Loading

9 – விடா ரதி… 

 

மீனாவும், பிரியாவும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இப்படி ஒரு திருப்பத்தை ரதியுமே எதிர்பார்க்காதபோது அவர்களுக்கு அதிகப்படி அதிர்ச்சி தான் இல்லையா?

 

“ரதி … ஒரு நிமிஷம் வா…”, எனக் கையோடு மனைவியை அழைத்து சென்றவன், பிரியாவை நின்று ஒரு நொடி திரும்பிப் பார்த்துவிட்டுச் சென்றான். 

 

“என்னாச்சி ரெண்டு பேரும் ஷாக் ஆகி நிக்கறீங்க?”, சுந்தரி இருவரையும் துளைக்கும் பார்வையுடன் கேட்டாள். 

 

“இல்ல…. எல்லாம் ஒரு சந்தோசம் தான்… அவ நினைச்ச வாழ்க்கை அவளுக்கு கெடச்சிடிச்சி…. “, என மீனா சமாளிக்கும் விதமாகப் பதிலளித்தாள். 

 

“ஆமா…. அவ ஆசைப்பட்டவர அவ கல்யாணம் பண்ணது சந்தோசம் தான்…. “, என பிரியாவும் கூறினாள். 

 

“என்னாச்சி ராக்கி? ஏன் தனியா கூட்டிட்டு வந்தீங்க?”, யாரும் இல்லாத இடத்திற்கு வந்ததும் கேட்டாள். 

 

“நான் வரப்போ ஒருத்தி பேசிட்டு இருந்தாலே அவ யாரு?”

 

“அவ மீனா…. என் கூட படிச்சவ தான்…..”, எனச் சுரத்தில்லாமல் கூறினாள்.

 

“உன்மேல செம காண்டு போல?”, அவளின் காதிற்கு பின் காஜல் வைத்தபடிக் கேட்டான். 

 

“அவளுக்கு எப்பவும் இருக்கும் தான். ஆனா இந்த அளவுக்கு இருக்கும்ன்னு நானும் எதிர்ப்பாக்கலப்பா….”, எனக் கூறியபடி அவள் இப்போது அவன் காதின் பின்னே காஜல் வைத்துவிட்டாள். 

 

“எப்பவும் இருக்கும்ன்னா? எந்த அளவுக்கு?”

 

“அவ படிக்கறப்போ கொஞ்சம் கஷ்டப்பட்டா பா…. அவங்கப்பா ஏதோ ஒரு கடைல வேலை பாத்தாங்க. கொறஞ்ச வருமானம் தான். இவ நல்லா படிச்சதால ஃப்ரீயா படிச்சா…. ஸ்கூல் டாப்பெர்… அதனால அந்த காலேஜ்ல அப்போ ஃபீஸ் இல்லாம படிக்க வச்சாங்க…. அப்போவே மத்த பொண்ணுங்கள பாத்து அவங்க டிரஸ் தோற்றம் எல்லாம் பாத்து கொஞ்சம் ஏங்குவா …. நாங்க அந்த வித்தியாசம் பாக்காம தானே பழகுவோம். அப்பறம் நாட்போக்குல அவளோட அப்படிப்பட்ட பேச்சு கொறஞ்சது. கஷ்டம் தெரிஞ்சி வளர்ந்ததால் பொறுப்பாவும் இருப்பா….”

 

“ம்ம்…. ஆனாலும் மனசுல சுத்தம் இல்லை….‌ ரொம்பவே வயிறு எரியும் போல…. இந்தமாதிரி ஆளுங்ககிட்ட இருந்து தான் கொஞ்சம் தள்ளி இருக்கணும்….”, எனக் கூறியபடி அவளுக்கு காஜல் வைத்த இடத்தில் மெல்ல இதழ் ஒற்றினான்.

 

“நீங்க என்ன உங்க சொந்தக்கார பொண்ண நின்னு பாத்துட்டு வந்தீங்க…”, அவன் தலைமுடியைக் கோதிவிட்டு, கன்னத்தைப் பிடித்து ஆட்டியபடிக் கேட்டாள். 

 

“சொந்தக்கார பொண்ணுங்கறதால தான்…”, குரல் சற்று இறுகியது. 

 

“என்ன விசயம் என்கிட்ட சொல்ல கூடாதோ?”

 

“ஒன்னும் இல்ல…. “

 

“அப்ப ஏதோ இருக்கு….”, ஒற்றை புருவம் உயர்த்திக் கேட்டாள். 

 

“சரி நீ ஜாக்கிரத…. நான் கீழ இருக்கேன்…”, என அவளை மென்மையாக அணைத்து விலகினான். 

 

“கிஃப்ட் குடுக்கணும் ரொம்ப தூரம் தள்ளி நிக்காம கொஞ்சம் பக்கத்துல நில்லுங்க “, அவன் கன்னத்தில் பட்டும் படாமல் இதழ் ஒற்றிவிட்டுச் சென்றாள். 

 

அவன் தான் நடந்ததை நினைத்து தனக்குள் சிரித்துப் பூரித்துக் கொண்டிருந்தான். மிக இயல்பான அணைப்பும், அவளின் முதல் இதழ் தீண்டலே மிக இணக்கமாக மனதை ஆட்கொண்டுவிட்டது. எந்தவிதமான பூச்சுக்களும் இல்லாத இதழ் ஒற்றல். 

 

முதல் முறை கொடுக்கும் பதற்றம் இல்லை, வெட்கம் இல்லை, தயக்கம் இல்லை…. நீ எப்போதும் என்னவன் என்ற அவளின் எண்ணத்தின் வெளிப்பாடு தானே இது…..?

 

அவள் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள், இவன் தான் அதன் இயல்புத்தன்மையை ஆராய்ந்து அவளின் மனவோட்டத்தைக் கணித்துக்கொண்டிருக்கிறான். 

 

அடாவடியாக இல்லாமல் எந்த விதமான ஆர்ப்பாட்டம் இல்லாத அன்பின் வெளிப்பாடுகள் அதிகமாகத் தான் மனதை சந்தோஷிக்கிறது. 

 

“சுந்தரி…. கீழ கூப்பிடறாங்க…”, என அழைத்தபடி வந்து சுந்தரியை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள். 

 

“சவி வரப்போ ரூம் லாக் பண்ணிட்டு வந்துரு…”, எனக் கூறிவிட்டு மற்றவர்களைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுச் சென்றாள். 

 

பிரியாவும், மீனாவும் எதுவும் பேசாமல் அமைதியாக அவர்களைப் பின் தொடர்ந்தனர். சவி அவர்களை அழைத்தபடி அறையை பூட்டிக்கொண்டு பின்னே சென்றாள். 

 

“என்ன டி ரெண்டு பேரும் பேயைஞ்ச மாறி இருக்கீங்க?”, சவி அவர்களைப் பார்த்துக் கேட்டாள். 

 

“ஒன்னுமில்ல….. பசங்க ஞாபகம்…”

 

“ஹே பிரியா.. உன் சொந்தம் தானா ரதியோட புருசன்?”

 

“நெருங்கின சொந்தம் இல்ல… பழைய சொந்தம்ன்னு சொல்வாங்க… நானும் பெருசா பேசினது இல்ல…. விசேசத்துல பாத்து இருக்கேன் அவ்ளோ தான்….”

 

“ரதி லவ் பண்ணது இவர தான்னு உனக்கு தெரியும்ல?”

 

“தெரியும்…. “

 

“சுகன்யாவும் இவர தானே பாத்துட்டு இருந்தா?”

 

“ஆமா….”, என வெளியே வராத குரலில் கூறினாள். 

 

“இப்போ எதுக்கு இத்தன கேள்வி கேக்கற சவி? அதான் கல்யாணம் ஆகிடிச்சில்ல… விடு…..”, என மீனா எரிச்சலுடன் கூறி முன்னே நடந்தாள். 

 

“நீங்க பண்றது சரியில்ல பிரியா…. ரதி நம்ம ப்ரெண்ட்…. அந்த நினைப்பு உங்களுக்கு இருக்கா இல்லையா?”, சவி அவர்களின் எண்ணவோட்டத்தைக் கண்டு, கண்டிப்புடன் கேட்டுவிட்டுத் தனியாகச் சென்றாள். 

 

பிரியா அமைதியாக ஒருபக்கம் நடந்தாள். சுந்தரியின் அருகில் முகம் முழுக்க சந்தோசத்துடன் ரதி நின்றிருந்ததுப் பார்க்க அழகாக இருந்தது. இத்தனை ஆண்டுகளாக அவளின் முகத்தில் காணாமல் போயிருந்த சிரிப்பு இப்போது மீண்டும் வந்திருக்கிறது. கண்களில் அந்த சிரிப்பின் ஜீவன் தெரிகிறது. கல்லூரி நாட்களில் இருந்த குறும்பு இப்போது இல்லை, மனமுதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது அவளது முகத்தில் நன்றாகத் தெரிந்தது. 

 

அங்கிருந்து கணவனைத் தேடும் கண்களில் காதல் எந்தவிதமான திரையும் இன்றி நன்றாகவே தெரிந்தது. நயன பாஷையில் இருவரும் சுற்றத்தைக் கணக்கில் கொள்ளாமல் உரையாடுவதும் பார்ப்பவர் கண்களுக்கு நன்றாகவே தெரிந்தது.

 

“ரதி முகத்துல சிரிப்பு பாத்து ரொம்ப வருஷம் ஆச்சில்ல…. “, ஸ்வேதா சவியின் அருகில் வந்து நின்றபடிக் கூறினாள் . 

 

“ஹே ஸ்வே…. எப்படி இருக்க? எப்ப வந்த? மதியம் தான் நீ வருவன்னு சொன்னாங்க…”, சவி அவளை அணைத்தபடிக் கேட்டாள். 

 

“நேத்து நைட்டு வந்தேன்…. அவர் அடுத்த வாரம் தான் வரமுடியும்ன்னு சொல்லிட்டாரு…. ஒருவழியா இவ கல்யாணத்துக்கு வந்துட்டேன்…”, ஸ்வேதாவின் வார்த்தைகளில் மகிழ்ச்சி அப்பட்டமாகவே தெரிந்தது. 

 

“சரி சரி….. வா அந்த பக்கம் போலாம்…”, சவி அழைத்தாள். 

 

“நான் சுந்தரிகிட்ட போறேன். நீயும் வா…”

 

“இல்ல. கைல சாவி இருக்கு. யாராவது கேட்டா குடுக்கணும்… நீ போ நான் இங்கேயே இருக்கேன்….”, சவி அங்கேயே ஒரு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டாள். 

 

“சரி… இந்தா இதையும் பிடிச்சிக்கோ….”, எனத் தன் கையில் இருந்த பையைக் கொடுத்துவிட்டுச் சென்றாள். 

 

ஸ்வேதாவைக் கண்டதும் இருவரும் அவளைக் கட்டிக்கொண்டனர்.

 

“ஹே… எப்போ வந்த?”, ரதியும் சுந்தரியும் ஒன்றாகக் கேட்டார்கள். 

 

“நேத்து நைட்டு வந்தேன்…”

 

“அண்ணா எங்க?”, சுந்தரிக் கேட்டாள். 

 

“அவருக்கு அடுத்தவாரம் இருந்து தான் லீவு தர முடியும்னு சொல்லிட்டாங்க … அதான் நான் மட்டும் இப்ப வந்தேன்…. ரதி… உன்ன இப்படி பாக்க எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா? அண்ணா எங்க?”, மனதார அவளை அணைத்துக் கூறினாள். 

 

“அதோ அங்க இருக்காரு… தாலி கட்டி இவள தள்ளிவிட்டுட்டு நாம போய் ஜாலியா பேசலாம்…. “, ரதி. 

 

“ஆமாமா…. வேணாம் வேணாம்னு சொல்லிட்டு, இப்போ ரெண்டு பேரும் பண்ற ரொமான்ஸ்ல நாங்க சைடு ரோல் ஆகிட்டோம் டி ஸ்வே… அவ்ளோ ரொமான்ஸ் ஓடுது இவங்களுக்குள்ள….”, சுந்தரி கிண்டல் செய்தாள். 

 

“பண்ணட்டும்மே… இப்ப அதனால என்ன? அவங்களும் புது மாப்ள பொண்ணுதான்…”, ஸ்வே ரதிக்கு ஆதரவாகப் பேசினாள். 

 

“அஹான்….. சரி சரி.. ரொம்ப அவளுக்கு சப்போட்டா விக்காத… அப்பறம் நீ தான் அவஸ்தைபடணும்….”

 

“நீ என்ன அவஸ்தைப்படற?”

 

“கொஞ்ச நேரத்துல அது உனக்கே தெரியும்…. “, எனச் சுந்தரி கூறவும் ரதி முறைத்தாள். 

 

“சரி வேற யாரும் வரலியா நம்ம ஃப்ரெண்ட்ஸ்…?”, ஸ்வே கண்களைச் சுழற்றியபடிக் கேட்டாள். 

 

“அதோ அங்க மீனாவும் பிரியாவும் இருக்காங்க….”, ரதி கூறினாள். 

 

“ஒரு பஞ்சாயத்து இருக்கு….. எவ்ளோ பொருமுறா தெரியுமா அவ…..”, சுந்தரி கோபத்துடன் கூறினாள். 

 

“சரி அதுலாம் அப்பறம் பேசிக்கலாம்… நீ அண்ணா பக்கத்துல போ….”, என ரதி அவளை அந்தப்பக்கம் அனுப்பிவிட்டு, ஸ்வேதாவை தன் கணவனிடம் அழைத்துச் சென்றாள். 

 

“ரகு… இவ ஸ்வேதா… என் கிளோஸ் ஃப்ரெண்ட்,…. அப்ரோட்ல இருக்கா….”

 

“ஹாய் அண்ணா… இவள எப்படியோ வரவச்சி கல்யாணம் பண்ணிட்டீங்க…. ரொம்ப சந்தோசம்…. இவ மூஞ்சில ரொம்ப வருஷம் கழிச்சி இப்ப தான் சிரிப்ப பாக்கறேன். அதுக்கு நீங்க தான் காரணம்… ரொம்ப நன்றிங்க அண்ணா….”

 

“அவ சிரிப்பு காணாம போகவும் நான் தானே காரணம் அப்போ?”, எனக் கேட்டவன், “இனிமே அவ முகத்துல எப்பவும் இந்த சிரிப்பு இருக்கும்மா… உங்க ஹஸ்பண்ட் வரலியா?”

 

“அவருக்கு இப்போ லீவ் இல்லைங்ண்ணா…. அடுத்த வாரம் வருவாரு….”

 

“அப்போ அதுவரைக்கும் நம்ம வீட்ல இருங்க… கொடைக்கானல் சுத்தி நிறைய இடம் இருக்கு… எல்லா இடத்துக்கும் போகலாம்…”

 

“நீங்க முதல் ஹனிமூன் போயிட்டு வாங்கண்ணா… நான் இன்னொரு தடவ ஃபேமிலியோட வரேன்…. “

 

“எங்க… உங்க ப்ரெண்ட் கம்பனி போகணுமாம்…. இப்போதைக்கு அதுக்கு வாய்ப்பு இல்ல…”, சோகமாக முகத்தை வைத்துக் கொண்டுக் கூறினான். 

 

“மானத்த வாங்காத ராக்கி…. கம்முன்னு இரு..”, பல்லைக் கடித்தபடிச் சிரித்துக்கொண்டு கூறினாள். 

 

“லீவ் எக்ஸ்டெண்ட் பண்ணிக்க வேண்டியது தானே டி?”

 

“கேட்டா உடனே குடுத்துடுவானா? பிராஜக்ட் முக்கியமான ஸ்டேஜ்ல இருக்கு ஸ்வே…. இந்தியால இருந்து பண்ணவே நான் போராடி வாங்கி இருக்கேன்…. எனக்கு பதில் இன்னொரு ஆள அங்க அனுப்பணும்…. “

 

“கோடிங் தானே நீ…. உன் பார்ட் முடிச்சிட்டு விடு… “

 

“அதுலாம் முடிஞ்சது… இப்போ டெஸ்டிங்ல இருக்கு…”

 

“கொஞ்சம் கஷ்டம் தான்… கம்முன்னு நீ அண்ணா கூடவே பிசினஸ் பாத்துக்கலாம்ல?”

 

“நல்ல ஐடியா சிஸ்டர்…. ரதி…”, எனச் சிரிப்புடன் திரும்பியவனை முறைத்துப் பார்த்தாள். 

 

“ஸ்வேதா செல்லம்.. இவரு முன்னாடி எதுவும் ஐடியா குடுக்காத… நாம தனியா பேசிக்கலாம்…. வா மணவரைக்கிட்ட போலாம்….”

 

“போ போ… எங்க போயிடுவ நீ?”, என முணுமுணுத்தபடி அவளைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தான். 

 

அவன் அப்படி சிரிப்பது பார்த்ததும் ரதிக்கு உள்ளுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது. 

 

“எரும மாடே.. அவன் முன்னாடி தான் இதுலாம் பேசுவியா நீ? வீட்டுக்கு போனா என்ன பண்ணுவான்னு தெர்ல…… “, புலம்பியபடி நடந்தாள். 

 

“நான் நல்லதா தானே டி சொன்னேன்….”

 

“அவனே எப்படா சாக்கு கெடைக்கும்ன்னு பாத்துட்டு இருந்தான்.. நீ அவனுக்கு எடுத்து குடுக்கற….”

 

“நீயாச்சி.. உன் புருஷனாச்சி…. ஆள விடு டி…”, ஸ்வே அவளைத் திட்டுவிட்டு மணவறைக்கு பக்கவாட்டில் நின்றாள். 

 

“கல்யாணம் முடியட்டும் உன்ன பேசிக்கறேன்…”

 

சவியும் அவர்களுடன் வந்து நின்றுக் கொண்டாள் ரதியைச் சிரிப்புடன் பார்த்தபடி. மீனாவும், பிரியாவும் கூட்டத்தின் நடுவில் அமர்ந்து இவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர். 

 

அனைவரின் கண்களும் ஒரே போல இருப்பதில்லையே… அப்படி தான் எதிர்மறையான எண்ணங்களோடு சிலர் அங்கே இருந்தனர் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டு இரண்டு புது ஜோடிகளையும் பார்த்தபடி….  

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
16
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்