Loading

பிரஷாந்திற்கு எதுவும் மறக்கவில்லை என்றதும் தான் அனைவருக்கும் நிம்மதி பெருமூச்சு எழுந்தது. “எது எதுல விளையாடுறதுன்னு விவஸ்தை இல்லை” என்று அமர் தான் கடிந்து கொண்டான்.

தயாவோ, “மவனே ஆல்ரெடி கையும் காலும் உடைஞ்சுருக்கேன்னு பார்க்குறேன் இல்லன்னா நானே உடைச்சுருப்பேன்…” என மூக்கு முட்ட முறைக்க, மைதிலி பிரஷாந்தை முறைத்தபடி “சரி ஆகவும் இன்னொரு தடவை உடைச்சுடலாம் தயா” என்றாள்.

“அடிப்பாவி… என்னமோ கரும்பை உடைச்சு சாப்பிடுற மாதிரி சொல்ற!” பிரஷாந்த் பரிதாபமாகக் கூற, அதில் மெலிதாய் சிரித்தாள்.

இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொள்ள மகேஷ் “சரி வாங்க அவன் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று அனைவரையும் அழைத்துச் சென்றான்.

மற்றவர்கள் சென்றதும், அவனருகில் அமர்ந்த மைதிலி, “ரொம்ப வலிச்சுதா ரஷு?” என உயிர் உருகக் கேட்க,

“வலிச்சுது! எப்பவும் உன் முகத்தைப் பார்த்துட்டே தூங்கி, விடியும் போது உன் முகத்துலயே முழிச்சுப் பழகிடுச்சு மைலி. ஸ்டேஷன்ல நீ இல்லாத தனிமை தான் ரொம்ப கொடுமையா இருந்துச்சு!” என்றான் வேதனையாக.

ஒரு துளி கண்ணீர் தரையில் விழ, “எனக்கும்… நீ கண்ணு முழிக்காம இருந்ததும் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? என்னால ஏத்துக்கவே முடியல ரஷு நீ பக்கத்துல இல்லைன்ற உண்மைய” என அவன் கன்னம் வருடினாள்.

“சரி ஆகிடும் மைலி. டெம்பரவரி ப்ராப்ளம்காக இவ்ளோ கண்ணீரை வேஸ்ட் பண்ண வேணாம். சரி ஆகிடும். ம்ம்” என்று தனது வலியை மறைத்து அவளுக்கு ஆறுதல் உரைக்க, அவளுக்கோ கோபம் தான் வந்தது.

“இவ்ளோ கேவலமானவங்களை நான் பார்த்ததே இல்ல ரஷு. இருக்கு அவங்களுக்கு! இனி பெயில்ல கூட வெளில வராத மாதிரி பண்ணிடுவேன்” எனக் கறுவிட,

“சாரிடி… எல்லாம் என்னால தான். உன்னை ரொம்ப அழ வச்சுட்டே இருக்கேன்ல. நீ சொன்னதைக் கேட்டுருந்தா உனக்கும் இவ்ளோ வலி இல்லைல…” என்று அப்போதும் தன்னை எண்ணி கவலைப்பட்டு மன்னிப்பு வேண்டியவனை ஆதூரமாகப் பார்த்தவள்,

“எனக்கு மட்டும் தான் வலியா? நான் சொன்னதை செஞ்சுருந்தாலும் அதுக்கும் இப்படி ஏதாவது லூசுத்தனம் செஞ்சுருப்பாங்க ரஷு. விடு எல்லாமே அனுபவிக்கணும்னு இருக்கு போல” என்னும் போதே அவளை மீறியும் தேம்பல் வர, கண்ணில் நின்ற நீருடன் “இனி உயிர் போற வலியா இருந்தா கூட உன் பக்கத்துலயே அனுபவிச்சுடனும் ரஷு. என்னால முடியல” என்று எத்தனை முயன்றும் கட்டுப்படுத்த இயலாமல் அவனது தோளில் சாய்ந்து கதறி விட்டாள்.

“ஹே மைலி” எனப் பதறிய பிரஷாந்திற்கு அவளைத் தேற்றும் வழி தான் தெரியவில்லை.

“மைலி ப்ளீஸ் ஸ்டாப்!” என்று கூறியும் அவள் அழுகையை நிறுத்தாமல் இருக்க, “ஐயோ இப்ப நான் அதிரடி ஆக்ஷன்ல கூட இறங்கி உன்னை சமாதானம் செய்ய முடியாது மைலி. ப்ளீஸ் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கோ. எனக்கு சரி ஆனதும் மறுபடியும் அழுது காட்டு, நான் கிஸ்ஸிங்ல அதை மேனேஜ் பண்ணிடுறேன்” என்று அவளை சிரிக்க வைக்க முயன்று அதில் வெற்றி கண்டான்.

மென்முறுவல் பூக்க, “மூஞ்சியைப் பாரு. நான் என்ன பேசுறேன் நீ என்ன பேசுற…” என்று செல்லமாக அதட்டிய நேரம் மகிழினி உள்ளே ஓடி வந்தாள்.

“அம்மா அப்பா முழிச்சதும் என்னைக் கூப்புடுறேன்னு சொன்னீங்க” எனத் தாயிடம் கோபப்பட்டவள், “அப்பா ஐ மிஸ் யூ” என்றாள் சோகமாக.

அவளது அழைப்பில் பிரஷாந்த் தான் தடுமாறினான்.

“என்… என்ன சொன்ன பேபி?” நெகிழும் குரலை நடுங்க விட்டபடி அவன் கேட்க,

“அப்பான்னு சொன்னேன்பா. அம்மா தான் உங்களை அப்படி கூப்பிட சொன்னாங்களே!” என்று தலையை ஆட்டிப் பெருமையுடன் கூறிய மகளை வாஞ்சையுடன் பார்த்தவனுக்கு, தானே குழந்தை ஈன்றதொரு நிம்மதி.

“மகி பேபி…” என பேச வார்த்தையற்று அவள் கையைப் பிடித்து முத்தமிட, “எப்போப்பா வீட்டுக்கு வருவீங்க உங்களுக்காக சர்ப்ரைஸ் எல்லாம் ரெடி பண்ணோம் தெரியுமா” என்றவளின் கூற்றை முழுதாய் புரிந்து கொள்ளாமல், “சீக்கிரம் அப்பா வந்துடுவேன்டா…” என அவள் கன்னத்தை ஆதூரமாக வருடினான்.

விசுகிசுத்த தன்னவனின் முகத்தையே மெலிதாய் ரசித்த மைதிலி, “மகி… அப்பா ரெஸ்ட் எடுக்கட்டும். டிஸ்டர்ப் பண்ண வேணாம் ஓகே வா” என்றதும், “சரிம்மா” என சமத்தாக தலையசைத்து விட்டு வெளியில் சென்றாள்.

“ரெஸ்ட் எடு ரஷு!” என்றவளை சில நொடிகள் கண்ணெடுக்காமல் பார்த்தவன், “ரொம்ப பயந்துட்டியா?” என்றான் ஒரு மாதிரியான குரலில்.

அவள் புருவம் சுருக்கி, “பின்ன பயப்படாம” என்றதில்,

“அதில்ல… நான் போய் சேர்ந்துடுவேனோன்னு பயத்துல கடைசியா ஒரு தடவை பேபியை என்னை அப்பான்னு கூப்பிட சொன்னியோ” சிறு கேலியும் அதனுடன் இழையோடிய வருத்தமும் கலக்க கேட்டவனை பார்வையாலேயே எரித்தாள்.

அவனுக்கு அடிபட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில், பரிதாபம் கொண்டு அப்படி அழைக்க சொல்லி இருப்பாள் என அவனே எண்ணிக்கொண்டான்.

அதற்கு பதில் ஏதும் சொல்லாதவள், “நீ ரெஸ்ட் எடு. நான் வெளில இருக்கேன்…” என்று எழுந்து சென்று விட, அவள் சென்ற திசையையே வெகு நேரம் பார்த்தபடி இருந்தவன் பின் மருந்தின் வீரியத்தில் கண்ணயர்ந்தான்.

‘மவனே நீ சரி ஆகி வீட்டுக்கு வா இருக்கு உனக்கு…’ என மைதிலி தான் எழுந்த கோபத்தையும் அவனிடம் காட்ட இயலாமல் பற்களை கடித்தாள்.

பின், நாளும் பொழுதும் கரைய அடுத்த நான்கு நாட்களும் மருத்துவமனையிலேயே கழிந்தது.

அவனது காயங்கள் சரியாக முழுதாய் இரு மாதங்கள் ஆகலாம் என்று மருத்துவர் கூறியதில், பூபாலன் தான், “மைதிலிமா… பிரஷாந்துக்கு உடம்பு சரி ஆகுற வரைக்கும் நம்ம வீட்லயே இருங்க. அங்க போய் தனியா சமாளிக்கிறது கஷ்டம். உடம்பு சரி ஆகவும் போய்க்கலாம்” என்றதில் பிரஷாந்த் “வேணாம் அங்கிள்” என்றிட அந்நேரம் மைதிலி “சரிங்க மாமா” என்று விட்டு பிரஷாந்தை முறைத்தாள்.

“அடடா இதுவல்லவோ கணவன் மனைவி ஒற்றுமை” என தேவஸ்மிதா கிண்டல் செய்ய, பிரஷாந்த் மைதிலியை கெஞ்சுதலாகப் பார்த்தான்.

அவளுடன் தனியாக நேரம் கழிக்க சூழ்நிலை எதிர்பார்த்துக்கொண்டிருந்தவனுக்கோ இப்போது பூபாலன் வீட்டிற்குச் சென்றால் தனிமை முற்றிலும் கிடைக்காது என்ற கவலை.

மைதிலிக்கோ அவன் மீது சிறிது வருத்தம் இருந்ததோடு, அவளும் நீதி மன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை வந்தால், அவனைத் தனியே விட்டுச் செல்ல இயலாது என்று பூபாலன் வீட்டிற்குச் செல்ல சம்மதித்தாள்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கு அத்தனையும் மைதிலிக்கு சாதகமாகவே இருந்தது. மிருணாளினியையும் பிரஷாந்தையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தச் சொல்லியதில், பிரஷாந்த் அப்போதும் “நான் வரேன். மிரு வேணாமே” என்று மெலிதாய் கூறிட, அவனைத் திரும்பி வெடுக்கென முறைத்த மனையாளைக் கண்டு வாயை மூடிக்கொண்டான்.

மிருணாளினி தான், “எனக்கு வர்றதுல எந்த பிரச்சனையும் இல்லண்ணா. என்ன வேணா செய்யலாம்னு தைரியத்துல இருக்குறவங்களை சும்மா விட கூடாது” என்று கோபத்துடன் உரைத்தவளைப் பெருமூச்சுடன் பார்த்தான்.

பின், மிருணாளினியின் மூலம் அவர்களது பாதி சொத்தை அவளுக்கே வாங்கி கொடுத்து விட்டாள் மைதிலி. அதில் பிடித்தமில்லை என்றாலும் அதனை வாங்கி கொண்டவள், உடனடியாக பிரஷாந்திற்கு அவற்றை மாற்றிக் கொடுத்து விட்டாள்.

அவர்கள் மீட்ட சொத்துக்களில் முக்கால்வாசி பிரஷாந்த்தின் உழைப்பு.

இன்னும் பிரஷாந்தின் வில்லா மட்டும் நிலுவையில் இருந்தது.

ரியல் எஸ்டேட் மோசடி மற்றும் கொலை முயற்சி குற்றத்திற்காக வக்கீல் ஜானக்கின் வக்கீல் அடையாளம் பறிக்கப்பட்டு, சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.

காவலர்களான நாஞ்சில் மற்றும் மாணிக்கத்தின் பணியையும் பறித்திருந்தாள். கூடவே சிறைத்தண்டனையும் வழங்கப்பட, பிரஷாந்தின் பெற்றோருக்கு பெயில் வழங்க இயலாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

அனைவரையும் ஆட்டிப் படைத்த மைதிலிக்கு அதன்பிறகே மனநிம்மதி கிடைத்தது.

அனைத்தும் முடிந்தபின் வரவேண்டிய நிம்மதி தான் பிரஷாந்திற்கு வர மறுத்தது. தண்டனை கொடுக்கப்பட்டது அவனது பெற்றோருக்காகிற்றே. அதனால் ஏற்பட்ட வலி உள்ளுக்குள் இருந்தாலும், வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

இரவு அவனுக்கு வேண்டிய மாத்திரையை எடுத்துக் கொடுத்த மைதிலிக்கு முகமே பளிச்சென இருந்தது.

அதனை ரசித்தபடியே மாத்திரையை வாங்கியவன், “என்ன பேஸ்ல தவுசண்ட் வால்ட் லைட் எரியுது?” எனக் கிண்டலாகக் கேட்க,

“உன்னை கஷ்டப்படுத்துனவங்களை தண்டிச்ச நிம்மதி தான்” என யோசியாமால் பதில் அளித்தவளைக் கண்டு உள்ளம் உருகியது.

இப்போது கட்டுகளும் சிறிதாக்கப்பட்டிருக்க, “மைலி நம்ம வீட்டுக்குப் போகலாமா?” எனக் கேட்டபடி, அவளை இழுத்து தன்னருகில் இருத்திக் கொள்ள, முதலில் தடுமாறினாலும் அவனது காயத்தில் படாமல் அமர்ந்தவள், “தார்னி டெவில் காயத்துல தட்டிடப் போறேன். என்ன பண்ற?” என்று அதட்டினாள்.

“எனக்கு எப்பவோ பரவாயில்ல தான். அந்த வீட்டுக்குப் போனா தான் முழுக்க முழுக்க என் மைலியை நான் ரசிக்க முடியும். இங்க ஏகப்பட்ட தடங்கல்” என்று சொல்லி முடிக்கும் முன்னே, “டேய் அனகோண்டா” எனக் கத்தியபடி அறைக்குள் வந்தாள் தேவஸ்மிதா.

“நான் சொல்லல. தடங்கல் நம்பர் 1” என்று முணுமுணுத்ததில் நளினமாய் புன்னகைத்தவள், அவனை விட்டு நகர்ந்து எழுந்து கொண்ட நேரம் தேவஸ்மிதா உள்ளே நுழைந்தாள்.

நான்கு மாத கருவைத் தாங்கி இருந்தவள், “நான் தடங்கலாடா?” என இடுப்பில் கை வைத்து முறைக்க, “கேட்டுடுச்சா” எனப் பின்னந்தலையைக் கோதினான்.

“நான் தடங்கலா வரலைன்னா மட்டும் அப்படியே ரொமான்ஸ் பண்ணிக் கிழிச்சுடுவ!” என்று அவன் கன்னத்தில் குத்த,

மைதிலி கீழுதட்டைக் கடித்து சிரிப்பை அடக்கினாள்.

பின், பொதுவாக அவனிடம் பேசி விட்டு அவள் வெளியில் சென்ற நொடி, மைதிலியை தன்னருகில் இழுத்தான் பிரஷாந்த்.

“டேய் தார்னி டெவில். எத்தனை தடவை சொல்றேன் இப்படி பிடிச்சு இழுக்காத காயத்துல அடி பட்டுடப் போகுதுன்னு…” என்று மீண்டும் கண்டித்தாள்.

“அது இருக்கட்டும். அவள் கலாய்ச்சா நீ எதுக்குடி சிரிச்ச?” என இரு புருவம் உயர அவளை நெருங்க, நெஞ்சில் கை வைத்து அவனைத் தடை செய்த மைதிலி, “அடுத்து யாராவது வரப்போறாங்க ரஷு. விடு!” என்றாள் லேசான வெட்கத்துடன்.

“அதுக்கு தான் சொல்றேன். நம்ம நம்ம வீட்டுக்குப் போகலாம். ஐ மிஸ் யூ சோ மச் மைலி. நீ என்னை மிஸ் பண்ணலையா?” என அவள் கையைப் பிடித்து கன்னத்தில் வைத்து அழுத்தியபடியே கேட்டான்.

புதிதாய் முளைத்திருந்த குட்டி குட்டி தாடி அவளது உள்ளங்கையை இதமாய் காயப்படுத்த சிலிர்த்த ரோமங்களை அடக்க அரும்பாடுபட்டவள், “மிஸ் பண்றேன் தான். உனக்கு முழுசா சரி ஆனதும் போகலாமே!” எனத் தடுமாற்றத்துடன் உரைத்தாள்.

“ஓரளவு சரி ஆகிடுச்சு தான. ப்ளீஸ் மைலி… போலாம்!” கிட்டத்தட்ட கெஞ்சலுடன் கேட்டவனிடம், “சரி மாமாகிட்ட சொல்றேன். நாளைக்கே கிளம்பலாம்…” என்றதும்,

“ப்ச் நோ இன்னைக்கே” என்றான் பிடித்திருந்த உள்ளங்கையில் முத்தமிட்டபடி.

“ஏன் தான் இப்படி பிடிவாதம் பிடிக்கிறியோ சரி போகலாம். நான் போய் பர்ஸ்ட் வீடை க்ளீன் பண்றேன். அப்டியே போட்டு வச்சுருக்கேன்” என்றவள் மெல்ல கையை உருவ முயல, அவனோ அதற்கு இடமே கொடுக்கவில்லை.

“பரவாயில்ல போய் சேர்ந்து க்ளீன் பண்ணிக்கலாம்…” என கண்ணைச் சுருக்கி கெஞ்சுதலாகப் பார்த்தான்.

“சரி… வா!” என அவள் எழுந்து விட,

“பட் ஒன் கண்டிஷன். அங்க போய் வீட்டை க்ளீன் பண்ணி முடிச்சுட்டு நீ லிப் பாம் போட்டுக்கணும்” என்று குறும்புடன் கூறி முடிக்க, செந்நிறமாய் சிவந்து போனது அவளது கன்னங்கள்.

“சும்மா இரு ரஷு” அதட்ட முயன்றவளுக்கு நாணம் பொங்கி சதி செய்தது.

அதன்பிறகு தாமதிக்காமல் இருவரும் வீட்டிற்கு கிளம்ப, “ஏன் இப்படி திடுதிப்புன்னு கிளம்புறீங்க” என மிருணாளினி தான் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டாள்.

பிரஷாந்த் தான் அழகாக மைதிலியைக் கோர்த்து விட்டான்.

“இவள் தான் வீட்டுக்குப் போகணும்னு ஒரே அடம். கேப் பிடிச்சு போறேன்னு சொன்னா, நான்தான் எப்பவும் போல நானே வரேன்னு ஒத்துக்கிட்டேன். வீட்டோட மாப்பிள்ளையா போனாலே இப்படி தான் மிரு… பல கொடுமைகளை அனுபவிச்சு ஆகணும்!” என்று மிகவும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் கூறிட, கொல்லென சிரிப்பலை எழுந்தது.

ஆனால், மைதிலி தான் பற்களை கடித்து ‘நீ வீட்டுக்கு வா பாத்துக்குறேன்’ என்று வறுத்தாள்.

பிரஷாந்திற்கு கார் ஓட்டுவது சிரமமாக இருப்பதில் அமர் தான் அவர்களை காரில் அழைத்துச் சென்றான்.

மகிழினி வீட்டிற்குச் செல்லும் போதே குதூகலத்துடன் இருந்தாள்.

“அப்பா வீட்ல உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கே” என்று தலையை ஆட்டிக் கூற, “அப்படியா பேபி என்ன சர்ப்ரைஸா இருக்கும்…” என அவனும் யோசிப்பது போல பாவனை செய்தான். “என்ன மைலி சர்பிரைஸ்” என மைதிலியிடமும் வினவ, அவள் திரும்பி அவனை அழுத்தத்துடன் பார்த்து விட்டு ஜன்னல் புறம் பார்வையைப் பதித்தாள்.

‘என்ன பார்வையே காரமா இருக்கு’ எனப் புலம்பிக் கொண்டாலும் அவ்வபொழுது அவளை சைட் அடித்தபடி பயணம் செய்தான்.

அவர்களை வீட்டில் இறக்கி விட்ட அமர், “வீடெல்லாம் நேத்தே ஆள் வச்சு க்ளீன் பண்ணியாச்சு. ரெண்டு பேரும் போய் ரெஸ்ட் எடுங்க” என்று கூறிவிட்டு, சாவியையும் மைதிலியிடம் கொடுத்தான்.

அன்று பிரஷாந்தைக் காணாமல் அவள் பதற்றத்தில் இருந்ததில், அமர் தான் வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டான்.

அவனை உள்ளே அழைத்தும் மறுத்து “தேவா நான் போனா தான் சாப்பிடுவா மைதிலி. இல்லன்னா டிமிக்கி குடுத்துடுவா…” என்று சிறு புன்னகையுடன் கூறி விட்டு அவன் கிளம்பி விட, அனாவசியமாக மைதிலிக்கு ரகுவின் எண்ணம் வந்து போனது.

முயன்று அவனது நினைவை கட்டுப்படுத்திக்கொண்டவள் உள்ளே செல்ல எத்தனிக்க மகிழினி “அப்பா சர்ப்ரைஸ் பாருங்க” என்று பிரஷாந்திடம் வீட்டு நிலைக்கதவை கை காட்ட, அங்கு அவளது கைவண்ணத்தில் உருவான சார்ட் பேப்பர் தோரணமும் அதில் இருந்த வாசகமும் பிரஷாந்தை நெகிழ்த்தியது.

“வாவ்! செம்ம பேபி… எப்போ இதெல்லாம் பண்ணுன. நீயும் அமர் கூட சேர்ந்து இங்க வந்தியா?” என ஆர்வமுடன் கேட்டவனிடம்,

“ஐயோ அப்பா அது இல்ல. அன்னைக்கே இதை நானும் அம்மாவும் சேர்ந்து செஞ்சோமே. நீங்க தான் அன்னைக்கு வீட்டுக்கு வரவே இல்ல. மகி பேபி எவ்ளோ நேரம் வெய்ட் பண்ணுனேன் தெரியுமா” எனக் கையைக் கட்டிக்கொண்டு கோபம் போல பாவனை காட்ட, பிரஷாந்த் சன்னமாக அதிர்ந்தான்.

தான் காவல் நிலையத்தில் அகப்பட்ட போதே இதனை செய்திருக்கிறார்கள் என்றால்? அதன்பிறகே மருத்துவமனையில் அவசரக்குடுக்கையாக தான் பேசி வைத்ததே புரிந்தது அவனுக்கு.

“சோ ஸ்வீட் பேபி…” என மகிழினியை அணைத்துக் கொண்டவன், திரும்பி மைதிலியையும் பார்க்க, அவள் அவனை சட்டை செய்யவே இல்லை.

‘போச்சுடா மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்துக்கு ஏறுது’ என்ற புலம்பலுடன் அவன் வீட்டிற்குள் நுழைய, மைதிலி நேராக அடுக்களையினுள் நுழைந்தாள்.

மகிழினி அறையில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருக்க, பிரஷாந்த் நேராக மைதிலியிடம் வந்து பின்புறம் அணைத்துக் கொண்டான்.

அவனை வெடுக்கென தள்ளி விட்டவள், “போய் படு. கையை ஸ்ட்ரைன் பண்ணாத…” என ஏதோ தேடி விட்டு, “மாவு இல்ல உப்புமா ஓகேவா?” எனக் கேட்க, “எனக்கு தப்பு பண்ணாலும் ஓகே தான்…” என்றான் கிசுகிசுப்பாக.

ஜிவ்வென புது இரத்தம் அவளது உச்சந் தலைக்குப் படையெடுக்க, “நாலு அப்பு வேணும்னாலும் அப்புறேன்” எனக் கோபத்தை வரவழைத்து முறைத்தாள்.

“அப்பிக்கோ. பர்ஸ்ட் கன்னத்துல அப்பு. அப்பறம் என் கழுத்துக்குள்ள அப்பு. அப்பறம்…” எனச் சொல்லிக்கொண்டே செல்ல,

“ஒழுங்கா போக போறியா இல்லையா நீ!” என்று அவனைத் திரும்பிப் பார்க்காமேலேயே கண்டித்தாள்.

“போக மாட்டேனே!” என மீண்டும் அவளை வாகாக அணைத்துக் கொண்டவன், “எனக்காக ரொம்ப வெய்ட் பண்ணுனியா மைலி. அன்னைக்கே பேபீக்கிட என்னை அப்பான்னு கூப்பிட சொன்னியா? மிஸ் பண்ணிட்டேன் மைலி அந்த மொமெண்ட்டை” என்று அவளது பின்னங்கழுத்தினுள் முகத்தைப் புதைத்தான்.

“நீயும் அவளும் மனசுல பாசத்தை வச்சுக்கிட்டு என்னால திண்டாடுறதை பார்க்க முடியல ரஷு. அன்பை வார்த்தைகள்ல வெளிகாட்டுறது தான முதல் சந்தோஷமே. அதைக் கூட குடுக்கலைன்னா நான் என்ன அம்மா…” என்னும் போதே அவனது இறுக்கம் இன்னும் இறுகியது.

மூச்சை அடக்கி அந்த இறுக்கத்தினுள் புதைந்து போனவள், “உனக்கு ஹேப்பியா?” எனக் கேட்டு முடிக்கும் முன் அவளை நொடியில் திருப்பி அவளது இதழினை சிறை பிடித்தான்.

மென் முத்தம் எப்போது வன்மையாய் மாறியதோ… மூச்சிரைத்து அவளே நகர வேண்டியதாகப் போயிற்று.

“ரஷு மூச்சு வாங்குது!” எனத் திக்கி திணறி அவள் பெருமூச்சுக்கள் வாங்க, “லிப் பாம் போடலையா மைலி” என்றான் இன்னும் கிறக்கம் குறையாமல்.

“இப்ப தான வீட்டுக்குள்ள வந்தோம். அதுக்குள்ள உன்னை யாரு அவசரப்பட சொன்னது…” தலையை நிமிர்த்தாமல் வெட்கம் மின்ன அவள் உரைத்ததில், “என் அவஸ்தை எனக்கு தான்டி தெரியும்! ரொமான்ஸ் பண்ண தடையா இந்த கட்டு வேற. இதெல்லாம் பிரிச்சா தான் என்னால ப்ரீ பர்டா ரொமான்ஸ் பண்ண முடியும்” என்றான் உதட்டைக் குவித்து.

“அதெல்லாம் அப்பறம் பண்ணலாம் மொதல்ல போ ரஷு. மகி வரப்போறா” என்று பதறியதும், “ஒன்னு குடு போறேன்…” என்று குனிந்து கன்னத்தைக் காட்டினான்.    

அதற்கென்றே காத்திருந்தவள் போல எக்கி அவன் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தவள், மூடிய இமைகளைத் திறவாமல் அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள்.

“நான் கேட்குற வரை வெய்ட் பண்ணனுமா மைலி. குடுக்க தோணுனா குடுத்துருக்க வேண்டியது தான…” என அவள் முதுகை வருடி கொடுக்க, அதற்கு பதில் அளிக்க இயலாதவளாக அவனை இன்னுமாக இறுக்கி அணைத்தாள்.

அந்த இறுக்கமே அவளது தவிப்பை உணர்த்த, அவனது இறுக்கமும் கூடியது.

அடுத்த சில நாட்களிலேயே பிரஷாந்தின் காயமும் முழுதாய் சரி ஆனது. அதுவரையிலும் இருவரும் லிப் பாமை காலி செய்தது தான் மிச்சம்.
அதைத் தாண்டி எல்லை மீறிட இருவருமே விழையவில்லை.

இதனிடையில் சஞ்சீவ் திருமணப் பத்திரிகையுடன் அவர்களை அழைக்க வந்திருந்தான். கூடவே, மணப்பெண்ணான சவிதாவையும் அழைத்து வந்தான்.

அவனைக் கண்டதும் மகிழ்வுடன் மைதிலி வரவேற்க, அவன் தான் பிரஷாந்தை தயக்கமாகப் பார்த்தான்.

“இன்னும் என்மேல கோபமா ஜி?” எனக் கேட்க,

“உங்க மேல எனக்கு கோபம் எதுவும் இல்ல ஜி. ஆமா கல்யாணமே பண்ணிக்காம பிரம்மச்சாரியா வாழப்போறேன்னு சொன்னீங்க…” என்றான் நக்கலாக.

அதில் நெளிந்தவன், சவிதாவை காட்டி “இவங்க ஆர்மில டாக்டரா இருக்காங்கஜி. ஒரு ஆக்சிடெண்ட்ல எனக்கு ட்ரீட்மெண்ட் பண்ணாங்க. சரி, லைஃப் புல்லா கூட வச்சுக்கிட்டா நமக்கும் ஓசில ட்ரீட்மெண்ட் பண்ணுன மாதிரி இருக்கும்ல” என்றதும் சவிதா அவன் தொடையைக் கிள்ளினாள்.

“சும்மா இருங்க சஞ்சீவ்” என்று சிணுங்கியவள், “உங்களை பத்தி நிறைய சொல்லிருக்காரு மைதிலி. பர்ஸ்ட் பத்திரிகையே உங்களுக்கு தான்…” என்றதும் அவனது அன்பில் நெகிழ்ந்தாள்.

பிரஷாந்த் தான், “நான் சொல்லல…” என மைதிலியிடம் கண் சிமிட்ட, சஞ்சீவ் என்னவென பார்த்தான்.

மைதிலி பிரஷாந்த் கோபமாக வந்ததன் காரணம் உரைத்ததில் திகைத்தவன், “ஜி இப்படி டிவிஸ்ட் பண்ணி விட்டுட்டீங்களே. உங்களை பார்க்க வர்றதுக்காகவாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணனும்னு என் அடிமனசு பிராண்டிகிட்டே இருந்துச்சு. அப்போ தான் மேடமைப் பார்த்தேன். அவங்களுக்கும் ஆர்மி மேனை கல்யாணம் பண்ணிக்கிறது தான் ஆசைன்னு தெரிஞ்சுது அப்படியே அலேக்கா தூக்கிட்டேன்” என்றதும் மீண்டும் சவிதா சிணுங்கினாள்.

பின் நால்வரும் பல விஷயங்களை பேசி பொழுதை கழிக்க, சஞ்சீவ் “ஓகே மைதிலி… இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம். ரெண்டு பேரும் கண்டிப்பா வரணும். பெருசா யாரையும் இன்வைட் பண்ணல. உங்களை ரொம்ப எதிர்பார்ப்பேன். மகிக்குட்டியையும் கூட்டிட்டு வந்துடு” என்று கிளம்ப எத்தனிக்க பிரஷாந்த் தடுத்தான்.

“ஜி… உங்ககிட்ட ஒரே ஒரு டவுட் மட்டும் நான் கேட்கணும். கேட்கட்டா?” என நிறுத்த, சஞ்சீவ் என்னவெனப் பார்த்தான்.

“ரகு கான்செண்ட்ரேஷன் மிஸ் ஆகியா இறந்தான்?” அக்கேள்வியில் மைதிலி அதிர்ந்தாள்.

“ரஷு!” அவள் அழுத்தமாகக் கண்டிக்க, அவனோ சஞ்சீவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.

சஞ்சீவ் தான் குழம்பி, “வாட்? அப்படின்னு யார் சொன்னா? அதெல்லாம் இல்ல பிரஷாந்த். எவ்ளோ கேர்புல்லா இருந்தாலும் சில சண்டையப்போ எங்க மேல புல்லட் பட தான் செய்யும். அப்படி தான் அவனுக்கும் ஆச்சு. சொல்லப்போனா முழு திட்டமும் அவனோடது தான். கான்சென்ட்ரேஷன் மிஸ் ஆகுறவன் மொத்த திட்டத்தையும் தான சொதப்பனும். அவனுக்கு அவனோட பிளான் தான் பர்ஸ்ட். சோ கவனம் கண்டிப்பா சிதறாது” என்றான் தீர்மானமாக.

பிரஷாந்த் மைதிலியை ஒரு பார்வை பார்க்க, அவளோ கண்ணுக்குள் நின்றிருந்த நீரை உள்ளிழுக்க சிரமப்பட்டாள்.

சஞ்ஜீவ் தான் மேலும், “அவன்கிட்ட கடைசியா பேச கூட முடியல. நிறைய பேருக்கு இஞ்சூரி ஆகிடுச்சு. எனக்கும் கால்ல அடி. நானும் ஜஸ்ட் மிஸ்ல தான் தப்பிச்சேன். அதுக்காக கான்சென்ட்ரேஷன் மிஸ் ஆகிடுச்சுன்னு சொல்ல முடியுமாஜி” என்றதில் பிரஷாந்த் மைதிலியை இன்னும் அழுத்தமாகப் பார்த்து வைத்தான்.

பின் இருவரும் கிளம்பி விட, விமானத்தில் ஏறி அமர்ந்ததும் சவிதா தான் ஆரம்பித்தாள்.

“ஏன் சஞ்சீவ் ரகு உங்ககிட்ட கடைசியா பேசவே இல்லைன்னு பொய் சொன்னீங்க?” எனக் கேள்வி எழுப்ப, அவன் கன்னத்தில் கண்ணீர் தடம்.

“வேற என்ன சொல்ல சொல்ற சவி? சாகும் போதும் அவன் குழந்தையை ஆர்மில சேர்க்குறது தான் அவனோட கடைசி ஆசைன்னு சொல்லிட்டு செத்துட்டான். அப்போ கூட, அந்த நிலமைல கூட அவனுக்கு மைதிலி விஷயத்துல செஞ்ச தப்பு உறைக்கல. அவன் ஆசையைத் தப்புன்னு சொல்லல சவி. அந்த ஆசையை எல்லாம் அவன் மைதிலியை வச்சு நிறைவேத்த நினைச்சது எவ்ளோ பெரிய தப்பு. இதை அவள்கிட்ட சொல்லி, அவளை கூட கொஞ்சம் குழப்ப வேணாம்னு தான் இதுவரைக்கும் நான் எதுவும் சொல்லல. இனியும் சொல்ல மாட்டேன். மகி பிரஷாந்த்தோட குழந்தையாவே வளரட்டும். மைதிலி அவளுக்குப் பிடிச்ச ஒரு சாதாரண சந்தோஷமான குடும்ப வாழ்க்கையை வாழட்டும்!” எனப் பெருமூச்சு விட, அவன் கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டாள் சவிதா.

—-

மைதிலி வெகுநேரமாக இருக்கையில் இருந்து எழவே இல்லை. கண்ணீர் சொட்டுகள் கன்னத்தில் உருண்டோட தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தாள்.

“இப்பவாவது குற்ற உணர்ச்சிக்கு விடுதலை குடுப்பியா மைலி?” பிரஷாந்த் நிதானமாகக் கேட்டதில், மேலுதட்டைக் கடித்து அழுகையை அடக்கினாள்.

“இல்ல… இன்னும் உன்னால தான் அவன் செத்தான்னு அதே காரணத்தைப் பிடிச்சு தொங்க போறியா?அழுத்தம் திருத்தமா சொல்றதுனால பொய் என்னைக்கும் உண்மையா மாறிடாது.”

“மைலி இங்க பாரு” அவள் முன் காலை மடக்கி அமர்ந்து அவளது தாடையை நிமிர்த்தினான்.

அவளோ வெடித்து வந்த அழுகையுடன், “நீ டெவில் தான்டா. என்னை ரொம்ப கரைய வைக்கிற. ரொம்ப அழுக வைக்கிற. ரொம்ப தடுமாற வைக்கிற. ரொம்ப ரொம்ப என்னை எனக்குள்ள தேட வைக்கிற. ஐ ஹேட் யூ!” எனத் தேம்பியதில் மெல்லச் சிரித்தான்.

“ஓய் மைலி! வா” எனக் கையை விரித்து அவன் அழைக்க, மறுநொடி அவனது நெஞ்சினுள் அடைக்கலமானாள் அவனது மைலி.

எபிலாக் இஸ் ஆன் தி வே!
ரொமான்ஸ் நெக்ஸ்ட் episode ல 🫶🏻
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
97
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்