Loading

அத்தியாயம் 92

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தனர் சிவகாமியும் மோகனும்.

சிவகாமிக்கு மனது தீயாக எரிந்தது. “எனக்கு என் பையனும் பொண்ணும் வேணுங்க. என் பையனை நான் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்…” என்றார் தீர்க்கமாக.

“அஸ்வினி வாயால உண்மை எப்பவும் வெளில வராது. ஆனால் அவங்களுக்கு தானா உண்மை தெரிய வந்துட்டா, நந்து நம்மைக் கையை மீறி போயிடுவான். போனா போகட்டும் அதனால என்ன… அவனை என்ன நீயா பெத்த?” மோகன் கோபத்துடன் கூறினார்.

அவர் பெறவில்லை தான். தனக்கு முன் அஸ்வினிக்கு கர்ப்பம் தரித்ததில் வெகுண்டு எழுந்தார். எத்தனை வருடங்களாக மற்றவர்களின் கேலிப்பார்வைக்கு ஆளாகி இருப்பார். ஆனால், வீட்டை விட்டு ஓடி வந்த இந்த ஓடுகாலிக்கு மட்டும் அனைத்தும் கிடைப்பதா என்ற இறுமாப்பு கொண்டவர், குழந்தையை அழிக்கத் தான் அவரை மிரட்டி மருத்துவமனைக்கு இழுத்துச் சென்றார்.

ஆனால், ஸ்கேன் செய்து பார்த்ததும் சிவகாமியால் குழந்தையை அழிக்க இயலவில்லை. மாறாக, அதனை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள திட்டம் தீட்டினார்.

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சிவகாமி தன் குழந்தையை ஒன்றும் செய்யாமல் விட்டதில் நிம்மதி கொண்ட அஸ்வினிக்கு அது நிலைக்கவில்லை. அவரது பெற்றோர் விபத்தில் இறந்து விட்டதாக தகவல் வந்ததில் நொறுங்கிப் போனார்.

“என்ன அஸ்வினி எதுவும் துக்க செய்தியா?” என அறை வாயிலில் நின்று சிவகாமி எகத்தாளமாகக் கேட்க,

அவரது விஷ குணத்தை முழுதாய் அறியாத அஸ்வினி, “அக்கா என் அப்பா அம்மா ஆக்சிடெண்ட்ல… நான் உடனே போகணும். அவருக்கு போன் பண்றேன். ட்ராவல்ல இருக்காரு போல இருக்கு. டவர் இல்ல” என்று கேவிட,

“பொறுமை பொறுமை. ஆக்சிடென்ட்னு கன்பார்மா தெரியுமா?” சிவகாமி கேலிக்குரலில் கேட்டார்.

“அப்படி தான் போன் வந்துச்சு…” எனப் பதறியவரிடம்,

“இல்லையே. கொலைன்னு தெரியிற மாதிரி தான ஆக்சிடெண்ட் பண்ண சொன்னேன்” என்று யோசனையுடன் தனக்குள் பேசிக்கொள்வது போல பாவனை செய்தவரைக் கண்டு சிலையாகி விட்டார் அஸ்வினி.

“அக்… அக்கா…”

“இன்னும் உனக்கு சொந்தம் பந்தம்னு யாரும் இருக்காங்களா சொல்லு… சிறப்பா செய்யலாம்” எனப் பேசிக்கொண்டே வந்தவர், “என்கிட்டயே உனக்கு யாரும் இல்லைன்னு உருட்டி இருக்க. என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சுட்டியா?” என சீறினார்.

“உயிரே வற்றிப்போனது போல துவண்டார் அஸ்வினி. நான் காதலிச்சதுக்கு என் பெத்தவங்களுக்கு ஏன் தண்டனை?” அழுகுரலில் அவர் கேட்க,

“சரி தான். உனக்கும் தண்டனை இருக்கே” என்றவரை சிவந்த விழிகளுடன் ஏறிட்டார் அஸ்வினி.

“புரியல. எனக்கு இந்தக் குழந்தை வேணும்” என அஸ்வினியி வயிற்றைச் சுட்டிக் காட்டியதில் அஸ்வினி மிரண்டே போனார்.

“வேணாம். என் குழந்தையை ஒன்னும் பண்ணிடாதீங்க” என்று தனது கையைக் கேடயமாய் சுற்றி வளைத்துப் பாதுகாத்துக் கொண்டார்.

“உன் குழந்தையை ஒன்னும் பண்ண கூடாதுன்னா, அந்தக் குழந்தைக்கு அம்மாவா நீ இருக்க கூடாது. நான் தான் இருக்கணும்…” எனத் தீர்மானமாகக் கூறிட, அஸ்வினிக்கு அவர் கூறிய அர்த்தம் புரியவே வெகு நேரம் பிடித்தது.

பெற்றோரையே தேடிப்பிடித்து கொன்றவர், தனது குழந்தையை கொன்று விட மாட்டாரா? இந்த ஒரு காரணமே அஸ்வினியை அனைத்திற்கும் பயப்பட வைத்தது. அந்த பயமே தனது குழந்தையைத் தாரை வார்க்க வைத்தது.

சிவகாமி அதன் பிறகு, போலியான அபார்ஷன் ரிப்போர்ட்டைக் காட்டி சௌந்தரை நம்ப வைத்தார்.

அஸ்வினி சில மாதங்கள் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டுமென அறிவுறுத்தி, சௌந்தரை தனது வேலை விஷயமாக மாதக்கணக்கில் துபாய்க்கு அனுப்பி விட்டார். தான் கர்ப்பமாக இருப்பதாக புரளியையும் கிளப்பி விட்டார்.

அஸ்வினிக்கு ஒவ்வொரு நாளும் தனது குழந்தையை ஸ்பரிசிக்கும் நொடிகள் இதுமட்டுமே என்ற ஆற்றாமையிலேயே கழியும். காயத்ரியும் அந்நாட்களில் அவரது தந்தை இறந்து விட்டதனால், சில மாதங்கள் தாய் வீட்டோடு இருந்தார். அசோக்கும் தொழிலில் கவனமாக வெளியூருக்கு அலைந்து கொண்டிருந்ததால், எதையும் கண்டுகொள்ளவில்லை.

அஸ்வினியின் பிரசவ நேரத்தில் அவளிடம் சௌந்தரைப் பேச விடாமல் பல குட்டிக்கலாட்டாக்கள் செய்து, குழந்தையையும் தன்னிடமே வாங்கி கொண்டார். அதன் பிறகு அஸ்வினியின் உடல் நலம் பெற்ற பிறகே சௌந்தரையும் திரும்பி வரவைத்தார்.

அடுத்து சில மாதங்களாக உடல்நிலையைக் காரணம் காட்டி, அவர்களுக்குள் எந்த வித உறவும் மேற்கொள்ளாது போக, சௌந்தருக்கு இதை பற்றிய சந்தேகமே எழவில்லை.

அஸ்வினியின் மகனாக இருந்தாலும், தனது மொத்த அன்பையும் நந்தேஷிற்கு வாரி வழங்கத்தான் செய்தார் சிவகாமி.

பல வருடங்களாக மழலை மனத்திற்காக ஏங்கியவருக்கு அவனது வருகை வரமாக அமைந்தது. ஆனால், அதனைப் பெற்றுக்கொண்ட முறை எத்தனை தவறென்று அவனுக்கு உறைக்கவே இல்லை.

அதிர்ஷ்டவசமாக அடுத்த ஒரு வருடத்திலேயே உண்மையாவே கர்ப்பமானார் சிவகாமி. அதற்கும் நந்தேஷின் வரவே காரணமென்று பூரித்துப் போனார். விஸ்வயுகா பிறக்கும் சமயம் காயத்ரியும் ஐந்து மாத கர்ப்பமாக இருக்க, தாமத பிரசவமென்பதாலும் அறுவை சிகிச்சை செய்ததாலும் சிவகாமிக்கு உடலளவில் மீண்டும் தேற நேரம் பிடித்தது.

அதுவரையில் தனது மகனைக் கையில் ஏந்த கூட தடை விதிக்கப்பட்டதால் ஒவ்வொரு நாளும் புழுங்கித் தவித்த அஸ்வினிக்கு, இரு மழலைகைளையும் ஒன்றாகப் பார்த்துக்கொள்ளும் சூழ்நிலை அமைய, அவர் கொண்ட மகிழ்விற்கு அளவே இல்லை.

விஸ்வயுகாவையும் அவர் பிரித்துப் பார்த்தது இல்லை. அதனாலேயோ என்னவோ இருவரும் போட்டிப் போட்டுக்கொண்டு அவர் மீது அன்பை வாரி இறைத்தனர். அதுவே தான் ஷைலேந்தரிக்கும்.

ஒரு கட்டத்திற்கு மேல் சிவகாமியால் அஸ்வினியுடன் உறவாடிய மகவுகளை தடுக்க இயலவில்லை.

எப்படியாகினும் நீ சித்தி என்ற உறவுமுறையைத் தாண்டி வர இயலாது என்ற ஏளனத்தில் அவர்களை உறவாட விட்டு விட்டார்.

இப்போதோ தனது மகனை இழந்து விடுவோமோ என்ற பரிதவிப்பு அவர் முகத்திலும் குரலிலும் எதிரொலித்தது.

அஸ்வினி நடந்ததை கண்ணீருடன் கூறியதில், அவர் நிலை புரிந்தாலும் வளர்ந்த பின்னாலாவது இந்தக் காவியக்கதையை திரைக்கதையாக்கி இருக்கலாம் என்ற எண்ணம் வராமல் இல்லை நந்தேஷிற்கு.

தனது தமையன் கடலில் மீன் பிடிக்கச் சென்று இறந்து விட்ட விஷயம் முதற்கொண்டு அறிந்தே வைத்திருந்தார் அஸ்வினி. அப்போதே அவரது குடும்பத்தைக் காண நெஞ்சம் துடித்தது. அப்போதைக்கு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டவர், சிவகாமியால் அவர்கள் இருக்கும் இடத்தை இழந்து விட்டது தெரிந்து வெகுண்டு எழுந்து வழக்கு தொடுத்தார். அதுவே பின்வரும் பிரச்சினைகளுக்கும் காரணமாகி சிவகாமிக்கு அவர்மீது பகையை ஏற்படுத்தியது. நந்தேஷும் வளர்ந்து விட்டான். அவனிடம் அஸ்வினி உண்மையைக் கூறினால் நிச்சயம் நம்பி விடுவான் என்ற பயமுமே அஸ்வினியைக் கொலை செய்ய தூண்டியது.

ஷைலேந்தரியோ, “அப்படியே என் பிறப்புக்கு ஒரு பேக் ஸ்டோரி இருந்தா சொல்லுங்க. எனக்கும் எங்க அம்மா தான் என்னைப் பெத்தாங்களான்னு டவுட்டா இருக்கு” என்று சந்தேகிக்க, மைத்ரேயன் “உனக்கே இருக்குன்னா, எனக்கு இருக்காதா. நானும் என் வரலாறை செக் பண்ணனும்” என்றான் தீவிரமாக.

“டேய் செக் பண்ணவே வேணாம். உன் அப்பாவும் அம்மாவும் உன்னை ஆன்லைன்ல தான் ஆர்டர் பண்ணிருக்கணும்”

“அடியேய்!” என முறைத்த மைத்ரேயனை இம்முறை வெளிப்படையாக சைட் அடித்தாள்.

இருவருக்கும் நேர்ந்த ஊடலுக்குப் பின் அவன் நன்றாக பேசுவது இப்போது தானே. அவள் தன்னை பார்ப்பது புரிந்து வீம்பாக பார்வையைத் திருப்பிக்கொண்டவனுக்கோ, ‘மத்த நாள்ல எல்லாம் பார்க்கவே மாட்டாளுங்க. கோபமா இருக்கறப்ப தான் வம்படியா பார்த்து பார்த்து சைட் அடிக்கிறா…’ என வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

“சரி விடுங்க. இப்ப என்ன உங்களை சித்தின்னு கூப்பிட்டா பிரச்சினை இல்லை தான. அதான் அம்மான்னு கூப்பிட இன்னொருத்தனை வளர்த்துருக்கீங்களே…” நந்தேஷ் வேதனையை விழுங்கி கொண்டு கூற, “நந்து” என்று கேவினார் அஸ்வினி. மகனை உரிமையாய் தீண்ட கூட முடியாத இயலாமை வலித்தது.

சௌந்தருக்கு ஆற்றாமை தீரவே இல்லை. “ஏன் அஸ்வினி இப்படி செஞ்ச? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல?” எனக் கடிந்து கொண்டார்.

யுக்தாவோ “சொல்லிருந்தா என்ன செஞ்சுருப்பீங்க. இப்போ செய்ற மாதிரி கொலை செஞ்சுருப்பீங்களா?” என்றதும் அவர் ஆடிப்போனார். அஸ்வினியும் தான்.

“கொலையா?”

சௌந்தர் முகம் மாறி “இதைப் பத்தி அப்பறம் பேசிக்கலாம்…” என்றிட, “இதைப் பத்தியும் அப்பறம் பேசிக்கலாமா சித்தப்பா?” என இத்தனை கொலைகளுக்கும் உபயோகித்த விஷத்தை தனது கைப்பையில் இருந்து எடுத்துக்காட்ட, அவர் அதிர்ந்தே போனார்.

இறுகிப்போன முகத்துடன், “இது எப்படி உங்ககிட்ட கிடைச்சுச்சு?” எனக் கேட்க,

“டெல்லிக்கு வரும்போது பாய்சனை பாலித்தீன் பேக்ல சுத்தி சூட்கேஸ்ல கொண்டு வந்ததை கண்டுபிடிக்க முடியாதா? ஏர்போர்ட்ல செக்கிங்க மீறி கொண்டு வந்துருக்கீங்க. தில்லு தான். அண்ட் அந்த மொபைல் நம்பர்… அதுல இருந்து தான என் ஸ்கூல் டேஸ்ல என்கூட பேசுவீங்க. உங்களோட வெரி பெர்சனல் நம்பர் அது. கண்டுபிடிக்கணும்னே அதே நம்பர்ல இருந்து கால் பண்ணிருக்கீங்கல்ல?” யுக்தா தொடர்ந்து கேள்வியில் அவரைத் திணறடிக்க, சௌந்தர் அசையவே இல்லை.

இதனை எதிர்பார்த்தார் தானே. அஸ்வினி பதறினார்.

“என்னங்க என்ன இது என்னென்னமோ பேசுறீங்க என்ன நடக்குது?” என்றதும் அவர் மடியில் முகத்தைப் புதைத்த சௌந்தர் குலுங்கி அழுதார்.

“என்னன்னமோ தான் நடந்துடுச்சே அஸ்வினி. நீயும் இல்லாம, என் பொண்ணும் கண்ணு முன்னாடி நடைபிணமா இருக்கறதை என்னால பார்க்க முடியல. ஆனா, நடந்ததை வச்சு இவங்க நாலு பேரும் கொலை செய்ய துணிஞ்சுதை தெரிஞ்சுக்கிட்டப்போ நான் நொறுங்கிட்டேன். என் பொண்ணுக்காக, என் பொண்டாட்டிக்காக நான் கொலை பண்ணலைன்னா நான் எல்லாம் என்ன புருஷன்.

அதான், என் பசங்க கொலை செய்ய பிளான் பண்ணுன எல்லாரையும் நான் கொன்னேன். என்ன மாதிரி கொலை செய்யணும்னு ரொம்ப ஆழமா விசாரிச்சு தேடி கடைசியா ஸ்லோ பாய்சன் பண்ற முடிவுக்கு வந்த ஏஞ்சலோட ஒவ்வொரு மூவ்மெண்ட்டையும் நான் வாட்ச் பண்ணுனேன். சில ஆள்களை வச்சு அவளோட டிவைஸை ஹேக் பண்ணுனேன். அவங்களோட தாட்டை அனலைஸ் பண்ணுனேன். ஆபிஸ் மூலமாவே ஒரு குரூப்பை கிரியேட் பண்ணி அவங்களை வச்சு அந்த ராஸ்கல்ஸை தேடுனதுல, அந்த க்ரூப்ல ஒரு ஆளை விலைக்கு வாங்கி, எனக்கும் தகவலை குடுக்க வச்சேன்.

என் பசங்க கொலைகாரங்களா மாறுறதுல எனக்கு விருப்பம் இல்ல. அதான், எல்லாரையும் கொன்னுட்டு நானே சரண்டர் ஆகலாம்னு இருந்தேன்” எனக் குமுறியவரைக் கண்டு விஸ்வயுகா கலங்கிப் போனாள்.

மற்றவர்களும் விழியில் நீர் நிறைய சௌந்தரைப் பார்க்க, விஸ்வயுகாவிற்கு சிவகாமியிடம் இருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது.

அஸ்வினிக்கு இன்னும் தனக்கு நடந்த எதுவும் முழுதாய் தெரியாது. தெரியவும் வேண்டாம் என்ற எண்ணத்தில் “சித்தப்பா… நீங்க சரண்டர் ஆனாலும் உங்களை ஜெயில்ல தள்ள நான் விட மாட்டேன். இந்த விஷயத்தை இதோட விடுங்க” என்றவள், யுக்தாவிடம் சித்திக்கு தெரியவேணாம் எனக் கண்ணாலேயே அஞ்சல் அனுப்பினாள்.

அவனுக்கும் அஸ்வினியை அதற்கு மேல் வறுத்த பிடித்தமில்லாததால், அத்துடன் பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டான்.

சிவகாமியை நாலு வார்த்தை நறுக்கென கேட்டால் தான் மனம் ஆறுமென்ற நிலையில் அவரது அழைப்பை ஏற்றபடி வெளியில் சென்றாள் விஸ்வயுகா.

அஸ்வினியோ, “அன்னைக்கு ஏஞ்சல்க்கு எதுவும் ஆகலை தான? என்னை கொன்னுட்டாங்கன்னு நீங்க கொலை பண்ணுனீங்களா? என இளையவர்களை பார்த்துக் கேட்டு விட்டு, கணவனின் புறம் திரும்பி “ஏன் இப்படி எல்லாம் வன்முறைல இறங்குறீங்க எல்லாரும். என்னங்க, நீங்க… நீங்க புழு பூச்சிக்கு கூட துரோகம் நினைக்க மாட்டீங்க தான. நீங்க கொலையெல்லாம்… என்னால நம்ப முடியாது. நீங்க கொலை பண்ணலைன்னு சொல்லுங்களேன்” என்று அவர் சட்டையைப் பிடித்து பதற,

சௌந்தரின் அமைதியான கண்ணீரே உண்மையை கூறியது.

அத்தியாயம் 93

“கடவுளே… என்னை ஏன் இப்படி சோதிக்கிற” என்று அரற்றிய அஸ்வினி, “ஏஞ்சல் ஏன் நடை பிணமா இருந்தா? எனக்குப் புரியல. என்னதான் நடந்துச்சு சொல்லுங்களேன்” என நெஞ்சம் அதிவேகத்தில் துடிக்க அனைவரையும் பார்த்துக் கேட்க,

“ஒன்னும் நடக்கலமா. நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க…” என்ற யுக்தா மற்றவர்களை வெளியில் வரக்கூற, “இல்ல எனக்கு தெரியணும். என்ன நடந்துச்சுன்னு சொல்லு யுக்தா உனக்கு தெரியுமா?” எனக் கேட்டதில் கருகிய மனதின் வார்த்தைகளை கொட்ட இயலாது தவித்தான்.

சௌந்தரும் எப்படியும் அவளுக்கு தெரிய வேண்டியது தானே என்ற எண்ணத்தில் நடந்தவற்றை உரைக்க, அஸ்வினி பித்து பிடித்தது போல அமர்ந்து விட்டார்.

அவரது நிலையில் பயந்து போன ஷைலேந்தரி, “சித்தி… இதெல்லாம் நடந்து வருஷக்கணக்கு ஆச்சு. அவள் நார்மல் ஆகிட்டா சித்தி. என்ன இன்னும் அத்தானை தான் சுத்தல்ல விடுறா. அவளுக்கு லவ் இருந்தாலும் ஒத்துக்க மாட்டேங்குறா” என்று அவரை ஆசுவாசப்படுத்த முயல, அவரோ நிலைகுலைந்திருந்தார்.

அவள் அந்த சம்பவத்திற்காகவா அவனை தவிர்க்கிறாள். தான் கூறிய ஒற்றை வார்த்தைக்காக தானே அவனிடம் இருந்து விலகி இருக்கிறாள் என்று நொடியில் புரிந்து கொண்டார். உள்ளம் உலைக்களமாகக் கொதித்தது.

யுக்தாவை மெல்ல நிமிர்ந்து பார்த்தவர், “நா… நான்… அன்னைக்கு அவ… அவ வந்துருக்கான்னு சொல்லிருந்தா அவளையும் நீ பார்த்து இருப்ப தான?” எனத் தேம்பலுடன் கேட்க,

“கண்டிப்பாமா. என் ஏஞ்சலை நான் எப்படி விட்டுருப்பேன்” உடனடியாக பதில் அளித்தவனின் காதலை இன்றும் உணர்ந்தார் அவர்.

அதுவே அவரை வெடிக்க வைத்தது. அதுவே அவரை சமநிலை தவற வைத்தது.

“ஐயோ ஐயோ ஐயோ என் பொண்ண நானே வார்த்தையால கொன்னுட்டேனே. அவள் வாழ்க்கையை நானே கெடுத்துட்டேனே…” எனத் தலையிலடித்துக்கொண்டு அரற்றியவரை யுக்தாவையும் குறிஞ்சியையும் தவிர அனைவருமே அமைதியாகப் பார்த்தனர். அவர்களுக்கு தான் விஸ்வயுகாவின் காதல் மனம் தெரியுமே.

யுக்தா அவசரமாக அஸ்வினியைத் தடுத்து, “ம்மா என்னம்மா இது… நீங்க என்ன வேணும்னேவா அப்படி சொல்லிருப்பீங்க…” என்று சமன்படுத்த,

“ஆமா யுகி… நான் வேணும்னு தான் அவள் வரலைன்னு உங்கிட்ட பொய் சொன்னேன். அவ உன்னை விரும்புனது எனக்குப் பிடிக்கல. பிடிக்கலைன்றதை விட, இந்தக் காதலால நான் இழந்ததை நீயும் இழக்கக் கூடாதுன்னு நினைச்சேன் யுகி. ஐயோ தப்பு பண்ணிட்டேனே” என்றவர் கண்ணீருடன் அவளது காதலைப் பற்றிய முழு விவரத்தையும் ஆடவனிடம் சமர்ப்பித்து விட, மெல்ல மெல்ல பாறையாகிப்போனான் அவன்.

கட்டிலில் இருந்து எப்போது தரையில் அமர்ந்தாரென்று அவருக்கே தெரியவில்லை. தரையில் முகத்தைப் புதைத்து மொத்த கண்ணீரையும் கரைத்துக் கொண்டிருந்தார். சௌந்தருக்கு என்னதான் வருத்தம் இருந்தாலும் காதல் மனைவி கதறுவதை பார்க்க இயலவில்லை.

“விடுமா. நம்ம பசங்க தான. புருஞ்சுப்பாங்க” என்று விட்டு நிமிர்ந்து யுக்தாவைப் பார்க்க, அவன் உணர்வற்று அவரை எரித்தான். அதில் அவர் தான் பார்வையைத் திருப்பிக்கொள்ள வேண்டியதாகப் போயிற்று.

“சாக்ரிஃபைஸ் பண்ணனும் பண்ண வேணாம்னு நீங்க ஏன் முடிவு பண்றீங்க? உங்க லைஃப்க்கு நீங்க அளவுக்கு அதிகமா சாக்ரிஃபைஸ் பண்ணுனது உங்க இயலாமை. அதையே அடுத்தவங்க லைஃப்லையும் அப்ளை பண்றது முட்டாள்தனம். சாக்ரிபைஸ் பண்றேன் பேர்வழின்னு காதல்ன்ற ஒரு வார்த்தையை வச்சுட்டு என்னோட சுய சந்தோஷத்தையும் என்னையே நம்பி இருக்குறவளோட சந்தோஷத்தையும் அழிக்க நான் நீங்களும் இல்ல. நீங்க சாக்ரிஃபைஸ் பண்றீங்கன்னு தெரிஞ்சும் பண்ணட்டும்னு கண்டுக்காம விட என் ஏஞ்சல் உங்க புருஷனும் இல்ல. இதுக்கு நீங்க என்னை சுனாமிலயே சாக விட்டிருக்கலாம்.”

கண்ணை மறைத்த கோபத்தில் எப்போதும் அவரிடம் நிதானத்தைக் கையாளும் யுக்தா சாகித்யன், வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

நெஞ்சில் எரியும் காதல் தீயின் வேகம் குறைய மறுத்தது. ஒருவகையில் இது ஒரு துரோகம் அல்லவா? தன்னிடம் ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தை தனது ஏஞ்சலின் காதலைப் பற்றி குறிப்பாக கூறி இருந்தால் கூட போதுமே! அவளை அள்ளித் தனது உள்ளங்கையில் பொத்திப் பாதுகாத்து இருப்பானே…

அவரோ யுக்தாவின் கூற்றில் திகைத்து இன்னும் அறை அதிர அழுக, எப்போதும் அவரது கண்ணீரைக் கண்டு பதறுபவன் இன்று கல்லாகி நின்றான். வேடிக்கை பார்த்தான் சலனமற்று.

“என்னை மன்னிச்சுடு யுகி… என்னை மன்னிச்சுடு” என்று அவன் காலைப் பிடிக்கப் போக, சட்டென விலகி விட்டவன்,

“வேணாம். ஏற்கனவே நிறைய பாவத்தை சுமந்துட்டு இருக்கேன். மேலும் மேலும் என்னைப் பாவியாக்கிடாதீங்க” கவனமாக ‘அம்மா’ என்ற வார்த்தையைத் தவிர்த்தவனை அடிபட்ட விழிகளுடன் ஏறிட்டார் அஸ்வினி.

“என்னமா?” சிவகாமியின் அழைப்பை ஏற்ற உடனே நாயாக குரைத்தாள் விஸ்வயுகா.

“இங்க பாரு விஸ்வா. உன் நல்லதுக்கு சொல்றேன். உன் அண்ணனைக் கூட்டிட்டு அங்க இருந்து கிளம்பு. இல்லன்னா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது…” என சிவகாமி மிரட்டினார்.

“அண்ணனா? அவன் என்ன என் கூட பிறந்தானா?” எனச் சுருக்கென கேட்க, சிவகாமிக்கு கண்ணை இருட்டியது. ஆக, உண்மை தெரிந்து விட்டது.

“தெரியாம தான் கேட்குறேன். உங்க ஸ்டேட்டஸ்க்கு தகுதி இல்லைன்னு தான சித்தியை ரிஜக்ட் பண்ணுனீங்க. அதே தகுதியில்லாதவங்க குழந்தையை அபகரிச்சுக்கிறதுல மட்டும் உங்க ஸ்டேட்டஸ் பாதிக்கப்படலயா? அது சரி… என்னையும் நீங்க தான் பெத்தீங்களா… இல்ல இன்னொரு பொண்ணோட சாபத்தை வாங்கி, என் ஒரிஜினல் பேரண்ட்ஸ்கிட்ட இருந்து பிரிச்சு தூக்கிட்டு வந்தீங்களா? நம்ப முடியாது உங்களை…” விஸ்வயுகா ஆக்ரோஷமாகக் கேள்வி கேட்டதில்,

“இன்னும் என் வயித்துல தழும்பு இருக்கு. செக் பண்ணிக்க” என்றார் சிவகாமி.

“ஹூ நோஸ், நம்ப வைக்க உங்க வயித்தை நீங்களே கிழிச்சு இருப்பீங்களா இருக்கும். செய்யக்கூடிய ஆளு தான.”

“தேவையில்லாம பேசாத விஸ்வா. எனக்கு நீயும் என் பையனும் வேணும்” அவர் அழுத்தமாகக் கூற,

“என்ன புதுசா… என்னை எங்க வேணாலும் போய் சாகுன்னு இந்த வாய் தான சொல்லுச்சு. உங்களை பொறுத்தவரை நான் அசிங்கம்பிடிச்சவ. உங்களுக்கு பொண்ணா இருக்க எனக்குப் பிடிக்கல. சோ, நீங்களும் என்னை இனி பொண்ணா பார்க்க வேணாம். உங்க பையனை முடிஞ்சா உங்க பையனா மறுபடியும் சேர்த்துக்க பாருங்க… முடிஞ்சா” என மீண்டும் ஏளனத்துடன் உரைத்து விட்டு போனை வைத்தவளுக்கு ஆத்திரமும் அழுகையும் ஒரு சேர எழுந்தது.

மூச்சை இழுத்து விட்டு தன்னை அடக்கும்போதே அஸ்வினியின் அழுகுரல் கேட்பது போல இருக்க, வேகமாக அறைக்குச் சென்றவள் அஸ்வினி கண்ணீரில் கரைந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து விட்டாள்.

“சித்தி… என்ன ஆச்சு? ஏன் இப்படி அழுதுட்டு இருக்கீங்க?” எனப் பதறி கேட்க, அவரோ யுக்தாவின் உதாசீனத்தில் உடைந்து போனார்.

“என்னை மன்னிச்சுடு ஏஞ்சல்…” அவளிடமும் மன்னிப்பு வேண்டியவரை குழப்பத்துடன் பார்த்தாள்.

“என்கிட்ட எதுக்கு மன்னிப்பு கேட்குறீங்க. நியாயமா நீங்க தான் சொந்த அம்மான்னு மறைச்சதுக்கு நந்துகிட்ட தான மன்னிப்பு கேட்கணும்?”

நந்துவோ, “இரு அவங்க வளைச்சு வளைச்சு வந்து மன்னிப்பு கேட்பாங்களா இருக்கும்” என்றதில், “ப்ச் டேய் ஏன்டா…” என அதட்டினாள்.

பின் மைத்ரேயன் “அவங்ககிட்ட உண்மையை சொல்லிட்டோம், அதான்…” என்றதும், “லூசாடா நீங்க. சொல்லாதீங்கன்னு சொன்னேன்ல” என்று யுக்தாவை நிமிர்ந்து முறைப்பாகப் பார்க்க, அவனது கூர் பார்வை பாவையைச் சுட்டது.

நொடிக்கு மேலாக அவன் கண்களைக் காண எதுவோ தடுக்க, சட்டென விழிகளைத் திருப்பிக் கொண்டவள், “சித்தி ப்ளீஸ்” என அவரை அமைதியாக்க முயன்றாள்.

“நான் ஒரு பைத்தியக்காரி ஏஞ்சல். அந்த நேரத்துல நீயும் யுக்தாவும் விரும்புறது சிவகாமிக்கு தெரிஞ்சா, அவங்க நிச்சயமா யுக்தாவைக் கொன்னுடுவாங்கன்னு நினைச்சேன். அதும் அவன் என் சொந்தம்னு சந்தேகம் வந்தாலே அவனை என்ன வேணாலும் செய்வாங்க. நந்துவும் அவங்க கண்ட்ரோல்ல தான் இருக்கான். இதை எல்லாம் உனக்குப் புரிய வைக்க எனக்கு தெரியல. அதான் நீ யுக்தா மேல இருக்குற காதலை சொன்னப்ப, அப்படி பேசிட்டேன். சாரி ஏஞ்சல்!” என்று அவள் கையைப் பிடித்து கதறியவரை செய்வதறியாமல் கண் கலங்கி பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்குத் தெரியும் சித்தி. நீங்க காரணம் இல்லாம சொல்ல மாட்டீங்கன்னு. ஆனா ஒருவகைல நீங்க சொன்னது ஏத்துக்குற வகைல தான இருந்துச்சு. எனக்காக யாரும் எதுக்காகவும் சாக்ரிஃபைஸ் பண்ண தேவை இல்ல” அழுத்தம் திருத்தமாகக் கூறிய பெண்ணவளை அதிர்வுடன் பார்த்தார் அஸ்வினி. தன்னை எந்த செருப்பால் அடிப்பதென்றே அவருக்குப் புரியவில்லை பாவம்.

பட்டாம்பூச்சியாய் துள்ளித் திரிந்தவளின் சிறகை ஒடித்தது தனது மடத்தனம் என்று புரிந்தது. அப்போதே நேரடியாக விமான நிலையத்திற்கு செல்லலாம் என்றே விஸ்வயுகா அழைத்தாள். அவர் தான் சிவகாமிக்குத் தெரிந்தவர்கள் இருப்பதாக கூறி பயத்தில் ஆள் அரவமற்ற இடத்தில் காரை நிறுத்தி இருந்தார். அனைத்தும் கண்முன் வந்து அவரை குற்ற உணர்வில் ஆழ்த்திச் சென்றது.

யுக்தா சாகித்யன், விஸ்வயுகாவின் கையை இறுக்கமாகப் பற்றி வெளியில் தரதரவென இழுத்துச் சென்றான்.

“̇டேய் என்ன செய்ற. விடு கையை…” அவளின் மறுப்பை காதில் வாங்காதவன், மருத்துவமனை வாசலில் சிறு பூச்செடிகளுக்கு அருகில் நிறுத்தி, அவள் கண்களை ஆழப்பார்த்தான்.

தனது காதல் வெளிப்பட்டதில் அவளுக்கும் படபடப்பு தான்.

“சோ நீயும் என்னைக் காதலிச்சு இருக்க. என்னைப் பார்க்க தான் அன்னைக்கு வந்த அப்படி தான?” கேட்கும் போதே அவன் குரல் பிசிறடித்தது.

கீழுதட்டைக் கடித்து அவள் மௌனத்தில் புதைந்தாள். “என்னைப் பாருடி!” அவளது இரு கன்னத்தையும் பற்றி நிமிர்த்திட அவளோ நிமிரவே இல்லை.

“நான் ஏற்கனவே சொன்னது தான். என்னை விட்டுப் போய்டு” இம்முறை அந்த வார்த்தைகளில் பொதிந்திருந்த வலியை முழுதாய் உணர்ந்தான்.

காதலில்லை என்றபோதே அவளை விடும் எண்ணம் இல்லை. இப்போதோ தனக்கு ஈடாக அவளும் தன் மீது காதலில் கரைந்திருப்பது புரிந்தும் அவளை விட்டுச் சென்று விடுவானா?

“நான் போய்டவா?”

யுக்தாவின் கேள்வியில் அவள் நிமிரவே இல்லை.

“சொல்லுடி. போய்டவா?”

இம்முறை ஆதங்கத்துடன் வெளிவந்த ஆடவனது குரலுக்கும் பதிலில்லை அவளிடம்.

“என்னைக் காதலிச்சதை ஒத்துக்க கூட அவ்ளோ கசப்பா இருக்கோ. இல்ல நானே கசந்துட்டேனா?” திடமாய் வெளிவந்த வார்த்தைகளினுள் ஊடுருவிய வலி உணர்வு அவளுக்குள்ளும் துழாவியது.

கீழுதட்டை அழுந்தக் கடித்த விஸ்வயுகா, “காதலிச்சேன்னு நீயே பாஸ்ட் டென்ஸ்ல சொல்லிட்டியே. எஸ் கடந்தது கடந்த காலமா போய்ட்டா நல்லது” மெல்ல வாயைத் திறந்து கூறினாள்.

“யாருக்கு நல்லது? உனக்கா… எனக்கா? யாருக்குடி நல்லது. உனக்கும் சாகுற வலியை கொடுத்துக்கிட்டு எனக்கும் ஏன்டி ஸ்லோ பாய்சன் தர்ற. இதுக்கு நீ கொல்ல யூஸ் பண்ணுன பாய்சனை குடுத்துடு. உன் நினைப்புல மெல்ல மெல்ல சாகுறதுக்கு அது எவ்ளோவோ மேல்” என கோபத்தில் காய்ந்திட, அவள் சட்டென நிமிர்ந்தாள். விழிகளில் நீர்த்திரையிட்டது.

அவ்வளவு தான். அத்தனை நேரமும் கரத்திற்கு கட்டுப்பாடு விதித்திருந்தவன், அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து அவள் இடையைச் சுற்றி இறுக அணைத்திருந்தான்.

“விடு யுக்தா…” அவள் விலக முற்பட,

அவளைச் சுவருடன் ஒன்றை வைத்தவன், “இன்னும் எவ்ளோ நாள்டி நடிப்ப? நீ என்னைக் காதலிக்கலைன்னு தெரியும்போதே உன்னை விட நான் தயாரா இல்லை. இப்ப இவ்ளோவும் தெரிஞ்சப்பறம் உன்னை விட்டுப் போவேன்னு கனவு கூட காணாத. நீ வேணும்டி. முழுசா என் பக்கத்துல நீ எனக்கு வேணும். நீயா தருவியா. இல்ல உரிமையை நானே எடுத்துக்கட்டுமா?” என்றவனின் கண்கள் காட்டிய தீவிரத்தில் திகைத்தாள்.

“உன்னைக் காதலிச்சேன் சரிதான். அதே உணர்வு இப்பவும் இருக்கணும்னு அவசியம் இல்ல யுக்தா… எல்லாமே ஒரு கட்டத்துல மாறிடுதுல! இந்தக் காதலும் எனக்கு மாறிடுச்சு. உனக்கும் மாறிடும்” திணக்கமாகப் பதில் கூறியவளை சலனமின்றி பார்த்தான்.

“சோ உனக்கு மாறிடுச்சு.”

“எஸ்”

“உனக்கு என் மேல எந்த ஃபீலும் இல்ல.”

“இல்ல”

“எனக்கு என்ன ஆனாலும் உனக்கு கவலை இல்லை…”

சில நொடி இடைவெளிக்குப் பிறகு, “இல்ல” என்றாள்.

“இல்ல?” கண்ணைச் சுருக்கி யுக்தா கேட்க,

“இல்ல” என்றாள் மீண்டும் மீண்டும்.

“ரைட்!” என்றவன் வேக நடையுடன் அவனது காருக்குச் சென்றான். ஒரு நிமிடம் நின்று விட்டு அவனது செயல் புரியாமல் அவளும் அவன் பின்னே செல்ல, விஸ்வயுகாவிடம் இருந்து பறிமுதல் செய்த ஸ்லோ பாய்சனை டேஷ் போர்டில் இருந்து எடுத்தான். டெல்லி ஆய்வகத்தில் அதனை ஒப்படைத்து அதற்கு மாற்று மருந்து கண்டறிவதற்காக அதையும் எடுத்து வந்திருந்தான்.

ஐஸ் பாக்சில் வைக்கப்பட்டிருந்த விஷத்தை வெளியில் எடுத்ததில் சற்றே திகைத்தவள், “அதை ஏன் எடுக்குற?” எனக் கேட்டாள் சின்னப் பதற்றத்துடன். விஷத்தைக் காட்டி தன்னை மிரட்ட மாட்டான் என்ற சிறு நம்பிக்கை இருந்தது.

“எனக்கு என்ன ஆனாலும் உனக்கு கவலை இல்லை தான?” கண்ணைச் சுருக்கி மீண்டும் ஒரு முறை கேட்டதில், எச்சிலை விழுங்கியவள் “என்ன செய்யப்போற?” என்றாள் திகிலாக.

“கேட்டதுக்கு பதில்!”

தலையைப் பலவீனமாக ஆட்டி, “இ… இல்ல” என்றதும் தான் தாமதம் அந்த விஷத்தை அப்படியே குடித்து விட்டான் யுக்தா சாகித்யன்.

மோகம் வலுக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
22
+1
168
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்