667 views

 

“என்னடா இது இவ்ளோ முடிய வளர்த்து வச்சிருக்க. பார்க்க நல்லாவா இருக்கு.” வீட்டிற்கு வந்த தேவநந்தன் தம்பியை பார்த்து கேட்ட முதல் கேள்வி இதுதான்.

“இதைப் பார்த்தா ண்ணா  கேட்குற. நானே மண்டையில முடி இல்லன்னு வருத்தப்பட்டுட்டு இருக்கேன் நீ வேற.” கண்ணாடியில் தன்னை பார்த்து குறைப்பட்டுக் கொண்டான் கண்ணன்.

“இதுவே போதும். இதுக்கு மேல வளர்ந்தா சாமியார்னு சொல்லுவாங்க.” என்ற தேவநந்தன் தம்பியின் முடியை பிடித்து ஒரு சுழற்றி சுழற்றினான்.

“பிள்ளை முடிய விடு சாமி. அதுவே இப்ப தான் ஊர் பக்கம் வந்திருக்கு. நீ சுழற்றன்னு ஓட வச்சிடாத.” அன்னம்.

“அப்படி எங்கயாது போனா கால உடைச்சிட மாட்டேனா.” என்றவன் கண்ணனிடம் திரும்பி,

“எத்தனை நாளுடா இங்க இருக்க போற.” என்று விசாரித்தான்.

“இன்னும் ஒரு பத்து நாளைக்கு இங்க தான். அப்புறம் வேற ஊருக்கு ட்ரைனிங் போறேன் எட்டு மாசம் கழிச்சு தான் ஊருக்கு வருவேன்.”

“படிப்ப முடிச்சிட்டு ஊர் பக்கம் வர பாரு. அது இதுன்னு சாக்கு சொல்லிட்டு இருக்க கூடாது. சித்தப்பாவும் சின்னம்மாவும் ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருக்காங்க. இங்க நம்ம ஆஸ்பத்திரி ரெண்டுல பேசி வச்சிருக்கேன், வந்ததும் சேர்ந்துக்க. இல்லையா தனியா கிளினிக் வைக்கிற மாதிரி ஐடியா இருந்தாலும் சொல்லு ரெடி பண்ணிடலாம்.” என்றதும் அவன் தயங்கிக் கொண்டு நின்றான்.

அதை கவனித்த தேவநந்தன்,
“என்னத்துக்குடா இப்படி ஊமைக்கொட்டான் மாதிரி நிக்குற. என்ன விஷயம்னு வாயைத் திறந்து சொன்னா தான எனக்கு தெரியும்.”  என கேட்டான்.

“இல்ல ண்ணா” என்று மிக மெல்லிய குரலில் கண்ணன் பேச ஆரம்பிக்க,

“பேசுறது தப்போ சரியோ உரக்க பேச கத்துக்கடா. நீ இன்னும் சின்ன புள்ள இல்ல. நாலு பேருக்கு மத்தியில நின்னு பேசுற அளவுக்கு வளர்ந்துட்ட. பேச்சையும் வளர்த்துக்க.” தம்பியின் குரல் ஓசையை வைத்து கண்டித்தான்.

“எதுக்கு அவ்ளோ பெரிய படிப்பு படிச்சிட்டு இந்த ஊர்ல வந்து வேலை பார்க்கணும். வேற எங்கயாது சிட்டி பக்கம் போனா நல்ல சேலரியோட வேலை கிடைக்கும்.” மனதில் இருப்பதை மறைக்காமல் அண்ணனிடம் தெரிவிக்க,

“இந்த உலகத்துல இருக்கிற எல்லா வேலைய விடவும் மருத்துவம் ரொம்ப புனிதமானது கண்ணா. அதை பணத்தை வைச்சு முடிவு பண்ணாத. உன்னோட எண்ணம் தப்பு இல்ல அதே நேரம் போற வழி ரொம்ப தப்பு.

கிராமத்து பக்கம் சம்பாதிக்க முடியாதுன்னு யாரு உனக்கு சொன்னது. இங்க அதிகமா மருத்துவ வசதி இல்ல கண்ணா. தேவை இருக்கிற இடத்துல வேலை பார்த்தா தான் அடையாளத்தை கண்டுபிடிக்க முடியும். அதுவும் இல்லாம சின்னம்மா, சித்தப்பா இத்தனை வருஷம் உன்ன பிரிஞ்சு இருந்தது போதும். இங்க தான் இருக்கணும்னு கட்டாயப்படுத்தல அதே நேரம் உன் முடிவை பத்தி திரும்ப ஒரு தடவை யோசிச்சு பாரு.” என்ற நீண்ட விளக்க உரையைக் கேட்டவன் மனம் இல்லாமல் தலையசைத்தான்.

“போதும் விடுயா படிச்சு முடிக்கும் போது இதையெல்லாம் முடிவு பண்ணிக்கலாம்.” இருவரின் சம்பாஷணைகளை கேட்ட அன்னம் பொறுமையாக எடுத்துக் கூற, வேறு பக்கம் சென்றது பேச்சுக்கள்.

“சாமி இந்த பிள்ளை ரெண்டு நாளா வீட்டு பக்கம் வரல. உன்கிட்ட பேசுனாளா.” என்றதும் யாழினி ஞாபகம் மனதெல்லாம் குடிகொள்ள ஆரம்பித்தது தேவநந்தனுக்கு.

அன்று கடைசியாக பேசி விட்டு சென்றவள் தான் இரண்டு நாட்கள் ஆகிய பின்னும் பேசவில்லை. இவன் பல முறை அழைத்தும் எடுக்காதவள் வீம்பாக இருக்கிறாள் வீட்டிற்குள். அவளை சமாதானப்படுத்த தேவநந்தன் வாங்கி கொடுத்த அத்தனையும் திரும்பி அவன் கைக்கே வந்து விட்டது.

“யார பெரியம்மா கேக்குறீங்க.” என்ற இளையவனுக்கு,

“வேற யாரு நம்ம யாழு பிள்ளைய தான் சொல்றேன். அவளும் உன்ன மாதிரி லீவுக்கு ஊருக்கு வந்திருக்கா.” பதில் அளித்தார்.

“அவளா…!” என்று கண்ணன் இழுக்க,

“என்னப்பா இப்படி சலிச்சிக்கிற.” என்றார் அன்னம்.

“அவ கிட்ட வாய் கொடுத்து மீள முடியாது பெரியம்மா. எவ்ளோ சாமர்த்திய தனமா பேசுனாலும் ஏதாவது ஒரு வார்த்தைய பிடிச்சுக்கிட்டு நம்மளை கொன்றுவா. இங்க இருந்து கடைசியா போகும் போது பார்த்தது அதுக்கு அப்புறம் பார்க்கல.”

“இப்ப இங்க தான சாமி இருக்கா ஒரு எட்டு பார்த்துட்டு வா.” என்ற பெரிய அன்னைக்கு,

“நாளைக்கு பார்க்க போறேன் பெரியம்மா.” என்றான் கண்ணன்.

“நீ பார்க்க போகும் போது சொல்லுடா.” என்ற அண்ணனிடம் எதற்கென்று கண்ணன் விசாரிக்க,

“ரெண்டு நாளா என் மேல கோபத்துல இருக்கா. இப்படியே விட்டா அடுத்து படிக்கப் போறன்னு எஸ்கேப் ஆகிடுவா. போறதுக்குள்ள  மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தி வைக்கணும்.” என்றான் சிரித்துக் கொண்டு.

“நீ எதுக்கு ண்ணா அவ கிட்ட சாரி கேக்குற. பேசலன்னா போறான்னு விட வேண்டியது தான. ரொம்ப பிடிவாதம் குணம் இருக்கு அவ கிட்ட.” என்றதும் தம்பியை பார்த்தவன்,

“என்னடா பேச்சு இது யாரோ மாதிரி. அவ நம்ப மாமன் பொண்ணு. நம்ம ரெண்டு பேரும் தான் அவளோட நல்லது கெட்டது எல்லாத்துலயும் சேர்ந்து நிக்கனும்.” என்றான்.

“அதெல்லாம் சரிதான் அதுக்காக நீங்க சாரி கேக்கணும்னு அவசியம் இல்ல. அவளை விட  பெரியவன் ண்ணா நீ. சின்னப்பிள்ளை கிட்ட சாரி கேட்குறது சரியாவா இருக்கும்.” என்றவன்  பெரியம்மாவை பார்த்து,

“என்ன பெரியம்மா இது? நீங்களும் கேட்டுட்டு சும்மா இருக்கீங்க.” தன் வாதத்திற்கு துணை கேட்டான்.

“இவங்களுக்குள்ள என்ன சண்டை நடந்துச்சோ யாருக்குத் தெரியும் சாமி. தப்பு யாரு பண்ணாங்களோ அவங்க தான் சாரி கேட்க முன் வருவாங்க.” என்றவர் தான் பெற்ற புதல்வனை பார்க்க, சிரித்துக் கொண்டு தலை கவிழ்ந்தான்.

***

காட்டு கத்தலாக பரிமளம் கத்தி கொண்டிருக்க, எதையும் காதில் வாங்காதவள் மாமன் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் வளர்க்கும் காளையோடு காலை விளையாடிக் கொண்டிருப்பான் போல…. அதோடு ஒரு புகைப்படம் எடுத்து  தன் வாட்ஸ் அப்பில் ஏற்றி இருந்தான்.

‘ஒருத்தி பேசலன்னு எங்கயாச்சும் கவல இருக்கா பாரு. என்னை மறந்துட்டு சந்தோஷமா இருக்காரு. சிரிப்ப பாரு எப்படி பளபளன்னு இருக்கு.’ தன்னிடம் பேசாமல் இருப்பவன் புகைப்படத்தை மாற்றி இருப்பதைக் கண்டு உள்ளுக்குள்  கருகிக் கொண்டிருந்தாள்.

மகள் எண்ணத்தை அறியாத பரிமளம் முதுகில் வில்லென்று ஒன்றை வைத்து, “உங்க அப்பா வரதுக்குள்ள ரெடி ஆயிட்டு வா யாழு. அவர் வந்ததும் சின்ன அத்தை வீட்டுக்கு போயிட்டு வந்துடலாம்.” என்றார்.

முதுகை தேய்த்துக்கொண்டு எழுந்து அமர்ந்தவள் மாமன் மீது இருக்கும் கோபம் மொத்தத்தையும், “இப்ப எதுக்கு ம்மா பேய் மாதிரி ஆட்டிட்டு இருக்க. நான் எங்கயும் வரல எவனையும் பார்க்கல. போறதா இருந்தா புருஷன் பொண்டாட்டி மட்டும் ஜோடி போட்டுட்டு போங்க என்னை கூப்பிடாதீங்க. நான் இங்க யாருக்கும் முக்கியமில்லை, தேவையும் இல்லை. வரவர இந்த வீட்டுல எனக்கு கொஞ்சம் கூட நிம்மதி இல்லை.” என்றவள் பின்பக்க வழியாக தோட்டத்திற்கு சென்று விட்டாள்.

வீட்டில் இருந்தால் தாவணி மட்டுமே அணிய வேண்டும் என்பது சண்முகத்தின் கட்டளை. தரையை பிரட்டிக்கொண்டு வரும் பாவாடையை இடுப்பில் சொருகியவள் யார் மீதோ இருக்கும் கடுப்பை மண் தரையிடம் காட்டிக் கொண்டிருந்தாள்.

வாழைத்  தோப்பு வழியாக நடந்தவளுக்கு அண்ணனின் பேச்சு சத்தம் கேட்க, அத்திசையை நோக்கி நடந்தாள்.

“இன்னைக்கு என்னடி அழகு கொஞ்சம் கூடி இருக்கு. மாமன மயக்க மேக்கப் போட்டியா.” வழக்கமாக அவன் படுப்பதற்கு பதிலாக தன் மடியில் ஆராதனாவை படுக்க வைத்திருந்தான்.

“பேசி மயக்குறதுல உங்கள அடிச்சுக்க ஆள் இல்லை மாமா.” என்றவள் அவன் கன்னத்தில் குத்த,

“ஆனா இந்த கிருஷ்ணனையே மயக்கின ஒரே ஆள் நீதான்டி.” என்றவன் தன் மடியில் கிடப்பவளின் இதழை கள்ளத்தனமாக ரசித்தான்.

மாமனின் பார்வையை அறியாமலா பழகிக் கொண்டிருக்கிறாள். அவன் எண்ணத்தை அறிந்து எழ நினைத்தவளை இறுக்க பிடித்து மடியில் சாய்த்தவன் இதழில் வருடலை ஆரம்பித்தான்.

“மாமா சும்மா இருங்க.” என்று அவள் தடுக்க, அந்த கையில் ஒரு அடி வைத்தான்.

“சும்மா இருக்கிற வேலைய உன்னைய வச்சுக்கிட்டு பண்ண முடியாது ஆரு.” என்றவன் அவள் உதட்டை இரு விரலுக்கு நடுவில் வைத்து இஷ்டத்திற்கு இழுத்தான்.

“ஸ்ஸ்சா மாமா வலிக்குது.” என்ற ஆராதனா இழுக்கும் அவன் கைகளை வேகமாக அடிக்க, அதையெல்லாம் தூசி தட்டியவன் வளைத்துக் கொண்டிருந்தான்.

“கேடி மாமா போதும் நகரு. இனி உன் கூட இருந்தா என் உதடு பாவம் ஆகிடும். ” என்றவள் மீண்டும் அவனை  தள்ளிவிட்டு எழ முயல, விடவில்லை கிருஷ்ணன்.

மடக்கி தன்னோடு சேர்த்தவன், “ஒண்ணே ஒண்ணு கொடுத்துட்டு ஓடிடு.” என்று நிபந்தனை வைத்தான்.

அவள் “முடியாது” என்று மறுத்துக் கொண்டிருக்க, நிபந்தனை கோரிக்கையானது. அப்போதும் அவள் மனம் இறங்காமல் இருக்க, “ரொம்ப பண்ணாத ஆரு கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப கஷ்டப்படுவ இதுக்கெல்லாம் சேர்த்து.” என்று மிரட்டினான்.

“உங்களை கட்டிக்கிட்டா கஷ்டப்படாம வேற என்ன மாமா பண்ண முடியும்.” என்றவளின் கேலியில் முறைத்தவன்,

“ரொம்ப பேசுற டி என் மாமா பொண்ணே… இரு உனக்கு தண்டனை கொடுக்கிறேன்.” என்றவன் இதழை நெருங்கி சென்றான்.

“ஐயோ மாமா! விடுங்க யாராவது பார்த்தா வம்பாகிடும்.” என்று ஆராதனா கதறிக் கொண்டிருந்தாள் அவனை தடுத்துக் கொண்டு.

காதல் மயக்கம் அவள் பேச்சை கேட்க விடாமல் செய்ய தனக்கு வேண்டியதன் மீது பார்வை இருந்தது. தன்னை தடுக்கும் கைகளை ஒரு கையால் பிடித்துக் கொண்டு அவள் முகம் நோக்கியவன் பார்வைகளால் முத்த பரிசங்களை கேட்க, தலையாட்டி மறுப்பு தெரிவித்தாள்.

காதலியின் வீம்பு தன்னை பார்த்து விட்டாள் மாயமாகி விடும் என்பதை உணர்ந்தவன் அவள் பார்வையோடு பார்வை அம்பு செலுத்த, சில நொடிகள் கழித்து வேலை செய்தது. பெண்ணவள் அவன் கோரிக்கையை நிறைவேற்ற அதே கண்களால் உத்தரவு கொடுத்தாள். குஷியானவன் இதழ் தேனை கள்ளத்தனமாக ருசிக்க தயாரானான்.

கண்மூடி ஆராதனா மயக்கத்தில் படுத்திருக்க, முகத்தை நெருங்கினான். இருவருக்கும் இடையில் இரு நூல் அளவே வித்தியாசம் இருக்க, அதை குறைக்கும் முயற்சியில் இறங்கினான் கிருஷ்ணன்.

“எத்தனை நாளா நடக்குது இந்த களவாணித்தனம்.” என்ற சத்தத்தில் அலறி அடித்துக் கொண்டு இருவரும் இரு பக்கம் பார்த்தவாறு தேடினார்கள்.

 

அவர்களை அதிகம் அலைய வைக்காமல் தரிசனம் கொடுத்தாள் யாழினி. அவளைக் கண்டு கிருஷ்ணன் சங்கடத்தோடு தலைகுனிய, ஆராதனா அவன் பின்னால் மறைந்து நின்றாள்.

 

“என்னை வந்து பார்க்க மேடம்க்கு டைம் இருக்காது. ஆனா இந்த மாதிரி இவன் மடியில படுத்துட்டு இருக்க மட்டும் டைம் இருக்கும் அப்படித்தான.” ஆராதனாவிடம் நியாயமான கேள்வியை அவள் முன் வைக்க, பதில் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டு நின்றிருந்தாள்.

 

“யாழு இப்ப எதுக்கு அவளை மிரட்டிட்டு இருக்க. தினமும் என்னை பார்க்க வர்றதனால வீட்டுக்கு வர முடியல அவ்ளோ தான்.” காதலிக்கு பதில் கிருஷ்ணன் பதில் கூற,

 

“வீட்டுல நல்லா ஊமைக்கொட்டான் மாதிரி இருந்துட்டு ஒரு பிள்ளைய மடியில படுக்க வைச்சு கொஞ்சிக்கிட்டு இருக்க. இதை இப்பவே அப்பா கிட்ட சொல்றேன்.” என்றாள் யாழினி.

 

 

“நாங்களே சொல்ல தான் போறோம் நீ எதுக்கு அவசரப்படுற யாழு ” என்ற அண்ணனை யாழினி முறைக்க,

 

சிரித்தவன் அருகில் சென்று, “கோவமா இருக்குற மாதிரி எல்லாம் நடிக்காத உன் மூஞ்சிக்கு செட் ஆகல.”  என்று அவள் முறைப்பை இன்னும் அதிகமாக வாங்கிக் கொண்டான். 

 

“ரெண்டு வருஷமா லவ் பண்ணிட்டு இருக்கோம். உன் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் வீட்டுல பேசணும். அதுக்குள்ள ஆருவும் படிப்பை முடிச்சிடுவா.” 

 

“எப்படா நான் வீட்டை விட்டு கிளம்புவேன்னு காத்துட்டு இருக்கன்னு சொல்லு.” என்றவளின் தலையில் செல்லமாக அடித்தவன்,

 

“அப்படி பட்டுனு உண்மைய ஒத்துக்க முடியாது ஆனாலும் அப்படித்தான்.” என்றான்.

 

மாமனின் பேச்சைக் கேட்டு ஆராதனா சத்தமாக சிரித்து விட, “அடியே! என்ன நக்கலா.” என்ற யாழினியை கண்டு சிரிப்பை அடக்கி கொண்டவள் கமுக்கமாக நின்றாள்.

 

“வருங்கால அண்ணிய இப்படியா மரியாதை இல்லாம பேசுவ யாழு.” என்றதும் அண்ணனை முறைப்பதற்கு பதில் ஆராதனாவை முறைத்த யாழினி,

 

“இதை நீ சொல்லக்கூடாது. உன் பின்னாடி நிக்கிறா பாரு அப்பாவி மாதிரி அவ சொல்லணும்.” என்றாள்.

 

 

கிருஷ்ணன் திரும்பி ஆராதனாவை பார்க்க, அவளும் இவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். “என்ன ரெண்டு பேரும் லுக்கு விட்டுட்டு இருக்கீங்க.” என்றதும் தன் பார்வையை மாற்றிக் கொண்ட ஆராதனா மீண்டும் அப்பாவி போல் நிற்க,

 

“பண்ற எல்லா கேடித்தனமான வேலயையும் பண்ணிட்டு மூஞ்சிய வச்சு இருக்கா பாரு எப்படி.” என்றதும் தன் முகத்தை இன்னும் பாவமாக வைக்க முயற்சித்தாள் ஆராதனா.

 

அவளின் முக மறுதல்களைப் பார்த்து கிருஷ்ணனுக்கு சிரிப்பு வர, “நீ எதுக்கு ஆரு இப்படி வச்சிருக்க மூஞ்சிய. நல்லா தைரியமா அவ முன்னாடி நின்னு ஆமான்டி நான் உன் அண்ணனை காதலிக்கிறேன்  என்ன பண்ண முடியும் அப்படின்னு கேளு.” என்று எடுத்துக் கொடுக்க,

 

“கேட்டுடுவாளா  அவ! அப்படி மட்டும் கேட்கட்டும் அப்புறம் தெரியும் நான் யாருன்னு.” என்று இடுப்பில்  சொருகி இருந்த  பாவாடையை உதறி மீண்டும் அங்கேயே சொருகி,

 

“எங்க அவன் சொன்ன மாதிரி கேளு பார்ப்போம்.” என்று சண்டைக்கு தயாராக நின்றாள் யாழினி.

 

“மாமா” என்று சிணுங்கியவள் கிருஷ்ணன் கையைப் பிடித்துக் கொள்ள,

 

“இப்ப எதுக்கு அவ கிட்ட வரிஞ்சுக்கிட்டு வர.” வருங்கால மனைவிக்கு பதில் அவன் சண்டைக்கு தயாராக நின்றான் தங்கையிடம்.

 

“ஓஹோ! அவ ஒரு வார்த்தை சொன்னதுக்கே இவ்ளோ கோபம் வருதா உனக்கு. பார்க்குறேன் என்னை மீறி ரெண்டு பேரும் எப்படி கல்யாணம் பண்றீங்கன்னு.” என்று விளையாட்டாக அண்ணனிடம் சவால் விட,

 

“அப்படியெல்லாம் பேசாத யாழு. நானே ஏற்கனவே எங்க கல்யாணம் நடக்குமா  நடக்காதான்னு பயத்துல இருக்கேன்.” என்றவள் முகம் இந்த முறை தானாகவே வருத்தத்தை ஆழ்த்திக் கொண்டது.

 

“ஆரு அவ சும்மா விளையாட்டுக்கு தான்டி பேசிட்டு இருக்கா அது புரியாம மூஞ்சிய தொங்க போடுற.” என்றதும் அவள் முகம் யாழினியை நோக்க,

 

“அட பயந்தாங்கோலி! நீ எப்படி டி லவ் பண்ற…” என்று அண்ணன் கையைப் பிடித்திருக்கும் அண்ணியை வேகமாக தன் புறம் இழுத்தாள்.

 

அவளின் கேலிப்பேச்சு ஆராதனாக்கு புரியத்தான் செய்தது. இருந்தும் காதலுக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்ற பயத்தில் அவள் தன் இயல்பை மாற்றி நின்றாள்.

 

“நீங்க லவ்வே பண்ணலன்னாலும் வீட்டுல உங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க.  இது தெரிஞ்சும் வருத்தப்படுறியே. உன்ன எங்க அண்ணன் கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போறானோ.” என்றாள் சிரிப்போடு.

 

“அதான் யாழு எனக்கும் தெரியல தினமும் கல்யாணம் நடக்குமா நடக்குமான்னு கேட்டே என்னை சாகடிக்கிறா.” என்றவனை ஆராதனா முறைத்தாள். 

 

அவள் கன்னம் பற்றிய யாழினி,

“எதுக்கு உனக்கு இந்த சந்தேகம்.” என கேட்டாள்.

 

“தெரியல யாழு. ஆனா மனசுக்குள்ள ஒரு பயம் இருந்துட்டே இருக்கு. உன் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறமே எங்க கல்யாணம் நடக்கட்டும். ஆனா, இப்பவே ஒரு வார்த்தை சொல்லி வைக்கலாம்ல மாமா. பெரிய மாமா வேற ஏதாச்சும் பிளான்ல இருந்தா சங்கடம் தான.” என்றவள் மனதில் சொல்ல முடியாத துக்கம்.

 

 

“நீ பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது ஆரு. வீட்டுலயே உங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அப்படியே ஒரு வேலை இவனுக்கு வேற யாராவது ஒரு பெண்ணை எங்க அப்பா பார்த்தா முதல் ஆளா அதை நான் தான் தடுப்பேன்.” என்றவளை ஆராதனை நிமிர்ந்து பார்க்க,

 

“உண்மையா தான் ஆரு. உன்னைய விட்டுட்டு வேற ஒரு பொண்ண பார்க்க நான் விடமாட்டேன். இவன் பார்க்க தான் அப்பா பிள்ளை மாதிரி தெரியும். ஆனா ஒரு விஷயத்தை பண்ணனும்னு முடிவு பண்ணிட்டா அதை எப்படியாது பண்ணியே தீருவான். அதனால நீ கவலைப்படாத எல்லாம் நல்லதாகவே நடக்கும்.” என்றாள் அவள் பயத்தை போக்கும் நோக்கோடு.

 

 

கிருஷ்ணனோடு யாழினி ஆதரவும் சேர்ந்து கொள்ள அவள் மனம் ஓரளவுக்கு தெளிய ஆரம்பித்தது. அவள் முகம் சாதாரணமானதை உணர்ந்த யாழினி,

 

“என் அண்ணன முந்தானையில முடிஞ்சதும் இல்லாம நாத்தனார் சப்போட்டையும் வாங்கிட்ட சரியான கேடி தான்.” என்று அவள் கன்னத்தில் இடித்தாள்.

 

“வலிக்க போகுது யாழு” என்ற கிருஷ்ணன் காதலியின் கன்னத்தை தடவி கொடுக்க, ஆராதனா சிரித்தாள். யாழினி முறைத்தாள்.

 

“ரொம்ப பண்ணாத ண்ணா என்னைக்கா இருந்தாலும் என் ஆதரவு உங்களுக்கு வேணும். பார்த்து பதமா பேசுங்க ரெண்டு பேரும்.” மீண்டும் இருவருக்கும் அவள் ஆதரவு தேவை என்பதை ஞாபகப்படுத்த, இருவரும் தலையாட்டி சம்மதித்தனர்.

 

தனிமையில் இருந்தவர்களை தொந்தரவு செய்ததால் நாசுக்காக அங்கிருந்து யாழினி கிளம்பி விட, மீண்டும் காதலில் முழுக ஆரம்பித்தார்கள்.

 

***

 

வாழை தோப்பை தாண்டி வயல்வெளிப் பக்கம் நடந்து கொண்டிருந்தாள் யாழினி. பல மாதங்கள் ஆகிவிட்டது அவள் இந்த பக்கம் வந்து. இது தேவநந்தனின் விளை நிலம். கால் வைத்ததும் ஞாபகம் அவன் நினைவுகளை அடுக்கிக் கொண்டே செல்ல, கண்கள் தேட தவறவில்லை. 

 

“பாப்பா என்னை தான் தேடுறியா.” என்று பின்னால் வந்த குரலில் திடுக்கிட்டு திரும்பியவள் கால் இடறி கீழே விழ சென்றாள்.

 

தேவநந்தன் அதை சுதாரிப்பதற்குள் அவன் வயிற்றுப் பகுதி ஆடையை பிடித்து சரிய, அவளோடு அவனும் விழுந்தான் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் மீது. 

 

இருவரும் விழுந்த வேகத்தில் நெற்பயிர்கள் ஒரு பக்கம் சாய்ந்து கொண்டு சேற்றில் மடிய, அதே சேற்றில் இருவரும் “தொப்” என்று விழுந்து நனைந்தார்கள் சேரு மழையில்.

 

தேவநந்தனை விட யாழினி உடல் தான் அதிகம் சிக்கிக்கொண்டது சேற்றில். விழுந்த பயத்தில் மாமன் தோள்களை பற்றிக் கொண்டிருந்தவள் கண் திறக்க முடியாமல் திணறினாள் முகம் முழுவதும் சேரு பூசியதில். 

 

 

“மாமா கண்ண திறக்க முடியல தூக்குங்க.” என்றவள் அருவருப்பாக உணர்ந்தாள் சேற்றில் இருப்பதால். இந்தப் பக்கம் அவள் வராமல் இருப்பதற்கு முதல் காரணமே இவை தான். இங்கிருக்கும் சேரு, சிறு சிறு பூச்சிகள், வயலில் ஓடும் எலி இவையெல்லாம் அவள் வெறுக்கும் விஷயங்கள். 

 

விழுந்ததும் எழ முயன்றவன் அவள் வார்த்தையில், “ஒரு நிமிஷம் இரு பாப்பா.” என்று எழுந்தமர்ந்தான்.

 

அதுவரை கூட பொறுக்க முடியாதவள், “ஐய்ய்ய்யோ! மாமா மொதல்ல என்னை தூக்கு. ஒரு மாதிரி இருக்கு.” என்றவளை எழுப்பினான்.

 

அமர்ந்த வேகத்தில் எழுந்து நின்றவள் நகர பார்க்க, வழுக்கி அவன் மீது மீண்டும் விழுந்தாள். அங்கிருந்து எழ அவசரம் காட்டினாளே தவிர பொறுமை காக்க முயலவில்லை யாழினி. அதில் தேவநந்தனும் அவஸ்தை பட, ஒருவழியாக வரப்பில் ஏற்றி விட்டான்.

 

 

“மாமா கண்ண திறக்க முடியல.” என்று குதித்து ஆர்ப்பாட்டம் செய்ய, மீண்டும் எங்கு விழுந்து விடுவாளோ என்ற பயத்தில்,

 

“கொஞ்ச நேரம் ஆடாம நில்லு பாப்பா.” என்றான்.

 

“ப்ளீஸ் மாமா! தண்ணி இருந்தா எடுத்துட்டு வாங்க.” என்றவள் பேச்சில் சுற்று முற்றும் பார்த்தான்.

 

ஒரே ஒரு பம்ப் செட் மட்டும் தான் அங்கு. அதுவும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து தூரமாக இருந்தது.

 

“பாப்பா பம்பு செட் போக பத்து நிமிஷமாது ஆகும் கண்ண மூடிட்டு நடந்து வருவியா.” 

 

“கண்ண மூடிட்டு எப்படி மாமா நடந்து வரது. என்னால அதெல்லாம் முடியாது நீ தண்ணி கொண்டு வா” 

 

“சரி இங்கயே குதிக்காம நில்லு நான் தண்ணி கொண்டு வரேன்.” என்றவன் இரண்டு அடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டான்…

 

“ஆஆ.. மாமா ஏதோ கடிக்குது.” என்று இம்சை செய்தாள் அவனை.

 

அவளிடம் வந்தவன் கீழே அமர்ந்து பாவாடையை கணுக்கால் தெரியும் அளவிற்கு நகர்த்தி பார்த்தான்.

 

“எதுவும் இல்லையே பாப்பா.” என்றவன் ஆராய்ச்சி பார்வைகளை தொடர்ந்து கொண்டே இருக்க,

 

“கடிச்சுது மாமா.” என்று அழுதாள்.

 

“ஒண்ணும் கடிக்கல பாப்பா பயத்துல உனக்கு அப்படி தோணுது.” என கால்களை நன்றாக தேய்த்து விட்டான்.

 

அவள் சிறு அமைதி கொள்ள, “இங்கயே நில்லு‌. பத்து நிமிஷத்துல வந்துடுறேன்.” என்று தேவநந்தன் நகர, அவசரமாக கை பிடித்தவள்,

 

“அதெல்லாம் போக வேணாம்.” என்றாள்.

 

“பின்ன இங்க நின்னா எப்படி தண்ணி வரும்.” என்றவன் கேள்விக்கு,

 

“எல்லாம் உன்னால தான் மாமா. உன்னை யாரு பின்னாடி நின்னு சத்தம் போட சொன்னா. ” என்று கத்த ஆரம்பித்து விட்டாள்.

 

 

“இப்ப என்ன தான் பாப்பா பண்ண சொல்ற.” என்று கடுப்பில் தேவநந்தன் இடுப்பில் கை வைக்க,

 

“தெரியலையே மாமா” என்றாள் சோகமாக.

 

இருவரும் அதே நிலையில் நிற்க, என்ன செய்வது என்று தெரியவில்லை.  தோட்ட வரப்பில் போந்து கட்டி ஒளிந்து கொண்டிருக்கும் சிறு தோட்ட நண்டுகள்  யாழினியின் கால்களை கடித்தது. 

 

அதில் துள்ளி குதித்து மாமன் தோள் மீது குரங்கு போல் தாவிக் கொண்டவள், “மாமா பாம்பு ஏதோ கடிச்சிடுச்சு.” என்று அவனை பயமுறுத்த, அலறி விட்டான் தேவநந்தன்.

 

மாமன் மகளின் பேச்சில் திரும்பி வயலை நோட்டமிட்டவன் கண்ணுக்கு எதுவும் தெரியாமல் போனது. இருந்தும் பயத்தில் அவளை தூக்கிக் கொண்டு ஓடினான்.‌ 

 

அவன் தோள் மீது கைகளை மாலை ஆக்கி மார்பில் சாய்ந்து கொண்டவள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க, “பாப்பா எந்த கால கடிச்சது காட்டு.” பம்பு செட்டு மேல் திண்ணையில் அமர வைத்தவன் ஆராய்ந்தான் கால்களை. 

 

“இந்த கால்ல மாமா.” பயத்தில் அவள் நண்டு கடித்த இடத்தை காட்ட, நடுங்கிய கைகளோடு தொட்டு ஆராய்ந்தான். 

 

நிமிடங்கள் பல தேடியும் அவன் கண்களுக்கு பாம்பு கடித்த தடம் தெரியாமல் போக, “பாப்பா இந்த கால தான் கடிச்சுதா.” என விசாரித்தான்.

 

அவள் “ஆமாம்” என்று தலை அசைக்க, மீண்டும் அதே இடத்தில் ஆராய்ந்து கொண்டிருந்தான் பதட்டம் குறையாமல். பாம்பு கடித்தால் தானே அது அவன் கண்களுக்கு தென்படும்! அதை அறியாதவன் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. மாமன் மகளை நெஞ்சில் சாய்த்தவன்,

 

“பாப்பா பாம்பு கடிச்ச மாதிரி தெரியலயே உனக்கு மயக்கம் ஏதாச்சும் வருதா.” என்று கேட்டிட,

 

“அப்படி எதுவும் இல்ல மாமா.” என்றாள்.

 

பயத்தில் கடித்த காலை மறந்து கூறுகிறாளோ என்று அச்சம் கொண்டவன் மற்றொரு காலையும் ஆராய்ந்து கொண்டிருந்தான். அங்கேயும் எதுவும் இல்லாமல் போக, பயம் குறைந்த பாடு இல்லை அவனுக்கு. 

 

எழுந்தவன் பம்பு செட் தண்ணீரில் அவள் முகத்தை கழுவி, “பாப்பா பாம்பு எங்க கடிச்சதுன்னு தெரியல. மாரி தாத்தா வீட்டுக்கு தூக்கிட்டு போறேன் பதட்டப்படாம இருக்கணும் சரியா.” என்றதில் தான் அவள் இன்னும் பயந்து விட்டாள்.

 

“மாமா போச்சு நான் சாகப் போறேன்.” என்று அழுது கொண்டிருந்தவளை தூக்கியவன், “அப்படி எல்லாம் சொல்லக்கூடாது பாப்பா. உனக்கு ஒண்ணும் ஆகாது.” என்றவனின் பேச்சில் அழுகை பிரிக்க முடியாமல் கலந்து கொண்டது. 

 

மாமன் அழுகையை பார்த்தவள், “நீ அழாத மாமா. எனக்கு ஒண்ணும் இல்ல.” என்று அவன் கண்ணீரைத் துடைக்க, அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லாதவன் தூக்கிக் கொண்டு ஓடினான்.

 

 

ஊரில் யாருக்கு பாம்பு கடித்தாலும் முதலில் வருவது மாரி வீட்டிற்கு தான். வயது முதுமை காரணமாக இப்போதெல்லாம் அவர் மருத்துவம் பார்ப்பதை நிறுத்தி இருக்க, “தாத்தா பாப்பாவ பாம்பு கடிச்சிருச்சு என்னன்னு பாருங்க.” என்று அவசரமாக திண்ணையில் படுக்க வைத்தான் தேவநந்தன்.

 

தட்டு தடுமாறி எழுந்து வந்தவர் மறுக்கும் வார்த்தையை உபயோகிக்கும் முன், “சீக்கிரம் பாருங்க தாத்தா கடிச்சு ரொம்ப நேரம் ஆகுது.” என்றான். 

 

 

கண்களில் நில்லாமல் கண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க, “கொஞ்சம் பொறுத்துக்கோ பாப்பா இதோ பார்த்துடுவாறு”  என்று அவளை தைரியப்படுத்திக் கொண்டிருந்தான்.

 

தேவநந்தனை சிறு வயதிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர் அந்தக் கண்ணீரில் மறுக்க மனம் தோன்றாமல் யாழினியை ஆராய்ந்தார். 

 

“ஒண்ணும் ஆகாது பாப்பா தைரியமா இரு.” அவளை சமாதான செய்து கொண்டிருக்கும் வேளையில்,

 

“என்ன பாம்பு கடிச்சிருக்கு தாத்தா. நான் அவ்ளோ தேடியும் என் கண்ணுக்கு சிக்கல. பாம்பு கடிச்ச இடத்தை கட்டாம கூட தூக்கிட்டு வந்துட்டேன். வேகமாக பாருங்க தாத்தா.” என்று முதியவரை அவசரப் படுத்திக் கொண்டிருந்தான். 

 

“சொல்றன்ல மாமா எனக்கு ஒண்ணும் இல்லன்னு.” மாமனின் அழுகையைப் பார்த்து தன்னிலை தெளிய ஆரம்பித்தாள் யாழினி.

 

“என்னால தான் பாப்பா எல்லாம். நான் சும்மா இல்லாம உன்ன பயமுறுத்த போய்தான் உனக்கு இப்படி ஆகிடுச்சு. உனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா நான் என்ன பண்ணுவேன்.” என்றவன் அவள் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொள்ள, அதில் தெரியும் நடுக்கத்தை நன்கு உணர்ந்தாள் யாழினி.

 

இருவரின் பேச்சுக்களும் முதியவரின் காதில் விழுந்தாலும் கவனம் எல்லாம் பாம்பு கடித்த இடத்தை தேடிக் கொண்டிருந்தது. பலமுறை ஆராய்ந்து உறுதி செய்தவர், “பாம்பு எதுவும் கடிச்ச மாதிரி தெரியலயே தம்பி.” என்றார். 

 

“நல்லா பாருங்க தாத்தா நானும் தேடிப் பார்த்தேன் கிடைக்கல.” என்றான் பதட்டம் குறையாமல்.

 

“இல்ல தம்பி எனக்கு தெரிஞ்சு எந்த பாம்போட பல் தடமும் கால்ல இல்ல.” என்றவர் யாழினியிடம்,

 

“வேற எங்கயாது பாம்பு கடிச்சுதா.” என்று விசாரித்தார்.

 

“இல்ல இந்த கால்ல தான் சுருக்குன்னு குத்துச்சு.” என்றவள் கைகளை இன்னும் விடாமல் இறுக்கமாக தான் பிடித்துக் கொண்டிருந்தான் தேவநந்தன்.

 

சிறிது நேரம் யோசித்தவர், “பாம்பு எதுவும் கடிக்கலப்பா வேற ஏதாவது பூச்சி கடிச்சிருக்கும். ” என்றவரை நம்பவில்லை தேவநந்தன்.

 

 

“எதுக்கும் இன்னொரு தடவை நல்லா பாருங்க தாத்தா”

 

“எத்தனை தடவை பார்த்தாலும் பாம்பு கடிச்ச மாதிரி தெரியல தம்பி.” என்றவரின் பேச்சில் நம்பிக்கை பிறக்காததால் தூக்கிக் கொண்டு ஓடினான் மருத்துவமனைக்கு. 

 

 

ஊரே ஒன்று கூடி விட்டது தேவனந்தன் யாழினியை தூக்கிக்கொண்டு பதட்டமாக ஓடுவதில். சற்று நேரத்திற்கு எல்லாம் சூனாம்பேடு கிராமம் ஆளுக்கு ஒன்றை பேசி பரபரப்பை ஏற்படுத்தியது. விஷயம் பரிமளம் காதிற்கு எட்ட, அவரோ கதறி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.

 

ஒருவர் மாற்றி ஒருவர் என்று அனைவருக்கும் தகவல் காட்டு தீயாக பரவ, சூனாம்பேடு அரசு மருத்துவமனையை நோக்கி படையெடுத்தார்கள். மின்னலை விட வேகமாக மருத்துவமனையை அடைந்தவன் அங்கிருந்த மருத்துவர்களை படுத்தி விட்டான்.

 

முதியவர் போல் இல்லாமல் மருத்துவர்கள் அவனை சத்தமிட்டு தூரம் நிற்க வைத்து விட்டு பரிசோதிக்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கும் பாம்பு தடம் எதுவும் கிடைக்காமல் போக, “எந்த பாம்பும் கடிக்கல.” என்றார்கள்.

 

மருத்துவர் சொன்ன பிறகு மூளை நம்பினாலும்… மனது அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று பரிதவிக்க, “ஒண்ணும் இல்லாத விஷயத்துக்கு இவ்ளோ தூரம் ஆர்ப்பாட்டம் பண்ணி எங்க எல்லாரையும் பயமுறுத்துட்டீங்க.” என்று சிடுசிடுத்தார் மருத்துவர்.

 

 

அவரின் வார்த்தைகளை உதாசினம் செய்தவன் யாழினியை தேடிச் சென்றான். கலவரம் நடத்தியவள் சிறுபிள்ளைத்தனமாக செய்த செயலை நினைத்து அமைதியாக அமர்ந்திருக்க, “பாப்பா” என்றான் தேவநந்தன்.

 

மாமனை முகத்தை பார்த்ததும் குற்ற உணர்வு தலைதூக்க, “எனக்கு எதுவும் ஆகல மாமா நான் ரொம்ப நல்லா இருக்கேன்.” என்றவளை இறுக்கி அணைத்து இருந்தான்.

 

உடல் குலுங்கவில்லை என்றாலும் அவள் முதுகை நனைக்கும் கண்ணீரில் பதறியவள், “மாமா” என்று முகத்தை திருப்ப, அவளுக்குள் புதைந்து போகும் அளவிற்கு உருகிப் போனான் தேவநந்தன்.

 

ஒரு வழியாக அதிலிருந்து மீண்டவன், “நிஜமாவே ஒண்ணும் இல்ல தான பாப்பா.” மனதில் இருக்கும் பதட்டத்தை வார்த்தைகளாக கேட்டு விட,

 

“சத்தியமா எதுவும் இல்ல மாமா. நீ அழாத எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்றவளும் கலங்க ஆரம்பித்து விட்டாள் அவனைப் பார்த்து.

 

“பாப்பா அழாதடா.” என்று அவன் சமாதானப்படுத்த, “சாரி மாமா தேவையில்லாம உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்.” என்றாள் உள்ளம் கசங்க.

 

 

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல பாப்பா. நீ நல்லா இருக்கன்னு சொன்னதே போதும்.” என்றவன் பதட்டம் குறைந்து சாதாரணமாக பக்கத்தில் அமர்ந்தான்.

 

மாமனின் கண் துடைத்து விட்டவள், “அழும் போது கூட அழகா இருந்த மாமா.” என்று திருஷ்டி கழித்தாள்.

 

அவன் அவளை முறைக்க, “உண்மையா தான் மாமா ரொம்ப அழகா இருந்த. எங்கடா கடைசி வரைக்கும் இந்த அழக பார்க்காம போயிடுவன்னு  மனசுக்குள்ள சின்ன பயம்.” என்றவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

 

“மாமா ஒருவேளை நான் செத்துப் போய் இருந்தா என்ன பண்ணி இருப்ப.” என்றவளை வேகமாக தள்ளி விட்டவன்,

 

“அப்படியே ஒண்ணு வச்சேன்னா பாரு.” என்று கை ஓங்கினான்.

 

மாமனின் நடவடிக்கைகளை கண்டு அவள் பயப்படாமல் சிரிக்க, “அப்படியெல்லாம் பேசக்கூடாது பாப்பா. உனக்கு எதுவும் ஆகாது. நூறு வயசுக்கு நல்லா இருப்ப.” என்றவன் அவள் தலை மீது கை வைத்து ஆசீர்வதிக்க,

 

“அப்போ நீயும் நூறு வயசுக்கு நல்லா இருப்ப மாமா” என்று அவன் தலை மீது கை வைத்து ஆசீர்வதித்தாள்.

 

 

இருவரும் ஒருவர் தலைமீது ஒருவர் கை வைத்துக் கொண்டு சிரிக்க அங்கு வந்த செவிலியர் கிளம்புமாறு கூறினார். 

 

“மாமா நீ பண்ண ஆர்ப்பாட்டத்துக்கு ஊருக்குள்ள யாரெல்லாம்  பஞ்சாயத்து பண்ண போறாங்களோ.” என்றவள் கட்டிலில் இருந்து குதிக்க,

 

“அதை மறந்துட்டேன் பாப்பா.” என சிரித்தவாறு அவனும் இறங்கினான்.

 

“இப்ப பாரு எங்க அம்மா என்னை பார்த்ததும் எப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ண போதுன்னு.” தாயின் செயல் எப்படி இருக்கும் என்று அவள் பேச்சால் கூற,

 

“அத்தை மட்டுமா எங்க அம்மாவும் தான்.” என்றான். 

 

“ஆக மொத்தம் ஊருக்குள்ள இன்னைக்கு ஒரு பஞ்சாயத்து கன்ஃபார்ம் அப்படித்தான மாமா.” என்றவள் சிரித்துக் கொண்டே நடக்க,

 

“எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்.” அவனும் அவள் பின்னே நடந்தான்.

 

அவர்கள் வெளியில் வரவும் பரிமளம் மகளை தேடி வரவும் சரியாக இருந்தது. வந்தவர் என்னவென்று விசாரிக்காமல் கட்டிப்பிடித்து அழ தொடங்க, அவருக்கு பின்னால் ஓடி வந்தார் அன்னம். அவர் தன் மகனை தள்ளி விட்டுவிட்டு மருமகளை அணைத்துக் கொண்டு ஒப்பாரி வைக்க, 

 

“யாழு…” பாண்டியனோடு பைக்கில் வந்த வள்ளி மருமகளை பார்த்ததும் அழுது கொண்டு ஓடி வந்தார். 

 

அவரும் ஒரு பங்குக்கு யாழினியை சூழ்ந்து கொள்ள, மூவரையும் சமாதானப்படுத்த முடியாமல் திணறினான் தேவநந்தன். பாண்டியன் பதட்டத்தோடு மருமகளை பற்றி விசாரிக்க, “எதுவும் இல்ல சித்தப்பா சாதாரண பூச்சி தான் கடிச்சிருக்கு.” என்றான் பாவமாக.

 

“பூச்சி கடிச்சதுக்கா ரெண்டு பேரும் இவ்ளோ பெரிய கலவரத்தை நடத்தி இருக்கீங்க.” என்று சலித்துக் கொண்டவர் அழுது கொண்டிருக்கும் மூன்று பெண்களையும் விலக்கினார் நடந்ததை விவரிக்க.

 

நடந்த சம்பவத்தை கேட்டவர்கள் ஒரு சேர இருவரையும் முறைத்துக் கொண்டிருக்க, “மாமா எதிர்பார்த்ததை விட பெரிய பஞ்சாயத்தா நடக்கும் போலையே.” அவன் காதினுள் ரகசியமாக கூறினாள் யாழினி.

 

இவர்கள் முறைத்து பஸ்பமாக்குவதற்குள் வேகமாக மருத்துவமனையில் நுழைந்தார் சண்முகம். அவரைக் கண்டதும் அன்னம் ஒதுங்கி நின்று கொண்டார்.

மாமனை பார்த்ததும் தேவநந்தனும் தனியாக வந்து விட, பதட்டமாக மகளை நோக்கி ஓடி வந்தார்.

 

அம்மு இளையாள்.

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
28
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *