3,612 views

அஸ்வின் ‘ஜீவாவை கைது செய்ய போகிறேன்’ என்று சொன்னதைக் கேட்டு, கயல் அதிர ஜீவா அவனை ஆழமாய் ஒரு பார்வை பார்த்து,

“நான் தான் இதை பண்ணேன்னு சொல்றதுக்கு என்ன ஆதாரம்” என்று கேட்க,

அஸ்வின், “ஆதாரம் தான. உங்க தொழிலாளர்கள் தான் ஆதாரம். அதுக்கும் மேல, எப்போவும் ஒன்பது மணிக்கு ஷார்ப்பா எஸ்டேட்ல இருக்குற நீங்க, சரியா நேத்து மட்டும், ஏன் லேட்டா வந்தீங்க…? அதுவும், தீ பிடிச்சுருக்குன்னு சொன்னதுக்கு அப்பறம் தான வந்தீங்க அதான் உங்கமேல எங்களுக்கு சந்தேகம். சோ இப்போ நீங்க ஸ்டேஷன் வர்றீங்களா…” என்றான் ஏளனமாக.

ஜீவா, “உங்க சந்தேகத்துக்காக எல்லாம் என்னால ஸ்டேஷன் வரமுடியாது. அண்ட் மோர் ஓவர்… நான் ஏன் லேட்டா வந்தேன்னு உனக்கு என்னால விளக்கம் குடுக்க முடியாது. என் மேல யாரவது கம்பளைண்ட் குடுத்தா, அரெஸ்ட் வாரண்ட்டோட இங்க வா… நொவ் கெட் அவுட்” என்று பல்லைக்கடித்துக்கொண்டு கூறினான்.

அஸ்வின் கோபமாக, “லுக் மிஸ்டர் வாசுதேவன்… நான் இன்ஸ்பெக்டர். நான் கேக்குற கேள்விக்கு நீங்க பதில் சொல்லி தான் ஆகணும்…” என்று சொல்லும்போதே, அவனுக்கு உயர் அதிகாரிகளிடம் இருந்து போன் வந்தது.

அவன் வாசு வீட்டிற்கு சென்றிருப்பதாக, ஸ்டேஷனில் சொல்ல, அதில் அவனுக்கு போன் செய்தவர், ” அங்க என்ன பண்றீங்க அஸ்வின்…” என்று கேட்டதும், அவன் விவரம் கூறினான்.

அவரோ,” இங்க பாருங்க அவரு சாதாரண ஆள் இல்லை. ஸ்ட்ராங் எவிடென்ஸ் இல்லாம நீங்க எந்த ஆக்ஷனும் எடுக்க முடியாது. அண்ட் வாசு நீங்க சொல்ற மாதிரியான ஆளும் கிடையாது. முதல்ல, நீங்க ஸ்டேஷன் போங்க” என்று சொல்ல,

அதில் கடுப்பான அஸ்வின், ஜீவாவை முறைக்க, ஜீவா புருவத்தை உயர்த்தி நக்கலாக சிரித்து, வாசல் புறம் கையை நீட்டினான்.

அஸ்வின், “நான் ஆதாரத்தோட வந்து உங்களை அர்ரெஸ்ட் பண்றேன் மிஸ்டர் வாசு” என்று சபதமாய் சொல்ல, ஜீவா சிறு தலையசைப்பை மட்டுமே பதிலாய் தந்தான்.

அஸ்வின் வெளியில் சென்றதும், கயலுக்கு புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது.

“யாருங்க இவரு. உங்களுக்கு இவரை தெரியுமா, ஏன் இப்படி உங்க மேல பழி போடறாரு” என்று கயல் கேள்விகளை அடுக்க, அவன் இறுகிய முகத்துடன், “தெரியாது” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி விட்டு, அறைக்கு சென்றான்.

அவன் முகத்தைக் கண்டவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க, அதற்கு மேல் அவனிடம் கேள்வி கேட்க தைரியம் இல்லாமல், சமையலை கவனித்தாள்.

மருத்துவமனையில் அஸ்வின், ஜீவாவின் தொழிலாளர்களை விசாரித்துக் கொண்டிருந்தான். விசாரணையில், அவர்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என்று கேட்டு விட்டு, “உங்க முதலாளி மேல சந்தேகம் இருக்கா… அவரு வேணும்னே இப்படி பண்ணி சிம்பதி கிரியேட் பண்ணி இருக்கலாம்ல” என்று சொன்னதும் தான் தாமதம்…

அங்கிருந்த மூத்த தொழிலாளர், “சார் யாரை பத்தி என்ன பேசுறீங்க? எங்க முதலாளி, எவ்ளோ நல்லவரு தெரியுமா? எங்களுக்கு சின்னதா கூட துரோகம் நினைக்க மாட்டாரு…” என்று எகிற,

மற்றொரு பெண்மணி, “இன்னைக்கு நாங்க மூணு வேலையும் வயிறார சாப்பிட்டு, எங்க பிள்ளை குட்டியெல்லாம் படிக்குதுன்னா அதுக்கு காரணமே எங்க முதலாளிதான். அவரை பத்தி பேசுனா உன் நாக்கு அழிகிடும். போ சாரே இங்க இருந்து” என்று கத்த, சிறு வயது தொழிலாளர்கள் கழுத்தில் கத்தி வைக்காத குறையாக அவனை மருத்துவமனையில் இருந்து துரத்தி விட்டனர்.

அதில் கடும் கோபத்திற்கு ஆளான அஸ்வின், “பெரிய இவன் அவன்… ஏமாத்துக்காரன். எல்லாரையும் நல்லா ஏமாத்தி வச்சிருக்கான். அவனுக்கு இரக்க குணம் இருக்காம்… ஹ்ம்ம்” என்று ஏளனமாய் சிரித்தவன்,

“அவன் இரக்கமே இல்லாத மிருகம்… அவனை அழிக்காம இங்க இருந்து நான் போகவே மாட்டேன்” என்று இரண்டு நாட்களாய் எவ்வளவோ முயற்சி செய்தும், அவனால் ஜீவாவிற்கு எதிராக ஆதாரம் கண்டு பிடிக்க முடியவில்லை.

அந்த மலைகிராமத்தில் கார்த்தி தான் தீவிர சிந்தனையில் இருந்தான். ‘நமக்கு எப்போ உடம்பு சரி ஆகி, எப்போ ஊருக்கு போறது…’ என்று நினைக்கையிலேயே, பூவரசி அங்கு வர, இப்பொழுது லேசாக பேச முயற்சி செய்தவன், “ஹெலோ” என்று அவளை அழைக்க, அவள் இவனை பார்க்கவே இல்லை.

பின், முயன்று சிறிது சத்தமாக “ஏ பொண்ணே” என்று அழைக்க, அப்பொழுது தான் அவள் காதில் விழ, “இன்னா” என்று திமிராக கேட்டாள்.

‘இதை கூட எகத்தாளமா தான் கேட்பா போல’ என்று நினைத்து விட்டு, “நான் இங்க இருந்து போகணும்” என்று கடினப்பட்டு பேச, அவனை ஒரு மாதிரி பார்த்தவள், “உன்னால முதல்ல நடக்கவே முடியாது, அப்பறம் இங்க இருந்து எப்புடியா போவ.” என்று கேட்க, அவனுக்கும் தெரியவில்லை.

பின், “இங்க கார் பஸ் எதுவும் வராதா” என்று கேட்க, நீ என்ன லூசா என்பது போல் பார்த்தாள்.

“யோவ். . நீ என்ன டௌனுலயா இருக்க? இந்த காட்டுக்குள்ள, இவருக்கு காரும் பஸ்ஸும் வரணுமாம். இங்க அதெல்லாம் வராது. எங்க போறதுனாலும் நடந்து தான் போவனும்…” என்று சொல்லி விட்டு, அவனுக்கு மருந்து போட அப்பொழுது, பெரிய சாமி அங்கு வர, அவரிடமும் அவன் அதே பாட்டை பாடினான்.

அவர், “இல்ல சாமி, இப்போ நீங்க நடந்துலாம் பயணம் பண்ண முடியாது. அது மட்டும் இல்லாம, இன்னும் அஞ்சு நாளைல கோவில் திருவிழா இருக்கு. அதுக்கு எல்லாரும் காப்பு கட்டிருக்கோம் யாரும் இந்த ஊருக்கு வரவும்  கூடாது இங்க இருந்து யாரு வெளியவும் போவ கூடாது” என்றவர், “நாங்க வெளி ஆளுங்களை எல்லாம் எங்க மலைக்குள்ள அனுமதிச்சதில்லை சாமி. நீங்க குத்துயிரும் கொலையுயிருமா கிடந்ததால தான், அதுவும் நான் தான் வம்படியா உங்களை உள்ளாரா கூட்டியார சொன்னேன்…” என்றார்.

“சார்… என் அண்ணன்” என்று பேசியவனுக்கு இருமல் வர, இருமிக்கொண்டே, “என் அண்ணன் போன் நம்பர் தரேன். நீங்க அவர்கிட்ட போன் பண்ணி நான் இங்க இருக்கேன்னு சொன்னால் போதும், அவரே வந்து என்னை கூட்டிட்டு போய்டுவாரு…” என்று சொல்ல, பெரிய சாமி, தலையை சொரிந்து, “போனா அப்படின்னா ஏன்னா சாமி…” என்று கேட்க,

பூவரசி “ஐயா, அது ஏதோ டப்பா வாட்டம் இருக்கும். அன்னைக்கு அத்து மீறி நம்ம காட்டுக்குள்ள நுழைஞ்ச ஒரு காக்கிசட்டைக்காரனை கூட, நம்ம ஆளுக கால்ல சுட்டாவுகளே… அந்த ஆளுகிட்ட இருந்துச்சு. அதை தான் இந்த ஆளும் சொல்றாக.” என்று விளக்கம் கொடுத்தவள்,

அவள் கூற்றில் உறைந்திருந்த  கார்த்தியிடம் திரும்பி, “இங்க பாருயா, இங்க அந்த டப்பாலாம் கிடையாது. போறதுன்னா நேருல தான் போவனும்” என்று சொல்லிட,

 கார்த்திக்கு தான், ‘அட கடவுளே, இந்த அட்வான்ஸ் டெக்னாலஜி உலகத்துல போன்னா என்னன்னு தெரியாம, ஒரு காட்டுவாசி கூட்டமா… ஒரு வேளை நம்மளை காப்பாத்துனது கூட, திருவிழா அன்னைக்கு வெட்டி சாப்பிட தானோ’ என்று பெரியசாமியை பார்க்க, அவர் பெரிய மீசையுடன் அவனுக்கு எமனாக தெரிந்தார்.

அவனிடம் பேசி விட்டு பெரியசாமி வெளியில் சென்று விட, பூவரசி, அவனை எப்போதும் போல் திமிராக பார்க்க, அவளை பார்த்தவன் பெருமூச்சுடன் இரண்டு நாள் முன்பு நடந்ததை நினைத்து பார்த்தான்.

அவளிடம் தவறாக நடந்து கொள்கிறானோ என்று நினைத்து, அவளை காப்பாற்ற தட்டு தடுமாறி வெளியில் வந்தவன், பூவரசி, அந்த ஆளை துவைத்துக் கொண்டிருப்பதை கண்டு பேயறைந்ததை போல் நிற்க,

பூவரசி இவனை கண்டதும், “ஏலேய்…. எதுக்குய்யா வெளியாற வந்த.” என்று மிரட்டலாக கேட்க, அவன் இல்லை என்று தலையாட்டி, அந்த ஆளை பார்க்க, அவன் மயங்கியிருந்தான்.

உடனே, பூவரசியும் அவனை பார்த்து விட்டு, “இந்த ஆளு என் அம்மையோட தம்பி. என்னை கட்டிக்கிட சொல்லி பாடா படுத்துறான். இன்னைக்கு அடிச்சதுக்கு ஒரு வாரத்துக்கு எந்திரிக்க மாட்டான்.” என்று புலம்பி விட்டு, அவனை மீண்டும் படுக்கையில் படுக்க வைத்தாள்.

இப்பொழுது அவன், “உன் பேர் என்ன” என்று மெல்லிய குரலில் கேட்க, அவள் உடனே “பூவரசி” என்றதும்,

சிறிதாய் சிரித்தவன்,  “பொருத்தமா தான் வச்சுருக்காங்க” என்று சொல்ல, பூவரசி சட்டென்று, அங்கிருந்த, கட்டையை எடுத்து அவன் கழுத்தில் வைத்து அழுத்தினாள்.

“யோவ், இப்படிலாம் இங்கன பேசிகிட்டு திரியாத. என் பேரை கேட்டது மட்டும் இங்க இருக்குறவகளுக்கு தெரிஞ்சுச்சு, திருவிழாவுக்கு உன் தலையை தானம் பன்னிட்டு, உன் உடம்பை உன்னை எடுத்த இடத்துலயே போட்டுடுவாக. ஒழுங்கா, அமைதியா கிட” என்று மிரட்ட, அவன் தான் அரண்டு விட்டான்.

‘பேர் கேட்டது ஒரு குத்தமாடா… தொட்டு தொட்டு, மருந்துலாம் போட்டு விடுறப்ப, இவனுங்க எதுவும் சொல்லமாட்டானுங்களாம். பேர் கேட்டா மட்டும் தலையை வெட்டிடுவானுங்களாம்’ என்று தனக்குள் பேசி நொந்து கொண்டிருக்க,

வெளியில் வந்த பூவரசி, அவன் வெளிறிய முகத்தைக் கண்டு, வாய் விட்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.

பெரியசாமி அவனிடம் பேசும்போதே, அவன் சற்று பயந்திருந்ததை கண்டவள், அவனை மேலும் பயமுறுத்த இப்படி பேசினாள். கூரை வழியே, அவனின் முகத்தை பார்த்தவள் மேலும் வயிறு வலிக்க சிரித்து விட்டு, அவளின் கூரைக்கு சென்றாள்.

இரண்டு நாட்களாய், இறுகிய முகத்துடன் கயலிடம் கூட பேசாமல், அமைதியாய் இருந்தவனைப் பார்த்தவளுக்கு, மீண்டும் பழைய ஜீவாவை பார்ப்பது போல் இருந்தது. அவனிடம் எதைப் பற்றி கேட்பதற்கும் பயமாய் இருக்க.அவளும் அமைதியையே கடைப்பிடித்தாள்.

இரண்டு நாள் கழித்தே, சற்று தன்னிலைக்கு வந்தவன், அப்பொழுது தான், கயலிடம் கூட பேசாமல் இருந்ததை உணர்ந்தான். அவளை வீடு முழுதும் தேடியவன், அவளைக் காணாமல் தோட்டத்திற்கு சென்று பார்க்க, அங்கு செடிகளுக்கு நடுவே அவளின் குரல் மட்டும் கேட்டது.

“என்கிட்டே பேசாத பப்பு… ரெண்டு நாளா நீ என்கிட்ட பேசவும் இல்ல என்னை பார்க்கவும் வரல. நான் உன்னை எவ்ளோ தேடுனேன் தெரியுமா? போ என்கிட்டே பேசாத” என்று கொஞ்சும் குரலில் கிண்கிணியாய் பேசியதை கேட்டவனுக்கு,

‘ஹைய்யோ என்ற பொண்டாட்டிக்கு என்ற மேல எம்பூட்டு பாசம்… என்கிட்ட நேர்ல பேச பயமா இருக்குன்னு, இப்படி தோட்டத்துல வந்து எங்ககூட சண்டை போட்டுக்கிட்டு இருக்கா இருடி ஸ்வீட் ஹார்ட் வரேன்’ என்று செடிகளை விளக்கி அங்கு பார்த்தவனுக்கு முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல் ஆகிவிட்டது.

ஜீவாவின் முகம் கடுகடுவென மாற, மனது தீயாய் ஏறிய, தான் இருக்க வேண்டிய மடி மேல் ஒரு பூனைக்குட்டி இருப்பதை பார்த்துக் காய்ந்தான்.

அவள் இவ்வளவு நேரம் பேசியது பூனைக்குட்டியிடம் தான். இங்கு வந்ததில் இருந்து, சரியாக மதிய வேளையில் அந்த தோட்டத்திற்கு மதில் சுவரில் ஏறி வந்துவிடும்.

முதலில் வாட்ச்மேன் துரத்தி அடிக்க போகையில், கயலுக்கு தான், அந்த பூனைக்குட்டியை பார்க்க, ரசனையாய் இருந்தது.

ஜீவா, அவளை கஷ்டப்படுத்தும் போதும், அந்த ஒரு வாரம், அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் அவளின்  இந்த பூனைக்குட்டி பப்பு  மட்டும் தான்.

கடந்த இரண்டு நாளாய், அதனைக் காணாமல் தவித்து போனவள், அதனை கண்டு திட்ட ஆரம்பித்தாள். அந்த பப்புவும், பாவமாய் முகத்தை வைத்து கொண்டு அமர்ந்து வாலை ஆட்டி மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தது.

அவள் ‘என்னிடம் பேசாதே’ என்றதும் வேகமாக அவள் மடியில் வந்து அமர்ந்து முட்டிக் கொண்டு, அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்ய, அதன் கொஞ்சலில் உருகியவள்,

“இனிமே நீ தினமும் என்னை பார்க்க வந்துடனும் சரியா” என்று மிரட்டலாய் கேட்க, அந்த பப்பு வாலை ஆட்டி, சரி என்றது. அதில் மெலிதாய் புன்னகைத்தவள், அதனைத் தடவிக் கொடுத்து, தட்டில் பாலை ஊற்றி, அது நக்கி நக்கி சாப்பிடுவதையே பார்த்து ரசித்து கொண்டிருந்தாள்.

பப்பு பாலை குடித்து முடித்ததும், முந்தானையால் அதன் வாயை துடைத்து விட்டதில், ஜீவா ஏங்கிப் போய்விட்டான்.

ஏனோ தன்னிடம் அவள் இந்த மாதிரி இருக்க மாட்டாளா என்று இருந்தது அவனுக்கு.

எதையும் யாரிடமும் எதிர்பார்க்காமல், விவரம் தெரிந்ததில் இருந்து தன்னை தானே பார்த்து கொண்டவன், மற்றவர்கள் பாசம் காட்டினால் கூட, அதனை ஏற்று கொள்ளாதவன், இன்று அவள் தன்னை அன்னையாய் தாங்கமாட்டாளா என்று தவித்தான்.

அவளையே ஏக்கப் பார்வை பார்த்தவனை, எதேச்சையாய் திரும்பிய கயல் ஒரு கணம் அதிர்ந்து விட்டு, பின், பூனை உள்ளே வந்ததற்கு திட்டுவாரோ என்று மிரண்டு அவனை பார்த்தாள். அவன் மேல் இருந்த பயத்தில், அவனின் ஏக்கத்தையும், காதலையும் உணரவே இல்லை அவள்.

பப்பு அவனை பார்த்ததும், மியாவ் என கத்திகொண்டு, வெளியில் ஓடி விட, என்ன சொல்வானோ என்று அவனையே பார்த்திருந்த கயலின் பயந்த விழிகளைக் கண்டவன், அவளைப் பார்வையால் ஊடுருவி விட்டு உள்ளே சென்றான்.

அவன்  சென்றதும் தான் கயலுக்கு மூச்சே விட முடிந்தது.

‘ஷப்பா கண்ணையும் பார்வையையும் பாரு.m. விட்டா கண்ணாலேயே என்னை முழிங்கிடுவாரு போல’ என்று புலம்பிக் கொண்டிருந்தவள், அவனுக்கு சாப்பாடை எடுத்து வைக்க, அமைதியாய் வந்து அமர்ந்தவன், ஏதோ யோசனையிலேயே சாப்பிட அவனின் கைபேசி தான் அவனின் சிந்தனையைக் கலைத்தது.

அதனை எடுத்து “ஏதாவது தகவல் கிடைச்சுச்சா?” என்று கேட்க, மறுமுனையில் அவனுக்கு ஆதரவாக பதில் இல்லாததைக் கண்டு கடுப்பானவன், “ப்ச் உங்களால முடியலைன்னா சொல்லுங்க நானே பார்த்துக்கறேன்” என்று அதட்ட,

மறுமுனையில் இருந்தவன் தலையை சொரிந்து “இல்ல சார்… இந்த ஆத்தை தாண்டி கூட போக முடியல. இங்க மலைவாசிங்க ஏதோ திருவிழா கொண்டாடுறாங்களாம். அதனால அந்த பக்கம் கூட யாரையும் விடாம பிரச்சனை பண்றாங்க” என்று சொல்ல, “சரி நானே அங்க வரேன்…” என்று விட்டு போனை வைக்க, கயல் என்னவென்று அவனையே பார்த்தாள்.

அவளிடம், அன்று இன்ஸ்பெக்டர் சொன்னதை கூறி, “அந்த இடத்தில ஆளை விட்டு தேட சொன்னேன். ஆனால் எந்த யூசும் இல்ல. நானே நேர்ல போய் பார்த்துட்டு வரேன்” என்றதும், கயல் பதறினாள்.

“அந்த மலைவாசிங்க ரொம்ப ஆபத்தானவங்கன்னு இன்ஸ்பெக்டர் சொன்னாங்கன்னு சொன்னீங்க..  நீங்க எப்படி தனியா போவீங்க?” அவள் கலக்கமாய் கேட்க, அவளின் அக்கறையில் சிறிதாய் புன்னகைத்தவன்,

“மலைவாசிங்க எப்போவும் ஆபத்தாவனவங்க இல்லை கயல். அவங்களை வாழ விடாம, அவங்களுக்கு சாதாரண மனுஷனுக்கு குடுக்குற உரிமையைக் கூட குடுக்காம, இருக்கிறதையும் பிடுங்கிக்க நினைக்கும் போது, அவங்க வேற வழி இல்லாம, அடுத்தவங்களை தாக்க ஆரம்பிச்சுடறாங்க.

மத்தவங்க அவங்க கூட்டுக்குள்ள வந்தா, அவங்களை அழிச்சுடுவாங்களோன்னு பயம். அதான் அதை வன்முறைல காட்றாங்க…

சொன்னப்போனா அதை வன்முறைன்னு சொல்ல முடியாது… நம்ம காட்டுக்கு போகும் போது, ஏதாவது மிருகம் நம்மளை அட்டேக் பண்ணா, என்ன பண்ணுவோம், நம்மளை காப்பாத்திக்க, அதை காயப்படுத்துவோம். அதே மாதிரி தான் அவங்க கண்ணுக்கு மத்த மனுஷங்க மிருகமா தெரியிறாங்க. அவங்களும் சாதாரண மனுஷங்க தான்… நான் போய் பேசி பார்க்குறேன்” என்று நீண்ட விளக்கம் கொடுத்தவனை விழி விரித்துப் பார்த்தவள், அவன் சொன்னதில் உள்ள உண்மைத்தன்மையை அறிந்து,

“ஆமால்ல… ப்ச் பட் அவங்க பாவம்… அரசாங்கம் கூட அவங்களுக்கு எந்த வசதியும், உரிமையும் கொடுக்கதுல.” என்று கேட்க,

ஜீவா, “ஹ்ம்ம்… அரசாங்கம் குடுக்க தான் செய்யுது. ஆனால் அது அவங்களை வந்து சேருறது தான் இல்லை. இடைல இருக்குற பண முதலைகள், அவங்களோட வீடா ஏன் கோவிலா நினைக்கிற  காட்டை அழிக்க, அவங்க தடையா இருக்காங்கன்னு, முடிஞ்ச அளவு அந்த இனத்தை அழிக்க தான் பார்க்குறாங்க…” என்று சொன்னதும், அவளும் ஏதோ பேச என்று இருவரும் சகஜமாக பேசிக்கொண்டிருக்க, இப்படியாவது அவள் என்னிடம் பேசுகிறாளே என்று குஷியானவனுக்கு, அடுத்த அடுத்த வேலைகள் நினைவிற்கு வர மனதே இல்லாமல், பேச்சை முடித்துக் கிளம்ப போனான்.

கயல் அவனிடம் தயக்கத்துடன், “நானும் உங்க கூட வரவா…” என்று கேட்க, ஜீவா “எங்க?” என்று புரியாமல் பார்த்தான்.

“அதான், அந்த மலை கிராமத்துக்கு… கார்த்தியை பத்தி விசாரிக்க” என்றதில்,

“இல்ல கயல். இப்போவே லேட் ஆகிடுச்சு நான் போகும்போதே இருட்டிடும். எனக்கு அது பழக்கம் தான். ஆனால் நீ எப்படி மேனேஜ் பண்ணுவ காட்டுக்குள்ள? உன்னால இருக்க முடியாது…” என்று மறுக்க, அவள் வாடிய முகத்துடன் சரி என தலையசைத்தாள்.

 ஜீவா ஜீப்பை எடுக்க போகையில், அவளின் சிறுத்த முகம் என்னவோ செய்ய, மீண்டும் அவளிடம் வந்து, “சீக்கிரம் கிளம்பு போலாம்” என்று சொல்ல, கண்கள் விரிய, “நிஜமாவா” என்று கேட்டதும், அவன் அவளின் பாவனையில் அவளை நெருங்க நினைக்கும் மனதினை அடக்கிக்கொண்டு, ம்ம் என்று தலையாட்டினான். அவளும் அடுத்த ஐந்து நிமிடத்தில் தயாராகி வெளியே வந்தாள்.

அவள் அந்த மலைவாசிகள் பற்றிப் பேசியதால் ஒரு ஆர்வத்தில் எல்லாம் வரவில்லை. கார்த்தியைப் பற்றி கண்டிப்பாக ஏதாவது தகவல் கிடைக்கும் என்று முழு நம்பிக்கையோடு செல்கிறவனுக்கு ஒருவேளை எந்த தகவலுமே கிடைக்கவில்லை என்றால், உடைந்து விடுவான். அந்த நேரத்தில் தான் அவனுடன் இருக்கவேண்டும் என்ற உந்துதல் தோன்றியதில் தான், அவளும் வருகிறேன் என்றாள்.

திருமணத்திற்குப் பின், இருவருக்குமான முதல் பயணம். செல்லும் காரியம் வேறு என்றாலும், இந்த நிலையை இருவரும் ஒரு ஒரு விதத்தில் ரசிக்க ஆரம்பித்தனர்.

ஜீவாவிற்கு, அவள் அருகில் அமர்ந்து வந்தது, ஒரு பரவசத்தை கொடுக்க, கியர் போடும் போது வேண்டும் என்றே அவளைத் தீண்டிக் கொண்டு வந்தான். கயலும் முடிந்த அளவு, கதவை ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாலும், அவன் அதற்கெல்லாம் அசரவே இல்லை.

 கயலுக்கு, திருமணம் அன்று, அவனுடன் உயிர் பயத்துடன் காரில் வந்தது நினைவிற்கு வந்தது. அன்றைக்கும் இன்றைக்கும் எவ்வளவு வித்தியாசம். ஆனால் இது தான், நான் இவருடன் செல்லும் கடைசி பயணமாக கூட இருக்கக்கூடும் என்று நினைத்தவளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வர, அதனைக் கட்டுப்படுத்தியவள், இப்பொழுது இந்த நிமிடத்தை, அவளின் கோபதாபத்தை மறந்து, அவன் அருகாமையை ரசித்து, வாழ்வு முழுமைக்குமான நினைவுகளாக தன் மனதில் சேமித்து வைத்து கொண்டாள்.

இருவரும், ஒருவர் பார்க்காத போது மற்றவரை பார்த்து ரசித்து கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் பாதை முடிந்து நடந்து தான் போக முடியும் என்ற நிலையில் இருவரும் நடக்கத் தொடங்கினர். ஜீவாவிற்கு காடு மலையெல்லாம் பழக்கப்பட்டதால் அவன் வேகமாக நடக்க, அவன் வேகத்திற்கு அவளால் தான் ஈடு கொடுக்க முடியவில்லை.

அவளை திரும்பி பார்த்த ஜீவா, அவன் வேகத்தை குறைத்து, அவளை ஒட்டியபடியே வந்தான்.

அவன் உரசியதில், சிறிது நகர்ந்தவளை, மீண்டும் உரசிக்கொண்டு நடக்க, அவள் தான், ‘இங்க தான் இவ்ளோ இடம் இருக்குல்ல தள்ளி நடந்தாதான் என்னவாம்… சரியான வில்லன்.’ என்று நினைத்தவள், சற்று வேகமாக அவனுக்கு முன்னே நடக்கப் போகையில் கீழே இருந்த கல்லை கவனியாமல், அதில் காலை வைத்து விழுக போனாள்.

 அதனைக் கண்ட ஜீவா, சட்டென்று அவள் இடையை வளைத்து பிடித்து தாங்கிக் கொள்ள, அவள் விழ போகிற பயத்தில், கண்ணை இறுக மூடிக்கொண்டு, அவன் சட்டைக்காலரை பற்றிக்  கொண்டாள்.

அவளின் மூடிய விழிகளை ரசனையாய் பார்த்தவன், அவள் இடையில் மேலும் அழுத்தம் கொடுக்க, அதில் அவள் இன்னும் அவனின் சட்டையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

 அதில் புன்னகைத்தவன், அவள் விழிகளின் அருகில் சென்று மெல்ல ஊத, அதில் சிலிர்த்தவள், பட்டென்று கண்ணை திறக்க, அவன் முகம் வெகு அருகில் தெரிந்ததும், விழி விரித்து, ஃப்ரீஸ் ஆகி அவனையே பார்க்க, அவனும், அவளின் விழிகளில் விழுந்து, பாதை தெரியாமல் தொலைந்து போனான்.

எவ்வளவு நேரம் இருவரும், பார்த்துக் கொண்டே இருந்தார்களோ தெரியாது. முதலில் கயல் தான் சுயநினைவுக்கு வந்து, பதறி அவனிடம் இருந்து விலகினாள். அவள் விலகளில் சற்று ஏமாற்றமாய் உணர்ந்தவன், “கேர்ஃபுல்” என்று மட்டும் சொல்லி விட்டு, அவள் கையை பிடித்து கொண்டு நடந்தான்.

அவனின் இந்த வார்த்தை, அன்று சர்ச்சில் நடந்ததை நினைவுபடுத்தி, மற்ற அனைத்தும் ஞாபகம் வந்து சுள்ளென்ற வலியைத் தர, அவன் கைப்பிடியில் இருந்து கையை எடுக்க முயற்சித்தாள்.

அவள் கையை இழுக்க நினைக்கும் ஒவ்வொரு முறையும், அவளின் கையை பற்றி இருந்த அவனின் கைகளின் அழுத்தம் கூடிக்கொண்டே போக, ஒரு கட்டத்தில், கையே ஒடிந்து விடுமோ என்று மிரண்டு, அவளின் முயற்சியை கைவிட்டாள்.

ஆனால், அழுத்தி பிடித்ததில் மணிக்கட்டில் வலி எடுக்க, அவள் முகத்தை சுருக்கியதும், லேசாக பிடியை தளர்த்தியவன், அவளுக்கு வலி எடுக்கும் இடத்தில லேசாக அமுக்கி விட்டு, மென்மையாய் பற்றிக்கொண்டான்.

அவனை திரும்பி பார்த்தவள், ‘சரியான விடாக்கொண்டன்… எனக்கு மட்டும் இவன் எப்பவும் வில்லனா தான் இருப்பான் போல’ என்று மனதில் அவனை திட்டியவளுக்கு தன்னை நினைத்தே கண்ணீர் வர, இருவரும் அமைதியாகவே அந்த ஆற்றைக் அடைந்தனர்.

அங்கு ஏற்கனவே, ஜீவாவின் ஆட்கள் இருக்க, அவர்கள் உதவியுடன், இருவரும் அந்த ஆற்றங்கரைக்கு செல்கையில், “ஆ” வென்ற அலறல் சத்தம் காட்டைக் கிழித்ததில், அனைவரும் அதிர்ந்தனர்.

நேசம் தொடரும்…
-மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
28
+1
73
+1
5
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment