Loading

கீ – செயினை தேடிக் குழம்பிய ஸ்வரூப் அவ்தேஷ், தாமதமாவதை உணர்ந்து, கிளம்பி விட்டான்.

‘ஹப்பாடா… கூலிங் கிளாஸை பிடுங்குன மாதிரி இதையும் வாங்கிடுவானோன்னு நினைச்சு பயந்தே போய்ட்டேன்.’ என பெருமூச்சு விட்டாள் உத்ஷவி.

அந்த கண்ணாடியால் செய்யப்பட கூம்பு வடிவிலான சிறு பெட்டகத்தினுள், “குட் வைப்ஸ்” என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்தது.

அதன் வடிவமைப்பு கண்ணைக் கவர, அவளால் கையை வைத்துக்கொண்டு அமைதியாக இருக்க இயலவில்லை.

இங்கோ, தண்ணீர் வராத கடுப்பில், அணிந்திருந்த ஆடையையே மீண்டும் அணிந்து கொண்டு, குளியலறை ஷெல்ஃபில் இருந்த, ஜோஷித்தின் துவாலையால் தலையை துவட்டியபடி வெளியில் வந்தாள் விஹானா.

“பார்க்க தான் பெரிய பங்களாவா இருக்கு. தண்ணி தொட்டியை சின்னதா வச்சுருப்பானுங்க போல. கஞ்சப்பயலுங்க.” என முணுமுணுத்தபடி நின்றவளை, மூச்சு முட்டும் அளவு கோபத்துடன் பார்த்தான் ஜோஷித்.

பின்னே, 25000 லிட்டர் வாட்டர் டேங்கில் இருந்த தண்ணீரை ஒரே மணி நேரத்தில் அல்லவா காலி செய்து இருக்கிறாள்.

“போனா போகுதுன்னு ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ண விட்டா, நீ உள்ள போய் சாவகாசமா குளிச்சுட்டு இருக்கியாடி. உனக்கு நேத்து நைட்டே தர்ம அடி குடுத்து கையை காலை உடைச்சு இருக்கணும் திருட்டு ராஸ்கல்.” என்று கடுகடுத்தான்.

அவளோ அவனது திட்டுக்களை எல்லாம் கண்டுகொள்ளாமல், ட்ரெஸ்ஸிங் டேபிளின் முன் நின்று, அங்கு இருந்த ஹேர் ட்ரையரை எடுத்தாள்.

“இத எப்படி யூஸ் பண்றது?” என மிகப்பெரிய சந்தேகத்தைக் கேட்க, ஜோஷித்திற்கோ ஆத்திரம் பீறிட்டு எழுந்தது.

அதனைக் காட்டும் வழி தான் தெரியவில்லை. எப்படி காட்டினாலும் மதிக்க மாட்டேங்குறாளே! என நொந்தவன், இடுப்பில் கை வைத்து அவளை உறுத்து விழிக்க, அப்போது தான் அவனது முறைப்பு அவளை சுட்டதோ என்னவோ,

“சரி சரி… கோபப்படாத. பாத்ரூம் பளபளன்னு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு இருக்கவும், ஆவலை அடக்க முடியாம, பாத்டப்க்குள்ள தண்ணியை திறந்து விட்டுட்டே தூங்கிட்டேன். நேத்து நைட்டு, நீங்க அடைச்ச ரூம்ல ஒரே கொசுக் கடி. இதுக்கு போலீஸ் ஸ்டேஷன்ல ஹேண்ட் ஓவர் பண்ணிருந்தா கூட, அங்க கொசுவத்தி வச்சு தூங்கிருப்பேன்.” என்று மிகவும் ஃபீல் செய்தவளைக் கண்டு எங்கு சென்று முட்டுவது எனப் புரியாமல் கோபத்தை அடக்கி நின்றான்.

அக்ஷிதாவிடம் இருந்து தின்பண்டங்களை எல்லாம் பறிமுதல் செய்த சஜித், “நீ சாப்பிட்டது போதும். போய் ரூமுக்குள்ள உட்காருடி.” எனக் கடுப்படிக்க, தின்பண்டங்களை பாவமாக பார்த்து வைத்தவள், அவன் கையிலிருந்த மீதமிருந்த சிப்ஸ் பாக்கெட்டை, “போடா காட்ஸில்லா…” என்று குமுறலுடன் தட்டி விட்டதில், மீண்டுமொரு முறை சிப்ஸால் குளித்திருந்தான் சஜித் அவ்தேஷ்.

“அய்யோஓஓஓஓஓ. இவளை இங்க இருந்து அனுப்பித் தொலைஞ்சா தான் எனக்கு நிம்மதி.” எனக் கடியானவன், வேகமாக ஸ்வரூப்பிற்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.

“எப்ப, பிளானை ஸ்டார்ட் பண்றது?” எனக் கேட்டு விட்டு, அவன் பதிலுக்காகக் காத்திராமல்,

“இந்தத் திருட்டு பிசாசுங்க தொல்லை தாங்க முடியல. முதல்ல மூணு பேரையும் ஒழிச்சுக் கட்டணும். இவளுங்களை பார்த்தா, பெருசா எதையும் திருட வந்தது மாதிரி தெரியல. பிக்பாக்கெட் கேசா தான் இருக்கும்” என்று மேலும் அனுப்பினான்.

அலுவலகத்திற்கு வந்து விட்ட ஸ்வரூப், சஜித்தின் குறுஞ்செய்தியை யோசனையுடன் பார்த்து விட்டு, “நோ. இவளுங்களை பத்தி பேக் கிரவுண்ட் செக் பண்ணுனப்ப, சில விஷயம் தெரிஞ்சுது. அது முழுசா கன்ஃபார்ம் ஆகணும்ன்னா, மூணு பேரும் வாயைத் திறக்கணும். நம்மளை டிஸ்டராக்ட் பண்றதுக்காக, தே ஆக்ட் லைக் இன்னொசென்ட் அண்ட் ஃபியர்லஸ்.  கொஞ்ச நேரத்துல நான் வந்ததும், பிளானை ஸ்டார்ட் பண்ணலாம்.” என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு, பெண்களை வைத்திருக்கும் சிசிடிசி வீடியோவை பார்த்தான்.

அங்கு, அக்ஷிதா உதட்டைப் பிதுக்கியபடி, “அந்த காட்ஸில்லா சிப்ஸை புடிங்கிட்டான் டார்ல்ஸ்” என உத்ஷவியிடம் குறை சொல்ல,

அந்நேரம், விஹானாவும் ஈரக்கூந்தலுடன் உள்ளே வந்து, “பாரு டார்லிங் அந்த பனங்கா மண்டையன, ஒரு ஹேர் ட்ரையர் கூட யூஸ் பண்ண தரமாட்டேங்குறான். காசு வச்சுருக்குறவனுங்களுக்கு கஞ்சத்தனமும் தானா வந்துடும் போல.” என்று முகத்தை சுருக்கினாள்.

உத்ஷவியோ, “மூடிட்டு போய்டுங்க ரெண்டு பேரும். நீங்க பேசுறதுக்கும் சேர்த்து, அந்த வளர்ந்து கெட்ட டைனோசர் என் வாயை தான் தைக்க வருது. நீங்களே யோசிச்சு பாருங்க டார்ல்ஸ், வாய் இல்லாம என்னால வாழ முடியுமா? திருட்டுத் தொழிலை தான், ஸ்மூத்தா பண்ண முடியுமா? ப்ச், இவனுங்களால ப்ராஜக்ட் ஹோகயா ஆனதோட இல்லாம, இந்த நாலு சுவத்துக்குள்ள வேற அடைச்சு வச்சுருக்கானுங்க.” என்று கன்னத்தில் கை வைத்தாள்.

மூவரையும், தனித் தனியாக ஆராய்ந்த ஸ்வரூப்பிற்கு, ஏனோ அவர்களது இயல்பே அது தானென்று உள்ளுணர்வு உந்தியது.

கேமரா இருப்பதால், நடிக்கிறார்கள் என்றாலும் கூட, சிறு நெருடலாவது தோன்றுமே! எது எப்படியோ, அவர்கள் திருட்டுப் பெண்கள். கறக்க வேண்டிய விஷயத்தை கறந்து விட்டு, காவல் நிலையத்திற்கு அனுப்பி விட வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு, வீட்டிற்குப் புறப்பட்டான் ஸ்வரூப்.

வந்தவன், மூன்று பெண்களையும் ஹாலுக்கு வர சொல்லி, அமரும் படி பணித்தான்.

அவர்களுக்கு எதிரிலேயே, தள்ளி தள்ளி ஆடவர்கள் அமர்ந்து கொள்ள, தேஜஸ்வின் நடப்பது புரியாமல் வேடிக்கைப் பார்த்தவாறு நின்றான்.

கால் மேல் கால் போட்டு, அழுத்தப்பார்வையுடன் அமைதியாக பெண்கள் மூவரையும் துளைத்தான் ஸ்வரூப் அவ்தேஷ்.

“ஏன் டார்ல்ஸ் இவன் இப்படி பாக்குறான்” என அக்ஷிதா உத்ஷவியிடம் கிசுகிசுக்க, “ம்ம்… சைலண்டா இருந்தே நம்மளை பயமுறுத்தி, விஷயத்தை வாங்க பாக்குறாராம். நம்மகிட்ட இருந்து ஒரு பதிலை கூட வாங்க முடியாது அவனால…” என இளக்காரத்துடன் முணுமுணுத்தாள் உத்ஷவி.

அப்போது, உத்ஷவி முன் சொடுக்கிட்ட ஸ்வரூப், “உன் பேர் என்ன திருடி?” என ஒற்றைப் புருவத்தை மட்டும் உயர்த்திக் கேள்வியாகக் கேட்க, ‘அது எப்படி ஒரு புருவத்தை மட்டும் தூக்க முடியும்?’ என்ற தீவிர சிந்தனையில் மிதந்தவள், கேட்ட அடுத்த நொடி, “உத்ஷவி” என்று விட்டாள்.

அவளை முறைப்புடன் பார்த்த இரு பெண்களையும் கண்டு அசடு வழிந்தவள், “பேரு தான… டக்குன்னு கேட்கவும் சொல்லிட்டேன்” என்று இளித்து வைக்க, அவளது அசைவுகளை எல்லாம் காந்த விழிகளால் உள்வாங்கிக் கொண்டிருந்த ஸ்வரூப், “தண்ணியை காலி பண்ணுனாளே அவ பேர் என்ன?” எனக் கேட்டு கழுத்தை சுளுக்கு எடுத்தான்.

அவன் கேட்ட தொனியில், சிரிப்பு எழ, “விஹானா.” எனத் தோழியைக் கிண்டலாகப் பார்த்தபடி கூறியதில் விஹானா முறைத்தாள்.

ஜோஷித்தின் மனம் அவனது அனுமதி இன்றியே, அவளது பெயரை உள்ளுக்குள் தக்க வைத்துக்கொள்ள,

அக்ஷிதாவோ, ‘எவனோ நம்மளை கலாய்க்கிறதுக்கு நம்மளை நம்மளே கலாய்ச்சுட்டு போய்டலாம்’ என்று முடிவெடுத்து, “அடுப்படில இருந்து ஸ்னாக்ஸை காலி பண்ணது நான் தான். அக்ஷிதா.” என்றாள் பெருமை பொங்க.

“இதுல பெருமை வேற…” என அவளை மேலும் கீழும் ஒரு மாதிரியாக பார்த்து வைத்த சஜித், “என் பர்ஸை பிக் பாக்கெட் அடிச்சதும் நீ தான்னு சேர்த்து சொல்லு.” என்றான் நக்கலுடன்.

“இது வேறயா?” என உத்ஷவி அக்ஷிதாவை முறைக்க, “நான் திரும்ப குடுத்துடுறேன்னு சொல்லிட்டேன் டார்ல்ஸ்.” என அடக்கமாக உரைக்கும் போதே, ஸ்வரூப் பொறுமையுடன், “சோ, கடைசியா கேட்குறேன். எதை திருடுறதுக்கு இங்க வந்தீங்க?” எனக் கேட்டான் கண்ணை சுருக்கி.

“நானும் கடைசியா சொல்றேன். காசு தான் திருட வந்தோம்.” என்னும் போதே, ஸ்வரூப் ஏதோ பேச வர அவனைத் தடுத்தாள் உத்ஷவி.

“ட்ரெஸ்ஸிங் டேபிள் ட்ராயர்ல, பணத்தை பார்த்தேன் தான். ஆனால் அது ரொம்ப கம்மியா இருந்துச்சு. அதான், பல்க்கா அடிக்கிறதுக்காக லாக்கரை தேடுனேன். போதுமா.” என்றாள் அழுத்தத்துடன்.

“நீ சொல்ற பொய்ய அப்படியே நம்புற அளவு நான் முட்டாள் இல்ல திருடி.” என நக்கல் நகையுடன் கூறியவனை, எரிச்சலுடன் பார்த்தாள்.

‘இவன் முறைக்கிறதை விட, சிரிக்கிறதை பார்த்தா தான் பயமா இருக்கு…

உன் சிரிப்பே… அது சிரிப்பல்ல…
உன் வில்லத்தனத்தின் முகப்பே.’

‘ஹை… இப்பவும் நான் கவிதை யோசிச்சேன்ல.’ என அவளை அவளே பெருமையாக நினைத்துக் கொண்டாள்.

பின், ஆடவனின் பார்வை வீரியம், அவளை மிரள வைக்க, அதனை ஒதுக்கி விட்டு, “ஆமா, உன் பேர் என்ன?” எனக் கேட்டாள் எகத்தாளமாக.

“நீ தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்ல.” என அவன் தோளை குலுக்கிட, “ஓகே, அப்போ நீ டைனோசர், அவன் பனங்கா மண்டையன், இவன் காட்ஸில்லான்னு ஞாபகம் வச்சுக்குறோம்.” என்று அசட்டையாகக் கூறினாள் உத்ஷவி.

அதில் சகோதரர்களின் முகம் தான் கடுமையைத் தங்கியது.

‘யாருடா இவளுங்க… இந்த டெரர் பீஸ்கிட்ட வந்து, வாயை குடுத்து வைக்குதுங்க.’ என அரண்ட தேஜஸ்வின்,

“எங்க பாஸ் எல்லாம் யாருன்னு நினைச்சீங்க.” என அவர்களைப் பற்றி சுருக்கமாக கூறியவன், கூடவே அவர்களது பெயரையும் கூறிட, ஸ்வரூப் தேஜாவைக் காரமாக பார்த்து வைத்து, “மூடு!” என சைகை காட்டினான்.

பெண்களோ அவர்களுக்குள் ஏதோ முணுமுணுத்து விட்டு, கொல்லென சிரித்திட, தங்களை கலாய்க்கிறார்கள் எனப் புரிந்த சஜித்தும் ஜோஷித்தும் விளக்கம் கேட்காமல் கமுக்கமாக அமர்ந்து கொள்ள, ஸ்வரூப் தேஜஸ்வினை முறைத்தான்.

அவனோ, நடப்பது புரியாமல், “இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க?” என கேட்டு வைத்து, ஆடவர்களின் அனல் பார்வையை பரிசாக வாங்கிக்கொண்டான்.

விஹானாவோ, “ராஜ பரம்பரைன்னு எழுதி ஒட்டுங்கடா. வீட்டுக்குள்ள ஒரு லாக்கர் கூட வைக்காம வீடு கட்டி வச்சுருக்கீங்க” என இதழ் கடித்து நகைக்க, அக்ஷிதாவோ, “அதான, ஒரு ஸ்னாக்ஸ் கூட தராத கஞ்ச பிசுனாரிங்க.” என்றாள் சலிப்பாக.

உத்ஷவியோ ஒரு படி மேலே சென்று, “இதென்னடா பேரு வாய்க்குள்ளேயே நுழைய மாட்டேங்குது. அவிதேஷு அவியாத தேஷுன்னு புரியாத மாதிரியே பேர் வச்சுக்கிட்டு.” என்று தலையை சொறிந்தாள்.

தேஜஸ்வினுக்கு தலையே சுற்றியது. அவர்களை சீண்டி விட்டதற்கு இப்போது தனக்கு அல்லவா கன்னம் பழுக்கும் என மிரண்டவன், இரு கன்னத்திலும் கையை வைத்துக்கொண்டு, சகோதரர்களை விட்டு நான்கடி தள்ளி நின்று கொண்டான்.

அவர்களின் பார்வையில் தேகமெங்கும் தீ பாய்ந்தது அவனுக்கு.

எச்சிலை விழுங்கியவன், நிலையை சரி செய்யும் பொருட்டு, “யம்மா களவாணிங்களா. தப்பி தவறி என் பாக்கெட்ல எதுவும் கை வச்சுடாதீங்க நானே ஏழை!” என்று வாயைக் குடுத்தான்.

விஹானா, “ராஜ பரம்பரை ஆளுங்ககிட்ட வேலை பாக்குற நீ ஏழையா?” என நக்கலாகக் கேட்க,

அக்ஷிதா, அவனை மேலும் கீழும் ஏறிட்டு, “வீடு இருக்கா.” எனக் கேட்டாள்.

“இருக்கே” என அவன் பதிலளித்ததும்,

“காரு…?”

“ம்ம் இருக்கு…”

“குடும்பம் குட்டி…?” மீண்டும் உத்ஷவி வினவ,

அவனோ நெளிந்தபடி, “இப்ப தான் மேரேஜ் ஆகி 6 மந்த்ஸ் ஆகி, குட்டி ப்ராசஸ்ல இருக்கு” என்று வெட்கப்பட்டான்.

அவனை கேவலமாய் ஒரு பார்வை பார்த்த உத்ஷவி, “ஏண்டா… வீடு, காரு, குடும்பம் இருக்குற நீ ஏழையா?” என சூடாகக் கேட்டாள்.

அதில் சிலுப்பிய தேஜஸ்வின், “ஹலோ! எல்லாம் இருக்கு. ஆனா, எல்லாமே லோன்ல இருக்கு. நானே எல்லாத்துக்கும் லோன் கட்டிட்டு இருக்கேன். இவ்ளோ ஏன், கல்யாணத்தை கூட லோன் வாங்கி தான் பண்ணுனேன்.” என்று மூச்சு வாங்கக் கூற,

“ஓஹோ!” என உதட்டைக் குவித்த உத்ஷவி, “பொண்டாட்டியைவாவது சொந்தமா வச்சு இருக்கியா? இல்ல அவளும் லோனா?” என்றாள் நமுட்டு சிரிப்புடன்.

“அவளுக்கும் ஈ. எம். ஐ காட்டுவானா இருக்கும்.” என அக்ஷிதா கேலி செய்ய, விஹானா ஹைஃபை கொடுத்துக் கொண்டாள்.

உத்ஷவி, சிரிப்பை அடக்கிக்கொண்டு, ஸ்வரூப்பின் அளக்கும் பார்வையை கண்டுகொள்ளாமல் அறைக்கு நகர்ந்து விட, அக்ஷிதா மெல்ல எழுந்த அடுக்களைக்கு சென்றாள். இத்தனை நேரம் பேசியதில் லேசாய் பசி எழுந்தது.

தேஜஸ்வினுக்கு அத்துடன் வாயை ஃபெவிக்விக் உபயோகித்தது போன்று இறுக்கி மூடிக்கொண்டான்.

‘தேவையா உனக்கு. அதான் அப்பவே மூடுன்னு சொன்னேன்ல’ என ஸ்வரூப் அவனை நோக்கி அர்த்தப்பார்வை வீசினான். கூடவே, ‘மனைவியும் லோனா?’ எனக் கேட்டதில் அவனை மீறி முறுவல் பிறந்தது.

ஜோஷித்திற்கும் சஜித்திற்கும் சிரிப்பை அடக்கவே இயலவில்லை. இந்த மாதிரியான கேலி கிண்டல்களை எல்லாம், மூவருக்குள் அதிகமாகவே செய்து கொள்வர். அதிலும், கையில் யாராவது கிடைத்தால், அவர்களையும் சீண்டி சிரித்துக் கொள்வர்.

ஆனால், இடைப்பட்ட காலங்களில் அவர்களுக்குள் இருந்த சிறுபிள்ளைத்தனமும் தொலைந்தே தான் போனது.

மீண்டும் அதனை மீட்டெடுக்கப் பிடிக்காமல், ‘இவளுங்களை முதல்ல பேக் பண்ணனும்’ என எண்ணிக்கொண்ட இருவரில், ஜோஷித் சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான்.

டீ பாயில் வைத்திருந்த அவனது லைட்டரை எடுக்கும் பொருட்டுத் தேட, அந்தோ பரிதாபம் அதனைக் காணவில்லை.

சுற்றியும் தேடியவன், ஏற்கனவே இருந்த எரிச்சலுடன், சிகரெட் பிடிக்க இயலாத எரிச்சலும் சேர்ந்து கொள்ள, “ஏய் திருடிகளா. என் லைட்டர் எங்கடி.” என்று நைசாக அங்கிருந்து நழுவிய விஹானாவைத் தீப்பார்வைப் பார்த்தான்.

அவளோ, “அதான் வெயில் நல்லா அடிச்சு லைட்டு வருதே. அப்பறம் எதுக்கு  லைட்டரு?” என மிக முக்கிய சந்தேகத்தைக் கேட்க,

பல்லைக்கடித்தவன், “ப்ச், சிகரெட் பத்த வைக்கிற லைட்டர் எங்க?” என்றான் கோபத்துடன்.

விஹானாக் குழம்பி, “இதேதுடா வம்பா போச்சு. எனக்கு சிகரெட் பிடிக்கிற பழக்கமெல்லாம் இல்ல ஜோஷ். அக்ஷி டார்ல்ஸ் நீ எதுவும் இங்க வந்ததுல இருந்து இவனைப் பார்த்து சிகரட் பிடிக்க பழகிட்டியா?” என உள்ளே இருந்த அக்ஷிதாவிற்கு சத்தம் கொடுத்தாள்.

வாயில் ஆப்பிளை வைத்தபடி வந்த அக்ஷிதா, “ச்சீ ச்சீ மனுஷன் வாழுவானா அந்த புகைக்குள்ள” என்றாள் முகத்தை சுளித்து.

“கேட்டுக்கிட்டியா. உன் லைட்டரை வச்சு நாங்க என்ன பண்ண போறோம்” என்று விஹானாக் கூற,

கோபத்தில் கொழுந்து விட்டு எரிந்த ஜோஷித்திற்கு, அவள் ‘ஜோஷ்’ என அழைத்தது பிடிக்கவில்லை. அவனது உள்ளம் அந்நிமிடம் கனிந்ததும் பிடிக்கவில்லை.

“இப்ப எனக்கு என் லைட்டர் வரணும். இல்லன்னா, மூணு பேரையும் கொன்னே போட்ருவேன்” என்று சீறிட,

அதன்பிறகே, இருவருக்கும் இது உத்ஷவியின் வேலை எனப் புரிந்தது.

அதனை வெளிப்படுத்தாமல், அக்ஷிதா, “இப்ப என்ன உனக்கு லைட்டர் தான வேணும். 100 ரூபா வருமா. நானே வாங்கி தரேன். போதுமா.” என்றாள்.

“எது 100 ரூபாயா? அது கோல்ட் பிளேட்டட் லைட்டர். விலை 1 லட்சம்” என்று முறைப்புடன் கூறிய ஜோஷித்தைத் திகைத்துப் பார்த்தனர் இருவரும்.

விஹானா, “தெரிஞ்சுருந்தா அதை நானே அடிச்சு இருப்பேனே.” என அங்கலாய்த்துக் கொள்ள, 

அக்ஷிதா, “கூல் ஜோ. உன் லைட்டர் எங்கயும் போயிருக்காது. ஷவி தான் வச்சு இருப்பா.” என மேலும் பேசும் முன், ஸ்வரூப் விறுவிறுவென அவள் இருக்கும் அறைக்குச் சென்றான்.

அவளது ஜீன்ஸ் பாக்கெட்டின் இரு பக்கமும், புடைத்திருந்தது.

ஒரு பக்கம், ஜோஷித்தின் லைட்டர். மறுபக்கம் ஸ்வரூப்பின் கீ செயின்.

“திருடுனதை எல்லாம் வெளில எடுடி.” கனல் பறக்க ஸ்வரூப் அடிக்குரலில் மிரட்ட,

‘இவன் என்ன என்னை எதுவுமே எடுக்க விட மாட்டேங்குறான்’ என இதழ்களை சுளித்தவள், “போடா! தர முடியாது” என்று பிடிவாதம் பிடித்தாள்.

“ஓகே. நானே எடுத்துக்குறேன்.” என மர்மப்புன்னகையுடன் அவளை நோக்கிப் பாதங்களை அழுத்தமாக எடுத்து வைக்க, உத்ஷவி நகரத் தோன்றாமல் அதிர்ந்து பார்த்தாள்.

முதலும் முடிவும் நீ!
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
44
+1
2
+1
5

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  2 Comments

  1. Indhu Mathy

   ராஜ பரம்பரையை கிழி கிழின்னு கிழிக்கிறாங்க மூணு பேரும்… 🤭🤭🤭🤭

   தேஜா வாயை குடுத்து வாங்கி கட்டிக்கிறான்..🤣🤣🤣🤣

   ஆளுக்கொரு திசையில மூஞ்சியை திருப்பிட்டுப் போற அண்ணன் தம்பிகளை ஒரே இடத்துல பிடிச்சு வச்சுருக்காங்க இந்த திருடிங்க…. 🤗🤗🤗🤗🤗