மறுநாள் அனைவரும் உதய்யின் திருமணத்திற்கு கிளம்பிட ஷாத்விக் வெளியே சற்று வேலையிருப்பதாக கூறி மற்றவர்களை டாக்சியில் அனுப்பிவிட்டு அவன் காரை எடுத்து சென்றான்.
சமுத்ராவின் வீட்டாரும் அவர்களின் வீட்டு திருமணமாய் எண்ணி அனைத்து வேலைகளையும் பங்கெடுக்க சமுத்ராவை மட்டும் அவளின் உடல்நிலையை கருதி யாரும் அங்கும் இங்கும் அசையவிடவில்லை.
முகூர்த்த வேளை நெருங்குகையில் அனைவரின் ஆசியுடனும் உதய் மகிழினியின் கழுத்தில் மங்கலநாணை அணிவிக்க அவர்களின் திருமணம் சிறப்பாக நடந்துமுடிந்தது.
உதய் தாலி கட்டி முடித்ததும் சமுத்ரா அருகே வந்த ஷாத்விக் யாரும் அறியாமல் அவளை அந்த மண்டபத்திலிருந்து அருகிலிருந்த கோவிலிற்கு அழைத்து சென்றான்.
சமுத்ரா என்னவென்று கேட்டபோதிலும் அவனோ எதுவும் சொல்லாது அந்த கோவிலின் பெருமாள் சந்நிதி முன் அழைத்து வந்து நிறுத்தினான்.
அவனை கண்டதும் குருக்கள் அருகே வர
“என்ன தம்பி பூஜை ஆரம்பிச்சிடலாமா?” என்று கேட்க
“ஆமா குருக்களே… இந்தாங்க இதையும் சாமிகிட்ட வச்சி எடுத்துட்டு வந்திடுங்க.” என்று தன் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து பூஜைதட்டில் வைத்தான்.
அவரும் மந்திரத்தை ஓதியபடியே சன்னிதானத்திற்குள் செல்ல
“என்ன மாமா அது? எதுக்கு இங்க அழைச்சிட்டு வந்தீங்க?” என்று சமுத்ரா கேட்க
“மொதல்ல சாமி கும்பிடு.” என்று அவன் கைகூப்பி கண்களை மூடிக்கொள்ள சமுத்ராவோ ஏதும் புரியாது அவன் சொன்னபடி செய்தாள்.
உள்ளே பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்த பூசகரின் தட்டில் தங்கத்தாலியிருக்க அதை கண்ட சமுத்ரா ஷாத்விக்கை குழப்பத்தோடு பார்க்க அவனோ குருக்களையே கர்மசிரத்தையாக பார்த்துக்கொண்டிருந்தான்.
“தம்பி இன்னும் நல்ல நேரம் முடிய ஐஞ்சு நாழிகை தான் இருக்கு. உங்க குலதெய்வத்தை மனசுல வேண்டிக்கிட்டு இந்த தாலியை எடுத்து உங்க மனைவி கழுத்துல கட்டுங்கோ.” என்று சொல்ல அவனும் அவர் கூறியபடி தன் குலதெய்வத்தை நன்கு வேண்டியபடி தாலி சரட்டினை எடுத்தவன் சமுத்ராவின் கழுத்தில் அணிவித்தான்.
சமுத்ராவோ பேச்சின்றி நடப்பது புரியாமல் எந்த எதிர்ப்புமின்றி நடப்பதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்க மறுபடியும் குருக்களே
“இந்த குங்குமத்தை எடுத்து தாலியிலும் உங்க மனைவி வகிட்டுலயும் வச்சு விடுங்கோ.” என்று குருக்கள் கூற ஷாத்விக் அப்போது தான் சமுத்ராவை நேருக்கு நேர் பார்த்தான்.
அவளின் விழிகள் சற்று கலங்கியிருப்பதை கண்டவன் கண்சிமிட்டி அவளுக்கான அரவணைப்பினை காண்பிக்க தன்னை நிதானித்துக்கொண்டாள் சமுத்ரா.
அவள் தன் கழுத்திலிருந்த தாலியை தாங்கிப் பிடிக்க அதில் குங்குமத்தை வைத்தவன் அவளின் நெற்றி வகிட்டிலும் குங்குமத்தை வைத்தான்.
பின் தம்பதி சமேதராக மூலஸ்தான தெய்வத்தை வணங்கியதும் கிளம்பலாமா என்று ஷாத்விக் கேட்க
“ஒரு நிமிஷம்.” என்றவள் தன் கைப்பையிலிருந்து ஒரு பெட்டியை வெளியே எடுத்தாள்.
ஷாத்விக் என்னவென்று பார்க்க
“நாளைக்கு சொல்லலாம்னு இருந்தேன். சரி இப்பவே தெரிஞ்சிக்கோங்க. ” என்றவள் அந்த பெட்டியை திறந்து காட்ட அதில் இரண்டு தங்க மோதிரங்கள் இருக்க குழப்பத்தோடு சமுத்ராவை பார்த்தான் ஷாத்விக்.
“நாளைக்கு பத்து மணிக்கு ரெஜிஸ்டரார் ஆபிஸ்ல டைம் கொடுத்திருக்காங்க. உங்களை சப்ரைஸ் பண்ணலாம்னு நெனச்சேன். ஆனா அதுக்கு முதல்ல நீங்க என்னை சப்ரைஸ் பண்ணிட்டீங்க.” என்று சமுத்ரா சொல்ல ஷாத்விக் பெரிதாக அதிரவில்லை.
அவன் எனக்கு தெரியும் என்பதை போல் சிரித்துகொண்டிருப்பதை கண்டுகொண்ட சமுத்ரா
“என்ன விஷயம் ஆல்ரெடி காதுக்கு வந்திட்டாப்போல தெரியிது.” என்று சமுத்ரா பாயிண்டாக கேட்க ஷாத்விக் இதற்கும் சிரித்துக்கொண்டு
“உண்மையை சொல்லவா பொய்யை சொல்லவா?” என்று ஷாத்விக்கும் குறும்புடனேயே கேட்க
“நீங்க எது சொன்னாலும் உண்மையை நான் சரியாக கண்டுபிடிப்பேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.” என்று சமுத்ரா நிறுத்த
“சரி உண்மையையே சொல்லுறேன். உதய் நேத்துதான் விஷயத்தை சொன்னான். அது தெரிஞ்ச பிறகு தான் நானும் இந்த ஏற்பாட்டை செய்தேன்.” என்று ஷாத்விக் கூற
“அப்போ நான் மறுபடியும் பல்டி அடிச்சிடுவேன்ங்கிற பயம் உங்களுக்கு இன்னும் இருக்கு?” என்று சமுத்ரா கேட்க
“இல்லைனும் சொல்ல முடியாது. ஆமானும் சொல்லமுடியாது. ஆனா எது வேணாலும் நடக்கலாம்ங்கிற பயம் மட்டும் இருந்துச்சு.” என்று ஷாத்விக் சொல்ல இப்போது சிரித்துவிட்டாள் சமுத்ரா.
“சிரிச்சது போதும்.மண்டபத்துல நம்மளை காணமேனு எல்லாரும் தேடுறதுக்கு முன்னாடி மண்டபத்துக்கு போயிடலாம்” என்றவன் சமுத்ராவை அழைத்துக்கொண்டு மண்டபத்திற்கு சென்றான்.
அங்கும் கல்யாண கொண்டாட்டங்கள் நடந்தேறிக்கொண்டிருக்கு சத்தமில்லாமல் இருவரும் கூட்டத்தோடு ஐக்கியமாகி விட்டனர்.
திருமணம் முடிந்து புதுபெண்ணையும் மாப்பிள்ளையையும் முதலிரவு அறைக்கு அனுப்பிவைத்தபின்னரே சமுத்ராவும் ஷாத்விக்கும் வீடு திரும்பினர்.
சமுத்ரா வந்ததுமே உடையை கூட மாற்ற தெம்பில்லாது அமர்ந்தபடியே உறங்கிட அவள் உறங்கட்டுமென்று எண்ணிய ஷாத்விக் அவள் உறங்குவதற்கு தகுந்தபடியே ஏற்பாட்டை செய்தவன் வீட்டாரிடமும் அவளை எழுப்பவேண்டாமென்று சொல்லிவிட்டு அவன் உடைமாற்ற சென்றான்.
ஒரு மணி நேரம் நன்றாக தூங்கியெழுந்தவள் கண்விழித்து பார்க்கும் போது ஷாத்விக் அவள் அருகில் அமர்ந்து சத்தமில்லாமல் ஏதோ மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்ன மாமா ரொம்ப நேரம் தூங்கிட்டேனா?” என்றபடியே மெதுவாக எழுந்து அமர
“ரொம்ப நேரம்லாம் இல்லை. நீ ப்ரஷப் ஆகிட்டு வா சாப்பிடலாம்.” என்று சொல்ல சமுத்ரா மெதுவாக எழுந்து சென்று உடைமாற்றி வந்தாள்.
இருவரும் பேசியபடியே உணவை முடித்ததும் ஷாத்விக் அறைக்குள் செல்ல சமுத்ரா தன் அன்னையை தேடிக்கொண்டு சென்றாள்.
அமராவதியும் மாலதியும் சமையலறையை ஒதுக்கிக்கொண்டிருக்க அங்கு வந்த சமுத்ராவை கண்ட மாலதி
“என்னம்மா நீயும் மாப்பிள்ளையும் சாப்பிட்டீங்களா? குடிக்க பால் தரட்டுமா?” என்று மாலதி கேட்க
“சாப்பிட்டோம் அத்தை. பால் கொஞ்சம் லேட்டாகட்டும். நான் உங்க இரண்டு பேர்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.” என்று கூற பெரியவர்கள் இருவரும் என்னவென்று பார்க்க
“நாளைக்கு நானும் மாமாவும் எங்க மேரேஜை ரெஜிஸ்டர் பண்ணப்போறோம்.” என்று சொல்ல பெரியவர்கள் இருவருக்கும் மகிழ்ச்சியில் கண்களிரண்டும் நிறைந்தது.
என்னதான் சமுத்ரா- ஷாத்விக் உறவில் மாற்றத்தை உணர்ந்தாலும் சமுத்ராவிடமிருந்து உறுதியான வார்த்தைகள் வரும்வரை அவர்களுக்குள்ளும் ஒரு பயம் இருந்தது.
“நீ நிஜமாத்தான் சொல்லுறியா சமுத்ரா?” என்று அமராவதி மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் கேட்க
“ஆமாம்மா. நாளைக்கு 10.30 மணிக்கு டைம் குடுத்திருக்காங்க.” என்று சமுத்ரா சொல்ல அமராவதியோ
“மாலதி அந்த காலெண்டரை எடுத்துட்டு வா.” என்று சொல்ல இடைமறித்த சமுத்ரா
“நாளைக்கு பத்தே கால்ல இருந்து பதினொன்னே கால் வரைக்கும் நல்ல நேரம் இருக்கு. நான் டைம் பார்த்துட்டு தான் கன்பார்ம் பண்ணேன்மா.” என்று சமுத்ரா சொல்ல அமராவதிக்கோ இப்போது தான் நிறைவாக இருந்தது.
“அம்மாடி நீயும் தம்பியும் எப்பவும் சந்தோஷமாக இருக்கனும். எங்க எல்லாருக்கும் பார்த்து பார்த்து எல்லாத்தையும் செய்றவ நீ. உன் வாழ்க்கையை சரிப்படுத்த முடியாமல் போயிடுமோங்கிற பயம் இத்தனை நாள் எங்களை பாடாய் படுத்திடுச்சு. இப்போ நீ சொன்ன இந்த வார்த்தை எங்களோட மொத்த பயத்தையும் இல்லைனு ஆக்கிடுச்சு. நீ எப்பவும் சந்தோஷமாக இருக்கனும் ராஜாத்தி.” என்று மாலதி தன் மனதிலிருந்ததை சொல்ல
“மாலதி நாளைக்கு இரண்டு பேரும் வீட்டுக்கு வந்ததும் விட்டுப்போன அத்தனை சடங்கையும் செஞ்சிடனும். கல்யாணத்தை தான் இங்க யாருக்கும் தெரியப்படுத்தமுடியல. இவ வளைகாப்புக்கு மொத்த ஊரையும் கூப்பிடனும்.” என்று அன்னையாய் அமராவதி பேசிக்கொண்டே போக அதை பார்த்திருந்த சமுத்ராவுக்கு தான் சற்று குற்றவுணர்வாக இருந்தது.
தன் முடிவில் உறுதியாக நின்றிருந்ததால் இத்தனை நாட்கள் குடும்பத்தவர்களின் மனக்கவலையை கவனிக்கத்தவறிவிட்டோமென்ற உண்மை அவளுக்கு சற்று தாமதமாகவே புரிந்தது.
“இனி எல்லாமே நீங்க விரும்புறபடி நல்லாவே நடக்கும். நான் ரூமுக்கு போறேன்.” என்று கிளம்ப முயன்ற சமுத்ராவிடம் இரண்டு பால்கோப்பையை கொடுத்து அனுப்பிவைத்தார் மாலதி.
அறைக்குள் வந்து பால் கோப்பையை மூடிவைத்துவிட்டு ஷாத்விக் அருகே வந்து அமர்ந்தார் சமுத்ரா.
“என்ன இவ்வளவு நேரம்?” என்று ஷாத்விக் கேட்க
“அம்மாகிட்ட விஷயத்தை சொல்லிட்டு வந்தேன்.” என்று சமுத்ரா சொல்ல
“நானும் அம்மாகிட்ட விஷயத்தை சொல்லிட்டேன். ஆனாலும் என்னால இப்போவரை இதை நம்பமுடியல.” என்று ஷாத்விக் சொல்ல
“என்ன நம்பமுடியல?” என்று சமுத்ரா புருவத்தை உயர்த்த
“நமக்காக நடந்த திடீர் கல்யாணம், நீயும் நானும் சண்டை போட்டது, மறுபடியும் சேர்ந்தது இப்படி எல்லாமே கனவுல நடந்தமாதிரியே இருக்கு.” என்று ஷாத்விக் கூற அவன் எதிர்பார வேலையில் அவன் கையை நறுக்கென்று கிள்ளினாள் சமுத்ரா.
கையை உதறியவன்
“ஆ… இப்போ ஏன் கிள்ளுன? பாரு எப்படி சிவந்து போச்சுன்னு.” என்று ஷாத்விக் கையை தேய்த்துக்கொண்டே கேட்க
“நீங்க தான் கனவு நனவுனு உளறிட்டு இருந்தீங்க. அதான் கிள்ளி ரியாலிட்டிக்கு அழைச்சிட்டு வந்தேன்.” என்று சமுத்ரா சாதாரணமாக கூற
“நல்லா அழைச்சிட்டு வந்தம்மா. பாரு எப்படி சிவந்திருக்குனு. சரி உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கனும்னு நெனச்சேன். அன்னைக்கு அந்த லெட்டரை எப்போ எழுதுனனு சொல்லவே இல்லையே?” என்று ஷாத்விக் கேட்க
“ஸ்கூல் டைம்ல ஃப்ரெண்ட் ஒருத்தி அவ க்ரஸ்ஸுக்கு கொடுக்க லவ் லெட்டர் எழுதி கேட்டா. அவளுக்கு எழுதும் போது உங்களுக்கும் ஒன்னு எழுதுனா எப்படி இருக்கும்னு நெனைச்சி எழுதுனது தான் அந்த லெட்டர்.” என்று சமுத்ரா கூற
“அப்போ சும்மா டைம் பாஸிற்கு எழுதுனதா அந்த லெட்டர்?” என்று ஷாத்விக் அப்பாவியாக கேட்க
“அதை வாசிச்ச பிறகும் டைம்பாஸிற்கு எழுதுனதானு கேட்குறீங்கனா உங்களுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்?” என்று அவள் முறைக்க
“சும்மா தமாஷூக்கு. ஆனா உனக்கு என் மேல் இவ்வளவு லவ்வு இருக்குனு ஏன் எனக்கு தெரியவே இல்லை? ” என்று ஷாத்விக் யோசனையோடு கேட்க
“நான் உங்க மேல இருந்த நேசத்துல செஞ்ச சின்ன விஷயங்களை கூட நீங்க போட்டியாக நினைச்சீங்க. அதுனால என்னோட நேசம் உங்களுக்கு புரியல.” என்று சமுத்ரா நடப்பை கூற
“சாரி சம்மு. அந்த நேரத்துல ஏதோ ஒரு பொவசிவ்னஸ்ல எல்லாமே கொஞ்சம் ஓவராவே செஞ்சிட்டான். எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும். ஆனா அப்போ அது சாதாரண அன்புனு தான் நெனைச்சிருந்தேன். ஆனா இப்போ யோசிச்சு பார்த்தா தான் எனக்குள்ளேயும் ஏதோ ஒரு பீல் இருந்திருக்குனு புரியிது. நான் ஏற்கனவே சொன்னமாதிரி நான் எதிர்பார்த்த சமுத்ரா தான் மௌனிகா. ஆனா நல்லா யோசிச்சு பார்த்தா உன் மேல இருந்த காதலை திசை திருப்ப நான் பண்ண கோமாளித்தனம் தான் அந்த காதல்னு தோனுது. ஆனா நல்லவேளை எல்லாம் சரியாக நடந்துச்சு.” என்று ஷாத்விக் சொல்ல அவனை நெருங்கி அமர்ந்த சமுத்ரா அவன் கன்னம் பற்றி
“லவ் யூ மாமா.”என்றவள் தன் இதழ் முத்திரை பதித்து தன் மனதிலுள்ள மொத்த காதலையும் அவனுள் கடத்தத்தொடங்கினாள்.
நாளைய அவர்களின் இருவரின் வாழ்வின் இன்னொரு புதிய விடியலாக அமைந்திட நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்.