Loading

அத்தியாயம் 9

 

“யாரைக் கேட்டு இப்படி ஒரு முடிவெடுத்தீங்கப்பா? மயக்கத்துல தான இருந்தேன். நான் என்ன கோமாக்கா போயிட்டேன். அதுக்குள்ள அவசரமா எதுக்கு இப்படி ஒரு முடிவு?” என்று திருமண விஷயம் அறிந்தவுடன், மருத்துவமனை என்றும் பாராமல் தாம்தூம் என்று கத்தினாள் துவாரகா.

 

நாள் முழுக்க தூங்கி எழுந்ததால் கிடைக்கப்பெற்ற சக்தி அனைத்தையும் மொத்தமாக முடித்து விடுவது போல தான் பேசினாள்.

 

“துவாம்மா, என்ன பேச்சு இது?” என்று கோபிநாத் தவிப்பு பாதி கண்டிப்பு மீதி என பேச வர, அவரை தடுத்த மயூரன், கண்களாலேயே தான் பார்த்துக் கொள்வதாக கூற, கோபிநாத்தோ இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, அறையை விட்டு வெளியேறி விட்டார்.

 

‘இந்த அப்பாக்கு என்ன பைத்தியம் பிடிச்சுருக்கா? கல்யாணம்… அதுவும் இவனோட… என்னை முழுசா ஹர்ட் பண்ணிட்டு, இப்போ எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு, என்னை கல்யாணம் பண்ணுவானாம்?’ என்று கோபமாக எண்ணிய துவாரகாவிற்கு மயூரனின் பேச்சுக்கள் நினைவுக்கு வந்து விட, கண்கள் கலங்கி விட்டன.

 

‘ச்சை, இது ஒன்னு, கோபமா இருக்க வேண்டிய நேரத்துல தேவையில்லாம வந்துடுது.’ என்று கண்ணீரை சபித்தபடி, கண்களை மூடி நிதானிக்க முயன்றாள்.

 

அப்போது அவளருகே, “ஐ’ம் எக்ஸ்ட்ரீம்லி சாரி.” என்ற குரல் கேட்க, கண்களை திறந்து பார்க்க பிடிக்காமல், தலையை திருப்பிக் கொண்டாள்.

 

எங்கு கண்களை திறந்தால், கண்ணீர் அவனுக்கு தெரிந்து விடுமோ என்ற பயமாகவும் இருக்கலாம்!

 

“துவாரகா…” என்று முதல் முறையாக அவன் அழைக்க, அந்த அழைப்பு அவளின் இதயத்தை கீறி விட, அவனை மன்னிக்க கூறிய மனதை சபித்தபடி, “ஸ்டாப் காலிங் பை மை நேம். அப்படி கூப்பிட உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல.” என்று கோபமாக கூறினாள்.

 

இம்முறை அவளின் கண்ணீரை அவனிடமிருந்து மறைத்து வைக்க விரும்பவில்லை போலும்!

 

கோபத்தில் சிவந்து விட்ட முகத்தையும், மனம் ரணப்பட்டதால் உண்டான கண்ணீரையும் பார்த்து நொந்தவன், கண்களை மூடி எப்போதும் போல தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டு, நிதானத்திற்கு வந்தான்.

 

பிறகு, கண்களை திறந்தவனோ, சிறு சிரிப்பை உதட்டில் ஒட்ட வைத்துக் கொண்டு, “கூப்பிட தான பேரு இருக்கு. அதை சொல்ல உரிமை தேவையில்ல துவா…ரகா. பேரை சுருக்கியோ, செல்லமா பேபி, ஹனி, டார்லிங்ன்னு கூப்பிடவோ வேணும்னா உரிமை தேவைப்படலாம். அந்த உரிமையை கேட்டு தான், இப்போ இங்க நிக்குறேன்.” என்றான் மயூரன்.

 

அதில், அவனை பொசுக்கி விடுவது போல அவள் பார்த்து வைக்க, “ஹ்ம்ம், இது என் டர்ன் போல!” என்று இயல்பாக பேசிய மயூரன், “சரி, இப்போ எல்லாம் ஓகேவா? நீயே எழுந்து நடப்பியா, இல்ல வரும்போது தூக்கிட்டு வந்த மாதிரி, இப்பவும் தூக்கிட்டு போகவா?” என்று நமுட்டுச் சிரிப்புடன் அவன் வினவ, விழிகளை விரித்து அதிர்ச்சியாக பார்த்தாள் பாவை.

 

இந்த மயூரன் துவாரகாவிற்கு புதியவன் அல்லவா? 

 

அவனை எப்படி சமாளிக்க என்று தெரியாமல் அவள் விழித்து நிற்க, அவளை காப்பாற்ற என்று வந்து சேர்ந்தார் கோபிநாத்.

 

“துவாம்மா, வீட்டுக்கு போலாமா?” என்று கோபிநாத் கேட்க, எங்கு தூக்கி விடுவானோ என்ற பயத்தில், “ஹான், போலாம் போலாம்.” என்று வேகமாக நடந்து தந்தையின் அருகில் நின்று கொண்டாள்.

 

“எதுக்குடா இவ்ளோ வேகம்?” என்று கோபிநாத் கேட்க, மயூரனின் இதழ்களோ விரிந்து கொண்டன.

 

அவனை முறைத்தபடி, “ஒன்னுமில்லப்பா. வீட்டுக்கு போலாம்.” என்றாள் துவாரகா. 

 

அப்போதைக்கு அவன் பார்வையிலிருந்து தப்பித்து சென்று விட வேண்டும் என்பதே அவளின் எண்ணமாக இருந்தது.

 

அதையே உருப்போட்டுக் கொண்டு வந்தவள், அவர்களின் வாகனத்தில் அவனும் ஏறிக் கொண்டதை கூட கவனிக்கவில்லை.

 

வாகனம் வேகமெடுத்து சென்ற நேரம், ‘ஹப்பாடா!’ என்று அவள் நிம்மதியடையும் வேளையில், அவன் குரல் கேட்க, தூக்கிவாரிப் போட, குரல் வந்த திசையை நோக்கினாள்.

 

அவள் பார்வைக்காக காத்திருந்ததை போல, அவன் மென்மையாக சிரித்து வைக்க, ‘எப்போ பார்த்தாலும் எதுக்கு சிரிச்சுட்டே இருக்கான்? என்னை இரிட்டேட் பண்ணனும்னே வருவான் போல!’ என்று பல்லைக் கடித்துக் கொண்டாள்.

 

அவள் மனதிற்குள் படாத பாடுபடுவதை அறியாத மயூரனோ பாஸ்கரோடு பேச ஆரம்பித்தான்.

 

அழைப்பை ஏற்ற பின்னரும் மறுமுனை அமைதியாக இருக்க, “ஹலோ, கால் பண்ணிட்டு பேசாம இருந்தா என்ன அர்த்தம்?” என்றான் மயூரன்.

 

பாஸ்கர் இன்னும் மயூரனிடம் பேசாமல் தான் இருக்கிறான். எனினும், இரவு முழுவதும் வீட்டிற்கு வராமல், எந்த தகவலும் தராமல் இருந்ததால் தான் இந்த அழைப்பு. அது மயூரனுக்கும் புரிந்து தான் இருந்தது.

 

“க்கும், சார் எங்க இருக்காருன்னு கேளு கிஷோர். அப்படியே, ஏன் வீட்டுக்கு வரலைன்னும் கேளு. கால் பண்ணி சொல்லக் கூட முடியாதாமா? அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேலையாம்?” என்று பாஸ்கர் பேச, அதைக் கேட்ட மயூரனுக்கு சிரிப்பு தான் வந்தது.

 

சிறு வயதிலிருந்தே பாஸ்கர் இப்படி தான். கோபம் கொண்டு விட்டால், நேரடியாக பேசாமல் வேறு யாரையாவது நடுவில் வைத்து பேசுபவன், சிறிது நேரத்திலேயே கோபம் மறந்து நேரடியாகவும் பேசி விடுவான். என்ன முயன்றும், இதை மட்டும் அவனால் மாற்றவே முடியவில்லை.

 

அதை எண்ணி மயூரன் சிறிது சத்தமாகவே சிரித்து விட, “இப்போ நான் என்ன ஜோக் பண்ணிட்டேன்னு சிரிப்பு வேண்டியதிருக்கு? கேளு கிஷோர்.” என்று பாஸ்கர் எரிச்சலுடன் கூற, “உங்க சண்டைல என்னை ஏன்டா படுத்துறீங்க?” என்று புலம்பிய கிஷோரோ, “அவன் சொன்னதெல்லாம் கேட்டுச்சு தான மயூரா? நீயே சொல்லிடேன்!” என்றான்.

 

“நேத்து நடந்ததெல்லாம் ஃபோன்ல சொல்ல முடியாது. வேணும்னா, அவனை நேர்ல வந்து கேட்டுக்க சொல்லு கிஷோர். அப்பறம்… வெட்டி முறிக்கிற வேலை தான்! என் கல்யாண விஷயமா பேசப் போறேன்.” என்று சாதாரணமாக கூற, அதைக் கேட்டுக் கொண்டிருந்த மூவரும் தான் திகைத்து போயினர்.

 

அவர்கள் பாஸ்கர், கிஷோர் மற்றும் துவாரகா என்று தனியாக சொல்ல வேண்டுமோ!

 

“அடேய், என்னடா சொல்ற? நல்லா தான இருக்க நீ? இல்ல… ஏதாவது ஆக்சிடெண்ட் ஆகிடுச்சா? தலையில எதுவும் அடிகிடி படலையே!” என்று பாஸ்கர் ஒருபுறம் பதற, “இன்னைக்கு ஒரு முடிவோட தான் இருக்கான் போலயே! நோ, இதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன்!’ என்று மனதிற்குள் பிடிவாதமாக கூறிக் கொண்டாள் துவாரகா.

 

அவர்களின் புலம்பலுக்கான காரணக்கர்த்தாவோ, தெளிவான முடிவுடன் இருந்தான், அது தான் துவாரகாவை திருமணம் செய்து அவனுடன் வைத்துக் கொள்ளும் முடிவு!

 

அதிலிருந்து அவன் அத்தனை எளிதில் பின்வாங்கி விடுவானா என்ன?

 

“இப்போ தான் ரொம்ப நல்லா இருக்கேன் பாஸ்கி. சரி, நான் அப்பறம் கூப்பிடுறேன்.” என்று மயூரன் அழைப்பை துண்டிக்க, அதே சமயம் அவர்கள் பயணித்த வாகனம் துவாரகாவின் வீட்டை வந்தடைந்தது.

 

வாகனம் நிறுத்தப்பட்டதும், எதிலிருந்தோ தப்பிப்பவள் போல துவாரகா இறங்கி வேகமாக செல்ல முற்பட, அவளை கரம் பற்றி தடுத்த மயூரனோ, “எதுக்கு இவ்ளோ வேகம்? இங்க என்ன ரன்னிங் காம்பெட்டிஷனா நடக்குது?” என்று வினவினான்.

 

துவாரகாவின் மனமோ, ‘இதெல்லாம் ஏற்கனவே நடந்த மாதிரி இல்ல? என்ன ஆள் தான் மாறி இருக்கு!’ என்று எடுத்துக் கொடுக்க, தலையை உலுக்கி அதிலிருந்து வெளிவந்தவள், “ப்ச், என் கஷ்டம் எனக்கு தான் தெரியும்.” என்று முணுமுணுத்தவள், அவனின் கையை தட்டி விட்டு வேகமாக உள்ளே சென்று விட்டாள்.

 

அங்கு துவங்கிய ஓட்டம் முடிவுக்கு வந்தது அவளின் அறையில் தான்.

 

இதுவரை ஓட விட்டே பழகியவளுக்கு இந்த ஓட்டம் புதிது தானே!

 

அதை விட புதியது, அதை நிகழ்த்திக் காட்டியவனின் மாற்றம்!

 

‘இவன் ஏன் திடீர்னு இப்படி மாறிட்டான்? ஒருவேளை, நான் மயங்கி விழுந்ததுல, என்மேல சிம்பதில லவ் வந்து தொலைச்சுருக்குமோ?’ என்று அவள் யோசிக்க, ‘அப்படியா இருந்தா, இந்த டெக்னீக்கை முன்னாடியே இம்ப்ளிமெண்ட் பண்ணலன்னு வருத்தமா இருக்கா?’ என்று அவளையே கேலி செய்தது அவளின் மனம்.

 

‘ப்ச், இது ஒன்னு, எப்போ பார்த்தாலும் என்னை கலாய்க்கன்னா மட்டும் ஆக்டிவ்வாகிடும்.’ என்று மனதை சாடியவள், மயூரனின் இந்த புதிய அவதாரத்திற்கான காரணத்தை தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டாள்.

 

அதில், அவன் அவளை பேசிய வார்த்தைகள் யாவும் பின்னுக்கு சென்று விட்டனவோ? அவள் மனம் மட்டுமே அறிந்த ரகசியம் அது!

 

இங்கு, அவளும் அவளின் மனசாட்சியும் மாறி மாறி மானாவாரியாக கேலி செய்யும் வேளையில், மயூரனும் கோபிநாத்தும் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர்.

 

கோபிநாத்திற்கு இந்த அவசர திருமணம் தேவையா என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

 

ஆம், முடிந்த மட்டும் சீக்கிரமாக, அதாவது ஒரு வாரத்திற்குள் மயூரன் மற்றும் துவாரகாவின் திருமணம் நடக்க வேண்டும் என்றல்லவா மயூரன் சொல்லிக் கொண்டிருந்தான்.

 

“எதுக்கு மயூரன் இவ்ளோ அவசரம்?” என்று கோபிநாத் யோசனையுடன் வினவ, உண்மையான காரணத்தை சொல்லி விட முடியுமா அவனால்?

 

“அது… துவாரகாவோட பாதுகாப்புக்கு தான் சா… க்கும், மாமா. என் குடும்பம் பத்தி ஓரளவு தான் உங்களுக்கு சொல்லி இருக்கேன். அவங்க நீங்க நினைக்குறதை விட டேஞ்சரஸ். அவங்களை அடக்கணும்னா, இந்த கல்யாணம் சீக்கிரம் நடக்கணும்.” என்றான் மயூரன்.

 

“ஹ்ம்ம், ஆனா… துவா… அவ இதுக்கு சம்மதிக்கணுமே. அவ நடந்துக்குறதை பார்த்தா, அவ்ளோ ஈஸியா சம்மதிக்க மாட்டான்னு தோணுது.” என்று கோபிநாத் கூற, “உண்மை தான். என்னால அவ மனசு ரொம்ப காயப்பட்டுருக்கு. அதனால உண்டான கோபம் தான் தவிர, அவளுக்கு என்மேல வெறுப்பு இல்லன்னு தான் தோணுது.” என்றான் மயூரன்.

 

அதுவரை அவளின் அறையில் யோசித்து யோசித்து களைத்துப் போன துவாரகாவோ, அதற்கு மேல் சிந்திக்க முடியாமல் தந்தையை தேடி வந்தாள், மயூரன் சென்றிருப்பான் என்ற நம்பிக்கையில்.

 

அவளின் நம்பிக்கையை பொய்யாக்கியது மட்டுமல்லாமல், இருவரும் திருமணத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டிருப்பதை கண்டவள் கோபத்துடன் அவர்கள் முன்னே வந்து நின்றாள்.

 

அவளைக் கண்டதும், “துவாம்மா, இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானடா?” என்று கோபிநாத் பரிவுடன் கேட்க, “ஏன், இன்னும் கொஞ்ச நேரம் நான் தூங்கி இருந்தா, கைல தாலியோட ரெடியா வந்துருப்பாரோ?” என்று மயூரனை பார்த்து பல்லைக் கடித்து வினவினாள் துவாரகா.

 

அது அவனை சற்றும் பாதிக்கவில்லை என்னும் விதமாக, “ஒரு வாரம்னு நான் சொன்னதுக்கே, அவசரம்னு சொன்னீங்களே மாமா, இப்போ தெரியுதா யாருக்கு அவசரம்னு!” என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறினான் மயூரன்.

 

இருவரின் பேச்சையும் கேட்ட கோபிநாத் தான் எவ்விதம் எதிர்வினையாற்ற வேண்டும் என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்க வேண்டியாதாகிற்று!

 

“அப்பா!” என்று கத்திய துவாரகா, “என் சம்மதம் கூட வேண்டாமாப்பா? யாரோ வந்து கல்யாணத்துக்கு கேட்டா, இப்படி தான் குண்டுகட்டா என்னை தூக்கி குடுத்துடுவீங்களா?” என்று துவாரகா கேட்க, அவளின் கேள்வியில் இருந்த நியாயம் புரிந்தாலும், அவள் கேட்ட விதம் சிரிப்பையே வரவைத்தது இருவருக்கும்.

 

அதில் மயூரன் வெளிப்படையாகவே சிரித்து விட, “ஹலோ, என்ன ரொம்ப சந்தோஷமோ? தெரியாம தான் கேட்குறேன், உங்களுக்குள்ள எதுவும் ஆவி புகுந்துடுச்சா என்ன? கல்யாணம்னு சொல்றீங்க… இப்படி அடிக்கடி சிரிக்குறீங்க… என்னதான் ஆச்சு உங்களுக்கு?” என்று அவளின் குழப்பத்தை நேரடியாக அவனிடமே கேட்டும் விட்டாள் துவாரகா.

 

அதற்கும் சிரிப்புடன் அவளை பார்த்தவன், “அது தெரியல. ஆனா, தொலைஞ்சு போன என்னோட இயல்பு இன்னைக்கு தான் மீண்டுருக்கு போல.” என்று சாதாரணமாகவே சொன்னான் மயூரன்.

 

அவனின் முன்கதை பற்றி அறியாத துவாரகாவிற்கு புரியவில்லை என்றாலும் கோபிநாத்திற்கு அவன் கூறுவது புரிந்து தான் இருந்தது.

 

“வாட்டெவர்! எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமில்ல. டாட்!” என்றவள் அவளின் அறைக்கு சென்று விட, அவளை சமாதானப்படுத்த முயன்ற கோபிநாத்தை தடுத்த மயூரன், “இப்போ எதுவும் பேச வேண்டாம் மாமா. அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். கொஞ்சம் யோசிக்கவும் செய்யட்டும்.” என்றான். 

 

அத்துடன் அவனும் எழுந்தவன், “ஓகே மாமா, நான் சொன்னதை யோசிச்சு சொல்லுங்க. நான் கிளம்புறேன்.” என்றான் அவன்.

 

அப்போது தான் நினைவு வந்தவராக, “மயூரன், உங்க குடும்பத்தை பத்தி சொன்னீங்க… ஆனா, யாரு என்னன்னு சொல்லவே இல்லையே!” என்று கோபிநாத் வினவ, “அட அதை சொல்லலைல… மதுரைல சக்ரா குரூப் ஆஃப் கம்பெனீஸ் பத்தி கேள்விப்பட்டுருக்கீங்களா? அதோட ஃபவுண்டர் சக்ரவர்த்தி தான் என் தாத்தா.” என்றான் மயூரன்.

 

அதைக் கேட்ட கோபிநாத் திகைத்துப் போனவராக நின்று விட, அதை கவனிக்க விடாமல் மயூரனின் அலைபேசி ஒலியெழுப்பிய வண்ணம் இருந்தது.

 

“ப்ச், இவனுங்க விட மாட்டானுங்க.” என்று முனகிய மயூரன், “நான் கிளம்புறேன் மாமா. அப்பறம் கால் பண்றேன்.” என்று கூறி கிளம்பி விட, அந்த கூடத்தில் தனியாளாக நின்ற கோபிநாத்திற்கு அவன் சென்றது கூட கவனத்தில் இல்லை.

 

சில நொடிகளுக்கு பின்னர், என்ன நினைத்தாரோ, அவரின் மனைவியின் புகைப்படத்திற்கு முன்னே சென்று நின்றவர், ‘இது சரியா வருமா காயூ?’ என்று மௌன மொழியில் பேச, அதற்கு மறுமொழியாக அந்த புகைப்படத்தில் வைக்கப்பட்டிருந்த பூ கீழே விழுந்து அதை ஆமோதித்தது.

 

அந்த நிகழ்வு கோபிநாத்திற்கும் தைரியத்தை தர, முன்பிருந்த குழப்பம் இல்லாமல் தெளிவுடனேயே மகளின் திருமணத்திற்கு மனதளவில் தயாராகினார்.

 

ஆனால், தயாராக வேண்டியவளோ நகத்தை கடித்துக் கொண்டு மனதோடு உரையாடலை தொடர்ந்து கொண்டிருந்தாள்!

 

*****

 

மயூரனின் அலைபேசிக்கு சக்தி இருந்திருந்தால் அழுதிருக்கும்! அத்தனை முறையல்லவா அழைப்பு என்ற பெயரில் அதனை தெறிக்க விட்டுக் கொண்டிருந்தான் பாஸ்கர்.

 

அப்போதும் அதனை ஏற்காமல், “சரியான ஆர்வக்கோளாறு!” என்று முனகியபடி அவர்களின் வீட்டை அடைந்தான் மயூரன்.

 

அவன் வந்து விட்டதை அறிந்ததும், அவனை வீட்டிற்குள் கூட நுழைய விடாமல், வாசலிலேயே தடுத்து நிறுத்திய பாஸ்கரோ, மயூரனின் தலை முதல் கால் வரை ஆராய்ந்தான்.

 

ஆராய்ச்சியின் முடிவில் எதுவும் இல்லை என்று தெரிந்தாலும், அதில் திருப்தியடையாதவனாக, முடிக்குள் கைவிட்டு பார்க்க, அதில் கடுப்பான மயூரனோ, “டேய், என்னடா பண்ணிட்டு இருக்க?” என்று அடிக்குரலில் சீறினான்.

 

“ப்ச், சும்மா இருக்க சொல்லுடா அவனை. நானே, என்னமோ ஏதோன்னு பீதில இருக்கேன்.” என்ற கிஷோரிடம் கூறிய பாஸ்கர் அவனின் வேலையை தொடர, அவனை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான் மயூரன்.

 

“ஹே ஹே நில்லு நில்லு. அப்படியே கிளம்பு… தர்காக்கு போய் மந்திரிச்சுட்டு வரலாம்.” என்று பாஸ்கர் தீவிரமாக கூற, அவனை முறைத்த மயூரனோ, “டேய்… உன் அலப்பறை தாங்க முடியலடா.” என்று நீள்சாய்விருக்கையில் பொத்தென்று அமர்ந்தான் மயூரன்.

 

“அட நீ வேற மயூரா, நீ ஃபோன்ல பேசுனதுல இருந்து இப்படி தான் லூசுத்தனமா பண்ணிட்டு இருக்கான். என்னை கூட ஆஃபிஸ் போக விடல.” என்று சலித்துக் கொண்டான் கிஷோர்.

 

“பின்ன, இவனெல்லாம் கல்யாணம் செய்ய முடிவெடுக்குறது எல்லாம் குறிஞ்சிப்பூ பூக்குற மாதிரி… அபூர்வமானது. அதை விட உனக்கு ஆஃபிஸ் முக்கியமா?” என்ற பாஸ்கர், மயூரனிடம் திரும்பி, “ஆனாலும், எனக்கு சந்தேகமா தான் இருக்கு. மச்சான், நைட்டு எதுவும் சுடுகாட்டு பக்கம் போனீயா?” என்று கேட்க, கைக்கு அகப்பட்ட குஷனை பாஸ்கர் மீதே விட்டெரிந்தான் மயூரன்.

 

“என்ன எல்லாருக்கும் என்னை பார்த்தா காமெடி பீஸா தெரியுதா? அவ என்னமோ, ‘ஆவி புகுந்துடுச்சா’ன்னு கேட்குறா… நீ என்னன்னா, ‘சுடுகாட்டுக்கு போனீயா’ன்னு கேட்குற! என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க?” என்ற மயூரனின் குரலில் கோபம் சிறிதும் இல்லை!

 

“யாரு அந்த ‘அவ’? யூ மீன் மை தங்கச்சி?” என்று ஆச்சரியத்தில் வாயை பிளந்த பாஸ்கரோ, அதற்கு மயூரனை பதில் சொல்ல விடாமல், “வாய்ப்பில்லையே! நீ செஞ்ச வேலைக்கு, உனக்கு கருமாதி வேணும்னா பண்ணுவாளே தவிர, கல்யாணமெல்லாம்… வாய்ப்பில்ல தம்பி!” என்றான்.

 

“நாயே! நல்லதா ஏதாவது பேசுறியா? இன்னும் ஒரு வாரத்துல எங்க கல்யாணம் நடக்கும்!” என்று சற்று தீவிரமான குரலில் மயூரன் கூற, “அதுக்கு ஏதாவது காரணம் வச்சுருப்பியே, என்ன அது?” என்று வினவினான் பாஸ்கர்.

 

மனது சற்று லேசாக உணர்ந்த இந்த நேரத்தில், அதைப் பற்றி எண்ண வேண்டாம் என்று நினைத்தானோ என்னவோ, “அதை அப்பறம் சொல்றேன்… இப்போ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கணும். டிஸ்டர்ப் பண்ணாதீங்க.” என்ற மயூரன் அவனின் அறைக்கு சென்றான்.

 

அறைக்குள் நுழைந்ததும் முதலில் அவன் கண்ணில் பட்டது, அன்று அலமாரிக்கு மேல் அவன் வைத்த அவளின் பரிசுப் பொருட்கள் தான்.

 

ஏதோ ஒரு உணர்வு அவனை உந்தி நகர்த்த, அவனின் கால்கள் அதற்கு கட்டுப்பட்டதை போல நேராக அலமாரியை நோக்கி சென்றன.

 

கரங்களோ அவன் அனுமதியின்றி அந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்க, அதிசயத்திலும் அதிசயமாக அவனின் இதழ்களும் தாராளமாக விரிந்து கொண்டன.

 

அவனின் இதயத்தின் பேச்சை மூளை கேட்க இருந்த சமயம், “நான் தான் சொன்னேன்ல, இது அவன் இல்ல… அவனுக்குள்ள எதுவோ இருக்கு!” என்று அறையின் வாசலில் பாஸ்கரின் குரல் கேட்க, “இப்போ மட்டும் இங்கயிருந்து போகல, வெளிய வந்து மிதிப்பேன்.” என்று அவனை பார்க்காமலேயே கத்தினான் மயூரன்.

 

அதற்கு மேல் அங்கு நிற்பார்களா என்ன?

 

அந்த அறையில், அவனும் அவளின் பரிசுப் பொருட்களுமாக தனித்து விடப்பட்டான் மயூரன்!

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
22
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மயூரன் மர்மம் இருக்கிறதோ