அத்தியாயம் 9
அதன் பிறகான நிகழ்வுகள் அனைத்தும் வேகமாக நடந்தேறியது.
கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்த மைதிலிக்கு இன்னும் படபடப்பு அடங்கவே இல்லை. சிலிர்த்த ரோமங்கள் அமைதி பெறவில்லை. அவளுக்கென ஒரு தனி உலகத்தில் கற்பனையில் மிதந்து கொண்டிருந்தாள். அங்கு ரகு மட்டுமே அவள் மனதில் அரசனாக வீற்றிருந்தான்.
“மாப்பிள்ளை உன்னைப் பார்க்க கோவிலுக்கு வந்ததா சொன்னாங்க. பார்த்து பேசுனியா மைதிலி” என்று மல்லிகா கேட்க, வெட்க சிரிப்புடன் தலையைக் குனிந்தபடி தலையாட்டினாள்.
ரியா தான், “அட இவளுக்கு வெட்கத்தைப் பாருங்க அத்தை. ஹே உன் பிரின்ஸ் கிடைச்சுட்டாரா?” என்று ஆர்வத்துடன் கேட்டவளிடம், “போங்க அண்ணி…” என்று முகத்தை மூடிக்கொண்டு அறைக்குச் சென்று விட்டாள்.
“என்ன பிரின்ஸ்?” என்று ரவி புரியாமல் கேட்க, “இதெல்லாம் லேடீஸ் டாக்” என்று கமுக்கமாக சிரித்தாள் ரியா.
அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தவன், தந்தையிடம் திரும்பி “அப்பா அவரு ஆர்மில இருக்காருன்னு சொல்றீங்க. பாவம் மைதிலி அவர் கிளம்புனதும் எப்படி தனியா இருப்பா” என்று சுணக்கத்துடன் கேட்க,
“பையன் நல்ல டைப்பா இருக்கான். விட எனக்கு மனசு இல்ல ரவி. அவள் சின்னப்பொண்ணு நிதர்சனம் தெரியாம பேசுறா, அப்பறம் புருஞ்சுப்பா. ரகு பேசிக்கிறதா சொல்லிருக்கான். நீங்க யாரும் அவளை குழப்பாதீங்க. நானும் அவள்கிட்ட பேசுறேன்” என்றதும், மற்றவர்கள் இயல்பாகினர்.
மைதிலிக்கு ரகுவைப் பிடித்து இருப்பதே அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எப்படியும் ரகு அவளிடம் பேசி இருப்பான் தானே! இது தான் அவர்களது எண்ணமாகவும் இருந்தது.
—-
“அடேய் நீ அவள்கிட்ட ரொமான்ஸ் பண்ணவாடா போன. நீ ஆர்மில இருக்கறதை சொன்னியா இல்லையா?” மரத்தடி இலையை பிய்த்து போட்டபடி இன்னும் காதல் மயக்கம் தீராமல் இருந்த நண்பனைப் பார்த்துக் கேட்டான் சஞ்சீவ்.
“சொல்லிக்கலாம்டா” என அசட்டையாகக் கூறியவன், “மச்சி அவள் நம்பர் வேணும்டா. சதாசிவம் அங்கிள் கிட்ட எப்படி கேக்குறதுன்னு தெரியல…” என்று பின்னந்தலையை கோதினான்.
“நான் என்ன பேசுறேன் நீ என்ன பேசிட்டு இருக்க? அந்தப் பொண்ணு கல்கத்தால இருக்குற மாதிரி மாப்பிள்ளைக் கேட்டதா தான அந்த அங்கிள் சொன்னாரு.
‘நீ ஆர்மில இருக்கறதை சொல்ல வேணாம். சொன்னா ஒத்துக்கமாட்டா. பார்த்து பேசி பிடிச்சதுக்கு அப்பறம் சொல்லுங்க’ன்னு சொன்னாருல்ல. இப்போ அவளுக்கும் உன்னை பிடிச்சுருக்கு. நீ விஷயத்தை சொல்லாம இங்க வந்து மலைப்பாம்பு மாதிரி நெளிஞ்சுட்டு இருக்க” என்று ரகுவைக் கண்டித்தான்.
“அட நீ ஏண்டா பூமர் அங்கிள் மாதிரி கத்திட்டு இருக்க. சொல்லிக்கிறேன்டா. மொதல்ல அவள் நம்பர் வாங்குறதுக்கு ஐடியா குடு” என்றான் நகத்தைக் கடித்தபடி.
“ம்ம்ம்ம் போய் அவளை நேர்ல பார்த்தே வாங்கிக்க. என்னமோ பண்ணு” என்று முறைப்புடன் அவன் கிளம்பி விட, ரகுவீரும் அன்றைய இரவை நெட்டித்தள்ளிவிட்டு மறுநாள் காலையில் நேராக அவளது வீட்டிற்குச் சென்று விட்டான்.
ரியா அவசரமாக மைதிலியின் அறைக்கு ஓடி வந்து, “ஏய் மைதிலி உன் ஆளு வந்திருக்காருடி. நேத்து தான கோவில்ல பார்த்தீங்க. அதுக்குள்ளே சாருக்கு உன்னைப் பார்க்கணுமாமே” என்று கிண்டல் செய்ய, மைதிலியின் மேனியெங்கும் சிவப்பு நிறங்கள்.
“நிஜமாவே வந்துருக்காரா அண்ணி?” என ஆசையுடன் கேட்க, “ஆமாடி. முகத்தைக் கழுவிட்டு வா வேகமா. மாமா கூப்புடுறாங்க” என்று வெளியில் சென்றதில், அவசரமாக நைட்டியில் இருந்து சல்வாருக்கு மாறியவள், முகத்தைக் கழுவி பௌடர் அடித்துக் கொண்டு கால்கள் நடுங்க வரவேற்பறைக்குச் சென்றாள்.
அங்கு ரகு இயல்பாக சதாசிவத்திடம் பேசிக்கொண்டிருக்க, அவனை ஓரக்கண்ணில் நிரப்பியபடி ரியா கொடுத்த காபி தட்டை அவன் முன் நீட்டினாள்.
அவளைக் கண்டதுமே வாயில் வந்த வார்த்தைகளெல்லாம் ரிவர்ஸ் கியர் எடுத்து தொண்டைக்குள் செல்ல, அவளை ரசித்தபடியே காபியை எடுத்துக்கொண்டவன், “எனக்கு மைதிலி நம்பர் வேணும்” என்று அனைவரின் முன்னும் கேட்டிருந்தான்.
‘அய்யோ சித்தப்பா திட்டப்போறாரு’ என்று பதற்றப்பட்டவளை ஆச்சர்யப்படுத்தும் விதமாக, “உங்க நம்பர் என்கிட்ட இருக்குல்ல தம்பி. நான் மைதிலியைப் பேச சொல்றேன்…” என்றதில், இருவரின் இமைகளும் குஷியில் துள்ளியது.
அவனது பார்வை அவளையே வருடிக் கொண்டிருந்ததில், மைதிலிக்கு கையெல்லாம் நடுங்க, நாணம் கொண்டு அறைக்குள் புகுந்து கொண்டாள்.
அதில் தலையாட்டி சிரித்துக் கொண்டவன், “சரிங்க அங்கிள், அப்போ நீங்க நாள் பார்த்துட்டு சொல்லுங்க. எனக்கு லீவ் ஒரு மாசம் தான் இருக்கு…” என்று இழுத்திட,
“எங்க சைட் யாரையும் கூப்பிடல தம்பி. சிம்பிளா கோவில்ல கல்யாணத்தை வச்சுக்கலாம். உங்க மோனி அங்கிளும் என்கிட்ட பேசுனாங்க. அவங்க இப்ப பொண்ணுக்கு குழந்தை பிறந்து இருக்கறதுனால கனடால இருக்காங்களாம். வர முடியாதுன்னாலும் தள்ளிப்போடாம நல்ல காரியத்தை நடத்த சொன்னாங்க” என்றார்.
“ஆமா அங்கிள் நானும் பேசுனேன். சோ, என் சைட் யாரும் இல்ல அங்கிள். என் பிரெண்டு மட்டும் தான் வருவான்” என்றதும், “சரி தம்பி அப்ப நான் ஐயரைக் கேட்டு நாளைக் குறிச்சுட்டு உங்களுக்கு போன் பண்றேன்” என்றிட, “ஓகே அங்கிள்” என்று எழுந்து கொண்டவன் மைதிலியின் அறை இருந்த திசையையே பார்த்தான்.
பின் அவள் வருவதாக இல்லையென்றதும் விடைபெற்றவனுக்கு, சதாசிவம் தனது எண்ணை அவளிடம் கொடுப்பாரா என்று யோசனையாக இருந்தது.
மதியத்திற்கு மேலே சதாசிவம் ரகுவின் எண்ணிற்கு அழைத்திருந்தார்.
“இன்னும் பத்து நாள்ல முகூர்த்த நாள் இருக்காம் தம்பி. அன்னைக்கே கல்யாணத்தை வச்சுக்கலாமா?” எனக் கேட்டதில், ‘பத்து நாள் வெய்ட் பண்ணனுமா?’ என்று சுணங்கினான்.
அதற்கு பக்கத்தில் முகூர்த்த தேதி குறிக்க சொல்ல சங்கடப்பட்டுக்கொண்டு, “ஓகே தான் அங்கிள்…” என்று போனை வைத்தவனுக்கு சதாசிவமே மைதிலியின் எண்ணை அனுப்பி இருந்தார்.
“வாவ்…” எனக் குதூகலித்தவன், மைதிலியின் எண்ணிற்கு அழைக்க, கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தவளோ அடுத்த பத்து நாட்களில் ஒரு புது வாழ்வினுள் புகுந்து, தனக்கே தனக்காக ஒருவன் வாழ்நாள் முழுதும் இருக்கப்போகிறான் என்ற மகிழ்வில் சுற்றம் மறந்திருந்தாள்.
அந்நேரம் புது எண்ணிலிருந்து அழைப்பு வந்ததில், “ஹலோ மைதிலி ஹியர்…” என்று கம்பீரத்துடன் கேட்க,
“ப்பா… உனக்கு திக்கி திணறி தான் பேசத் தெரியும்னு நினைச்சேன். இவ்ளோ போல்ட் வாய்சா உனக்கு. நீ வக்கீல் தான்னு இப்ப தான் எனக்கு நம்பிக்கையே வருது…” என படபட பட்டாசாய் அவளைக் கேலி செய்தான் ரகுவீர்.
அது ரகுவின் குரல் என்று உணர்ந்த நொடியே அவளுக்கு குரலில் வலுவிழந்து போனது.
“நீ… நீங்க உங்களுக்கு எப்படி என் நம்பர் தெரியும்…” என்று தடுமாற,
“என்கிட்ட மட்டும் ஏன் இவ்ளோ திக்கல் மைதிலி” என்றான் குறும்பாக.
“தெரியலையே…” எனப் பாவமாக கூறியதில், வாய் விட்டு சிரித்தவன் பின் அவளுடன் பேசினான், பேசினான். இரவு வரையிலும் போனை வைக்காமல் பேசிக்கொண்டே இருந்தான். அவளும் கல்லூரியை கட் செய்து விட்டு, அவனுடன் அலைபேசியில் மூழ்கிப் போனாள்.
இருவருக்கும் பிடித்தது பிடிக்காதது என அனைத்தும் பகிர்ந்து கொண்டனர்.
மைதிலியும் கூச்சத்தை விட்டு அவனுடன் கேலி செய்து பேசத் தொடங்கி விட்டாள்.
அதன் பின் திருமணம் வரையிலும் அலைபேசியிலேயே காதலை வளர்த்துக் கொண்டனர் இரு உள்ளங்களும்.
இதில் ஒரு முறை கூட அவன் என்ன வேலை செய்கிறான் என மைதிலி கேட்கவே இல்லை. அரசாங்க வேலை என சதாசிவம் சொல்லி விட்டதால், அதை பற்றி அவள் கண்டுகொள்ளவில்லை. அவனது கம்பீர குரலும் சில்மிஷப் பேச்சும் அவளை எதையும் யோசிக்க விடவே இல்லை.
பத்து நாள் பொழுதில் இருவருமே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டனர். மைதிலியும் அவளது குடும்பப் பின்னணியை உரைத்திருக்க, “பழசை எல்லாம் விட்டுடுடா. இனி நான் இருக்கேன்ல. ஜஸ்ட் காம் டவுன்” என்ற வார்த்தைகளில் உருகிப் போனாள்.
அவளுக்கே அவளுக்காக ஒருவன். அவளுக்காக மட்டும் அவன். எத்தனை ஒரு இனிமையான தருணம் இது. அவனுடன் வாழ்நாள் முழுதும், இதே இனிமையுடன் பயணிக்க வேண்டுமென அவசர மனு ஒன்றை போட்டுக்கொண்டாள், அது அந்த கணமே நிராகரிப்பட்டது தெரியாமல்.
முகூர்த்தப் புடவையில் இருந்து, நகைகள் வரை அனைத்துமே ரகுவே செய்வதாக அடம்பிடித்தான்.
அவளுக்குப் பிடித்த நிறத்தில், அவளுக்குப் பிடித்தவாறே ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுத்தான். அதில் அவளுக்கும் ஏக பெருமை. ரியா தான், “உன் ஆளு சிண்ட்ரல்லா பிரின்ஸை எல்லாம் மிஞ்சிடுவாரு போலயே மைதிலி” என்று கேலி செய்வாள்.
“ச்சு கண்ணு வைக்காதீங்க அண்ணி. முதல்ல அவருக்கு சுத்திப் போடணும்” என்று ரியாவின் முறைப்பை பரிசாக வாங்கி கொள்வாள்.
நகை வாங்குவதற்கும் அவளையே அழைத்துச் சென்றவன், “இந்த நெக்லஸ் உனக்கு அழகா இருக்கும் மைதிலி” என்று அவள் கழுத்தில் வைத்துக் காட்ட, “ஆல்ரெடி ஒரு நெக்லஸ் இருக்கு ரகு. எதுக்கு இத்தனை. தினமும் இதெல்லாம் போட்டுட்டா இருக்கப் போறேன்” என்று அவள் சிரிப்புடன் கூற,
“தினமும் எனக்கு ஒன்னொன்னு போட்டுக்காட்டு. நானும் ரசிப்பேன்ல…” என்றான் கிசுகிசுப்புடன்.
“ஓஹோ நீங்க ரசிக்கிறதுக்காக நான் தினமும் தங்க நகையை போட்டுக்கிட்டு நகைக்கடை விளம்பரம் மாதிரி வரணுமாக்கும்” இடுப்பில் கை வைத்து மைதிலி கேட்டதில், “ஹா ஹா… எதுவும் போடாம இருந்தாலும் எனக்கு ஓகே தான்…” என்று கண் சிமிட்டி அவளை சீண்டியதில், குப்பென சிவந்து விட்டாள்.
“ச்சீ… கடைல நின்னுட்டு என்ன பேசுறீங்க. போங்க ரகு” என்று சிணுங்கியவள் வெட்கம் மறைக்க மறுபுறம் திரும்பிக் கொண்டாள். அவளது ஒவ்வொரு சிணுங்களையும் ரசித்து ருசித்தான் ரகுவீர்.
இதோ அதோவென அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த திருமண நாளும் விடிய, கண்கள் நிறைய கனவுகள் வழிய ரகுவீரின் மனைவியானாள் மைதிலி.
“வாழ்த்துகள் மச்சான்…” என்று சஞ்சீவ் நண்பனை கட்டி அணைக்க, “தங்கச்சி என் நண்பனை கண்கலங்காம பார்த்துக்க…” என்றான் மைதிலியிடம்.
சட்டென அவளுக்கு மகேஷின் நினைவு கலங்க வைத்தது. திருமணத்தைப் பற்றி அவனிடம் சொல்லக்கூடாதென்று முரண்டு பிடித்தது அவள் தான். ஆனாலும், ஒரு மனம் தமையனின் அன்புக்காக ஏங்கி கொண்டிருந்தது. மறுகணமே தலையை உலுக்கியவள், ‘அவன் என் அன்புக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாதவன்’ என்று கோபத்தை நிரப்பிக்கொண்டாள்.
“என்னமா ஆச்சு?” கலங்கி நின்ற மைதிலியின் கண்களை பார்த்து சஞ்சீவ் குழப்பமாகக் கேட்க,
“சாரிண்ணா… எனக்கு என் அண்ணா ஞாபகம் வந்துடுச்சு” என்று மெல்ல முறுவலிக்க,
“நானும் உனக்கு அண்ணன் தான். இவன் உன்னை ஏதாவது சொன்னா, என்கிட்ட சொல்லு. இவன கண்டிச்சு வைக்கிறேன்” என உரிமையாய் பேச, ரகுவீர் சஞ்சீவை முறைத்தான்.
மைதிலிக்கு சஞ்சீவின் உரிமைப்பேச்சில் மனம் கனிய, “கண்டிப்பா சொல்றேண்ணா” என்றதும் அவளையும் முறைத்தான் செல்லமாக.
இருவரும் தங்குவதற்கு தனி அபார்ட்மெண்ட்டை ஏற்கனவே வாடகைக்குப் பிடித்திருந்தான். மைதிலி வீட்டினர், மணமக்களை அந்த அபார்ட்மென்ட்டில் விட்டு விட்டு, இரவு வரை இருந்தவர்கள், முதலிரவிற்கு ஏற்பாடு செய்து விட்டு விடைபெற்றனர்.
மைதிலிக்கு நேரம் செல்ல செல்ல உடலெல்லாம் உதறத் தொடங்கியது. கணவனின் பார்வை வேறு அவளை உரிமையாகத் தொட்டு மீள, கையில் பால் க்ளாஸுடன் அறைக்குள் நுழைந்தாள்.
ஒரு பெட்ரூம் கொண்ட சிறு அபார்ட்மெண்ட் தான். அவர்கள் இருவருக்கும் அதுவே பெரியதாக தான் இருந்தது.
மைதிலிக்கு அந்த சிறு வீடு மிகவும் பிடித்திருந்தாலும், இப்போது எதையும் பார்க்கும் நிலையில் அவள் இல்லை.
எண்ணம் முழுக்க ரகு மட்டுமே இருக்க, கணவனான அவனது செல்லத் தீண்டல்களில் கரைந்து போனாள்.
அவளை மடியில் அமர வைத்துக்கொண்ட ரகு, “இன்னைக்கு முகூர்த்தப் புடவையில் எவ்ளோ அழகா இருந்த தெரியுமா மைத்தி” என்றான் ஒற்றை விரலால் அவள் கன்னத்தில் கோடிழுத்தபடி.
“பார்க்குற உங்களுக்குத்தான் தெரியும் எனக்கு எப்படி தெரியும்” நடுக்கத்தை உள்ளுக்குள் மறைத்தபடி குறும்பாய் கூறினாள்.
அவனது விரல்கள் இப்போது மைதிலியின் இடையினை சோதிக்கத் தொடங்க, மெல்ல கிறங்கி கொண்டிருந்தாள்.
“அப்போ முழு அழகையும் பார்த்து கமெண்ட் சொல்லட்டுமா மைத்தி…” அதரங்களை அவள் கன்னத்தோடு இழைத்தவன், துடித்துக்கொண்டிருந்த பாவையின் இதழை சிறை பிடித்து விடுதலை செய்தான்.
கண்ணை மூடி ஆண்மகனின் தீண்டலில் இலயித்துப் போனவளுக்கு, இனி பேச்சு வர சாத்தியமில்லை எனப் புரிய, சில்மிஷப் புன்னகை வீசியவன், அவளது மொத்த அழகையும் ஆளத் தொடங்கினான்.
வசந்த காலங்களையெல்லாம் வாழ்வில் பார்த்திராதவளுக்கு, அடுத்து வந்த நாட்களெல்லாம் அத்தனை தித்திப்பாக நகர்ந்தது.
அவளது ராஜாவாக அவனும், அவனது ராணியாக அவளும்… ஒருவரை ஒருவர் அத்தனை நேசித்தனர்.
கல்லூரிக்குச் செல்ல வேண்டுமென்ற நினைவு கூட அவளுக்கு இல்லை. அவன் வேலைக்குச் செல்லும் போது தானும் கல்லூரிக்கு சென்று கொள்ளலாம் என்ற அசட்டுத்தனத்தில் அவனுடன் மட்டுமே ஒவ்வொரு வினாடியையும் செலவழித்தாள்.
ரகுவிற்கோ புது மனைவியின் மீதிருந்த மோகம் சிறிதும் குறையவில்லை. அவளை சீண்டி சிவக்க வைத்து, ரசிப்பதையே தனது முழு நாள் வேலையாக கொண்டிருந்தான்.
அவளை உள்ளங்கையில் தங்கினான். சதாசிவம் வீட்டிற்கு விருந்திற்குச் சென்ற போதும், மனையாளின் விருப்பம் அறிந்து அவளை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டான்.
அவர்களின் இணக்கத்தைப் பார்த்து அனைவருமே மகிழ்ந்தனர்.
மல்லிகா இருவரையும் உட்கார வைத்து சுற்றி போட்டார்.”எங்க கண்ணே பட்டுடும் போல!” என்று.
உண்மையில் இந்த உலகத்தில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகமே வந்து விட்டது மைதிலிக்கு.
கற்பனையில் சிறகடித்த வாழ்வு இப்போது நிஜமாகி கண் முன் வீற்றிருந்ததில் மைதிலியின் வாழ்வே இன்பமயமாகி விட்டது.
அடுக்களையில் ரகுவிற்குப் பிடித்த ரவா உப்புமாவைக் கிளறிக் கொண்டிருந்தாள் மைதிலி.
அவளைப் பின்னிருந்து அணைத்தவன், கழுத்தினுள் முகம் புதைத்திட, அப்போது தான் குளித்ததன் அடையாளமாக, நுனி கேசத்தில் இருந்து சொட்டு சொட்டாக நீர் சிந்தியது.
அவள் தோள்களிலும் அந்த குளிர்ந்த நீர் பட்டதில் சிலிர்த்திட, அவனிடம் வந்த சோப்பின் மணத்தை ஆழ்ந்து சுவாசித்தாள்.
“ஹெலோ சார்… குளிச்சுட்டு தலையை துவட்டாம கிட்சன்ல வந்து நின்னா எப்படி வேலை பாக்குறதாம்…” என அணைப்பை ரசித்தபடி மைதிலி கேட்க,
“துவட்டி விடு தங்கம்ஸ்!” என்றான் கொஞ்சலாக.
“இப்ப தான் வெங்காயம் நறுக்கினேன் ரகு. இருங்க வந்துடுறேன்” என்றிட,
“அதுவரை ஈரத்தோட இருக்க முடியாது மைத்தி…” என்றவன் அவளது முதுகில் தலையை தேய்த்து துடைத்துக்கொள்ள, மைதிலிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
“ரகு… இப்ப தான் குளிச்சேன். ஒழுங்கா போங்க” என்று சிணுங்கலுடன் மறுக்கும் போதே, அடுப்பை அணைத்து விட்டு, அவளை அள்ளிக்கொண்டு படுக்கையறை நோக்கிச் சென்றான் ரகுவீர்.
அவன் செய்த வினையால் களைப்பில் அவள் மீண்டும் குட்டி உறக்கத்திற்குள் செல்ல, “ஒய் தங்கம்ஸ்… மணி பத்து ஆச்சு. எந்திரி” என அவளை எழுப்பி விட்டவனிடம், “போங்க… எனக்கு டயர்டா இருக்கு” என்றவள் தலையணையில் முகம் புதைத்தாள்.
“அப்ப சரி, மறுபடியும் டயர்டாக்கிட வேண்டியது தான்” என ரகு குறும்பு கூத்தாட கூறியதில் விலுக்கென எழுந்து அமர்ந்தவள், “ஆளை விடுங்க சாமி…” என்று குளியலறைக்குள் ஓடி விட்டதில், ரகு சத்தமாக சிரித்தான்.
பின், இருவரும் பேசி சிரித்தபடி காலை உணவையும் உட்கொண்டனர். சோபாவில் அமர்ந்து ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி படம் பார்த்து நேரத்தைக் கழிக்க, “ரகு டைம் ஆச்சு. நான் போய் லன்ச் செய்றேன்” என்று எழும்போதே, அவளை பிடித்து மீண்டும் அமர வைத்தான்.
“இப்போல்லாம் ப்ரேக்பாஸ்ட்க்கும் லஞ்சுக்கும் இடையிலேயே பசிக்குது மைத்தி…” என்றவனின் விரல்கள் அவள் விரல்களுடன் அலைபாய, முதலில் புரியாமல் விழித்தவள் புரிந்ததும் சிவந்து போனாள்.
“அடி வாங்கப்போறீங்க… இதுக்கு மேல லேட் ஆனா லன்ச் செய்ய ஈவினிங் ஆகிடும். எதுவா இருந்தாலும் இனி நைட்டு தான் சொல்லிட்டேன்” என்று அரைமனதாக மறுக்க,
“ப்ளீஸ் ப்ளீஸ் தங்கம்ஸ்… நீ என்னை கொல்ற தெரியுமா…” என்று கொஞ்சலுடன் அவளை நெருங்கும்போதே அலைபேசி அழைத்தது.
அதில் சட்டென எழுந்தவன், “நீ லன்ச் செய். எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு வந்துடுறேன்” என்று அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டான்.
அத்தனை நேரம் இழைந்தவன் சட்டென விலகிச் சென்றது ஒரு மாதிரியாக இருந்தாலும், இப்படியே ஒட்டிக்கொண்டு வாழ இயலாது என்ற நிதர்சனம் உணர்ந்தவளாதலால், ஏதாவது வேலை வந்துருக்கும் என்று எண்ணிக்கொண்டு மதிய உணவு வேலையை முடித்தாள்.
அவன் அறைக்குச் சென்று மூன்று மணி நேரம் கடந்திருக்க, ‘ப்ச் எங்க போனாரு இவரு. இன்னும் சாப்பிட வேற இல்ல. கதவைத் தட்டலாமா வேணாமா’ என்று யோசனையுடன் இருக்கும் போதே அவன் வந்து விட்டான்.
“ரகு” வந்ததுமே ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள்.
“எவ்ளோ நேரம் உங்களுக்காக வெய்ட் பண்றேன் தெரியுமா. இனிமே கதவை அடைச்சுட்டுலாம் வேலை பார்க்காதீங்க. கதவு திறந்து இருந்தாலும் நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்…” என்றவளுக்கு அவனைக் காணாத இந்த மூன்று மணி நேரமே பல யுகங்களாக இருந்தது.
“ரொம்ப கான்பிடென்ஷியல் மைத்தி. அப்படி கதவை திறந்து போட்டு பேச முடியாது” என்று கண்டிப்புடன் கூறியதும் லேசாய் முகம் கன்றினாள்.
“ஆமா இவரு இந்திய எல்லைல எதிரிங்களுக்கு எதிரா சதித்திட்டம் தீட்டுறாரு. நாங்க உள்ள வந்து கேட்டு பரப்பிடுவோம் பாருங்க…” என்று நொடித்துக்கொண்டவள், “வாங்க சாப்பிடுவோம்” என்றாள்.
அவளிடம் தனது வேலையைப் பற்றி கூறாதது உறுத்த, “மைதிலி… நீ சொன்னது உண்மை தான்” என்றான் மெல்லமாக.
புருவம் சுருக்கிய மைதிலி “என்ன உண்மை?” எனக் கேட்டதில்,
“நான் இந்திய எல்லைல தான் வேலை பாக்குறேன். நான் ஆர்மில இருக்கேன்” என்றான் தொண்டையை செருமிக்கொண்டு.
ஒரு நொடி அவனை இமைக்காமல் பார்த்தவள், பின் கெக்கபெக்கவென சிரித்து விட்டாள்.
“நீங்க… ஆர்மில… காமெடி பண்ணாதீங்க ரகு” அவன் விளையாடுகிறான் என்றெண்ணி கேலி செய்ய, அது அவனை சற்று கோபப்படுத்தியது போலும்.
“மைதிலி!” என்று குரலை உயர்த்தியதில் அவள் சிரிப்பு சட்டென தேய்ந்தது.
“நான் நிஜமாவே ஆர்மில தான் இருக்கேன்…” என்றவன், அவன் ஆர்மி உடையில் இருக்கும் புகைப்படத்தையும் ஐடியையும் காட்ட, அதைப் பார்த்த மைதிலிக்கு கண்ணே இருட்டியது.
அத்தியாயம் 10
“நீங்க கவர்மெண்ட் ஜாப்னு சித்தப்பா சொன்னாரு…” இன்னும் நம்ப இயலாத தொனியில் அவள் கேட்க,
“ஆர்மி கவர்மெண்ட் ஜாப் தான” அவன் முணுமுணுத்தான்.
“இ… இதை ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல” சற்று ஏமாற்றத்துடன் அவள் கேட்டதில்,
“உன் சித்தப்பா தான் சொல்ல வேணாம்னு சொன்னாரு” அவன் குரலில் சுதி இறங்கியது.
அவளுக்கு புரிந்து விட்டது. அவளுக்காக மாப்பிள்ளைத் தேடி ஓய்ந்து போன சதாசிவம் இவனை விட்டு விடக் கூடாது என்பதற்காக, ஆர்மியில் இருப்பதை மறைத்து தனக்கு திருமணம் பேசி இருக்கிறார் என. அது சரி அவருக்கு அவர் கடமை முடிய வேண்டும் அவ்வளவு தானே!
“அவர் சொல்லட்டும். நீங்க ஏன் மறைச்சீங்க?” கலங்கிய குரலில் கேட்டாள் மைதிலி. ஏனென்று அறியாத, இதுவரை உணராத வலி ஒன்று மெல்ல மெல்ல இதயத்தில் பரவிக் கொண்டிருந்தது.
பின்னந்தலையை கோதிக் கொண்ட ரகு, “நீ ஆர்மில இருக்குற மாப்பிள்ளை வேணாம்னு உன் சித்தப்பா சொன்னதும் எனக்கு கோபம் தான் வந்துச்சு மைதிலி. ஏன் ஆர்மில இருந்தா கல்யாணம் பண்ணிக்க கூடாதான்னு. அப்பறம் உன் போட்டோ பார்த்து பிடிச்சுப் போய் உங்கிட்ட பேசலாம்னு தான் கோவிலுக்கு வந்தேன். பட்…” என்று நிறுத்தியவன்,
அவள் கையைப் பிடித்துக்கொண்டு, “உன்னை ரொம்ப பிடிச்சுப் போச்சு மைத்தி. எங்க நான் ஆர்மில இருக்கறதை சொன்னா நீ எனக்கு ஓகே சொல்ல மாட்டியோன்னு தான் நான் மறைச்சுட்டேன். வெரி சாரி தங்கம்ஸ். ஐ லவ் யூ சோ மச்” என்று அந்த கரத்தை அவன் கன்னத்தில் வைத்துக் கொண்டான்.
கலங்கிய விழிகளை சிமிட்டித் தன்னை சமன்செய்து கொண்டவள், “சரி விடுங்க…” ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு அப்போதும் அவன் கூறிய காதலில் சிலிர்த்தாள்.
அதில் அகமகிழ்ந்தவன், “ஐ நோ மைத்தி… நீ என்னைப் புருஞ்சுப்ப. சரி என் ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணனும். ரெண்டு நாள்ல நான் கிளம்புறேன்” என்று அவன் இயல்பாகக் கூறியதில், அவள் அசையாமல் திகைத்து நின்றாள்.
“என்… என்ன கிளம்பணுமா? எங்க?” பாவம் அவன் மீது கொண்ட காதலில் அவளுக்கு சித்தம் கலங்கி ஒன்றும் புரியாமல் போனது.
“எங்கவா? காஷ்மீர்க்கு. எனக்கு லீவ்வும் முடிஞ்சுடுச்சு மைத்தி. நான் வர்ற வரை சமத்தா இருக்கணும் ஓகே வா” என்று அவள் கன்னத்தை தட்ட,
“க… கா… காஷ்மீர்க்கா அப்போ அப்போ நா நான்!” ஒரு துளி நீர் ஒன்று அவள் கண்கள் வழியே வழிந்தோட,
“நீ இங்க தான இருக்கணும். ஐ மீன் நீ இங்க இருக்க வேணாம் மைத்தி. இங்க எனக்கு குவார்ட்டர்ஸ் இருக்கு. அங்க போய் இருக்கலாம். நைட்டு மோனி அங்கிளும் கனடால இருந்து வந்துடுவாங்க. அவங்க வைஃப் ஷோமா ஆண்ட்டி ரொம்ப நல்ல டைப். அவங்க உன்னை நல்லா பாத்துப்பாங்க. நம்ம குவார்ட்டர்ஸ்ஸும் அவங்களுக்குப் பக்கத்துல தான்” என்று மடமடவென அடுத்த அடுத்த திட்டங்களைக் கூற, அவளால் எதையும் உள்வாங்கிக்கொள்ள இயலவில்லை.
“ரகு ரகு வெய்ட்” என்றவளுக்கு மூச்சு வாங்கியது.
“ரகு என்னால உங்களை விட்டுட்டு இருக்க முடியாது” நடுக்கத்துடன் வந்த அக்குரலின் ஆழம் அவனுக்குப் புரியவில்லை.
“என்னால மட்டும் உன்னை விட்டுட்டு இருக்க முடியுமா மைத்தி. கஷ்டமா தான் இருக்கும். பட் பழகி தான ஆகணும்” அவன் வாழ்வின் இயல்பை ஏற்றுக்கொண்டு கூற,
“எனக்குப் புரியல. நான் ஏன் பழகணும்?” என்றாள் தவிப்பாக.
ரகுவீர் விழி இடுங்க அவளை ஏறிட்டான்.
“என்… என்னால உங்களை அனுப்பிட்டு விட்டத்தைப் பார்த்துட்டு இருக்க முடியாது ரகு. எனக்கு நீங்க வேணும். உங்களுக்கே தெரியும்ல நான் சின்ன வயசுல இருந்தே தனியா தான் இருந்துருக்கேன். இப்போ எனக்குன்னு ஒரு குடும்பம் வேணும்னு தான் கல்யாணமே பண்ணிக்கிட்டேன். இங்கயும் என்னைத் தனியா விட்டா என்ன அர்த்தம் ரகு?” ஆதங்கத்துடன் அழுகையும் வந்தது அவளுக்கு.
“என்ன பேசுற மைத்தி. நான் மட்டும் என்ன… நானும் தனியா தான் வளர்ந்தேன். உனக்காவது ஒரு குடும்பம் இருந்துச்சு. எனக்கு அது கூட கிடையாது. என் லைஃப்ல எனக்குன்னு இருக்குற ஒரு சொந்தம் நீ தான். நான் ஒவ்வொரு தடவையும் திரும்பி வரும் போது எனக்காக நீ இருக்க மாட்டியா? இங்க ஒன்னும் உன்னை நாலு சுவத்துக்குள்ள அடைஞ்சு இருன்னு சொல்லல. உன் கேரியரை பாரு” என்றான் கண்டனத்துடன்.
தனியாக இருப்பதற்கும் தனிமையில் இருப்பதற்கும் வித்தியாசம் தெரியாதவன் ஆகிப்போனான் ரகுவீர். அவனிடம் இருந்து இந்த புரிதலின்மையை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
“நீங்க திரும்பி வர்றப்ப உங்களுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கணும்னு நினைக்கிறது ஓகே தான். ஆனா, என்னால இந்த லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பை எல்லாம் ஒத்துக்க முடியாது ரகு” அவனுக்கு அவளை புரிய வைக்க முயற்சித்தாள்.
“முடியாதுன்னா? அப்போ என்ன செய்யப்போற?” கண்ணைச் சுருக்கிக் கேட்டான் ரகுவீர்.
அவன் கேட்கும் விதம் அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அவனிடம் கோபம் காட்ட முடியாத அளவு அவனுடன் கலந்து விட்டாளே!
“ஆர்மி வேலை வேணாம் ரகு. என்கூட இங்கயே இருங்க. ப்ளீஸ்… நீங்க என்கிட்ட சொல்லாம மறைச்சதை கூட நான் பெருசா எடுக்கல. என்னை விரும்புனதுனால நீங்க உண்மையை மறைச்சுட்டீங்க. பரவாயில்ல. ஆனா, என்கூட இருங்க ரகு. உங்களை அனுப்பிட்டு நான்… அப்பறம் எதுக்கு இந்த கல்யாணம்?” தொண்டையில் சிக்கிய வேதனையுடன் அவனிடம் கெஞ்சினாள்.
அவளைத் திகைத்துப் பார்த்த ரகுவீர், “உனக்குப் பைத்தியம் எதுவும் பிடிச்சிருக்கா மைதிலி. நான் கஷ்டப்பட்டு இப்போ ஒரு நல்ல பொசிஷன்ல இருக்கேன். ஆர்மி என்னோட கனவு. இப்ப கூட அங்க டெரரிஸ்ட் அட்டாக் பண்ண போறதா நியூஸ் வந்துருக்கு. இதைக் கேட்டுட்டு என்னை செல்பிஷா உன்கூட ரொமான்ஸ் பண்ண சொல்றியா? வக்கீலுக்கு தான படிக்கிற. உன்னால எப்படி இவ்ளோ சுயநலமா யோசிக்க முடியுது. நான் ஒன்னும் அப்படியே உன்னை விட்டுட்டு போறேன்னு சொல்லல. லீவ்க்கு உன்கூடவே தான இருக்கப்போறேன்” என்று காட்டத்துடன் பேசியவனுக்கு, அவள் வேலையை விடக் கூறியது பெரும் அதிர்ச்சி. அவன் கொடுத்த அதிர்ச்சியின் வீரியத்தை அவன் உணராமல் போனது தான் விந்தை.
உள்ளுக்குள் சிறிது சிறிதாக நொறுங்கி கொண்டிருந்தாள் மைதிலி. கூடவே இழுத்துப் பிடித்த பொறுமையும் காற்றில் பறந்தது.
“ஆமா நான் பைத்தியம் தான். உங்களை பைத்தியக்காரத்தனமா லவ் பண்றேன்ல நான் பைத்தியம் தான். நான் நீங்க பார்க்குற வேலையைப் பத்தி பேசல. நான் என்னைப் பத்தி பேசுறேன் ரகு. உங்க கனவு ஆர்மியா இருக்கலாம். அப்போ என் கனவு? என் லைஃப்ல நான் நிறைய இழந்துருக்கேன். நிறைய சாக்ரிபைஸ் பண்ணிருக்கேன். அம்மா, அப்பா, அண்ணா, சொந்தம் பந்தம், சொந்த ஊருன்னு எல்லாத்தையும் சாக்ரிபைஸ் பண்ணிருக்கேன். இப்போ உங்களையும் சாக்ரிபைஸ் பண்ணனும்னா… என்னால முடியாது ரகு.
ஆர்மில இருக்குற உங்களுக்கு இதெல்லாம் சாதாரணமா இருக்கலாம். என்னால மறுபடியும் மறுபடியும் இந்த பிரிவை எல்லாம் டாக்கில் பண்ண முடியாது. நான் என்ன பெருசா கேட்டுட்டேன். எனக்குன்னு எப்பவும் என் கூடவே இருக்குற மாதிரி ஒரு புருஷனை தான. எனக்குன்னு ஒரு குடும்பத்தை தான கேட்டேன். அதுக்கு பேர் சுயநலம்ன்னா, ஆமா நான் சுயநலவாதி தான். நான் இந்த லைஃபை கேட்கலையே. நீங்க என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கணும். நான் இந்தப் பிரிவுக்கு எல்லாம் ஓகே சொன்னதுக்கு அப்பறம் நீங்க கல்யாணம் பண்ணிருக்கணும். தப்பு உங்கமேல. நீங்க என்னை ஏமாத்தி இருக்கீங்க ரகு. என்னை சீட் பண்ணிட்டு, அதை சாதாரணமா பேசுறீங்க” என்று குமுறியவளுக்கு கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
அத்தனை நேரமும் அவளது பேச்சில் உருகியவனுக்கு இறுதி வரியில் ஆத்திரம் தலைக்கேறியது.
“ஜஸ்ட் ஸ்டாப் இட் மைதிலி. உங்கிட்ட உண்மையை மறைச்சேன் அவ்ளோ தான். நான் என்ன கொலை பண்றேனா கொள்ளையடிக்கிறேனா? உன்னை ஏமாத்துற அளவு நான் ஒன்னும் கேவலமான வேலை பார்க்கல. நாட்டுக்காக சேவை செய்றதுக்கு பேர் சீட் பண்றதா?” என்றான் கோபம் கொப்பளிக்க.
“இங்க பாருங்க… நீங்க நான் சொல்ல வர்றதை தப்பாவே போட்ரே பண்றீங்க. நீங்க செய்ற வேலையை நான் தப்பு சொல்லவும் இல்ல. ஆர்மில இருக்குறவங்களை கல்யாணம் பண்ணிக்க வேணாம்னும் சொல்லல.
எனக்கு இது செட் ஆகாது. என்னால இந்த பிரிவையும் தனிமையையும் ஏத்துக்க முடியாதுன்னு தான் சொல்றேன். என்னை கேர் பண்ணிக்கவும், தினமும் அன்பைக் காட்டவும் என் கூட நீங்க இருக்கணும் ரகு. அதை நான் எதிர்பார்க்குறது தப்பா? சரி என் எண்ணம் தப்பாவே இருக்கட்டும். இந்த நாட்டுக்காக சேவை செய்ற மனப்பான்மை எல்லாம் எனக்கு இல்ல ரகு. உங்களுக்கு அது நிறையவே இருக்கு. ஆனா இந்த வேலை வேணாமே. என்கூட இருங்க ரகு: இம்முறை அவன் முன் மண்டியிட்டு அமர்ந்து யாசித்தாள் முட்டாள் பெண்ணவள்.
பள்ளி, கல்லூரியென தன்னுடன் படிப்பவர்களுக்கே எவ்வித உதவியென்றாலும் யோசியாமல் செய்யக்கூடியவள். அநாதை ஆஸ்ரமத்திலும், முதியோர் இல்லத்திலும் விடுமுறை நாட்களில் ஊதியமின்றி வேலை செய்பவள் அவள். அவர்களுக்கு தேவையான பொருட்களை ஈட்டுவதற்கு என்றே, வார நாட்களில் பகுதி நேர வேலை பார்ப்பவள். ஏதோ அவளால் முடிந்த ஒன்றை, மற்றவர்களுக்காக அவள் செய்து கொண்டே தான் இருப்பாள். அது அவனுக்கும் தெரியும். ஆனால், கிடைப்பதென்னவோ சுயநலவாதி என்னும் பட்டம் தான். துப்பாக்கி ஏந்தி போர் செய்யும் வீரன் மட்டும் தான் சேவை செய்பவனா? தன்னால் இயன்ற அளவு, மற்றவர்களின் துன்பங்களில் பங்கெடுத்து, அதனை சரி செய்ய முயலும் ஒவ்வொரு குடிமகனு(ளு)ம் சேவை செய்பவர்கள் தானே!
“ஓ காட்!” என்று முடியை பிய்த்துக்கொண்டவன், “நீ தெளிவான பொண்ணு, புருஞ்சு நடந்துப்பன்னு நினைச்சேன். பட், நீ சின்னப்பொண்ணுன்னு ப்ரூவ் பண்ற மைதிலி. ஏஜ் டிபரன்ஸை ஒரு தடவையாவது நான் யோசிச்சு இருக்கனும். மெச்சூரிட்டி இல்லாம இப்படி வேலையை விட சொல்றியே” என்று எரிச்சலானான்.
சம்மட்டி அடித்தது போல அவன் பேசிய வார்த்தைகள் அனைத்தும் அத்தனை வலித்தது. தாங்கி கொண்டாள்.
“எனக்கு மெச்சூரிட்டியே வேணாம். அதான் எனக்கு பதிலா உங்களுக்கு மெச்சூரிட்டி நிறையா இருக்கே. அது போதும் ரகு. என்னை விட்டுப் போகாதீங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் செய்றேன். படிக்க வேணாம்னாலும் ஓகே நான் போகல. வீட்ல இருந்து உங்களைப் பாத்துக்குறேன். நீங்க எப்படி நினைக்கிறீங்களோ அப்படியே இருப்பேன் ரகு. ப்ளீஸ் என்னை தனியா விட்டுட்டு மட்டும் போய்டாதீங்க!” என்று கேவியபடி கெஞ்சியவள் ஒட்டுமொத்தமாக அவன் முன் அவளது சுயத்தன்மையை இழந்திருந்தாள். அவன் மீதுள்ள காதல், அவனை எதிர்த்து போராடக் கூட விடவில்லை.
“ஷிட்…” என்று தரையில் காலை உதைத்தவன், மறுபக்கம் திரும்ப அங்கு சஞ்சீவ் அதிர்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்தான்.
“நீ எப்ப வந்த?” ரகு கேட்டதில், அவனை தரதரவென இழுத்து அறைக்குள் தள்ளியவன், ஓங்கி அறையப்போனான்.
பின் நண்பன் என்ற பாசம் தடுக்க, “அறிவுன்னு ஒன்னு இருக்காடா உனக்கு. ஏண்டா அந்தப் பொண்ணை இப்படி கஷ்டப்படுத்துற. எத்தனை தடவை படிச்சுப் படிச்சு சொன்னேன். உன் வேலையைப் பத்தி சொல்லுன்னு…” என்று சஞ்சீவ் கண்டிக்க,
“இப்ப என்னடா வேலையை விட்டுட்டு விட்டத்தைப் பார்த்துட்டு உட்காரவா? கூட இரு கூட இருன்னு உளறிட்டு இருக்கா. இப்படியே கூடவே இருக்க முடியுமாடா. அவளுக்கே போர் அடிச்சுப் போய்டும்” என்று கடிந்தவனை “வாய மூடுடா. அந்த பிராக்டிகல் லைஃப் அவளுக்குப் புரியாம இல்லை…” என்றவனை பேச விடவில்லை ரகுவீர்.
“ஏன்டா ஆர்மில இருந்தா கல்யாணம் கூட பண்ணக் கூடாதா. கொலைக்குத்தமா பண்றோம். கொஞ்சம் கூட எதுவும் புருஞ்சுக்காம பேசிட்டு இருக்கா. என் கடமை உணர்ந்து, என்னைப் புருஞ்சு என் பொண்டாட்டி நடந்துக்கணும்னு நான் நினைக்கிறது தப்பாடா” என்றான் கோபமாக.
அவன் பேசிய அனைத்தையும் கேட்டு வெடுக்கென உள்ளே வந்தவள், “எதுவும் தப்பில்ல ரகு. ஆர்மி மேனை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிற எத்தனையோ பொண்ணுங்க சேவை மனப்பான்மையோடு இந்த நாட்டுல இருக்காங்க. அவங்களைத் தேடி பிடிச்சு நீங்க கல்யாணம் பண்ணிருக்கணும். இந்த மாதிரி தனிமையெல்லாம் வேணாம்னு சாதாரண வேலைல இருக்குற ஒருத்தரை கல்யாணம் பண்ணிட்டு, சாதாரண ஒரு வாழ்க்கையை வாழணும்னு நினைச்ச என்னை உண்மையை சொல்லாம கல்யாணம் பண்ணிருக்கக் கூடாது. கடைசியா கேட்குறேன் உங்களுக்கு நான் வேணுமா இல்ல உங்க வேலை வேணுமா?” என்றாள் கொந்தளித்து. விழிகள் இரத்த நிறத்தில் சிவந்திருக்க, அழுது அழுது முகமே வீங்கி இருந்தது.
“இந்த கார்னர் பண்ற க்ரின்ச் எல்லாம் பண்ணாத மைத்தி. எனக்கு என் வேலை தான் முதல்ல. அதுக்கு அப்பறம் தான் மத்தது. உன்னால இதை அக்செப்ட் பண்ணிக்க முடியலைன்னா, உனக்குப் பிடிச்ச மாதிரி வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கோ. இவ்ளோ நாளும் இருந்த மாதிரி இனிமேலும் குடும்பம்னு ஒன்னு இல்லாம இருந்துக்குறேன்” என்று திட்டவட்டமாக பேசியவன், சிறிதும் அவளது மனநிலையை யோசிக்கும் மனப்பான்மையில் இல்லை. அவனை அவள் புரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆதங்கத்தில் சிறிதும் அவளைப் புரிந்து கொள்ள அவன் முயற்சிக்கவில்லை.
தன்னவனின் பேச்சில் சில்லு சில்லாக உடைந்து போனாள் மைதிலி.
கனவுகளும் கற்பனைகளும் வெறும் கற்பனைகளாக கரைந்து போக, மீண்டும் கண்ணீரில் கன்னம் நனைந்தது.
சஞ்சீவ் இறுதியாக, “ஒரு பொண்ணோட மனசைப் புருஞ்சுக்காம, நீ இனி எந்த நல்லது செஞ்சாலும் அது வேஸ்ட்டு தான்டா” என்று வெறுப்புடன் கூறி விட்டு, மைதிலியின் அழுகையைப் பார்க்க இயலாமல் அவன் சென்று விட, அதன் பிறகும் அங்கு வாதங்களும் கெஞ்சல்களும் நடைபெற்றாலும், ரகுவீர் அவனது கூற்றிலிருந்து சிறிதும் மாறவில்லை.
பேசிப் பேசி, மனது உடைவதை தாள இயலாமல் ஊமையாகி விட்டாள் அவள்.
கூடல்களில் சிலிர்த்த இரவு, இப்போது வெறுமையில் கரைந்தது. மறுநாள், ரகு மைதிலியை அழைத்துக்கொண்டு குவார்ட்டர்ஸ்க்கே சென்று விட்டான்.
ஷோமாவும் மோனியும் அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றாலும் இருவரின் முகமும் சரி இல்லையென பார்த்ததும் புரிந்து கொண்டனர்.
புதுமணத் தம்பதிகளை வீட்டில் விட்டு விட்டு, மதிய உணவிற்கு வருமாறு பக்கத்தில் இருந்த அவர்களது குவார்ட்டர்ஸ்க்கு சென்று விட்டனர்.
எதையும் உணரும் நிலையில் மைதிலி இல்லை. ரகுவிற்கும் அவள் அருகில் இருந்து கொண்டே பேசாமல் இருந்தது வருத்தமாக இருந்தது. அதற்காக அவனது பேச்சை மாற்றிக்கொள்ளும் மனோபாவம் சுத்தமாக இல்லை.
இருவரும் அமைதியியேயே பொழுதைக் கழிக்க, மதிய உணவிற்கு மோனி ஜாயின் வீட்டிற்கு வந்தனர்.
அடுக்களையில் ஷோமாவுடன் மைதிலி நின்று கொள்ள, “நீ ஓகே தானம்மா. போன்ல நல்லா பேசுனியே. இப்போ ஏன் ஒரு மாதிரி இருக்க?” எனக் கேட்க, அவள் பதில் சொல்லும் முன்னே மோனி அழைக்கும் சத்தம் கேட்டது.
ஷோமா, “வந்துடுறேன்” என்று அவசரமாக வெளியில் செல்ல, அங்கு மோனி சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.
“தோட்டத்துக்கு தண்ணி ஊத்தலையா. இந்த டீ – பாய் ஏன் தூசியா இருக்கு. இதெல்லாம் பார்க்குறது இல்லையா ஷோமா” என்று அதட்டிட, “பார்க்கலைங்க” என்றவர் அவசரமாக வேலையை செய்து விட்டு அடுக்களைக்கு வந்தார்.
கனடாவில் இருந்தே நேற்று இரவு தான் வந்திருந்தனர்.
ஆனாலும் அந்த களைப்பை காட்டிக்கொள்ளாமல், ஷோமா பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார்.
“இவர் லீவ்க்கு வந்துட்டாருன்னா வேலையே சரியா இருக்கும் மைதிலி. எல்லாமே பெர்பக்ட்டா இருக்கணும் இவருக்கு. நாளைக்கு ரெண்டு பேரையும் அனுப்பி விட்டுட்டு நம்ம பொறுமையா பேசலாம். இனி நீயும் இதெல்லாம் கத்துக்க தான வேணும். ஆனா ரகு அப்படிலாம் இல்ல. தங்கமான பையன்” என்று புகழ்ந்திட, அவளுக்கு ஆயாசமாக இருந்தது.
இங்கு மோனி ரகுவிடம் விசாரிக்க, அவன் வரி மாறாமல் அனைத்தையும் ஒப்பித்து இருந்தான்.
“நீ ஆர்மி மேன்னு முன்னாடியே சொல்லிருக்கணும்ல ரகு” என்று அதட்டினாலும் உடனேயே மைதிலியை அழைத்தார்.
அவள் குனிந்த தலையை நிமிர்த்தாமல் அவர் முன் நிற்க, “என்னம்மா வேலையை விட சொல்லிட்டு இருக்கியாமே. அவன் எவ்ளோ இம்போர்ட்டண்ட் பொசிஷன்ல இருக்கான் தெரியுமா…” என்று சில ஆர்மி போஸ்ட்டைப் பற்றி பேச, அவளுக்கு எதுவும் புரியவில்லை.
புரிந்து கொள்ளவும் மனமில்லை.
“இந்த மாதிரி பெர்சனை ஈஸியா வேலையை விட சொல்றியே. நீ தான் அவனைப் புருஞ்சுப் போகணும்.” என்றவர், ரகுவிடம் திரும்பி “சின்னப்பொண்ணு தான ரகு. போக போக புருஞ்சுப்பா. படிப்ப முடிச்சுட்டு பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சா மெச்சூரிட்டி வந்துடும்” என்றார் திண்ணமாக.
ஏனோ அவளுக்கு அப்போதே சின்னப்பொண்ணு, மெச்சூரிட்டி இந்த வார்த்தைகளை பிடிக்காமலே போய் விட்டது.
ஒரு விள்ளல் கூட உள்ளே இறங்கவில்லை அவளுக்கு. உணவை முடித்து அவர்கள் வீட்டிற்கு வந்ததுமே மைதிலி கத்தி விட்டாள்.
“நமக்குள்ள நடக்குற விஷயத்தை எதுக்கு அவர்கிட்ட சொன்னீங்க?”
“அவர் என் அங்கிள் மைதிலி. ஏன் டல்லா இருக்கன்னு கேட்டாரு சொன்னேன்” அவன் அதற்கும் இயல்புடன் பதில் அளிக்க,
“நமக்குள்ள நடக்குறது எதுக்கு எல்லாருக்கும் தெரியணும். நான் தேச துரோகின்னு எல்லாருக்கும் அறிவிக்கிறீங்களா?” ஆதங்கம் தாளாமல் சண்டையிட, “ஷப்பா, அடுத்து ஸ்டார்ட் பண்ணாத. ஏற்கனவே தலைவலிக்குது” என்று தலையைப் பிடித்தபடி அறைக்குள் நுழைத்து கதவை அறைந்து சாத்தி விட்டான். அவனுக்கு எரிச்சல் வேறு மண்டியது.
“நான் என்னமோ தினமும் வேலை வெட்டியில்லாமல் சண்டை போட்டுக்கிட்டே இருக்குற மாதிரி சலிச்சுக்குறீங்க” அழுகையுடன் அவள் கேட்டதற்கும் “யம்மா… நீ நியாயவாதி தான். கொஞ்ச நேரம் என்னை தூங்க விடு” என்று கண்ணை மூடி உறங்கியே விட்டான்.
நேரமும் கழிய, மாலையில் அவனது பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து விட்டான். மைதிலி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே இருக்க, அவளைப் பின்னிருந்து அணைத்தவன்,
“நாளைக்கு நான் கிளம்பிடுவேன் மைத்தி. இப்படி சண்டை போட்டுக்கிட்டே இருந்தா நான் பாவம்ல. அங்க போய்ட்டா உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன். நான் கிளம்புற வரை சிரிச்ச மாதிரி இருக்கலாம்ல” என்று அவனது எதிர்பார்ப்பை கூறி விட்டு, அவளது செவிமடல்களில் முத்தமிட, எப்போதும் சிலிர்க்கும் தேகம் ஏனோ சிவக்க மறுத்தது.
‘நீங்க கிளம்புவரை சிரிக்கணும். அதுக்கு அப்பறம் அழுதா பரவாயில்லையா’ மனதினுள் உறுத்திய கேள்வியை அவள் கேட்கவில்லை. அதற்கும் ஒரு பதில் வைத்திருப்பான்.
“என் தங்கம்ல… கோபம் வேணாமே. ம்ம்…” என்று கூறி விட்டு, அவள் இதழ்களை சிறைப்பிடிக்க, அவள் அதனை ஏற்கவும் இல்லை தள்ளி விடவும் இல்லை.
“என்னடி கிஸ் பண்ண மாட்டியா?” எதுவுமே நடைபெறாதவாறு, பேசிய வார்த்தைகள் அனைத்தையும் மறந்து விட்டு, செல்லமாக அவன் கேட்க,
“எனக்கு இதுக்குலாம் இப்ப மைண்ட்செட் இல்ல ரகு. ப்ளீஸ் என்னைத் தனியா விடுங்க” என்றாள் சோர்வாக.
“நான் கிளம்புனதுக்கு அப்பறம் நீ தனியா தான இருக்கப்போற. உன் கோபத்தை நான் குறைக்கிறேன் மைத்தி தங்கம்ஸ்…” என அவளது உணர்வுகளை ஒதுக்கி விட்டு, அவளுடன் உறவு வைத்துக்கொண்டு இன்னும் பெரிய அளவில் அவள் மனதில் பாரத்தை ஏற்றி விட்டான்.
எதற்கும் அவள் எதிர்வினையாற்றவில்லை. இத்தனை நாட்களில் இன்பம் கொடுத்த தீண்டல்களெல்லாம் இன்று கண்ணீரை கொடுத்தது. நேசித்த ஆடவனின் வாசம், மூச்சை அடைத்தது.
ஊடலுக்குப் பின்னான கூடல் அனைத்துமே இன்பத்தைக் கொடுப்பதில்லை என்பதை உணரவில்லை அவன்.
அவர்களுக்குள் இருந்தது சிறு ஊடலும் அல்லவே!
உயிர் வளரும்
மேகா