Loading

 

கண்ணாடி கைகளில் குத்தியதில், இரு கைகளிலும் ரத்தம் வடிய, “உதி என் பொண்டாட்டிடா… என் உலகமே அவள் தான்” என்று வெறிபிடித்தவன் போல கத்திக் கொண்டு, அங்கிருக்கும் பொருட்களைப் போட்டு உடைத்து கொண்டிருந்த துருவை பார்த்து அனைவரும் அரண்டு நின்றனர்.

விதுதான் “முழுசா சந்திரமுகியா மாறிட்டான் போல… இவங்களுக்கு வேற ஒரு லவ் ஸ்டோரி இருக்கா?” என்று புலம்பியவன்,

அர்ஜுனை தட்டி, “டேய், அவன் எல்லாத்தையும் உடைச்சு ஆஃபீஸ காலி பண்றதுக்குள்ள, அவனை நிறுத்தி ‘பிளாஷ் பேக்’ கேளுடா” என அவன் காதில் முணுமுணுக்க, அர்ஜுனுக்கு துருவின் அருகில் போகவே சற்று பயமாகத் தான் இருந்தது.

பின், அவன் அருகில் செல்லும்போது, துருவ் மீண்டும் அஜயின் சட்டையை கொத்தாகப் பிடித்து,

“என்ன சொன்ன? நான் நான் அவளை ஏமாத்த வந்தேனா? ஆமாடா நான் ஏமாத்த தான் வந்தேன். அவளை ஏமாத்த தான் அவள் வாழ்க்கைக்குள்ள வந்தேன்” என்று கத்தியவன்,

பின், கைகள் தளர, அவனை லேசாய் தள்ளி விட்டு, அங்கேயே முட்டிப் போட்டு அமர்ந்து கலங்கிய குரலில், “ஆனா அவள் தாண்டா என்னை ஏமாத்திட்டு போய்ட்டா… என்னை நடைபிணமா ஆக்கிட்டு போய்ட்டா” என்று ஏதேதோ உளறியவன், கடந்த காலத்தைப் பற்றி கூற ஆரம்பித்தான்.

இங்கிலாந்து மாகாணத்தின் தலைநகரமான, லண்டன் மாநகரத்தில் தேம்ஸ் நதிக்கரையை வெறித்த படி கடுங்கோபத்துடன் அமர்ந்திருந்தான் ரிஷிகேஷ், உத்ராவின் அண்ணன்.

“நண்பா… என்னடா ரொம்ப ஜாலியா இருக்க போல” என்று அவனைக் கிண்டலடித்த படி வந்தான், சைதன்யா. ரிஷிகேஷின் ஆருயிர் நண்பன்.

துருவேந்திரன் “டேய், அவன பார்த்தா ஜாலியா இருக்குற மாதிரியா இருக்கு?” என்றான் சைதன்யாவை, முறைத்த படி.

சைதன்யா “இல்லை வேந்தா… இவன் எப்பவும், ஃபிகர்ஸ் கூடத் தான பிசியா இருப்பான் அதான்” என்று கூறிக்கொண்டிருக்கும்போதே, அவனுக்கு போன் வந்தது.

“ஹேய் கியூட்டி! இப்போ ஃபிரீயா. எஸ் பேபி! ஐ ஆம் ஆன் தி வே… கெட் ரெடி!” என்று போனில் யாருடனோ கொஞ்சி விட்டுப் போனை வைத்தவனைப் பார்த்து, தலையில் அடித்த துருவ் “என்னம்மோ நீ ரொம்ப ஒழுங்கு மாதிரி தான்” என அவனை கடுப்பாகப் பார்த்தான்.

சைதன்யா அதனைக் கண்டுகொள்ளாது. “நண்பா இவன் ஏன் இப்படி இடி விழுந்த மாதிரி இருக்கான்னு நீ கேட்டு வை. நான் இன்னைக்கு என் கேர்ள் பிரெண்ட் லிசாக்கு கூட டேட்டிங் முடிச்சுட்டு வந்துடறேன்” என்றான்.

துருவ் புரியாமல், “லிசாவா அது யாரு? அப்போ, ஹீரா என்ன ஆனாள்?” என்று கேட்க,

“ஷி இஸ் போரிங் டா… செம்ம பிகர்ன்னு அவகூட டேட்டிங் போனா என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்றா. அதான் கழட்டி விட்டுட்டேன்” என்றான் அசட்டையாக.

துருவோ, “உன்னால தான் அவனும் கெட்டு நாசமா போறான்” என சைதன்யாவை முறைக்க,

அவன், “யாரு? என்னால உன் அத்தை பையன் கெட்டு போறானா? நானாவது பரவாயில்லை, இவன் லாஸ்ட் வீக் ஏதோ ஒரு பொண்ணுக்கு பணம் குடுத்து அபார்ஷன் பண்ண சொல்லிக்கிட்டு இருந்தான். இதுல என்னை சொல்ல வந்துட்டான்” என்று விட்டு அவசரமாய் கிளம்பினான்.

சைதன்யாவின் அப்பா, அம்மா இருவரும் லண்டனில் அரசாங்கத்தில் முக்கிய புள்ளிகளாக இருப்பவர்கள். பணம் செழித்து வழிய, பையன் ஆசைப்பட்டதை எல்லாம் செய்து கொடுத்திருந்தனர். அதிகப்படியான சுதந்திரமும், ரிஷியின் நட்பும் அவனைப் பல பல தவறுகளை செய்யத் தூண்டியது. தனக்கு வேண்டும் என்றால் அதனை எந்த ரீதியில் வேண்டுமானாலும் சாதித்து கொள்ள தயங்காதவன். எதிரில் எதிரியாய் இருந்தாலும் சரி, நண்பனாய் இருந்தாலும் சரி!

துருவின் பெற்றோர் கீதா-ராமர் இருவரும் காதலித்து மணம் புரிந்தவர்கள் தான். அவனுக்கு 10 வயதாய் இருக்கும்போது, வியாபாரத்திற்காக லண்டன் வர, தம்பதியர் இடையே சிறு சிறு விரிசல் விழ ஆரம்பித்தது.

வெளிநாட்டு மோகம், இருவரின் காதலையும் மறைக்க, ராமர் ஒரு புறம் வியாபாரத்திற்காக மது பானம் என்று சுற்ற, கீதா ‘பார்ட்டி’ என்று வெளியில் சுற்றிக்கொண்டிருந்தார். இதுவரை நன்றாக பார்த்துக் கொண்டிருந்தவர்களின் திடீர் மாற்றம், அவனுக்கு ஏக்கத்தைக் கொடுத்தது. அவனும் அவர்களை விட்டு விலக ஆரம்பித்துத் தனித்தே இருந்து பழகிக் கொண்டான்.

அப்பொழுது தான், அவனின் அப்பாவிற்கு அவரின் சித்தப்பா மகள் காஞ்சனா இங்கு வந்திருப்பது தெரிய வந்தது. மயூரி அவரின் சித்தி வழி சொந்தம் ஆதலால், அவருக்கு அவளை அந்த அளவு பரிட்சயம் இருக்கவில்லை.

அதன்பின், ரிஷி துருவிற்கு நெருங்கிய நண்பன் ஆனான். கல்லூரியில் சேர்ந்ததும் சைதன்யாவும் இருவருக்கும் நெருக்கம் ஆனான். நாட்கள் செல்லச் செல்ல, துருவின் பெற்றோரின் சண்டை பெரிதாகி கொண்டே தான் சென்றது. இருவரின் சண்டையைப் பார்த்து வளர்ந்தவனுக்கு, காதல், திருமணம், பாசம், செண்டிமெண்ட் இதெல்லாம் வெறுப்பாகவே இருந்தது.

சிறு வயதிலேயே தனியாக வீடு எடுத்துத் தங்கி கொண்டவன், படிப்பு முடிந்ததும், அவனாகவே முயன்று தொழில் ஆரம்பிக்க, அவனின் திறமையைக் கண்டு ராமரும், அவரின் வியாபாரத்தில் சில பகுதிகளைக் கொடுத்து பார்க்கச் சொன்னார். முதலில் மறுத்தவன், அவனின் நண்பர்களின் வற்புறுத்தலில், அவனின் அப்பாவின் தொழிலையும் பார்த்து, இப்பொழுது, பல நாடுகளில் கிளைகளை ஆரம்பிக்கும் முயற்சியில் இருந்தான்.

இவர்களின் நட்பு மட்டுமே அவனுக்கு ஒரே ஆறுதல். அவர்கள் செய்யும் அனைத்து தவறுக்கும், பத்திரிக்கையில் இவன் பெயரும் சேர்ந்தே தான் அடிபடும். அவர்கள் செய்யும் தவறை மூடி மறைத்து, அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் அரணாய் இருப்பது துருவ் தான்.

துருவ் ரிஷியிடம், “என்னடா நண்பா ஆச்சு?” எனக் கேட்க,

ரிஷி “எங்க அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாம போனதுல இருந்து மூளை மழுங்கிப் போச்சுடா…” என்று கடுப்படிக்க, துருவ் புரியாமல் பார்த்தான்.

ரிஷி, “அவரு சொத்தை எல்லாம் உத்ராவுக்கே எழுதி வைக்கப் போறாராம். அவரு பிசினெஸ எல்லாம் அவள்தான் கட்டி காப்பாத்த போறாளாம்” என்றவன், மேலும் கோபமாக,

“என்னைக்கு எங்க அம்மாவைக் கொன்ன அந்தக் கொலைகார குடும்பத்தோட அவள் ஒட்டி உறவாடுனாளோ அன்னைக்கே அவள் என் தங்கச்சியே இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன். இப்போ என்னன்னா, அப்பாவால என்னை நம்பி சொத்தைத் தரமுடியாதாமாம்.

நான் எல்லாத்தையும் அழிச்சுடுவேனாம். நாளைக்கு அந்த உத்ராவை இந்தியால இருந்து வர சொல்லிருக்காரு சொத்தை மாத்தி எழுத… அவளும் இத்தனை வருஷமா அப்பா இருக்காரா செத்தாரான்னு கூடப் பார்க்காம இருந்துட்டு, சொத்தை எழுதித் தரேன்னு சொன்னதும், அடிச்சு பிடிச்சு ஓடி வர்ரா” என்றான் காரமாக.

உத்ரா இந்தியாவிற்கு சென்றபிறகு தான், இவர்கள் துருவிற்கு அறிமுகம் ஆனார்கள். அவனுக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்று மட்டும் தான் அவனுக்குத் தெரியுமே தவிர அவளைப் பற்றி காஞ்சனாவின் தயவில் தவறாகவே தான் அறிந்திருந்தான்.

துருவ் “மாமா ஏண்டா இப்படி பண்ணனும்? அவளுக்குப் பங்கு குடுக்க வேண்டியது தான். பட் மொத்த சொத்தையும் எழுதி வைக்கிறதுலாம் ரொம்ப ஓவர். அத்தை என்ன சொல்றாங்க” எனக் கேட்க,

அவன் “அம்மா பாவம் வேந்தா… இவ்ளோ நாள் எங்களுக்காகவே அவங்க ஆசை பாசம்லாம் விட்டுட்டு வாழ்ந்தாங்க. எங்க அப்பாவுக்குக் கொஞ்சம் கூட நன்றி உணர்ச்சியே இல்ல” என்று கூறும் போதே, காஞ்சனாவிடமிருந்து உடனே வர சொல்லி ‘போன்’ வந்தது. அதில் அவன் கிளம்ப, துருவிற்கு அந்த முகம் தெரியாத பெண்மேல் கடுங்கோபம் வந்தது.

அந்த ஆடம்பர மாளிகை போன்ற வீட்டின் எஜமானியாய், அங்கிருக்கும் வேலைக்காரர்களை கண்ணாலேயே வேலை வாங்கி, விலை உயர்ந்த பட்டுடுத்தி, அந்த வீட்டிற்கு மகாராணியாய் வலம் வந்தாள் காஞ்சனா. முகத்தில் சிறிதும் சாந்தம் இல்லை. உத்ராவின் வரவைக் கேள்வி பட்டு, அவள் முகம் கோபத்தில் ஜொலித்துக்க கொண்டிருந்தது.

இதனை நிச்சயம் தடுக்க வேண்டும். அவளுக்கு இந்த சொத்து போகக் கூடாது என்று தீவிரமாய் சிந்தித்து கொண்டிருக்க, அங்கு ரிஷி வந்தான்.

அவரின் முகம் சட்டென்று சோகமாக மாறி, “உங்க அப்பா எடுத்த முடிவைப் பார்த்தியாப்பா… எனக்கு என்னைப் பத்திலாம் கவலை இல்லை. நான் ஏதோ ஒரு முதியோர் இல்லத்துல என் கடைசி காலத்தை ஓட்டிக்குவேன். என் கவலையே உன்ன பத்தி தான்.

3 தலைமுறைக்கு உட்காந்து சாப்புட்ற அளவு சொத்து இருக்கும்போது, நீ எல்லாத்தையும் இழந்து எவன்கிட்டயோ கைக்கட்டி வேலை பார்க்கணுமான்னு வருத்தமா இருக்குப்பா. அதுலயும் என் அக்காவைக் கொலை பண்ணுன குடும்பத்துல வளர்ந்த உத்ராவுக்கு நீ கைக்கட்டி நிக்கனும்னு நினைக்கும்போது நெஞ்செல்லாம் படபடன்னு அடிக்குது” என்று நெஞ்சில் கைவைத்து அமர்ந்தார்.

ரிஷி “மா என்னம்மா ஆச்சு?” என்று அவளைத் தாங்கிப் பிடித்து “நீங்கக் கவலை படாதீங்கமா… அவளுக்கு சொத்து போகாம இருக்க நான் எந்த எல்லைக்கு வேணும்னாலும் போவேன்” என்று பல்லைக்கடித்துக் கொண்டு கூற,

காஞ்சனா விஷமமாய் “அவள் உன் தங்கச்சிப்பா” என்றாள்.

அவன் “அவள் எனக்குத் தங்கச்சியும் இல்லை நான் அவளுக்கு அண்ணனும் இல்லை” என்றான் இதயம் முழுதும் நிரம்பிய பகையுடன்.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…

என்று போனில் பாட்டை ஓட வைத்து, உத்ரா தீவிர சிந்தனையில் இருக்க, அஜய், அர்ஜுன், விது, சுஜி நால்வரும் “என்ன பங்கு இப்ப யாரு என்ன பண்ணுனா?” என்று கேட்க,

அவள் “ப்ச்! எங்க அப்பா தான் பங்கு. உடம்பு சரி இல்லை உன்னைப் பார்க்கணும் போல இருக்கு உடனே வா ன்னு சொல்றாரு. இதுல சொத்தைப் பத்தி என்கிட்டே ஏதோ பேசணும்னு சொல்றாரு” என்றாள் குழப்பமாக.

அஜய், “பங்கு… சைத்தான் சொத்து ரூபத்துல வருதுன்னு நினைக்கிறேன் மண்டை பத்திரம்” என்று கலாய்க்க, அர்ஜுன், “நம்ம எல்லாரும் சேர்ந்து போய் மாமாவைப் பார்த்துட்டு வரலாமா?” என்றான்.

உத்ரா, “வேண்டாம் பங்கு. முதல்ல நான் போறேன் அங்க சூழ்நிலையைப் பார்த்துட்டு அப்பறம் சொல்றேன்” என்றதும்,

அஜய் “உதி நீ கண்டிப்பா போகணுமா? அதுவும் தனியா போகணுமா?” என்று கேள்வியாய் கேட்க, கருணாகரன் அங்கு வந்தவர்,

“உத்ரா, நீ போய் உன் அப்பாவைப் பாரு. அவன் பாவம், அவனுக்குக் கல் எது பால் எதுன்னு அப்போ புரியல, இப்ப புரிஞ்சும் அவனால எதுவும் பண்ண முடியல. இந்த நேரத்துல நீயாவது அவன் கூட துணையா இருக்கணும் உதிம்மா” என்றான் கலங்கியவாறு.

லக்ஷ்மியும், “ஆமா உதிம்மா… அண்ணா தனியா என்ன கஷ்டப்படுறாரோ அந்த காஞ்சனா அவரை நல்லா பார்த்துக்குறாரோ என்னவோ! உன் வாழ்க்கை அவளால பாதிச்சிட கூடாதுன்னு தான் இவ்ளோ நாள் நாங்களும் அமைதியா இருந்தோம். ஆனா அண்ணாவே ஏதோ ஒரு முடிவு எடுத்துருக்காருன்னா கண்டிப்பா ஏதோ பெரிய விஷயமா தான் இருக்கும்” என்று சொல்ல, குழப்பத்துடனே அனைவரிடமும் விடை பெற்று லண்டனுக்கு வந்து சேர்ந்தாள்.

அங்கு முழுதாய் 10 வருடம் கழித்து, முன்னிருந்த கம்பீரம் எல்லாம் மாறி, வதங்கிப் போய் இருந்த தந்தையைப் பார்க்கவே அவளுக்குக் கண் கலங்கியது. அவரை விட்டுச் சென்றிருக்க கூடாதோ? என்ன இருந்தாலும் அப்பாவுடன் இருந்திருக்க வேண்டுமோ! என்று அப்பொழுது தான் சிந்தித்தவளுக்கு தன் மீதே கோபம் வந்தது.

“அப்பா” என்று அழுகையுடன் அவரைக் கட்டி கொள்ள, “சாரி ப்பா… உங்களைத் தனியா விட்டுட்டு நான் போயிருக்க கூடாது” என்று கண் கலங்க,

அவர் “இல்லைடா. நான் தான் உன் வாழ்க்கையையும் சேர்த்து சிக்கல்ல மாட்ட இருந்தேன். நீயும், காஞ்சனா பேச்சைக் கேட்டு இருந்தீனா… இந்நேரம் நீயும் ரிஷி மாதிரி வீணா போயிருப்ப. இப்ப எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா. என் மயூரியே என் முன்னாடி வந்த மாதிரி இருக்கு” என்று அவரும் கண் கலங்கினார்.

பின், இருவரும் சிறிது நேரம் ஆசுவாசப்படுத்தி கொள்ள, வெங்கடேஷ், “உதிம்மா… இனிமே நீ தான் என் எல்லா பிசினெஸையும் பார்த்துக்கணும்” என்று அவள் தலையில் குண்டைத் தூக்கி போட்டார்.

அது போக, “சொத்தை எல்லாம் உன்பேரில் தான் எழுதி வைக்கப் போகிறேன்” என்று கூறியதில், அவள் அவரை முறைத்து

“யப்பா! என்னை ஏதோ பாசமா வரசொல்றியேன்னு பார்த்தா. என்னைப் போட்டு தள்ளத் தான் நீ வரச்சொன்னியா. சும்மாவே உன் பையனுக்கும் எனக்கும் சுத்தமா ஆகல. இதுல, நீ இதை வேற பண்ணுனா அவன் என்னைக் கொலை பண்ண கூடத் தயங்க மாட்டான்” என்றாள் பாவமாக.

அதில் சிரித்தவர், அவள் கையை பிடித்துக் கொண்டு, “இதை எல்லாம் என் பணத்தையும், சொத்தையும், புகழையும் காப்பாத்தணும்னு சொல்லல உதி. ரிஷியோட பழக்க வழக்கம்லாம் சரி இல்லை. அது போக, காஞ்சனா கைல இந்த சொத்தைக் குடுத்தா, குரங்கு கைல குடுத்த பூமாலை மாதிரி எல்லாத்தையும் தப்பான வழிக்குப் பயன்படுத்துவா அப்டிங்கிறதுதான் என் பயமே.

நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் நம்மளை நம்பி இருக்காங்க. அவங்களுக்காகவாவது இதைத் தப்பானவங்க கைக்குப் போக விடக்கூடாதுடா. நீ இந்தியால இருந்தே எல்லா வேலையும் பார்த்துக்கலாம். நான் ஏற்கனவே பாதி பிசினெஸ இந்தியாவுக்கு மாத்திட்டேன் உதிம்மா. இங்க இருக்குறதுக்கு நான் வேற ஆள் போட்டுக்குறேன்… எனக்காக உதிம்மா… ப்ளீஸ்!” என்று கெஞ்சினார்.

அவள் ஒன்றும் புரியாமல் “அதெல்லாம் சரிப்பா, ஆனால், எனக்கு பிசினெஸ் பத்தி என்ன தெரியும்?” என்று கேட்க, அவர், “நான் ஒண்ணும் இதை எடுத்ததும் உன்கிட்ட குடுக்க போறது இல்லை. இங்க என் நண்பன் ஒருத்தன் இருக்கான். அவன்கிட்ட நீ ஆறு மாசம் தொழில் கத்துக்கணும். அதுபோக, ரிஷி எதுவும் பிரச்சனை பண்ண கூடாதுன்னு நான் வேற ஒரு ஐடியாவும் பண்ணி இருக்கேன்.

அதாவது உங்க ரெண்டு பேருக்கும் நான் தனி தனியா ப்ராஜெக்ட் குடுப்பேன். அதை இந்த ஆறு மாசத்துல யாரு கரெக்ட்டா முடிக்கிறீங்களோ அவங்களுக்கு தான் இந்தச் சொத்துன்னு நான் எழுதி வைக்கப் போறேன். அவனால உனக்கு ஏதாவது தொந்தரவு வந்தாலோ, உன்னை வேலை பார்க்கவிடாம பண்ணுனாலும், இதுல இருந்து அவனுக்கு ஒரு பைசா கூடப் போகாதுனு சொல்லப் போறேன்” என்று சொல்ல,

உத்ரா தான் ‘எப்படியும், நம்ம ப்ராஜெக்ட்ட முடிக்கப் போறது இல்ல. வந்ததுக்கு 6 மாசம் லண்டனை சுத்தி பாப்போம்’ என்று நினைத்துக் கொண்டு சரி என்று சம்மதித்தாள்.

பின், அவர் ஒரு விசிட்டிங் கார்டையும், ஃபைலையும் கொடுத்து, நாளைக்கே இந்த முகவரிக்குச் சென்று, வேலையைக் கற்று கொண்டு ப்ரொஜெக்ட்டை தொடங்குமாறுக் கூறினார்.

அவள் அதனைப் பேகில் போட்டுக் கொண்டு “ஓகே பா.” என்றவள் வெளியே வர, காஞ்சனா நின்றிருப்பதை பார்த்து, அவளை முறைத்தாள்.

காஞ்சனா அவளுக்குப் பாசமாக, ஜூஸை கொடுத்து, “ரொம்ப டயர்டா இருப்ப. இதைக் குடி உத்ரா” எனக் கொடுக்க, அவள் மேலும் அவளைக் கடுப்புடன் முறைத்தாள்.

“அட பிடி உத்ரா!” என்று அவள் கையை பிடித்துக் கொடுக்க போக, அப்பொழுது, கை வேண்டும் என்றே தவறி  ஜூஸ் எல்லாம் உத்ராவின் உடையில் கொட்டியது. அதில் அவள் “ச்சை” என்று தலையில் அடித்துக் கொண்டு, அதனைச் சுத்தம் செய்யக் குளியலறை சென்றாள்.

அந்த நேரத்தைப் பயன்படுத்தி, அவள் பேகில் வெங்கடேஷ் கொடுத்த, விசிட்டிங் கார்டை எடுத்து விட்டு, வேறொரு விசிட்டிங் கார்டை வெற்றிகரமாய் மாற்றி வைத்தாள் காஞ்சனா.

“என்ன நண்பா விளையாடறியா…? அவளை வச்சுலாம் ஆறு மாசம் என்னால மேனேஜ் பண்ண முடியாது” என்று துருவ் ரிஷியிடம் கத்திக் கொண்டிருந்தான்.

சைதன்யா, “வேந்தா அவன் என்ன அவன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கவா சொல்றான். ஆறு மாசம் அவளைக் கூட வச்சுட்டு, அவளுக்கு எதையும் சொல்லித் தராம அந்த ப்ராஜெக்ட்ட அவளைப் பண்ணவிடாம பண்ணத்தான சொல்றான்” என்றவன்,

ரிஷியிடம், “நண்பா, நான் வேணுமா உத்ரா டார்லிங்க ஆறு மாசம் பத்திரமா பாத்துக்கவாடா” என்று கேட்க, ரிஷி அவனை முறைத்து விட்டு, துருவிடம் “வேந்தா ப்ளீஸ் டா! அவள் அப்பா பிரெண்ட்கிட்ட பிசினெஸ் கத்துகிட்டா, அப்பறம் கண்டிப்பா ப்ராஜெக்ட்ட முடிச்சுடுவா. அப்பறம் சொத்தெல்லாம் அவ பேருக்கே போய்டும்” என்று கெஞ்சினான்.

துருவ், “அவளுக்கு முன்னாடி உன்னை நான் ப்ராஜெக்ட்ட முடிக்க வைக்கிறேண்டா” என்று சொல்ல, ரிஷி, “இப்போ நான் முடிக்கிறது முக்கியம் இல்ல. அவள் முடிக்கக் கூடாது அதான் முக்கியம்” என்றவனிடம் துருவ்

“ப்ச் சரிடா அப்படியே அவள் என் ஆஃபீஸ்க்கு வந்தாலும், மாமா கண்டுபிடிச்சுட மாட்டாரா? இல்லை அவள் தான் வேற ஒருத்தர்கிட்ட மாறி வந்துட்டோம்னு கண்டுபிடிக்கமாட்டாளா?” எனக் கேட்டான்.

அவன், “ஒரு ஒரு மாசம் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணுடா. அதுக்கு அப்பறம் அம்மா வேற பிளான் சொல்றேன்னு சொன்னாங்க. ஒரு மாசம் வரைக்கும், அவள் அப்பாகிட்ட பேசாம நான் பாத்துக்குறேன்” என்று விட்டு அவனுக்கும் சில அறிவுரையைக் கூற, துருவ் “இதெல்லாம் சரியா வரும்னு எனக்குத் தோணலடா” என்று குழம்பினான்.

ரிஷியும், சைதன்யாவும் தான் அவனை வலுக்கட்டாயமாக ஆக வைத்தனர்.

ரிஷி “அப்பறம் முக்கியமான விஷயம்டா. அவளுக்கு நான் உன் பிரெண்ட்ன்னு தெரியவே கூடாது. ஒரு மாசத்துக்கு எங்க கூட காண்டாக்ட்ல இருக்காத. முக்கியமா அவளுக்குச் சந்தேகம் வராத மாதிரி நடந்துக்காத” என்றான் கண்டிப்பாக.

சைதன்யா, “நண்பா… ஒரு மாசத்துக்கு நானும், லிசா கூடத் தாய்லாந்து போறேன். வந்ததும் உன் தங்கச்சியை இன்ட்ரோ குடுடா” என்று விட்டு, அவன் கிளம்பினான்.

ரிஷி, “நீ நடத்துடா” என்று அவனை பார்த்துக் கிண்டலடித்து விட்டு, துருவை பார்த்து “நண்பா… என்ன ஆனாலும் சரி அவளை இந்த ப்ரொஜெக்ட்டை மட்டும் முடிக்க விடக் கூடாது” என்றான் கண்ணில் வெறியுடன்.

மறுநாள், விசிடிங் கார்டை மாற்றி வைத்ததை அறியாத உத்ரா, அந்தக் கார்டில் இருக்கும் முகவரிக்குச் சென்றாள். துருவின் P A உத்ரா வந்திருப்பதாக அவனிடம் சொல்ல அவளை உள்ளே வரச் சொன்னான். உள்ளே வந்த உத்ராவை பார்த்தவனுக்கு கண்கள் அங்கும் இங்கும் நகரவே இல்லை.

அதிலும், ஒரு கருப்பு நிற டாப்ஸம், சுருள் வைத்த கருப்பு நிற லாங் மிடியும் போட்டு, ஒரு குட்டி கிராஸ் பேகை போட்டுக் கொண்டு, சிறு பிள்ளைபோல வந்தவளை பார்த்தவன், அவளை அங்குலம் அங்குலமாக அவனறியாமல் ரசிக்க ஆரம்பித்தான்.

இங்கு உத்ராவோ, ‘அப்பாவோட பிரெண்ட் ஓல்டு பீசா இருக்கும்னு பார்த்தா… ஒரு Mr. லண்டன் உக்காந்துருக்கான்… ப்ப்பா என்னா கண்ணுடா’ என்று அவளும் அவனைத் தான் விழி விரித்துப் பார்த்து சைட் அடித்துக் கொண்டிருந்தாள்.

பின் தலையை உலுக்கி தன்னிலைக்கு வந்து, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டவனிடம், “ஹை! ஐ ஆம் உத்ரா!” என்று கையை நீட்ட, அவன் அவளை மேலும் கீழும் பார்த்து, “என்ன இது?” என்றான் அவள் உடையைக் காட்டி.

அவள் குனிந்து அவள் உடையை நோக்கி என்னவென்று புரியாமல் அவனைப் பார்க்க, அவன் “இப்படித்தான் ட்ரெஸ் பண்ணிட்டு வர்றதா? பிசினெஸ்க்கு முக்கியமே ட்ரெஸ்ஸிங் தான்… நீ இப்படி வந்து கிளையண்ட் முன்னாடி பேசுனா, ஏதோ LKG பொண்ணுன்னு நினைச்சு நீ பேசுறதை கூடக் காதுல வாங்க மாட்டாங்க. கொஞ்சம் கூட ட்ரெஸ்ஸிங் சென்ஸ் இல்லை” என்று அவளிடம் கடுகடுதான்.

அதில் கோபத்துடன் அவனைத் திட்ட வர, அவளின் அப்பா சொன்னதும் அவளுக்கு ஞாபகம் வந்தது.

“என் ப்ரெண்ட் ரொம்ப கோபக்காரன்மா. அவன் எது சொன்னாலும் பொறுமையா இருக்கணும்டா” என்று சொன்னதில் அமைதியாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

பின், “இப்போ எப்படி ட்ரெஸ் பண்ணனும்” என்று கடினப்பட்டு அமைதியாய் கேட்க, அவன் அவளையே சிறிது நேரம் பார்த்து, அவனின் பி.ஏ வை அழைத்து “இந்த மாதிரி டிரஸ் பண்ணனும்” என்று சொன்னதும், அவள் அதிர்ந்தாள்.

ஏன் என்றால், அவள் இறுக்கமாக ஒரு சட்டையையும், அதன் மேல் ஒரு கோர்ட்டும் போட்டு, தொடை தெரியும் அளவு சின்ன ஸ்கர்ட் போட்டிருந்தாள்.

அதனைப் பார்த்தவள் கோபமாக “என்னால இந்த மாதிரிலாம் டிரஸ் போட முடியாது” என்க, அவன் தோளைக் குலுக்கி விட்டு, “நான் சொல்றதை கேட்டு இங்க தொழில் கத்துக்கணும்னு நினைச்சா கத்துக்கோ இல்லைன்னா போய்கிட்டே இரு… எனக்கு எந்த லாஸ்ஸும் இல்லை” என்றான் அசால்டாக.

அவனைக் கடுப்புடன் பார்த்தவள் “திமிர்பிடிச்சவன்! எவ்ளோ திமிரு இருக்கணும் இவனுக்கு” என்று அவனை சரமாரியாக திட்டிக் கொண்டிருந்தாள்.

பின், அந்த ‘பிஏ’ வே அவளுக்கு அதே மாதிரி ஒரு செட் டிரஸ் எடுத்துக் கொடுக்க, அவள் திருதிருவென விழித்து, “சார்… என்னால இதெல்லாம் போட முடியாது. இப்போ என்ன இந்த டிரஸ்ல சின்னப் பிள்ளை மாதிரி இருக்கேன் அவ்ளோ தான. எனக்கு வேற ட்ரெஸ் தரச்சொல்லுங்க” என்று திமிராகக் கூறியதில்,

அவன் “இது என்ன பொட்டிக் ஆ? உனக்கு வித விதமா டிரஸ் எடுத்துக் குடுக்க… அப்டி உனக்கு டிரஸ் மாத்தணும்னா நீ உன் வீட்டுக்குப் போய் மாத்திட்டு வா” என்றான்.

அதில் உத்ரா “என்னாது? வீட்டுக்குப் போயா? ஹெலோ பாஸ் நான் ரெண்டு மணி நேரம் டிராவல் பண்ணி வந்துருக்கேன். திரும்ப எப்படி வீட்டுக்குப் போயிட்டு வர முடியும்?” எனக் கேட்க, துருவ் “அதெல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் ஒரு மணி நேரத்துல போர்ட் மீட்டிங் இருக்கு… அதை நீ கண்டிப்பா அட்டண்ட் பண்ணனும். அதான் உனக்கு ஃபர்ஸ்ட் செஷன்…

இந்த டிரஸ் ஓட உன்னை உள்ள அலோ பண்ண மாட்டேன். இந்த மீட்டிங் நீ அட்டென்ட் பண்ணலைனா நான் உனக்கு எதுவும் சொல்லியும் தரமாட்டேன்” என்று அவன் பாட்டிற்கு அடுக்கிக் கொண்டு போக, உத்ரா அவனைத் தீயாய் முறைத்தாள்.

‘இவன் ரொம்ப ஓவரா போறான்…’ என்று வறுத்து விட்டுச் சிறிது நேரம் யோசித்தவள், பின், “இப்போ என்ன இந்த டிரஸ்ஸ மாத்தணும் அவ்ளோ தான? இருங்க வரேன்.” என்று வெளியில் சென்றாள்.

முக்கால் மணி நேரம் ஆகியும் அவள் வராததால், “ஹப்பா! இனிமே வரமாட்டா போல…” என்று நினைத்தவன், அவளைப் பற்றி அனைத்தும் ரிஷியிடம் கேட்டுத் தெரிந்து வைத்திருந்தான்.

சிறிது நேரத்தில் மீட்டிங் செல்லலாம் என்று எழுந்தவன், சரசரவெனக் காட்டன் புடவையில், நெற்றியில் படர்ந்த கூந்தலை ஒதுக்கிக்கொண்டே “இப்போ ப்ரொஃபஷனலா இருக்கேனா?” என்றவாறு புருவத்தை உயர்த்தி வினயவியவளை கண்டு சிலையாகி நின்று விட்டான்.

சிறிது நேரம் முன்பு சிறுபிள்ளையாய் தெரிந்தவள், இப்பொழுது தேவதையாய் வர, அவளிடம் துள்ளி குதித்த மனதினை கடிவாளம் இட்டு அடக்கி விட்டு “லெட்ஸ் கோ ஃபார் தி மீட்டிங்” என அவளை அழைத்துச் சென்றான்.

அங்கு ஆளாளுக்கு ஏதேதோ பேச, பாவம் உத்ராவுக்கு தான் ஒன்றும் புரியவில்லை. நேற்று வரை, பிரண்ட்ஸ், காலேஜ், அரட்டை என்று சுற்றிக் கொண்டிருந்தவளை திடீரெனச் சிறையில் அடைத்தது போல் இருந்தது. பின், துருவ் பேச ஆரம்பித்ததில், அவளுக்குத் தூக்கம் சொக்கியது.

மீட்டிங் முடித்து வெளியில் வந்ததும் துருவ், “இன்னைக்கு மீட்டிங்ல நான் என்ன சொன்னேன்?” என்று வினவ, அவள் தான் ‘நான் எங்கடா அதெல்லாம் கேட்டேன்… நான் தூங்கிகிட்டுல இருந்தேன்’ என்று மனதினுள் புலம்பிக் கொண்டு, விழித்தாள்.

“சோ! நான் பேசுன எதையும் நீ கேட்கல அப்படித்தான?” என்று திமிராய் கேட்டு விட்டு,

“பிசினெஸ்ல பேசிக்கே கவனம் தான். அதுலயும் எதிர்ல இருக்குறவங்க என்ன பேசுறாங்கன்னு உன்னிப்பா கவனிக்கணும். உனக்கு ‘கான்செண்ட்ரேஷன்’ சுத்தமா இல்லை. இதுக்கு உனக்கு என்ன பனிஷ்மென்ட் குடுக்கலாம்…” என்று அவளை யோசனையுடன் பார்த்துக் கொண்டு கேட்டான்.

உத்ராவோ “ஈஈ சாரி பாஸ்… காலேஜ்ல கிளாஸ் எடுக்கும்போது தூங்கி தூங்கி பழகிடுச்சா… அதான் பழக்கதோஷத்துல தூங்கிட்டேன்” என்று அசடு வழிந்தாள்.

துருவ் அவளை மேலும் கீழும் விழிகளால் அளந்து “இந்த பில்டிங்ல 16 மாடி இருக்கு. படிக்கட்டுல கீழ போயிட்டு, 16 மாடி வரைக்கும் ஸ்டெப்ஸ் ஏறி வா” என்றதும்,

அவள் “என்னது? 16 மாடி படிக்கட்டுல ஏறி இறங்கணுமா?” என்று அதிர்ந்து கேட்க, அவன் “ஒருதடவை இல்லை 16 தடவை” என அமைதியாய் குண்டு போட்டான்.

உத்ரா மேலும் அதிர்ந்து “இதெல்லாம் ரொம்ப டூ மச்! இதென்ன ஸ்கூலா பனிஷ்மென்ட் குடுக்க?” என்று கதற, துருவ் நக்கலாக “நீ பேசப் பேச இது டபிள் ஆகிகிட்டே போகும். 32 டைம்ஸ் இப்போ ஏறி இறங்கணும்” என்றவன், “உன்னால முடியாதுன்னா, பிசினஸ் கத்துக்க இன்டெரெஸ்ட் இல்லைன்னு சொல்லிட்டு கிளம்பி போ” என்றான் சாதாரணமாக.

அவள் மனதில் அவள் அப்பாவை வறுத்து விட்டு, “உனக்கு இருக்குடி மகனே…! இதுக்குலாம் சேர்த்து வச்சு உன்னை வச்சு செய்றேன் இரு” என்று முறைத்து படியே படிக்கட்டுக்குச் சென்றாள். துருவ் தான் “உன்னைய ப்ரொஜெக்ட்டும் வேண்டாம்… சொத்தும் வேண்டாம்னு நான் ஓட வைக்கிறேன் இருடி…” என்று அவளை பார்த்துப் புகைந்து கொண்டிருந்தான்.

உறைதல் தொடரும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
52
+1
5
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்