Loading

இவ்வளவு தாமதத்திற்கு மன்னிக்கவும் நண்பர்களே! இனி அடுத்தடுத்த அத்தியாயங்கள் விரைவில் வந்து விடும்.

🌸🌸🌸

இருவரும் பேசிக் கொள்ளும் நேரம் அதிகரித்திருப்பதால், அற்புதனிடம் இருந்து விலகி நிற்கும் யக்ஷித்ராவோ, தனது கடந்த கால வாழ்க்கைக் கதையின் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக அவனுடன் மனதால் நெருங்கிக் கொண்டிருக்கிறாள்.

 

‘இரவு நேரத்தில், ஆழ்ந்த உறக்கத்தை விரும்பும் தான், அப்போது எழுந்து தயாராகி, வேலைக்குச் செல்வதைப் போன்ற ஒரு கொடுமையான விஷயம் வேறெதுவும் இல்லை என்பது அற்புதனின் சொந்தக் கருத்து.

 

இதை அலுவலகம் இன்னும் உறுதிப்படுத்தாமல் இருப்பது மட்டும் தான் அற்புதனுக்கு இப்போதைய நிம்மதி.

 

நல்லவேளையாக, தன் மனைவிக்கு அந்த துயரம் ஏற்படவில்லை என்று தன்னைத் தேற்றிக் கொண்டான்.

 

மாலையில் அவனுக்கு முன்பாகவே வீட்டிலிருந்த மனைவி, அவனைப் பார்த்ததும் புத்துணர்வுடன்,”குட் ஈவ்னிங்” என்று வாழ்த்துச் சொன்னாள்.

 

“வெரி, வெரி குட் ஈவ்னிங்” என்றான் அற்புதன்.

 

உடனே ,”அதை ஏன் இவ்ளோ வெறியாகச் சொல்ற?” என்று மடக்கினார் அகத்தினியன்.

 

“இல்லையே அப்பா! நல்லா சிரிச்ச முகமாகத் தான் சொன்னேன்!” என்று சமாளித்தவன், பையைக் கூட அறையில் வைக்கத் தோன்றாமல், சோஃபாவின் கடைக்கோடியில் போட்டான் அற்புதன்.

 

அவனது சோர்ந்த முகத்தை அவதானித்து, உள்ளே சென்ற சிறிது நேரத்தில் காஃபியுடன் வந்தாள் யக்ஷித்ரா.

 

அதை வாங்கிக் கொண்டவன்,”தாங்க்ஸ்!” என்றுரைத்து விட்டுப் பருகினான் அற்புதன்.

 

மாலைப் பலகாரத்தை அடுப்பில் இருந்து எடுத்து வைத்தவர், அதைக் கொணர்ந்து ஆளுக்கொன்றாக கொடுத்தார் கீரவாஹினி.

 

“நான் இப்போ தான் காஃபி குடிச்சேன் மா. ஃப்ரஷ் ஆகிட்டு வர்றேன்” என்று தன்னுடன் வருமாறு மனைவியைக் கண்களால் அழைத்து விட்டுச் சென்றான் அற்புதன்.

 

“எனக்கு இன்னும் மசால் கடலைக் கொடும்மா” என்று சிற்றுண்டியைச் சுவைத்தார் அகத்தினியன்.

 

அவருடனேயே அந்த நீள்சாய்விருக்கையில் அமர்ந்த கீரவாஹினி,”இவன் முகத்தில் சோர்வை விட ஒரு ஏமாற்றம் தெரியுதுங்க!” என்று கணவனிடம் கூறினார்.

 

“என்னவாக இருக்கும்னு நினைக்கிற?” என்று உண்பதை நிறுத்தினார் அகத்தினியன்.

 

“ஒருவேளை, யக்ஷிக்கும், இவனுக்கும்!” என்று சொல்லி நிறுத்தினார் கீரவாஹினி.

 

“காலையில் நம்மக் கண்ணு முன்னால் தானம்மா, பைக்கில் ஒன்றாகப் போனாங்க. அப்பறம் எப்படி?” என்றார்.

 

“அவளை ஆஃபீஸில் கொண்டு விடும் போது எதுவும் நடந்திருந்தால்?” என்ற கேள்வியை முன்னிருத்தினார் மனைவி.

 

“இப்போ அவனோட சோர்வைப் பார்த்துட்டு மருமக தான் கிச்சனில் இருந்து காஃபி எடுத்துட்டு வந்து கொடுத்தாள்” எனப் புன்னகைத்தார் அகத்தினியன்.

 

“நானும் அங்கே தானே இருந்தேன் ங்க? ஆனால், இப்போ” என்றதும்,

 

“அவன் ஃப்ரெஷ் ஆகிட்டு வெளியே வருவான். அப்பவும் முகம் அப்படியே இருந்தால் மேற்கொண்டு யோசிப்போம் மா” என்று கூறினார் கணவர்.

 

“சரிங்க” 

 

🌸🌸🌸

 

“என்னோட கம்பெனியில் ஒரு மாற்றம் கொண்டு வரப் போறாங்க யக்ஷூ” என்று சலிப்புடன் தன்னிடம் உரைத்தவனைக் குழப்பமாகப் பார்த்து, 

 

“என்னதுங்க? உங்களை வேற போஸ்ட்டில் மாத்தப் போறாங்களா?” என்று கேட்டாள் அவனுடைய துணைவி.

 

“நோ! அதைவிட கொடுமையானது நடக்கப் போகுதும்மா” என்றான் அற்புதன்.

 

“அது என்னன்னு சொல்லுங்களேன்!” என்று தவித்தாள் யக்ஷித்ரா.

 

“இப்போதைக்கு சொல்லலை. உன்னோட ஃப்ளாஷ்பேக் முடியிறதுக்குள்ள தெரிஞ்சிடும். அதே முதல்ல சொல்லி முடி சீக்கிரம்!” என வற்புறுத்தினான்.

 

“சரி. போய் முகம் கழுவிட்டு வாங்க” என்று குளியலறைக்குள் அனுப்பினாள் யக்ஷித்ரா.

 

கணவனுடன் வேலை செய்யும் நண்பர்களையோ, சக ஊழியன்களையோ தன் நட்பு வட்டத்திற்குள் இணைத்து இருக்கவில்லை அவள். இல்லையென்றால் அவர்களிடம் கேட்டுப் பார்த்திருப்பாள். திருமணத்திற்கு வந்தவர்களிடம் உரையாடியது மட்டும் தான், அதற்குப் பின், அவன் தன் நண்பர்கள் யாரையும் வீட்டிற்கு அழைத்திருக்கவில்லை. ஆனால், அவன் கூறிக் கேட்டது வரை, அவர்களெல்லாம் குணத்தில் சோடைப் போனவர்கள் அல்லர்!

 

குளியலறையில் இருந்து வந்ததும்,”உன் கதையைத் தொடரு” என்று கூறினான் அற்புதன்.

 

தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக அறைக்குள் வந்து விட்டு, இப்போது இங்கேயே இருந்து கொண்டு, தன்னைக் கதையைக் கூறுமாறு கேட்பவனை விசித்திரமாகப் பார்த்து வைத்தாள் யக்ஷித்ரா.

 

“வெளியே போக வேணாமா ங்க? அத்தைக் காத்துட்டு இருப்பாங்க” எனவும்,

 

“ஓஹ் மறந்துட்டேன்” என்றவனைப் பாவமாக ஏறிட்டாள்.

 

“வா போகலாம்” என அவளது பார்வையைக் காணாமல் வெளியேறினான் அற்புதன்.

 

அவனுடைய அசதி வேலையின் காரணமாக இருக்கலாம் என்று மனைவியை நம்ப வைத்திருந்தார் அகத்தினியன். 

 

எனவே,”உனக்கு ஸ்நாக்ஸ் எடுத்து வைக்கவா?” என்று மகனிடம் பரிவுடன் கேட்டார் கீரவாஹினி.

 

“நானே எடுத்துக்கிறேன் ம்மா” என்று கூறியவன், அப்போதும் விடாமல் மனைவியை உடன் அழைத்துப் போனான் அற்புதன்.

 

“பாருங்க!” 

 

“நீயே பாரு வாஹிம்மா! யக்ஷியை கூடவே கூப்பிட்டுட்டுச் சுத்துறான்! அவங்களுக்குள்ளே பிரச்சனை இருக்கும்னா நினைக்கிற?” எனக் கேட்டார் அகத்தினியன்.

 

“இல்லைன்னா சரி தான் ங்க” என்று பெருமூச்சு விட்டார் கீரவாஹினி.

 

அடுக்களையில் இருந்து வந்த மகனும்,மருமகளும் மீண்டும் அறைக்குள் நுழைந்து கொண்டனர்.

 

“இனி இதை யோசிக்காதே ம்மா” எனச் சுட்டிக் காட்டிக் கூறினார் அகத்தினியன்.

 

“அப்பாடா!” என்று அசதியை விரட்ட முயன்ற அற்புதன்,”உன்னோட தட்டையும் கட்டிலில் வச்சிட்டு உட்காரு யக்ஷூ” என்றான்.

 

அவளும் அவன் கூறியதைச் செய்யவும்,”ஸ்டார்ட் பண்ணுங்க” என்று ஆர்வத்துடன் சொன்னான்.

 

🌸🌸🌸

 

அன்றைய தினம் அவளுக்கு இத்தனை சோதனை நிறைந்ததாக இருந்திருக்கக் கூடாது!

 

“பேப்பர், பேனா, இன்னும் தேவையானதை எல்லாம் எடுத்துட்டு, வந்து உட்காரு” என்று ஆணையிட்டார் கிரிவாசன்.

 

மகளிடம் அவளுக்கு வேண்டியதை எடுத்துக் கொடுத்து, பரீட்சை அட்டை ஒன்றையும் கையில் திணித்து அனுப்பினார் மீனா.

 

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், தனது படுக்கையில் சாவதானமாக உறங்கிக் கொண்டிருந்தாள் யாதவி.

 

அவளுக்குத் தேர்வு நெருங்கி இருக்கவில்லையே! 

 

வீட்டில் வழக்கமாக அணியும் உடை ஒற்றை உடுத்தி இருந்தவளோ, தேர்வறையைப் போலவே அமைக்கப்பட்டு இருந்த ஒரு அறைக்குள் பிரவேசித்தாள் யக்ஷித்ரா.

 

அங்கு ஏற்கனவே கையில் வினாத்தாளை வைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தார் கிரிவாசன்.

 

“ம்ம்! ரூல்ஸ் ஞாபகம் இருக்குல்ல?” எனக் கேட்கவும், சிரத்தை அனிச்சையாக ஆமென்றே ஆட்டினாள் அவரது மகள்.

 

“கொடுத்த நேரத்துக்குள்ள எழுதி முடிக்கனும். பப்ளிக் எக்ஸாம் எப்படி நடக்குமோ, அதைத் தான் டெமோவாக காட்டப் போறேன் இப்போ!” என்றார் கிரிவாசன்.

 

‘அதை ஸ்கூலில் டீச்சர்ஸே சொல்லிட்டாங்களே!’ என்ற சலிப்பை மறைத்துக் கொண்டு, ஆசனத்தில் பவ்யமாக அமர்ந்தாள் யக்ஷித்ரா.

 

மேஜையை ஓரளவிற்கு ஆராய்ந்து பார்த்தாள்.அதில், விடை எழுதுவதற்கானத் தாள்கள், தண்ணீர் பாட்டில் மற்றும் தாள்களைக் ஒன்று சேர்த்துக் கட்டிட, நூல் கூட இருந்தது, அதுவும், தேர்வுகளில் கொடுக்கப்படும் வடிவத்தைக் கொண்டு இருந்தது.

 

“ம்ம்.. பிடி” என்று வினாத்தாளைக் கொடுத்தார் அவளிடம்.

 

அதைக் கையில் வாங்கிக் கொண்டவள், வாசிக்கத் தொடங்கியதும்,”கால் மணி நேரம் நல்லா வாசி. அதுக்கப்புறம் தான் மெயின் ஷீட் தருவேன்” என்று உறுதியாக கூறினார் கிரிவாசன்.

 

“ஓகே சார்” என்றவள், கேள்விகளை ஆழமாக வாசித்தாள் யக்ஷித்ரா.

 

மனப்பாடம் செய்திருந்த முக்கால்வாசி கேள்விகள் தான் வந்திருந்தது. எனவே, அவளது முகத்தில் ஒரு சிறிய இளக்கம் தோன்றி மறைந்தது.

 

“என்ன எல்லாம் ஈசியா?” என்று வினவினார் அவளது தந்தை.

 

“யெஸ் சார்” என்கவும், “குட்” என்று கூறியவர், கால் மணி நேரம் ஆனதும், அவளிடம் விடைத்தாளைத் தந்தார் கிரிவாசன்.

 

மடமடவென அதில் விடைகளை எழுத ஆரம்பித்து விட்டாள் யக்ஷித்ரா.

 

அவளுக்கு இந்த தேர்வை விரைவில் முடித்து விட வேண்டும் என்ற வேகம்!

 

அதனால், அவளது கைகளால் பதில்கள் வேகமாக நிரப்பப்பட்டது.

 

அதையும் கவனித்துக் கொண்டு இருந்தார் கிரிவாசன்.

 

அவரைப் பொறுத்தவரை, அவளுக்குத் தேர்வு வைப்பது, அறிவைச் சோதிக்க மட்டுமே! எனவே, மகள் இதில் தேர்ச்சி பெறக் கூடாது என்ற குரூர புத்தி கிடையவே கிடையாது கிரிவாசனுக்கு.

 

கண்களில் மெச்சுதலுடன் மகள் தேர்வு எழுதுவதைப் பார்த்தார் தந்தை.

 

இடையிடையே, மேலும் எழுத விடைத்தாள்களைப் பெற வேண்டிய நேரங்களில் எல்லாம், எழுந்து வந்து அவரிடம் பெற்றுக் கொண்டாள் யக்ஷித்ரா.

 

ஐந்து நிமிடங்கள் கரங்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, மறுபடியும் எழுத தொடங்கினாள்.

 

தேர்வு முடியும் நேரத்திற்கு முந்தைய பத்து நிமிடங்களில், “இன்னும் டென் மினிட்ஸ் தான் இருக்கு!” என்று குரல் கொடுத்தார் கிரிவாசன்.

 

“ஓஹோ! நான் இப்போ தான் எழுந்தேன்.. அதுக்குள்ளே எழுதி முடிக்கப் போறாளா?” என்று ‘உச்’ கொட்டினாள் யாதவி.

 

“பல்லு விலக்காமல் நின்னா, அவர் உனக்கும் வந்து பனிஸ்மெண்ட் தருவார்டி!” எனச் சின்ன மகளை விரட்டினார் மீனா.

 

“சார் ,த்ரெட்!” என்று உரக்க கேட்டாள் யக்ஷித்ரா.

 

அவளிடம் நூலைக் கொடுத்தவர், கைக்கடிகாரத்தைப் பார்வையிட்டார் கிரிவாசன்.

 

அதில், இன்னும் ஐந்து நிமிடங்கள் மீதி இருக்கவும், காத்திருக்கலானார்.

 

அதற்குள் தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்து விட்டு, தாள் வாரியாக சரி பார்த்து விட்டு, நூலைக் கொண்டு கட்டி முடித்தாள் யக்ஷித்ரா.

 

தேர்வு முடிந்தது, என்பது போல, “பேப்பரைக் கொடு” என வாங்கிக் கொண்டவர், அதை தனது அலுவலக அறையின் முக்கியமான அலமாரி ஒன்றில் பத்திரப்படுத்தி விட்டுக் கிளம்பினார் கிரிவாசன்.

 

‘இன்னும் நாலு இருக்கே!’ என்றவாறு வெளியே வந்தாள் யக்ஷித்ரா.

 

“ஸ்கூலில் எக்ஸாம் நடந்தால் கூட இவ்ளோ ஸ்ட்ரிக்ட் ஆக நடக்காது அக்கா” என்றாள் யாதவி.

 

“இப்போ தான் எழுந்தியா?” என ஆதங்கத்துடன் கேட்டாள் அவளிடம்.

 

“யெஸ்..‌.யெஸ் … உன்னைப் பிடிச்சா, என்னை ஃப்ரீயாக விட்டுடுவாரே!” என்று குதூகலித்தாள் தங்கை.

 

“வா… இன்னொரு தம்ளர் பூஸ்ட் குடி” எனப் பெரியவளை அழைத்துச் சென்றார் மீனா.

 

இனி அடுத்த தேர்விற்குத் தயாராக வேண்டும் என்ற சோகத்தில் அன்னைக் கொடுத்த பானத்தைப் பருகினாள் யக்ஷித்ரா.

 

“அதான், நீ எல்லா எக்ஸாம்ஸிலும் அதிக மார்க்ஸ் எடுத்து இருக்கியா யக்ஷூ?” என்று வினவினான் அற்புதன்.

 

அதற்குப் பிறகு தான், இது தனது தந்தை நடத்தும் தேர்வும் அல்ல, வீட்டிலிருக்கும் தேர்வறையும் அல்ல… தன் கணவனின் வீடு.. அதில் தானும் ஒரு அங்கம்! நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டு இருக்கிறோம்! என்பதையும் சுற்றிப் பார்த்து தெரிந்து கொண்டாள் யக்ஷித்ரா.

 

“சரி, சைக்கிள் விஷயத்துக்கு அப்பறம் உன் சிஸ்டர் யாதவி எக்ஸாம் எழுத மாட்டேன்னுப் போராட்டம் எல்லாம் பண்ணலையா?” எனக் கேட்டான் அவளது கணவன்.

 

“இதிலிருந்து அவளால் தப்பிக்கவே முடியாது” என்று மெலிதானப் புன்னகையை சிந்தினாள் யக்ஷித்ரா.

 

“ஓகே. இன்னும் நாளு எக்ஸாம்ஸ் இருந்ததே! அதுக்கும் இதே தானா?” என்றான்.

 

“ட்வெல்த் வரைக்கும் இதே தான் நடந்துச்சு. மத்த நாலு எக்ஸாம்ஸூக்கும் இதே நிலைமை தான். சோ, அதைச் சொன்னால் ரொம்ப சுத்துறா மாதிரி இருக்கும்” என்று இத்தோடு, வீட்டில் தேர்வு எழுதிய சம்பவத்தை முடித்து விட்டாள் யக்ஷித்ரா.

 

“உங்ககிட்ட எப்பவுமே அனுசரணையாகப் பேசவே மாட்டாரா?” என்று வினவினான் அற்புதன்.

 

“பேசினாரே!” என்று பதிலளித்தாள் அவனது மனைவி.

 

  • தொடரும் 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்