Monday to Sunday rerun story jeevan Ennavanukaga varum. Monday to Friday intha story varum. Thnk u so much for your lovely wishes and cmnts.
ஊஞ்சல் 9.
மழை விட்டு விட்டு வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது வெளியே. மழைக்கு இதமாக இரவு உணவைச் சூடாக எடுத்து வந்தவள் மூவரோடும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
“மருமகளுக்கு மழைனா ரொம்பப் பிடிக்குமோ?” மாமனார் கேட்க, பதிலைக் கொடுத்தாள் வேகமாகத் தலையசைத்து.
“சின்னப்பிள்ளை மாதிரி எப்படித் தலையாட்டுறா பாருங்க.”
“என் மருமக சின்னப் புள்ள தான் ராணி.”
“ஆமாமா, ஏற்கனவே உங்க மருமக மழைல ஊஞ்சல் கட்டி ஆடணும்னு கிறுக்குத்தனமா பேசிட்டு இருக்கா. இதுல நீங்க சின்னப் புள்ளனு வேற சொல்லி உசுப்பேத்தி விடுங்க.”
“அது என்னம்மா கதை?”
“ஒன்னும் இல்ல மாமா. மழை நல்லாப் பெய்யும் போது மொட்டை மாடில ஊஞ்சல் கட்டி ஆடணும்னு ரொம்ப நாளா ஆசை.”
“டேய்! சீக்கிரம் என் மருமகளுக்கு மாடில ஒரு ஊஞ்சலைக் கட்டி ஆசையை நிறைவேத்தி விடு.”
“லட்சணமா பிள்ளைகளைப் பெத்துத் தொட்டில் கட்டற வயசாகுது ரெண்டு பேத்துக்கும். கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாமல் பேசிட்டு இருக்கீங்க.” என்றார் ராணி இதுதான் சாக்கு என்று.
“மசமசன்னு காலத்தக் கடத்திட்டு இருக்காம சட்டுபுட்டுன்னு ரெட்டைப் பிள்ளைங்களைப் பெத்துப் போடுங்க. ஆளுக்கு ஒரு ஊஞ்சலைக் கட்டி ஆட்டி விட்டுட்டு இருக்கோம்.” என்றார்.
மழைக் குளிரிலும் சிவந்து சூடானது தேகம். மனைவியின் வெட்கத்தை ஓர விழி கொண்டு அடையாளம் கண்டவன் தன் வெட்கத்தைத் தனக்குள் மறைத்துக் கொண்டான். இருவருக்கும் தனிமை கொடுத்து மூத்தோர்கள் சீக்கிரமாக இடத்தைக் காலி செய்ய, இருவர் மட்டுமே இறங்காத உணவை வைத்து நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தார்கள்.
பார்த்திகா கற்பனையில், ‘மனம் கவர்ந்தவன் போல் இரட்டைப் பிள்ளைகள் வீட்டில் நடமாடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?’ என்று யோசிக்க, நேற்று வரை தனிமையில் இருந்தவன் வாழ்வில் இன்று மனைவியும், நாளை வரப்போகும் பிள்ளைகளையும் நினைத்துத் தன் மாற்றத்தை உணர்ந்தான் திருமேனி ஆவுடையப்பன்.
பெண் பிள்ளைகள் மீது அலாதிப் பிரியம் கொண்டவன், மனைவி போல் இருந்தால் எப்படி இருக்கும்? என்று முதல் முறையாகக் கற்பனை செய்து பார்த்தான். ‘தாய்க்குப் போட்டியாகத் தானும் மழையில் நனைவேன் என்று செல்வ மகள்கள் அடம் பிடித்தால் மூவரையும் எப்படி அடக்குவேன்?’ என்ற அச்சம் வேறு அதில் நுழைந்து கொண்டது.
ஒரு வழியாக உணவை ஓரம் கட்டி வைத்தவர்கள் உறங்கச் செல்ல, இருவருக்கும் மனமில்லை தனித்தனியாக உறங்க. என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்திகா கைகளைப் பிசைந்து கொண்டிருக்க, காரணத்தைக் கண்டு பிடித்து அழைத்தான்.
அவன் அழைப்பை எதிர்பார்க்காதவள் ஒருவித இன்ப அதிர்வோடு எடுக்க, “கிரீன் டீ கிடைக்குமா?” கேட்டான்.
“டூ மினிட்ஸ் திரும்மா”
அடுத்த நொடி கால்கள் அவ்வறையில் நிற்கவில்லை. மின்னலாய் சமையலறைக்குள் நுழைந்து சொன்னது போல் சரியாக அவன் அறைக் கதவைத் தட்ட, “உள்ள வா பாரு” குரல் கொடுத்தான்.
இரவு நேர விளக்கில் மிதமான அழகில் இருந்தது அந்த அறை. என்றும் இல்லாத திருநாளாக இன்று படபடப்பு அதிகமானது அவளுக்குள். எதிரில் இருந்தவன் மின்மினியாய் மின்ன, சீக்கிரம் அறையை விட்டு வெளியேற முடிவு செய்தாள்.
அவன் முடிவு வேறாக இருக்க, “உட்காரு கொஞ்ச நேரம் பேசுவோம்” என்று விட்டான்.
“ம்ம்” என மெத்தையின் விளிம்பில் அமர, “இங்க வா” கைப்பிடித்து அழைத்துச் சென்றான் பால்கனிக்கு.
“நாளைக்கு டியூட்டி இல்லையா?”
“ஏன்?”
“இவ்ளோ நேரம் தூங்காமல் இருக்கீங்க…”
“என்னமோ தெரியல, தூக்கம் வரல.”
“என்னாச்சு? மழையில நனைஞ்சதுல உடம்பு முடியலையா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல.”
“ம்ம்…”
“நாளைக்கு எங்கயாவது போயிட்டு வரலாமா?” என்றதும் நம்ப முடியாமல் அவனையே பார்த்திருக்க, “மேடம்” என்று உசுப்பினான்.
“திரும்மாவா பேசுறது?”
சின்னப் புன்னகையோடு அவளைத் தன் பக்கம் இழுத்தவன், “என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது உனக்கு? நாங்களும் லவ் பண்ணுவோம்.” அணைக்க முற்பட விலகி நின்றாள்.
திருமேனி ஆவுடையப்பன் புருவம் உயர்த்த, “இவ்ளோ நாள் எல்லாரையும் ஏமாத்திட்டு இருந்திருக்கீங்க, அப்படித்தான…” என்றாள்.
அங்கிருந்த சுவரில் சாய்ந்தவன் ரசனையாக, “என்னையவே இத்தனை நாளா ஏமாத்திட்டு இருந்திருக்கேன்னு நீ வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுகிட்டேன். உன்னை அதிகமா தேடுறேன். வேலையக் கொஞ்சம் மறந்து போறேன். உன் கூடச் சேர்ந்து கற்பனைல கோட்டை கட்ட ஆரம்பிச்சிட்டேன். இன்னும் சொல்லிகிட்டே போகலாம். எப்படி எனக்குள்ள இவ்ளோ மாற்றத்தை ஏற்படுத்தின? எனக்கே நான் புதுசாத் தெரியிறேன்.” என்றவன் கீழ் தாடையைப் பிடித்த பார்த்திகாவைத் தன் மேல் சாய்த்துக் கொண்டான்.
தனக்கான மஞ்சம் கிடைத்ததும், தஞ்சம் அடைந்து விட்டாள். அணைக்க வைத்தவனும், அணைத்தவளும் எதுவும் பேசாமல் அந்த நிமிடங்களை ரசித்தனர். சட்டை அணியாத அவன் மார்பில் இருக்கும் சின்ன முடிகளை உரசி உற்சாகமூட்டியவள், தொட்டு ரசித்துத் தன் ஆசைகளைத் தீர்த்துக் கொண்டாள்.
அவள் ஆசைகளுக்கு வழி விட்டவன் இடையோடு கை கோர்த்து விலகாமல் பார்த்துக் கொண்டான். போதும் என்ற வரை தொட்டுப் பார்த்தவள் முத்தம் கொடுத்து ஆசையை நிறைவேற்றிக் கொள்ள, இடையில் இருந்த விரல்களின் ரேகை இடை சதையோடு பதிந்தது. மெல்ல இருவருக்கும் நடுவில் இருந்த நெருக்கம் குறைய ஆரம்பித்தது. இருவரும் அதை உணராமல் இரு உடல்களை ஒட்டி வைத்துக் கொள்ள ஆணவன் இதழ்கள் அவள் கழுத்தில் ஊர்ந்தது.
அளவுக்கு அதிகமான கூச்சத்தில் சுருண்டு கொண்டாள் அவனோடு. அவளுக்கு ஏற்றார் போல் வளைந்து கொடுத்துத் தேகத்தைச் சூடேற்றியவன், நெற்றி வகுட்டில் ஆரம்பித்தான் முத்த ஊர்வலத்தை. அங்கு ஆரம்பித்ததும் புருவங்கள் இரண்டும் வெட்கத்தில் சுருங்கிக் கொள்ள, அடுத்ததாக வந்த முத்தத்தில் இன்னும் சுருங்கிப் போனது. இமை முடியில் முத்தம் வைத்து விழிகளைத் திறக்கச் செய்தவன், நுனி மூக்கில் முத்தமிட்டுச் சிவக்க வைத்தான்.
பால்கனிப் பக்கம் சாரல்கள் லேசாக அடித்துக் கொண்டிருக்க, அவர்கள் ஆட்டத்திற்கு வலு சேர்த்தது. சூடாகத் துடித்த தேகத்தை மழை ஒரு பக்கம் குளிர்விக்க, இருவரின் மூச்சுக்காற்று அந்தக் குளிரில் இதமான தீ மூட்டியது. பார்த்திகா மெல்ல நாணத்தைத் துறந்து அவன் மேனியில் விரல்களை விளையாட விட, தன்னவள் செய்யும் செய்கைகளைக் கண்டும், காணாமலும் ரசித்தான் திருமேனி ஆவுடையப்பன்.
எப்பொழுதும் அவன் தோள் மீது ஒரு கண் காதலித்தவளுக்கு. தன்னால் முடிந்தவரை அந்தத் தோளை அழுத்தி இறுக்கத்தை எடை போட்டவள் முத்தம் ஒன்றை வைத்துப் பஞ்சு போல் இளக வைத்தாள். சவரம் செய்த தாடையைத் தொட்டுத் தொட்டு ரசித்து எச்சில் படாமல் முத்தம் வைத்தவள் மீசையை முறுக்கித் தலை சாய்த்தாள்.
பார்வையால், ‘என்ன?’ என்றவனுக்குக் காற்றிலே பறக்கும் முத்தத்தைக் கொடுத்து, ‘அழகு’ என்றாள் ஜாடையில்.
தன்னோடு அணைத்துக் கொண்டவன், “ம்ம்” என ஓசை கொடுக்க, கழுத்தோடு தன் முகத்தை மறைத்துக் கொண்டவள் தலையசைத்தாள்.
இருவருக்கும் தாம்பத்தியத்தில் இணைவதில் விருப்பம். ஆசைப்பட்டே ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொள்ள, எல்லாம் அவர்களிடமே என்றானது. முத்தத்தோடு நிறுத்திக் கொண்டவள் நாணத்தை எடுத்துப் போர்த்திக் கொள்ள, தன்னவள் மீது காதல் துளிர்ந்ததால் சின்ன நடுக்கத்தோடு முன்னேறினான் ஆக்கிரமிக்க.
சம்மதம் கொடுத்தவள் அவனோடு சேர்ந்து கொண்டாள். விரல் நகம் முதல் கருங்கூந்தல் வரை எல்லாம் அவன் மீசை முத்தத்தில் அடங்கிப் போனது. தன்னவளிடமிருந்து வந்து கொண்டிருந்த முத்தம் குறைந்ததால் அவள் நிலை புரிந்தவன் முத்தத்தை நிறுத்தி மனநிலையை மாற்றினான்.
“பாரு…”
“ம்ம்…”
“ஓகேவா…”
அவனை விட்டு விலகியவள் புருவம் சுருக்க, “இல்ல… இது உனக்கு.” தடுமாறியவன் பேச்சில் இருந்த மோக நிலை மாறிவிட்டது.
எதிர்ப்புற சுவரில் சாய்ந்து கொண்டு, “இன்னும் உங்களுக்கு நான் அந்நியமாய் தெரியுறேன்ல.” என்றதும் அவளை நெருங்க முற்பட, “வேணாம், அங்கயே இருங்க” என்று விட்டாள்.
தவறாகப் புரிந்து கொண்டவளுக்குத் தன்னைப் புரிய வைக்க முற்பட்டவன் மீண்டும் நெருங்க, “இது எனக்குப் பழகிப் போனது தான் திரும்மா. ஒவ்வொரு தடவையும் இந்த விலகலும், அந்நியத் தன்மையும் எனக்கு ஒன்னும் புதுசு இல்ல. எந்தப் புருஷனும் பொண்டாட்டி கிட்ட உத்தரவு கேட்க மாட்டான். கேட்டுப் பண்ற விஷயமும் இது இல்ல. ரெண்டு பேருக்குள்ள தன்னால மனம் ஒத்து நடக்க வேண்டிய விஷயம். நம்ம மனசு இன்னும் சேரல, அதனாலதான் உங்களுக்கு இந்தத் தடுமாற்றம். எப்போ காதலால நம்ம ரெண்டு பேரும் சேரணும்னு நினைக்கறீங்களோ, அப்போ இது நடக்கட்டும்.” அறையை விட்டு வெளியேற முயன்றவளை அள்ளிக் கொண்டான்.
பார்த்திகா இறங்க முயற்சிக்க, “என் முத்தத்தைத் தாங்க முடியாம ரொம்ப நடுங்கின, உன் மனநிலை ஓகே வான்னு கேட்டேன்.” அவன் வார்த்தையை நம்ப மறுத்துத் தலையைத் திருப்பிக் கொண்டாள்.
காதோரம் உதட்டை உரசக் கொண்டு சென்றவன், “என் பொண்டாட்டிய நான் மனசாரக் காதலிக்கிறேன்னு நம்பினதுக்கு அப்புறம் தான் நெருங்கி வந்தேன். என்னோட சின்ன முத்தம் கூட அவளை நோகடிக்கக் கூடாதுன்னு யோசிச்சனே தவிர கட்டாயத்துக்குக் கணவனா வாழனும்னு நினைக்கல.” என்றதும் பார்த்திகா அவன் முகம் பார்த்தாள்.
திருமேனியும் தன் விழிகளை அவள் விழியோடு ஒன்றாக்கி, வார்த்தைகளால் புரிய வைக்க முடியாத காதலைப் புரிய வைத்து, “லவ் யூ பொண்டாட்டி.” இரு புருவங்களுக்கு நடுவில் முத்தமிட, அணைத்துக் கொண்டாள் ஆனந்தத்தில்.
அதன் பின் என்ன வேண்டும் இருவருக்கும்? மெத்தையில் படுக்க வைத்தவன் வலது புறம் படுத்துக்கொண்டு மனதில் இருப்பதை மனம் விட்டுப் பேசினான். ஆயிரம் முத்தங்கள் கொடுக்கும் இன்பத்தை விட அவனின் மனம் திறந்த பேச்சு பேரின்பத்தைக் கொடுத்தது. இதையெல்லாம் கற்பனையில் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்தவளுக்கு நிஜமானதை நம்பியும், நம்ப முடியாத மனநிலையும்.
அவளைப் போன்ற மனநிலையில் இல்லாதவன் தன் காதலைத் தெரிவித்த முழு மகிழ்வில் மெல்ல அவளோடு இணைய ஆரம்பித்தான். நேரம் கடக்க ஒவ்வொரு தொடுகையும் அவள் மனநிலையை மாற்றி விட்டது. கணவன் மனைவியாகத் தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க முழு மூச்சில் ஈடுபட்டனர். எல்லாம் அழகாகத் துவங்கப் போகும் நேரம் அலைபேசி ஓசை சின்ன இடைவெளியைக் கொடுக்க, முதலில் எடுக்காதவன் நான்காவது முறையாக வந்ததில் நண்பனின் பெயர் பார்த்து எடுத்தான்.
அதுவரை பார்த்திகாவின் காதல் கணவனாக இருந்தவன் முகம் மாறியது. அய்யனாரின் விழிகள் போல் அவன் விழி அகண்டது. இலகுவான காதல் முகம் விறைத்தது. எதிர்ப்புறத்தில் இருந்து என்ன செய்தியோ அறியாது அவனையே பார்த்திருந்தவள் விழியில் இருந்து சட்டென்று மறைந்தான் திருமேனி ஆவுடையப்பன்.
இமை மூடித் திறப்பதற்குள் உடை மாற்றிக் கொண்டு, வெளியேறியவனின் செயல் திகைப்பைக் கொடுத்தாலும் என்னவாக இருக்கும் என்ற சந்தேகம் அவள் மோகநிலையைக் கலைத்தது.
இரவெல்லாம் அவனுக்காகக் காத்திருந்தவள் தன்னையும் அறியாமல் கண்மூடி உறங்கி விட்டாள்.
திடீரென்று அறைக்குள் நுழைந்தவன் அவள் முடிகளைக் கொத்தாகப் பிடித்து கன்னத்தில் ஓங்கி அறைந்தான். நல்ல தூக்கத்திலிருந்து விழித்தவள் வாங்கிய அடியில் அரண்டு அவனைப் பார்த்தாள்.
கைது செய்யும் விலங்கை அவள் முன்பு நீட்டினான்.
“ஆனந்தியக் கொலை பண்ணதுக்காக உன்னை அரஸ்ட் பண்றேன்.”
ஊஞ்சல் ஆடும்…
அம்மு இளையாள்.