ஜீவன் 9
“இந்த போட்டோல இருக்குறது யாருன்னு தெரியுதா?” என்றதும் அகல்யாவின் பார்வை அந்த புகைப்படத்தை மொய்க்க, பார்த்ததுமே கண்டுகொண்டாள் தரணீஸ்வரன் என்று.
இருப்பினும் தெரியாது என்பது போல் சைகை செய்ய, “உன்னோட புருஷன்.” என்றார் புன்னகையோடு.
“இந்த ரூம்ல இருக்க முக்காவாசி பொருள் அவனோடது தான். அவனோட வாழ்க்கைக்குள்ள அவ வரதுக்கு முன்னாடி வரைக்கும் நான் தான் ஊட்டி விடுவேன். தினமும் மடியில படுத்து கதை கேட்டுட்டே தூங்குவான். எல்லாம் மாறிடுச்சு…”
அவர் விழியில் அப்படி ஒரு வலி தென்பட்டது. புதிர் நிறைந்த அவரின் முகத்தில் அவள் எதையோ தேட முற்பட, ஒரு அலமாரியை திறந்து காண்பித்தார். அதில் முழுக்க பரிசுப் பொருட்கள் நிறைந்து இருந்தது. இவை எல்லாம் யாருடையது என்ற கேள்வி எழுந்தாலும் அவரே சொல்வார் என்பதால் காத்துக் கொண்டிருந்தாள்.
“இதெல்லாம் உன் புருஷனோட அடையாளங்கள். ஸ்டேட் லெவல்ல நிறைய பரிசு வாங்கி இருக்கான். அவன் ஈட்டி தூக்கிட்டு ஓடும்போது பார்க்கணுமே அப்படி ஒரு பவர் இருக்கும் அந்த கண்ணுல. அதை பார்க்குறதுக்காகவே எங்க போட்டி நடந்தாலும் அவனோட போய்டுவேன்.” என்ற ஆதிலட்சுமியின் விழிகள் கலங்கியது.
மௌனம் காக்க முடியாமல் அவளது வாய், “எதுக்கு அழுறீங்க?” என்று கேட்டிட,
“என் மகன் கண்ணுல அந்த பவரை பார்த்து நாலு வருஷம் ஆயிடுச்சு.” என்றார் கசந்த புன்னகையோடு.
ஆறுதல் சொல்ல மனமில்லாமல் அகல்யா அவரையே பார்த்துக் கொண்டிருக்க, தன்னை தானே தேற்றிக்கொண்டவர் அடுத்தடுத்து என விஷயங்களை விவரித்தார். இரண்டு புகைப்பட ஆல்பத்தை கையில் கொடுத்தவர்,
“நேரம் இருக்கும் போது எடுத்து பாரு. எல்லாம் தரணியோட நியாபகங்கள். இதைப் பார்த்தாலே தெரியும் என் மகன் குடிகாரன் இல்லன்னு.” என்பவருக்கு அவள் மறுப்பு சொல்லும் முன்னரே கையில் திணித்தார்.
வேறு வழி இல்லாமல் வாங்கிக் கொண்டவள் நகர பார்க்க, விடவில்லை ஆதிலட்சுமி. மீதம் இருக்கும் இடங்களையும் சுற்றி காண்பித்தார். கடைசியாக வீட்டின் பின்புறம் வந்தார்கள். அந்த இடத்தை பார்த்ததும் அவளின் கண்கள் விரிந்தது. திருமணம் ஆகி வந்ததிலிருந்து இப்பொழுது தான் மருமகளின் பழைய முகபாவனையை பார்க்கிறார் மாமியார்.
புன்னகையோடு, “முன்னாடியெல்லாம் நாங்க மூனு பேரும் இங்க உட்கார்ந்து தான் நேரத்தை செலவழிப்போம். இது அத்தனையும் தரணியோடு ஏற்பாடு.” என்றவர் பேச்சு காதில் விழுந்தாலும் கண்டுக் கொள்ளாது அங்கிருக்கும் இயற்கை சூழ்நிலையை ரசிக்க ஆரம்பித்தாள் அகல்யா.
நீண்ட கொடிகளும் பூக்களும் சுற்றி குடை போல் அழகாக ஜோடிக்கப்பட்டிருந்தது. வைத்ததற்கு ஏற்றவாறு அதுவும் வளைந்து நெளிந்து அழகாக பூக்களோடு காட்சி அளித்தது. அதனை சுற்றி ரோஜா செடிகள் நிறைந்து இருந்தது. பெரும்பாலும் சிகப்பு நிற ரோஜாக்கள் தான் அதிகம் பேசும் பொருளாக இருக்கும். அவள் காணும் இடத்திலோ மஞ்சள் நிற ரோஜாக்கள் பூத்துக் குலுங்கியது.
பார்த்த கண்கள் குளிர்ச்சியானது. அதற்கு மேல் மழை வந்தால் நனையாமல் இருக்க சிறு கூடாரம் அமைத்து இருந்தான். குடை போல் காட்சி அளித்த கொடிகளுக்கு கீழ் இருக்கைகள் அமைந்திருந்தது. அவை பக்கத்திலேயே சிறு தொட்டி அமைத்து மீன்கள் நீந்த விட்டிருந்தான். அதற்கு கீழ் நீர் போவது போல் ஏற்பாடு செய்திருந்தான்.
‘என்ன ஒரு ரசனை!’
முதல்முறையாக கணவன் செயலை பாராட்டினாள் மனதில். அவள் பார்க்கும் காட்சி மனதை மாற்றி விட்டது. இதழில் அவளையும் அறியாமல் புன்னகை. மாமியார் சொல்வதற்கு முன், “ரொம்ப அழகா இருக்கு இந்த இடம்.” என்றாள்.
மருமகளின் வார்த்தையில் உள்ளம் மகிழ்ந்தார். அவள் கைப்பிடித்து அழைத்துச் சென்று அங்கிருந்த இயற்கையின் நடுவில் அமர்ந்தார். சுற்றிலும் பார்வையை சுழல விட்டவள் பூக்களுக்கு நடுவில் ராணியாக அமர்ந்திருப்பது போல் உணர்ந்தாள்.
மருமகள் முகத்தில் தெரியும் பாவனையில் உள்ளம் மகிழ்ந்தவர், “எங்களோட மொத்த சந்தோஷமும் இந்த இடத்துல தான் இருக்கும். இங்க இருக்க எல்லாமே உன் புருஷனோட ஏற்பாடு. ஒரு இலை உதிர்ந்தா கூட அவன் மனசு தாங்காது. உதிர்ந்த செடி சரியாகி செழிப்பா வளர வரைக்கும் இங்கயே தான் இருப்பான். மணிக்கணக்கா உட்கார்ந்து ரோஜாவோட பேசிட்டு இருப்பான்.” என்று மாமியார் சொன்ன வார்த்தை எல்லாம் அவளுக்குள் அவ்வளவு வியப்பை கூட்டியது.
“என்னென்ன பேசுவான் தெரியுமா!” என்றவரை வியப்பு மாறாமல் பார்த்துக் கொண்டிருக்க, “அதோ… அங்க இருக்குல” என்று குவிந்திருக்கும் மணலை கைகாட்டினார்.
அவள் பார்வையும் அங்கு செல்ல, “உன் புருஷன் தினமும் மண் வீடு கட்டி விளையாடுவான்.” என்றதும் புன்னகை அவள் முகத்தில்.
“மண்ண, செடிய கூட மனுஷனா மதிச்சு பேசுவான். எங்க வாழ்க்கை ரொம்ப நல்லா போயிட்டு இருந்துச்சு. ஒரு பிள்ளை தானா என்கிற குறை இல்லாம அவன் எங்களை பார்த்துக்கிட்டான். என் மகனை நினைச்சு நாங்க பெருமைப்படாத நாளே இல்லை. திடீர்னு ஒரு நாள் எல்லாமே அழிஞ்சு போயிடுச்சு அகல். எங்க மகன் வேற ஒருத்தனா தெரிஞ்சான். எங்களை விட்டு தூரம் போனான். அவன் ரசிச்ச இந்த எல்லா விஷயத்தையும் விட்டு விலகிப் போனான்.” என்றவருக்கு கண்ணீர் கட்டுப்படாமல் போக மருமகள் முன்பு அழுக ஆரம்பித்தார்.
மாமியார் கண்ணீரை பார்த்து சங்கடப்பட்டாள் அகல்யா. இருந்தும் அருகில் சென்று ஆறுதல் படுத்த அவள் மனம் தயாராக இல்லாததால் வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். மனைவியை வெகு நேரம் காணாததால் தேடி வந்தார் தயாளன்.
அவரை கண்டதும் தான் நலம் என்பதை சிரிப்பால் காட்டியவர், “சாரிமா. தேவை இல்லாம உன்ன சங்கடப்படுத்திட்டேன்.” என்றார் வருத்தத்தோடு.
“அதெல்லாம் எதுவும் இல்லங்க.”
மருமகளின் வார்த்தையில் பிடித்தம் இல்லை அவருக்கு. “அத்தை” என்று அழைக்காமல் யாரோ ஒருத்தி போல் பேசுவது என்னவோ போல் இருந்தது. இருந்தும் இவ்வளவு பேசியதே பெரிய விஷயம் என்பதால் எதுவும் சொல்லவில்லை.
“போதும் ஆதி. அந்த பிள்ளை எழுந்து வந்த கையோட இங்க கூட்டிட்டு வந்துட்ட. குளிச்சிட்டு வரட்டும்… பொறுமையா மாமியாரும் மருமகளும் பேசிட்டு இருங்க.”
“சாரிமா” என்றார் மீண்டும் மாமியார்.
பதில் ஏதும் சொல்லாதவள் தலையசைத்து எழுந்துக் கொள்ள, ” குளிச்சிட்டு கீழ வாம்மா. உனக்கு டிபன் செஞ்சு வைக்கிறேன்.” என்று அனுப்பி வைத்தார்.
தலையசைத்து நகர்ந்தவள் பார்வையில் சற்று தூரத்தில் இருக்கும் பெரிய கூண்டு ஒன்று கண்ணில் பட்டது. அதைப் பார்த்து நின்றவள் மாமியாரை திரும்பி பார்க்க, முதலில் அவருக்கு புரியவில்லை.
பின் புரிந்து கொண்டு, “தரணி ஒரு நாய் வளர்த்துட்டு இருந்தான். அதுதான் எங்க ரெண்டு பேர விட அவனுக்கு ரொம்ப செல்லம். தரணி கிட்ட யாரையும் நெருங்க விடாது. கூட பொறக்காத தம்பியா பார்த்துட்டு இருந்தவன் குணம் மாறி எங்கயோ கொண்டு போய் விட்டுட்டான்.” என்றார் ஆதிலட்சுமி.
சிரித்த முகமாக பேசும் ஆதிலட்சுமி மகன் பேச்சை எடுக்கும் பொழுது மட்டும் எதற்காக கலங்குகிறார் என்ற சிந்தனையில் உள்ளே வந்தவள் படுத்திருக்கும் தரணீஸ்வரனை பார்த்து கோபம் கொண்டாள்.
அறையை விட்டு வெளியேறுவதற்கு முன் நடந்த சம்பவங்கள் நியாபகத்திற்கு வர, சண்டை போட விரும்பாது குளியலறைக்கு நகர்ந்தாள். போகும்போது ஓரக்கண்ணால் அவனைப் பார்க்க, தலையில் கை வைத்துக் கொண்டு படுத்திருந்தான்.
குளித்து முடித்து வெளியில் வந்தவள், “நான் டிரஸ் மாத்தணும் வெளிய போங்க.” என்றாள்.
அவன் அசையாமல் படுத்துக் கொண்டிருக்க, “உங்க கிட்ட தான் சொல்றேன். நான் டிரஸ் மாத்தணும் வெளிய போங்க.” மீண்டும் கூற, அலட்சியமாக படுத்துக் கொண்டிருந்தான்.
கட்டுப்படுத்தி வைத்திருந்த கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது. எரிச்சலோடு நான்கு ஐந்து முறை கூறிவிட்டாள் வெளியில் போகுமாறு. அசைந்து படுத்தானே தவிர எழவில்லை. தலையில் அடித்துக் கொண்டு குளியலறைக்கு எடுத்துச் சென்றாள் மாற்று துணிகளை.
அவனை திட்டிக் கொண்டே உடை மாற்றியவள் வெளியில் வந்தும் திட்டுவதை தொடர்ந்தாள். கண்ணாடி முன்பு தலைவாரிக் கொண்டிருக்க, தரணி கை நீட்டி அழைத்தான். திரும்பிப் பார்த்து முறைத்தவள் உதட்டுக்குள் முணுமுணுத்தாள் வசைப்பாடி.
தன்னை அலங்கரித்துக் கொண்டு வெளியேற முயன்றவளை மீண்டும் தரணீஷ்வரன் கைநீட்டி அழைக்க, “அறிவே இல்லையா உனக்கு? இவ்ளோ திட்டுறேன்… சூடு சொரணை இல்லாம கூப்பிடுற. எனக்கு வர கோபத்துக்கு உன்னை அப்படியே கொல்லலாம் போல இருக்கு.” என்று கழுத்தை பிடிப்பது போல் கைகளை எடுத்துச் சென்றாள்.
அருகில் அவன் முகம் பார்க்க எதுவோ சரியில்லாதது போல் தோன்றியது. தலையில் கை வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தான். உதடு என்னவோ பேசிக் கொண்டிருக்க, போதை இன்னும் தெளியவில்லை என்று நினைத்தவள் கோபத்தோடு நகர்ந்தாள்.
சக்தி மொத்தத்தையும் ஒன்று திரட்டி அவளின் கையைப் பிடித்தவன், “தலை வலிக்குது அகல்” என்றான் உளறலோடு.
அவன் வார்த்தையில் கோபம் தணிந்து பாவம் குடியேறியது. “நேத்து குடிச்சதால அப்படி இருக்கும். நீங்க எழுந்து உட்காருங்க ஏதாச்சும் எடுத்துட்டு வரேன்.” என்றவள் நகர, மீண்டும் கைப்பிடித்தான்.
முகம் சுருங்கி பார்க்க, “முடியல ரொம்ப வலிக்குது.” என்றான்.
அருகில் நகர்ந்தவள் தலையில் கை வைக்க, சேர்த்து பிடித்துக் கொண்டு கண் மூடினான். நன்றாக நெற்றியை தடவி விட்டு கையை எடுத்துக் கொள்ள முயற்சிக்க, உடும்புபிடியாக பிடித்து இருந்தான் தரணீஸ்வரன்.
லேசான கோபம் எட்டிப் பார்க்க, கைகளை எடுக்க முயற்சித்தாள். போராடி வெடிக்கென்று கையை பிடுங்கிக் கொள்ள, அவள் அசைவுக்கு ஏற்ப தரணீஸ்வரனின் முகம் திரும்பியது. அவன் நிலை உணராது சிடுசிடுப்போடு அவனை விட்டு வெளியேறியவள் படியிறங்க, அவன் மீதான யோசனை உருவாகியது.
கால்கள் அறைக்கு ஓடியது. அவனை எழுப்ப முயன்றாள். அவனோ அசைவில்லாமல் படுத்துக் கொண்டிருந்தான். நொடிகள் கடக்க அவளுக்குள் பயம் அதிகரித்தது. கன்னத்தை வேகமாக தட்டி, “எந்திரிங்க” என குரல் கொடுத்தாள்.
எந்த அசைவும் இல்லாமல் போக நீரை முகத்தில் அடித்து எழுப்பினாள். அதுவும் வீணானது அவன் எழாமல் இருப்பதால்.
“தரணி! என்ன ஆச்சு எந்திரிங்க.”
இந்த முறை சத்தமாக எழுப்ப ஆரம்பித்தாள். அசைவின்றி படுத்து கொண்டிருப்பவன் தோரணையில் எதுவோ ஆகியிருக்கிறது என்பதை உணர்ந்து சத்தமிட்டாள்,
“அத்தை… மாமா… ” என்று.
ஹாலில் இருந்த தயாளனுக்கு மருமகளின் குரல் கேட்க, “என்னம்மா?” என வேகமாக அறைக்கு ஓடினார்.
சமையலறையில் நின்றிருந்த ஆதிலட்சுமியும் பின்னால் ஓடினார். மூவர் எழுப்பியும் அசைவின்றி படுத்துக் கொண்டிருந்தான் நாயகன். தாய் தந்தை இருவரும் கண்ணீரில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்திருக்க, துரிதமாக செயல்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள் அகல்யா.
ஜீவன் 10.
பெரிதாக ஒன்றும் இல்லை அவனுக்கு. தொடர் மதுவின் புண்ணியத்தால் படுத்துவிட்டான் மருத்துவமனையில். பெற்றோர்களுக்குத்தான் பாதி உயிர் போய்விட்டது மகனை இந்த நிலைமையில் பார்த்து. லேசான பயம் அகல்யாவின் மனதில் உண்டானதை தடுக்க முடியவில்லை.
சிகிச்சை முடித்து வெளியில் வந்த மருத்துவர் இனி சிறிது நாள் மதுவை தொடக்கூடாது என்ற நிபந்தனையை பெற்றோர்களுக்கு விதிக்க, மகன் சொன்னால் கேட்கும் ரகம் இல்லையே என்று வருந்தினார்கள். அவர் சென்றதும் இருவரும் தரணீஸ்வரனை பார்த்து விட்டு வந்தார்கள்.
நல்ல மயக்கத்தில் இருந்ததால் பெற்றோர்களின் கண்ணீர் அவன் கண்ணில் நிறையவில்லை. கண் விழிக்கும் வரை பக்கத்திலேயே இருந்தார்கள். ஆதிலட்சுமி தலைக்கோதிக் கொண்டிருக்க, தயாளன் கால் மாட்டில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் அவனையே.
அரை மணி நேரத்தில் முழிப்பு தட்டியது. விழி திறக்காமல் மூடியே இருந்தான். உணர்வுகள் சொல்லியது தாய் தந்தை பக்கத்தில் தான் இருக்கிறார்கள் என்று. விழி திறந்து அவர்களின் துயரத்தை பார்க்க விரும்பாதவன் தெளியாத மயக்கத்தில் இருப்பதாக காட்டிக் கொண்டான்.
“என் மகன் வாழ்க்கைக்கு ஒரு விடிவு காலமே வராதா. இவன மாத்த எவ்வளவோ முயற்சி பண்ணியும் மோசமான நிலைக்கு தான் போயிட்டு இருக்கான். பெத்த மகன இப்படி பார்க்குறதுக்கு நான் போய் சேர்ந்திடக் கூடாதா…” என்ற வாசகத்தில் படுத்திருந்தவன் உயிர் எழுந்து விட்டது.
மகனை எழுந்ததும் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தார் ஆதிலட்சுமி. தன்னோடு அணைத்துக் கொண்டு சமாதானப்படுத்த தகுதி இல்லாததால் மௌனமாக கண் கலங்கினான். தயாளனுக்கும் மகனின் நிலைமை வருத்தம் தான் என்றாலும் காட்டிக் கொள்ளக் கூடாது என்று இருவரையும் தேற்றினார்.
மூவரையும் பார்த்துக் கொண்டிருந்த அகல்யாவிற்கு மனம் வலித்தது. அவள் இயல்பிலேயே இளகிய குணம் கொண்டவள். யாரிடமும் அதிகம் அதிர்ந்து கூட பேச மாட்டாள். அவள் இயல்பை மாற்றிக் கொண்டு இரண்டு நாட்களாக தான் கொதித்துக் கொண்டிருக்கிறாள். நெருங்கி சென்று ஆறுதல் படுத்தவும் முடியாமல் விலகி நின்று தன் கண் முன்னால் மூவர் கஷ்டப்படுவதை பார்க்கவும் முடியாமல் வெளியேறிவிட்டாள்.
அழுது ஓய்ந்த ஆதிலட்சுமி, “கொஞ்ச நாளைக்கு குடிக்க வேணாம்னு டாக்டர் சொல்லி இருக்காங்க தரணி. அம்மாக்காக கொஞ்சம் உன்னை மதிக்க பாரு. இப்போ உன்னை நம்பி வேற ஒருத்திய கூட்டிட்டு வந்து இருக்கேன். அந்த பொண்ணோட வாழ்க்கையும் சேர்த்து அழிச்சிடாத.” என்றார் அழுகையோடு.
அன்னைக்காக சம்மதித்தாலும் கடைப்பிடிக்க முடியாது என்பதை நன்கு அறிவான் தரணீஸ்வரன். இந்த நான்கு வருடங்களில் எத்தனையோ முறை விட முயற்சி செய்து இருக்கிறான். அவனை விட்டு நகர மறுத்தது மது. தொட்டால் விடாது பேய் அவனை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறது.
“விடு ஆதி அழாத. இனிமே அவன் குடிக்க மாட்டான்.”
“இன்னும் ஒரு ட்ரிப்ஸ் போட வேண்டியது இருக்கு. அதை முடிச்சிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்.”
மருத்துவமனையில் இருந்து கிளம்பினார்கள் நால்வரும். தயாளன் கார் இயக்க, ஆதிலட்சுமி முன் அமர்ந்துக் கொண்டார். அன்னை தான் தன் பக்கத்தில் அமர்வார் என்று எதிர்பார்த்தவன் சங்கடத்தோடு பயணப்பட்டான் அகல்யாவோடு. அவளும் அதே நிலையில் தான் பயணித்தாள் அவனோடு.
வழியில் கோவில் ஒன்றை பார்த்த ஆதிலட்சுமி மகனுக்காக இறங்கினார். தயாளனும் மனைவியோடு இறங்கிக்கொள்ள, இருவர் மட்டும் காரில். மருத்துவ சிகிச்சை அளித்த பின்னும் தெளியாத மனநிலையில் இருந்தான் தரணீஸ்வரன்.
சோர்வில் தலை சாய்ந்து கண் மூடி இருப்பவனிடம், “சாரி!” என்றாள்.
விழித்திறக்க வெகு கடினப்பட்டு போனான் அவன். ஒருவழியாக திறந்தவன் வாயை திறந்து கேட்காமல் அவள் புறம் பார்வையை திருப்ப, “என்னால தான் உங்களுக்கு இந்த மாதிரி ஆச்சு. நேத்து நைட்டு நான் தான் அடிச்சேன். அப்புறம் தெரியாம தண்ணி பாட்டில் மேல பட்டுடுச்சு. காலைல கூட ஏதோ ஒரு கோபத்துல தான் அப்படி பண்ணேன். உங்களுக்கு இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல. என்னால உங்க மூனு பேருக்கும் ரொம்ப கஷ்டம்.” மனதார மன்னிப்பு கேட்டாள்.
அவள் குரலில் தெரியும் வருத்தத்தில் தன் உடல் நிலையை மறந்து,
“உன்னால எதுவும் ஆகல. நான் பண்ண சேட்டைக்கு ஒரு பொண்ணு அடிக்காம இருந்தா தான் தப்பு. கொஞ்சம் உடம்பு முடியாம போகுது இப்பல்லாம். அதனால தான் இந்த மாதிரி ஆச்சே தவிர உன்னால இல்ல, வருத்தப்படாத.” என்று புன்னகைக்க முயன்று முடியாமல் தலை சாய்ந்துக் கொண்டான் இருக்கையில்.
“உடம்பு முடியாம போகுதுன்னு தெரியுதுல அப்புறம் எதுக்காக குடிக்கிறீங்க?”
“அதைக் கேட்குற உரிமை உனக்கு இல்லை.”
முன் வந்த பதிலுக்கும் இப்பொழுது அளிக்கும் பதிலுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொண்டவள் பேசாமல் வேறு புறம் திரும்பிக் கொண்டாள். ஏதாவது பேசுவாள் என்று எதிர்பார்த்தான். அவளோ அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“விடனும்னு நிறைய முயற்சி பண்ணி இருக்கேன். ஆனா, ரெண்டு நாளுக்கு மேல தாக்கு பிடிக்க முடியல. என்னால உனக்கு தான் கஷ்டம். தாலி கட்டின ரெண்டாவது நாள் கட்டின புருஷன் ஹாஸ்பிடல்ல இருந்தா எவ்ளோ வலிக்கும்னு இருக்கும்னு புரிஞ்சுக்க முடியுது.”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் அடிச்சு இப்படி ஆகிடுச்சுன்னு சின்ன வருத்தம் அவ்ளோ தான்.”
இப்போது சோர்வை தாண்டியும் சிரிப்பு வந்தது அவனுக்கு. அதை காட்ட விடாமல் உடல் சதி செய்தது. மேற்கொண்டு வாதம் வளர்க்க முடியாமல் பின் இருக்கையில் சாய்ந்துக் கொண்டான். வேண்டுதல் வைத்துவிட்டு கலங்கிய கண்களோடு வந்த ஆதிலட்சுமி மகனுக்கு திருநீறு வைத்து விட்டார். அன்னைக்கு புன்னகையை பதிலாக கொடுத்தவன் கண் மூடிக்கொள்ள, மருமகளுக்கும் வைத்துவிட்டார்.
கார் வீட்டை நோக்கி பயணப்பட்டது. ஏற்கனவே உடல்நிலை சரியில்லாதவனுக்கு கார் பயணம் ஒத்துக் கொள்ளவில்லை. வாந்தி வருவது போல் குமட்டியது. கட்டுப்படுத்திக் கொண்டு வெகு நேரமாக அமர்ந்திருந்தவன் மண்டையை யாரோ சுழற்றி ஆட்டுவது போல் இருக்க, முடியாமல் தலை சரிந்தான் மனைவி மீது.
அவன் உருவம் தன் மேல் விழுந்ததும் கோபம் கொண்டவள் வெடுக்கென்று தலையை தூக்கி விட, “முடியல அகல் ப்ளீஸ்…” என்றான்.
தரணி முகத்தை பார்த்து உண்மையென்று அறிந்துக் கொண்டவள் தானாகவே தலையை தோள் மீது சாய்த்துக் கொண்டாள். கண்ணாடி வழியாக இருவரையும் பார்த்த ஆதிலட்சுமி கண்களை மூடி நிம்மதி அடைந்தார்.
மிதமான பயணம் அவன் சோர்வை சற்று தளர்த்தி இருந்தது. விழி மூடி இருந்தவன் தன்னை நிதானப்படுத்தி மெல்ல எழுந்துக் கொள்ள முயன்றான். மயக்கம் அவனை வெகுவாக இழுத்து செல்வதில் குறியாக இருக்க தொப்பென்று விழப்போனான். அதற்குள் சுதாரித்துக் கொண்ட அகல்யா தாங்கி பிடித்துக் கொண்டாள்.
அவன் வசம் இல்லாத உடல் சுழன்று மடி சாய வைத்தது. கணவன் செயலை எதிர்பாராது எப்படி விலக்குவது என்று தெரியாமல் தவித்தவளை சோதிக்காத கார் வீட்டு முன்பு நின்றது.
“அகல், அவனை எழுப்புமா” என்ற ஆதிலட்சுமி நைசாக அங்கிருந்து நகர்ந்து விட, அழைத்துச் செல்ல தயாராக நின்றார் தயாளன். மாமனார் எழுப்புவார் என்ற எண்ணத்தில் அவள் அப்படியே அமர்ந்திருக்க,
“என்னங்க, அவன் ரூம்ல ஏசி போட்டு வைங்க.” என்றார் ஆதிலட்சுமி.
முதலில் அதை புரிந்து கொள்ளாதவர் பின் மனைவியின் முறைப்பில் நகர்ந்தார். அத்தையின் காரியத்தை உணர்ந்துக் கொண்டவள் கண்ணாடியை இறக்கி முறைத்தாள். அவரோ கண்டும் காணாதது போல் சென்று விட, மீண்டும் இருவர் மட்டும் காரில்.
இப்படியே விட்டால் நாள் முழுவதும் காரில் இருக்க வைத்து விடுவார்கள் என்பதால் எழுப்பினாள் அவனை. சிறிது அசைந்து கையை அவள் இடுப்போடு சுற்றிக்கொண்டு தூக்கத்தை தொடர்ந்தான்.
மெதுவாக கைகளை எடுத்து விட்டவள், “எந்திரிங்க” என கன்னத்தைத் தட்டி எழுப்பிட மெல்ல அசைவு பெற்றவன் எழ முடியாமல் எழுந்து அமர்ந்தான்.
காரை விட்டு இறங்கியவள் அவன் புறம் நகர்ந்து கார் கதவை திறந்து விட, கடினப்பட்டு இறங்கினான். இவ்வளவு நேரம் படுத்திருந்த உடல் திடீரென்று நின்றதில் அதிர்ந்து மீண்டும் படுக்க வைக்கும் முயற்சியில் அவனை தள்ளாட வைத்தது. பிடிப்பதற்கு ஒன்னும் இல்லாமல் தடுமாற, நிலைமை உணர்ந்து கணவனின் கைப் பிடித்தாள் அகல்யா.
“சாரி” என்ற தரணி அவளை விட்டு விலகி நிற்க முயல,
“பரவால்ல.” என அழைத்துச் சென்றாள்.
“தேங்க்ஸ்” என்றவன் பட்டும் படாமல் கை பிடித்துக் கொண்டு அறையை அடைந்தான்.
இருவரையும் கண்டு வெளிப்படையாக சிரிக்காத ஆதிலட்சுமிக்கு மனம் நிறைந்தது. ஆனால், அவரின் மருமகளுக்கு தான் மாமியார் மீது கோபம் அதிகரித்தது. சமாளித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் மகனை மெத்தையில் படுக்க வைத்தார்.
வீடு வந்து சேர்ந்தவன் அசதியில் கண் உறங்க, மகனுக்கு தேவையான அனைத்தையும் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆதி சத்தமில்லாமல் அழ துவங்கினார். அங்கு நடக்கும் சம்பவங்களை பார்த்தாலும் பார்க்காதது போல் பால்கனியில் அமர்ந்திருந்தாள் அகல்யா.
மருமகளுக்காக உணவு எடுத்து வந்த தயாளன் சாப்பிட வற்புறுத்த, மாமனாருக்கு மறுப்பு தெரிவித்தாள். இருந்தும் விடாமல் சாப்பிட கட்டாயப்படுத்தினார். அவர் வார்த்தையில் மறுக்க மனம் வராமல் அகல்யா சாப்பிட, மனைவியை சாப்பிட அழைத்தார். மகனை விட்டு வர மறுத்தவரிடம்,
“நீங்க இருந்தா அகல்யா ரெஸ்ட் எடுக்க முடியாது.” என்றிட, அதுவும் சரி என்பதால் மகனை பார்த்தபடி வெளியேறினார் ஆதிலட்சுமி.
சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் எண்ணமெல்லாம் இவர்கள் மூவரை சுற்றித்தான் இருந்தது. தரணீஸ்வரனுக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்பது தெரியும். எதனால் ஆனது என்பதை அறிந்து கொள்ள அவள் முயலவில்லை. காரணம் கணவன் மீதான தவறான எண்ணங்கள் தான். தான் நினைத்துக் கொண்டிருந்ததற்கு எதிராக நேரில் பார்ப்பது இருக்கிறதே என்று குழம்பி தவித்தவள் ஆராய நினைத்தாள் அவன் கடந்த காலத்தை.
ஜீவன் துடிக்கும்…