Loading

அத்தியாயம் 99

அஸ்வினிக்கு மனது பாரமாக இருந்தது. தன்னால் தனக்குப் பிடித்தவர்கள் வேதனை அனுபவிக்கிறார்களென்ற வேதனையே அவரை அரித்தது.

மறுநாளே, அஸ்வினியையும் அழைத்துக்கொண்டே அனைவரும் சென்னைக்குத் திரும்பினர்.

“சித்தி ரெஸ்ட் எடுக்கட்டுமே யுகி” விஸ்வயுகா கேட்டதற்கு, யுக்தா பதில் சொல்லவில்லை. அவனது அழுத்தத்தில் சென்னைக்கு வந்து விட்டாலும், அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவளுக்கு விருப்பமில்லை.

யுக்தாவின் வீடும் மிகவும் சிறியது. அங்கு அனைவருமே இருப்பது சிரமமென்று, அவளது சம்பாத்தியத்தில் வாங்கிய கெஸ்ட் ஹவுஸிற்கு செல்வதென்று முடிவெடுத்தாள்.

இங்கு, ஷைலேந்தரிக்கு அழைப்பு விடுத்த காயத்ரி அவள் மூலம் நடந்தவைகளை எல்லாம் அறிந்து திகைத்திருந்தார். அசோக்கிற்கும் அதிர்வை விழுங்க இயலவில்லை.

“அடப்பாவிங்களா… வீட்ல தான் உங்க ஹெட் வெயிட்டை காட்ட, திமிரா இருந்தீங்கன்னு நினைச்சா. தொழிலைக் காப்பாத்திக்க பொண்ணோட மானத்தையே விலை பேசி இருக்கீங்க. உன் அண்ணி அண்ணன்னு தலைல தூக்கி வச்சு ஆடுனியே. என்ன வேலை பாத்துருக்காங்க பாத்தியா? என் பொண்ணையும் என்கிட்ட இருந்து பிரிச்சு இருந்தா?” குலை நடுங்கி விட்டது காயத்ரிக்கு.

அவருக்கும், அசோக்கிற்கும் விஸ்வயுகாவிற்கு நடந்த கொடூரமும் தெரியாது. அந்தச் சமயத்தில் இருவருமே காயத்ரி வீட்டுச் சொந்தத்தில் நிகழ்ந்த ஒரு விசேஷத்திற்கு சிங்கப்பூர் சென்றிருந்ததால் ஒரு வாரம் கழித்தே அஸ்வினி இறந்த செய்தி தெரிந்தும் வர முடிந்திருந்தது. விஸ்வயுகாவிற்கும் விபத்து என்றே அனைவரும் முடித்துக் கொண்டனர். ஷைலேந்தரியும் அதனை விளக்கவில்லை.

அசோக்கிற்கு பேச்சே வரவில்லை. கணவரின் அமைதி காயத்ரிக்கு கோபத்தைக் கிளறியது.

“என்ன இப்பவும் உன் அண்ணி புராணம் பாடப்போறியா?” தீப்பிழம்புடன் கேட்டதில், அவருக்கு கண் கலங்கியது.

“என் அப்பா நேர்மையா தான் தொழில் நடத்துனாரு. அதுக்கு அப்பறம் அவரே பொறுப்பை எல்லாமே அண்ணிக்கிட்ட கொடுத்ததும், நாங்களும் அதை மனசார தான் சம்மதிச்சோம். அப்போ எங்களுக்கு வயசும் இல்ல. அம்மாவுக்கு அடுத்து ஒரு வித பாசம் அவங்க மேல. அதனால தொழிலை அவங்க எப்படி நடத்தினாலும் பரவாயில்லைன்ற எண்ணம் எனக்கும் சௌந்தருக்கும் தோணிருச்சு. ஆனா என்னவோ அவனுக்கு குடும்ப தொழில்கள் மேல ஈடுபாடு இல்லாம போய்டுச்சு. சிவகாமி பின்னாடி போனா தானும் தப்பு தான் செய்வோம்ன்ற பயம் வந்து தான் அவன் தனியா தொழில் தொடங்குனான். அப்பா இருக்கும்போதே குடும்பத் தொழிலை எனக்குப் பிரிச்சு குடுத்ததுனால நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்துக்கிட்டேன். ஆனா எப்பவுமே அண்ணியை எதிர்க்க எங்க ரெண்டு பேருக்குமே மனசு கிடையாது. இப்போ… ரொம்ப கஷ்டமா இருக்கு காயத்ரி. அஸ்வினி குழந்தையை அவங்க குழந்தையா மாத்துனப்பவும் நமக்கு தெரியல. விஸ்வாவோட விஷயமும் நமக்குத் தெரியல” எனக் குமுறினார்.

காயத்ரிக்கு அவர் மீது கோபம் எழுந்தாலும் பரிதாபமும் எழுந்தது தான்.

“அஸ்வினி இல்லைன்னா, என்னை ப்ளேக்மெயில் பண்ணி என் பொண்ணை அபகரிச்சுருப்பா அந்த சிவகாமி… நல்லவேளை கொஞ்சம் வசதியான வீட்ல பிறந்தேன். இல்லன்னா உங்களுக்கு மத்தில நான் நடைபிணமா தான் வாழ்ந்து இருக்கணும். இவ்ளோ நாள் மட்டும் என்னவாம், சிவகாமி ஆட்சி தான இந்த வீட்ல நடக்கும். என்னைக்காவது நீங்க எனக்கு ஆதரவா பேசிருக்கீங்களா?” என சண்டையிட்டவர், பின் மனம் இறங்கி “சரி விடுங்க…” என்றார் மென்மையாக.

ஷைலேந்தரியும் மைத்ரேயனும் வீட்டை விட்டு வெளியேற்றியதும் அவர்களுக்கு புது செய்தி தான். அவர்களது வாழ்க்கையை நினைத்து கவலையும் எழுந்தது ஒரு தாயாக. கூடவே ஒரு குற்ற உணர்வும் காயத்ரிக்கு. முதலில் விஸ்வயுகாவிற்கு தானே மைத்ரேயனை திருமணம் செய்ய எண்ணினர். அது கலவரமாகி தனது மகள் மணப்பெண் ஆனதில் காயத்ரி தானே அதிகமாய் மகிழ்ந்தார். இப்போதோ, மைத்ரேயனே அவளுக்குப் பொருத்தமாக, எல்லாவுமாக இருந்திருப்பானே… தனது கெடுதல் எண்ணமே திருமணம் நின்று போக காரணமோ என வருத்தம் கொண்டார்.

அவருக்கு என்ன… தன்னைப் போல கூட்டுக்குடும்பத்தில் மகள் வாழ்க்கை சின்னாபின்னமாகி விடக்கூடாது என்ற அவசரமும் அச்சமுமே அப்போது பெரியதாகப் பட்டது. விஸ்வயுகா கூட எப்படியும் பிழைத்துக் கொள்வாள். அவளுக்கு சிவகாமியின் ஆதிக்க குணம் அவ்வப்பொழுது வெளிக்காட்டும். ஆனால் தன் மகள் எதையும் விட்டுக்கொடுத்து தனது கணவன் போல பிழைக்கத் தெரியாதவளாக அல்லவா இருக்கிறாள். அதுவே மைத்ரேயனுக்கு அவளைத் திருமணம் செய்து வைக்க அவரை உந்தியது. மற்றபடி, விஸ்வயுகா மீது தனிப்பட்ட வெறுப்பென்று எல்லாம் அவருக்கு என்றுமே இருந்ததில்லை.

டெல்லியில் இருந்து அவர்கள் வருவது தெரிந்ததும் காயத்ரியும் அசோக்குமே விமான நிலையத்திற்குச் சென்றனர். அத்தனை வருடம் வாழ்ந்த வீட்டிற்குத் தான் மீண்டும் வரவேண்டுமென்று அசோக் கோரிக்கை விடுக்க, அனைவருமே மறுத்து விட்டனர்.

“என்னமா விஸ்வா… அது என்ன நானோ உன் அப்பாவோ கட்டுன வீடா. அது என் அப்பா, என் அப்பாவுக்கு அப்பான்னு தலைமுறையா வாழுற வீடு. இப்ப இருக்குற மாதிரி அதை மாத்தி அமைச்சுருக்கோம் அவ்ளோ தான். ப்ளீஸ், நீங்கள்லாம் வரலைன்னா நானும் இனி அந்த வீட்டை விட்டு வெளிய போயிடுறேன்” என்ற சிறிய தந்தையை மீற இயலவில்லை.

ஆனால் ஷைலேந்தரி முடிவாய் மறுத்து விட்டாள். “என் புருஷனை அவமானப்படுத்துன இடத்துக்கு நான் வரமாட்டேன்” என்று திட்டவட்டமாகக் கூறிட, அசோக் மறுநொடியே மைத்ரேயனிடம் மன்னிப்பு வேண்டி இருந்தார்.

அவனோ “என்ன அங்கிள் என்கிட்ட போய் சாரி எல்லாம் கேட்டுக்கிட்டு… அவள் ஏதோ என் மேல இருக்குற பாசத்துல பேசுற. நாங்க வரோம்” என்று விட, ஷைலேந்தரி முறைத்தாள்.

யுக்தா மைத்ரேயனின் தந்தையை தனது கட்டுக்குள் கொண்டு வந்ததுமே மைத்ரேயனுடைய சம்பாத்தியம் அடங்கிய க்ரெடிட் டெபிட் கார்டுகளை அவரிடம் இருந்து பறிமுதல் செய்திருந்தான். அதனால் அவனுக்கொன்றும் இப்போது சங்கடம் இருக்கவில்லை.

—–
அமைச்சர் நாச்சியப்பனின் இறப்பை மர்மமாக்கி இருந்தான் யுக்தா சாகித்யன். மேலும் அவர் பல சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி, மர்ம நபரால் தாக்கப்பட்டாரென்று குறிப்பிட்டு இருந்தான்.

கட்சி ஆள்களும் அவர் வீட்டில் இல்லாதது வசதியாகிப் போனது. அவரது மனைவியும் சில வருடங்களுக்கு முன்னரே இறந்திருக்க, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

குறிஞ்சியையும் நந்தேஷையும் அங்கு காத்திருக்க கூறிய யுக்தா, தன்னவளைக் காண கெஞ்சிய கண்களை வெகு சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு அலுவலகம் சென்றான்.

“அருண்… ராஜமூர்த்தியோட பையனைப் பத்தின தகவல் கிடைச்சுதா?” எனத் தீவிரமாகக் கேட்டபடி இருக்கையில் அமர,

அவனைக் கண்டதும் உடல் விறைத்து அட்டெண்டஷன் மோடில் நின்ற அருண், “நாட் எட் சார். ராஜமூர்த்தியோட குடும்பம் புரசைவாக்கம்ல தான் இருந்துருக்காங்க. ராஜமூர்த்தி கைதானதுக்கு அப்பறம், அவமானம் தாங்காம அவங்க மனைவியும் மகனும் வேற ஊருக்குப் போய்ட்டதா சொல்றாங்க. ராஜமூர்த்தி ஜெயில்ல சூசைட் பண்ணுனதுக்கு அப்பறம், அவர் பாடியை ரெகவர் பண்ணவும் அவரோட பையன் மட்டும் தான் வந்துருக்கான். பாடியை வாங்கிட்டுப் போனவன், சொந்தக்காரங்களுக்கு கூட சொல்லி அனுப்பலன்னு சிலர் சொல்றாங்க…” என்றதும் கண்ணை மூடி நெற்றிப்பொட்டில் தட்டியபடி கேட்டுக்கொண்டான்.

“பட் சார்… எனக்கு ஒரு சந்தேகம்” அருண் கேட்டதும் கண் விழித்தான்.

“ராஜமூர்த்தியோட பையன் தான் இந்தக் கொலைகளை செஞ்சுருக்கணும்னு எப்படி உறுதியா சொல்றீங்க?”

“ஒரு சின்ன லிங்க் தான். யுகாவோட ரேப்ல சம்பந்தப்பட்டிருக்குறது நாச்சியப்பன்னு கன்பார்ம் ஆகுறதுக்கு முன்னாடியே அவளோட வீட்டாளுங்களை பத்தி, அவங்களால ஏற்பட்ட சின்ன சின்ன பிரச்சினைகளை பத்தி விசாரிச்சேன். அப்போ எனக்கு ராஜமூர்த்தி பத்தி தெரிஞ்சுது. நல்ல மனுஷன் தான். அவரோட வார்டுல நிறைய நல்லது செஞ்சுருக்காரு. மகனை பி. எச்டி படிக்க வச்சிருக்காரு. அவன் எந்நேரமும் படிப்புல தான் மூழ்கி இருப்பான்னு தெரிஞ்சுது. ராஜமூர்த்தி அவரோட குடும்ப விஷயங்களை ரொம்ப ப்ரைவேட்டா தான் வச்சிருக்காரு. மனைவியும் அதிகமா வெளில வர மாட்டாங்க. மகனும் அதிக நாள் புனே, மும்பை, டெல்லின்னு அவனோட பி. எச். டி சம்பந்தமா ஒவ்வொரு இடத்துலயும் இருந்துருக்கான். ராஜமூர்த்தி இறந்ததுக்கு அப்பறம் அவனோட ஒரிஜினல் ஐடியை முதற்கொண்டு மாத்தி இருக்கான். அவன் பேர் ஷ்யாம். ஆனா இப்போ ஓட்டர்லிஸ்ட்ல அந்த பேரே கிடையாது. ராஜலிங்கம் குடும்பத்துல இருக்குற ஒருத்தரோட பெயரும் கிடையாது. அவனோட அடையாளத்தை அவன் வாண்டடா அழிச்சது தான் எனக்கு அவன் மேல சந்தேகத்தைக் கொடுத்துச்சு. அழிக்கப்பட்ட ஒர்ஜினல்ஸல அவன் முகம் தெளிவா இல்ல. என் கெஸ் க்ரெட்ன்னா இப்போ அவனோட உருவத்துலயும் நிறைய மாற்றம் செஞ்சுருப்பான்.

இப்ப நம்ம கண்டுபிடிக்க வேண்டியது. அவன் அவனோட அடையாளத்தை அழிச்சதுக்கு அப்பறம், கண்டிப்பா வேற பேர்ல வோட்டர் ஐடி, ஆதார் எல்லாம் வாங்கி இருப்பான். அதை பைண்ட் அவுட் பண்ணனும். அதுல பிடிச்சா அவனும் கிடைச்சுருவான். அவனை இதுக்குமேல விடுறது ஆபத்து அருண். நம்ம டீம் வச்சு, புரசைவாக்கம்ல ராஜமூர்த்தியோட வீட்டை டீப்பா சர்ச் பண்ண சொல்லு. அவங்க குடும்ப போட்டோ ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கலாம்” என்றான் யோசனையாக.

அவனை ஒரு கணம் பிரமிப்புடன் பார்த்த அருண், “சார் நான் ஒன்னு கேட்கட்டா…” என மென்று விழுங்க, “ம்ம் வாட்?” என்றான் புருவம் சுருக்கி.

“இல்ல… எப்பவும் அந்த பொண்ணு பின்னாடி தான சுத்திட்டு இருந்தீங்க. இதெல்லாம் எப்படி சார்…” என நமுட்டு நகையுடன் கேட்டு யுக்தாவின் தீப்பார்வையில் பொசுங்கிட, “நான் போய் வீட்டை சர்ச் பண்றேன் சார்” என்று ஓடியே விட்டான்.

ஏஞ்சலின் நினைவில் அத்தனை வேலைப்பளுவை மீறியும் அவன் இதழ்கள் மெலிதாய் புன்னகைத்தது.

நந்தேஷ் நடந்த விஷயங்களை ஜீரணித்து, தன்னை நம்ப வைத்துக்கொள்ள போராடி மெல்ல மெல்ல இயல்பிற்கு வந்தான். பின் குறிஞ்சியைத் திரும்பிப் பார்க்க, அவள் இலக்கின்றி எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள்.

காரணம் புரியாதவனாக, “இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் அழகி?” எனக் கேட்க,

“முடிஞ்சுடும் நந்தா. நீங்க வேணா கிளம்புங்க. நானும் ஆபிஸ்ல போய் ரிப்போர்ட் பண்ணனும்” என்றதில், “அவசரமா கிளம்புற அளவு ஒரு வேலையும் இல்ல. ஆர் யூ ஆல்ரைட்?” என்றான் கூர்மையாக.

“ம்ம்” தலையை பலவீனமாக ஆட்டியவளிடம், “இல்லையே. நீ சரி இல்லை” என உறுதியாக கூறினான்.

சில நொடி மௌனத்திற்குப் பிறகு, “நாச்சியப்பன் என் பெரியப்பா” என்றாள்.

“எதே?” நந்தேஷிற்கு விழி பிதுங்கி விட்டது.

“ம்ம் என் அப்பா அப்பவே லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாரு. ஊரை விட்டும் ஓடிட்டாரு. நான் காலேஜ் சேரும் போது தான் மறுபடியும் குடும்பத்தோட சென்னைக்கு வந்தோம். ஆனா நாச்சியப்பன் என் அப்பா இங்க இருக்குறது தெரிஞ்சதும்… சொந்த தம்பின்னு கூட பார்க்காம அவரை மீறி ஊரை விட்டு போனதுக்கு ஆக்சிடெண்ட் பண்ணி கொலையே பண்ணிட்டாரு” என்றதும் “அட பரதேசி நாயே” என்று வாயில் கை வைத்தான் நந்தேஷ்.

“என் அம்மா, நான், தங்கச்சிலாம் பொண்ணா போய்ட்டானால எப்படியும் பொழைக்க வழி இல்லாம தெருவுல தான் இருப்போம்னு நினைச்சுருப்பாரு போல. சொத்து கேட்டு வீட்டுப்பக்கம் வரக்கூடாதுன்னு மிரட்டல் வேற. அப்போ எல்லாம் நான் காலேஜ் கூட முடிக்கல. என் அம்மாவோட அண்ணன் தான் எங்களை பார்த்துக்கிட்டாரு. அப்பறம் தான் யுக்தாவோட ப்ரெண்ட்ஷிப் கிடைச்சது. அதுவரை நான் வெளில யார்கிட்டயும் பேசுனது கூட கிடையாது. பேசவும் பிடிக்காது” என்று வார்த்தைகள் பிசிறடிக்க கூறியவளின் கரத்தை இறுக பற்றிக்கொண்டான்.

“ஆனா, எனக்கு வெறி. என் அப்பாவை கொன்னவனை நான் சும்மா விட கூடாதுன்னு தான் இந்த வேலையை வாங்க ரொம்பவே கஷ்டப்பட்டேன். அந்த ஆளை எதுலையாவது மாட்ட வைக்கணும்னு தோணிட்டே இருக்கும். கடைசில அந்த ஆளே ஒரு கேவலமானப் பிறவின்னு தெரிஞ்சதும் எரிச்சலா இருக்கு. இன்னும் எத்தனை பேர் குடும்பத்தை கெடுத்தானோ…” எனப் பெருமூச்சு விட்டவளை தோளோடு அணைத்தவன், “அப்போ நீ எனக்கு முறைப்பொண்ணா” என்று சம்பந்தமே இல்லாத கேள்வியாக கேட்டான்.

அவனை நிமிர்ந்து முறைத்தவள், “டேய் நான் எவ்ளோ ஹார்ட் மெல்டிங் பேக் ஸ்டோரி சொல்லிட்டு இருக்கேன். இந்த டவுட்டு இப்ப ரொம்ப முக்கியமா?” என இடுப்பில் கை வைக்க,

“ஆமா, ஆமா… எப்படி என் சித்தி தான் என் அம்மான்னு குளறுபடி ஆச்சோ. அதே மாறி நீ என் தங்கச்சி முறை எதுவும் ஆகிட்டீனா இந்த குட்டி ஹார்டு இதுக்கு மேல லவ் பெய்லியரை தாங்காதும்மா” என்றான் போலி வருத்தத்துடன்.

அதில் அத்தனை நேரம் இருந்த இறுக்கம் மறந்து அவள் சிரித்தே விட, “ச்சை உன்னை வச்சுட்டு நான் பீல் பண்ணுனேன்ல என்னை சொல்லணும்…” எனச் செல்லமாக அடித்தவளின் கைகளைப் பிடித்தவன், “அதே தான் நான் இருக்கும்போது நீ எதுக்கும் பீல் பண்ண கூடாது. இட்ஸ் ஹர்ட் மீ அ லாட்” என்று அக்கைகளுக்கு முத்தம் வைத்தான்.

அந்நேரம் கையில் இருந்து கிளவுஸை கழற்றியபடி வந்த முரளி, அவர்களை ஒரு மார்க்கமாகப் பார்க்க, குறிஞ்சி வெடுக்கென கையைப் பின்னிழுத்துக்கொண்டு அசடு வழிந்தாள்.

விமான நிலையத்தில் விஸ்வயுகாவின் விழிகள் யுக்தாவைத் தான் தேடியது.'”என்னை வர சொல்லிட்டு, ஹக் வேணும்னு சொல்லிட்டு ஏர்போர்ட்க்கு வர முடியாதாமா…’ என மனதினுள் சிலுப்பிக்கொண்டவள், காரில் ஏறப்போக அவளது பின்புறமிருந்து “ஹக் குடுக்காம எங்கடி போற?” என்ற யுக்தாவின் வசீகரக் குரல் அவளை மென்னகை புரிய வைத்தது.

அத்தியாயம் 100

யுக்தாவைக் கண்டதும் இறுக்கி அணைத்துக் கொண்டாள் விஸ்வயுகா. அவனும் சிறு புன்னகை மின்ன, “மிஸ் யூ ஏஞ்சல்” எனக் கட்டிக்கொண்டான்.

மற்றவர்கள் இவர்களைப் பாராமல் அசோக்கின் காரில் ஏறி அமர்ந்து கொள்ள, அசோக்கும் காயத்ரியும் தான் பேந்த பேந்த விழித்தனர்.

“யப்பா அவங்களை ஏன் வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க. வாங்க நம்ம போகலாம்” என்று ஷைலேந்தரி நக்கல் செய்திட, அவளை மட்டும் விட்டு விட்டு மற்றவர்கள் கிளம்பினர்.

“ஆல் ஓகே?” அவனது முதுகை நீவியபடி அவள் கேட்க,

“ஓகே ஆகிடும். நீ?” அவனது நெற்றியை அவளது பிறை நெற்றியில் அழுத்தியபடி யுக்தா கேட்டான்.

“நீ ஓகே ஆக்குனா நானும் ஓகே ஆகிடுவேன் ஐ திங்க்!” சின்னக் குறும்பு மின்ன, அவன் மீது பொதிந்த அளவில்லா நம்பிக்கையில் காதல் களிப்புற கூறியவளின் இதழ்களை சில நிமிடங்கள் விலைக்கு வாங்கினான்.

அஸ்வினியின் மடியில் தலை சாய்த்து படுத்திருந்தார் சௌந்தர். அவர்களின் இனிமையான தருணங்களைக் கொண்ட தங்களது அறையில் இருவருமே கனத்த மனதுடன் பழைய நினைவுகளை மீட்டினர்.

“நீ திரும்பவும் இங்க… இப்படி… உன் மடில எல்லாத்தையும் மறந்து இருப்பேன்னு நினைக்கல அஸ்வினி” எனக் கண்ணில் நீர் வழிய கூறிய கணவனின் கேசத்தைக் கோதி விட்டார்.

“என் மேல உங்களுக்கு கோபம் இல்லையா?” அஸ்வினி கேட்டதும் ஏனென பார்த்தார்.

“நம்ம பையன் விஷயத்துல நான் நியாயம் செய்யல… யுகியும் நந்துவும் கோபத்தைக் காட்டுன மாதிரி நீங்களும் காட்டிடுங்களேன்” எனக் கலங்கிய கண்களுடன் கூறியவரின் கன்னத்தை வருடியவர், “அவங்க உன்னை அம்மாவா, அத்தையா பாக்குறாங்க. கோபப்படுறாங்க. நான் உன்னை என் உயிரா பாக்குறேன். என் மேலயே நான் எப்படி கோபப்பட? என்றும் நீங்கா காதலில் மனையாளைக் கரைய விட்டவரின் நெஞ்சில் முகம் புதைத்து மன அழுத்தத்தைக் கரைத்தார் அஸ்வினி.

“லவ் யூ மா!” என மெல்லச் சிரித்தவரைக் கண்டு அந்நிலையிலும் செம்மை படர்ந்தது.

“என்னங்க… என்னால நடந்த தப்பை நானே சரி பண்ணனும். யுகிக்கும் ஏஞ்சல்க்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணலாமா?” கேட்டவரை மென்மையாய் ஏறிட்டவர், “உடனே செய்யலாம். நான் மேற்படி ஆக வேண்டிய வேலையைப் பாக்குறேன்…” எனத் துள்ளிக் குதித்து எழுந்தார்.

வாசலுக்கு செல்லப் போனவர் நிதானித்து முகம் மாறினார். “அஸ்வினி நான் சொல்றதை நீ எப்படி எடுத்துப்பன்னு தெரியல. ஆனா இது என் மன நிம்மதிக்காக… ஏத்துப்பியா?” என வேதனையை அடக்கிக்கொண்டார்.

“யுகாவுக்கு யுகியோட நல்லபடியா கல்யாணம் நடந்ததும் நான் செஞ்ச கொலைக்காக சரண்டர் ஆகப்போறேன்…” எனக் கூறியவரைக் கண்டு திகைத்தார் அஸ்வினி.

“ப்ளீஸ்மா. என்னால குற்ற உணர்ச்சியோட வாழ முடியாது. என்னோட கடைசிகாலத்துல உன்னோட நினைவா ஜெயில்லயே இருந்துடலாம்னு நினைச்சுருந்தேன். அதையே இப்போ தொடருறது தான் சரின்னு தோணுது. என்ன இருந்தாலும் நான் செஞ்சது கொலை தான. பின்னாடி நம்ம பசங்களும் இதுல மாட்டிட கூடாது. அதுக்காகவாவது நான் இதை முடிச்சே ஆகணும்…” என்ற கணவரை கண்ணிமைக்காமல் பார்த்து உடைந்த உள்ளத்தைத் தேற்றிக் கொண்டவர், “உங்களோட மன நிம்மதிக்காக மட்டும் தான்” என்று அழுகையை அடக்க முயன்று முடியாமல் கேவினார்.

ஆனாலும் கணவனின் கலங்கிய முகம் கண்டு சில நொடிகளில் தன்னைத் தேற்றிக்கொண்டார். இது தான் விதியென்றான பின் இனி அழுது என்ன பயன். அவரைக் குற்றவாளிக் கூண்டின் பின் பார்க்கும் அவலநிலையை எனக்கு கொடுத்து விடாதே கடவுளே! என்ற மனுவை மட்டும் மனதால் போட்டுக்கொண்டார், அது பலிக்கப்போவது அறியாமல்.

“யுகிட்ட மேரேஜ் பத்தி பேசுனாவாவது அவன் என்கிட்ட பேசுவானா?” எனப் பேச்சை மாற்றிட,

“அவன் கோபம் எவ்ளோ நாளைக்கு. பேசிடுவான்மா” என்றார் உறுதியாக.

—-

யுக்தா காரை ஓட்ட, விஸ்வயுகா அவன் கையைப் பிடித்து தோளில் சாய்ந்தபடி வந்தாள்.

அவ்வப்பொழுது அவளது உச்சந்தலையில் அழுந்த முத்தமிட்டுக்கொண்டே இருந்த யுக்தாவிடம், “மாமான்னு நான் நினைக்கவே இல்லடா…” என்றாள் ஆதங்கத்துடன்.

“அவனை மாமான்னு சொல்லாதடி. வர்ற ஆத்திரத்துக்கு…” என்று நரம்பு புடைக்க ஸ்டியரிங்களை அழுத்திப் பிடித்தான்.

“விடு யுகி. சரி ஆகிடுச்சு எல்லாம்!” எனப் புடைத்திருந்த புஜங்களை இதழ்களால் ஒற்றி எடுத்து சமன்செய்தாள்.

அதில் சற்றே இளகியவனுக்கு அருண் அழைக்க, எடுத்துப் பேசியவன் “ஓகே உடனே வரேன்…” என்று விட்டு காரின் வேகத்தை அதிகரித்து, அவளை வீட்டில் இறக்கி விட்டான்.

“என்ன ஆச்சுடா?”

“ஒரு லீட் கிடைச்சிருக்கு ஏஞ்சல். டேக் சம் ரெஸ்ட்… ஐ வில் பீ பேக்!” என்றதும், “நானும்…” என்றாள் தலைசாய்த்து.

“கான்பிடென்ஷியல்டி” யுக்தா உதட்டைப் பிதுக்கி கூற, அவன் கன்னத்தில் குத்தியவள், “இவ்ளோ நாளும் உனக்குத் தேவைன்னு எங்களையும் கூட்டிட்டே அலைஞ்ச. இப்ப மட்டும் நாங்க தேவை இல்லையாக்கும்…” என சிலுப்பினாள்.

“எனக்கும் உன்னைக் கூட்டிட்டே சுத்தணும்னு ஆசை தான் ஒன்னு செய்யலாமா? நீயும் சிபிஐ எக்ஸாம்க்கு எழுதி பாஸ் பண்ணிடு. சேர்ந்தே கேசும் கண்டுபிடிக்கலாம். கிசுகிசுவும் பண்ணலாம்” என்றான் கண்ணடித்து.

“எதே திரும்பவும் நான் படிக்கணுமா? தம்மா துண்டு ரொமான்ஸ்க்காக நான் இவ்ளோ பெரிய ரிஸ்க் எல்லாம் எடுக்க முடியாது. ஆளை விடு சாமி…” என்று ஓடியே விட, சத்தமாக சிரித்தான் யுக்தா சாகித்யன்.

யுக்தா சென்றது, புரசைவாக்கத்தில் அமைந்திருந்த ராஜமூர்த்தியின் வீட்டிற்கு தான். அங்கு அருண் அவனுக்காக காத்திருந்தான்.

“எஸ் அருண். போட்டோ கிடைச்சுதா?” எனக் கேட்டதும் “எஸ் சார் ஆனா ரொம்ப பழைய போட்டோவா இருக்கு. அண்ட், கடந்த அஞ்சு வருஷத்துல புதுசா கிரியேட் செய்யப்பட்ட ஐடி’ஸ் பத்தின டீடெய்ல்ஸ்ஸும் ரெடி சார்…” என்று கொடுக்க, அதனை ஆராய்ந்தபடியே புகைப்படத்தையும் பார்த்தான்.

ஒன்றும் பிடிபடவில்லை. சில நிமிடங்கள் செலவழித்து மீண்டும் பெயர் வரிசையை அளந்து விட்டு, புகைப்படத்தையும் பார்த்தவனின் விழிகள் சட்டென பளிச்சிட்டது.

“ஸ்மார்ட் மூவ்!” தனக்குள் சொல்லிக்கொண்டான்.

“சார்?” அருண் புரியாமல் பார்க்க, அவனுக்கு சில உத்தரவுகளைக் கொடுத்தவனின் இதழ்கள் இழிவாய் வளைந்தது.

இங்கு முகமெல்லாம் ஆத்திரம் நிரம்பி, தனது திட்டத்தை கேள்விக்குறியாக்கிய யுக்தாவின் மீது கொலை வெறிகொண்டிருந்தான் அவன். அவர்களை முழுதாய் கொல்ல, வெகு சிரமப்பட்டு உணவில் விஷம் கலந்து அனுப்ப அதையும் அல்லவா கண்டுபிடித்து விட்டான் அந்த இடியட் யுக்தா.

இத்தனை வருட தனது கொலைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து விடுவானோ… அந்த சாவை காணும் சுகத்தை எல்லாம் அனுபவிக்க இயலாதோ எனச் சித்தம் கலங்கி பைத்தியம் பிடித்தது போல தனதறையில் மாட்டி வைத்திருந்த புகைப்படங்களை எல்லாம் வெறி கொண்டு கிழித்தான்.

அவனது அடுத்த டார்கெட்டாக ஷைலேந்தரியை நினைத்திருந்தான். ஆனால், அவளையும் நெருங்கவே இயலவில்லையே.

தான் நினைத்ததை செய்ய முடியாத ஆவேசம் அவனை மதி தவற வைத்தது.

எப்படியும் நினைத்ததை நடத்தியே தீர வேண்டுமென்றதில் குறியாக இருந்தவன், இப்போது நேரடியாக மோதப்போவது யுக்தா என்பதை மறந்து விட்டான் போலும்!

“அருண்… உள்நாடு வெளிநாடுன்னு எல்லா இடத்துக்கும் இவன் போட்டோ போகணும். சைன்டிஸ்ட் பாஜி கூட இருந்தது இவன் தான்னு நமக்கு ஒரு சின்ன ஆதாரமாவது வேணும். மேக் இட் பாஸ்ட்!” என பரபரத்த யுக்தா, விஸ்வயுகாவிற்கு அழைத்தான்.

அஸ்வினியின் அருகில் அமர்ந்து அவரிடம் பழையபடி பேசிக் கொஞ்சிக்கொண்டிருந்தாள்.

யுக்தாவின் அழைப்பில் அவள் விழிகள் மின்னிட, “சொல்லுடா” என்றாள்.

மகளின் பளிச்சென்ற புன்னகையை இத்தனை வருடங்களாக தனது வார்த்தைகளும் தான் கொன்று இருக்கிறது என்று வருந்திய அஸ்வினி, அவளை ரசித்தார். அவளது காதலையும் சேர்த்தே.

“ஏஞ்சல் உனக்கு ஒரு போட்டோ அனுப்பி இருக்கேன் அவனை நீ பார்த்து இருக்கியா?” எனத் தீவிரமாகக் கேட்க,

“லைன்ல இரு” என்றவள் புகைப்படத்தை உற்றுப் பார்த்து விட்டு, “தெரியலையே யுகி. பார்த்த மாதிரியும் இருக்கு பார்க்காத மாதிரியும் இருக்கு…” என்றாள் குழப்பமாக.

“நல்லா பாரு. நீ பார்த்து இருப்ப” இம்முறை அவன் அழுத்தமாகக் கூற,

மீண்டுமொரு முறை பார்த்தாள். நெற்றியைத் தட்டி யோசித்துக்கொண்டே இருந்தவள், விருட்டென “டேய் இவனா…?” என வாயைப் பிளந்தாள்.

“ம்ம் எங்க பார்த்திருக்க?”

“லைப்ரரில யுகி! காட்” எனத் தலையில் கை வைத்தாள்.

“ம்ம் அன்னைக்கு ஒன்னும் தெரியாத மாதிரி பேசுனப்பவே டவுட் ஆகிருக்கணும்… சரி அவனைத் தூக்கிட்டுப் பேசுறேன்” என அழைப்பைத் துண்டிக்கப்போக அஸ்வினி, தான் பேசுவதாகக் கண்ணைக் காட்டினார்.

“யுகி ஒரு நிமிஷம்” விஸ்வயுகா கூறியதும், “சொல்லுடி வேற எதுவும் லீட் இருக்கா?” எனக் கேட்க,

“எப்ப பாரு… லீட், சஸ்பெக்ட், விக்டிம்னு” என சலித்துக் கொண்டதில் சிரித்தான்.

அப்படியே அலைபேசியை அஸ்வினியிடம் கொடுக்க, அவர் பேசியதும் வாயை இறுக மூடிக்கொண்டான்.

“நீ ஒன்னும் என்கிட்ட பேச வேணாம். நாளைக்கு காலைல உனக்கும் ஏஞ்சலுக்கும் கோவில்ல கல்யாணம் ஏற்பாடு பண்ணிருக்கு. நீ வந்து தாலி கட்டு போதும்…” என்றார் முணுமுணுப்பாக.

விஸ்வயுகாவும் இதனை எதிர்பாராமல் திகைத்துப் பின் வெட்கப்புன்னகை வீசினாள்.

வெகுநேரமாக சௌந்தருடன் மைத்ரேயனும் ஷைலேந்தரியும் தனக்குத் தெரியாமல் கிசுகிசுத்தது இதை பற்றித்தானா? விஸ்வயுகா தலையை ஆட்டிச் சிரித்தாள்.

யுக்தா அதே அமைதியுடன் இருக்க, “பேச மாட்டியா யுகி. வலிக்குது” என்றார் கண் கலங்க.

கீழுதட்டை அழுந்தக் கடித்த யுக்தாவிற்கும் விழிகள் ஈரமானதை தடுக்க இயலவில்லை.

அப்படியும் ஒரு வார்த்தைப் பேசாதவன் போனை விஸ்வயுகாவிடம் கொடுத்ததும், “ஏஞ்சல் ஐ நீட் டு ஃபைண்ட் த கில்லர்” என்றான் அமைதியாக.

“ஹே எனக்குலாம் எதுவும் தெரியாது. இவங்களா பிளான் பண்ணிருக்காங்க. சரி இப்ப என்ன… தாலி தான் நான் தூங்கிட்டு இருக்கும்போதே கட்டுவியே” எனக் குத்திட,

“அப்போ கட்டுனதுலயும் காதல் இருந்திச்சு. ஆனா அப்போ இருந்த பொறுமை இப்போ சுத்தமா இல்ல. தாலின்னு ஒன்னு இடைல இருக்கறதுனால தான், உன்னை முழுசா விட்டு வச்சுருக்கேன்” என அமர்த்தலாகக் கூறியதில் கட்டை விரலை நிலத்தில் அழுந்த ஊன்றி எழுந்த வெட்கத்தை அடக்கியவள், பல்லைக்கடித்தபடி “சைக்கோ” என அதட்டினாள்.

நந்தேஷ்ஷும் வீட்டிற்கு வந்து திருமண ஏற்பாடு அறிந்து அதிர்ந்தான்.

“எதையாவது ஏடாகூடமா செய்றதே உங்களுக்கு வேலையா போச்சுல” என்று தனது உண்மையான தாய் தந்தையைப் பார்த்துக் கேட்க,
சௌந்தர் முறைத்தார்.

“பின்ன என் ஆளும் அவள் ஆளும் கால்ல சுடுதண்ணி கொட்டுனா கூட ரியாக்ட் பண்ணாத அளவுக்கு சுத்திட்டு இருக்காங்க. நாளைக்கே கல்யாணம்ன்னா அவன் எப்படி வருவான். உங்க தப்பை சரி செய்ய நினைக்கிறது தப்பில்ல. ஆனா தப்பு தப்பா பண்ணாதீங்க…” எனத் தலையில் அடித்து கொண்டதில், விஸ்வயுகா பொங்கிய சிரிப்பை அடக்கியபடி நின்றாள்.

மைத்ரேயனோ “இரு இரு இரு… இப்ப என்ன சொன்ன? உன் ஆளா?” எனக் கேட்க,

ஷைலேந்தரி, “அதான! உன் ஆள் தான் கல்லறைல கவுந்தடிச்சு படுத்துருக்காளே” என்றாள் யோசனையாக.

அதில் அசடு வழிந்து வெட்கம் கொண்டவன், “இல்ல இப்ப என் ஆளு மாறிடுச்சு…” என நடந்ததைக் கூற,

“இருந்தாலும் நீ ரொம்ப லேட்டுடா” என வாரினாள் விஸ்வயுகா.

அந்நேரம் மீண்டும் யுக்தா போன் செய்தவன், “ஏஞ்சல் எல்லாரையும் ரெடியாக சொல்லு. நம்ம கடல்ல ஒரு ஷிப் ரைடு பண்ணிட்டு வரலாம்… நைட் ஸ்டே” இறுதி வரியை மட்டும் அவன் கிசுகிசுப்பாக சொன்னதில், ‘என்ன இவன்… கில்லரைத் தேடி தேடி கிறுக்காகிட்டானா? இந்தக் கலவரத்துல ஷிப் டிராவல் பண்ணலாம்னு சொல்றான்!’ எனத் திருதிருவென விழித்தாள்.

மோகம் வலுக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
21
+1
191
+1
3
+1
6

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment