்ளைங்களைக் கூட நான் ஆளாக்குவேன். நீங்க கவலைப்படாதீங்க, உங்க நான்கு பேரப்பிள்ளைங்களும் நல்ல படியா இந்த வீட்டில் வளருவாங்க, அதுக்கு நான் உத்திரவாதம் கொடுக்கிறேன்.” முழு மனதுடன் வாக்குறுதி கொடுத்தார் வடிவேலு.

     “அத்தை பரமேஸ்வரிக்கும் அவங்க குழந்தைக்கும் என்னாச்சு.” ராதா அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்க அந்நாளின் சோக நினைவுகளுக்கு பயணித்தார் அவளின் மாமியார்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. கதை விறுவிறுன்னு போயிடுச்சு அருமை 😀 கதாபாத்திரங்கள் பெயரெல்லாம் அருமை … ட்விஸ்டோட முடிச்சுட்டீங்க … செண்பகவல்லி சொன்ன கதைல அவங்க யாரா இருக்கும் 🤔